Home Blog Page 37

வேலை வாய்ப்புகளில் தமிழ்நாடு மட்டும்தான் வெளிமாநிலத்தவரின் வேட்டைக்காடா?

தமிழ்நாட்டில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் தொண்ணூறு லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்து விட்டு காத்துக் கிடக்கிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாகிக் கொடுக்க தமிழக அரசுக்கு மனமில்லை.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் உதவி மின் பொறியாளர் பணியிடங்களுக்காக நேரடித் தேர்வு அண்ணா பல்கலை கழகம் மூலமாக நடத்தப்பட்டது.

எழுத்துத் தேர்வு நேர்முக தேர்வு மூலம் உதவி மின் பொறியாளர்களாக 300 பேர் தேர்வாகி இருக்கிறார்கள். இவர்களில் 39 பேர் கர்நாடகம், ஆந்திரா, கேரளா, உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், டெல்லி, உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதைப்போல் ஒரு அக்கிரமம் இருக்க முடியுமா?

இதில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டதா என்பதும் தெரியவில்லை.

மத்திய பிரதேசம், கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் அந்தந்த மாநில மக்களுக்குத்தான் அரசுப் பணி என்று சட்டம் இயற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்களே அது தமிழக அரசுக்கு தெரியுமா தெரியாதா? 

ஏன் அதேபோல் தமிழ்நாட்டிலும் ஒரு சட்டம் இயற்றிக் கொள்ள முடியாதா?

வேலை வாய்ப்புகளில் தமிழ்நாடு மட்டும்தான் வெளிமாநிலத்தவரின் வேட்டைக் காடா?

தமிழர்களுக்கு வெளி மாநிலங்களில் வேலைவாய்ப்பு கொடுத்தால் மற்றவர்களுக்கு இங்கே வேலைவாய்ப்பு கொடுக்கலாம். தவறில்லை. ஆனால் அதிலும் ஒரு வரையறை இருக்க வேண்டும்.

அதேபோல் எல்லா மாநிலங்களும் ஒரு வரையறை ஏற்படுத்தில் கொண்டால் அதில் யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இருக்காது.

இது தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட பலர் கண்டனம் செய்திருக்கிறார்கள்.

ஆளும் கட்சி என்ன சொல்கிறது?

வேட்டியை கைவிடு பைஜாமாவுக்கு மாறு??!! தமிழ்க் கலாச்சாரத்தின் மீதான அடுத்த தாக்குதல்?!!

தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் அரசு அலுவலர்களுக்கு ஆன ஆடை கட்டுப்பாடு இப்போது தேவைதானா?

அதன் நோக்கம் உண்மையில் என்ன?

தமிழ்க் கலாச்சாரத்தை முடக்குவதுதான் நோக்கமா?

தமிழர்களின் வேட்டி துண்டு கலாசாரம் சிலரின் கண்களை உறுத்திக் கொண்டே இருக்கிறது. அதை ஒழிக்கும் வேலையில் மும்முரமாக இருக்கிறார்கள். தேவையே இல்லை. தமிழக இளைஞர்கள் தாங்களாகவே வேட்டியை விட்டு விலகி எங்கெங்கோ போய்க்கொண்டிருக்கிறார்கள். பாதி வயதை  தாண்டியவர்கள்தான் வேட்டியை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கும் வேட்டு வைக்க திட்டமிட்டு விட்டார்கள்.

தலைமை செயலக சங்க தலைவர் பீட்டர் அந்தோணி தனது செய்திக் குறிப்பில் நம் கவலையை பகிர்ந்து கொள்கிறார். முதலில் வந்த ஆணையில் வேட்டி இடம் பெற வில்லை என கவலைப்பட்டோம். திருத்தி அமைக்கப்பட்ட ஆணையில் வேட்டி அணியலாம் என்று தெரிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது என்று அவர் கூறுகிறார்.

ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் இந்த பிற்போக்குத் தனத்தை கண்டித்து உள்ளனர். இதுவரை அரசு அலுவலர்கள் முறையற்ற உடை அணிந்து வந்ததை போலவும் இவர்கள் வந்து அதை திருத்தம் செய்ய முற்படுவது போலவும் ஒரு கருத்து உருவாக்கம் செய்தது யார்?

முதலில் வந்த ஆணையில் வேட்டியை அணியக்கூடாது என்று திட்டமிட்டவர் யார்?    

