Home Blog Page 36

24 மணி நேரமும் திறந்து வைக்கும் அனுமதி சில்லறை வணிகர்களை ஒழித்துவிடும்?!

24 மணி நேரமும் கடைகள் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்படும் என்றதும் பொதுவாக வரவேற்கப்பட்டது.

ஆனால் ஆராய்ந்து பார்க்கையில் இது யாருக்கு சாதகம் யாருக்கு பாதகம் என்றால் பெரு முதலாளிகளுக்கு மட்டுமே இது பயன் தரும். சிறு வணிகர்கள் பெருவாரியாக பாதிக்கப்படுவார்கள்.

முன்பே சில மருந்துக் கடைகள் பெட்ரோல் நிலையங்கள் போன்ற சில கடைகளுக்கு  எந்நேரமும் திறந்து வைக்க அனுமதி இருக்கிறது.

தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947ல் கொண்டு வந்திருக்கிற திருத்தத்தின் பிரிவு 6ன் படி 10 பேருக்கு மேல் பணிபுரியும் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கு பொதுநலன் கருதி அனுமதி  வழங்கப்பட்டிருக்கிறது. இதன்படி இரவிலும் நாள் முழுவதும் கடைகளை திறந்து வணிகம் செய்யலாம்.

பெண்களுக்கு பாதுகாப்பு, 8 மணி வேலை என்ற வரையறை, பெண்களுக்கு போக்குவரத்து வசதி செய்து கொடுப்பது என்று எல்லாம் பல நிபந்தனைகளை விதிக்கிறது இந்த திருத்தம்.

இது பெட்டிக்கடைகள், சிறிய தேநீர்க் கடைகள் போன்ற பத்துக்கும் குறைவான ஊழியர்களை கொண்ட கடைகளுக்கு பொருந்துமா என்றால் பொருந்தாது என்றுதான் தெரிகிறது. 

பத்துக்கும் மேல் யார் ஊழியர்களை வைத்திருப்பார்கள்? பெரு நிறுவனங்கள் மட்டுமே. அவர்களுக்குத்தான் இது லாபம் தரும். இரவிலே இவைகள் வணிகம் செய்துவிட்டால் அதே பொருட்களை சிறு வணிகர்களிடம் வாங்க ஆள் இருக்காது.

இந்த திருத்தத்தை அமுல்படுத்தும் முன்பே பொதுமக்களிடம் கருத்து கேட்டார்களா?  தொழிற் சங்கங்களிடம் கருத்து கேட்டார்களா? அல்லது யாரிடம் கேட்க வேண்டுமோ அவர்களிடம் மட்டும் கருத்து கேட்டார்களா?

வேலைவாய்ப்பு பெருகும். வணிகம் பெருகும். பொதுமக்களுக்கு சிரமம் குறையும்  என்றெல்லாம் சிலாகிக்கிறார்கள். எந்த அளவு அது உண்மை என்று போக போகத்தான் தெரியும்.

குற்றங்கள் பெருகும் என்ற அச்சமும் கூடவே எழுகிறது.

காவல் துறைக்கு கூடுதல் சுமை.

ஆபத்தான அணுக்கழிவுகளை கொட்டி வைக்க தமிழ்நாடுதான் கிடைத்ததா??!!

அணுமின்நிலையங்கள் இந்தியாவில் ஏழு இடங்களில் 22 அணு உலைகளுடன் இயங்கி வருகின்றன.

குஜராத்தில் கக்ராபூர், மகாராஷ்டிராவில் தாராபூர், கர்நாடகாவில் கைகாவில், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் நரோடாவில் மற்றும் தமிழ்நாட்டில் கல்பாக்கம், கூடம்குளம் ஆகியவைதான் ஏழு அணுமின்நிலையங்கள்.

அணுமின்நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் ஏற்படும் இழப்பை யார் ஈடு கட்டுவது என்பது பற்றி இதுவரை வரையறை செய்யப்படவில்லை.

