Home Blog Page 42

ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார்??!! பின்னணியில் பிரதமர் அலுவலகமா?

பெரிய மனிதன் நல்லவனாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை.

அதுவும் பாலியல் புகாரில் சிக்கிய பிறகு அந்த அனுமானம் அர்த்தமற்றது.

அதேநேரம் சதிவேலை என்ற குற்றச்சாட்டை ஒதுக்கி விடமுடியாது. எந்த குற்றச்சாட்டும் அதனதன் சாட்சியங்களின் அடிப்படையிலேயே முடிவு கட்டப்பட வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது 35 வயது முன்னாள் பெண் உதவியாளர் கூறியிருக்கும் குற்றச்சாட்டும் அந்த வகையை சேர்ந்ததுதான்.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெறப் போகிறவர் அவர். முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது குற்றச்சாட்டு கூறிய நான்கு நீதிபதிகளில் இவரும் ஒருவர்.    அவரது சட்ட அறிவும் பாரபட்சமற்ற தீர்ப்புகளும் ஐயத்துக்கு அப்பாற்பட்டவை.  பணத்தால் விலைக்கு வாங்க முடியாதவர் என்று ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியை புகழ்வதே அவமானம்.  அப்படியென்றால் மற்றவர்கள் என்ற கேள்வி தானாகவே எழுமே?

அந்த பெண் உச்சநீதிமன்றத்தில் குறைந்த காலமே பணியாற்றியிருக்கிறார். அவரது கணவரும் கணவரின் சகோதரரும் தலைமைக் காவலர்கள். குற்றச்சாட்டு கூறிய பெண்ணும் கணவர் கணவர் சகோதரர் ஆகியோரும் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள்.

குற்றச்சாட்டை 22 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் பிரமாண வாக்குமூலமாக அனுப்பி வைக்கிறார். நான்கு இணைய தளங்களிலும் அந்த  வாக்குமூலம் வெளியாகிறது. அதன் அடிப்படையில் அரசு தலைமை வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முன்வைத்து வாதிடுகிறார்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதினைந்து நிமிடம் தன்னிலை விளக்கம் அளிக்கிறார். விசாரணையை மற்ற நீதிபதிகள் நடத்தட்டும் என்கிறார். அப்போது அவர் கூறிய வார்த்தைகள் தான் மிக முக்கியமானவை. பிரதமர் அலுவலகத்தின் மீதே சந்தேக ரேகை படரும் வகையில் அது இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

” என்மீதான பாலியல் புகார் அடிப்படை ஆதாரம் அற்றது. நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. எனது பனிக்காலம் முடியும் வரை பயமின்றி செயல் படுவேன். 20 ஆண்டு கால சுயநலமில்லாத என் சேவையில் தற்போது கூறப்பட்டுள்ள புகார் நம்ப முடியாதவை.

அடுத்த வாரம் மிக முக்கியமான வழக்குகளை விசாரிக்க உள்ள நிலையில் இது போன்ற பாலியல் புகார் தெரிவிக்கப்  பட்டுள்ளது. பாலியல் புகார் கூறிய பெண் குற்றப்பின்னணி உள்ளவர். அவர் மீது ஏற்கனெவே இரண்டு எப்ஐஆர்-கள் உள்ளன. அவர் ஒன்றரை மாதங்கள் மட்டுமே பணியாற்றினார். அப்போதே இந்த புகார் கூறப்பட்டது.

இது குறித்து பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று கருதினேன். எப்படி அவர் உச்சநீதி மன்றத்தில் வேலைக்கு சேர்ந்தார்? நீதிமன்றத்தின் மாண்பைக் குலைக்க மிகப் பெரிய சதி நடக்கிறது என சந்தேகிக்கிறேன். இதே நிலை தொடர்ந்தால் நேர்மையானவர்கள் நீதித் துறைக்கு வேலைக்கு வரவே தயங்குவார்கள்.

என்னிடம் பணம் பிடுங்க முயற்சித்து முடியாததால் இந்த புகார் கொடுக்கப் பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகள் பணியாற்றியும் என்னிடம் 6.80 லட்சம் மட்டுமே வங்கிக்கணக்கில் இருப்பு உள்ளது. இதை ஒரு சாதாரண உதவியாளர் மட்டுமே கூறுவதாக நான் நினைக்க வில்லை. மிகப்பெரிய சக்தி இதன் பின்னால் இருக்க வேண்டும்.  இரண்டு பதவிகள்தான் முழு சுதந்திரத்துடன் இயங்க கூடியவை. ஒன்று பிரதமர் மற்றொருவர் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி. அடுத்து வருகிற வாரங்களில் தலைமை நீதிபதி விசாரிக்க இருக்கிற மிக முக்கியமான வழக்குகள், தேர்தல் நேரத்தில், விசாரணைக்கு வர இருக்கிற நிலையில் அவர்கள் தலைமை  நீதிபதியை அசைத்துப் பார்க்க விரும்புகிறார்கள். நீதித்துறை அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறது என்பதை நான் நாட்டுக்கு சொல்ல விரும்புகிறேன். ” 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்த கருத்தை அரசு வழக்கறிஞர் மேத்தா, கே கே வேணுகோபால், வழக்கறிஞர் சங்க தலைவர் ராகேஷ் கன்னா போன்றோர் ஆமோதித்தனர்.