அலுவலர்கள் மத்தியில் ஒரு ஒழுங்கை கொண்டுவருவதுதான் நோக்கம் என்றால் இதுவரை ஒழுங்கு குன்றி இருந்ததா?

அலுவலர்கள் அப்படி என்ன தகாத உடை அணிந்து வந்தார்கள்?

டி ஷர்ட் தான் அதிகபட்ச தகாத உடை என்றால் அதை மட்டும் தடை செய்து விட்டுப்போகட்டுமே? 

பெண்கள் சேலை, சுடிதார், சல்வார் கமீஸ் போன்ற உடைகள் அணியலாமாம்.  ஆண்கள் பேன்ட், சட்டை அணியலாமாம். இது பற்றி சந்தேகம் கேட்டதற்கு வேட்டி பற்றி அறிவிப்பு ஏதும் இல்லை என்றார்கள். பிறகு என்ன நினைத்தார்களோ என்னவோ அணியலாம் பட்டியலில் வேட்டியை சேர்த்துவிட்டார்கள்.

தமிழர்கள் என்றால் வேட்டி சட்டை துண்டு தான் பாரம்பரிய உடை. பேண்டுதான் புதிது. ஆனால் இப்போது வேட்டி அரிதாகி விட்டது. இந்நிலையில் வேட்டியை பயன்படுத்துவதை குறைக்கும் நோக்கில் இந்த புதிய திட்டம் வெளியிடப் பட்டிருக்கிறதோ என்ற ஐயம் எழுவதில் தவறில்லை.

தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தானாக முன்வந்து இந்த கட்டுப்பாட்டை அமுல்படுத்தினாரா முதல் அமைச்சருடன் கலந்து அறிவித்தாரா என்பதும் தெரியவில்லை.

அமைச்சர்கள் எல்லாம் வேட்டி கட்டிகொண்டிருக்கும்போது அலுவலர்களுக்கு தடை விதிப்பது என்பது நடவாது.

என்றாலும் இன்று அதிமுக இருக்கும் நிலையில் யார் யாரெல்லாம் எப்படி எல்லாம் மிரட்டுவார்களோ என்று சந்தேகப்படுவது சரிதானே?

ஆனால் இந்திய பாரம்பரிய உடைகளையும் ( பைஜாமா, ஜிப்பா போன்றவை ) அணிய அனுமதிக்கப்படுகிறது என்று தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அந்த விதியில் மேலும் ஒரு திருத்தம் செய்து உத்தரவை வெளியிட்டார். கூடவே ஆண் ஊழியர்கள் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும்  வேட்டியை அணியலாம் என்று கூறுகிறார். அதாவது முதலில் வேட்டியை விட்டு விட்டு அதனால் பிரச்னை ஏற்படும் என்பதை உணர்ந்து அடுத்த உத்தரவில் வேட்டியை  சேர்த்து வெளியிடுகிறார் என்றால் இதெல்லாம் தமிழக அமைச்சர்களுக்கு தெரிந்துதான் நடக்கிறதா அல்லது ஆளுநர் மாளிகையில் இருந்து ஏதாவது உத்தரவுகள் வந்ததா என்பது தெரியவில்லை.

நல்லவேளை குர்தா பைஜாமா ஜிப்பாவை கட்டாயமாக்காமல் விட்டு விட்டார்கள்??!!

நன்றி !   நன்றி  !  நன்றி !

சங்கீத வாத்யாலயாவை சென்னையில் இருந்து டெல்லிக்கு மாற்ற திட்டமா??!!

மோடி அரசு எல்லா மாநிலங்களில் இருந்தும் எல்லவற்றையும் டெல்லிக்கு கொண்டு செல்லும் திட்டங்களை முன்னெடுத்துள்ளது என்ற ஐயம் வலுப்பெற்றுள்ளது .

இந்நிலையில் சென்னையில் இயங்கி வரும் சங்கேத வாத்யாலாவை டெல்லிக்கு மாற்ற இருப்பதாக தகவல் கிடைத்து தென்னிந்திய கைவினை பொருட்கள் தொழில்  சங்கத்தின் தலைவர் பி சுப்பிரமணியன் மத்திய கைவினை பொருட்கள் வளர்ச்சி ஆணையருக்கு அனுப்பி உள்ள மனுவில் தங்களது ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலா வழிகாட்டி கையேட்டில் சென்னையில் பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா தலமாக இந்த கண்காட்சி கூடம்  இடம் பெற்றுள்ளது.

