Home Blog Page 39

கமல், பாஜக, அதிமுக கூட்டுக் களவாணிகள் ??!!

கமலை தூக்கிப் பிடிக்கிறது ஆர்எஸ்எஸ். அவர் மீது எண்பதுக்கும் மேலான புகார்கள் சங்கத்தின் தூண்டுதல் இல்லாமல் நடக்குமா? இந்தப் புகார்கள் எல்லாம் நாடகம்.

கமல்ஹாசன் இந்து மத எதிரியா?

ஹே ராம் எடுத்து முஸ்லிம்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதை காட்டிய கமல் எப்படி இந்து விரோதி ஆவார்?

விஸ்வரூபம் எடுத்து முஸ்லிம்கள் பயங்கர வாதத்தில் ஈடுபடுவதை காட்டிய கமல் எப்படி இந்து விரோதியாவார்? அதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் நாட்டை விட்டுப் போகிறேன் என்று கமல் புலம்பியதும் தெரிந்த கதைதானே.

இருந்தும் கமலை ஏதோ இந்து விரோதி போல பூதாகாரமாக எதிர்ப்பு காட்டி அவரை தூக்கிப்பிடித்து நிலைக்க வைக்க முயல்கிறது சங்கம். அதன் எதிரொலிதான் காவல் புகார்கள்.

இந்துமத ஆதரவாளர்கள் நாங்களே! அதன் எதிர்ப்பாளர்களும் நாங்களே! இதுதான் அவர்களின் சூழ்ச்சி !

இது புரியாமல் ரெண்டும் கெட்டான்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நம்ம ராஜேந்திர பாலாஜி போன்ற அப்பாவிகள். !

கண்டு கொள்ளாமல் இருந்திருந்தால் கமலுக்கு முகவரி கிடைத்திருக்குமா?

வேறு முகவரியை கொள்ளட்டும். இந்து எதிர்ப்பாளர் முகவரி கமலுக்கு பொருந்தாது.

குப்பையில் கிடந்த மரகத லிங்கம் மீட்கப்பட்டது; வேட்டவலத்தில் அதிசயம்??!!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடிக்கப் பட்டதாக சொல்லப்பட்ட திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருள்மிகு மனோன்மணி அம்மன் கோவில் மரகத லிங்கம் பல கோடி ரூபாய் மதிப்புடையது. அத்துடன் வெள்ளி பொருட்களும் திருடுபோனதாம். சுவற்றில் துளை  போட்டு நடந்த கொள்ளை அது.

ஜமீன்தார் மகேந்திர பந்தாரியர் கொடுத்த புகாரை காவல் துறை விசாரித்து வந்த நிலையில் வழக்கு சிலை கடத்தல் பிரிவுக்கு மாற்றப் பட்டது.

இந்நிலையில் ஜமீன் வளாகத்தில் குப்பையில் கொள்ளை போன மரகதலிங்கம் கிடைத்ததாக போலீசார் தெரிவித்து அதை குருக்கள் உறுதிபடுத்தியவுடன் சிலை கடத்தல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டது

மாட்டிக்கொள்வோம்  என்று தெரிந்து வீசிவிட்டுச் சென்ற அந்த திருடர்களை விரைவில் சிலை கடத்தல் பிரிவு போலீசார் கண்டு பிடித்து சொல்வார்கள் தண்டனை பெற்று தருவார்கள் என்றும் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

விலை மதிப்புள்ள சிலைகளை பாதுகாப்புடன் வைக்கக் கூட அற நிலையதுறைக்கு வக்கில்லையா??!!

திராவிட இயக்கத்தை ஒழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியே கமலின் பேச்சு?!

பார்ப்பனீயம் கோலோச்சும் இந்து மதவாதத்தை எதிர்க்கும் இயக்கம் திராவிட இயக்கம்.

திராவிட இயக்கம் வலிமையாக இருக்கும் வரை பார்ப்பனீயம் வலிமை பெற முடியாது. பார்ப்பனீயம் அதிகாரம் பெற ஒரே வழி திராவிட இயக்கத்தை பலவீனபடுத்துவதுதான்.

