Home Blog Page 41

வள்ளலார் வழி தனி வழி என அறிவிக்க உயர் நீதிமன்றத்தில் மனு?! இருட்டடிப்பு செய்த தமிழ் பத்திரிகைகள்

பொதுமேடை பலமுறை வலியுறுத்தி வந்ததை இப்போது உயர்நீதிமன்றத்தில் ஒருவர் மனுவாக கொடுத்திருக்கிறார்.

வள்ளலார் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர். ஆனால் அவரை இந்து மதத்துக்குள் முடக்கி விட ஆதிக்க சக்திகள் முயன்று கொண்டே இருக்கின்றன.

குறிப்பாக நால்வருணக் கொள்கை உடைய சனாதன தர்மத்தை ஏற்றுக் கொண்டவர் இல்லை.

முதல் ஐந்து திருமுறைகள்– ஆறாம் திருமுறை- வள்ளலாரின் உரைநடை இவையே திருஅருட்பா.

முதல் ஐந்து திருமுறைகளை அவர் இயற்றி இருந்தாலும் அவர் எழுதிய ஆறாம் திருமுறையும் அதற்கு அவர் கொடுத்த உரைநடை விளக்கமுமே முடிபாகும்.   அதுவும் அவரே முதல் ஐந்து திருமுறைகளை ஒதுக்கிவிடுங்கள் என்று கட்டளை இட்ட பின் அவர் தொண்டர்கள் என்பவர்கள் ஐந்து திருமுறைகளை போற்றுவதும் பின்பற்றுவதும் வள்ளலாருக்கு  கெட்ட பெயர் ஏற்படுத்தும் செயலாகவே ஆகும்.

மதச்சண்டைகளை தீர்க்கும் மாமருந்து

வள்ளலார் கண்ட சமரச சுத்த சன்மார்க்கமே !!!

வள்ளலார் கண்ட  சமரச சுத்த சன்மார்க்கம்–மதமல்ல- ஓரிறை வழிபாடு- அதுவும் சோதி வடிவிலான ஆண்டவர் வழிபாடு.

சாதி சமய சழக்கை விட்டேனருள் ஜோதியைக் கண்டேனடி– என்பது வள்ளலார்  வாக்கு .

உயிர்க்குலத்திற்கே இயக்கத்தின் ஆதாரமாக உள்ள சோதிதான் இறைவன்

யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம்- எம்மதத்தவரும் கடைப்பிடிக்கலாம்.

எந்தச் சடங்கும் தேவையில்லை-குருவும் தேவையில்லை

எந்தக் கோயிலுக்கும், எந்த வழிபாடு போகக் தேவையில்லை இருக்கும் இடத்திலேயே கடைப்பிடிக்கலாம்.

தயவே வடிவமாக இருந்து ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் நாம் வாழ வேண்டும். -இறைவனின் திருவடியை இறுகப் பற்றிக்கொண்டு உயிர்களிடம் இரக்கம் காட்டி அவைகளுக்கு பணி புரிந்து கொண்டு வாழவேண்டும்.

எல்லா உயிர்களிடத்திலும் தயவு- பிரபஞ்சத்தில் பற்றின்மை- சிவத்தினிடத்தில் மாறாத அன்பு – அவ்வருள் நம்மை அடையும்- நாமும் அதனை அடைந்து ஒப்பற்ற சுகத்தில் இருப்போம். -லட்சியம் மரணமிலாப் பெருவாழ்வு  இவைதான் வள்ளலார் கண்ட தத்துவத்தின் சாரம். 

வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்

விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்

ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி

உள்ளதனை உள்ளபடி உணர உரைத்தனையே ( 186 )

கலையுரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும்

கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக

மலைவறுசன் மார்க்கம் ஒன்றே நிலைபெற மெய் உலகம்

வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினை என் தனக்கே“  (187 )

இருட்சாதி தத்துவச் சாத்திரக் குப்பை

இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு

மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம

வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்

தெருட்சாறும் சுத்தசன் மார்க்கநன் நீதி

சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்

அருட்ஜோதி வீதியில் ஆடச்செய் தீரே

அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவர் நீரே.             (496)

சாதியும் மதமும் சமயமும் பொய் என

ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி                  ( 4 )

ஆக பாடல் மற்றும் பேருபதேசம் ஆகிய இரண்டையும் பொருந்திப் பார்த்து வள்ளலார் சாதி, மதம், தவிர்த்த சன்மார்க்க சங்கத்தைத்தான் இறுதியாக தன் அன்பர்களுக்கு விட்டுச் சென்றார் என்பது பற்றி யாருக்கும் ஐயம் இருக்க முடியாது.

ஆனால் வள்ளலார் நாத்திகர் அல்லர்.

“நாத்திகம் சொல்கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு“ என்பதே அவர் முடிபு.

எனவே வள்ளலார் வழி என்பது நாத்திகமும் அல்ல எந்த மதமும் அல்ல –

ஆனால் வள்ளலார் பக்தர்கள் இந்துக்கள் என்றுதான் அறியப்படுகிறார்கள். – வள்ளலார் பாடல்களிலே எங்குமே இந்து என்ற சொல் இல்லை. இந்து என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது – கிழக்கு இந்தியக் கம்பெனி கொண்டுவந்த  Hindu Widows Remarriage Act 1856 / 25/07/1856 Lord Dalhousie-Lord Canning ஆல் தான்.

இன்றைக்கு இந்து என்றால் புத்த ஜைன, சீக்கிய மதங்களை உள்ளடக்கி, பார்சி  கிறிஸ்தவ, இஸ்லாமிய மதம் தவிர்த்தவர்கள்தான்.

உலகமெங்கும் நாடுகளுக்கு இடையே இருக்கும் பிரச்னைகளுக்கு மதங்களே மூல காரணிகளாக இருக்கின்றன. மதங்களுக்கு இடையே இருக்கும் மோதல்களை முரண்பாடுகளை பேசித் தீர்க்கவே முடியாது. மதப் பிரச்னைகளை தீர்க்க ஒரேவழி மதங்களில் இருந்து வெளியேறுவதுதான்.   

அதைத்தான் சொன்னார் வள்ளலார். இறை நம்பிக்கைக்கும் மதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் நம்பிக்கையாளன். ஆனால் எந்த மதத்தையும் சாராதவன். பிரச்னை என்னவென்றால் அரசு ஆவணங்களிலே அப்படி குறிப்பிட எந்த சொல்லும் இல்லை. அதை ஆவணப் படுத்த சன்மார்க்கிகள் முயல வேண்டும் என்ற பலரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சென்னை  உயர் நீதிமன்றத்தில் ஒருவர் ஓரு மனு தாக்கல் செய்து வள்ளலார் வழி வழிபாட்டை தனி வழிபாடு முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்று கேட்டுக்  கொண்டிருக்கிறார்.  நீதிமன்றமும் அறிவிப்பு அனுப்பி அரசு பதில் அளிக்க அவகாசம் அளித்திருக்கிறது. 