அணுஉலைகள் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் 15 நிபந்தனைகளுக்கு உட்பட்டு அணு உலைகள் இயங்க அனுமதி அளித்தது. அந்த நிபந்தனைகளில் முக்கியமானது அணுக்கழிவுகளை அணு உலைக்கு வெளியே வைப்பதற்கான வசதியை ஐந்து ஆண்டுகளுக்குள் உருவாக்க வேண்டும் என்பது. 

அது இன்னும் முடிவடையாததால் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தேசிய அணு மின் கழகம் அவகாசம் கேட்டதால் 2022க்குள் அணுக்கழிவுகளை அணு உலைக்கு வெளியே கட்டி முடிக்க அவகாசம் அளித்தனர்.

எனவே இப்போது அணுமின் கழகம் 22 அணு உலைகளிலும் கிடைக்கும் அணுக்கழிவுகளை கூடம்குளத்தில் சேமிக்க திட்டமிட்டு அதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் ஜூலை 10 ம் தேதி நடத்த இருக்கிறது.

அது உண்மையில் நடக்குமா அல்லது சம்பிரதாயத்திற்காக நடத்தி கூடம்குளத்திலேயே அமைக்க திட்டமிடுவார்களா என்பது தெரியவில்லை.

அணுக்கழிவுகளில் ஆபத்து அதிகம். அதன் வீச்சை பாதிப்பில் இருந்து காக்க 24000 ஆண்டுகள் பாதுகாப்புடன் வைக்க வேண்டுமாம்.

அமெரிக்காவில் யுக்கா மலையில் இந்த அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்த அனுமதியை ஒபாமா திரும்ப பெற்றுக் கொண்ட பிறகு அதன் ஆபத்து பற்றி அச்சம் அதிகமாகி இன்னும் எப்படி பாதுகாப்பாக சேமிப்பது என்பது பற்றிய நடைமுறை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அமெரிக்காவில் Nuclear Waste Management Act  என்று தனிச்சட்டமே வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் Atomic Energy Act 1962  இருக்கிறதே தவிர கழிவுகளுக்கு என தனி சட்டம் இல்லை.

உச்சநீதிமன்றம் கழிவு பாதுகாப்பு பற்றி மையம் அமைத்த பிறகுதான் உலைகளை இயக்க வேண்டும் என்று சொல்லியிருந்தால் உலைகள் செயல்பட்டிருக்கவே  முடியாது.

இன்று இந்தியாவின் மொத்த மின்சார தேவையில் வெறும் 3.2% தான் அணுமின்சாரத்தால் கிடைக்கிறது. எனவே அணுமின்சாரம் ஒன்றும் தவிர்க்க முடியாதது அல்ல.

எப்படி இருந்தாலும் அணுக்கழிவு மையம் தமிழகத்தில் அமைய தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது.

அதற்கு மாநில அரசு சுயமாக இயங்கும் அரசாக இருக்க வேண்டும். இப்போது இருக்கும் பாஜகவின் ஊதுகுழலாக இயங்கும் அதிமுக அரசுக்கு அந்த தைரியம் இருக்குமா?

பாரதியின் முன்டாசுக்கு காவி பூசிய களவாணிகள் யார்?

தமிழக அரசின் பாட புத்தகங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

புதிய புத்தகங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

இதில் ப்ளஸ் 2 பொதுத்தமிழ் பாடப்புத்தகத்தின் அட்டை படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அதில் பாரதியார் காவி தலைப்பாகை அணிந்திருக்கிறார்.

இதை பாட புத்தகத்தின் மூலம் காவியை திணிக்கும் செயலாகத்தான் பார்க்க முடிகிறது.

பாரதி வெள்ளை தலைப்பாகை அணியும் வழக்கமுள்ளவர் என்று அவரை  அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

மதம் சாராத தமிழ் புலவர்கள் யாரும் கண்ணுக்குத் தெரியவில்லையா?