திராவிட இயக்கத்திற்கு பார்ப்பனர்கள் தலைமை ஏற்க முடியும் என்பதை நிரூபித்தவர் ஜெயலலிதா. ஆனால் பார்ப்பனீயத்தை ஓரளவுக்கு மேல் அவரால் வெளிப்படையாக ஆதிக்கம் செலுத்த செய்ய முடியவில்லை. முடியாததால்தான் பெரியார் படத்துக்கு மரியாதை செலுத்தினார். அண்ணாவுக்கு மரியாதை செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது என அறிவித்தார்.

இப்போது திமுக மட்டும்தான் திராவிட இயக்கத்தின் ஒரே வாரிசு. இல்லையென்று மறுப்போர் சிலர்தான். எனவே அந்த இடத்தில இருந்து திமுகவை அகற்றி அந்த இடத்தில் ஒரு பார்ப்பனரை அமர்த்தும் வேலைதான் இப்போது கமல்ஹாசன் பார்ப்பது.

‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு  இந்து .

அவர் பெயர் கோட்சே.’ இதுதான் கமல்ஹாசன் பேசிய பேச்சு. இதில் எந்த கருத்தும் தவறு இல்லை. வரலாற்று உண்மை. எந்த இடத்திலும் இந்துக்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்றோ இந்து மதம் தீவிரவாதம் சார்ந்தது என்றோ கமல் கூறவில்லை.

இதே கமல்ஹாசன் ஹே ராம் என்று ஒரு படம் எடுத்தார். அதில் முஸ்லிம் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டு அதற்கு காரணம் காந்திதான் என்று அவரை கொலை செய்ய முயற்சித்தபோது காந்தியை கோட்சே கொலை செய்து விடுகிறார். அதாவது கமல் செய்ய வேண்டிய வேலையை கோட்சே செய்தார் என்பதே கதை. எங்காகிலும் காந்தி கொலை அநியாயமானது என்று காட்ட முயற்சித்திருந்தாரா?

இப்போது கமல்ஹாசன் பேசியதை பெரிதுபடுத்தி கமல் ஏதோ இந்து எதிர்ப்பாளர் என்பது போலவும் இந்து எதிர்ப்பு சக்திகளின் பிரதிநிதி கமல்ஹாசன் என்பது போலவும் ஊரில் உள்ள எல்லா பார்ப்பனர்களும் அதன் ஆதரவாளர்களும் பிரச்சாரம் செய்வது ஏன்?

சூது அறியாமல் வீரமணியும் கமல் சொல்வது உண்மைதானே என்கிறார்.

எச் ராஜா கமல் ஒரு இந்து துரோகி என்கிறார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமல் நாக்கை வெட்ட வேண்டும் என்கிறார். அவரது சக அமைச்சர்களும் கமலை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்கிறார்கள்.

அஸ்வினி உபாத்யாய என்ற பா ஜக உறுப்பினர் டெல்லி நீதிமன்றத்தில் கமல் மீது வழக்கு போட்டு அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.

தமிழ்நாடு முழுதும் பாஜககாரர்கள் கமல் மீது காவல் துறை புகார் கொடுக்கிறார்கள். ஒரு வழக்கும் பதிவாகிறது.

கமல் முன்ஜாமீன் கோருகிறார்.

பிரதமர் மோடி இந்து என்பவன் தீவிரவாதியாக இருக்க முடியாது என்று பேசுகிறார்.

மன்னார்குடி செண்பக மன்னார் ஜீயர் என்பவர் கமலை தமிழகத்தில் நடமாட விடமாட்டோம் என்கிறார். அவர் இன்னும் கூடுதலாக கோட்சேவை உச்சநீதிமன்றம் குற்றவாளி இல்லை என்றது என்றும் கமலுக்கு ஐ எஸ் இயக்க தொடர்பு உள்ளது என்றும் அவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார் என்றும் கோட்சே இந்த நாட்டின் மீது தேசபக்தி வைத்திருந்தார் என்றும் அதனால்தான் அவர் அந்த செயலை  செய்தார் என்றும் தாறுமாறாக தன் அறியாமையையும் வெறித்தனத்தையும் வெளிக்காட்டினார்.

இந்த கமல் எதிர்ப்பு விமர்சனங்கள் எல்லாம் எதை முன் வைக்கின்றன.? அவர் பார்ப்பனீய எதிர்ப்பாளர் என்பதாலா?

