Home Blog Page 40

முகத்தை மூடும் உடை அணிய தடை விதித்த முஸ்லிம் கல்விக்கழகம்??!!

கோழிக்கோட்டில் இயங்கும் முஸ்லிம் கல்விக் கழகத்தின் தலைவர் கபூர் (Muslim Educational Society ) ஒரு சுற்றறிக்கையை தன் கீழ் இயங்கும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் அனுப்பி இருந்தார்.

அதில் யாரும் முகத்தை மூடும் உடை அணியக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதற்கு சன்னி மாணவர்கள் பெடரேஷன் ஆட்சேபணை தெரிவித்து இருக்கிறது. முன்பு அடிப்படை வாதிகளான சலாபி என்னும் பிரிவுக்கு ஆதரவு தந்த கல்விக் கழகம் இப்போது எதற்கு இந்த தடை விதிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறது.

பலர் கபூருக்கு மிரட்டல் தொலைபேசி அழைப்புகளை அனுப்பி வருவதால் அவர் காவல் துறையில் புகார் தெரிவித்திருக்கிறார.

இடையில் பர்க்கா என்னும் உடை பயங்கரவாதத்தின் அடையாளம் என்று கூறி பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோம் என்பவர் எரிகிற திரியில் எண்ணையை ஊற்றி இருக்கிறார்.

கள்ள வாக்கு போடுவதற்கு பர்க்கா உடை பயன்படுத்தப்படுகிறது என்பதும் அவரது வாதம்.

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பின்னர் இலங்கை அரசு அதை சாக்காக பயன்படுத்தி முஸ்லிம்களின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.  சாதாரண காலத்தில் தடை விதிக்க முடியாது. இப்போது அங்கே முகத்தை மூடும் உடை அணிய தடை விதிக்கப்பட்ட போது எதிர்ப்பதற்கு ஆள் இல்லை.

எந்த மத தீவிரவாதமும் கட்டுப்பாட்டில் இல்லையென்றால் பயங்கர வாதமாகத்தான்  மாறும்.

தீவிரவாதம் என்றால் கொள்கையில் மிகவும் தீவிரமாக இருப்பது. அல்லது தான் கொண்ட கொள்கை மட்டுமே சரி என்று நம்புவது. அது கூட தவறு இல்லை.

ஆனால் அதுவே சிறிது காலம் சென்று அந்த கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்களை அடிமைப்படுத்த அல்லது இல்லாமல் செய்ய முயற்சிக்கும்போது அது பயங்கரவாத நடவடிக்கையாக மாறுகிறது.

தவிரவும் உடை பற்றி இஸ்லாம் முஸ்லிம்களுக்கு விதித்திருக்கும் அறிவுரைகள் தவிர்க்கக் கூடாதவையா அல்லது விருப்பம் சார்ந்ததா என்பதையும் அந்த சமுதாயம் தீர்மானிக்க வேண்டும். பாலைவனங்களில் வாழ்பவர்கள் அணியும் உடையை குளிர் பிரதேசங்களில் சமவெளி பிரதேசங்களில்  வாழ்பவர்கள் அணிய வேண்டுமா என்ன? 

பொதுவாக இஸ்லாம் சொல்வதாக நாம் அறிந்திருப்பது பெண்கள் உடை அணியும்போது ஆண்கள் மனதில்  சலனம் ஏற்படுத்தா வண்ணம் அணிய வேண்டும் என்பதுதான்.

சிறிது காலம் முன்பு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகள் முகத்தை மூடி உடை அணிந்து வந்தபோது எழுந்த விமர்சனத்தை அவர் தனது இன்னொரு மகளும் மனைவியும் முகத்தை மூடாமல் பொதுவெளியில் நடமாடிய புகைப்படத்தை வெளியிட்டு, உடை அவரவர் விருப்பம் என்பதை மிகவும் நாகரிகமாக பதில் சொன்னார்.