தமிழை வளர்த்தவர்களில் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் சமணர்கள் பங்கும் அளப்பரியது.

பாடநூல் கழக தலைவர் வளர்மதியிடம் கேட்டபோது அவர் காவி மயமாக்கும் எண்ணத்தில் இவ்வாறு வெளியிட்டதாக கூறுவது தவறு. இந்து மாநில அரசு வெளியிட்ட புத்தகம். கல்வித்துறையில் அரசியலோ மதமோ விளையாடுவதற்கு இடம் இல்லை. இதில் தவறு நடந்துள்ளது. இந்த பிரச்னைக்கு விரைவில் உரிய தீர்வு காணப்படும் என்றார்.

ஜெயலலிதா காலத்தில் ஒருமுறை பாடப்புத்தகங்களில் வள்ளுவர் சிலையை  மறைப்பதற்காக என்று நினைவு. குறிப்பிட்ட பக்கத்தில் அட்டை  ஒட்டி மறைத்துக் கொடுத்தார்கள். ஏனென்றால் அது கலைஞரை நினைவுபடுத்துவதாக இருந்ததாம்.

அதைப்போல இப்போது யாரோ பாஜக ஆதரவாளர் உள்ளே இருந்து கொண்டு இந்த வேலையை  பார்த்திருக்கிறார். அதை இப்போதைய ஆட்சியாளர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பாரதி எந்த மதத்துக்கும் சொந்தமானவனில்லை.

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் என்று ஏசுவை எழுதினார்.

சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பெருஞ்சோதி, அல்லா அல்லா அல்லா என்று பாடனார்.

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே

தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம்

நீதி நெறியினின்று பிறர்க்கு தவும்

நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்,,, என்றவர் பாரதி.

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திரு நாடு என்று தமிழையும் தமிழரையும் நாட்டையும் போற்றியவர்.

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே வெள்ளைப் பரங்கியைத் துரை என்ற காலமும் போச்சே என்று பள்ளர் களியாட்டம் பாடியவர் பாரதி.

ஆயிரந்தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்

பல்லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்டாமெனல் கேளீரோ” என்று சாடியவன் பாரதி.

முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் ஓதுவார் மூன்று மழை பெய்யுமடா மாதம்; இந்நாளிலே பொய்ம்மைப் பார்ப்பார்-இவர் ஏதுசெய்தும் காசு பார்ப்பார் ;

பேராசைக்காரனடா பார்ப்பான் -ஆனால் பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்;

பிள்ளைக்குப் பூணூல் என்பான் -நம்மைப் பிச்சுப் பணங்கொடெனத் தின்பான் ;

என்று பார்ப்பனரின் போலித்தனத்தை மறவன் பாட்டில் தோலுரித்தவன் பாரதி.

பாரதியையும் விவேகானந்தரையும் ராமானுஜரையும் காட்டிக் காட்டியே ஏமாளி இந்து சமய மக்களை ஏமாற்றுவதையே பிழைப்பாக கொண்டிருக்கிறார்கள் இன்றைய சனாதனிகள்.

அந்த  ஞானிகள் சொல்லிய எவற்றையும் இவர்கள் ஏற்றுக் கொண்டதில்லை.  ஆனாலும் சொந்தம் கொண்டாடுவார்கள். அந்த முயற்சியில் ஒன்றுதான் பாரதி முன்டாசுக்கு காவி வண்ணம் பூசிய செயல்.

அதிமுக அரசு இந்த தவறை சரி செய்யும் என்று நம்புகிறோம்.

காந்தியை இழிவுபடுத்தி கோட்சேயை பாராட்டிய பெண் ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்?!

மராட்டிய மாநில பெண் ஐஏஎஸ் அதிகாரி நிதி சவுத்திரி.