தமிழக அரசு இது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அகில இந்திய அளவில் எல்லா மாநிலங்களிலும் உள்ள முக்கிய அலுவலங்களை டெல்லிக்கு மாற்றுவதை ஒரு கொள்கையாக கொண்டிருக்கிறதா பாஜக அரசு?

தமிழக அரசு விளக்கம் தர வேண்டும்.

குறைந்தபட்சம் பிரச்னை எழுப்பினால்தான் இந்த தவறான முயற்சிகளை கைவிடுவர்.

8 வழிச்சாலை; உறுதிமொழியை மீறி உச்ச நீதிமன்றம் சென்ற எடப்பாடி??!!

சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை கொடுத்த பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு போக மாட்டோம் என்று பேட்டி கொடுத்தார்.

தேர்தல் நேரத்தில் நிதின் கட்கரி சேலத்தில் பரப்புரை கூட்டத்தில் பேசும்போது விவசாயிகளிடம் ஒப்புதல் பெற்று சேலம் சென்னை எட்டு வழி சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்று பேசினார். மேடையில் இருந்த பாமக நிறுவனர் மருத்துவர்  ராமதாசோ முதல்வர் எடப்பாடியோ அதை எதிர்த்து குரல் எதுவும் எழுப்பாமல் மெளனமாக இருந்தனர்.

தமிழ்நாட்டில் தேர்தல் தோல்விக்குப் பிறகு இவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று கட்கரி தீர்மானித்துவிட்டார் போல தெரிகிறது.

திடீர் என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்து அது  வருகிற மூன்றாம் தேதி விசாரணைக்கு வருகிறது.

அன்புமணியும் தனது பங்கிற்கு ஒரு கேவியட்டை போட்டு வைத்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றம் என்ன செய்யும் என்பது வேறு. ஆனால் அதற்குள் விவசாயிகள் திரண்டு போராட தயாராகி விட்டனர்.

இந்த போராட்டம் உருவாக எடப்பாடியே காரணம்.

ஏற்கெனெவே மூன்று சாலைகள் சேலம் -சென்னை இடையே இருக்கும்போது எதற்கு நான்காவதாக ஒரு சாலை என்ற கேள்விக்கு இதுவரை ஏற்றுக் கொள்ளத்தக்க எந்த விளக்கத்தையும் எடப்பாடி அரசு சொல்ல வில்லை. இதை முன்னெடுக்கும் மத்திய  அரசும் சொல்ல வில்லை. பெரு நிறுவனங்கள் நன்மைக்காக என்று ஒப்புக்கொள்ள தயங்குகிறார்கள்.

2020 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும் என்பது எத்தனை குடும்பங்களை  அழிக்கும் என்பது எடப்பாடிக்கு தெரியாதா?

சட்ட வரைமுறை பின்பற்றபட வில்லை என்றால் இப்போது பின்பற்றுகிறோம் என்பார்கள்.

ஒரே கூட்டணியில் இருந்துகொண்டு மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக போராடுவதாக பாமக சொல்வது ஏற்றுக் கொள்கிற வகையில் இல்லை.

இரண்டு மாதத்தில் ராஜ்ய சபா உறுப்பினராக அதிமுகவினால் தேர்வு செய்யப்பட வேண்டும் ஒப்பந்தப்படி. அதற்கு பாஜக சம்மதிக்க வேண்டும். எங்களுக்கு குடைச்சல் கொடுக்கும் கட்சிக்கு எதற்கு இடம் என்று பாஜக ஆட்சேபித்தால் அதை அதிமுக நிராகரிக்க முடியுமா?

கூட்டணியை விட்டு வெளியே வரும் தைரியம் பாமகவுக்கு வருமா?

மக்களை போராட்டத்திற்கு தூண்டும் எடப்பாடி தனது போக்கை மாற்றிக் கொண்டு இந்த வேண்டாத திட்டத்திற்கு மூடு விழா காண்பதே நல்லது. உட்கட்சி சண்டையால்  அதிமுகவில் ஒருவருக்கு கிடைக்க இருந்த மத்திய அமைச்சர் பதவியை இழந்த எடப்பாடி மீண்டும் அதை பெற முயற்சி செய்வாரா என்பதே சந்தேகம்.

