Home Blog Page 35

தமிழ் நடிகர்கள் சங்கமாக பெயர் மாற்றம் செய்யாமல் விஷால் வந்தாலென்ன, ஐசரி கணேஷ் வந்தாலென்ன?!!

ஆந்திர, மலையாள, கன்னட நடிகர் சங்கங்கள் எல்லாம் தங்கள் மாநில பெயர்களையே கொண்டிருக்க இங்கு மட்டும் எதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயர்?

இதுவே தமிழர்களுக்கு அவமானம்.

பாரதிராஜா அவ்வப்போது குரல் கொடுக்கிறார். அதனை மறுப்போரும் இல்லை.  முயற்சிப்போரும் இல்லை.

இத்தனைக்கும் தமிழ் சினிமாவில் வேற்று மொழிக்காரர்களின் ஆதிக்கம்தான் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

தமிழ்நாட்டு கதாநாயகர்களையும் கதாநாயகிகளையும் விரல் விட்டு எண்ணி  விடலாம்.

இதற்குமா இட ஒதுக்கீடு என்றால் ஏன் கூடாது என்பதே பதில்.

32 கோடி பட்ஜெட்டில் கட்ட வேண்டிய கட்டடத்திற்கு 18 கோடி செலவு செய்து விட்டு  மீதி 20 கோடி தேவை என்று அறிவித்து புது நிர்வாகிகளை தேர்ந்தேடுக்க ஒரு பொதுத்தேர்தலை விட மக்கள் கவனத்தை திருப்பி தமிழ்நாட்டையே திரும்ப பார்க்க வைத்து தேர்தல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் நடிகர் சங்கத்தினர்.

இதில் சாதி, அரசியல், பணம் என்று எல்லாம் விளையாடுகிறது.

ஒன்று மட்டும் இல்லை. நேர்மை !!!

அது இரு தரப்பிடமும் இருந்திருந்தால் உட்கார்ந்து பேசி தேர்தல் நடைமுறையை நியாயமாக உருவாக்கி இருப்பார்கள். ஒருவரை ஒருவர் விழுங்கப் பார்ப்பதால் எழுந்த போட்டி இது..

சரி. வலு உள்ளவர்கள் வெற்றி பெற்று வாருங்கள்.

யார் வந்தாலும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை தமிழ் நடிகர்கள் சங்கம் என்றோ தமிழ்நாட்டு நடிகர்கள் சங்கம் என்றோ பெயர் மாற்றம் செய்து இந்த மண்ணுக்கு விசுவாசம் காட்டுங்கள்.

வெகு மக்கள் குரல் கொடுத்தால்தான் மாற்றுவீர்களா??!!

குருமூர்த்தியின் ஆசை அதிமுக மீண்டும் எழவேண்டுமாம்? ஆடுகளின் மீது ஓநாய்க்கு எவ்வளவு அக்கறை??!!

ஆடிட்டர் குருமூர்த்தி அதிமுக உறுப்பினர் அல்ல.

அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவாளர். சுதேசி இயக்கத்தின் நிர்வாகியாக  இருந்தவர். இப்போது அது இயங்குகிறதா என்பது தெரியவில்லை. உலக மயமாக்கலில் அது கரைந்து விட்டதாகவே தெரிகிறது.

பாஜக ஆதரவாளர் என்பதால் அவருக்கு ரிசெர்வ் வங்கியின் இயக்குனர்களில் ஒருவராக பொறுப்பு இருக்கிறது.

அதிமுகவின் தோல்வியை விட திமுகவின் வெற்றி குருமூர்த்தியி ரொம்பவும் பாதித்திருக்கிறது. அதனால் எப்படியாவது அதிமுக மீண்டும் எழ வேண்டும் என்று விரும்புகிறார். அது அதிமுக பாசத்தினால் அல்ல. அதிமுக உடைந்து அதில் ஒரு பகுதி பாஜகவை நாளை தமிழ்நாட்டில் காலூன்ற வைக்க உதவும் என்பதால் எழுந்த ஆசை.

அதற்கு ஒபிஎஸ் போன்றோர் கைகொடுக்க தயாராக இருக்கிறார்கள். அவர் மகன் வந்தேமாதரம் ஜெய் ஹிந்த் என்று சொன்னவுடன் அத்தனை பாஜக தலைவர்களும் கைகொடுத்து பாராட்டினர்களே ?

நம்ம ஆள் என்று அடையாளம் கண்டு கொண்டு விட்டார்கள்.

