Home Blog Page 4

கிறிஸ்தவ நாடுகளில் பாதிப்புகள் அதிகமாக காரணம் என்ன?

கொரொனாவிற்கு மதசாயம் பூசக்கூடாதுதான்.

ஆனால் விளைவுகள் அடிப்படையில் பார்த்தால் கிறிஸ்தவ நாடுகள்தான் அதிகம் உயிர் இழப்பை சந்தித்து உள்ளன.

நோய் தலை காட்டிய சீனாவில்  மூன்றாயிரத்தை தாண்டி அதிகம் செல்லவில்லை. ஆனால் குறிப்பாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில்தான் இழப்புகள்  அதிகம். எங்கோ இடிக்கிறது போல் தோன்றுகிறது அல்லவா ?

இன்றுவரை உலகத்தில் மொத்தம் உயிர் இழப்புகள் ஒரு லட்சத்து எட்டாயிரம் என்றால் அதில் கிறிஸ்தவ நாடுகள் மட்டுமே ஏறத்தாழ 90000 அளவுக்கு பலியானவர்கள் இருக்கிறார்கள் என்பது எதேச்சையானதா என்ற  கேள்வியை எழுப்புகிறது.

அமெரிக்கா , இத்தாலி , ஸ்பெயின் , பிரான்ஸ் , இங்கிலாந்து , பெல்ஜியம் , ஜெர்மனி என்ற அந்த பட்டியல்தான் இந்த சிந்தனையை தூண்டுகிறது.

இதில் துளியும் சந்தேகப் பட ஏதுமில்லை என்பது புரிந்தாலும் இதுதான் உண்மை நிலை என்பதிலும் சந்தேகம் இல்லை.

இன்று ஈஸ்டர் திருநாள்.  ஏசுபிரான் உயிர்தெழுந்த நாளை உலகமெங்கும் கிறிஸ்தவர்கள் எழுச்சியுடன் கொண்டாடுவார்கள்.  ஆனால் இன்று எல்லா சர்ச்சுகளும் பாதிரியார்களைக் கொண்டே  வழிபாடை நிகழ்த்தி  பக்தர்களுக்கு இடம் இல்லாமல் செய்து விட்டார்கள்.

போப் ஆண்டவர் தனது ஆசி உரையை பக்தர்கள் இல்லாமல் நிகழ்த்தி வரலாற்றை ஏற்படுத்தி இருக்கிறார்.

இம்மாதம் கடைசிவரை  தடை நீடிக்கும் என்பதால் வர இருக்கும் ரம்ஜான் நோன்புகள் கூட அவரவர் வீட்டில் இருந்து கொண்டு  தொழுகை நடத்த வேண்டிய நிலைதான் தெரிகிறது.

கட்டுப்பாடு  நீடிக்கும் வரைதான் நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்பதால் தொடரட்டும் கட்டுப்பாடு என்பதுதான் எல்லாருடைய விருப்பமும்.

ஈஸ்டர் திருநாளை சர்ச்சில் கொண்டாட துடிக்கும் கிறிஸ்தவர்களால் கொறானா பரவும் ஆபத்து?

இத்தாலிக்கு அடுத்தபடி  அமெரிக்கா தான் கொரானாவால் பாதிக்கப்பட்ட நாடு.

அந்த நாட்டில் இருக்கும் யூதர்களும் கிறிஸ்தவர்களும் செல்வாக்கு மிக்கவர்கள். எல்லா மாநிலங்களும்  கடும் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கையில் ஒரு சில மாநிலங்களில் சில  யூதர்களும் கிறிஸ்தவர்களும் சமூக விலகலுக்கு எதிராக குரல் எழுப்பி இருக்கிறார்கள்.

வரும் ஞாயிறன்று  ஈஸ்டர் பண்டிகை வருகிறது. கான்சாஸ் மாநிலத்தில் எண்ணிக்கையை குறைத்து ஈஸ்டர் பண்டிகையை அனுமதிக்கலாமா என்று விவாதித்து வருகிறார்கள்.

உண்மையான கிறிஸ்தவர்கள் சர்ச்சில் இருக்கும்போது கொரானாவால் உயிர் இழந்தால் கவலைப் பட மாட்டார்கள் என்று லூசியானா நகர பாஸ்டர் ஒருவர் கூறினாராம்.

இதைப்போல் எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் இப்படியே தங்கள் மதத்தை பின் பற்றி கூட்டம் கூடினால் நோயை பரவாமல் தடுப்பது எப்படி?

மரணம் தாக்கியபின்னும் மதவெறி மாயவில்லையே ?!