பள்ளபட்டி முஸ்லிம்கள் மத்தியில் கமல் ஏன் இதை பேசினார் என்பதே ரகசியம்.

என்ன செய்தாலும் கமல் ஒருக்காலும் திராவிட இயக்கங்களின் முகமாக மாறவே முடியாது. யாரும் நம்பமாட்டார்கள்.   

      பிறரை அடிமைப் படுத்த பார்ப்பனீயம் எந்த ரூபத்திலும் வரும் என்பது திராவிடர்கள் படித்த பழைய பாடம். 

அதிமுகவினர் பாஜக பக்கம் சாய தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றனர் என்பதும் தெளிவாகிறது.

கமல்ஹாசன் தன்னை உண்மையான நாத்திகன் என்றோ திராவிட இயக்க சிந்தனைகளுக்கு ஆதரவாளர் என்றோ இன்னும் நிரூபிக்க வில்லை. இன்று வரை திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக இயக்கம் காண வேண்டும் என்று திராவிட இயக்கங்களை பலவீனப் படுத்தும் முயற்சியில்தான் இருக்கிறார்.

திராவிட இயக்க தலைமையின் பேரில் விமர்சனம் இருந்தால் கொள்கை ரீதியாக தன்னை வலியுறுத்திக் கொள்ள முயற்சிக்கலாமே? ஏன் செய்யவில்லை.?

இதற்கெல்லாம் விடை கிடைக்காமல் கமலுக்கு ஆதரவு கிடைக்காது.

புதிது புதிதாக முளைக்கும் தேர்தல் மோசடிகள்?! யார் பொறுப்பு??!!

பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி சட்டமன்ற இடைத் தேர்தல்களாக  இருந்தாலும் சரி புதிது புதிதாக மோசடிகள் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன.

மதுரையில் ஒரு தேர்தல் அதிகாரி நள்ளிரவில் வாக்கு யந்திரங்கள் இருந்த அறையில் அல்லது பக்கத்து அறையில்  அனுமதியின்றி புகுந்து  மூன்று மணி  நேரம் இருந்திருக்கிறார். அது சட்டப்படி தவறு என்பதால் பணி  இடைநீக்கம் செய்யப் பட்டிருக்கிறார். அவர் ஏன் சென்றார் மூன்று மணி  நேரம் அங்கு என்ன செய்தார் என்பது  பற்றி தேர்தல்  ஆணையம் ஏற்றுக் கொள்ளத் தக்க  விளக்கம் ஏதும் தரவில்லை. – இது முதல் மோசடி. 

கோவையில் இருந்து காலி வாக்கு யந்திரங்கள் தேனிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அது தேர்தல் ஆணைய உத்தரவுக்கு இணங்கத்தான் கொண்டு செல்லப்பட்டதாக தமிழக தேர்தல் அதிகாரி கூறுகிறார். மறு வாக்குப்பதிவு செய்ய அவசியம் இருக்கும் என தீர்மானித்து கொண்டு செல்லப்பட்டதாக கூறுகிறார்கள். அது 13 மாவட்டங்களில் உள்ளதாக கூறப்பட்டது. எனில், ஏன் எல்லாம் தேனிக்கு கொண்டு செல்லப் பட வேண்டும்? – இது இரண்டாவது மோசடி. 

46 வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு செய்தபோது பதிவான ஐம்பது வாக்குகளை அழிக்காமல் விட்டிருக்கிறார்கள். அது 13 மாவட்டங்களில் உள்ளவை.  மேலும் 10 வாக்குச் சாவடிகளில் பிற சமூகத்து வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் செய்தது மற்றும் ஒரு  குறிப்பிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் யாரையும் வாக்களிக்க விடாமல் தாங்களே வாக்களித்துக் கொண்டது போன்ற குற்றச்சாட்டுகளால் அவைகளுக்கு மறு தேர்தல் நடத்த பரிந்துரைத்து இருப்பதாக தமிழ்நாடு தேர்தல் அதிகாரி கூறினார். ஆனால் இந்திய தேர்தல் ஆணையம் இப்போது 13 வாக்கு சாவடிகளுக்கு மட்டும் மறுதேர்தல் அறிவித்துள்ளது. மாதிரி வாக்குகளை எப்படி நீக்கப்  போகிறார்கள்? எண்ணிக்கை இடிக்குமே? இது மூன்றாவது மோசடி.

