Home Blog Page 38

இனி ரெயில்வே பணிகளுக்கு வட மாநிலங்களில் இருந்து விண்ணப்பிக்க முடியாது??!!

ரெயில்வே பணிகளுக்கு ஆட்கள் எடுக்கும் போது வடமாநிலத்தவர் தென்னக மாநிலங்களை ஆக்கிரமித்து விடுகிறார்கள் என்பது சில ஆண்டுகளாக இருக்கும் கொதிப்படைய வைக்கும் புகார்.

பொதுமேடை முன்பே இதுபற்றி எழுதியிருக்கிறது.

தமிழ் தெரியாததால் ரெயில்வே ஸ்டேஷனில் பச்சைக் கொடி காட்ட வேண்டிய கார்டு தவறாக காட்டியதால் இரண்டு ரயில்கள் மோதிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவானது நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்டது. அதனால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காக்கப்பட்டன. எனவே தமிழகத்தில் பணி செய்ய தமிழ் மொழி அறிவு தேவை என அறியப்பட்டது. ஆனால் ரெயில்வேயில் உள்ளவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்றால் முழுதாக இந்திக்காரர்கள் இருந்தால் மொழிப் பிரச்னை வராதல்லவா என்று தமிழர்களை ஒழித்துக்கட்டும் வேலையில் தீவிரம் காட்டினார்கள்.

மோசடி இல்லையென்றால் ஹரியானாவில் உள்ளவன் தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி வாய்ப்பை பெற்றிருப்பானா? தேர்ச்சி என்பது கண் துடைப்பு என்று தெரிகிறது அல்லவா? 

கண்டனம் எழுந்த பிறகு இப்போது பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் 510 அப்ரண்டிஸ் பணிக்கான பணியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தமிழ் நாட்டில் அனைத்து வேலை வாய்ப்பு பதிவு அலுவலங்களில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வரவேற்கத் தக்கது என்றாலும் இதிலும் ஏதாகிலும் சூழ்ச்சி இருக்கிறதா என்பதையும் ஆராய வேண்டும்.

                        தமிழகத்தில் வட மாநிலத்தவர் முன்கூட்டியே பதிவு செய்து வைத்திருப்பதற்கு வாய்ப்பு குறைவு என்பதை மறுக்க முடியாது. 

ஏன் அதற்கு நேரிடையாக தமிழகத்தில் குடி இருப்போர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று நிபந்தனை வைத்தால் என்ன?

தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை செல்லாதது ஆக்க தமிழ் தெரியும் என்று சான்றிதழ் போலியாக பெறுபவர்கள் என்ன செய்ய மாட்டார்கள்?

ரெயில்வே துறை மட்டுமல்ல தமிழகத்தில் செயல்படும் எந்த மத்திய அரசு அலுவலகமாக இருந்தாலும் உள்ளூர் மக்களுக்கு வேலையில் முன்னுரிமை என்பதே சட்டமாக இருக்க வேண்டும். அதற்கு உருவகம் கொடுக்க முனைவதே நல்லது.

கண்டனங்களை தவிர்க்கும் முயற்சியாக இல்லாமல் உண்மையாகவே அமுல்படுத்தினால் வரவேற்க வேண்டிய அறிவிப்பு இது.

யூதர்கள் குல்லா அணியக் கூடாது என அறிவுறுத்திய ஆணையர்??!!

மதம் எப்படி எல்லாம் மனிதர்களை பிரித்து வைக்கிறது என்பதற்கு ஜெர்மனியில் நடக்கும் சம்பவங்கள் சமீபகால உதாரணம்.

ஹிட்லர் அறுபது லட்சம் யூதர்களை கொன்று ஒழித்தான் என்று படித்திருக்கிறோம். ஆனால் இன்றும் அதேநிலை நீடிக்கிறது என்பது வரலாற்றில் இருந்து ஜெர்மானியர்கள் எதையுமே படிக்கவில்லை என்பதைத்தானே காட்டுகிறது.

சமீப காலமாக யூதர்கள் தாக்கப்படுவது இருபது சதம் அதிகரித்திருக்கிறதாம். அதை தடுப்பதற்கு என்று ஒரு ஆணையர் வேறு நியமிக்கப்படுகிறார்.

அவரே யூதர்கள் ஸ்கல் காப் எனப்படும் குல்லா அணிவதை யூதர்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

ஐரோப்பியாவில் இந்த அளவு சகிப்பு தன்மை இல்லை என்பது ஹிட்லர் காலத்திலேயே நிருபிக்கப்பட்டதுதான். காலம் அவர்களை மாற்றவில்லையே .

மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே இறுதி முடிவாக இருக்க வேண்டும்.