    தலைமை நீதிபதி குறிப்பிட்ட அந்த முக்கியமான வழக்குகள், ராகுல் காந்தி  மீது பாஜக எம்பி மீனாட்சி லேகி கொடுத்த நீதிமன்ற அவமதிப்பு புகார் , நரேந்திர மோடியின் வாழ்க்கை  திரைப்பட வெளியீட்டிற்கு தேர்தல் கமிஷன் அளித்த தடை, தமிழ்நாட்டில் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்கப் பட்ட லஞ்சப் பணத்தால் தேர்தலை தள்ளி வைக்கக் கோரும் மனு, போன்றவையாகும். அதற்கும் முன்பு ரபேல் விமான கொள்முதல் ஊழல் வழக்கை தள்ளுபடி செய்ததை பத்திரிகைகள் வெளியிட்ட ஆவணங்கள் அடிப்படையில் மறுஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் தீர்மானித்தது குறிப்பிடத் தக்கது. 

எல்லாம் ஏதோ ஒருவகையில் பாஜக தொடர்புடையவை.

 ” பணத்தால் என்னை விலைக்கு வாங்க முடியாதென்று என் நல்ல பெயரைக் கெடுத்து நீதித்துறையை அசைத்துப் பார்க்க இந்த புகாரை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஊடக செய்திகளுக்கும் இதற்கும் ஒரு ஒற்றுமை இழை ஓடுவதை என்னால் உணர முடிகிறது”. என்கிறார் ரஞ்சன கோகாய். 

மற்ற இரண்டு நீதிபதிகள் ஆன அருண் மிஸ்ராவும் சஞ்ஜீவ் கன்னாவும் இதை விசாரிக்க முடிவு செய்தபோது இதை பத்திரிகைகள் பிரசுரிக்க தடை ஏதும் இல்லை என்றவர்கள் ஆனால் அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள் .

அந்தப் பெண் கொடுத்த பிரமாண வாக்குமூலம் நான்கு இணைய தளங்களில் முழுவதுமாக வெளியாகி இருக்கிறது. அதில் சில ஆவணங்களையும் அவர் இணைத்துப் இருக்கிறார். அது அவரே வரைந்தது போலவே இல்லை. ஒரு நிபுணத்துவம் வாய்ந்த வழக்கறிஞர் வடிவமைத்து போலவே இருக்கிறது. எனவே யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என்பதை தெளிவாகவே உணர முடிகிறது. ஆனால் அது உண்மையா புனைந்ததா என்பதை விசாரணை மட்டுமே வெளிக்கொணரும்.

தன்னை முதலில் சகஜமாக நடத்தியது. தன் மைத்துனருக்கு உச்ச நீதிமன்றத்தில் வேலை வாங்கி கொடுத்தது. அதற்கு நீ என்ன செய்வாய் என்று நீதிபதி கேட்டது.  அவராகவே தன்னை அணைக்க முயற்சித்தது. தான் தள்ளி விட்டு விட்டு வெளியே ஓடி வந்தது.  தன்னையும் தன் கணவரையும் அரசு விழாவுக்கு அழைத்து உபசரித்தது.   தன்னிடம் தன் கைப்பட பல விபரங்களை எழுதி வாங்கிக் கொண்டது. தன்னை அழைத்து நீதிபதியின் மனைவியின் முன்னால் நிறுத்தி அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தது. பிறகு பணி இட மாற்றம் செய்து கடைசியில் தன்னை மட்டுமல்லாமல்  தன் உறவினர்களையும் பணி நீக்கம் செய்தது  என்று அந்த பிரமாண வாக்குமூலம் ஒரு நீண்ட கதையாக தொடர்கிறது.

காலமும் இதில் மிக முக்கியம். 2018ம் ஆண்டு ஆகஸ்டு 27ம் தேதி தலைமை நீதிபதி வீட்டு அலுவலகத்துக்கு பணி நியமனம் செய்யப்பட்ட அந்த பெண் தனக்கு இழைக்கப் பட்ட பாலியல் தொல்லை அதே ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் தேதி நீதிபதி வீட்டில் இழைக்கப் பட்டதாக கூறுகிறார். ஆனால் அந்த புகாரை 2019ம்  ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ம் தேதிதான் பிரமாண வாக்குமூலம் ஆக நீதிபதிகளுக்கு அனுப்புகிறார். ஏன்  இந்த தாமதம்? இடையில் அவரும் அவரது உறவினர்களும் பணி நீக்கம் செய்யப் பட்ட போது அதற்கு  இந்த பாலியல் சம்பவம்தான் காரணம் என்று அவர் ஏன் சொல்லவில்லை?

ஏன் இந்த விசாரணையையும் உச்ச நீதிமன்றமே கண்காணிக்க கூடாது? புலனாய்வு அமைப்புகள் தவறு செய்யாது என்பதை எப்படி  நம்புவது? ஏனென்றால் இதைப்போல் ஒரு குற்றச்சாட்டு இதுவரை எழும்பியதில்லை. நீதித்துறை தான் குரலற்றவர்களின் கடைசிப்  புகலிடமாக இருக்கிறது. 

அதுவும் சுதந்திரமாக இல்லை என்றால் ஜனநாயகம் பிழைப்பது அரிது.    ஜனநாயகத்திலேயே சர்வாதிகாரத்தை நியாயப்படுத்தி பேசுபவர்கள் அதிகாரம் நிலைத்து விட்டால் என்ன செய்ய மாட்டார்கள்?