1.50 அரசு ஊழியர்கள் போட வேண்டிய அஞ்சல் வாக்குகள் கொடுக்கப்படாமலே விடுபட்டது எப்படி? அதுவும் வாக்குகள் அனைத்தும் கணக்கில் கொண்டு வரப்படாமல் விடுபட்டு போனது எப்படி? அரசு ஊழியர்கள் எதிராக இருப்பதால் ஆளும்கட்சி தலையிட்டு அவர்களது வாக்குகளை களவாடியதா? இது நான்காவது மோசடி. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களது வாக்குகள் காணாமல் போனது எப்படி? இது ஐந்தாவது மோசடி. 

சட்டமன்ற இடைதேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வாக்குக்கு இரண்டாயிரம் கொடுத்திருப்பதால் ஆளும்கட்சி நம்பிக்கையுடன் இருக்கிறது. இது பற்றி எல்லாரும் பேசுகிறார் களே தவிர புகார் கொடுக்கவோ விசாரிக்கவோ யாரும் தயாராக இல்லை. பணத்தின் ஆதிக்கம் பெருமளவு இந்த தேர்தலில் இருந்ததை மறந்து எப்படி கடந்து போவது? எந்த ஊடகமும் இது பற்றி விரிவாக விவாதிக்க தயாராக இல்லை என்பது சோகம்.

              இன்னும் வாக்கு எண்ணிக்கை நடப்பதற்குள் என்னென்ன மோசடிகள் அரங்கேறுமோ?

கரும்பு விவசாயிகளை மோசடி செய்ய உதவிய வங்கி நிர்வாகிகளுக்கு என்ன தண்டனை??!!

தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடி  ஆரூரான் சர்க்கரை ஆலையும் கோட்டூர் அம்பிகா சர்க்கரை ஆலையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் உள்ளவை. அவற்றின் அதிபர் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சர்க்கரை ஆலை தொழிலில் உள்ளவர்.

அகில இந்திய சர்க்கரை ஆலை நிர்வாகிகள் சங்க தலைவராக இருந்தவராம் ராம.தியாகராஜன் .

கரும்பு விவசாயிகளுக்கு முன்னூறு கோடி ரூபாய் அளவுக்கு நிலுவை வைத்து உள்ளாராம். அதை அடைக்க அவர் கையாண்ட விதம்தான் சர்ச்சைக்கு உரியது.

விவசாயிகளுக்கு, அவர்களிடம் இருந்து கொள்முதல் செய்த கரும்புக்கு ஆன விலையை, ஆலை நிர்வாகம்தான் கொடுக்க வேண்டும். அதை நிலுவையில் வைக்க எந்த நிர்வாகத்துக்கும்  உரிமை கிடையாது.

விவசாயிகளுக்கு உரிய பணத்தை கையாடல் செய்தால் தவிர பாக்கி வைக்க  வாய்ப்புகளே இல்லை.

ஏறத்தாழ 1500 விவசாயிகளுக்கு தர வேண்டிய பாக்கி துகையை அவர்கள் பெயரில்  பல வங்கிகளில் கடன் வாங்கி கொடுத்து எப்படி நிர்வாகத்தால் தப்பிக்க முடியும்?

விவசாயிகள் வாங்கிய கடனை நான் அடைத்து விடுகிறேன் என்று ஆலை நிர்வாகம் ஒப்புக் கொண்டுவிட்டு பின்னர் அந்த உத்தரவாதத்தை காப்பற்ற முடியாமல் போனால் அந்த கடனை விவசாயிகள்தானே செலுத்த வேண்டும்.?

இந்த மோசடி வங்கிகளின் ஒத்துழைப்பு  இல்லாமல் நடந்திருக்க முடியுமா?