கை குலுக்குவதை நிரந்தரமாகவே கைவிட்டு விடலாம்; தொற்று நோய் நிபுணர்

கை குலுக்கி வாழ்த்து சொல்வதை நிரந்தரமாகவே கைவிட்டு விடலாம் என்று பெருந்தொற்று நோய் பரவலுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் நிபுணர் அந்தோணி பாசி தெரிவித்திருக்கிறார்.

உலகமெங்கும் கைகுலுக்கி வாழ்த்து வணக்கம் தெரிவிப்பது காலம் காலமாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் கைகூப்பி வணக்கம் சொல்வது பாரம்பரிய நடைமுறை.

இன்றைய பெருந்தொற்று கொரானா பரவுவதை தடுக்கும் முயற்சியில்  உலகமே இயங்கி  வருகிறது.

கைகுலுக்குவது என்பது நோய் பரவலுக்கு வழி வகுக்கும் என்பது  இப்போது உறுதிப்  படுத்தப் பட்டுள்ளதால் அதை கைவிடுவது நல்லது என்ற கருத்து வலிமை பெற்று வருகிறது.

கொரானா பயம் நீங்கி பூரண நலம் பெற்ற பிறகும் கூட கை குலுக்குவதை கைவிட்டு விடுவதுதான் நல்லது.

ஏனெனில் கைகள்தான் அதிகம் வைரசால் பாதிக்கப்படும் உறுப்பாக இருக்கிறது.

கொரானாவால் விளைந்த நல்வினையாக கைகூப்புதல் நிலைக்கட்டுமே.

மத்திய அரசை எதிர்பார்க்காமல் ஊரடங்கை நீட்டித்த ஓடிஷா.. தமிழகத்தின் தடுமாற்றம்

மத்திய அரசை எதிர்பார்க்காமல் ஊரடங்கை  இம்மாதம்  30 ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறது ஓதிஷா மாநிலம்.

மத்திய அரசும் அதைத்தான் விரும்பும் . ஏனென்றால் இந்த கட்டுப் பாடுகளுக்கு எல்லாம்  மோடிதான் காரணம் என்ற மாயை விலகும் அல்லவா?

தமிழகம் இன்னும் ஒரு நிலை எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறது.

மத்திய அரசு என்ன நிலை எடுக்கப்போகிறது என்று 11 ம் தேதி வரை காத்திருக்க முடிவெடுத்து விட்டார்  எடப்பாடி  .

தெலுங்கானாவும் மகாராஷ்ட்ரா மாநிலமும் ஊரடங்கை நீட்டிப்பதை முடிவு செய்து விட்டனர்.

உண்மையில் இது மாநிலங்கள் முடிவு செய்ய வேண்டிய பிரச்னை.   அந்தந்த மாநிலத்தில் என்ன நிலவரம் உள்ளதோ அதைப்பொருத்து மாநிலங்கள் முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசு வழி காட்டலாம்.

ஆனால் இன்றைக்கு  நிலைமை தலைகீழாகி இருக்கிறது.

எல்லாவற்றையும் மத்திய அரசே முடிவு செய்யும் என்று மாநிலங்கள் காத்திருக்கின்றன.

இக்கட்டான நேரத்தில்  அரசியல் செய்யக் கூடாதுதான். ஆனால் அரசியல் செய்வது யார் என்பதுதான் பிரச்னை. 

மாநிலங்களில் அதிகாரங்களை  பறிப்பதா இப்போது முக்கியம். ஆனால் மருத்துவ அவசர நிலையை  பயன்படுத்தி அதிகாரங்களை பிடுங்கலாமா ?

லட்சக் கணக்கான கோடிகளை அவசர காலத்து தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புள்ள மத்திய அரசு பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு      நிதியான கேவலம் 7500  கோடியை வைத்துத் தானா செலவுகளை சமாளிக்கப்  போகிறது.மாநிலங்களுக்கு சேரவேண்டிய ஜிஎஸ்டி பங்குத் தொகையை தராமல் இருக்க வேண்டிய காரணம் என்ன? மாநிலங்களிடம் இருந்த அதிகாரத்தை பறித்து விட்டு அவர்களுக்கு பிச்சை போடுவதைப் போல் மன்றாட வைத்து விட்டீர்களே இதுவா கூட்டாட்சித் தத்துவம்.?

உயிரா வாழ்வாதாரமா என்று கேள்விக்குறியில் இருக்கிறது ஊரடங்கு நீட்டிப்பு .