பணத்தால் மட்டும் வெற்றி பெற்று விட முடியாது என்பதை அதிமுக உணர வேண்டும் என்கிறார் குருமூர்த்தி. பணம் தான் தங்கள் பலம் என்பதை எல்லா அதிமுக தலைவர்களும் நம்புகிறார்கள். அதை விட்டால் அவர்களை ஒன்று சேர்க்கும் கொள்கைதான் என்ன? வெறும் திமுக எதிர்ப்பு மட்டுமா?

எம்ஜியார் திமுக எதிர்ப்பில் அதிமுக வை உருவாக்கினார் என்பது உண்மை தான்.  ஆனால் அதற்கும் மேல் அவர் திராவிட இயக்கத்தின் ஒரு கூறாக தன் கட்சியை வைத்திருந்தாரா இல்லையா? பெரியார் அண்ணா கொள்கைகளுக்கு எதிராக அவர் பேசியோ சிந்தித்தோ இருக்கிறாரா? கட்சியே அண்ணா பெயரில் இருக்கும்போது கொள்கையில் பெருத்த அளவில் அதிமுக -திமுக கட்சிகளுக்கு இடையில் என்ன வேறுபாடு?

தலைமை யார் என்பது மட்டுமே இரு கட்சிகளுக்கு இடையில் இருக்கும் அதிகபட்ச வேறுபாடு.

ஜெயலலிதா அம்மையார் கூட பெரியார் -அண்ணா பாதையை விட்டு விலகி கட்சியை கொண்டு செல்ல வில்லையே? தனக்கு இருந்த தனிப்பட்ட நம்பிக்கைகளை கட்சியின் மீது அதிகாரபூர்வமாக திணித்தாரா?

ஆனாலும் மறைமுகமாக ஜெயலலிதா கட்சியை பெரியார்-அண்ணா பாதையை விட்டு மெதுவாக நகர்த்திக் கொண்டு போனார். பிராமணீய எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்தார்.

குருமூர்த்தியின் எண்ணம் எல்லாம் அதிமுக தொண்டன் திமுக பக்கம் போய்விடக் கூடாது என்பதுதான்.

சொன்னாலும் சொல்லா விட்டாலும் அதிமுக தொண்டன் திராவிட இயக்க  தொண்டன்தான். ஒருக்காலும் பாஜக பக்கம் சிந்தித்துக் கூட பார்க்க மாட்டான்.

குருமூர்த்திகள் இலவு காத்த கிளிகளாக காத்திருக்க வேண்டியதுதான்.

பாஜகவின் அடுத்த ஆயுதம்; ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே கட்சி ???!!!

ஆள வந்திருக்கும் பிரதமர் மோடி ஆட்சியை மேம்படுத்தும் வேலையை விட்டு விட்டு வேண்டாத வேலைகளில் கவனத்தை செலுத்தி பிரச்னைகளை திசை திருப்பும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்.

அதில் ஒன்றுதான் ஒரேநாடு ஒரேதேர்தல் திட்டம்.

இது ஒன்றும் புதிதும் அல்ல.1983 தேர்தல் கமிஷன் பரிந்துரைத்து மீண்டும் 1999  வாஜ்பாய் அரசால் நியமிக்கப்பட்ட ஜீவன் ரெட்டி கமிஷன் பரிந்துரைத்த 170வது அறிக்கையில் சொல்லப்பட்டவைதான்.

ஆனால் அதில் உள்ள பல சிக்கல்களுக்கு விடை கிடைக்காத நிலையில்தான் அந்த பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டன.

இப்போது தூசி தட்டி அவற்றை மீண்டும் பரிசீலிக்க அவசியம் என்ன?

காங்கிரஸ் அல்லாத பாரதம் அமைப்போம் என்று சொல்லிக் கொண்டிருந்த கட்சி பாஜக.

ஓரளவு அதை முடித்துவிட்டார்கள். தனி பெரும்பான்மை கிடைத்துவிட்டது.

கம்யுனிசம் ஆட்சி நடத்தும் சீனாவில் ஒரே கட்சிதான். அது கம்யுனிஸ்டு கட்சி.

அதேபோல் இந்து மதவாதம் ஆட்சி நடத்தும் இந்தியாவில் ஒரே கட்சிதான். அது பாஜக என்று ஆக்க திட்டம் இடுகிறார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

அரசியல் சட்டத்தை திருத்தாமல் ஒரே தேர்தல் முடியாது என்று பலரும் கருத்து சொல்லிவிட்டார்கள்.