இந்த செய்தியை ஒரே ஒரு தொலைகாட்சியில் கேட்க முடிந்ததே தவிர எந்த தமிழ் அல்லது ஆங்கில பத்திரிகைகளிலும் படிக்க முடியவில்லை. 

ஏன் இந்த இருட்டடிப்பு?

Religion- இந்து கிறிஸ்தவர் முஸ்லிம் பார்சி என்று எழுத முடியும். நாத்திகன் என்றோ மதமற்ற கடவுள் நம்பிக்கையாளர் என்றோ குறிப்பிட இடமில்லை.

குஜராத்தில் ராஜ்விர் பிராமின் என்ற கரோடா பிராமின் தாழ்த்தப் பட்ட வகுப்பை சேர்ந்தவர்.. சாதி அடக்கு முறைக்கு ஆளாகி தன்னை இந்து என்று குறிப்பிடாமல் நாத்திகர் என்று குறிப்பிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு போட அவர் நிராகரிக்கிறார். வேறு மதம் மாறு நாத்திகனாக முடியாது என்று உத்தரவு.  குஜராத் உயர் நீதிமன்றம் ஏன் கூடாது என்று விளக்கம் கேட்டு அறிவிப்பு அனுப்பி இருக்கிறது. .

லிங்காயத்துக்கள், கேரளாவின் நாராயண குரு, குமரியின் அய்யா வைகுண்டர் போன்றோர் தனித்தனி வழிபாட்டு வகை கண்டவர்கள். எல்லாரையும் விழுங்கி இந்து என்ற மாயை ஆண்டு கொண்டிருக்கிறது. அது மதமே அல்ல என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு சொன்ன பிறகும் எப்படி உயிர் வாழ்கிறது என்பது இறைவனுக்கே வெளிச்சம். அந்த வகையில் சன்மார்க்கிகளையும் இந்து விழுங்கி விட்டது. அதில்  இருந்து விடுதலை பெறும் வழியை சன்மார்க்கிகள் ஆராய வேண்டும் என்ற வேண்டுகோளை பணிவோடு வைக்கிறேன்.

பெரும்பான்மை சமூகத்திலிருந்து விலகி சிறுபான்மை ஆக வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல.

எல்லா மதங்களையும் சட்டப்படி தடை செய்ய முடியும் என்றால் அதற்காக அனைவரும் ஒன்று சேரலாம். ஆதரிக்கலாம்.

அதுவரை தன்மானமுள்ள இறை நம்பிக்கையாளனாக வாழவேண்டும் என்பதே வள்ளலார் பக்தர்களின் எதிபார்ப்பு.

-வைத்தியலிங்கம்

சொந்த சாதி பெண்களையே ஆபாசமாக பேசி ஆடியோ வெளியிட்ட முத்தரையர் இளைஞர்கள்??!!

பொன்னமராவதி சம்பவத்தை கண்டித்து நாமும் பொதுமேடையில் எழுதியிருந்தோம்.

முத்தரையர்களுக்கும் மற்றவர்களுக்கும் மோதல் ஏற்படும் வகையில் இருந்த அந்த ஆடியோ பெருத்த கிளர்ச்சிக்கு வித்திட்டு பல போராட்டங்களை அந்த அப்பாவி மக்கள் முன்னெடுத்தனர்.

ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்தது காவல்துறை. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காவல் வாகனங்கள் தாக்கப்பட்டன. 13 போலீசார் காயமடைந்தனர்.

இத்தனை கலவரத்துக்கும் மத்தியில் எந்த இரண்டு சமூகத்துக்கும் இடையே மோதல் எதுவும் ஏற்படாதது மட்டுமே ஆறுதல்.

காவல் துறை விசாரணையை முடுக்கிவிட்டதில் உண்மை வெளிவந்தது. மஞ்சவயல் கரிசல்காடு செல்வகுமார் சிங்கப்பூரில் இருக்கிறார். அவரை பட்டுகோட்டை வசந்த் என்பவர் தூண்டிவிட்டு நண்பர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு சிங்கப்பூரில் இருந்து செல்வகுமார் சர்ச்சைக்குரிய அவதூறு ஆடியோவை பதிவு செய்து சமூக வலை தளத்தில் பதிவு செய்ததும் அதை சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த ஒருவர் மூலம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவவிட்டதும் தெரியவந்தது .

இப்போது காவல் தனிப்படை செல்வகுமாரையும் வசந்த்தையும் கைது செய்து  விசாரித்து வருகிறார்கள்.

கொடுமை என்னவென்றால் அந்த இருவரும் முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதுதான். தங்கள் சமூகத்து பெண்களைப்பற்றி அவதூறாக பேசி சொந்த சமூகத்தையே இழிவுபடுத்த அவர்கள் சொன்ன காரணம்தான் தமிழ் சமூகம் சாதிப்பேயின் பிடியில் எவ்வளவு அழுத்தமாக அடிமைப்பட்டு கிடக்கிறது என்பதைக் காட்டுகிறது. தனது சமுதாயத்தில் ஒரு பற்று உணர்வை ஏற்படுத்த வேண்டிதான் இந்த பதிவை வெளியிட்டார்களாம். 

ஏற்கனெவே அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்னையில் முக்குலத்தோர்-முத்தரையர் பிரச்னை ஏற்பட்டு பின்னர் அமைதி ஏற்பட்டது.

வேற்றுசமூகத்து ஆட்கள் நம் சமூக பெண்களை இழிவுபடுத்துகிறார்கள் என்றால் தன் சாதிக்காரர்கள் ஒன்று திரண்டு சாதி ஒற்றுமையை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எதனால் உருவானது.? முன்பே புரையோடிப் போயிருக்கும் சாதிப்பகைமை.

இந்த இருவருக்கும் தரப்படும் கடுமையான தண்டனைதான் இனி எவருக்கும் இத்தகைய இழி செயலில் ஈடுபட திட்டமிடுவோருக்கு தரப்படும் எச்சரிக்கையாக இருக்கும் .

               போராட்டம் நடத்திய அப்பாவி மக்கள் இனி எவரும் இப்படி செய்தால் கவனமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

தோல்வி பயத்தில் 3 எம் எல் ஏக்களை தகுதி நீக்கம் செய்ய எடப்பாடி முயற்சி??!!

பாராளுமன்ற தேர்தலோடு 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் முடிந்துவிட்டது. மேலும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது. எல்லாவற்றுக்கும் சேர்த்த மே மாதம் 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வர இருக்கின்றன.