ஒன்று மட்டும் தெளிவு. விவசாயிகள் நேரடியாக வங்கிகளிடம் இருந்து கடன் பெற வில்லை. ஆலை நிர்வாகம்தான் இடையில் இருந்து ஏற்பாடு செய்து கடன் பெற்று தந்திருக்கிறது. அந்த கடனுக்கு ஆலை நிர்வாகம் உத்தரவாதம் தந்திருந்தால் ஆலையின் சொத்துக்களை வசப் படுத்த முடியுமே? ஏன் செய்யவில்லை?

ஏன் விவசாயிகளிடம் அறிவிப்பு கொடுத்து அவர்களிடம் இருந்து கடனை வசூலிக்க முயற்சிக்க வேண்டும்.

தான் தரவேண்டிய கடனை வங்கிகளை கொடுக்க செய்து தற்காலிகமாக தப்பித்த அதிபர் இறுதியில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

ஆலை அதிபர் கைது செய்யப் பட்டிருக்கிறார். 

                 எந்த நடவடிக்கை ஆனாலும் விவசாயிகள் பாதிக்கப்படாமல் காப்பற்ற வேண்டியது அரசின் கடமை.

விடுவிக்கலாம்-கிடப்பில் போடலாம்-விடுவிக்க மறுக்கலாம் -என்ன செய்ய போகிறார் ஆளுநர்??!!

ராஜிவ் காந்தி கொலைவழக்கின் குற்றவாளிகளான 26 பேரில் 19 பேரின் மரண தண்டனையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். அப்போது அதை எதிர்த்து  பெரிதாக குரல் எதுவும் எழவில்லை.

மீதி 7 பேருக்கும் கொடுக்கப்பட்ட மரண தண்டனையையும் அவர்களின் கருணை மனுக்களை முகாந்திரம் இல்லாமல் கிடப்பில் போட்டதற்காக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.

அவர்களும் 28 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்துவிட்டார்கள்.

அவர்கள் குற்றவாளிகளா நிரபராதிகளா என்ற விவாதம் தேவையே இல்லை.      குற்றவாளிகள்தான் என்றே வைத்துக் கொள்ளலாம்.

இப்போது உச்சநீதிமன்றம் அந்த ஏழு பேரின் விடுதலையை எதிர்த்து செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து இருக்கிறது.

தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி ஏழு பேரையும் விடுதலை செய்ய கேட்டுக்கொண்டது. அதை ஏற்றுக் கொள்ள ஆளுநர் கடமைப்பட்டவரா அல்லது அதற்கு மாறாக தனிப்பட்ட முறையில் தீர்மானிக்க உரிமை படைத்தவரா? இதுதான் இப்போது கேள்வி!

அரசியல் சட்டத்தின் பிரிவு 161 ஆளுநருக்கு தந்திருக்கும் விடுதலை செய்யும் உரிமை தமிழக அரசின் உரிமையா ஆளுனரின் தனிப்பட்ட உரிமையா? அரசின் முடிவுக்கு ஆளுநர் கட்டுபட்டவர் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கிறது. பின் ஏன் தாமதம்? 

ஆளுநர் முடிவெடுக்க காலக்கெடு இல்லை என்பது உண்மைதான் என்று மருத்துவர்  ராமதாஸ் கூட்டணி லாலி பாடிவிட்டு இருந்தாலும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று அறிக்கை விடுகிறார்.

ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதி. ஏற்கனெவே ஏழு பேரையும் விடுவிக்க முடியாது என்று மத்திய அரசு முடிவு செய்து உச்சநீதிமன்றதுகு தெரிவித்துவிட்டது. அந்த மத்திய அரசின் முடிவுதான் ஆளுநரின் முடிவாக இருக்கும் பட்சத்தில் எப்படி  முரணாக முடிவு எடுப்பார்?

மத்திய அரசை கேட்டு  முடிவு எடுப்பதை விட வேறு வழி இல்லை என்றால் ஆளுநர் முடிவு எடுப்பார் என்று ஏன் உச்ச நீதிமன்றம் கூற வேண்டும்.

ஆளுநரின் அதிகாரம் என்பது மாநில அரசின் அதிகாரத்துக்கு இசைவாக அமைய வேண்டுமே தவிர முரணாக இருக்க முடியுமா?

பாஜகவாக இருந்தாலும் காங்கிரஸாக இருந்தாலும் சரி தமிழர்களுக்கு எதிரான முடிவைத்தான் எடுக்கிறார்கள்.