1952, 1957, 1962, 1967 இந்த நான்கு ஆண்டுகளில்தான் பாராளுமன்றத்துக்கும் சட்ட மன்றங்களுக்கும் சேர்த்து தேர்தல்கள் நடைபெற்றன. அதற்குப் பிறகு எல்லாம் மாறி விட்டன.

பெரும்பான்மை இழந்த கட்சி ஆட்சியில் தொடர முடியாமல் போனால் சிறிது காலம் குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கலாம். பின்பு பொதுத்தேர்தல் நடத்தி தானே ஆக வேண்டும். பாராளுமன்ற தேர்தல் வரை குடி அரசுத் தலைவர் ஆட்சியை  நீடித்தால் அது ஜனநாயகமா ?

செலவினத்தை மிச்சப்படுத்த என்ற கேள்வியே தவறு. மக்களாட்சியை தேர்ந்து எடுக்க செலவு ஒரு தடையாக இருக்க முடியாது.

சர்வாதிகாரத்தை நோக்கி பாஜக அரசு பீடு நடை போடுகிறது. வெற்றி காண்பது மட்டும் அரிது. ஏன் என்றால் எந்த சர்வாதிகாரமும் நீடித்தது இல்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பில் முழங்கிய தமிழ் !!!

புதிதாக தேர்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பில் மதமும் மொழிகளும் போட்டி போட்டன.

தொடங்கியது பாஜக. எல்லாரும் ஜெய் ஸ்ரீராம் முழக்கத்துடன் பதவி ஏற்றனர்.

வேண்டும் என்றே எம்ஐஎம்எம்பி ஒவைசி பதவி ஏற்க வரும்போது ஜெய் ஸ்ரீ ராம் என்று முழங்கி வெறுப்பேற்றினர். வரும் பதிலுக்கு ஜெய் பீம், அல்லாஹோ அக்பர், ஜெய் ஹிந்த் என்று குரல் எழுப்பினார்.

எல்லா தமிழ் உறுப்பினர்களும் தமிழிலேயே பதவி ஏற்றுக் கொண்டனர். எல்லாரும் இனி பாராளுமன்றத்தில் தமிழிலேயே பேச வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டால் நல்லது.  

அதற்கு சில விதிகள் உள்ளன. அதன்படி முன்னயே அறிவிப்பு கொடுத்து விட்டால் தமிழில் பேசினால் மொழி பெயர்ப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கும். எனவே தமிழிலேயே பேசலாம். எல்லா மாநில உறுப்பினர்களும் அவரவர் தாய் மொழியில் பேசினால்தான் வடக்கே உள்ளவர்களுக்கு கொஞ்சமாவது நல்லறிவு பிறக்கும்.

இந்தி வேண்டாம் என்று சொல்வதை விட ஏன் என் தாய் மொழி கூடாது என்று  கேட்டால் யாரிடம் பதில் இருக்கும்?

ஆங்கில எதிர்ப்பு என்பது உண்மையில் இந்தி திணிப்பே என்றாலும் ஏன் விடுதலை ஆன நாட்டில் வேற்றுநாட்டு மொழியை பேச வேண்டும் என்று கேட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. எனவே இந்தியும் வேண்டாம், ஆங்கிலமும் வேண்டாம்.  என் தாய் மொழி எனக்கு போதும் என்று முடிவு எடுத்து செயல்பட்டால் பிரச்னை தீரும்.

சாத்வி பிரக்யா மகராஜ் பதவி ஏற்கும் போது தன் குருநாதரை போற்றினார். சலசலப்பையும் பொருட்படுத்தாது தன் போக்கில் பேசினார்.

மேற்கு வங்க உறுப்பினர்கள் ஜெய் பங்க்ளா முழக்கமும், ஜெய் மா துர்கா என்றும் பெரும்பாலான தமிழ் உறுப்பினர்கள் தமிழ் வாழ்க என்றும், பெரியார் வாழ்க என்றும், அம்பேத்கர் வாழ்க என்றும் முழக்கம் இட்டனர்.

எல்லாரும் தமிழிலேயே பதவி ஏற்றுக் கொண்டனர்.

ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மட்டும்  தமிழ் வாழ்க என்று சொல்லிவிட்டு ஜைஹிந்த் வந்தேமாதரம் என்று குரல் எழுப்பினார்.

எப்போது இவர் அகில இந்தியாவுக்கு மாறினார் என்பது தெரியவில்லை. இனி அதிமுக கூட்டங்களில் எல்லாம் இதே முழக்கம் முழங்குமா என்பதும் தெரியவில்லை. 