மத்திய அரசு மேலும் இதில் பிடிவாதம் காட்டுமே ஆனால் மக்களின் எதிர்ப்பை பல வகைகளில் சந்திக்க நேரிடும்.

                  எல்லாம் சரி. கட்கரி என்ன சொன்னார். விவசாயிகளின் ஒப்புதலை பெற்றுத்தானே நிறைவேற்றுவோம் என்றார். விவசாயிகளின் ஒப்புதலை பெற  ஒரு கூட்டம் நடத்தி அதை பெரும் முன் இந்த மேன்முறையீடு? 

நாங்கள் தமிழர்கள் என்று நிர்மலாவும் ஜெய்சங்கரும் சொல்வார்களா?!

திருச்சியில் பிறந்து ஆந்திராவில் திருமணம் செய்து டெல்லியில் வாழ்ந்து இப்போது மோடி அமைச்சரவையில் நிதி அமைச்சராக ஆகி இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

தன் திறமையை பல வழிகளிலும் உலகுக்கு காட்டியவர் அவர். நிதித்துறையின் ராஜாங்க அமைச்சராகவும் ராணுவ அமைச்சராகவும் பணியாற்றி அனுபவம் பெற்றவர். ஜூலை மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது தனது திறமையை மேலும் கூட்டுவார் என்று எதிர்பார்த்து பணி சிறக்க மனதார வாழ்த்துவோம்.

கர்நாடக மாநிலத்தில் பாராளுமன்ற மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். அதனால் காவிரி பிரச்னையில் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக செயல்பட முடியாமல் போனவர். நம்மூர் ஒபிஎஸ்-ஐ வரவழைத்து ஒரு மாநிலத்தின் துணை முதல்வர் என்று கூட பார்க்காமல், பார்க்க முடியாது என்று முகத்தில் அறைந்தது போல் திருப்பி அனுப்பியவர். தனது புகழ் இங்கே வேறு மாதிரி இருந்ததால் கடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்யக்கூட வராதவர். 

ஆனால் அவரை மந்திரி சபையில் இரண்டு தமிழர்கள் என்று பத்திரிகைகள் எழுதும்போதுதான் சற்று வருத்தமாக இருக்கிறது. தான் தமிழர் என்று எப்போதாவது நிர்மலா சொல்லி இருக்கிறாரா? நீங்கள் யார் என்றால் நான் இந்தியர் என்பார். மாநில அடையாளத்தை பெரிதாக வெளிப்படுத்திக்கொள்ள விரும்பியதில்லை. மாநில அடையாளம் வேண்டாம் எல்லாரும் இந்தியர்கள் என்ற அடையாளம் போதாதா என்று கூட கேட்கலாம்.

அதைப்போல் தான் ஜெய்சங்கர் சுப்பிரமணியன் அவர்களும். அவர் திருச்சியில் பிறந்து டெல்லிக்கு குடியேறி அங்கேயே படித்து டெல்லிவாசியாகவே வாழ்ந்து அவரது தகப்பனார் போலவே வாழ்வில் பல சாதனைகளை நிகழ்த்திக் கொண்டு இருப்பவர்.    வெளி உறவுத் துறை செயலாளராக பணியாற்றி 2018ல் ஓய்வு பெற்றவர். அரசியல் தொடர்பில்லை என்பதால் மக்களுடன் தொடர்பு இல்லாதவர். அலுவல் ரீதியாக இல்லாமல் மற்ற மக்களுடன் தொடர்பில் இருந்தவர் இல்லை ஜெய்சங்கர். ஆனால் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் தன் கடமையை திறம்பட செய்தவர் என்று பிரதமர் மோடி வைத்த நம்பிக்கை இப்போது அவருக்கு வெளி உறவுத்துறை அமைச்சராகவே ஆக்கி இருக்கிறது. இதுவரை செயலாளர்கள் எவரும் இப்படி அமைச்சர்கள் ஆக்கப் பட்டதில்லை. இனிமேல்தான் அவரை பாஜக பாராளுமன்ற  மேல்சபைக்கு அனுப்பும்.