பிரதமர் அலுவலகத்தின் மீது சந்தேக நிழல் படிந்திருக்கிறது. அதை துடைத்து  எறியவேண்டிய கடமை அவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. ஏனென்றால் தலைமை நீதிபதி இரண்டு நிறுவனங்களை மட்டுமே குறிப்பிடுகிறார். ஒன்று பிரதமர் இரண்டாவது தலைமை நீதிபதி. அதுவும் அடுத்த வாரம் வர இருக்கிற முக்கியமான வழக்குகளை குறிப்பிடுகிறார். அவை மத்திய அரசும் பிரதமர் அலுவலகமும்  சம்பத்தப்பட்டவை. அவைகளை அவர் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?

ஆளுநர் பந்வாரிலால் புரோஹித் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டபோது அவசர அவசரமாக ஆளுநர் மாளிகை அதிகாரி ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமித்து ஒரு அறிக்கையை வாங்கி தவறு ஏதும் நிகழவில்லை என்று அவர் காட்டிய துரிதம்தாம் அவர் மீது சந்தேகத்தை அதிகப் படுத்தியது.

அதுவும் வரலாற்றில் இல்லாத வகையில் கூற்றம் சாட்டப்பட்ட நிர்மலாதேவிக்கு ஒரு வருடம் வரை பிணை கிடைக்காமல் செய்தபோதும் பிணையில் விட்ட பிறகும் அவர் ஏதும் பேசி விடக் கூடாதென்று அதிகாரிகள் காட்டும் தேவைக்கதிகமான கண்டிப்புகளும் சந்தேகத்தை இன்னும் அதிகப் படுத்திக்கொண்டே செல்கின்றன. என்றாவது ஒருநாள் உண்மை வெளியில் வந்துதானே தீர வேண்டும்.

அதைப்போல செய்யாமல்  ரஞ்சன் கோகாய் தான் மீது குற்றச்சாட்டு இருக்கும்போது அதை அவர் விசாரிக்காமல் மற்ற நீதிபதிகள் வசம் விட்டு விட்டதுதான் சரி.

ஒன்று நடந்தே  ஆக வேண்டும். இரண்டில் ஒருவர் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும். குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் தலைமை நீதிபதி.   இல்லையென்றால் பொய்யாக குற்றம் சாட்டிய பெண்மணியும் அவருக்கு பின்புலமாக இருந்து இயக்கியவர்களும். அவர்கள் பிரதமர் அலுவலகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட. 

சுதந்திர இந்தியா இதுவரை கண்டிராத நீதித்துறையின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு இது. இதை உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் எப்படி கையாளப்  போகிறது என்பதை பொறுத்துத்தான் இந்தியாவில் ஜனநாயகம் பிழைக்குமா மறையுமா என்பதை கணிக்க முடியும்.

பொன்னமராவதி, பொன்பரப்பியில் சாதிய வன்முறையில் தடுமாறும் தமிழர் அடையாளம் ??!!

பொன்பரப்பி – இரண்டாவது முறையாக பிரபலப்படுகிறது.

முதல் முறை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட தமிழரசன் வங்கியை கொள்ளையடிக்கும் போது பொதுமக்களாலேயே கல்லால் அடித்து கொல்லப்பட்டார்.

இப்போது பாராளுமன்ற தேர்தலில் திருமாவளவனின் பானை சின்னத்திற்கு வாக்களிக்க இருந்த குற்றத்திற்காக தலித் வீடுகள் இந்து முன்னணி யினர் – பாமக கூட்டு முயற்சியில் அடித்து நொறுக்கப் பட்டிருக்கின்றன. 

இரு தரப்பும் வழக்கு – சாலை மறியல்  போராட்டம் என்று இறங்கி விட்டார்கள்.    காவல் துறை வழக்கம் போல நடவடிக்கையில் சுணக்கம் காட்டி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி – யாரோ இரண்டு பேர் வெளிநாடு ஒன்றில் இருந்து வாட்ஸ் அப்பில் ஒரு சமுதாயத்தை குறித்து இழிவாக பேசுவது வைரலாக மாவட்டம் முழுதும் பரவி அவர்கள் சாலை மறியல் என்று இறங்க மறு தரப்பினர் மோதலுக்கு தயாராக காவல்துறை 144 தடை உத்தரவு போடும் வரை சென்றிருக்கிறது.

இங்கே முக்குலத்தோர்-முத்துராஜா வகுப்பினரிடையே மோதல் கூர் படுத்தப்படுகிறது. யாரோ இரண்டு பேர் பேசினால் அவன்தானே குற்றம் செய்கிறான். நடவடிக்கை எடுத்தால் பதற்றம் குறையும். காவல் துறை தான்  பொறுப்பு ஏற்று பதட்டத்தை தணிக்க வேண்டும். கால தாமதம் ஆனால் பிரச்னை மற்ற மாவட்டங்களுக்கும் பரவும் என்பது தெரியாதா?

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியை பாமக வினர் கைப்பற்றி வாக்குப் போட்டுக் கொண்டதாக குற்றச்சாட்டு.  தேர்தல் ஆணையம் மறுத்தாலும் போராட்டம் தொடர்கிறது.அன்புமணி ராமதாஸ் தேர்தலுக்கு முன் வாக்குச்சாவடியில் நாம்தான் இருப்போம் என்று உசுப்பேற்றி பேசியதுதான் பிரச்னைக்கு மூலம் என்கிறார்கள்.

வன்னியர் – தலித் ஒற்றுமைக்கு பாட்டாளி மக்கள் கட்சி தடையாக இருப்பது உண்மையா இல்லையா? திருமாவளவன் மட்டும்தான் தலித் மக்களின் அடையாளமா என்றால்  ராமதாஸ் மட்டும்தான் வன்னியரின் அடையாளம் என்பதை எப்படி ஏற்பது?