குறைந்த பட்சம் அன்னை பாரதம் என்றாவது முழங்கி இருக்கலாம்.

என் தாய் நாட்டை என் தாய் மொழியில் மட்டுமே வாழ்த்தி முழக்கம் இட வேண்டும். வேறு மொழியில் வாழ்த்தினால் அது என் தாய் நாடாக இருக்க முடியாது. 

பாரதியார் கூட வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு என்றுதான் முழக்கம் எழுப்பினார்.

இனி வரும் காலம் எப்படி இருக்கும் என்று இன்றைய பதவி ஏற்பிலேயே தெரிந்து  விட்டது.

நாடு மொழியாலும் மதத்தாலும் பிரிந்து கிடக்கிறது என்பதை விட பல மொழிகளையும் பல மதங்களையும் கொண்டிருந்தாலும் ஒரே நாடாக விளங்கி வருகிறது என்பதே நமக்கு பெருமை.

அதை விடுத்து எந்த ஒரு மொழியையோ மதத்தையோ எவர் மீதும் திணித்தால் நாட்டில் அமைதி நிலவாது என்பதை பாராளுமன்ற பதவி ஏற்பு  நிகழ்ச்சிகள் நிருபித்துவிட்டன.

மும்மொழித்திட்டம் -வஞ்சகவலை -இந்தித்திணிப்பு சதி -அழிந்து போகும் தமிழினம்

மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் இல்லை – பிடித்த மொழியை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்ததை வைத்து இந்தி திணிப்பு அச்சம் அகன்று விட்டதை போல் சிலர் பிரச்சாரம் செய்வதை சகித்துக் கொள்ளவே முடியவில்லை.

இந்தி பேசாத மாநிலங்களில் யாரும் தங்கள் தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து பக்கத்து மாநில மொழிகளில் ஒன்றையோ வேறு மாநில மொழியையோ பிரெஞ்சு அல்லது ஜெர்மனையோ தேர்ந்தெடுக்கப் போவதில்லை.

அவர்கள் மூன்றாவது மொழி ஒன்று கட்டாயம் என்றால் வேறு வழியின்றி இந்தியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டே தீரும். இது திணிப்பல்லாமல் வேறென்ன?

அதனால்தான் வஞ்சகத்தனமாக எல்லாரும் தங்கள் தாய்மொழி, ஆங்கிலம் அல்லாமல் வேறு ஒரு மொழியை கற்றே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.

மூன்றாவது மொழி ஒன்றை கற்க வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக கஸ்தூரிரங்கன் தெளிவு பட கூறுகிறார்.

நேரடியாக இந்தியை படியுங்கள் என்று கூறுவதற்கு பதிலாக வேறு வழியின்றி இந்தியை தேர்ந்தெடுக்க கட்டாயப்படுத்துகிறார்கள்.

ஒரு இனத்தை அழிக்க அவன் மொழியை அழித்தால் போதும் என்பதை உணர்ந்து தமிழர்களை ஒழிக்க அவர்களின் மொழியை ஒழிக்க திட்டமிடுகிறார்கள்.

ஏனப்பா மூன்றாவது மொழியை திணிக்கிறாய் என்றால் உங்கள் மீது உள்ள அக்கறை என்பார்கள்.

எந்த இந்திக்காரன் இந்தி ஆங்கிலத்தை தவிர மூன்றாவது மொழியாக தமிழையோ அசாம் மொழியையோ தேர்ந்தேடுக்கப் போகிறான்?

எத்தனை நாடுகளில் மூன்று மொழியைக் கற்பிக்கிறார்கள்?

இங்கே உள்ள சோடா பாட்டில் புகழ் வில்லிபுத்தூர் ஜீயர் எல்லோரும் எல்லா மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

அது எப்படி எல்லா பார்ப்பனர்களும் மும்மொழி திட்டத்தை ஆதரிக்கிறார்கள்?

சமச்கிரித வேதத்தை கற்றுக் கொண்டால் சூத்திரன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றவேண்டும் என்றும் பேசினால் நாவை அறுக்க வேண்டும் என்றும் எழுதி வைத்தவர்கள் இப்போது விழுந்து விழுந்து இந்தியை கற்றுக் கொள்ளுங்கள் என்று கதறுவது ஏன்?