கடவுள் நம்பிக்கைக்கும் மதத்துக்கும் உள்ள வேறுபாட்டை மக்கள் உணரவேண்டும் அல்லது உணர வைக்கப்பட வேண்டும்.

இல்லாவிடில் இப்படித்தான் மதம் மனிதர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும்.

இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும் என தீர்ப்பு எழுதிய உயர் நீதிமன்ற நீதிபதி??!

ராணுவப் பணியில் சேர தேர்வான ஒருவருக்கு  குடியுரிமை சான்று தர மறுத்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் ஆர் சென் என்பவர் இந்தியாவை பாகப்பிரிவினைக்குப் பிறகு இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும் என்று  10.12.2018ல் ஒரு தீர்ப்பை எழுதியிருக்கிறார்.

மேலும் தனது தீர்ப்பில் அவர் கூறியிருந்தது “இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது லட்சக் கணக்கானவர்கள் சீக்கியர்களும் இந்துக்களும் கொல்லப்பட்டு  சித்திரவதை செய்யப்பட்டு கற்பழிக்கப்பட்டு மூதாதையர் விட்டு சென்ற சொத்துக்களை எல்லாம் விட்டு விட்டு உயிர் பிழைப்பதற்காக ஓடி வர நேரிட்டது. பாகிஸ்தான் தன்னை முஸ்லிம் நாடு என்று அறிவித்துக் கொண்டது. அப்போதே இந்தியா தன்னை இந்து நாடாக அறிவித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்”

மேலும் ‘இனி எதிர்காலத்திலும் பங்களா தேஷ் போன்ற நாடுகளில் இருந்து ஓடி வரும் எல்லாருக்கும் இந்திய குடியுரிமை தர எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருக்க வேண்டும்” என்றும் தீர்ப்பு எழுதியிருக்கிறார்.

அரசியல் சட்டம் தெரிந்தவர் ஒருவர் இப்படி ஒரு தீர்ப்பை எழுதியிருக்க முடியாது.  அதேநேரம் நீதிபதி சென் அரசியல் சட்டம் தெரியாதவர் என்று சொல்ல முடியாது.    ஆக இது செல்லாத தீர்ப்பு என்று தெரிந்தோ தெரியாமலோ அந்த தீர்ப்பை எழுதிவிட்டார்.

இப்போது மேன்முறைஈட்டில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ‘இந்த தீர்ப்பு  செல்லத்தக்கதல்ல. அரசியல் சட்டத்திற்கு முரணாக இந்த தீர்ப்பு இருப்பதால்  சட்டத்தின் முன் இது இல்லா நிலையது ஆகும். எனவே ரத்து செய்கிறோம்’ என்று தீர்ப்பு தந்திருக்கிறார்கள்.

சட்டம் படித்த நீதிபதிகள் அரசியலை மனதில் கொண்டு அல்லது தங்களுக்கு இருக்கும் அரசியல் விருப்பங்களை முன்னிறுத்தி இது போன்ற தீர்ப்புகளை எழுதினால் நாட்டில் நீதித்துறை மீது எப்படி நம்பிக்கை வரும்?

நீதித்துறையில் அரசியல் சார்புள்ளவர்கள் ஊடுருவி இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த தீர்ப்பே சாட்சி.

திருமங்கை ஆழ்வார் பாசுரம் பாடுவதை தடுப்பவர் பார்ப்பனர்கள்??!!

பார்ப்பனர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்கிற போலி சண்டை எதற்காக நடக்கிறது என்பது புரியாத புதிர்.

சும்மா மக்களை குழப்பி பிரச்னை இல்லாத ஒன்றை பிரச்னை ஆக்கி அதை எல்லாரும் பேசும்படி செய்வது மூலமாக அவர்கள் எதை சாதிக்க நினைக்கிறார்கள்.?

கோவில் சம்பந்தமாக நடக்கும் விழாக்கள் பலவற்றில் சுவாமி சம்பத்தப்பட்ட எதிலும் பார்ப்பனர்கள் அல்லாதோருக்கு எந்தவொரு பங்கும் இல்லை. அதிகபட்சம் பல்லக்கு தூக்குவது பூக்கட்டி கொடுப்பது என்று தொண்டு காரியங்கள் தொடர்பாகத்தான் பார்ப்பனரல்லாதரர் பங்கு இருக்கும். எட்ட நின்று சுவாமி கும்பிடுவது மட்டுமே அவர்களுக்கு அதிகப்படியான உரிமை.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வீதியுலாவில் திருக்கச்சி நம்பித்தெருவில் வேடுபறி என்ற நிகழ்வில் சுவாமி எழுந்தருளியபோது அங்கே தென்கலை மரபினர் திருமங்கை ஆழ்வார் பாசுரம் பாட முயன்றபோது அதை வடகலை பார்ப்பனர்கள் தடுக்க முயன்று அங்கே தகராறு ஏற்பட்டிருக்கிறது.   