ஆளுநர் விடுவித்தால் மத்திய, மாநில ஆளும் கட்சிகளும் எதிர்கட்சிகள் எல்லாரும் விடுதலைக்கு சொந்தம்  கொண்டாடுவார்கள். இது நடந்தால் அதிசயம்தான். எப்படியோ நல்லது நடத்தால் சரி.

அப்படி நல்லது நடக்க வலதுசாரி உயர்சாதி வக்கிர புத்திக்காரர்கள் விட்டு விடுவார்களா என்ற ஐயம் இருக்கவே செய்கிறது.

தேசப்பிதா மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவின் சகோதரன் கோபால் கோட்சேவை பதினாறு ஆண்டுகளில் விடுதலை செய்தார்களே அப்போது ஏன் என்று யாருமே கேட்கவில்லையே ஏன்? அவர் பார்ப்பனர் என்பதால்தானே?

சட்டப் பேரவை தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போடலாம். அப்போதும் நீதிமன்றம் சென்று ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று மனு போட்டால் அதில்  எப்போது தீர்ப்பு வருமோ?

சட்டப் பேரவை தீர்மானத்தை ஏற்க மறுத்து ஏழு பேரையும் விடுவிக்க மறுக்கலாம். மத்திய அரசு சொல்லிய காரணத்தையே சொல்லி விடுதலை மறுக்கலாம். அந்த முடிவு தவறு என்று மீண்டும் நீதிமன்றம்தானே செல்ல வேண்டும். அதில் எப்போது தீர்ப்பு வருமோ?

சட்டம் போட்டுவிட்டோம் என்று கடமை முடிந்தது போல் பாசாங்கு காட்டி வரும் எடப்பாடி அரசு எந்த அவசரத்தையும் காட்டவில்லையே?

தமிழன் தலைவிதி மிதிபட்டு சாவதுதான் என்று சொல்லாமல் சொல்கிறார்கள். 

பாரதி வந்து மீண்டும் பாட வேண்டும்.   

                               என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் ?

நீட் தேர்வு; பேண்டின் மெட்டல் ஜிப்பை கழற்ற சொன்ன கொடுமை?!

நீட் தேர்வே கூடாது என்று போராடிக் கொண்டிருக்கிற நேரத்தில் நீட் தேர்வர்களை மனதளவில் பாதிக்கச்செய்து அது தேர்வில் எதிரொலிக்கும் அளவு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து மாணவர்களை மிரட்டி இருக்கிறது அதிகார வர்க்கம்.

தமிழகத்தில் 1,34,711 தேர்வர்கள் 188 மையங்களில் தேர்வு எழுதினர்.

தேர்வு விளம்பரங்களில் தேர்வர்களை ‘அபேட்சகர்கள்’ என்று குறிப்பிட்டு தங்களது சமஸ்கிருத வெறியை வெளிக்காட்டினர் அதிகார வர்க்கத்தினர். 

எந்த தேர்விலும் இத்தகைய கட்டுப்பாடுகள் இருந்ததில்லை.

சிசிடிவி காமிரா கண்காணிப்பாளர்கள் எல்லாம் இருக்கும்போது ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்.

மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா?

அறிவுக்கு பொருத்தமே இல்லாத கட்டுப்பாடுகள் இவர்களின் நோக்கம் என்ன என்பதை கேள்விக்குறியாக்குகிறது.

மெல்லிய அரைக்கை ஆடை, ஷூ கூடாது, செருப்பு மட்டும் அணியலாம், ஹை ஹில் ஷூ கூடாது, காதணி, மூக்குத்தி கூடாது, தலைவிரி கோலமாகத்தான் வரவேண்டும், துப்பட்டா கழுத்து சங்கிலி கூடாது என்ற கட்டுப்பாடுகள் தான்தோன்றித் தனமானவையாக தோன்றவில்லையா ?

இதைவிட கொடுமை எங்கும் எதிலும் சொல்லாத ஒரு நிபந்தனை-அதாவது பேண்டின் ஜிப் மெட்டலில் இருக்கக் கூடாது. ஒரு மாணவரை அவரது பேண்டின் ஜிப்பை அறுத்து உள்ளே அனுப்பி இருக்கிறார்கள். அந்த மாணவரது தந்தை வெளியில் வந்து இந்த நிபந்தனை எங்குமே சொல்லப்பட வில்லையே என்று புலம்பிக் கொண்டே சென்றிருக்கிறார். வேறு வழி?   