இது பற்றி கருத்து சொன்ன ஜாவீத் அக்தர் என்ற பிரபல இந்தி திரைப்பட எழுத்தாளர் பர்க்காவையும் நீக்கட்டும் ஜுன்க்ஹிட் என்ற இந்து பெண்கள் முகத்தை மூடும் உடையையும் நீக்கட்டும் என்றார். வடநாட்டில் பல மாநிலங்களில் இந்து பெண்கள் முகத்தை சேலை தலைப்பால் மூடிக் கொள்வார்கள். அவரே ஈராக் பற்றியும் குறிப்பிட்டார். ஈராக் அடிப்படை முஸ்லிம் நாடு என்றாலும் அங்கு முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் உடை அணிவதில்லை என்றார். பல முஸ்லிம் நாடுகள் பெண்கள் சுதந்திரம் பற்றி வெவ்வேறு விதமான பழக்கங்களை கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம் சமுதாயமே அது பற்றி சிந்தித்து முடிவேடுப்பதுதான் நல்லதாகவும்  சரியானதாகவும் இருக்கும்.

அது சரி. அவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை யார் களைவது?

ஆரம்பிச்சிட்டாங்கய்யா??! மழை வேண்டி யாகம் நடத்த சொன்னதா பாஜக??!

தமிழகத்தில் பருவ மழை பெய்வதற்காக முக்கிய கோவில்களில் யாகம் நடத்த அறநிலையத்துறை அனையர் பணிந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

சொந்த புத்தியில் அதிமுக அறநிலைய துறை அமைச்சர் இந்த முடிவை எடுத்ததாக தெரியவில்லை .

இதுவரை இல்லாதவகையில் இப்போது யாகம் செய்ய அவசியம் என்ன?

அந்தந்த கோவில்களின் பழக்க வழக்கத்துக்கு உட்பட்டு நடத்த வேண்டும் என்று சொல்லி விட்டு பெண் ஏன் யாகம் நடத்த சொல்ல வேண்டும்? அந்தந்த வழக்கம் யாகத்தில் இருந்து வேறுபட்டு இருந்தால் ஏன் யாகம் செய்ய வேண்டும்? யாகம் பார்ப்பனர்களுக்கு மட்டுமே சொந்தமான ஒன்று. அதனால் பலன் அடைபவர்களும் அவர்களாகத்தான் இருப்பார்கள்.     

                         ஓதுவார்களைக் கொண்டு சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய ஏழாம் திருமுறை மழை வேண்டும் பதிகம் ஓதுதல் செய்ய வேண்டும் என்பதும் அதில் ஒன்று.  எத்தனை கோவில்களில் ஓதுவார்கள் இருக்கிறார்கள்.? இருப்பவர்களை எப்படி எல்லாம் வழிபாட்டில் பயன்படுத்துகிறார்கள்? தீண்டத் தகாதவர்களைப்போல் வெளியே நிறுத்தி வைத்து அவமானப்படுத்துவார்கள். அதுதானே நடக்கிறது.

தமிழுக்கு உரிய இடம் எந்தக் கோவிலில் இருக்கிறது?

திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்தபிறகு அரசு அலுவலகங்களில் வளாகங்களில் எந்த மத  வழிபாட்டு சின்னங்களும் இருக்கக் கூடாது என்று சுற்றறிக்கை ஆணை பிறப்பிக்கப் பட்டு அமுலில் இருக்கிறது.

இன்றைய ஆட்சியாளர்கள் பாஜகவுக்கு அடிவருடுபவர்கள் ஆக இருக்கின்ற படியால் அதிகாரத்தை யாரோ பயன்படுத்துகிறார்கள். அறநிலையத்துறை அமைச்சர் இருக்கிறாரா? ஆணையர் யார் சொல்லி இந்த முடிவை எடுத்தார்?

விட்டால் தவளைக்கும் ஓணானுக்கும் திருமணம் செய்விக்கும் நிகழ்ச்சியை கூட கோவில்களில் நடத்த துவங்கி விடுவார்கள். 