இப்போது 114 பேர் எடபாடியோடு இருப்பதாக கணக்கு இருந்தாலும் தினகரனோடு இருக்கும் மூன்று பேரையும் தமிமும் அன்சாரி, கருணாஸை சேர்த்து ஐந்து பேர் எதிராக இருப்பதால் உண்மையான பலம் 109 தான்.

இந்நிலையில் ஆட்சியை தக்க வைக்க குறைந்தது 9 இடங்களிலாவது வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை ஓட்டுக்கு ரூபாய் 2000 கொடுத்தும்கூட எடப்பாடிக்கு வரவில்லை.

எனவே குறுக்கு வழியில் பெரும்பான்மையை தக்க வைக்க எல்லா வழிகளிலும் முனைப்பு காட்டுகிறார்.

அதில் ஒன்றுதான் இன்று அதிமுக வின் சட்டமன்ற கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் கொடுத்திருக்கும் கடிதம். அதில் கட்சிக்கு விரோதமாக செயல்படும் தினகரன் ஆதரவு எம் எல் ஏக்களான அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி  பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் மூவர் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சபாநாயகர் விளக்கம் கேட்டு அறிவுப்பு கொடுப்பார். விளக்கம் தந்ததும் அது ஏற்றுக் கொள்கிற விதத்தில் இல்லையென்று அவர்களை தகுதி நீக்கம் செய்வார்.

தேவைப்பட்டால் இதே நடவடிக்கையை தமிமும் அன்சாரி மீதும் கருணாஸ் மீதும் கூட எடுக்க முனைவார். ஏனென்றால் அவர்கள் தனி கட்சியாக இருந்தாலும் இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்றதால் அதிமுகவின் கொறடா கட்டளைக்கு கட்டுப் பட்டவர்கள்.

அதன் மூலம் பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடிக்கு  தேவைப்படும் வாக்குகள் குறைந்து விடும். இதுதான் திட்டம். இதைவிட மோசடி வேறு என்ன இருக்க முடியும்?

உடனே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அப்படி எதுவும் நடந்தால் சபாநாயகர் மீது  நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என எச்சரித்து இருக்கிறார்.

தமிழ்நாட்டில்தான் இத்தனை பித்தலாட்டங்கள் நடக்கின்றன. எல்லாம் சட்டப்படியே நடக்கின்றன. அதுதான் சோகம்.

எதிர்த்து வாக்களித்த ஒபிஎஸ் உள்ளிட்ட பதினொரு பேர் மீது நடவடிக்கை இல்லை.  ஏனென்றால் சபாநாயகர் எந்த உத்தரவும் இடாத நிலையில் அவரை நாங்கள் உத்தரவு பிறப்பியுங்கள் என்று உத்தரவிட முடியாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு சொல்ல உச்ச நீதிமன்றம் என்ன சொல்லப்போகிறது புதிதாக என்று அலுத்துக் கொண்டு சாமானியன் தலையை பிய்த்துக் கொள்கிறான்.  என்னங்கடா உங்க சட்டம் என்று !

18 பேர் தகுதி இழப்பு வழக்கிலும் ஒரு நீதிபதி சரி என்றும் மற்றொருவர் சரியில்லை என்றும் தீர்ப்பளிக்க மூன்றாவது நீதிபதியும் சரி என்று என்று தீர்ப்பளித்து எடப்பாடி  ஆட்சியை காப்பாற்றினார்கள்.

18 பேர் வழக்கு தீர்ப்பு இந்த 3 பேருக்கும் பொருந்தும்தானே என்று எடப்பாடி துணிந்து விட்டார்.

இப்படி முறைகேடுகளை துணிந்து செய்பவர்கள் எப்படி நியாயமான ஆட்சியை நடத்த முன்வருவார்கள்.

மோடி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு எல்லா கட்சிகளிலும் ஒருவர் கலந்து கொண்டால் அதிமுக வில் தம்பிதுரை, ஒ பி எஸ், வேலுமணி, வேணுகோபால் என்று நான்கு பேர் கலந்து கொள்கிறார்கள். அவ்வளவு விசுவாசம்.

ஆனால் இந்த முறை இந்த மூன்று பேரைஅவ்வளவு சுலபமாக தகுதி நீக்கம் செய்ய முடியாது. நீதிமன்றம் தடை கொடுக்கும். வேண்டுமானால் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நடவடிக்கை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லலாம்.

எடப்பாடி ஆட்சியே நீடிக்க முடிந்தாலும் தினகரன் தொகுதிக்கு ஒரு லட்சம் என்று நாற்பது முதல் ஐம்பது லட்சம் வரை வாக்குகள் வாங்கி விட்டால் அதிமுகவில் இருந்து மூழ்கும் கப்பலில் இருந்து எலிகள் துள்ளிக் குதித்து தப்பிக்க முயல்வதை போல் வெளியேறுவார்கள். அப்போது இந்த கணக்கெல்லாம் துணைக்கு வராது.

தகுதி நீக்க நடவடிக்கைக்கு முன்னர் நல்ல புத்தி வரவேண்டும் ஆட்சியாளர்களுக்கு!            

மோடியா மற்றவர்களா என்பதல்ல, சங்கமா மற்றவர்களா என்பதே போட்டி??!!

இந்த தேர்தல் மோடியா மற்றவர்களா என்பதை போல ஒரு சித்திரம் வரையப்படுகிறது. அது உண்மையல்ல.

மோடி என்பவர் தனி சக்தியா? தனி கொள்கை கொண்டவரா? தனி சிந்தனையாளாரா? தனித்து தொண்டர்களை கொண்டவரா? தனி கட்சி எதையாவது கண்டவரா? தன் சக்தியால் குஜராத் முதல்வராகவும் இப்போது பிரதம அமைச்சராகவும் ஆனவரா? எதுவும் இல்லை.

மோடி என்பவருக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ் என்ற இயக்கம் இருக்கிறது. ஆர் எஸ் எஸ் கொள்கையே மோடியின் கொள்கை. ஆர்எஸ்எஸ் சிந்தனையே மோடியின் சிந்தனை. ஆர்எஸ்எஸ் தொண்டர்களே இன்று மோடியின் தொண்டர்கள். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கிளையான பாஜக தான் மோடியின் கட்சி. சங்கத்தின் பின்புலனால்தான் முதல் அமைச்சராகவும் பிரதம அமைச்சராகவும் ஆனார்.

மோடி என்றும் தன்னை சுய சக்தி கொண்டவராக நினைத்துக் கொண்டோ கற்பிதம் செய்து கொண்டோ செயலாற்றியதும் இல்லை.

அதிகாரிகளின் ஆலோசனைப்படி செயல்படுபவர்- பெரு நிறுவனங்களின் ஆதரவாளர் -நிர்வாகத்தில் – இந்த இரண்டும்தான் அவரது அடையாளம்.