இந்த கொடுமை எத்தனை நாள் நீடிக்கும் என்ற கேள்விதான் எல்லார் மனதிலும்.

ரபேல்; ரகசிய ஆவணங்களை நீதிமன்றம் பரிசீலிக்க மோடி அரசுஆட்சேபிப்பது ஏன்??!!

ரபேல் விமான கொள்முதலில் முறைகேடு எதுவும் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு சில ஆவணங்களை ‘இந்து’ பத்திரிகை வெளியிட்டதை தொடர்ந்து அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய பிரசாந்த் பூஷன் அருண்ஷோரி, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் மனு செய்தனர்.

அதில் மத்திய அரசு கொடுத்த ஆட்சேபம்தான் இப்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.

ரகசிய ஆவணங்களை எல்லாம் நீதிமன்றத்தில் யாராவது திருடி சமர்ப்பித்தால் அவருக்கு என்ன தண்டனை என்று மத்திய அரசு கேட்கிறது.

உச்ச நீதி மன்றம் அதற்கு  பதில் கேள்வி கேட்டது. அரசு ஆவண ரகசிய சட்டத்தில் ( Official Secrets Act ) அப்படி ஏதேனும் ஆவணம் வெளியிடப்பட்டால் அதை வெளியிடுவதில் இருந்தோ நீதிமன்றம் பரிசீலிப்பதில் இருந்தோ தடுப்பதற்கு  நிர்வாகத்திற்கு அதிகாரம் அளித்து பாராளுமன்றம் சட்டம் ஏதேனும் இயற்றி இருக்கிறதா ? 

இதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் தேச பாதுகாப்பிற்கு ஆபத்து நாட்டுக்கு ஆபத்து என்றெல்லாம் விளக்கம் கூறி மத்திய அரசு வாக்குமூலம் அளித்திருக்கிறது.

இதில் இருந்து ஒன்று வெளியாகிறது. ஆவணம் பரிசீலிக்கப் பட்டால் ரபேல் கொள்முதலில் முறைகேடுகள் வெளிவந்து விடும் என்று மோடி அரசு  அஞ்சுகிறது. 

இந்த வழக்கில் இருந்து ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிமன்றம் பிரித்து விட்டது.

எனவே உச்ச நீதிமன்றம் பத்திரிகையில்  வெளியிடப் பட்ட ஆவணங்களை பரிசீலித்து கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் உள்ளனவா என்பதை மறுபரிசீலனை செய்யும் என்று நிச்சயமாக  தெரிகிறது.

அப்படி செய்யும்போது விலை நிர்ணயம், முன் அனுபவமே இல்லாத அனில் அம்பானியின் நிறுவனத்தை இந்திய கூட்டாளியாக ஏற்றுக்கொண்டது, அந்த நிறுவனத்திற்கு வேறு வகையில் ஆயிரம் கோடிக்கும் மேல் வரி விலக்கு அளித்தது போன்ற எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்.

தீர்ப்பு வரும்போது மோடி அரசின் முகத்திரை கிழியும் என்பதில் சந்தேகம் இல்லை.

வேதம் படித்து வேலை கிடைக்க நிதி ஒதுக்கும் மத்திய மனித வளத்துறை??!!

பாஜக ஆட்சியில் மத்திய மனித வளத்துறை சம்ஸ்கிருத வளர்ச்சிக்கு தனி கவனம் செலுத்தி கூடுதல் நிதி ஒதுக்கி வருகிறது.

தனியார் வேத பாடசாலைகள் நடத்தி வந்தால் அவர்களுக்கு உதவும் பொருட்டு புது புது திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

அதில் ஒன்றுதான் தேசிய திறந்த வெளி பள்ளிக்கழகம் (National Institute for Open  Schooling) மூலமாக சமஸ்கிருதம் படிக்கவும் பின்னர் வேலை கிடைக்க தகுதி பெறவும் உதவுகிறது. இந்த வேத பாடம் என்பது புதிதாக புகுத்தப்பட்ட பாடத்திட்டம்.  இந்த பாட திட்டத்தின் படி சமஸ்கிருத இலக்கணம் வரலாறு இலக்கியம் மற்றும் ஆங்கிலம் கற்றுத் தரப்படுகிறது.