                         வேடிக்கை என்னவென்றால் பாடுவதும் பார்ப்பனர்கள். அதை தடுப்பதும் பார்ப்பனர்கள். ஏன் இந்த போலி சண்டை??!!

வடகலை மரபினர்களுக்கு ஆதரவாக ‘சோடா பாட்டில்’ புகழ் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்தாராம்.

எதற்காக பாசுரம் பாடுவதை தடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இதுமாதிரி யான கோணங்கித் தனங்களை நடத்தி மற்றவர்கள் வேடிக்கை பார்க்க வைப்பதன் மூலம் எல்லாரையும் முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள் பார்ப்பனர்கள்.

மரபு என்று எதையாவது சொல்லி பொருளற்ற காரியங்களை நிகழ்த்திக்  கொண்டிருப்பது சம்பிரதாய உரிமையாகாது.

வைணவம் எதை போதிக்கிறதோ அதை பார்ப்பனர்கள் கடைப்பிடிப்பதே இல்லை.

அது சாஸ்திரம் இது லௌகீகம் என்று ஏற்றுக் கொள்ளவே முடியாத நொண்டி சாக்கு  எதையாவது சொல்வார்கள்.

பக்தர்கள் என்போர் சிந்திப்பார்களாக??!!

ஆர்எஸ்எஸ்-ன் அடுத்த குறி தமிழ்நாடு!! தப்புவார்களா தமிழர்கள்??!!

அடுத்த ஐந்து ஆண்டுகள் தமிழ்நாட்டுக்கு சோதனைக் காலம்தான்.

அகில இந்தியாவிலும் ஆர்எஸ்எஸ் இன் பிடியில் சிக்காத மாநிலமாக தமிழ்நாடு மட்டுமே எஞ்சி இருக்கிறது.

தென்னகத்திலும் கூட கேரளாவில் இடங்கள் கிடைக்கவில்லையே தவிர பத்து சதம் வாக்கு வங்கியை பெற்றுவிட்டது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தும் கணிசமாக வெற்றி பெற்றுவிட்டது.    காங்கிரஸ் ஆட்சியையும் கலைக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் பாஜக தலைவர்களை சென்று பார்த்து வந்து  கொண்டிருக்கிறார்கள். அநேகமாக ஆட்சி நிலைக்காது என்பதே இன்றைய செய்தி.    காங்கிரஸ் ஆட்சியை கலைக்க எடியூரப்பா எதையும் செய்வார்.

தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் மகள் கவிதா தோற்றுவிட்டார். அங்கே எட்டு இடங்களை பாஜக வென்று டிஆர்எஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்திருக்கிறது பாஜக.

ஆந்திராவில் ஜகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்றாலும் அவர் பாஜகவுடன் உறவாடி வருகிறார். அங்கேயும் பாஜக எதையும் சாதித்துக் கொள்ள முடியும்.

கிறிஸ்தவ மாநிலங்கள் ஆன வட கிழக்கில் பாஜக வலுவாக காலூன்றி விட்டது.    காங்கிரஸ் கட்சியை அப்படியே கபளீகரம் செய்து தனதாக்கி கொண்டு ஆட்சிக்கு வந்து விட்டது  பாஜக. கட்சி தாவல் களை பாஜக அளவுக்கு வேறு யாரும் வெளிப்படையாக ஊக்குவித்தது இல்லை. கொஞ்சமும் வெட்கப்படாமல் கட்சித்  தாவல்களை உருவாக்கி காங்கிரசை விரட்டி விட்டு அந்த இடத்தில அமர்ந்து  கொண்டது பாஜக. இதற்காக பாஜக திட்டமிட்டது இருபது ஆண்டுகளுக்கு முன்.

ஆர்எஸ்எஸ் பிரச்சாரர்கள் கடுமையாக உழைத்தார்கள். மேகாலயாவில் கிறிஸ்தவ ஆட்சியை அமைப்போம் என்று உறுதி கூறும் அளவுக்கு சென்றார்கள். எதிரிகளை வீழ்த்த எந்த ரூபத்தையும் எடுக்கும் பாஜக.

         குப்தர்கள், மௌரியர்கள், அசோகர், முகலாயர்கள் போன்ற எல்லா சாம்ராஜ்யங்களும் விந்திய மலைக்கு கீழே வந்ததில்லை. இப்போதும் கூட மோடியின் பாஜக சாம்ராஜ்யம் தமிழ்நாடு தவிர எல்லா இடங்களையும் கைப்பற்றிவிட்டது. 