கடவுள் நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்கி கோவில்களில் பரப்புரை நிகழ்த்தலாம்.

கர்நாடகாவில் இருப்பதை போன்று மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் இங்கே நிறைவேற்ற வேண்டும்.

கோவில்களுக்கு சென்று மழை வேண்டி கூட்டு வழிபாடு நடத்துங்கள். இறைவன் அருள்புரிய மாட்டாரா?

எவருடைய நம்பிக்கையையும் விமர்சிப்பது நமது வேலையல்ல. கடவுள் நம்பிக்கை கூட அறிவு சார்ந்து இருக்க வேண்டும். அறிவுக்கும் நம்பிக்கைக்கும் தொடர்பு இருக்கக் கூடாது என்பவர்கள்தான் பயங்கரவாதிகள்.

ஒன்று மட்டும் தெளிவு. நடப்பது தமிழர்கள் ஆட்சியல்ல. 

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத நீதிபதிகள் ஆசிரியர்கள்?!

இரண்டு செய்திகள் மிகவும் கவலை தருபவை.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதால் திருவண்ணாமலை மாவட்டம் பெருங்களத்தூர் கஸ்துரிபாய்காந்தி பாலிகா வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது .

அது மட்டுமல்லாமல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்களை அறிவிப்பு அனுப்பி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற இயலாதது தகுதி குறைவு என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கு யார் காரணம்?

அடுத்து, தமிழகம் மற்றும் புதுவையில் காலியாக இருக்கும் 31 மாவட்ட நீதிபதிகள் பதவிக்கு 4120 பேர் தேர்வு எழுதியதில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இதில் அதிர்ச்சி என்னவென்றால் இந்த தேர்வு எழுதியவர்களில் 450க்கும் மேற்பட்டோர் சார்பு நீதிபதிகளும் குற்றவியல் நீதிமன்ற நடுவர்களும் ஆவார்கள். மற்றவர்கள் வழக்கறிஞர்கள்.

முதல் நிலை தேர்வில் யாரும் தேறாததால் முதன்மை தேர்வுக்கு செல்ல யாரும் இல்லை. எனவே மீண்டும் முதல்நிலை தேர்வு நடத்தியாக வேண்டும்.

தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் சொன்னார்கள். மேலும் தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கப் படுவதும் ஒரு காரணம்.

2005 ஆண்டு மற்றும் 2014ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் கலந்து கொண்ட 3000ம் பேர்களில் முறையே 16 பேரும் 23 பேருமாக தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

வேறொரு கோணத்தில் பார்த்தால் தகுதி இல்லாதவர்கள்தான் நீதிபதிகளாக பணியாற்றுகிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

நமது தேர்வு முறையில் மாற்றம் தேவை!

விவசாயிகளிடம் கோடிக்கணக்கில் இழப்பீடு கேட்ட பெப்சிகோ வழக்கு வாபஸ் ?!

1989ல் தொடங்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனமான பெப்சிகோ கம்பெனி விவசாயிகளிடம் உருளைக்கிழங்கு FC 5 ரக விதைகளை கொடுத்து அவர்கள் விளைவித்த உருளைக்கிழங்குகளை கம்பெனியே வாங்கி அதை சிப்ஸ் ஆக விற்பனை செய்து வந்தார்கள்.

அந்த ரக விதைகள் பலருக்கு கைமாறி புது வடிவம் பெற்றன. விவசாயிகளும் பெருத்து விட்டதால் பல நிறுவனங்களும் அதை கொள்முதல் செய்ய துவங்கினார்கள்.

சந்தைக்கு தனக்கு போட்டியாக வந்த உருளை கிழங்கு பெப்சியை உறுத்த தன் ஆட்களை கொண்டு அதை கொள்முதல் செய்து அதை கம்பெனி மூலமாகவே ஆய்வு  செய்து அது தங்கள் கம்பெனி கொடுத்த விதையின் பகுதிதான் என்ற அடிப்படையில் நான்கு விவசாயிகள் மீது தலா ஒரு கோடி இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

வேறு நாட்டில் இது சாத்தியமா என்பது தெரியவில்லை.