ஒற்றுமையை விதைக்க வேண்டிய நேரத்தில் பகைமையை விதைக்கிறார்கள்.    தேர்தல் இன்று வரும் நாளை  போகும். தொடர்ந்து ஒன்றாக வசிக்க வேண்டிய மக்களை சாதி, மதம் காட்டி பிரித்து வைப்பது என்ன கொடுமை?!

ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதை விட காவல்துறை தலையிட்டு கடுமையான நடவடிக்கை களை குற்றம் செய்தவர்கள் மீது எடுத்தால்தான் அந்தப் பகுதிகளில் அமைதி திரும்பும். இல்லையென்றால் நீறு பூத்த நெருப்பாக வன்மம் புகைந்து கொண்டே இருக்கும். 

இன்னும் நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தல்கள்  நடக்க வேண்டி இருக்கிறது.   இதுவரையே   பாராளுமன்ற தொகுதிக்கு  வாக்குக்கு ரூபாய் 200-300 யும்   சட்ட மன்ற தொகுதிகளுக்கு ரூபாய் 500, 1000, 4000 என்று கொடுக்கப் பட்டுவிட்டதால் இனி வர இருக்கிற நான்கு தொகுதிகளுக்கும் ரு 5000மும் அதற்கும் மேலும் கொடுக்கப் படலாம் என்கிற சூழ்நிலைதான் நிலவுகிறது.

அங்கும் மக்களை திசை திருப்ப சாதி கலவரங்களை தூண்டி வாக்குகள் வாங்கவும் திட்டமிடும் வாய்ப்புகள் அதிகம். எனவே காவல் துறை மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கால கட்டம் இது.

தேர்தல் லாபத்திற்காக மக்களின் எதிர்காலத்தையே பாழாக்க தயங்காத அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு ஒதுக்க  வேண்டும் தமிழ்ச்சமுதாயம்.

சாதியை ஒழித்து தமிழனாய் ஒன்றிணைய வில்லையென்றால் தமிழன்னை நம்மை மன்னிக்கவே மாட்டாள். நமது அடையாளம் தமிழர் என்பது உண்மையானால் தமிழ் ஒன்றே தமிழர்களை ஒன்றிணைக்கும். சாதி மதங்கள் அல்லவே அல்ல. ஏனெனில் இரண்டுமே இடையில் வந்தவை.

நாத்திகர் என ஏன் சான்றளிக்கக் கூடாது? குஜராத் உயர் நீதிமன்றம் கேள்வி??!!

ராஜ்வீர் உபாத்யாய ஒரு ஆட்டோ ரிக்சா ஓட்டுனர்.

அவர் கரோடா பிராமின் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்.

வாழ்க்கை முழுதும் சாதி காரணமாகவே ஒவ்வொரு கட்டத்திலும் போராடிக் கொண்டே வாழ்ந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்து மதத்தில் இருந்து விலக முடிவெடுத்தார். ஆனால் வேறு எந்த மதத்திலும் சேர விரும்பவில்லை. எனவே நாத்திகர் ஆக வேண்டும் என முடிவெடுத்தார்.

குஜராத்தில் ‘மத சுதந்திர சட்டம்” அமுலில் உள்ளது. அங்கு மதம் மாறினால் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.

அதுவே வேடிக்கை. மத சுதந்திரம் அமுலில் இருந்தால் எந்த குடிமகனும் தன் விருப்பப் படி மதம் மாற உரிமை உண்டு என்றுதானே பொருள். அதற்கு எதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி?. வேண்டுமானால் அவருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று விதி வைக்கலாம். அனுமதி வேண்டும் என்பது சுதந்திர உரிமையை கட்டுப்படுத்துவதாக ஆகாதா?

ஆனால் ராஜ்வீர்  மாவட்ட ஆட்சியரிடம் தான் இந்து மதத்தில் இருந்து நாத்திகர் ஆகி விட்டதாகவும் அதற்கான சான்றிதழை தரும்படியும் கேட்டார். அதை இரண்டு ஆண்டுகள் கிடப்பில் போட்ட மாவட்ட ஆட்சியர்   மத சுதந்திரம் என்பது ஒரு மதத்தில் இருந்து வேறொரு மதத்துக்கு மாறுவது தானே தவிர நாத்திகம் என்பது ஒரு மதம் ஆகாது என்பதால் சான்று வழங்க முடியாது என மறுத்தார்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவை எதிர்த்து மேன்முறையீடு செய்த ராஜ்வீரின் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அரசுக்கு அறிவிப்பு  அனுப்ப உத்தரவிட்டு ஏன் நாத்திகர் என சான்று வழங்க கூடாது என கேட்டு வழக்கை ஒத்தி வைத்திருக்கின்றனர்.

மத சுதந்திர சட்டத்தில் தகுந்த திருத்தம் செய்யும்படியும் ராஜ்வீர்  கேட்டுக்  கொண்டிருக்கிறார். ஒரு சட்டத்தையே ஒரு மாவட்ட ஆட்சியர் எப்படி  திரித்து கூறுகிறார் பாருங்கள். ஐஏஎஸ் படித்த அவருக்கு சட்டம் தெரியாமல் இருக்க  முடியாது.

பொதுமேடை வலியுறுத்தி வருவதைப் போல நாத்திகராக இல்லாமல் அதே நேரம் எந்த மதத்தையும் சாராமல் ஆத்திகராக இருப்பவர்களையும் அங்கீகரிக்க வேண்டும்.     