விட்டு விடுவார்களா சனாதனிகள்? விடவே மாட்டார்கள்!!

சாம பேத தான தண்டம் என்று அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துவார்கள். 

எனவே தற்காத்துக் கொள்ள கடும் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும் தமிழினம்.

ஆட்சிக்கு வந்திருக்கும் மோடி புதிய இந்தியாவை படைக்க இருப்பதாக கூறுகிறார்.  

             மாநிலங்களின் தனித் தன்மைகளை பாதுகாப்போம் என்று ஆள வந்திருக்கும் பாஜக சமரசம் செய்து கொண்டால் ஒருவேளை போராட வேண்டிய அவசியம் இராது. நம்ப முடிய வில்லையே?

நம்பிக்கை இழக்க கூடாத அதே வேளையில் எச்சரிக்கை உணர்வும் தேவை என்பதை மறக்க கூடாது.

                  வரும் மாதங்களில் எந்த கட்சி உடையுமோ யார் யார் கட்சி மாறுவார்களோ என்பதை எல்லாம் வைத்துதான் பாஜக வின் / ஆர்எஸ்எஸ் சின் அரசியல் சித்து விளையாட்டு எந்த அளவுக்கு இருக்கப்போகிறது என்பதை கணிக்க முடியும். 

எதற்கும் தயாராக இருப்போம். எச்சரிக்கையுடன் இருப்போம்.

திமுகவை வசைபாடி யாரை வளர்க்க உதவுகிறார் சீமான்??!!

சீமான் திசை மாறி சென்று கொண்டிருக்கிறார்.

எல்லாரும் கெட்டவர்கள் நான் மட்டுமே நல்லவன் என்று நீங்களே சொல்லிக் கொண்டிருந்தால் போதுமா? நாடு நம்ப வேண்டுமே?

இளைஞர்கள் சீமான் பக்கம் திரண்டது எதற்காக?

உரிமைக்காக போராட. பிரச்னைகளில் மக்களின் கவனத்தை திருப்ப. மத வெறியர்களை அடையாளம் காட்ட. மொழி காக்கும் கடமையை நினைவூட்ட.  புதிதாக ஒரு தலைமை கிடைத்தால் நல்லது என்ற எதிர்பார்ப்பில்.

ஆனால் நடப்பது என்ன? ஒரே வசைபாடல். திமுகவை அதன் தலைவர்களை கண்டபடி திட்டுவதுதான் மாற்றத்தை கொண்டு வருவதற்கு ஒரே வழியா சீமான்?

அதிமுகவையும் திட்டுகிறீர்கள். ஆனால் திமுக அளவுக்கு அல்ல. விட்டு விட்டாரே என்ற குறை வராமல் திட்டுகிறீர்கள். இதனால் எல்லாம் மக்கள் நம்பிக்கையை பெற்று விட முடியுமா?

  வள்ளல்பெருமான் புது ஆன்மிக பாதையை காட்டினார்.    

                     சாதி மத அடையாளங்களை சாடிய பெருமகனார் அவர்களை அதற்கு மேல் குறிப்பிட்டு சாடவில்லை. வேண்டாதவை என்று அடையாளம் காட்டினரே தவிர குறிப்பிட்டு எந்த மதத்தையும் விமர்சிக்கவில்லை.    

                    விமர்சித்தால் அவர்கள் இவரை விமர்சிப்பார்கள். அதற்கு பதில் சொல்வதே வேலையாக போய்விடும். அதனால் தான் சொல்ல வந்ததை மட்டும் ஓங்கி வலியுறுத்தி போதித்தார்.

எந்த மதமும் வேண்டாம் என்பது கொள்கை. அதற்காக அவர்களை விமர்சிப்பது வேண்டாத வேலை.

அதைப்போல் பெரியார் அண்ணா வழியில் வந்த திராவிட இயக்கங்களை விமர்சிப்பது என்பது சனாதனவாதிகளுக்கு பாதை விரிக்கும் வேலை. திராவிட இயக்கங்கள் இல்லாமல் இந்த சிந்தனை சீர்திருத்தம் வந்திருக்க முடியுமா?

பெரியாரை விமர்சிக்க என்ன அவசியம்? அதுவும் இன ரீதியில். தமிழர் விழிப்புணர்வுக்கு பெரியார் தடையாக இருந்திருக்கிறாரா? சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன் நான் என்று அறிவித்துக் கொண்டு சமுதாய வேலைக்கு வந்தவர் பெரியார். அரசியல் அதிகாரம் பெற அலைந்தாரா பெரியார்?