நம்நாட்டு விவசாயிகளுக்கு எதிராக நம்நாட்டு நீதிமன்றத்தில் இழப்பீடு வழக்கு அதுவும் கோடிக்கணக்கில் கேட்டு வழக்குப் போடுபவர்கள் நெஞ்சில் ஈரமில்லாதவர்களாக தான் இருக்க முடியும்.

எதிர்ப்பு கிளம்பியவுடன் பெப்சிகோ தன் வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டிருக்கிறது.

லேஸ் LAYS சிப்ஸ் பிரியர்கள் இனி அதை தொடுவர்களா?

பாஜகவில் இணைக்க- அதிமுகவை துண்டாட அடித்தளம் இடும் ஒபிஎஸ்-ன் அறிக்கை??!!

மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஒபிஎஸ் குடும்பத்துடன் பாஜகவில் இணையப்போகிறார் என்ற தங்க தமிழ்ச்செல்வனின் அறிக்கை பற்றி ஒபிஎஸ் பதில் சொன்னபோது அது முட்டாள்தனமானது என்று கூறினார்.

அப்படியே விட்டிருந்தால் கூட பிரச்னை ஆகியிருக்காது.

ஆனால் இரண்டு நாள் கழித்து அவர் கொடுத்த அறிக்கைதான் அவர் தான் மட்டும் சேரப் போவதில்லை தன் கட்சியையே கொண்டு போய் பாஜக விடம் இணைக்க திட்டமிடுகிறார் கேள்வியை எழுப்பி இருக்கிறது.

தன் அறிக்கையில் பாஜக வுக்கும் அதிமுகவுக்கும் இருக்கும் கொள்கை முரண்பாடுகளை பற்றி ஒரு வரி கூட இல்லை. அதிமுக என்பது திராவிட இயக்கத்தின் கூறு என்பதையும் பெரியார் அண்ணா காட்டிய வழியில் செல்லும் இயக்கம் என்பதையும் மறந்தும் கூட சுட்டிக் காட்டவில்லை.

ஏன் எம்ஜிஆர் எந்த வழியில் கட்சியை கட்டமைத்தார் என்பதையும் வலியுறுத்தி கூறவில்லை.

மாறாக எவ்வாறெல்லாம் ஜெயலலிதா பாஜக வோடு மோடியோடு உறவாடினார் நல்ல நட்பு வைத்திருந்தார் என்பதையே கோடிட்டு காட்டுகிறார்.

தலைவி மதித்த மோடியை இவரும் இவர் இயக்கமும் மதிக்கிறார்களாம்.  அதிமுகவின் எதிர்காலத்திற்கு உகந்த முடிவாம். 1998ல் பாஜக வோடு கூட்டணி வைத்தது, 2004ல் கூட்டணி வைத்து 7 இடங்களை வழங்கியது மட்டுமல்ல எல்லாவற்றுக்கும் காரணம் பாஜக வுடன் அதிமுகவுக்கு இருக்கிற தேசப்பற்று தெய்வ நம்பிக்கை போன்ற ஒத்த கொள்கைகளும் காரணங்களாம் . 

   இனிமேல் பெரியார் அண்ணா படங்களுக்கு பதில் கோல்வால்கர் தீனதயாள் உபாத்யாய படங்களை அதிமுக விளம்பரங்களில் எதிர்பார்க்கலாமா? 

ஜெயலலிதா வகுத்து கொடுத்த பாதத் தடத்தில் அதிமுகவின் பிரகாசமான எதிர்காலத்துக்காக இவர்கள் மேற்கொண்ட இணக்கம் தான் கூட்டணி என்கிறார்.

மோடியா லேடியா என்று கேட்டது, பாஜக அரசின் பல திட்டங்களை ஏற்க மறுத்தது, வாஜ்பாய் அரசை கவிழ்த்தது போன்ற ஜெயலலிதாவின் பாஜக எதிர்ப்பு நடவடிக்கைகள் எதுவும் ஒபிஎஸ் க்கு நினைவுக்கு வரவில்லை.