வேத பாடசாலகளில் படித்தவர்கள் வேத விற்பன்னர்களாகவும் பேராசிரியர்களாகவும் தான் ஆக முடியும். அவர்கள் இந்த பள்ளிக்கழக சான்றிதழ் பெற்றால் அவர்கள் எந்த சுயநிதி பல்கலை கழகங்களிலும் மற்றும் வேறு நிறுவனங்களிலும் வேலை  வாய்ப்புகளை பெற முடியும். ஆக சமஸ்க்ரிதம் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்க திட்டமிட்டு மத்திய அரசு இந்த புது புது திட்டங்களை அறிமுகப் படுத்தி வருகிறது.

இத்தகைய ஆதரவு இதர மொழிகளுக்கு கிடைக்குமா என்றால் நிச்சயமாக கிடையாது. தமிழ் மறை படிக்க நிதி ஒதுக்குமா??!!

நாடு முழுதும் இந்த திட்டத்தை 2016ல் பாஜக அரசு அறிமுகபடுத்தியபோது சுமார்  5000 சமஸ்கிருத மாணவர்கள் பயன்படுத்தி கொண்டார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் சுமார் 25 மாணவர்கள் பயனடைந்தார்கள்.

தமிழகத்தில் சுமார் 300 வேத பாடசாலைகள் தலா 40 மாணவர்களைக் கொண்டு இயங்கி வருகிறது என்றால் 1200 மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களுக்கு வேலை வாங்கிக் தரும் வேலையைத் தான் மத்திய மனித வளத்துறை திட்டமிட்டிருக்கிறது.

இதில் பயிற்றுவிப்பவர்கள் பயனாளிகள் எல்லாருமே பார்ப்பனர்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

அதுதான் பாஜக.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அறைந்தவருக்கு பாஜக தூண்டுதல்?!!

தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்ற ஒரு மாநில முதல்வரை அவரின் வாகனத்தின் மேலேறி ஒருவர் அறைகிறார் என்றால் அதற்கு பின்புலமாக அதிக சக்தி வாய்ந்தவர் இல்லாமல் அது நடக்குமா?

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அதுதான் நடந்திருக்கிறது.

தன் வாகனத்தில் தேர்தல் பிரசாரத்தில் இருந்த முதல்வரை பாஜக தூண்டுதலின் பேரில்தான் தாக்கினார் என்று எல்லா தரப்பினரும் கண்டன கணைகளை தொடுத்த வண்ணம் இருக்கின்றனர். சுரேஷ் சௌஹன் என்ற அந்த நபர் பிடித்து உதைக்கப்பட்டு காவல் துறை வசம் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறார்.

இரண்டு அடுக்கு பாதுகாப்பு வளையம் தாண்டி 25 காவலர்கள் சூழ இருக்கும்போது எப்படி இந்த சம்பவம் நடந்தது?

முன்பு ஒருவர் காலில் விழுந்து வணங்குவதுபோல் கேஜ்ரிவால் கண்ணில் மிளகாய்  பொடியை தூவியது நினைவிருக்கும்.

டெல்லியில் காவல் துறை மத்திய அரசின் கையில் உள்ளது கவனிக்கத் தக்கது.

பாஜகவின் மற்றொரு கோர முகத்தை இந்த சம்பவங்கள் காண்பிக்கின்றன.

கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் தான் 9 முறை தாக்கப்பட்டிருப்பதாகவும் இவ்விதம் நாட்டின் எந்த முதல் அமைச்சரும் நடத்தப்பட்டதில்லை என்றும்  முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பது வெட்கப்படத்தக்கது.  

தங்களுக்கு தொடர்பில்லை என்று பாஜக மறுக்கலாம்.

ஆனால் காவல்துறையை கையில் வைத்திருப்பவர்கள் நடந்த சம்பவத்துக்கு நாங்கள் பொறுப்பில்லை என்று சொல்ல முடியாது அல்லவா?