அதுவும் சமீப காலமாக திமுக அதிமுக தலைவர்களை முட்டா பசங்களா என்று திட்டும் அளவுக்கு கீழே இறங்கிவிட்டார் சீமான். வேறு வழியின்றி திமுக ஆதரவாளர்களும் உங்களை விமர்சிக்க கட்டாயப்படுத்தி விட்டீர்கள். இப்போதும் கூட உங்களை திமுக தலைவர்கள் யாரும் விமர்சிக்கவில்லை.

தமிழர் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் எவரையும் திமுக அதிமுக உடனடியாக விமர்சிக்காது. அவர்கள் சொல்லாத எதை நீங்கள் இப்போது சொல்லி விட்டீர்கள்.?

15 லட்சம் வாக்குகளை பெற்று தினகரனுக்கு அடுத்த இடத்தை பெற்றிருக்கிறீர்கள்.    உங்களுக்கும் கீழே இருக்கும் கமலுக்கும் உங்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை.

பணம் கொடுக்காமல் இந்த வாக்குகள் என்பது மட்டுமே போதுமா?

              கண்ணியம் தவறும் எந்த தலைவரும் வென்றதில்லை. உங்கள் பேச்சில் கண்ணியம் இருக்கிறதா சீமான்? 

உணர்ச்சிகளை தூண்டிவிட்டால் மட்டும் வெற்றி வந்து தானாக சேர்ந்துவிடாது.      மக்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழரின் தொன்மைத் தெய்வங்களை தூக்கிப்பிடிக்கும் நீங்கள் அதன் வழிமுறைகளையும் பிரச்சாரம் செய்ய வேண்டாமா? எப்படி அவைகள் சனாதன தர்மத்தில் இருந்து வேறுபட்டது என்பதை பிரச்சாரம் செய்ய வேண்டாமா?

            தமிழ்நாட்டில்  மட்டும் மண்ணைக் கவ்வி நிற்கும் காவி சக்திகள் அடுத்து தமிழ் நாட்டை குறிவைக்கும் என்பது எல்லாருக்கும் தெரிந்த உண்மை. 

அவர்களுக்கு நீங்கள் பயன்பட்டு விடுவீர்களோ என்ற அச்சம் எழுவது இயற்கைதானே?

           காட்டிக் கொடுப்பவர்களையும் ஐந்தாம் படைகளையும் தேடி அலையும் கூட்டத்திடம் சிக்கி விடுவீர்களோ என்ற அச்சத்தில் உண்மை இருக்கிறதா இல்லையா?

பணத்திற்காக கிறிஸ்தவ மத பிரச்சாரம் செய்தாரா கமல்ஹாசன்??!!

சமீப காலமாக ஒரு செய்தி வாட்ஸ் அப்பில் உலா வந்தது.

அதில் கமல்ஹாசன் பேசுவது போல் ஓர் வீடியோ. அவர் பேசுகிறார் “ஆம். நான் பணத்திற்காக கிறிஸ்தவ மத பிரச்சாரம் செய்தேன். கிறிஸ்தவ மீடியா சென்டரில்  சேர்த்து அதை செய்தேன். என் மதத்தில் எந்த நம்பிக்கை வைத்திருந்தேனோ அதே நம்பிக்கையை  கிறிஸ்தவ மதத்தின் மீதும் வைத்திருந்தேன்.”

அது உண்மையா என்பதை கமல்ஹாசன் தெளிவுபடுத்த வேண்டும். அவரது மூத்த சகோதரர் லண்டனில் இறந்தபோது அவர் கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சில் அடக்கம் செய்யப் பட்டதாகவும் அந்த வீடியோ காட்டுகிறது. அதேபோல் அவரது அண்ணன் சாருஹாசனும் இந்து மத விரோத கருத்துக்களை பேசி எல்லாரும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டது போல் பேசுகிறார்கள்.

பார்ப்பனர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறுவது ஒன்றும் புதிதல்ல.

ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் செல்லும் பெரும்பாலான பார்ப்பனர்கள் அங்கே அந்த நாட்டு கிறிஸ்தவ பெண்களை திருமணம் செய்து கொண்டு கிறிஸ்தவர்களாக மாறிக் கொள்வது வழக்கம். அதன் பின் அவர்கள் அந்த நாட்டு அரசியலிலே புகுந்து வெற்றி பெற்று சாதனை படைத்தது வருகிறார்கள்.

அரசியல் ஆசை கொண்ட எந்த பார்ப்பனரும் தன் அடையாளத்தை விடாப்பிடியாக வைத்துக் கொள்ளமாட்டான்.