அவரிடமும் கேளுங்கள் நீங்கள் தமிழரா என்று? தமிழர் என்று சொன்னால் மகிழ்ச்சி.  சொல்வாரா என்று தெரியாது. அவர் மீது குற்றம் இல்லை. அவர் இங்கே வாழ்ந்தவர் இல்லை. இருக்கும் இடத்தில தன் பணிகளை செய்தவர். அதற்காக தமிழ் உணர்வு இல்லாமல் போய்விடுமா என்ற கேள்விக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும். அவரும் ஏன் மாநில அடையாளம் போதுமே இந்தியர் என்ற அடையாளம் என்று கூட சொல்லலாம்.

இருவரும் பார்ப்பனர்கள் என்பதால் மட்டும் இந்த கேள்வி எழவில்லை. அவர்களை யாரும் எந்த கேள்வியையும் கேட்கவும் இல்லை. அவர்களது தகுதி திறமை பற்றியும் யாரும் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. ஆனால் இங்கே உள்ள சில பத்திரிகைகள் அவர்களை தமிழர்கள் என்று எழுதும்போதுதான் அதை அவர்களே சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.

நம்மூர் அக்கிரகாரத்தில் இருந்து பலரும் மும்பை, டெல்லி, கல்கத்தா என்று பறந்துபோய் வாழ்வதுபோல் அவர்கள் சென்றவர்கள். எங்கே பணி கிடைக்கிறதோ அதுவே அவர்களுக்கு சொந்த ஊர். அதுதான் அவர்களுக்கு ஜன்ம பூமி.

ஜெயசங்கர் காலத்தில் அவர் நினைத்தால் இப்போது இலங்கை தமிழர் பிரச்னையை தீர்க்க முடியும். முயற்சிகளை எடுப்பாரா? இனப்படுகொலைகளுக்கு தண்டனை வாங்கி தர வேண்டாம். பழைய பிரச்னைகளை கிளற வேண்டாம். இப்போது மிச்சமிருக்கும்  தமிழர்களுக்கு உலகமெங்கும் எல்லாருக்கும் கிடைக்கும் மனித உரிமைகளை பெற்றுக்கொடுத்தால் போதும். இலங்கை சிங்கள பேரின வாத அரசிடம் தமிழர்களுக்கு அரசியல்  தீர்வு பெற்றுத் தருவது புதிய அரசியல் சட்டம் இயற்றுவது பற்றி பேசத் தயாரா?

இப்போதுதான் பணிக்கு வந்திருக்கிறார்கள். காரியமாற்ற அவர்களுக்கு நியாயமான அவகாசம் தரத்தான் வேண்டும்.

நீங்கள் தமிழராக இருங்கள் அல்லது இந்தியராக மட்டும் இருங்கள் அது உங்கள் விருப்பம்.

                  நம் எல்லாருடைய விருப்பமும் நீங்கள் நியாயமாக பணி செய்து நீதி செய்ய வேண்டும் சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்பதுதான்.

மோடி அமைச்சரவையில் 8 மாநிலங்களுக்கு இடம் இல்லை?!

மோடி அமைச்சரவையில் எட்டு மாநிலங்களுக்கு இடம் தரப்படவில்லை.

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. கர்நாடகம் பாஜகவுக்கு அதிக இடங்களை தந்து திராவிடம் பாஜகவை நிராகரித்தது என்று சொல்லவிடாமல் செய்துவிட்டது.

கேரளாவில் பாஜக வெல்லவில்லை என்றாலும் அதன் மாநில தலைவர் முரளிதரன் மகாராஷ்டிரா மாநில மாநிலங்களவை உறுப்பினர் ஆக இருக்கிறார் என்பதால் அவருக்கு மோடி தன் அமைச்சரவையில் இடம் தந்துவிட்டார்.

எனவே அவர் கேரளாவின் பிரதிநிதி என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தமிழகத்திற்கு இபிஎஸ் – ஒபிஎஸ் சண்டையால் இடம் கிடைக்காமல் போய்விட்டது.

நிர்மலா சீதாராமனையும் ஜெய்சங்கரையும் தமிழர்கள் என்று சில பத்திரிகைகள் எழுதுகின்றன. அவர்களே தங்களை தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டதில்லை.    அவரகளை எப்படி தமிழ்நாட்டு பிரதிநிதிகளாக எடுத்துக்கொள்வது.?

ஆந்திராவில் ஒரு இடம் கூட கிடைக்காவிட்டாலும் யாருக்கும் மோடி  இடம் தராதது ஜகன் மோகன் ரெட்டி என்ற கிறிஸ்தவர் முதல்வர் ஆனது காரணமா என்பது தெரியவில்லை.