அதைத்தான் வள்ளுவரும், திருமூலரும், வள்ளலாரும் வலியுறுத்தி வந்தார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதுவே தமிழர் ஆன்மிகப் பாதை. 

அதுவே உண்மையான ஆன்மிகப் பாதை. அது தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் அகில உலகத்தாருக்கே வழி காட்டும் பாதை.

உலகில் மத சண்டைகள் தீர இது ஒன்றே வழி.!

13% மட்டுமே வாக்களித்த ஸ்ரீநகர் தொகுதி இந்தியாவின் ஒரு பகுதி ??!!

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக சட்டப்படி நீடிக்கிறது. ஆனால் உணர்வு பூர்வமாக காஷ்மீரிகள் இந்தியர்கள் ஆனார்களா?

ஆறு பாராளுமன்ற தொகுதிகள் கொண்ட மாநிலம் இரண்டு முஸ்லிம் குடும்பங்களால் ஏமாற்றப்பட்டு வந்திருப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.    அப்துல்லா குடும்பத்தையும் முப்தி குடும்பத்தையும் குறித்தே அவர் பேசினார்.

இந்து முஸ்லிம் பௌத்த மதங்களால் பிரிக்கப்பட்ட பூமியாக அந்த மாநிலம் விளங்குகிறது.

நேற்று நடந்த தேர்தலில் வெறும் 13% மட்டுமே ஸ்ரீநகர் தொகுதியில் பதிவானது.

அதேநேரம் இந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் 68% வாக்கு பதிவானது.

இவ்வளவு குறைந்த அளவு மக்கள் பங்கேற்று உள்ள இந்த தேர்தல் எப்படி மக்கள் ஆட்சியை பாதுகாக்கும்.?

செல்லுபடியாகும் தேர்தலுக்கு குறைந்தபட்சம் எத்தனை சதம் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்கு ஒரு விதி வேண்டும்.

இல்லாவிடில் தேர்தல் ஒரு கேலிக்கூத்து ஆகிவிடும்.

நேற்று வரை பாஜக வுடன் கூட்டு வைத்து இருந்த பிடிபி கட்சி இன்று எதிரியாகி விட்டது. ஆக நான்குமுனை போட்டி நிலவுகிறது.

யார் வென்றாலும் குறைந்த சத ஆதரவே இருக்கும்.

கேள்விக்குறியாகவே நீடிக்கும் காஷ்மீர் பிரச்னை எப்போது முடிவுக்கு  வரும் ? 

பணத்தை பதுக்கிக் கொண்ட ஆளும் கட்சி நிர்வாகிகளால் காப்பாற்றப்பட்ட ஜனநாயகம்??!!

கொள்ளையடித்தவர்கள் இந்த தேர்தலில் பணத்தை இறக்கி மீண்டும் பதவிக்கு வந்து மீண்டும் பணத்தை கொள்ளையடிக்கலாம் என்ற திட்டத்தை அந்தந்த கட்சி நிர்வாகிகளே தோற்கடித்திருக்கிறார்கள்.

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு ஓட்டுக்கு ரூபாய் 4000 வீதம் ஆளும் கட்சி வேட்பாளர் ஒதுக்க அதை நிர்வாகிகள் 2000 என சில இடங்களிலும் 1000 என பல இடங்களிலும் விநியோகித்திருக்கிறார்கள்.

ஒரு சட்டமன்ற தொகுதியின் சராசரி வாக்குகள் இரண்டு லட்சம் என்றால் நாலாயிரம் ரூபாய் வீதம் கொடுத்தால் எண்பது கோடி வேண்டும். பாதிப்பேருக்கு இரண்டாயிரம் என்றால் கூட இருபது கோடி. 18 தொகுதிகளிலும் சுமார்  300-400  கோடிகள் ஆளும் கட்சி செலவழித்திருக்கலாம். அதையும் மீறி யாரும் வெற்றி பெற்றால் அதுதான் மக்கள் சக்தி. 

டிடிவி கட்சி பல இடங்களில் ரூபாய் 500 எனவும் சில இடங்களில் 1000 எனவும் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் யாருமே எல்லாருக்கும் கொடுக்கவில்லை. பணக்காரர்கள் யார் என்று பார்த்து அவர்களை தவிர்த்தே விநியோகம். நூறு சதம் திட்டமிட்டு கடைசியில் விநியோகம் செய்தது சுமார் ஐம்பது அல்லது அறுபது சதம் பேருக்குத்தான். மீதியை கட்சி நிர்வாகிகள் பங்கு போட்டுக்கொண்டுவிட்டனர். அதனால் கட்சிக்கு வர வேண்டிய முழு வாக்குகளும் வந்தன என்று சொல்ல முடியாத நிலையை உருவாக்கி விட்டனர்.

அதிலும் பாராளுமன்ற தொகுதிகளில் யாருமே எல்லாருக்கும் கொடுக்கவில்லை என்பது நல்ல செய்தி. இல்லை என்று சொல்லாமல் நூறு இருநூறு என்று  கொடுத்திருக்கிறார்கள்.

பல இடங்களில் அதிமுகவிடம்  பணம் வாங்கிக் கொண்டு தினகரனுக்கு வாக்களித்த  கதையும் அரங்கேறி இருகிறது.

பணம் பல விதமாக விளையாடினாலும் தேர்தலை மாற்றியமைக்கும் விதத்தில் அது அமையவில்லை.