அடையாளம் எல்லாம் மனதிற்குள் மட்டுமே இருக்கும்.

மற்றவரை வெல்ல வேண்டுமானால் அடையாளத்தை மாற்றிக் கொண்டால்தான் முடியும் என்றால் மாற்றிக கொள்வதில் என்ன தவறு என்று பார்ப்பனீயம் கேட்கும்.

கமலது தாக்குதல் திமுகவை நோக்கி அதிகமாக இருப்பதால் இந்த சந்தேகம்.

காசு கொடுக்காமல் பதினைந்து லட்சம் வாக்குகள் பெற்று விட்டதால் இவரது கட்சி நிலைபெற்று விடும் என்று சொல்ல முடியாது.

அரசியல் தனது பிழைப்பல்ல என்று கூறும் கமல் அடுத்து இந்தியன்2 நடிக்கப் போய்விடுவார்.

அவரை நம்பி அரசியலுக்கு வந்தவர்கள்?

                   நகர்ப்புறத்து பார்ப்பனர்களும் சூதறியா பிற வகுப்பு இளைஞர் களும் ஏதோ ஈர்ப்பில் இவரிடம் சென்றார்கள். புத்தி தெளிந்தபின் திரும்பி விடுவார்கள் பார்ப்பனர்கள் தவிர. 

                   எந்த பிரச்னை பற்றியும் உறுதியான கொள்கை எதையும் சொல்லாத கமல் தமிழக அரசியலில் செல்வாக்கு பெறுவது அசிங்கம்.  

கமல் மீது நமக்கு வெறுப்போ கோபமோ இல்லை. அவர் பார்ப்பனர் என்பதால் மட்டும் இந்த விமர்சனம் இல்லை.

நாத்திகன் என்று சொல்லிக்கொள்பவர் ஒரு மத பிரச்சாரகரா என்ற கேள்வி முக்கியம்தானே?

தமிழ் மொழி பாதுகாப்பு தமிழர் நலன் பாதுகாப்பு என்று குறிப்பிட்டு பேசக் கூட தயாராக இல்லாதவர் உண்மையில் யார் என்ற கேள்வி எழுவது நியாயமா இல்லையா?

தினகரன் எழுப்பும் தேர்தல் மோசடி புகார் ??!!

எப்படியோ மூன்றாவது இடத்தை தக்க வைத்துக்கொண்டார் தினகரன்.

ஆனால் இவர் பெற்ற 22.5 லட்சம் வாக்குகளும் தேர்தல் முடிவுகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

நான்கு சட்டமன்ற இடைதேர்தல்களிலும் மூன்று பாராளுமன்ற இடங்களிலும் இவரால் அதிமுக வெற்றி தடுக்கப்பட்டது ஒன்றே இவருக்கு ஆறுதல்.

அடுத்த அரசியலுக்கு இது போதுமா?

அதிருப்தியாளர்கள் திரும்பவும் அதிமுகவுக்கு தாவுவதை இனி இவரால் தடுக்க முடியுமா?

இனி அதிமுக என்றால் ஒபிஎஸ் – இபிஎஸ் என்றாகி விட்டது.

அமமுக என்ற தனிக்கட்சியோடு திருப்தி அடைய வேண்டியதுதான் தினகரனின் ஒரே வாய்ப்பு.

போதா குறைக்கு பெரியார் அண்ணா கொள்கைகளை தினகரன் அதிகம் பேசுவதில்லை. ஜெயலலிதா பெயரை மட்டுமே சொல்கிறார். எம்ஜியாரே பெரியார்,அண்ணா கொள்கைகளை சொல்லித்தான் அரசியல் செய்தார் தவிர தான் தனித்து எந்த கொள்கையையும் முன்னெடுத்ததில்லை. அதேபோல் ஜெயலலிதாவும் அண்ணா எம்ஜியாரை சொல்லித்தான் ஆட்சி செய்தார். தனித்து எந்த கொள்கையையும் முன்னெடுக்காத ஜெயலலிதாவை மட்டுமே முன்னிலைப்படுத்தும் தினகரன் எப்படி அரசியல் செய்ய முடியும்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவை வெளியில் வந்ததும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது நடக்கவே முடியாத ஒன்று.

பணம் மட்டுமே தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் என்று இன்னமும் தினகரன் நம்பிக் கொண்டிருக்கிறார். பணம் தேனியில் மட்டுமே செல்லுபடியானது. அங்கேயும் கூட ஒபிஎஸ் மகன் வெற்றிபெற மோடி உதவினார் என்று ஈவிகேஎஸ் குற்றம் சாட்டுகிறார்.