மணிப்பூர், சிக்கிம் மிசோரம், நாகாலாந்து, மேகாலய, திரிபுரா மாநிலங்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

குறைகளை அமைச்சரவை விரிவாக்கம் போது மோடி சரி செய்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

மோடி அமைச்சரவையில் பார்ப்பன மேல்சாதிகளின் ஆதிக்கம் ??!!

பாஜக என்பது மேல்சாதி மற்றும் பார்ப்பனர்களின் கட்சி என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.

மற்ற எல்லாருக்கும் பிரதிநிதித்துவம் தரும் வகையில் இடம் கொடுக்கப்பட்டு பார்ப்பனர்களுக்கு மட்டும் அதிக அளவில் இடம் தந்திருக்கிறார்கள். அதுவும் கேபினட் அந்தஸ்தில். கேட்டால் நாங்கள் சாதி பார்ப்பதில்லை. தகுதி பார்த்துதான் இடம் கொடுப்போம் என்பார்கள்.

மற்றவர்களுக்கு தகுதி இல்லை என்று சொல்லாமல் சொல்வார்கள்.

58 பேர் கொண்ட அமைச்சரவையில் 32 பேர் பார்ப்பன மற்றும் மேல்சாதிகளை சேர்ந்தவர்கள். 13 பேர் இதர பிற்பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள். 

9 பார்ப்பனர்கள் – நிதின் கட்கரி, மகேந்திரா நாத் பாண்டே, பிரகலாத் ஜோஷி, பியுஷ் கோயல், பிரகாஷ் ஜவடேகர், ஹர்ஷ் வர்தன், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், ரமேஷ் போக்ரியால்,பிரதாப் சந்திர சாரங்கி ( ஓடிசாவை சேர்ந்த இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தாயுடன் குடிசை வீட்டில் வாழ்ந்து கொண்டு மலை வாழ் மக்களின் மேம்பாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்- ஸ்வயம் சேவகர் )

3 தாக்குர் இனத்தோர் – ராஜ்நாத் சிங், கஜேந்திர சிங் தாக்கூர், நரேந்திர சிங் தோமர்

13 இதர பிற்பட்டோர்

6 பட்டியல் வகுப்பை சேர்ந்தோர்

4 பட்டியல் இனத்தை சேர்ந்தோர்

2 சீக்கியர்கள் – ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் பூரி

1 முஸ்லிம் – முக்தர் அப்பாஸ் நக்வி

அதுவும் முக்கிய இலாகாக்களை பார்ப்பனர்களே எடுத்துக் கொள்வார்கள்.

இவர்கள் எல்லா சமுதாய மக்களின் எதிர்பார்ப்புக் களையும் பூர்த்தி செய்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

இந்த ஆதிக்கம் குறைய  வாய்ப்பே இல்லை. இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும். எல்லாவற்றையும் தாங்களே ஆக்கிரமித்துக் கொள்கிறோமே என்று கொஞ்சம்கூட வெட்கப்பட மாட்டார்கள். அதற்கு ஏதாவது சாக்கு சொல்லி சமாளிப்பார்கள.

சுட்டிக் காட்டுகிறவர்களை சாதிய வாதிகள் என்று முத்திரை குத்துவார்கள். சாதி பார்த்து அதிகாரத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறவர்கள் மற்றவர்களை சாதியவாதிகள் என்று குற்றம் சுமத்துவது என்ன ஒரு  கொடுமை?

ஒபிஎஸ் மகன் அமைச்சராவதை தடுத்த இபிஎஸ் ??!!

மோதல் தொடங்கிவிட்டது. இது எதில் கொண்டு போய்விடும் என்பதை குறுகிய காலத்திலேயே காணலாம்.

மோடி அமைச்சரவை பதவி ஏற்கும் அன்று மதியம் அமைச்சராகும் வாய்ப்புள்ளவர்களுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு சென்றது. அந்த அழைப்பு ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கும் சென்றது என்பதை ஆங்கில ஊடகங்கள் செய்தியாக வெளியிட ஆரம்பித்தன.

ஒரத்தநாடு வைத்திலிங்கத்திற்கு அழைப்பு செல்லவில்லை என்றதும் பரபரப்பு ஏற்பட்டது. தனக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்றால் கட்சி துண்டு துண்டாக சிதறிவிடும் என்று வைத்திலிங்கம் எச்சரித்ததாக செய்திகள் வெளியாயின.