வாஜ்பாய் எல்லா மதங்களுக்கும் பொதுவானவர் என்ற முத்திரையோடு  பணியாற்றியவர்- அவரையே சங்கம் எப்படி பயன்படுத்தியது?

வாஜ்பாய் எங்களுக்கு ஒரு முகமூடி என்று வர்ணித்தார் கோவிந்தாச்சார்யா !

மோடி தன் தலைமையை பாதுகாக்க சங்கத்தை பயன்படுத்துகிறார்- சங்கம் தன் கொள்கையை அமுல்படுத்த மோடியை பயன்படுத்துகிறது.

இதில் உண்மையான சக்தி என்று யாரை கூறுவீர்கள்?

மோடி போன்றவர்கள் இன்றைக்கு  வருவார்கள்- நாளை போவார்கள். சங்கம் என்றும் நிலைத்து இருக்கும். அடுத்து நல்ல அடிமை கிடைக்கும் வரை, அல்லது இவரது பயன்பாடு செல்லுபடியாகும் வரை.

எனவே மோடியை தனி நபராக பாவித்து வாராது வந்த மாமணி போல் போற்றுபவர்கள் இந்த உண்மையை உணர்ந்து கொண்டு அதன் பின் மதிப்பிடவேண்டும்.

சங்கம் ஏற்புடைத்தா அல்லவா என்ற விவாதம் வேறு. சங்கம் வேண்டும் என்பவர்களுக்கு சங்கத்தின் சித்தாந்தம் சரி என்பவர்களுக்கு மோடிதான் இப்போதைய கதாநாயகர்.

சங்கத்தின் கொள்கை நாட்டுக்கு நல்லதல்ல- ஏற்புடைத்தல்ல- நாட்டை துண்டாடக் கூடிய அளவு ஆபத்தானது என்ற கருத்தைக் கொண்டவர்கள் மோடியின் தனிப்பட்ட குண நலன்களைக் கொண்டு மட்டும் ஒரு முடிவுக்கு வந்து விடக் கூடாது என்பதுதான், ஆதரித்து விடக்கூடாது என்பதுதான் நாம் சொல்லும் கருத்து.

தங்கம் வென்று சாதித்த கோமதி! சின்ன புத்தியை காட்டிய தினமலர்??!!

வாய்ப்பு கிடைத்தால் தமிழர்களால் சாதிக்க முடியும் என்று ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார் திருச்சி முடிகண்டம் கிராமத்தை சேர்ந்த ஏழை விவசாயியின் மகள் கோமதி.

விடாமுயற்சி காரணமாக இருபது வயதில் தொடங்கி பல போட்டிகளில் பங்கேற்று தந்தை இறந்து பயிற்சியாளர் இறந்து பல தடைகளை கடந்து முப்பது வயதில் இந்த சாதனையை அவர் புரிந்திருக்கிறார்.

முதல்வர் தொடங்கி எதிர்கட்சி தலைவர் உட்பட எல்லாரும் பாராட்டும் ஆதரவும் தெரிவித்து இருக்கிறார்கள்.

சாதாரண பின்னணி கொண்டவர்கள் கூட பயிற்சியும் வாய்ப்பும் கிடைத்தால் விளையாட்டில் சாதிக்க முடியும் என்பதற்கு கோமதி ஒரு சான்று.

தமிழக அரசு தகுந்த முறையில் அவரை கௌரவிக்க விக்க வேண்டும். மற்றவர்களுக்கு அந்த கௌரவம் உந்து சக்தியாக மாற வேண்டும்.

விளையாட்டுக்கு தமிழக அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும். திறமை உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து சாதனைகளை படைக்க உதவ வேண்டும்.

komathi-marimuthu-dinamalar
komathi-marimuthu-dinamalar

                     கொசுறு; தினமலர் பத்திரிகை மூன்றாம் இடம் பிடித்த வீராங்கனையை மிகப் பெரிதாக படம் போட்டு பாராட்டி விட்டு அதே போட்டியில்  முதல் இடம் பிடித்து தங்கம் வாங்கிய கோமதியை சிறிதாக படம் போட்டு தனது பெரிய புத்தியை காண்பித்து இருந்தது. அவர்கள் திருந்த மாட்டார்கள் ?!!

அணுகுண்டை தீபாவளி வெடியுடன் ஒப்பிடும் மோடியின் அச்சம் தரும் மனநிலை ??!!

அணுகுண்டு – மனித குலத்துக்கு விளைத்த நாசத்தால் அதை கண்டு பிடித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீனே பின்னர் வருந்தினார் என்பது வரலாறு. உண்மையில் அணுகுண்டை கண்டுபிடித்தவர் ராபர்ட் ஒப்பென்ஹீமர் என்றாலும் ஐன்ஸ்டீன் பெயரே முதன்மைபடுத்தப் படுகிறது. நிற்க.

வாஜ்பாய் காலத்தில் போக்ரான் அணு சோதனை நடத்தி நமது வல்லமையை உலகுக்கு உணர்த்தி விட்டோம். மூன்று முறை நம்மிடம் அடிவாங்கி ராணுவ ரீதியில் இந்தியாவை ஒருபோதும் வெல்ல முடியாது என்பதை பாகிஸ்தான் உணர்ந்தே இருக்கிறது. பங்களா தேசம் பிறந்த போது 90000 பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவின் பிடியில் இருந்தனர். உலகநாடுகள் தலையீட்டில் விட்டோம். அப்போது அவர்களை விடாமல் காஷ்மீர் பிரச்னையை நிபந்தனை வைத்து தீர்த்திருக்க வேண்டும் என்கிறார் நமது பிரதமர்  மோடி. நல்ல வாய்ப்பை இந்திரா காந்தி நழுவ விட்டு விட்டாராம். நல்லவேளை இவர் அப்போது பிரதமராக இல்லை.

இன்று பாகிஸ்தானுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை அணுஆயுதம். ஆனால் அவர்களுக்கும் தெரியும் அவர்கள்  அணு  ஆயுதத்தை எடுத்தால் இந்தியா வாவது இழப்புகளை தாங்கியும் வாழும். ஆனால் இந்தியா அணுகுண்டுகளால்  தாக்கினால்  பாகிஸ்தான் நாடே இருக்காது.    இருந்தாலும் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் எப்போதாவது தங்கள் இருப்பை காட்டிக் கொள்வதற்காவும் தேர்தல் வெற்றிக்காகவும் அணு ஆயுதத்தை பற்றி பீற்றிக் கொள்வது வழக்கம். அதற்கெல்லாம் எந்த இந்திய பிரதமரும் முறைகேடாக பதில் சொன்னது இல்லை.