வழக்கு போடப்போவதாகவும் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

பாஜக எதிர்ப்பு என்ற ஒரு கொள்கையில் மட்டுமே தினகரன் இதுவரை உறுதியாக இருக்கிறார். எதிர்காலத்தில் இருப்பாரா என்பதை சொல்ல முடியாது.

உள்ளாட்சி தேர்தல்களில் மட்டும் இவரால் சாதிக்க முடியும் என்று எதை வைத்து நம்புவது.? இப்போதே  ஆர்கேநகர் வெற்றி பற்றி இனி பேச முடியாது என்று ஆகிவிட்டது.

இவர் எழுப்பும் புதிய புகார் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டியது.

சுமார் 300 வாக்குச் சாவடிகளில் ஒரு வாக்கு கூட பரிசு பெட்டுக்கு விழவில்லையாம். அங்கே இருந்த நான்கு வாக்குச்சாவடி ஏஜெண்டுகளின் வாக்குகளும் எங்கே போனது என்பது பற்றி தேர்தல் ஆணையம்தான் பதில் சொல்ல வேண்டும் என்கிறார். 

                        உங்கள் ஏஜெண்டுகள் உங்களுக்குத்தான் வாக்களித்தார்கள் என்று எதை வைத்து சொல்கிறீர்கள் என்று கேட்டால் இவர் என்ன சொல்வார்? 

ஆனாலும் இவரது புகாரை புறந்தள்ளி விட முடியாது. மின்னணு வாக்கு எந்திரங்கள் இன்னும் என்னவெல்லாம் கேள்விகளை எழுப்பப்போகிறதோ? விசாரணை நடக்குமா என்று கூட உறுதியில்லை.

இருக்கிற உதிரிகளில் கொஞ்சம் வலுவான உதிரி.

பாதுஷா மோடி! பராக் !!! பராக் !!! பராக் !!!

நரேந்திர மோடி மீண்டும் அரியணை ஏறியிருக்கிறார்.

இது பாஜகவின் வெற்றியா? ஆர்எஸ்எஸ்-ன் வெற்றியா? கூட்டணி கட்சிகளின் வெற்றியா? பண பலத்தின் வெற்றியா? மத வாதத்தின் வெற்றியா?

கட்சி ரீதியில் பாஜக எல்லா மாநிலங்களிலும் பலம வாய்ந்த கட்சி என்று சொல்ல முடியாது. காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் பாஜகவை விட இயக்க ரீதியாக கட்டமைப்பு உள்ளவை. எனவே வெற்றிக்கு கட்சி மட்டுமே காரணம் இல்லை.

ஆர்எஸ்எஸ் மட்டுமே காரணம் இல்லை. ஏனென்றால் அதன் தாக்கம் எல்லா மாநிலங்களிலும் இருந்தால் பத்து மாநிலங்களில் பாஜக பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்க முடியாது.

கூட்டணி கட்சிகள் அடையாளம் காணவே கடைசி நேரத்தில்தான் முடிந்தது.    கூட்டணி இல்லாமலேயே பாஜக சில மாநிலங்களில் வெற்றி பெற முடிந்திருக்கிறது.  சில கட்சிகள் வெளியேறிய போதும் வெல்ல முடிந்திருக்கிறது. வலுவான கட்சிகள் தமிழ் நாட்டில் கூட்டணியில் சேர்ந்த போனதும் வெல்ல முடியவில்லையே. ?

பண பலம் மட்டுமே காரணம் இல்லை. தமிழ்நாடு ஆந்திரா தவிர எங்குமே பணம் கொடுத்து வாக்குகள் வாங்கியதாக புகார்கள் கூட இல்லை. பாஜக எல்லா கட்சிகளையும் விட இந்திய அளவில் பண பலம் உள்ள கட்சிதான். பெரு நிறுவனங்களிடம் அதிக அளவில் நிதி பெற்றது உண்மைதான். ஆனால் பண பலத்தால் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகளே  சுமத்தவில்லை.

மதவாதம். இந்து மத வாதத்தை பாஜக முன்னரே வலுவாக உருவாக்கி விட்டிருந்தது.  அதுவே அதன் பலவீனம் ஆகவும் இருந்தது. முஸ்லிம் எதிர்ப்பு என்பது பாஜகவின் ரத்தத்தில் கலந்தது. கிறிஸ்தவ எதிர்ப்பு தன் இயற்கை குணம். சாக்ஷி மகராஜ், சாத்வி நிரஞ்சன் ஜோதி, சாத்வி பிரக்யா சிங் போன்ற முழு மதவாதிகள் பாராளுமன்றம் செல்கிறார்கள். ஓரளவிற்கு மதவாதம் பாஜக வெற்றிக்கு உதவியதே தவிர அது மட்டுமே காரணமாக அமையவில்லை.