சீனியர்கள் பலர் ராஜ்ய சபாவில் உறுப்பினர்களாக இருக்கையில் நேற்று எம்பி ஆன ரவீந்திர நாத்துக்கு அமைச்சர் பதவி கொடுப்பதை கட்சியில் எதிர்க்க ஆரம்பித்தனர்.

இபிஎஸ் தன் சகாக்கள் உடன் டெல்லி பயணமானார். எவர் முகத்திலும் சிரிப்பில்லை.

மோடிக்கு பின்னர் அமைச்சர்கள் பதவி ஏற்பு நடந்து கொண்டிருந்தபோது ரவீந்திரநாத் அழைக்கப்படும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. காரணம் முதல்வர் இபிஎஸ் கொடுத்தால் இருவருக்கும் கொடுங்கள் இல்லாவிட்டால் ஒருவருக்கும் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தார் என்பதுதான். பாஜகவும் உறுதியாக ஒருவருக்குத்தான் அமைச்சர் பொறுப்பு அவர் யார் என்பதை நீங்களே முடிவெடுங்கள் என்றபோது இபிஎஸ் உறுதியாக ஒருவருக்கு மட்டும் என்றால் வேண்டாம் என்று சொன்னாராம்.  முடிந்தது ஒபிஎஸ்சின் கனவு. நூறு கோடி செலவு செய்து வெற்றி பெற்று மோடியிடம் அமைச்சர் பொறுப்புக்கு வாரனாசி சென்று வேண்டுகோள் வைத்தது எல்லாம்  வீணாயிற்று.

எல்லா சீனியர் அமைச்சர்களும் ஒபிஎஸ் மகனுக்கு எதிராக இருந்ததுதான் வேடிக்கை.

எல்லாரும் சென்னை திரும்பி விட இவர் மட்டும் டெல்லியில் தங்கி தன் வேலைகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார். இனி அடுத்த விரிவாக்கம் எப்போது நடந்தாலும் ரவீந்திரநாத் சேர்க்கப்படும் வாய்ப்பு அதிகம் என்றாலும் அதன் தாக்கம் கட்சியில் நிச்சயம் வெடிக்கும் என்பதும் உறுதியானது.

எப்படியோ இவர்கள் சண்டையில் ஒரு அமைச்சரையாவது பெரும் வாய்ப்பை தமிழ்நாடு இழந்துவிட்டிருக்கிறது.

9.19 டிஎம்சி தண்ணீரை திறந்து காவிரி ஆணைய உத்தரவை அமுல்படுத்துமா கர்நாடகா?!

காலதாமதம் ஆனாலும் ஒரு வழியாக காவிரி ஆணைய கூட்டம் நடந்தது டெல்லியில்.

தீர்ப்பின் படி பெங்களூரில் ஒழுங்காற்றுக் குழுத் கூட்டம் நடந்து அங்கு மாநிலத்தில் உள்ள அணைகளின் தண்ணீர் இருப்பு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அந்த புள்ளி விபரங்களுடன் தான் காவிரி ஆணைய கூட்டம் நடத்தப் பட்டிக்க வேண்டும்.

ஏனென்றால் ஒவ்வொரு முறையும் தண்ணீர் விட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போதெல்லம் தண்ணீர் இருப்பு இல்லை என்று கூறி  தண்ணீர் விட மறுத்தது கர்நாடகம்.

நீதிமன்ற நடவடிக்கைகளை கேலிக்கூத்தாக்கும் வேலையை கர்நாடகம் செய்து வந்தது. இப்போதும் அதே வேலையை செய்யக் கூடாதல்லவா?

மேகதாது அணை தொடர்பாக தனது ஆட்சேபணையை தமிழகம் தெரிவித்த பிறகும் எதற்காக கூட்ட நிரலில் அது இடம் பெற்றது?

ஆய்வு செய்து திட்ட அறிக்கை அளிக்க அனுமதி அளித்த சுற்று சூழல் அமைச்சரகம் தனது எல்லையை மீறி செயல்பட்டது.

இந்த கூட்டத்தில் அது விவாதிக்க படவில்லை என்றாலும் எதிர்காலத்தில் அது மீண்டும் எடுக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

தண்ணீர் திறக்க உத்தரவிட்ட ஆணைய தலைவர் மசூத் உசைன் இந்த முடிவு கர்நாடக அரசின் ஒப்புதலோடு வெளியிடப்படுவதாக கூறினார்.