பாஜகவின் தலைவர்களும் இந்து மகா சபை தலைவர்களும் மகாத்மா காந்தியை இழிவுபடுத்தியது போதாது என்று இவரும் தனது த்விட்டார் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

‘மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாடப் படவுள்ளது. அவரது படத்தை ரூபாய் நோட்டில் இருந்து அகற்றுவதற்கு இதுதான் சரியான நேரம். அவரது சிலைகள் உலகம் முழுவதும் இருந்து அகற்றப் பட வேண்டும். அவரது பெயர் சூட்டப்பட்ட நிறுவனங்கள் சாலைகளுக்கு மறுபெயர் சூட்ட வேண்டும். இதுதான் நாம் அனைவரும் செய்யவேண்டிய முக்கிய கடமையாகும். 30.01.1948ல் கோட்சே செய்த செயலுக்காக (மகாத்மா காந்தி கொலை) அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.’

இதைவிட கொடுமையாக ஒருவர் எழுத முடியுமா? அவர் எவ்வளவு அழுகிய மனம் கொண்டவராக இருந்தால் இப்படி எழுதியிருப்பார்.?

மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜிதேந்திரா அவுகத் போன்றவர்கள் அவரை பதவி நீக்கம் செய்ய வற்புறுத்தி  இருந்தனர்.

மாநிலத்தில் ஆளுவது பாஜக கூட்டணி ஆட்சி. எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்.  அதிகபட்ச நடவடிக்கை இட மாற்றம். அதைத்தான் செய்தார்கள்.

கண்டனம் அதிகமானவுடன் தனது பதிவை நீக்கியவர் சொன்னது அதைவிட மோசம். நான் எனது மனதில் பட்ட கருத்தை தான் கூறியிருந்தேன். அது தவறாக உணரப்பட்டுள்ளது. நான் மகாத்மா காந்தி குறித்து அவதூறாக எதுவும் சொல்ல வில்லை என்று கூறியிருக்கிறார்.

பாஜக ஆட்சியில் காந்தி மீதான தாக்குதல் இன்னும் அதிகரிக்கும் என்றுதான்  தோன்றுகிறது.

சாத்வி பிரக்யா சிங்கின் கோட்சே தேசபக்தர் என்ற பேச்சைதான் மன்னிக்கப் போவதில்லை என்று பிரதமர் மோடி கூறியதெல்லாம் சும்மா.

அமைச்சர் வேலுமணி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூற தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு?!

அமைச்சர் வேலுமணி மீது பலவிதமான குற்றச்சாட்டுகளை அறப்போர் இயக்கம் சுமத்தியது.

அதில் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டர் விதி முறைகளை மீறி ஒப்பந்தங்களை கொடுத்ததன் மூலம் பல கோடி ரூபாய்களை அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாக அமைச்சர் மீது குற்றம் சுமத்தி இருந்தது.

அதற்காக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை கோரியும் ஒரு ரிட் மனுவும் தாக்கல் செய்திருந்தது அந்த இயக்கம்.

இந்நிலையில் தன் மீது குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது எனவும் தடை விதிக்கவும்  தனக்கு ஏற்பட்ட மான நட்டத்துக்கு ஒரு கோடி ரூபாய் ஈடு கேட்டும் அமைச்சர் வேலுமணி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

அதன் விசாரணையில் இடைக்கால உத்தரவு எதையும் கொடுக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அதனால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை மக்கள் மன்றத்தில் அந்த அமைப்பு  கொண்டு செல்ல தடை ஏதும் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருகிறது.

வழக்கின் இறுதி விசாரணையில் தான் அமைச்சருக்கு ஏதாவது நிவாரணம் கிடைக்குமா என்பது தெரியும். அது இன்னும் பல வருடங்கள் ஆகும்.

மான் நட்ட வழக்குகளில் உண்மையை அல்லது அதற்கு முகாந்திரம் உள்ளதை , ஒரு சட்ட அமைப்பு விசாரிக்க கோருவதை என்று பல அம்சங்கள் இருந்தால் அவைகள் குற்றமாக கருதப்படாது என்பது சட்டம்.