நோய்ப்பரவல் மூன்றாம் கட்டத்தை எட்டி விடக் கூடாது . எனவே இந்த நேரத்தில் ஊரடங்கை நீட்டிப்பதே அறிவுடைமை.

ஆனால் கணிசமான சமுதாய பிரிவினர் பாதிக்கப் படக் கூடாது என்பதற்காக சில விதிவிலக்குகளை அரசு பரிசீலிக்கலாம்.

முதலில் சுயமாக முடிவெடுக்க தயாராகட்டும் எடப்பாடி!.

பிராமண சங்கம் கேட்டது உடனே கொடுத்தார் எடப்பாடி ?

தங்களுக்கு உதவித்துகை வேண்டும் என்று அர்ச்சகர் சங்கம் கேட்டது குறித்து முன்பே எழுதியிருந்தோம்.

அதையே பிராமண சங்கம் கேட்டது. மறுக்க முடியுமா எடப்பாடியால்?

உடனே அறிவித்து விட்டார் அர்ச்சகர்களுக்கு உதவிதுகை ரூ ஆயிரம்  என்று. போனால் போகிறது என்று பூசாரிகளுக்கும் உண்டு என்றும் அறிவித்து இருக்கிறார்.

அவர்களுக்கு அரசு இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்பதுதான் பொதுமேடையின் கருத்து. 

இறைப்பணி செய்யும் கோவில் பணியாளர்களுக்கு  தேவையானதை கொடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த கருத்து  வேறுபாடும் கிடையாது.

அதில் பாகுபாடு கூடாது என்பது மட்டுமே கோரிக்கை.

பள்ளிகளில்  காலை உணவுத் திட்டத்திற்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை என்றும் அதை எந்த தனியாரும் செய்யலாம் என்றும் அமைச்சர் ஓ எஸ் மணியன் சொன்னார்.

ஹரே க்ரிஷ்ணா இயக்கத்துக்கு ஆளுநர் தனது நிதியில் இருந்து ஐந்து கோடி கொடுத்தது எந்த வகையை சேர்ந்தது என்பதையும் அமைச்சர் விளக்கி  இருக்கலாம்.

பள்ளிகளில் மதிய உணவு தரும் அரசுக்கு காலை உணவு தர முடியாதா என்பதையும் அவர் விளக்கி இருக்கலாம்.

எப்படியோ அவா கேட்டா இவா கொடுத்தா ;நல்லாருங்கோ !

இதைப்போல் மற்றவர்கள் கேட்கும்போதும் தந்தால் நல்லது.

தூய்மைப் பணி; மாலை போதாது சம்பளத்தை இரட்டிப்பாக்குங்கள்?

இக்கட்டான சமயத்தில் தூய்மைப் பணி செய்யும் தொழிலாளர்கள் மீது பொதுமக்களுக்கு வந்திருக்கும் மரியாதை மகிழ்ச்சி அளிக்கிறது.

பல இடங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கு மக்கள் மாலை அணிவித்து பாத பூஜை செய்து உடைகள் வழங்கி  தங்கள் நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.

இது வரவேற்க வேண்டிய மனப்போக்கு.

தூய்மைத் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கும் மனிதர்களை இரண்டாம் தர மனிதர்களாகவே நடத்தி வந்திருக்கிறோம்.

ஏன் மக்கள் மனதில் இந்த மாற்றம் என்றால் அது கொரானா தந்தது என்பதுதான் பதில்.

இந்த மாற்றம் நிலைக்க வேண்டும். தூய்மைப் பணிக்கு பட்டதாரிகள் போட்டி போடுகிறார்கள்.  வேலை இல்லா திண்டாட்டம் உச்சத்தில். எப்படி சமாளிக்க போகிறோம்?

இந்த மனமாற்றம் மக்களிடம் ஏற்பட்டால் போதாது. அரசிடம் ஏற்பட வேண்டும். அவர்களுக்கு உரிய ஊதியத்தை உடனடியாக இரட்டிப்பாக்க வேண்டும். ஓய்வூதியம் தர வேண்டும்.

அப்போதுதான் இந்த தொழிலுக்கு  மரியாதை கூடும். 

கீழ்த்தட்டு மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்கிற அரசுகள் இதைத்தான் செய்ய வேண்டும்.

பொருளாதார சமத்துவம் வரவேண்டும் என்றால் தொழில்களுக்கு இடையே ஊதிய சமச்சீர் நிலவ வேண்டும். 

ஆங்காங்கே நகர்ப்புற சங்கங்கள் இதற்கு வழி காட்ட வேண்டும். அவர்கள் ஊதிய உயர்வு அளிக்க அரசிடம் அனுமதி பெற தேவையில்லை.