வேறு கட்சிக்கு போகப்போகிறேன் என்பதெல்லாம் வதந்தி வடிகட்டிய பொய் என்று கதறும் ஒபிஎஸ் ஏன் இத்தனை நாளாக ஜூனியர் விகடன் பத்திரிகை விலாவாரியாக பியுஷ் கோயலிடம் வாரணாசியில் இவரும் இவர் குடும்பத்தினரும் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியும் இவருக்கு பாஜக மாநில தலைவர் பதவியும் கேட்டதாக எழுதி இருப்பதற்கு கண்டனம் தெரிவித்தோ  அவதூறு வழக்கு போட்டோ நடவடிக்கை எடுக்கவில்லை. 

உங்களின் 40 எம்எல்ஏக்கள் என்னிடம் தொடர்பில் இருக்கிறார்கள் என்று மிரட்டிய மோடியின் கட்சி இவரை என்ன மிரட்டி இப்படியெல்லாம் பேச வைத்திருக்கிறது ?

சுயநலத்திற்காக எதையும் செய்யத் துணிந்தவர் ஒபிஎஸ் என்பதை நாடு நன்கு அறிந்திருக்கிறது.

அது திராவிட இயக்கத்தை பிளவு படுத்தி அதில் ஒரு பகுதியை காவிக்கட்சியுடன் இணைக்கும் எல்லைக்கும் கூட செல்லும் என்ற அச்சம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

தப்புத்தாளங்கள் தமிழக அரசியலில் கேட்க ஆரம்பித்துவிட்டன. 

கரை வேட்டிக்கு சண்டை போடும் சட்டம் தெரியாத சட்ட அமைச்சர்?!!

தினகரன் கட்சிக்காரர்கள் அதிமுக-வினர் கட்டும் கரை வேட்டியை கட்டக்கூடாது என்று தேர்தல் கமிஷனில் மனு கொடுத்திருக்கும் சட்ட அமைச்சர் சிவி சண்முகத்தின் செயல் அவர் சட்டம் தெரிந்தவர்தானா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

அரசியல் கட்சிகள் பெயரையும் கொடியையும் மட்டும்தான் பதிவு செய்கின்றன.  என்ன கலரில் உடை உடுத்தலாம் என்றோ வேட்டி கட்டலாம் என்றோ பதிவு செய்வது கிடையாது.

அதேபோல் கட்சிகள் பிளவு பிளவுப்படும்போது பொதுவான தலைவர்களின் படங்களை எல்லாரும்தான் பயன்படுத்துகிறார்கள். பெரியார் அண்ணா படங்களை திமுக அதிமுக மதிமுக தேமுதிக என எல்லா திராவிட கட்சிகளும்தான் பயன்படுத்துகிறார்கள் .

அதிமுக -அமுமுக கொடிகளே வேறுதான். திமுகவின் கருப்பு சிவப்பு கொடியைத்தான் அண்ணாவின் படத்தை மட்டும் வெள்ளையில் போட்டு  பயன்படுத்தினார் எம்ஜியார். தடுக்க முடிந்ததா?

அமைச்சர் மணிகண்டன் இதேபோல் முன்பு கரை வேட்டி கட்டினால் உருவுங்கள் என்று பேசினார். முடிந்ததா?

தமிழ்நாட்டு உரிமைகளை பாதுகாக்க வேண்டி சட்ட போராட்டம் நடத்த வேண்டிய சட்ட அமைச்சர் சட்டம் தெரியாமல் கரை வேட்டிக்கு தடை கோரி நடவடிக்கை எடுக்க நேரத்தை வீணடிப்பதும் இப்படிப்பட்ட சட்ட அமைச்சரை பெற்றிருப்பதும் தமிழர்களின் தலை எழுத்து என்று நொந்து கொள்வதை விட நாம் என்ன செய்ய முடியும்?