ஆனால் கர்நாடக சிறிய நீர்ப்பாசன அமைச்சர் புட்டராஜு கர்நாடக அணைகளுக்கு நீர் வந்தால் தமிழகத்திற்கு நீர் திறப்போம் என்று பேட்டி கொடுக்கிறார். அதுவும் ஆணையம் நீர் திறக்க உத்தரவிட்டு இருப்பது சரியல்ல என்றும் கூறுகிறார்.

நீர்ப்பாசன அமைச்சர் டிகே சிவகுமார் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த பிரச்னையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்கிறார்.

ஆணையத்தின் உத்தரவை மதிக்கும் வகையில் கர்நாடக அமைச்சர்களின் பேச்சுகள் இல்லை.

ஏற்கெனெவே சேலத்தில் குடிநீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. மேட்டூர் அணையை பெரிதும் நம்பியிருக்கும் சேலம் மக்கள் கர்நாடக அரசின் போக்கால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

அணை இருப்பு விபரம் தெளிவாகவும் ஒளிவு மறைவு இல்லாமலும் இருந்தால் பிரச்னை பெரிது ஆகாது. அணைகளுக்கு வர வேண்டிய தண்ணீரை கர்நாடகம் ஏரி குளங்களிலும் தடுப்பணை கட்டியும் சேமித்து வைத்து விட்டு அணைகளில் தண்ணீர் இல்லை  என்று நாடகம் ஆட அனுமதிக்க முடியாது.

                      தீர்ப்பின் படி தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீர் கடந்த மாதங்களில் வரவில்லை என்பதை ஏன் தமிழக அரசு ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தவில்லை? 

தீர்ப்பு வந்தால் மட்டும் போதாது. அது உண்மையாகவே அமுல்படுத்தப்படவும் வேண்டும்.

தமிழ்நாடு கேரளத்தில் முடங்கிப் போன கம்யுனிஸ்டுகள் ?!

அகில இந்திய கட்சி என்ற அந்தஸ்தை கம்யுனிஸ்டு கட்சிகள் இழக்கின்றன.

மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா மாநிலங்களில் ஆட்சியில் இருந்தவரை அகில இந்திய கட்சி என்று கருதப்பட்டார்கள்.

ஆட்சியில் இல்லாமல் கூட ஒரு கட்சி உயிர்த் துடிப்புடன் இயங்க முடியும். அத்தகைய கொள்கை பலம் உள்ளவர்கள் கம்யுனிஸ்டுகள். அவர்கள் வலது இடது என்று பிரிந்து கிடப்பதே ஒரு பெரிய முரண்.

ரஷ்ய ஆதரவாளர்களாகவும் சீன ஆதரவாளர்களாகவும் காட்டிக் கொண்டவர்கள் அந்த இரண்டு நாடுகளுமே தனியார் சொத்துரிமையை அங்கீகரித்து பொது உடைமை கொள்கையை நீர்த்துப் போக செய்து விட்டபின் இவர்கள் இன்னமும் பிரிந்து கிடப்பது எதற்காக?

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியை தவிர வேறு கட்சி செயல் பட முடியாத நிலை உள்ளது. அது ஒன்றே கம்யுனிஸ்டுகளுக்கு ஆறுதல்.

இந்தியாவில் மார்க்சிஸ்டு கட்சிக்கு கேரளாவில் ஒருவரும் தமிழ்நாட்டில் இரண்டு  பேரும் இந்திய கம்யுனிஸ்டு கட்சிக்கு தமிழ்நாட்டில் இரண்டு பேரும் ஆக மொத்தம் ஐந்து உறுப்பினர்கள் தான் கம்யுனிஸ்டுகளின் பிரதிநிதிகள்.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதனால் நான்கு பேர் கிடைத்தார்கள்.

மேற்கு வங்காளத்திலும் திரிபுரவிலும் இரு இடத்தை கூட இவர்களால் பெற்ற முடியவில்லை.

அரசியலில் சாதி மத ஆதிக்கத்தை கட்டுக்குள் வைக்க கம்யுனிஸ்டுகள் அவசியம் தேவை.

கம்யுனிஸ்டுகள் செல்வாக்கு இழப்பது என்பது அவர்களுக்கான இழப்பல்ல. நாட்டுக்குத்தான் இழப்பு.