இவர்களை பார்த்து நாளை அரசும் தர வேண்டிய நிலையை ஏற்படுத்துங்கள்.

தூய்மைப் பணி தொழிலாளர்களை மனிதப் பண்புடம் நடத்த வேண்டும் என்ற உணர்வு வந்திருப்பது நல்லதே.

வாழ்க கொரானா தந்த விழிப்புணர்வு.

டிரம்பின் மிரட்டலும் மோடியின் மனிதாபிமானமும் ?!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு விடுத்த எச்சரிக்கை அநாகரிகமானது.

ஹைட்ராக்ஸி குளோரோகுய்ன் மாத்திரைகள் இந்தியாவில்  மலேரியாவுக்கு பயன்படுத்தப் படும் மருந்து. இப்போது கொரானா வுக்கு மருந்து கண்டுபிடிக்கப் படாத நிலையில் அந்த மாத்திரைகள் பயன் அளிக்கும் என்று அமெரிக்கவும் ஐரோப்பிய நாடுகளும் நம்புகின்றன.

இந்தியாவில் அதிக அளவின் தயாராகும் அந்த மருந்துக்கு உலக அளவில் பெருத்த தேவை ஏற்பட்டிருக்கிறது.

இப்போது அமெரிக்க அதிகமாக பாதிக்கப் பட்டிருக்கிறது. அந்த  மருந்து  தேவைக்காக டிரம்ப் நேரடியாக மோடியிடம் பேசியிருக்கிறார்.

நேற்று பேசிய நிலையில் இன்று டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் இந்தியா நாங்கள் கேட்டதை கொடுக்க வில்லை என்றால் பரவாயில்லை. ஆனால் அதற்கு அவர்கள் பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்று மிரட்டி இருக்கிறார். இப்படி ஒரு அதிபர் வெளிப்படையாக மிரட்டி  பேசியது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி  இருக்கிறது.

ஆனால்  இந்தியா  அதை பொருட் படுத்தாமல் மேற்படி மருந்தை ஏற்றுமதி செய்ய விதிக்கப் பட்டிருந்த தடையை இன்று நீக்கி உத்தரவிட்டிருக்கிறது.

இது  முழுதும் மனிதாபிமானம் . நேரம் வரும்போது இத்தகைய மிரட்டலுக்கு தக்க பதிலடியை இந்தியா கொடுக்கும் என்று நம்புவோம்.

இத்தனைக்கும் அமெரிக்க அந்த மருந்தை 29 மில்லியன் அளவுக்கு ஸ்டாக் வைத் திருக்கிறது.

பார்ப்பதற்கு டிரம்பின்  மிரட்டலுக்கு மோடி பணிந்தது போன்ற தோற்றம் தெரிந்தாலும் உண்மையில் இது இந்தியாவின் மனிதாபிமான நடவடிக்கை என்பதை  உலகம் அறியும்.

ஏனெனில் தனக்கு தேவையான மருந்தை ஸ்டாக் வைத்துக் கொண்டுதான் இந்தியா தடையை  விலக்கி இருக்கிறது.

மோடியை மிரட்ட டிரம்ப்பால் முடியுமா ?

மோடிக்குப் பின்னால் 130  கோடி இந்தியர்கள்.

கொரானாவில் அரசியல் செய்யுமளவு மலிவானவரா மோடி ?!

எம்பிக்களை இனி யார் மதிப்பார்கள்.. பாஜகவின் திட்டம்தான் என்ன?

கொரானா வந்தாலும் வந்தது எதில்தான் அரசியல் என்றில்லை. எல்லாவற்றிலும் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இன்று மத்திய அரசு பிரதமர், குடியரசுத் தலைவர் அமைச்சர்கள் மற்றும் எம்பிக்களின் சம்பளத்தில் முப்பது சதம் குறைத்து அவசர சட்டம் கொண்டு வந்திருக்கிறது .

அதில்கூட யாரும் பெருத்த ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. எல்லாரும் நிதி அளிக்கும்போது அவர்களும் அளிப்பதாக இருக்கட்டும் .

ஆனால் எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு  நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்திருப்பதில்தான் சந்தேகம் வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தடையை  நீடிப்பார்களா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஏதாவது காரணம் சொல்லி இந்த நிதி ஒதுக்கும் அதிகாரத்தை பறித்து விடுவார்களா?