ஆனால் வர வர மோடியின் பேச்சுக்கள் தரம் தாழ்ந்து கொண்டே போகிறது. ஒரு கட்சி தலைவராக அவர் எப்படி பேசினாலும் பரவாயில்லை. ஒரு பிரதமராக பொறுப்புடன் பேச வேண்டும்.

அபிநந்தன் விடுதலை தான் கொடுத்த மிரட்டலால் தான் நடந்தது என்கிறார். இப்படியெல்லாம் மிரட்டல் செய்யக்கூடாது என்றால் நான் எதற்கு பஜனை செய்யவா இருக்கிறேன் என்கிறார்? பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருந்தால் எங்களுக்கு என்ன?  நாங்கள் மட்டும் தீபாவளிக்கு வெடிக்கவா அணுகுண்டுகளை பாதுகாத்து வைத்திருக்கிறோம் என்கிறார்.

உலக நாட்டுத் தலைவர்கள் நம்மை மதிப்பார்களா?   போர் வெறி கொண்ட நாடாக அல்லவா நாம் பார்க்கப் படுவோம்.

ஆனால் சீனாவை நோக்கி மட்டும் எந்த சவாலையும் மோடி விடுக்க மாட்டார்.

மோடி ஆதரவாளர்கள் புளகாங்கிதம் அடைகிறார்கள். ஆகா நமது மோடி எப்படி சவால் விடுக்கிறார் பாருங்கள் என்று??!   சவால் விடுவதும் சவடால் அடிப்பதுவமா பிரதமர் வேலை?

இவருக்கு பதிலை இம்ரான்கான் சொல்லவில்லை. காஷ்மீரின் மெகபூபா முக்தி சொன்னார், ‘பாகிஸ்தான் மட்டும் ஈத் பெருநாளுக்கு வெடிக்கவா அணுகுண்டு வைத்திருக்கிறது’ என்று.

இந்த வெறிப்   பேச்சுக்கள் இரு நாடுகளுக்கு இடையே இணக்கத்தை பேண உதவுமா?

எனவே  சிந்தனையாளர்கள், நல்லோர் அச்சமடையவே செய்வார்கள்.

ஒரு பிரதமர் வெறும் தலைவர் அல்ல. நாட்டின் எதிர்காலத்தின் பாதுகாவலர்.  அதனால்தான் தன்னை சௌகிதார், காவலாளி, என்று மோடி சொல்லிக் கொள்கிறார். ஆனால் நடத்தையில் நேர் மாறாக இருக்கிறது மோடியின் வார்த்தைகள். மக்களின் உணர்ச்சிகளை தூண்டி தன் தலைமையை ஏற்றுக் கொள்ளசெய்வதே அவரது இலக்கு.

சமாதான காலத்துக்கான பிரதமர் மோடி அல்ல. எப்போதும் சண்டையை எதிர் பார்க்கச் செய்து  அரசியல் வெற்றி பெற நினைக்கும் சாதாரண அரசியல்வாதி.

பிரதமர் தரத்தில் இருக்கிறதா நரேந்திர மோடியின் பேச்சுக்கள் என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.

2014  ல்  ஹீரோவாக பார்க்கப் பட்டவர்  2019 ல் ஜீரோவாக ஆகிவிட்டார்.      பயனில்லை என்றால் இவரையும் அமித் ஷாவையும் தூரத்தில் வைத்து விடும் சங்கம்.    அத்வானி ஜோஷியை விட இவர்கள் எம்மாத்திரம்!

ஒன்று மட்டும் உறுதி. தேர்தல் முடிவுகள் எப்படியோ. இவர் மட்டும் பிரதமராக மீண்டும் ஆனால் இந்தியா பெயரளவுக்குத்தான் ஜனநாயக நாடாக நீடிக்கும்.    சர்வாதிகாரம் புது வடிவில் அரங்கேறும். அதையும் நியாயப் படுத்தும் ஆதிக்க சக்திகள்.

ஆம். உண்மையில் மோடியை நினைத்தால் அச்சமாகத்தான் இருக்கிறது.

பெரிய கோவில் கல்வெட்டுகளை மாற்ற முயற்சியா? அதிகாரிகள் ஏன் அறிக்கை தரவில்லை?

பெரிய கோவில் தமிழ் கல்வெட்டுகளை அகற்றி விட்டு இந்தி கல்வெட்டுகளை பொருத்தி வருவதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் உலா வந்து தமிழர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை எழுப்பிவிட்டது.

இதற்கு இந்து தமிழ் மட்டும் ஒரு விளக்க செய்தி வெளியிட்டது.

தமிழக நுண்ணறிவுப் போலிசும், உளவுப் பிரிவு போலிசும் கோவிலுக்கு வந்து அங்குள்ள கல்வெட்டுகளை பார்வையிட்டதுடன் அவற்றை படமாவும் பதிவு செய்து கொண்டு சென்றுள்ளனர்.

பெரிய கோயில் இந்திய தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இருக்கிறது. அதன் முதுநிலை பராமரிப்பு அலுவலர் சங்கர் செய்தியாளர்களிடம் விளக்கம் தந்தார்.

“ராஜராஜ சோழன் காலத்தில் கோவில் பணியாளர்கள் விபரம் கொடுக்கப்பட்ட தானங்கள், கோவில் நிர்வாகம், ஆட்சி முறை, பாதுகாப்பு முதலான பல தகவல்கள் அனைத்தும் கோவில் முழுவதும் கல்வெட்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

அனைத்தும் தமிழ் மொழியில்தான் உள்ளன. மராட்டியர் காலத்தில் திருச்சுற்று மாளிகையின் சுவரில் மராத்தி மொழியின் தேவநாகரி எழுத்துக்களை கொண்டு கோவில் திருப்பணிகள் தொடர்பாக கல்வெட்டுகளை பொறித்து வைத்திருந்தனர்.

இவற்றைத்தான் தமிழ் மொழி கல்வெட்டுகளை அகற்றி இந்தி மொழி கல்வெட்டுகளை பதிப்பதாக சமூக வலைத்தளங்கள் பதிவிட்டு வருகின்றன. இது தவறு. திருச்சுற்று மாளிகையில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் வாசகங்கள் அடங்கிய கருங்கற்கள் அனைத்தும் கோவிலின் கிரிவலப் பாதையை சீரமைத்தபோது பூமிக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டவை. அவற்றை பாதுகாக்கும் பொருட்டு கோவிலின் தென் மேற்கு பகுதியில் பூட்டிய அறையில் வைத்துள்ளோம்.

இங்கேதான் சந்தேகம் வலுக்கிறது. வலைதள புகைப்படத்தில் அடுக்கி வைக்கப் பட்டிருக்கிற கல்வெட்டுகள் வெளியில்தான் கிடக்கின்றன. அவை பூட்டிய அறையில் இருந்தால் எப்படி வெளியில் கிடக்கும்?