மக்கள் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில்தான் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அசம்பாவிதங்கள் நடந்திருக்கலாம். சில இடங்களில் வாக்கு சாவடிகளை கைப்பற்றும் முயற்சிகளை ஆளும் கட்சி மேற்கொண்டது.

அன்புமணி ராமதாஸ் சொன்னது போல் வாக்கு சாவடியில் நாம்தான் இருப்போம் என்று தொண்டர்களை உசுப்பேற்றி வைத்திருந்தாலும் அவர்களால் முழுமையாக அதை செய்ய முடியவில்லை.

நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.  தேடிக்கண்டுபிடித்து வாக்களித்தவர்கள் சொன்னார்கள்.

பெரிதும் பேசப்பட்ட தினகரன் கட்சி எங்கும் வெல்லமுடியாது என்றாலும் பல இடங்களில் கணிசமாக வாக்குகளை பெறலாம். பரிசுப் பெட்டகத்தில் எதையாவது வைத்து கொடுப்பார் என்று எதிர்பார்த்திருந்த வர்களுக்கு ஏமாற்றம்தான்.

            அதிலும் பாராளுமன்ற தொகுதிகளில் யாரும் அதிக அக்கறை காட்டி பணம் செலவழிக்கவில்லை. பெருந்தொகை முதலீடு 18 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில்தான். ஆட்சி நீடிக்க வேண்டுமே??!! 

பணத்தைப் பதுக்கிக் கொண்ட ஆளும் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். இல்லையென்றால் மொத்தமாக வெற்றி பெற்று ஊழலை சட்ட பூர்வமாக ஆக்கி விடுவார்கள்.

பண மழையில் கேலிக்கூத்தாகும் பொதுத்தேர்தல் ??!! நிமிர்ந்து நிற்குமா மக்கள் சக்தி!!??

ஜனநாயகம் சோதனைக்கு உள்ளாகியிருக்கிறது.

இரண்டு நாளாக பொழியும் பண மழை வாக்காளர்களை முற்றிலும் நனைத்து வருகிறது.

வரும் செய்திகள் நன்றாக இல்லை.

பணம் கொடுப்பது கொள்ளையடித்தவர்கள் என்றால் அது ஏன் இன்னும் எனக்கு வரவில்லை என்று கேட்பவர்கள் கொள்ளையில் பங்கு கேட்பவர்கள் அல்லவா?   

எங்கும் பணம் கொடுக்க வந்தவர்களை மக்கள் விரட்டி அடித்தார்கள் என்ற செய்தி வரவில்லையே?

அந்த நல்ல செய்தி வந்தால்தான் ஜனநாயகம் பிழைக்கும்.

தேர்தல் ஆணையம் ஓரணியில் நின்றுவிட்டது. அவர்களை இனி மாற்ற முடியாது.

உயர் நீதிமன்றம் கைவிரித்து விட்டது. அதிகாரமில்லை தேர்தலை நிறுத்த.

கடைசி நம்பிக்கை மக்கள் சக்தி. அது விழித்து எழுகிறதா என்பது மட்டுமே ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்பு.

பல்லில்லை என்ற தேர்தல் ஆணையத்தை கண்டித்த உச்ச நீதிமன்றம்??!!

சாதி, மதம் காரணமாக வெறுப்பு அரசியல் செய்பவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கேட்டதற்கு அதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என தேர்தல் கமிஷன் அளித்த பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.

ஏன் என்றால் இதற்கு முன் எந்த தேர்தல் கமிஷனும் தவறுகளை தடுத்தது இல்லை.    எல்லாம் முடிந்த பின் எங்களால் தடுக்க முடியவில்லை என்று ஒரு அறிக்கை கொடுப்பார்கள். அவ்வளவுதான்.

தேர்தல் நடத்தை விதிகள் எல்லாம் பெயரளவுக்குத்தான் .

தேர்தல் நடைமுறைகளை யோகி ஆதித்யநாத்தும் மாயாவதியும் பாழ் படுத்தி விட்டார்கள் என்று தேர்தல் கமிஷன் சொல்கிறது.

அதிக பட்சம் எங்களால் ஒரு அறிவிப்பு அனுப்பி விளக்கம் கேட்டு அதில் தவறு இருந்தால் அறிவுரை கூற முடியும் என்று தேர்தல் ஆணையம் பதில் சொன்னது.

அறிவுரை சொல்வதால் என்ன ஆகிவிடப் போகிறது? அதை அவர்கள் கேட்க வில்லை என்றால் யார் தண்டிப்பது?

உச்ச நீதி மன்றம் தானே முன்வந்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவுகள் 123(3) மற்றும் 125ன் படி யாராவது வேட்பாளரோ அவரது பிரதிநிதியோ மதத்தின் பேரால் வேண்டுகோள் விடுத்தாலோ வெறுப்பை தூண்டும் வகையில் பேசினாலோ அவரை தகுதி நீக்கம் செய்யம் முடியும் என்பதை சுட்டிக் காட்டி தேர்தல் கமிஷன் ஏன் அதன்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

அப்படிப்பார்த்தால் முதலில் பிரதமர் மோடி மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரைத்தான் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். செய்யுமா தேர்தல் ஆணையம்?