ஆக அமைச்சர் தேர்ந்தெடுத்த மிரட்டல் வழிமுறை அவருக்கு கைகொடுக்கவில்லை.

விசாரணைக்கு பல வருடங்கள் ஆகும்.

வழக்கு போடாமலாவது இருந்திருக்கலாம்.

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பாளர்களுக்கு முன் ஜாமீன் கிடையாது; உச்ச நீதிமன்ற தீர்ப்பு சரியா??!!

மும்பை உயர் நீதிமன்றத்தில் சிலர் ஜிஎஸ்டி வரி தொடர்பாக தாங்கள் கைது செய்யப்படலாம் என்று முன் ஜாமீன் கேட்டனர். அதை உயர் நீதிமன்றம் அனுமதித்து ஜாமீன் வழங்கியது.

ஏனெனில் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை ஏதும் பதியப்படா நிலையில் அவர்களுக்கு பிணை பெற உரிமை உள்ளது என்று உயர் நீதிமன்றம் கருதியது.

அதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ததில் உச்ச நீதிமன்றம் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் குற்றவியல் நடைமுறை சட்டத்தில் இருந்து வேறுபடுத்தப்பட்டு தனி வரைமுறைகளை கொண்டு இயங்குவதால் முதல் தகவல் அறிக்கை இல்லாமலேயே விசாரணை துவங்கவோ கைது செய்யவோ செய்யலாம் என்று தீர்ப்பு அளித்திருக்கிறது.

இது மத்திய அரசுக்கு மிகவும் சாதகமான தீர்ப்பு  என்பதில் சந்தேகம் இல்லை.

விசாரணை நடத்துவதிலும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதிலும் எந்த தவறும் இல்லை. ஆனால் தனி நடைமுறைகளை கொண்டிருந்தாலும் அதிலும் இயற்கை நீதி காக்கப்பட்டாக வேண்டும்.

எந்த விதிமுறையும் இயற்கை நீதிக்கு முரணாக அமைய முடியாது கூடாது.

தெலுங்கானா உயர் நீதிமன்றமும் சரக்கு சேவை வரி ஆணையருக்கு உள்ள உரிமைகளை உறுதிபடுத்தியுள்ளது.

ஆனால் எத்தகைய பொருளாதார குற்றத்தை செய்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு உரிய பிணை உரிமைகளை மறுப்பது இயற்கை நீதிக்கு உகந்ததல்ல.

இயந்திர வாக்கு எண்ணிக்கையும் பதிவான வாக்கு எண்ணிக்கையும் 373 எம் பி தொகுதிகளில் ஒத்துப்போகவில்லை ??!!

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் ஒரு தொகுதியில் ஐந்து வாக்குச் சாவடியில் பதிவாகும் ஒப்புகை வாக்கு எண்ணப்பட்டு சரிபார்க்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.

நியாயமாக தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் முன்பே இது சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்க வேண்டும். கால தாமதம் ஆகும் என்பதால் முடிவுகளை வெளியிட்டு விட்டார்கள்.

இப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்களை ஆய்வு செய்து ஒரு தனியார்  இணைய தளம் ஒரு செய்தியை வெளியிட்டு உள்ளது.

அதன்படி நாடு முழுதும் 370க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை பதிவான வாக்கு எண்ணிக்கையுடன் ஒத்துப்போகவில்லை என்று தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு தொகுதியிலும் இவிஎம் இயந்திரத்தில் பதிவான வாக்குகளை விட கூடுதலாக 8000 – 15000 வாக்குகள் எண்ணப்பட்டிருக்கின்றன.

இது எப்படி சாத்தியம்?

எல்லா தொகுதிகளிலும் பாஜக லட்சக் கணக்கில் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.

சரத் பவார் கூறியது போல பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே அதற்கு முன் நடந்த மூன்று சட்ட மன்ற தேர்தல்களில் பாஜக தோற்றதா என்று கேட்டிருக்கிறார்.