மராத்திக்கும் இந்திக்கும் உள்ள வேறுபாடு எல்லாருக்கும் தெரியாது. ஆனால் தொல்லியல் துறைக்கு தெரியும் அல்லவா? கிரிவலப் பாதையை சீரமைத்தபோது  கிடைத்தது என்றால் அதன் கால விபரம் என்ன? அது அப்போதே வெளியிடப்பட்டதா? அது பற்றி வேறு ஆவணங்கள் உள்ளனவா இல்லையா? தொல்லியல் துறை அல்லாமல் இந்து அறநிலைய  துறையின் அதிகாரிகள் யாரும் இல்லையா? ஏன் பொறுப்பான அதிகாரிகள் எவரும் எழுத்து பூர்வமான விளக்கம் தர முன்வரவில்லை.?

பெரியகோவிலில் ராஜராஜ சோழனால் பொறிக்கப்பட்ட 64 கல்வெட்டுகளும்  ராஜேந்திர சோழனால் பொறிக்கப்பட்ட 21 கல்வெட்டுகளும் இரண்டாம் ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் ராஜேந்திர சோழன் காலங்களில் தலா ஒரு கல்வெட்டும் பாண்டியர் கால கல்வெட்டுகள் இரண்டும், விஜயநகர நாயக்கர் கால கல்வெட்டுகள் நான்கும், மராட்டியர் கால கல்வெட்டுகள் நான்கும் உள்ளதாக கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கே திடீரென்று மராட்டியர் கால கல்வெட்டுகள் பூமிக்கடியில் இருந்து கிடைக்கப் பெற்றவை என்று சொல்லும்போதுதான் பிரச்னை எழுகிறது.  கல்வெட்டு பொறித்தவர்கள் பூமிக்கடியிலா புதைப்பார்கள்? 

                அவற்றின் உண்மைத்தன்மை பற்றி ஆராயாமல் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இருக்கும் ஒரு கோவிலில் திடீர் என்று யார் வேண்டுமானாலும் எதைவேண்டுமானாலும் பொறுத்திவிட முடியுமா? அது கோவிலின் தொல்லியல் தன்மையை பாதிப்பதாக அமையாதா? 

                பொறுப்புள்ள அதிகாரிகள் முன்வந்து இந்த சந்தேகங்களை தீர்த்து வைத்தால் தவிர வரலாற்றை மராட்டியர்களுக்கு ஆதரவாக திருப்ப சதி முயற்சியாகத்தான் இதை மக்கள் கருதுவார்கள்.

ஏற்கெனெவே பெரியகோவில் நிர்வாகத்தில் மராட்டிய மன்னர் வாரிசுகளுக்கு இன்னமும் கொடுக்கப்படும் உரிமைகள் குறித்து பெருத்த ஆட்சேபணைகள் இருந்து வரும் நிலையில் இத்தகைய முயற்சிகள் மக்கள் மத்தியில் அமைதியின்மையை தோற்றுவிக்கும் என்பதை ஆட்சியாளர்கள் அறிய மாட்டார்களா?  

சோழர்கள் வலு குன்றிய பின் தமிழர்கள் ஒற்றுமையின்மையால் சிதறி நின்றார்கள்.    அதனால் மராட்டியர், நாயக்கர், நவாபுகள், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் என்று பல இனத்தார்களும் இடையில் ஒரு ஐநூறு ஆண்டுகள் தமிழர்களை ஆண்டு விட்டனர்.

ஆங்கிலேயர் ஆட்சியை விடவா மற்றவர் வலுக் கொண்டவர்? காலம் சென்றிருந்தால் மற்றவர் ஆட்சிகளும் ஏதோ ஒரு வகையில் மாற்றப் பட்டிருக்கும்.

எனவே அதையே இந்த மக்களாட்சி காலத்திலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு நியாயமுமில்லை.

பொறுப்புள்ள அதிகாரிகள் அறிக்கை தந்து மக்களுக்கு அமைதி ஏற்படுத்த வேண்டும் என்றுதான் பொதுமேடை கேட்டுக் கொள்கிறது.

ஊழல் ஒழிப்பு அமைப்பின் உறுப்பினர்களை நியமிப்பதிலேயே ஊழலா; வெளங்கிடும்

ஊழலை அறவே ஒழிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு லோக் ஆயுக்தா.

இதை நியமிக்க வேண்டிய தமிழக அரசு தானாக இதை செய்யவில்லை. உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின் வேண்டாவெறுப்பாக செய்தது.

விரும்பி செய்திருந்தால் நியமனங்களில் எந்த குறைபாடும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

இதற்கு தலைவர் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு முன் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும். ஏன் அதை தமிழக அரசு செய்யவில்லை?

லோக் ஆயுக்தா தலைவராக ஒய்வு பெற்ற நீதிபதி பி.தேவதாஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதற்கான தேடுதல் குழுவில் முதல் அமைச்சர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

அதேபோல் உறுப்பினர்களும் சட்ட விரோதமாகத்தான் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரா கர்நாடக மாநிலங்களில் லோக் ஆயுக்தா உறுப்பினர்களை நியமிக்கும் முன்பாக அந்தந்த மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை கலந்து ஆலோசிக்கும் வகையில் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட காரணங்களுக்காக லோக் ஆயுக்தா உறுப்பினர்களை நியமித்த  அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் யோகாநந்தன் என்பவர் மனு செய்திருக்கிறார்.

அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி லோக் ஆயுக்தா உறுப்பினர்களை தேர்வு செய்வது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது என்று கூறியதை அடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

என்ன கொள்கை? கொள்ளையடிப்பதை கண்டு கொள்ளாமல் இருக்கும்படி ஒரு சார்பான நபர்களை நியமித்துக் கொள்வதுதான் கொள்கையா? 

மாண்புமிகு நீதியரசர் தேவதாஸ் மீது நடுநிலை வழுவாதவர் என்ற நற்பெயர் நிலைத்திருப்பது உண்மைதான். அது வேறு. அவரையும் மற்ற உறுப்பினர்களையும் தலைமை நீதிபதியின் ஆலோசனையின் பேரில் நியமிப்பதில் உங்களுக்கு என்ன ஆட்சேபணை? தலைமை நீதிபதியின் ஆலோசனை தேவையில்லை என்ற முடிவை ஏன் கொள்கை யாக்குகிறீர்கள்?

இப்போதிருக்கும் கமிட்டியில் எதிர்க்கட்சி தலைவர் ஆட்சே பித்தாலும் முதல்வரும், சபாநாயகரும், பெரும்பான்மை முடிவாக எந்த முடிவையும் எடுக்க முடியும். அதுவா முறை?

அதுவும் குறிப்பாக மத்திய அரசின் சட்டத்தில் தலைமை நீதிபதியை கமிட்டியில் நியமிப்பதை கட்டாயமாக ஆக்கி இருக்கும்போது தமிழக அரசு ஏன் அவரிடம் ஆலோசிப்பதை கூட தவிர்த்தது?