“நான் சாமியார். நான் ஒட்டு கேட்கிறேன். கொடுக்கவில்லையென்றால் உங்களுக்கு பாவம் சம்பவிக்கும். நான் என்ன உங்கள் சொத்தையா கேட்கிறேன்” என்று மதத்தின் பேரால் ஒட்டுக் கேட்கும் சாக்ஷி மகராஜ் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னும் சபரிமலை பாரம்பரியத்தை காப்பாற்றியே தீருவேன் என்கிறார் மோடி. அதற்கு அரசியல் சாசன பாதுகாப்பை தேடித் தருவேன் என்கிறார். அரசியல் சாசனத்தை திருத்தப் போகிறாரா? எப்படி திருத்தப் போகிறார்? என்ன திருத்தம்? முற்று முழுதும் மத பிரச்னைகளை பரியே பேசி வாக்குக் கேட்கிறது பாஜக. என்ன நடவடிக்கை எடுக்க முடியும்.?

கடந்த 30 ஆண்டுகளாக ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் கூட குஜராத்தில் இருந்து தேர்தெடுக்கப்படாமல் பார்த்தக் கொள்கிறது பாஜக. அது எப்படி அனைத்து மக்களுக்குமான கட்சியாகும்?

சூழ்ச்சியும் வஞ்சகமும் செய்வதற்குதானா தேர்தல் ஆணையம்? பாஜக – அதிமுக – தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து இந்த தேர்தலை சந்திக்கிறார்கள் என்ற முத்திரை வலுவாக விழுந்து விட்டது.

பாஜக சுட்டிக் காட்டும் நபர்கள் மீது வருமான வரித்துறை ஏவப்படுகிறது. ஏதோ ஆளும் கட்சிகாரர்கள் மட்டும் புனிதர்கள் போல. எல்லாருக்கும் ரூபாய் 2000 கொடுத்து விட்டார்கள் ஆளும் கட்சிக்காரர்கள். எல்லா மக்களுக்கும் இந்த உண்மை தெரியும். ஆனால் எதிர்கட்சிக்காரன் ரூபாய் 300 கொடுக்க முயற்சித்தான் என்று வழக்கு? யார் எவ்வளவு கொடுத்தாலும் தவறுதான். அதாவது நடவடிக்கை இரண்டு பேர் மீதும் எடுக்கப்பட்டால்.

தன் மீது பழி வந்து விட அனுமதிக்கக் கூடாது என்ற உணர்வு தேர்தல் ஆணையத்துக்கு இல்லவே இல்லை.

வேலூரில் மட்டும் பாராளுமன்ற தேர்தலை நிறுத்தி வைத்திருக்கிறதே தேர்தல் ஆணையம் யார் சொல்லி?

உயர் நீதிமன்றம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

மக்களின் நம்பிக்கையை சுத்தமாக இழந்து விட்டது தேர்தல் ஆணையம்.   

அத்தகைய அமைப்பு நடத்தும் தேர்தல் மீது மக்களுக்கு எந்த அளவு நம்பிக்கை வரும்??

ஓட்டுக்கு ரூபாய் 1000, 2000, 5000 என எகிறிக்கொண்டிருக்கும் விலைவாசி ??!

முந்தைய நாள் தான் ஓட்டுக்கு ரூபாய் 300 விநியோகம் தொடங்கிவிட்டதாக எழுதியிருந்தோம்.

இப்போது வந்து கொண்டிருக்கும் செய்திகள் நம்ப முடியாமல் அதிர்ச்சி தந்து கொண்டிருக்கின்றன.

அங்கே ஓட்டுக்கு 1000 தந்து விட்டார்கள் என்றும் இங்கே ஓட்டுக்கு 2000 தந்து விட்டார்கள் என்றும் செய்திகள் வருகின்றன. அதோடு கூட சில இடங்களில் ஓட்டுக்கு ரு 5000 தந்து விட்டார்கள் என்றும் தருவதாக உததரவாதம் தந்திருக்கிறார்கள் என்றும் செய்திகள். உத்தரவாதம்  தந்தவர்கள்  ஆர் கே நகரில் இருபது ரூபாய் டோக்கன் தந்தவர்கள். எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் பாருங்கள்.

       இதற்கிடையில் பலரும் பணமும் வாங்கிக் கொண்டு தங்கள் விருப்பப் படிதான் வாக்களிக்க முடிவு செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள். 

ஜனநாயகத்திற்கு வந்திருக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் இந்த பண ஆதிக்கம்.

சென்ற தேர்தலில் ஒரு நிறுவனம் மூலம் 650  கோடி கொடுத்து ஜெயலலிதா வெற்றி பெற்றார் என்று இப்போது ஒரு ஆங்கில பத்திரிகை எழுதுகிறது.

எங்கள் வாக்குகள் விற்பனைக்கல்ல – என்ற அறிவிப்புகள் எத்தனை ஊர்களில் இருக்கின்றன? 

ஏன் எங்களுக்கு வரவில்லை என்றுதானே கேட்கிறார்கள்!!

இந்த பண ஆதிக்கத்தையும் மீறி  மக்களாட்சி வெற்றி பெற்றால் அதிசயம்தான்.

63 வயது மாயாவதிக்காக ஷூ வை கழற்றிய 80 வயது அஜித்சிங்; திரும்பும் வரலாறு??!!

இன்னமும் நாட்டில் பல பாகங்களில் மேல்சாதி என்று சொல்லிக் கொள்ளும் மக்களுக்கு முன்னால் தலித்துகள் செருப்பு அணிய அனுமதிக்கப்படுவதில்லை.

ஆனால் உபி யில் வரலாற்றை திருப்பிக் கொண்டிருக்கிறார் மகர் சமூகத்தின் தலைவி மாயாவதி. பகுஜன் சமாஜ் கட்சி தலித் மக்களை ஒருங்கிணைத்து அதிகாரத்தை ருசித்த பிறகு எல்லா சமுதாய மக்களையும் பணிய வைக்கும் பணியை மிகவும் லாகவமாக செய்து வருகிறார்.