இன்னும் தமிழில் கையெழுத்து கூட போட தெரியாமல் இருக்கும் தமிழர்கள் மத்தியில் நீ மூன்று மொழிகளை கற்றுக்கொள் என்று சொல்வது எவ்வளவு அபத்தம். சாதாரண மனிதனுக்கு இல்லை மாணவர்களுக்கு மட்டுமே இந்த தண்டனை என்றால் ஏன் அவர்களுக்கு இந்த தண்டனை என்று எங்களுக்கு தெரிய வேண்டாமா?

வேலை கிடைக்காமல் இங்கே வந்து வேலை பார்க்கும் இந்திக்காரர்கள் எல்லாம் இப்போது தமிழை கற்றுக் கொள்ளவில்லையா?

அதேபோல் இங்கிருந்து மும்பைக்கும் கொல்கத்தாவிற்கும் டெல்லிக்கும் சென்று வேலை செய்யும் தமிழர்கள் எங்கும் படிக்காமலேயே மராத்தியையும் வங்காளியையும் இந்தியையும் சரளமாக பேசுகிறார்களே என்ன குறை?

இதுவரை இந்தி கற்காமல் படித்து பட்டம் பெற்று பணியில் உள்ளவர்கள் எதில் குறைந்துவிட்டார்கள்?

பட்ட படிப்பை நான்கு ஆண்டுகளாக மாற்றி ஒவ்வொரு ஆண்டும் நிறுத்தி நிறுத்தி படிக்க வழிவகை செய்திருக்கிறார்கள். அதை பரிசீலிக்கலாம்.

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றி எந்த மொழியில் என்ன பயில வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்று விட்டு விடுங்களேன். ஏன் கட்டாயப்படுத்துகிறீர்கள்?

ஒரே பாடத்திட்டத்தை நாடு முழுதும் அமுல்படுத்த முடியாமல் பல பாடத் திட்டங்களை வைத்துக்கொண்டு அதில் மாநில பாடத்திட்ட மாணவர்களை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் என்று நீட் தேர்வு நடத்தும் இவர்களிடம் என்ன நியாயத்தைப் எதிர்பார்க்க முடியும்? உச்ச நீதிமன்றம் இன்னும் இதுபற்றி இறுதி முடிவு கொடுக்கவில்லை என்பதை மறக்க வேண்டாம்.

பத்து வயது குழந்தைகளுக்கு படிக்கும் பளுவை அளவுக்கு அதிகமாக திணிப்பது ஏன்? படிக்கும் பளு எல்லா மொழி மாணவர்களுக்கும் சரி சமமாக இருக்க வேண்டும். அது மும்மொழி திட்டத்தில் முடியவே முடியாது. ஏன் இந்த பாரபட்சம். ?

கல்வி கற்பதை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுவோம் என்று சொல்லால் சொல்லிவிட்டு செயலால் கொடுமைப்படுத்தி அடிமைப்படுத்தும் திட்டம்தான் மும்மொழித்திட்டம்.

எல்லா மாநிலங்களும் ஏற்றுக் கொண்டதாக கூறுவதே தவறு.

இப்போது வங்காளம், மராட்டியம் கன்னடம் போன்ற மாநிலங்களும் மும்மொழித் திட்டத்தை எதிர்க்க தொடங்கிவிட்டன.

தாய்மொழிக் கல்வியை கட்டாயப்படுத்தினால் நல்லதுதானே ஏன் அதற்கு மாநில அரசுகள் திட்டமிடக் கூடாது?

சிபிஎஸ்இ பள்ளிகள் தடை செய்யப்பட்டால் கூட நல்லதுதான்.

இந்தி படிக்க விரும்புபவர்களுக்கு இந்தி பிரசார சபா தனது சேவையை விரிவு படுத்தட்டுமே.

இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு பற்றி பேச வேண்டும் மோடி??!!

மோடி தனது வெளிநாட்டு பயணங்களை தொடங்கிவிட்டார்.

மாலத்தீவு சென்றவர் இதுவரை சீனா பக்கம் இருந்த அதிகார மையம் இந்தியா பக்கம் இனி திரும்பும் என்பதை உறுதி செய்திருக்கிறார். இது வரவேற்கத் தக்க விளைவு.

அதேபோல் இன்று இலங்கை செல்லும் பிரதமர் மோடி அதிபர் சிறிசேனாவுடன் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

ஈஸ்டர் பண்டிகை போது பயங்கர வாத தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீர்க்கப்படாத இலங்கைத் தமிழர் பிரச்னை பற்றி என்ன செய்யப் போகிறார் என்பது தெரியவில்லை.

இந்திய இலங்கை உறவு என்பது வெறும் வர்த்தக ரீதியில் மட்டுமே இருக்க முடியாது.