நீதிபதி தேவதாஸ் தவிர்த்து நீதித்துறையை சேர்ந்த ஒய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் கே ஜெயபாலன், ஆர்.கிரிஷ்ணமூர்த்தி, ஆகியோரும் நீதித்துறையை சாராத முன்னாள் அரசு பணியாளர் தேர்வு கழக தலைவர் ராஜாராம் மற்றும் கோவை அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஆறுமுகம் நியமிக்கப்பட்டார்கள். நீதித்துறையை சார்ந்தவர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் குறையும் இல்லை. இதில் ராஜாராம் மற்றும் ஆறுமுகம் நியமனங்களை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது.

இந்த லட்சணத்தில் இருக்கிறது அதிமுக அரசு ஊழலை ஒழிக்கும் அமைப்பை உருவாக்குவது.

டெல்லி மட்டும் என்ன வாழ்கிறது? நாட்டின் முதல் ஊழல் ஒழிப்பு அமைப்பான லோக் பால் அமைப்பு, ஒரு தலைவர், எட்டு உறுப்பினர்கள், அவர்களுக்கான அதிகாரிகள் எல்லாருக்கும் ஒரு அலுவலக இடத்தை மத்திய அரசு தேர்வு செய்ய முடியாமல் அவர்களை ஐந்து நட்சத்திர தி அசோக் ஓட்டலில் தங்க வைத்திருக்கிறார்கள்.  தற்காலிக ஏற்பாடாகவே இருக்கட்டும். நிரந்தரமாக இருக்கப்போகிற ஒரு அமைப்புக்கு முன்பே திட்டமிட்டு ஒரு அலுவலகம் அமைத்து தர முடியாத நிலையில்தானே இருக்கிறது மோடி அரசு?

இலங்கையில் குண்டு வெடிப்பு- இனி ராணுவ ஆட்சிதான்!! அரசியல் தீர்வு இப்போது இல்லை!

மனிதத்தை மாய்த்திருக்கிறது மதம்.

ஏசு உயிர்த்தெழுந்த நாளில் இலங்கையின் தேவாலயங்களில் ஸ்டார் ஓட்டல்களில் நடந்த 9 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 295 பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள். 500 பேருக்கு மேல் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

இந்த கொடுமையை செய்தவர்கள் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் என்ற தீவிரவாத இஸ்லாமிய அமைப்பு என்று  சிங்கள அரசு முடிவு செய்து 24 பேருக்கு மேல் கைது செய்திருக்கிறது. அவர்கள் யார் என்று சொல்ல மாட்டார்களாம். ஏன் என்றால் அதனால் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுமாம். அவர்களுக்கு விளம்பரம் தந்தது போல் ஆகிவிடுமாம்.

மத வெறியர்களுக்கு மனித உணர்வு அற்றுப்போய்விடும் என்று இதன் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது.

இறந்தவர்களுக்கு இழப்பீடு கொடுப்போம் இடிந்த தேவாலயங்களை அரசு செலவில் புதுப்பித்து கொடுப்போம் என்றெல்லாம் சிங்கள அரசு சொன்னாலும் நடந்த நிகழ்வுகளில் எங்கோ தவறு தெரிகிறது.

பயங்கரவாதிகள் எப்போது தாக்கினாலும் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.  ஏன் என்றால் அப்போதுதான் உலகம் அவர்களை கண்டு அஞ்சும். அதுதான் அவர்களுக்கு வேண்டும். இதுவரை இலங்கை குண்டு வெடிப்புகளுக்கு எந்த தீவிரவாத இஸ்லாமிய அமைப்பும் பொறுப்பு ஏற்றுக் கொள்ளவில்லை. 

இலங்கை தௌஹீத் அமைப்பு சில புத்த சிலைகளை உடைத்தார்கள் என்று வழக்குகள் உள்ளன.

ஆனால் இலங்கையில் சிங்கள பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பெரிய அளவில் பிரச்னை வெளிப்படவில்லை.

அதிலும் குறிப்பாக இலங்கை கிறிஸ்தவர்களுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும்  இடையே பெரிய பிரச்னைகள் எதுவும் இல்லை. பின் ஏன் முஸ்லிம் தீவிரவாத அமைப்பு கிறிஸ்தவர்களை குறி வைக்க வேண்டும்? 

ஒரு மேலை நாட்டில் மசூதிக்குள் புகுந்து வழிபாடு நடத்திக் கொண்டிருந்தவர்களை ஒரு கிறிஸ்தவன் கொன்றான் என்பதற்காக  இது நடந்திருக்கும் என்றால் ஏன் அவர்கள் அதற்கு சிறிலங்காவை தேர்ந்தெடுக்கவேண்டும்?

srilanka-blast-afp

அங்கே 70% சிங்கள பௌத்தர்கள், 13% தமிழர்கள், 9% முஸ்லிம்கள், 7% கிறிஸ்தவர்கள் என்றால் சிங்களர்களுக்கு எதிராக மற்றவர்கள் என்ற நிலைதானே இருக்கிறது. சிறுபான்மையர் தங்களுக்குள் ஏன் மோதிக் கொள்கிறார்கள்?  

இறந்தவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள். அதிலும் குறிப்பாக அமெரிக்க, பிரிட்டிஷ், பிரெஞ்சு, டென்மார்க் நாட்டினர்.  நால்வர் இந்தியர். மற்றவர்கள் இலங்கை  தமிழர்கள். இவர்கள் யார் பேரிலும் சிங்கள பௌத்தர்களுக்கு அதிக அக்கறை இருந்ததில்லை.

வருகிற டிசம்பர் மாதம் அதிபர் தேர்தல். மைத்ரிபாலவுக்கும் ரணில் விக்கிரம சிங்கேவுக்கும் எத்தனை மோதல்கள் இருந்தாலும் பதவி பிடிக்க இனி சேர்ந்துதான் ஆக வேண்டும்.

2009ல் விடுதலை புலிகளுடன் ஆன போர் முடிவுக்கு வந்து விட்ட போதிலும் இதுவரை அமைதியாக இருந்த தமிழர்கள் இப்போது அரசியல் தீர்வை பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள்.

ராணுவத்தின் மேலாதிக்கம் குறைக்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாடுகள் குரல் கொடுக்க தொடங்கிய நிலையில் தமிழர்கள் அறவழி போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கி விட்டார்கள்.

எல்லாவற்றுக்கும் ஒரே வழி ராணுவத்தின் ஆதிக்கத்தை  மீண்டும் கொண்டு வருவதுதான். அதற்கு பயங்கர வாதிகளின் ஆபத்து இருந்தால் தான் முடியும். 