மக்கள்  பிரதிநிதிகள்  அந்த நிதியை தொகுதி மேம்பாட்டுக்குத்தானே செலவு செய்யப் போகிறாகள். அவர்களுக்கும் மக்களுக்கும் இருக்கும் தொடர்பு என்பது  இந்த நிதிதான். இது அல்லாமல் தொகுதியைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேச முடியும் என்பது மட்டுமே மிச்சம் இருக்க போகிறது.

இது ஒரு வகையில் எம்பிக்களின் பல்லைப் பிடுங்கும் வேலைதான்.

எனவே மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதனால் பாதிக்கப்  படப் போவது எங்கள் எம்பிக்களும்தானே என்று நீங்கள் சொல்ல முடியாது. ஏனென்றால் நீங்கள் அதிகாரத்தில் இருக்கிறீர்கள்.

எதிர்க்கட்சி எம்பிக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

நோய் தடுப்புக்கு நிதி தேவை. அதற்காக மக்கள் பிரதிநிதிகளின் உரிமை  பறிப்பில்  ஈடுபடக் கூடாது. 

சோதனையான இந்த நேரத்தில் மத்திய  அரசை விமர்சிக்கும் வகையில் நடந்து கொள் வதை ஒரு பொறுப்புள்ள அரசு தவிர்க்க வேண்டும்.

பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேசினார். இதுபற்றி பேசினாரா? முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தொடர்பு உடையவர்களை கலந்து கொண்டு எடுத்தால் அதில் எல்லாரும் பங்கு பெற்ற நிறைவு இருக்கும்.

இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் உங்களிடம் இருக்கும்போது ஆலோசிப்பதில்  ஏன் தயக்கம்?

மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்க்க கோரும் எடப்பாடி யாகம் நடத்த அனுமதித்தது ஏன்?

கொரானாவை தடுக்க  தமிழ்நாடு  அரசு கோவில்களில் யாகங்களை நடத்த அனுமதி அளித்து உள்ளதாக தெரிகிறது.

ஒரு பக்கம் மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்க்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுக்கிறார். அது எல்லா மதங்களுக்கும் பொருந்தும். பெரும்பாலும் இப்போது ஞாயிறன்று கிறிஸ்தவர்கள் சர்ச்சில் கூடாமல் வீட்டில்  இருந்தபடியே ஜபம் செய்கிறார்கள். முஸ்லிம்கள் வெள்ளிக் கிழமைகளில் வீட்டில் இருந்தபடியே  தொழுது  பள்ளிவாசல்களை தவிர்க்கிறார்கள்.

இன்று தென்காசியில்  மட்டும் பள்ளிவாசலில் தொழுகை நடத்தியதற்கு  முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாகை நிஜாமுதீன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

எனவே கோவில்களில் யாகம் நடத்த கொடுத்த அனுமதியை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

வழக்கமாக நடைபெறும் பூசைகளில் நோய் தடுப்பு பிரார்த்தனைகளை அர்ச்கர்கள் செய்தால் போதாதா ?

அரசு மதங்களில் இருந்தும் கடவுள்களிடம் இருந்தும் கொரானாவை ஒதுக்கி  வைக்க வேண்டும்.!

9 நிமிட மின்சார நிறுத்தம் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்புவோம்?

ஆனாலும் சிலர் அச்சமூட்டு கின்றனர். அதாவது திடீர் என்று மின்சார தேவை குறையும்போது அதனால் மின் விநியோக சாதனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிலர் கூறுகின்றனர்.

அதுவும் மராட்டிய மின்துறை அமைச்சர் நிதின் ராவத் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகிறார். இதே கருத்தை சசிதரூரும் ஜய்ராம் ரமேஷும் வெளியிட்டுள்ளனர் .

எல்லா நல்லபடியாக நடக்கும் என்று அமைச்சர் தங்கமணி இன்று நம்பிக்கை தருகிறார்.

ஆனால் மக்கள் இந்த மின்சார நிறுத்தத்தை  கடைபிடிக்க வில்லை என்றால் ஒரு பிரச்னையும் ஏற்படாது.

ஆனாலும் கட்சி  பாகுபாடு பார்க்காமல் எல்லாரும் விளக்கை அணைப்பார்கள் என்றுதான் எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள்.

அதற்குள் சிலர் இந்த ஒன்பது நிமிட ஒளியணைத்தல் மற்றும் ஒளி பாய்ச்சுதல் ஆகியவற்றால் ஏற்படும் நன்மைகளை விஞ்ஞான ரீதியாக விவரிக்க தொடங்கி விட்டார்கள்.

அதைத்தான் விளங்கிக் கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லை.

பார்க்கலாம் என்ன நடக்கிறது  இன்று என்று?