எடப்பாடி ஆட்சி கவிழுமா தொடருமா??!

திமுக பொருளாளர் துரைமுருகன் மே மாதம் 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்தபிறகு எடப்பாடி ஆட்சி தூக்கி எறியப்படும் திமுக ஆட்சி மலரும் என்று பேசியிருக்கிறார்.

அதிமுக அமைச்சர் ஜெயகுமார் அதை மறுத்து இன்னும் இரண்டாண்டுகள் இந்த ஆட்சி தொடரும் என்றும் திமுகவின் கனவு நிறைவேறாது என்றும் பேசியிருக்கிறார்.

ஆட்சியை காக்க எடப்பாடி போராடுவதன் விளைவுதான் மூன்று எம் எல் ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை. அவருக்கே நம்பிக்கை இல்லாமல்தானே நடவடிக்கை எடுக்கிறார் தாமதமாக.

இப்போது எடப்பாடிக்கு இருக்கும் ஆதரவு வெறும் 109 உறுப்பினர்கள் மட்டுமே.    எப்படியாவது பெரும்பான்மை நீடிக்க குறைந்தது 8 இடங்களில் ஆவது அவர் வெற்றி பெற வேண்டும். முடியுமா?

ஓட்டுக்கு ரூபாய் 2000 வீதம் கொடுத்துமே மக்கள் மாற்றி வாக்களித்திருக்கிறார்கள் என்றால் அதிருப்தியின் அளவை சொல்லவும் வேண்டுமா?

உச்சநீதிமன்றம் 11 எம் எல் ஏக்கள் தகுதி இழப்பு வழக்கில் தீர்ப்பு சொல்லியாக வேண்டும். அதில் பாதகமாக வந்தால் ஈடு கட்ட எடப்பாடியிடம் எண்ணிக்கை இல்லை.

தினகரன் நாற்பது முதல் ஐம்பது லட்சம் வரை வாக்குகள் வாங்கிவிட்டால் கூட  அணிமாற்றங்கள் தவிர்க்க முடியாதது ஆகிவிடும்.

எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும் தேர்தல் முடிவுக்கு பிறகு எடப்பாடி அரசு தேறுவது கடினம்.

40 திரிணாமுல் எம் எல் ஏக்களை விலை கொடுத்து வாங்கிவிட்டாரா மோடி?!!

மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 40 சட்ட மன்ற உறுப்பினர்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் பாராளுமன்ற தேர்தல் தீர்ப்பு வந்தவுடன் உங்களை கைவிட்டு விடுவார்கள் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மோடி அவர்களை விலை கொடுத்து வாங்கிவிட்டாரா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது அல்லவா? எப்படி அவ்வளவு உறுதியாக கூறுகிறார்?

தான் வெற்றி பெற என்னவேண்டுமானாலும் செய்வார் மோடி என்று இதன் மூலம் மீண்டும் உறுதிபடுத்தி இருக்கிறார் மோடி.

ஒரு பிரதமர் இந்த அளவு தரம் தாழ்ந்து கட்சி தாவலை ஊக்குவிக்கும் வகையில் பேசுவது இதுவரை நடந்திராதது.

வங்க மக்கள் மம்தாவின் மீது வைத்த நம்பிக்கையை அவர் காப்பாற்றவில்லை என்றால் தேர்தலில் மக்கள் தீர்ப்பளிக்க போகிறார்கள்.

ஆனால் திரிணாமுல் எம் எல் ஏக்கள் தன்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்று சொல்லும் பிரதமர் அவர்களிடம் என்ன சொல்லி இருக்க வேண்டும்? அதிருப்தி  இருந்தால் கட்சியை விட்டு உடனே வெளியேறுங்கள் என்றுதானே சொல்லி இருக்க வேண்டும். அதை விடுத்து தேர்தல் முடிவுக்குப் பின்னர் வெளியே வருவார்கள் என்றால் அவர்கள் தேர்தல் முடிவு மம்தாவிற்கு சாதகமாக இருந்தால் வெளியே வர மாட்டார்கள் என்றுதானே அர்த்தம்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் திருட்டுத்தனமாக தொடர்பில் இருக்கிறேன் என்று சொல்வதே ஒரு பிரதமருக்கு அழகா?