வித்தியாசம் இருந்தாலே எங்கோ திட்டமிட்டதில் தவறு நடந்திருக்கிறது என்று பொருள்.

தேர்தல் ஆணையம்தான் இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் திமுக பெருவாரியான வெற்றி பெற்றிருக்கிறது என்ற கேள்வி எழலாம்.

அவர்களுக்கு தேவையான 303 இடங்களை தவிர வேறு எங்கும் என்ன நடந்தால் அவர்களுக்கு என்ன?

இருபது வாக்கு பதிவு இயந்திரங்களை காணவில்லை என்ற புகார் அப்படியே இருக்கிறது.

மொத்தத்தில் தேர்தல் ஆணையம் தான் தவறு நிகழவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதுவரை மக்களுக்கு  இருக்கும் தேர்தல் முடிவுகளின் மீதான சந்தேக கறை அழியாது.

சித்தா, ஆயுர்வேத படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாம்??!!

ஏற்கெனெவே எம்பிபிஎஸ், பல் மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற விதியில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்று கேட்டு நம்மால் இயற்றப்பட்ட சட்டம் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு சித்தா ஆய்ர்வேத படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று மீண்டும் சுற்றறிக்கை வந்துள்ளது.

கடந்து ஆண்டே இப்படி சுற்றறிக்கை வந்த போது முதல் அமைச்சர் மற்றும் தலைமை செயலாளர் கொண்ட குழுவினர் விவாதித்து மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டதின் பேரில் சென்ற ஆண்டு நீட் அமுல்படுத்தப்படவில்லை.

இப்போது மீண்டும் சுற்றறிக்கை அனுப்புகிறார்கள் என்றால் இங்கே யாருக்கும்  எதிர்க்க துணிவில்லை என்பதுதான்.

அமைச்சர் விஜயபாஸ்கர் சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டு விரைவில் முடிவெடுத்த அறிவிப்பதாக கூறுகிறார்.

எதிர்க்கிறோம் என்றோ நாங்களே தேர்வை நடத்தி மாணவர்களை சேர்ப்போம் என்றோ கூறவில்லை.

கல்வி பொதுப்பட்டியலில் இருக்கும்போது மாநில அரசு தன் அதிகாரத்தை பயன்படுத்த என்ன தடை?

காங்கிரஸ் அரசு வந்திருந்தால் கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க அனுமதி அளிப்போம் என்று கூறியிருந்தது .

இவர்கள் மாநில உரிமைகளை பறிப்பவர்கள். இவர்களிடம் நீதியை எதிர்பார்த்து காத்திருக்க முடியாது.

மாநில அரசு மாநில உரிமைகளை பாதுகாக்க தவறினால் மக்கள் எழுச்சியை தடுக்க முடியாது.

மாணவர்களுக்கு கத்தி விநியோகம் செய்த இந்து மகாசபையினர் ?!!

இந்து மகா சபையினர் வீர சவர்க்கார் பிறந்த நாளை கொண்டாடினார்கள்.

ஆக்ராவில் நடைபெற்ற விழாவில் இந்து மகாசபையினர் பத்து முதல் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கத்திகளை வழங்கினார்கள்.

இந்து மகாசபை செய்தி தொடர்பாளர் அசோக் பாண்டே என்பவர் வீர சவர்காரின் கொள்கைகளை விவரித்து பேசினார்.