முதலில் தலித், பார்ப்பனர் முஸ்லிம் கூட்டணியை வெற்றிகரமாக உருவாக்கி ஆட்சியை பிடித்தார். பதவிக்காக பார்ப்பனர்களும் முஸ்லிம்களும் மாயாவதியிடம் அடங்கி போனார்கள். 

இன்று தலித் ஆதரவு இல்லாமல் யாறும் ஆட்சியை  பிடிக்க முடியாது என்ற சூழ்நிலையில் அந்த உண்மையை உணர்ந்து பிற்பட்ட யாதவ் மக்களின் தலைவர் அகிலேஷ் யாதவும் ஜாட் மக்களின் தலைவர் அஜித் சிங்கும் இன்று மாயாவதியுடன் உடன்பாடு செய்து கொண்டு தேர்தலை சந்திக்கிறார்கள். இது மகா கூட்டணி என்று அழைக்கப் படுகிறது.

ஒரு காலத்தின் யாதவ் மக்களும் ஜாட் மக்களும் தான் தலித்துகளை அடக்கி வைத்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இன்று கூட முழுதும் தலித்துகள் அடக்கு முறையில் இருந்து விடுபட்டு விட்டார்கள் என்று கூற முடியாது. ஆனாலும் மாயாவதி தலித்துகளுக்கு வேண்டியது கௌரவம்தான் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

தன் ஆட்சி காலத்தில் கட்சி சின்னமான யானையை மாநிலம் எங்கும் பிரமாண்டமாக உருவாக்கினார்.

தன் உடையிலேயே தான் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்று நிரூபிக்க ஆரம்பித்தார். விலை உயர்ந்த ஆடைகளை அணிய ஆரம்பித்தார். விலை உயர்ந்த நகைகளை அணிய ஆரம்பித்தார். ஏன் மேல் குடிமக்கள் தான் அவற்றை அணிய வேண்டுமா? நாங்கள் அணியக் கூடாதா  என்ற கேள்வி அதில் மறைந்து இருந்தது.

இன்று எல்லா கட்சிகளையும் விட பகுஜன் சமாஜ் கட்சிதான் 650 கோடி ரூபாய் வங்கி டிபாசிட் வைத்திருக்கிறது. அடுத்துதான் சமாஜ்வாதி கட்சியும் தெலுகு தேசம் , காங்கிரஸ், பாஜக கட்சிகள்.

இந்நிலையில் சஹ்ரான்புரில் நடந்த மெகா கூட்டணி கூட்டத்தில் மாயாவதியும் அஜித்சிங்கும் அகிலேஷ் யாதவும் வருகை தந்தார்கள். அப்போது மாயாவதி மேடையில் ஏறியபின் பின்னால் வந்த அஜித்சிங்கை ஷூ வை கழற்றும் படி பிஎஸ்பி கட்சியின் நிர்வாகி ஒருவர் கேட்டுக் கொண்டார். கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் தன் ஷூவை கழற்றினார் அஜித்சிங். இதுபற்றி லோக் தள கட்சியின் நிர்வாகி கூறும்போது மேடையை அஜீத்சிங் புனிதமாக கருதுவதால் ஷூவை கழற்றியதாக சொன்னார்.

உபி யில் மரியாதை தருவதற்காக ஷூவை கழற்றுவது வழக்கம்.

தான் முதல் அமைச்சராக இருந்த போது மாயாவதி தன்னை சந்திக்க வரும் அதிகாரிகள், அமைச்சர்கள் யாரும் ஷூ அணிந்து வந்து சந்திக்க அனுமதித்த தில்லை என்பது வரலாறு. யாரும் அதை பிரச்னை ஆக்கியது இல்லை என்பதும் வரலாறு.   

அதற்கு அவர் சொன்ன காரணம் தனக்கு தூசு அலெர்ஜி என்பது. அதற்காக மற்றவர் ஷூ அணிந்து வருவது எப்படி தூசு பரப்புவது ஆகும் என்பதை யாரும் ஆராய்ந்ததில்லை.

வரலாறு திரும்புகிறது.

குட்கா தடையை ஒவ்வொரு ஆண்டும் நீடிக்கும் மர்மம் என்ன??!!

குட்கா பான் மசாலா பொருட்களுக்கு தடை விதித்து கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

அந்த ஆணை ஒவ்வொரு ஆண்டும் நீடிக்கப்படுவது குறித்து நிரந்தர தடை பிறப்பிக்க நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் ஒருவர்.

பேரம் பேசுவதற்கு அல்லாமல் வேறு எதற்கு இந்த ஒவ்வொரு ஆண்டு தடை?

இதற்கெல்லாம் கூட நீதிமன்றம் சென்றுதான் தீர்வு  காண வேண்டுமா?

அரசு தானாக செய்யாவிட்டால் கூட பரவாயில்லை. ஒரு வேண்டுகோள் வந்தபிறகு கூட சரி நிரந்தரமாக தடை செய்கிறோம்  என்று உத்தரவிட் என்ன தயக்கம்.?

அரசு மக்களின் கோரிக்கைகளை மனிதாபிமானத்துடன் பரிசீலித்து நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் பாதி வழக்குகள் முடிவுக்கு வந்து விடும். 

விஜயபாஸ்கரும் ராஜேந்திரனும் எந்த அளவு இதில் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பது இன்னும் விசாரணை முடியவில்லை.

யார் பதில் சொல்வார்கள்?