ஏனென்றால் அங்குள்ள தமிழர்கள் இங்குள்ள தமிழர்களுடன் ரத்த உறவு கொண்டவர்கள். அதை மற்ற மாநிலத்தவர் அங்கீகரிப்பதில்லை என்பதுதான் துயரம். மத்திய அரசும் அதை ஒரு அம்சமாகவே பார்ப்பதில்லை.

ஆனால் இந்தியா முந்திய காலத்தில் மேலாண்மை செய்யப் போய் தமிழர்களுக்கு துயரங்களைத்தான் பரிசாக தந்திருக்கிறார்கள்.

எழுநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப் பட்டபோது அவர்களை தமிழர்களாகதான் பார்த்தார்களே தவிர இந்தியர்களாக பார்க்கவில்லை.

ஈழத்தில் தமிழர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டதை வேறு நாட்டு பிரச்னைஎன்று கைகழுவ பார்த்தார்களே தவிர மனித உரிமை மீறல்களாக கூட பார்க்கவில்லை.

வீடுகள் கட்டி கொடுக்கிறோம் கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்கிறோம் ஆனால் அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வோம் என்பதெல்லாம் கண்துடைப்பு என்பது பாமரர்களுக்கு கூட தெரியும்.

விடுதலை புலிகள் போரிட்டு வீழ்ந்த கடைசி நேரம் வரை இந்தியா சொல்லிக்  கொண்டிருந்தது “இலங்கை இனப்பிரச்னைக்கு ராணுவ தேர்வு முடிவாகாது அரசியல் தீர்வே இறுதி.”. 

ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நாள் முதல் அரசியல் தீர்வைப்பற்றியே யாரும் பேசுவதில்லை.

மோடியிடம் ஓரளவு எதிர்பார்ப்பு  நிச்சயம் இருக்கிறது. அங்கு சென்று அரசியல் தீர்வு பற்றி பேசுவார் என்று நம்புகிறோம்.

ஏற்கெனெவே அங்கு முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறை சிங்களர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டு எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் ராஜினாமா செய்யும் அளவுக்கு நிலைமை சீர்கேடடைந்துவிட்டது.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட எல்லா நாடுகளும் ஒன்றுபற்று இணக்கமாக செயல்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

பயங்கரவாதிகள் எல்லாருக்கும் மதம் என்பது ஒன்றும் இல்லை. மதத்தை அவர்கள் தங்கள் சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

பயங்கரவாதிகள் மதங்களின் எதிரிகள்.

ஆனால் கெட்ட வேளையாக மதத்தில் அபிமானிப்பவர்களை பயங்கரவாதிகளை ஒழிப்பதில் சுணக்கம் காட்டுகிறார்கள்.

இலங்கையில் ஏறத்தாழ 46% வணிகம் இந்தியர்கள் கையில் இருப்பதாக கூறுகிறார்கள். எனவே இந்தியாவுக்கு இலங்கை ஒரு வணிக சந்தை. அங்கே வாழும் மக்களின் உரிமைகள் எல்லாம் இந்தியர்களுக்கு இரண்டாம் பட்சம்தான். இதுதான் இதுவரை இந்தியாவின் இலங்கை உறவின் அணுகுமுறையாக இருக்கிறது.

அது மாற வேண்டும். தன் நாட்டின் ஒரு பகுதியாக இருக்கிற தமிழர்கள் இலங்கையின் தமிழர்களுக்கு உறவாக இருப்பதால் இந்தியத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டிய இந்திய அரசு அவர்களை பிளவுபடுத்தி பார்ப்பதிலேயே அக்கறை செலுத்துகிறது.

பிரதமர் மோடிக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு இது.

இவர் சொல்வதை சிங்களர்கள் கேட்பார்களா அல்லது நாங்கள் சீனா பக்கம் சாய்ந்து விடுவோம் என்று அச்சுறுத்துவார்களா என்பதை எல்லாம் மீறி நாம் சொல்வதை சொல்லித்தான் ஆக வேண்டும்.

நரேந்திரமோடி அரசியல் தீர்வு பற்றி பேசாவிட்டால் வேறு யார் பேச முடியும்.?

மோடி நம்பிக்கைத் தன்மையை பெறுவாரா இழப்பாரா?

ரயில் பயணத்தில் மசாஜ் சேவை – பிரச்னைகளை தீர்க்குமா உருவாக்குமா??!!