‘அரசியலை இந்து மயமாக்குவதும் இந்துக்களை போராளிகளாக்குவதும்தான் ‘(Hinduisation of politics and Militarisation of Hindus) வீர சவர்காரின் லட்சிய கனவு என்றவர் பிரதமர் மோடி சவ்ர்காரின் முதல் கனவை நினைவாக்கிவிட்டார் என்று புகழ்ந்து பேசினார். அதாவது அரசியலை இந்து மயமாக்கி விட்டாராம் மோடி.  எனவே இந்துக்களை போராளிகளாக்கும் அடுத்த கனவை நாம் நினைவாக்குவோம்  என்றவர் மாணவர்களுக்கு கத்தி விநியோகிப்பதன் நோக்கம் மாணவர்களுக்கு தங்களை பாதுகாத்துக் கொள்வதும் நாட்டை பாதுகாப்பும் நோக்கம் என்றால் அவர்களுக்கு இந்த ஆயுதங்களை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் என்றார்.

அது மட்டுமல்ல இளவர் மாணவ மாணவிகளுக்கும் கத்தியுடன் பகவத் கீதை  புத்தகத்தையும் அவர் விநியோகித்தார்.

இதையெல்லாம் அனுமதிக்கும் அரசுதான் அங்கே ஆட்சி புரிகிறது.

குழந்தைகளின் மனதில் இப்படியெல்லாம் விஷ வித்தை தூவுகிறோமே என்ற குற்ற உணர்வு அவர்களுக்கு இல்லவே இல்லை.

இதெயெல்லாம் நியாயப்படுத்துகிறார்கள்.

இவர்களை இங்கே வளரவிட்டால் என்னவெல்லாம் செய்வார்கள்.?

பாஜக அதிகாரபூர்வமாக இந்த நடவடிக்கைகளை ஆதரித்து அறிக்கை விட தயாரா?

எப்படி விடுவார்கள்? மோவ் தொகுதி பா ஜக சட்டமன்ற உறுப்பினர் உஷா தாகூர் கோட்சே பற்றி கேட்டதற்கு ‘அவர் ஒரு தேசியவாதி’ என்று பதில் சொல்லி இருக்கிறார்.

பிரக்யா சிங் கோட்சேயை தேச பக்தி கொண்டவர் என்று சொன்னதை மன்னிக்க மாட்டேன் என்று சொன்னவர் மோடி. அதற்குப் பிறகு பிரக்யா சிங் எம்பி ஆகி விட்டார். இவர்களா கண்டிப்பார்கள்?

பாழ்பட்டுக் கிடக்கும் மறைமலை அடிகள் நினைவில்லம் ??!!

பல்லாவரத்தில் உள்ள சாவடி தெருவில் சைவத் தமிழ் அறிஞர் மறைமலை அடிகளாரின் நினைவில்லம் அமைந்திருக்கிறது.

இதன் ஒரு பகுதியில் நியாய விலை கடை இயங்கி  வருகிறது. அதற்குத்தான் மக்கள் வருகிறார்கள்.

நினைவில்லத்திற்கு யாரும் வருவதில்லை.

இதனை தென்னிந்திய தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பு பராமரித்து வருகிறதாம்.

ஏன் இதை அரசு பராமரிக்கக் கூடாது?

செடி கொடிகளுக்கு இடையே பாழ் அடைந்து கிடக்கும் அந்த கட்டிடம் ஒரு நினைவு  இல்லம் என்பதை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

மறைமலை அடிகளின் நூல்களை அங்கே மக்கள் பயன்பாட்டுக்கும் கொடுத்து பாதுகாக்கவும் செய்யலாம். ஒரு நூலகம் வைத்தால் கூட மக்கள் வருவார்கள்.

நினைவில்லம் அமைப்பது ஒருவரை பெருமைப்படுத்தத்தான்.

அதுவும் தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடியான மறைமலை அடிகள் நினைவில்லம் வரும் தலைமுறையினருக்கு ஒரு ஊக்க சக்தியாக விளங்க வேண்டும்.  பல மறைமலைகள் தோன்ற அது வழி வகுக்க வேண்டும். அதுதான் நினைவில்லத்தின் நோக்கம்.

இப்படி பாழடைய விடுவது அவரை அவமதிப்பது ஆகும்.

தமிழக அரசு உடனே தலையிட்டு ஆவன செய்ய வேண்டும்.