ஆக இறுதியில் பாஜக வெற்றிக்கு முழுமுதல் காரணம் தாமோதர தாஸ் நரேந்திர தாஸ் மோதி என்ற ஆளுமை மிக்க தலைமைதான்.

               அவருக்கு சாதி தேவை இல்லை. பணம் சொத்து தேவையில்லை.  குடும்பம் தேவை இல்லை. தனக்கென்று எதுவுமே தேவை இல்லை. ஆனால் தனக்கான தேவை அனைத்தையும் பெற்றுத்தரும் பதவி மட்டுமே குறி. அதில் மட்டும் தெளிவாக இருக்கிறார் மோடி. எனவே வெற்றி தானாகவே அவரை நோக்கி ஓடி வருகிறது.

இந்தி மாநிலங்களில் சில காலத்துக்கு முன்பு தோற்ற இடங்களில் பாஜக வென்றதற்கு காரணம் மோடிதான்.

நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க மோடி தேவை என்ற பிம்பம் உருவாக்கப் பட்டது.

மோடிக்கு இணையான தலைவரை எதிர்க்கட்சிகள் அடையாளம் காட்டவில்லை.  மோடிக்கு ராகுல் சமமா என்ற கேள்வியை யாரிடம் கேட்டாலும் இல்லை என்றே பதில் வரும்.

சரி. வந்து விட்டார் மோடி. புதிய இந்தியாவின் முடி சூடா மன்னராக. எல்லாரையும் அரவணைத்து செல்ல போவதாக அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

வாழ்த்துவோம். காத்திருப்போம் என்ன செய்யப் போகிறார் என்பதைக் காண.

பள்ளிச்சான்றிதழ்களில் சாதி மதம் குறிப்பிட வேண்டாம்; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிக்கை!!!

நீண்ட கால கோரிக்கை ஒருவழியாக அரசால் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.

பள்ளிகல்வி இயக்குனர் திரு வி சி ராமேஸ்வர முருகன் விடுத்துள்ள சுற்றறிக்கையில் இனி தலைமை ஆசிரியர்கள் பெற்றோர் எழுத்து மூலமாக வேண்டுகோள் விடுத்தால் மாற்றுச் சான்றிதழ்களில் சாதி மதம் குறிப்பிட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சினேகா பார்த்திபராஜா நீண்ட காலமாக போராடி மதம் சாதி இல்லா சான்றிதழ் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

அகில பாரதிய ஆதிவாசி விகாஸ் பரிஷத் மாநில தலைவர் சஞ்சீவ் என்பவர்  24/01/2019 அன்று கொடுத்த கோரிக்கை மனுவை அடுத்து இயக்குனர் இந்த சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார்.

சாதி மத ஒழிப்பில் இது முக்கியமான முன்னேற்றம்.

பெற்றோர் வேண்டுகோள் விடுத்தால் மட்டுமே வழங்கப் படும் இந்த சாதி மதமில்லா சான்றிதழ் வேண்டுகோள் இல்லாமலேயே எல்லாருக்கும் வழக்கமாக வழங்குவதுதான் நியாயமாக இருக்கும். வேண்டும் என்போர் வேண்டுமானால் குறிப்பிட்டு கொடுக்க மனு கொடுக்கட்டும். 

இட ஒதுக்கீடு உரிமை இதனால் பாதிக்கப்படாது. ஏனென்றால் அந்த உரிமை இல்லாமலேயே தனக்கு உரிய இடத்தை பெற்று விட முடியும் என நம்பிக்கை கொண்டோர்தான் வேண்டாம் என்பார்கள். அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் ஐம்பது சதத்துக்கும் மேலாக சம உரிமை பெற்றுவிட்டார்கள் அல்லது படிப்பறிவில் சமமாக இருக்கிறார்கள் என்ற நிலை வரும்போது இட ஒதுக்கீடு தேவை இல்லை என்ற நிலை ஏற்படும்.

அதற்கு புள்ளி விபரத்துரை ஒவ்வொரு ஆண்டும் எல்லா சமுதாயத்தினர் பற்றிய கல்வி வேலை வாய்ப்பு நிலை பற்றிய அறிக்கை தர வேண்டும்.

வெளிச்சம் தரும் இந்த ஏற்பாடு அடுத்த கட்டம் நோக்கி நகர வேண்டும் என்பதே தமிழர் ஒற்றுமைக்கு பாடுபடும் அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.

இதே ஏற்பாடு அனைத்து இந்திய அளவில் விரிவு படுத்தப் படும் காலம்தான் இந்தியாவின் பொற்காலம்.