தனது தரத்தை நாளுக்கு நாள் மோடி தரம் தாழ்த்திக்கொண்டே போகிறார்.

தேர்தல் கமிஷனில் மமதா கட்சியினர் புகார் கொடுக்க இருக்கிறார்கள். மோடியை மிஞ்சியா தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கும்?

இந்திய அரசியலை அசிங்கப்படுத்தி வருகிறார் மோடி.

நரேந்திர மோடி என்ன சாதி என்ற விவாதம் எதற்கு??! தூண்டியது யார்??

முதல் முதலில் தன்னை ஒரு தேநீர் விற்பனையாளர் என்று பெருமையுடன் கூறிக்கொண்டவர் நரேந்திர மோடி.

பொதுவாக அவர் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவராக தான் பார்க்கப்படுகிறார். உண்மை என்ன?

அவர் ‘ காஞ்சி ‘ ‘Ghanchi ‘ என்ற வியாபாரிகளின் வகுப்பை சேர்ந்தவர். எண்ணெய் மற்றும் தானியங்கள் விற்பவர்கள் என்று பெயர். அவரது வகுப்பு முன்பு முற்பட்ட வகுப்பில் தான் இருந்திருக்கிறது. 

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 1999ல் தான் மோடியின் சாதி பிற்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. 

பொதுவாகவே வட மாநில மக்களின் சாதியை கேட்கவேண்டியதில்லை. ஏனென்றால் சாதி பெயருடன் கூடவே ஒட்டிக கொண்டிருக்கும். அதுபோல்தான் நரேந்திர தாஸ் தாமோதர்தாஸ் என்ற பெயரோடு அவரது சாதியான மோடியும் சேர்ந்தே பயணிக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் பெயரை விட சாதி பெயரால் தான் அவர் அதிகம் அறியப்படுகிறார்.

மாயாவதி தேர்தல் பிரசாரத்தில் மோடியின் சாதி குறித்து பேசியிருக்கிறார். அவர் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவர் அல்ல என்றும் அரசியலுக்காக தன் சாதியை பிற்பட்ட வகுப்பில் சேர்த்துக்கொண்டார் என்றும் பேசியிருக்கிறார்.

அதுவெல்லாம் முக்கியம் அல்ல. மோடி நாட்டுக்கு என்ன நன்மை செய்தார்? எது அதிகம்? நன்மையா தீமையா என்ற விவாதம்தான் முக்கியம்.

சாதியை ஒழிப்பேன் என்று சொல்லக்கூடியவர் அல்ல நரேந்திர மோடி. பிறகு அவர் எந்த சாதியாக இருந்தால் என்ன?

ஆனால் இந்த விவாதத்தை, தான் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவன் என்று கூறி, தூண்டி விட்டவர் மோடியேதான்.                       

மாண்புமிகு நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஒபிஎஸ்- இபிஎஸ் நடத்தும் நாடகம்??!!

ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மங்களை வெளிக்கொணருவதில் ஒபிஎஸ்-இபிஎஸ் இருவருக்கும் உண்மையிலேயே அக்கறை இருப்பதாக தெரியவில்லை.

இருந்திருந்தால் நேரடியாகவே வழக்கை சிபிஐ-க்கு விசாரிக்க சொல்லி கொடுத்திருப்பார்கள். அவர்கள் விசாரித்து குற்றம் இருந்தால் நடவடிக்கை இல்லையென்றால் வழக்கை முடித்து வைத்து பிரச்னையை எப்போதோ தீர்த் திருப்பார்கள்.

அப்படி முடிவதில் இருவருக்கும் உடன்பாடு இல்லாமல் தான் ஏதோ நாங்களும் நடவடிக்கை எடுத்தோம் என்று தொண்டர்களை சமாதானப்படுத்த இந்த கமிஷனை போட்டிருக்கிறார்கள் என்றுதான் பொதுமக்கள் கருதுகிறார்கள்.