மத்திய பிரதேசத்தின் ரத்லாம் வட்டத்தின் 38 ரயில்களில் மசாஜ் சேவை செய்யப்படும் என்று அதன் வட்டார மேலாளார் அறிவித்துள்ளார்.

தங்கம், வைரம், பிளாட்டினம் என்று பெயர் இடப்படும் திட்டங்களுக்கு Rs.100,200,300 என கட்டணம் நிர்ணயிதிருக்கின்றனர்.

இதற்கு ஒரு ஒப்பந்தம். ஒரு ரயிலுக்கு மூன்று அல்லது நான்கு மசாஜ் செய்பவர்கள் இருப்பார்கள். அவர்கள் தலை மற்றும் கால்களுக்கு மட்டும் மசாஜ் செய்வார்கள்.    பயண சீட்டு வாங்கி பயணம் செய்யும் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு ஆட்படுத்தப்படுவார்கள்.

பயணிகளுக்கு பயண கால வசதிகள் செய்து கொடுப்பதை விட்டு இப்படி எல்லாம் சிந்திக்கிறார்களே உருப்படுமா ரயில் பயணம்.

அதில் வரும் பிரச்னைகளை தீர்ப்பதற்கு யார் இருப்பார்கள்?

ரயில்வே காவல் துறைக்கு இதுவே ஒரு தலைவலியாக போய்விடாதா?

ஆண்டுக்கு 90 லட்சம் வருவாய் கிடைக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். வராவிட்டால் திட்டத்தை திரும்ப பெறுவார்களா?

வருவாய்க்காக இப்படி எல்லாம் சிந்திப்பது சரியா?

வேலை வாய்ப்புகளை இப்படியா உருவாக்க வேண்டும்?

முன்னோட்டமாக எப்படி நடக்கிறது என்பதை பார்த்துவிட்டு விரிவாக்குவதா கைவிடுவதா என்பதை முடிவு செய்வார்கள்.

அங்கேதான் எப்படி எல்லாம் சிந்திப்பார்கள்??!!

மழைக்காக தவளைகளுக்கு திருமணம் செய்வித்த கன்னடர்கள்??!!

கர்நாடகத்தில் மூடநம்பிக்கைகள் ஒழிப்புக் சட்டம் அமுலில் இருக்கிறது.

இருந்தும் உடுப்பி நாகரிக சமிதியினர் மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்விக்க திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டு அப்பகுதி மக்களுக்கு வழங்கி  ஏற்பாடு செய்திருக்கிராகள்.

ஆண் பெண் தவளைகளை ஒரு கூண்டுகளில் அடைக்கப்பட்டு சைக்கிள் ரிக்சாவில் ஊர்வலமாக அழைத்து வந்து ஒரு புரோகிதரை அழைத்து மந்த்ரம் ஓத வைத்து தவளைகள் மீது அட்சதை தூவ வைத்து திருமணம் நடத்தி வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் மீது மூட நம்பிக்கையை வளர்த்த குற்றத்துக்காக அரசு கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும்.

இதை விட மூடநம்பிக்கை வேறு இருக்க முடியுமா?

புரோகிதன் தவளையிடம் தாலி எடுத்துக் கொடுத்தாரா என்பது தெரியவில்லை.

இப்படி மூட நம்பிக்கைகளை வளர்ப்பவர்களாகத்தான் புரோகிதர்கள் இருக்கிறார்கள். ஏன் என்றால் அவர்களே மூட நம்பிக்கையை வைத்துத்தானே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் என்னதான் சட்டம் போட்டாலும் மூட நம்பிக்கையை வைத்து ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

பொதுமக்களாக புத்தியை பயன்படுத்தி தடுத்தால்தான் உண்டு.

ராஜன் செல்லப்பா பற்ற வைத்த திரி ??!! அதிமுகவில் குண்டு எப்போது வெடிக்கும்??!!

ராஜன் செல்லப்பா இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து அதிமுகவில் உள்ள உட்கட்சி பூசலை கக்கினார்.

பொதுக்குழுவைக்  கூட்ட வேண்டும் என்று கோரிய அவர் அதிமுகவுக்கு வலுவுள்ள ஒற்றைத் தலைமையே வேண்டும் என்று கூறிய அவர் மறைமுகமாக தற்போது  இருக்கும் இரட்டைத் தலைமையை வலுவற்றது என்று குற்றம் சாட்டினார்.

ஒபிஎஸ் மகன் தான் பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவுடன் தான் மட்டுமே ஜெயலலிதா சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தியதை குறிப்பிட்டு ஏன் ஒன்பது எம்எல்ஏக்களையும் அழைத்து சென்றிக்கலாமே என்றும் குற்றம் சாட்டும் தொனியில் கூறினார்.