நடந்து முடித்த பயங்கரவாதிகள் தாக்குதல் அவசர நிலை பிரகடனத்துக்கு வழி ஏற்படுத்தி கொடுத்து விட்டது.

ஆக இதனால் பயன் அடையப் போவது சிங்கள பௌத்த தீவிரவாதிகள்தான்.  தாக்குதல் பற்றி உளவு அமைப்பு பத்து நாட்களுக்கு முன்பே எச்சரித்தது என்பவர்கள் ஏன் மெத்தனமாக இருந்தார்களாம்? நடக்கட்டும் என்று காத்திருந்தர்களா ?

பயன் அடையப்போகிறவர்கள் தான் இதை நிகழ்த்தி இருக்க வேண்டும்  என்ற எண்ணம்  தோன்றுகிறதா இல்லையா?

             ஒரு சிங்கள அமைச்சரின் மகன் தன்னை தன் தந்தை  சர்ச்சுக்கு போகவேண்டாம் என்று  தடுத்ததாக கூறியிருக்கிறார். முன்கூட்டியே குண்டு வெடிக்கும் என்று தெரிந்தவர்தானே எச்சரித்திருக்க முடியும்.

இன்டெர் போல் இதை விசாரிக்க ஒரு குழுவை அனுப்ப போவதாக கூறியிருக்கிறது.

மனித வெடிகுண்டு என்கிறார்கள். அதுதான் இடிக்கிறது. எவ்வளவு சதி செய்தாலும் சிங்களர்களையே மனித வெடிகுண்டாக மாற்றியிருக்க முடியாது. மனித வெடிகுண்டு என்பதே பொய்யாக இருந்தால்? இறந்து கிடந்தவர்களில் யார் அப்பாவி யார் பயங்கரவாதி என்று எப்படி கண்டறிவது?

மனிதத்தை மதம் மாய்த்திருக்கிறது. 

பயங்கரவாதம் இந்தியாவில் நிகழ்த்தப்பட்டது. பாகிஸ்தானில் மையம் கொண்டிருக்கும் பயங்கரவாதிகள் அதை நடத்தினார்கள். அவர்களுக்கும் ஸ்ரீலங்கா சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

குண்டு வெடிப்புகளை கண்டித்த தமிழ் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இதனால் தமிழர் பிரச்னை தீர்வும் தள்ளிப் போகும் என்பதையும் கவலையுடன் தெரிவித்து இருக்கிறார்.

எல்லா கோணங்களிலும் ஆராய வேண்டும் என்பதே பொதுமேடையின் கருத்து.

இந்தியாவும் தன் பங்கை செலுத்தி உண்மையை கொண்டு வர முயற்சி  செய்ய வேண்டும். நமக்கும் அக்கறை இருக்கிறதே??!!

7 பேர் இறந்தபின்னும் பிடிக்காசு வாங்க நின்ற பக்த மிருகங்கள்??!!

திருச்சி அருகே முத்தையம்பாளயத்தில் கருப்புசாமி கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அமாவாசையில் சிறப்பு பூசை நடத்தி அருள்வாக்கு கூறும் பூசாரி தனபால் பூசை முடித்து பக்தர்களுக்கு பிடிக்காசு வழங்குவதை ஒட்டி பல மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினார்கள்.

பிடிக்காசை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

அப்போது கூட்ட மிகுதியால் பக்தர்களுக்கு இடையே போட்டாபோட்டி ஏற்பட்டு ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு முன்னேறி செல்ல முயன்ற போது இரும்பு தடுப்பு சரிந்து விழுந்து அதன் கீழ் சிலர் சிக்கி இருக்கின்றனர். கீழே விழுந்தவர்களை மற்றவர்கள் மிதித்துக் கொண்டு சென்று இருக்கிறார்கள். அதில் சிக்கி நான்கு பெண்கள் உட்பட ஏழு பேர் அதே இடத்தில இறந்திருக்கிறார்கள். 

எல்லாம் 50-60 வயதுடையவர்கள். 12 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப் பட்டதா மனு கொடுத்தார்களா இல்லையா என்பது தெரியவில்லை. பூசாரிக்கு அந்த முன்னேற்பாடு செய்ய தெரியவில்லையா ஆலோசகர்கள் இல்லையா என்பதும் தெரியவில்லை.

அதற்குபின் நடந்ததுதான் கொடுமை. ஏழு பேர் இறந்து கிடக்கையில் விழா தொடர்ந்து நடந்திருக்கிறது. பூசாரியும் தொடர்ந்து ஏராளமான மூட்டைகளில் சில்லறை காசுகளை நிரப்பி வைத்துக் கொண்டு பிடிக்காசு வழங்கிக் கொண்டு இருந்திருக்கிறார். பக்தர்கள் என்போரும் தங்களுக்கு பிடிக்காசு  கிடைத்தால் போசும் என்ற மனநிலையில் பூசாரியை நோக்கி சென்று கொண்டு இருந்திருக்கிறார்கள். 

மாவட்ட ஆட்சியர் அங்கு வந்து எச்சரிக்கை செய்த பின்னர்தான் பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டிருக்கிறது.

இந்த மிருகங்களை பக்தர்கள் என்று யாரேனும் ஏற்றுக் கொள்வார்களா? பக்தர்கள் என்று இவர்கள் சொல்லிக் கொள்ளலாமா?

தமிழ்நாட்டில் பக்தர்கள் என்பவர்களின் தன்மை எப்படிப் பட்டது என்பதற்கு இதைவிட ஒரு சான்று இருக்க முடியாது.

பிரதமர் மோடி இறந்தவர்களுக்கு இரண்டு லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு  தலா ஐம்பதாயிரமும் அறிவித்திருக்கிறார். முதல்வர் தலா ஒரு லட்சம் அறிவித்தார்.

அவர்களுடைய நம்பிக்கை சரியா இல்லையா என்பது வேறு. அது அவர்கள் உரிமை.

                 ஆனால் சக மனிதர்கள் இறந்திருக்கிறார்களே என்ற உணர்வைக்கூட  ஒரு நம்பிக்கை தடுக்குமானால் அது பக்தியா முட்டாள்தனமா??!! 

காவல்துறை ஏன் தன் கடமையில் இருந்து தவறியது என்பதற்கும் ஒரு விசாரணை தேவை. பூசாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விசாரணை நடக்கட்டும்.

தமிழ் அமைப்புகள் இதிலும் கவனம் செலுத்த வேண்டும்..

இந்து அறநிலைய துறை என்பது சொத்து பாதுகாப்புக்கு மட்டுமல்ல. மக்களை வழி நடத்தவும் வேண்டும். நம்பிக்கையின் பேரால் நடக்கும் அத்துமீறல்களை அனுமதிப்பது அல்ல மத சுதந்திரம்.