விசாரணை கமிஷன் சட்டம் பிரிவு 5 (5)ன் படி விசாரணை வெளிப்படையாக நடத்த வேண்டியதுதானே. ஏன் பத்திரிகைகளை சாட்சிகளின் வாக்குமூலங்களை சுதந்திரமாக வெளியிட அனுமதிக்காமல் கமிஷன் அனுமதிக்கும் செய்திகளை மட்டும் வெளியிட அனுமதிக்கிறார்கள்? கலைஞர் மீதான சர்க்காரிய கமிஷன் வழக்கு வெளிப்படையாக நடந்து விசாரணை விபரங்கள் வெளிவந்து மக்களிடையே பெருத்த அலைகளை ஏற்படுத்த வில்லையா? ஆனால் அதன் அடிப்படையில் போடப்பட்ட வழக்கில் போதிய சாட்சியம் இல்லாமல் எம்ஜிஆர் தலைமையில் ஆன அரசு பத்து வருடங்கள் கிடப்பில் போட்டு பின்னர் சட்ட அறிவுரைப்படி வழக்கில் குற்ற வனைவு செய்ய முடியாமல் கைவிடப் பட்டது.

அப்போல்லோ மருத்துவமனை மருத்துவ ரீதியில் தவறிழைத்ததா என்பது விசாரணையின் ஓர் அம்சம் இல்லா நிலையில் மருத்துவர் குழுவை அமைப்பதில் ஏன் அரசு அத்துணை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது? அதனால் தான் இப்போது உச்சநீதிமன்றம் தடை கொடுத்து இருக்கிறது. இதனால் ஒபிஎஸ் சாட்சியம் அளிப்பதில் இருந்து  தப்பித்து அவகாசம் எடுத்து கொண்டிருக்கிறார்.

இருட்டு அறையில் கருப்பு பூனையை தேடும் முயற்சியில் விசாரணை கமிஷன் இயங்கி வருகிறது.

தேவையற்ற சாட்சிகள் நேரம் கடத்துவதற்குத்தான் பயன்படும். எம்ஜிஆர் காலத்து சிகிச்சை ஆவணங்களை கேட்கும்போது எதற்காக கேட்கிறார்கள் நோக்கம் என்ன கேள்வி எழுகிறது அல்லவா?

கமிசன் அமைத்த போதே 26/09/2017ல் திமுக தலைவர் ஸ்டாலின் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். அது இப்போது உண்மையாகிவிட்டது.

 சட்ட அமைச்சர் சிவி சண்முகம் சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணனை கஸ்டடியில் எடுத்து விசாரித்தால் உண்மை வெளியே வந்து  விடும் என்றும் உடனே எப்.ஐ.ஆர் போட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார். அப்படி நடவடிக்கை எடுப்பதில் இருந்து யார் உங்களை தடுத்தார்கள்? அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு தொண்டர்களை ஏமாற்றும் நோக்கில் மனம் போனபடி பேசுவதை எப்படி ஏற்று கொள்ள முடியும்?

இனி எப்போது தடை உடைவது? எப்போது சாட்சியம் முடிந்து அறிக்கை கிடைப்பது?    அதுவும் ஏற்றுக்  கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு மீண்டும் வழக்கு போட்டு எப்போதுஉண்மை வெளி வருவது?

கமிஷன் என்றால் மூன்று மாதத்தில் விசாரணை முடித்து நடவடிக்கை எடுத்தால் அதில் பொருள் இருக்கும். இப்படி ஆண்டுக் கணக்கில் இழுத்து அடிப்பதற்கு பெயர் என்ன?

                    விசாரணைக் கமிஷன் ஏன் அமைத்தார்கள் என்பதற்கு ஒரு விசாரணைக் கமிஷன் போட்டால்தான் உண்மை வெளி வரும்போல.