இதனால் தன்னை கட்சியை விட்டு நீக்கினாலும் பரவாயில்லை என்றவர் தன் கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

இதைத்தான் கேசி பழநிசாமியும் கூறி வந்தார். வழக்கும் நிலுவையில் இருக்கிறது. கட்சியில் பொதுச்செயலாளர் பதவி மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் பழனிசாமி உறுதியாக இருக்கிறார். இரட்டை தலைமை அதிமுகவில் இருக்க முடியாது. அதன் சட்ட திட்டம் அப்படி இருக்கிறது.

பாஜக யார் பக்கம் இருக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது.

தன் மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் செய்த இபிஎஸ்-ஐ ஒபிஎஸ் எப்படி மன்னிப்பார்?

அதிமுகவில் எப்போது பிளவு வெடிக்கும் அதை பயன்படுத்தி பாஜகவை எப்படி வளர்க்கலாம் என்பதில்தான் மேலே உள்ளவர்களுக்கு அக்கறை.

இன்னும் எத்தனை நயினார் நாகேந்திரன்கள் உருவாக போகிறார்களோ பொறுத்திருந்து பார்ப்போம்.

ஒபிஎஸ் – இபிஎஸ் இருவருமே ராஜன் செல்லப்பாவின் பேட்டியை முழுமையாக பார்த்து விட்டு கருத்து சொல்கிறோம் என்று நழுவிக் கொண்டார்கள்.

எப்படியோ சொல்லித்தானே ஆக வேண்டும்.

ஒற்றைத்தலைமை அதிமுகவில் உருவாக வாய்ப்பே இல்லை.

ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் என்று இருவரையும் சொல்ல முடியும் என்றால் இவர்கள் இல்லாத வேறு யார் எல்லாராலும் ஒப்புக் கொள்ளக் கூடியவராக இருக்கிறார்?

அப்படி யாருமே இல்லாத நிலையில் இந்த இருவரில் ஒருவர் என்றுதானே ராஜன் செல்லப்பா சுட்டிக் காட்ட முடியும்?

தமிழக அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய நிகழ்வுகளை இன்னும் சில வாரங்களில் நிச்சயம் பார்க்கலாம்.

இரண்டு தமிழ் மாணவிகளின் உயிரைப் பலி வாங்கிய ‘நீட்’ ??!!

அனிதா வைத்தொடர்ந்து இந்த ஆண்டும் நீட் இரண்டு தமிழ் மாணவிகளின் உயிரை பலி வாங்கிவிட்டது.

திருப்பூர் ரிதுஸ்ரீ என்ற மாணவி பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 490 மதிப்பெண்  பெற்றும் கூட  நீட் தேர்வில் வெறும் 69 மதிப்பெண் பெற்றதால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வைஷா என்ற மாணவியும் இதே காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

கிராமப் புற நகர்ப்புற ஏழைகள் நீட் தேர்வால் பாதிக்கப்படுவார்கள் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

முதல் 50 இடங்களில் தமிழக மாணவர்கள் யாரும் இடம் பெறவில்லை. தேர்ச்சி சதவிகிதத்தில் தமிழகம் 23வது இடத்தை பெற்றிருக்கிறது.

தமிழ்நாடு சதவிகிதம் 48.57.

2013ல் உச்ச நீதிமன்றம் இதே நீட் தேர்வை சட்டத்துக்கும் அரசியல் சட்டத்துக்கும் முரணானது செல்லாதது என்று தீர்ப்பு சொன்னது. பின்னர் ஏப்ரல் மாதம் 2016ல் தனது தீர்ப்பையே மாற்றி தீர்ப்பு சொன்னது. அதனால் தான் இன்று நீட் தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் 2013ல் எந்த காரணங்களினால் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்னதோ அவைகளுக்கு ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வு அல்லது பதில் இன்றும் கிடைக்கவில்லை.

              சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படும்  கேள்விகளுக்கு மாநில பாடத்திட்டத்தில் படித்து தேறிய நாங்கள் எப்படி பதில் அளிக்க முடியும் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவே இல்லை. 

தமிழ்நாடு அரசு  நிறைவேற்றி அனுப்பி வைத்த நீட் விலக்கு சட்டம் குடி அரசுத் தலைவரிடம் இன்னும் ஒளிந்து கிடக்கிறதே ?

அதிமுக அரசு பதில் சொல்லியே தீரவேண்டும்.