Home Blog Page 45

கேரளாவில் ராகுல் போட்டியிடுவது அச்சத்தின் அடையாளமா?

வயநாட்டில் ராகுல் போட்டியிடுவர் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

கேரளாவில் காங்கிரசும் கம்யுனிச்டுகளும் தான் ஆளும் கட்சி எதிர்கட்சிகள்.

ஆனால் இந்தியா முழுதும் பல மாநிலங்களில் இருவரும் ஒரு அணியிலேயே போட்டியிடுகின்றனர்.

மோடியை அகற்ற வேண்டும் என்ற கொள்கையில் ஏனைய மாநிலங்களில் ஒருமித்து இருக்கும் இவர்கள் கேரளாவில் மட்டும் போட்டியிட்டுக் கொள்வது தவறல்ல.

ஆனால் அங்கே காங்கிரசின் தலைவரே போட்டியிடுவதும் அவரை தோற்கடிப்போம் என்று மாநில முதல்வர் பேசுவதும் எதிர்கட்சி ஒற்றுமையை கேள்விக்குறியாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அமேதியில் ராகுலின் வெற்றியில் ஒருவேளை சந்தேகமோ?

தலைவர்கள் இரு தொகுதிகளில் போட்டியிடுவது ஒன்றும் புதிதல்ல. முலாயம் சிங் யாதவ் கூட இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்று ஒன்றை ராஜினாமா செய்தார்.

எதிர்க்கட்சி ஒற்றுமையை இந்த போட்டி சரிக்காமல் இருந்தால் சரி.

ஏ சி சண்முகம் சொல்லித்தான் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டா??!!

இன்னும் பதினைந்து நாளில் பிரச்சாரம் ஓய்ந்து தேர்தல் வரப்போகிறது.

இந்த நேரத்தில் வேலூரில் பாராளுமன்ற வேட்பாளராக நிற்கும் கதிர் ஆனந்தின் தந்தை துரைமுருகன் வீட்டிலும் கல்வி நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருக்கிறது.

தேர்தலுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று அவர்கள் சொல்லலாம். சோதனை நடத்த தடை ஏதுமில்லைதான்.

ஆனால் எதிர்த்து நிற்கும் ஏ சி சண்முகம் கல்வித்துறையில் துரைமுருகனை விட பல  மடங்கு அதிகம் எண்ணிக்கையில் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருபவர்.

நேரம் வரும்போது இதே ஆயுதம் ஏ சி சண்முகம் மீது திருப்பி தாக்காது என்பது என்ன நிச்சயம்?

நேரடியாக அரசியல் ரீதியாக மோத முடியாதவர்கள் இப்படி அரசியல் செல்வாக்கை வைத்துக்கொண்டு முதுகில் குத்துகிறார்கள் என்று துரைமுருகன் பேட்டி கொடுத்திருக்கிறார்.

இப்படியெல்லாம் செய்து ஒருவரை மிரட்டிவிட முடியுமா?

ஏ சி சண்முகம் பாஜக அரசில் செல்வாக்கு பெற்றவராக இருக்கலாம். அதற்காக இப்படி அதிகார மிரட்டலை செய்தால் மக்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டுமே தவிர ஆதரவு கிடைக்காது.

கார்த்தி சிதம்பரத்தின் சொத்து முடக்கம் என்பது இப்போது நடக்கிறது. வழக்கு நடக்குபோதே இப்படி பெயரை கெடுக்கும் விதமாக செயல் பட்டால் விளைவு எதிர் மாறாகத்தான் போகும்.

பாஜக அதிகாரத்தை பயன்படுத்தி எதிரிகளை மிரட்டி வழிக்கு கொண்டு வரும் வேலையை  எல்லா மாநிலங்களிலும் வெற்றிகரமாக செய்து விட்டது.  தமிழ்நாட்டில் அது நடக்காது என்பதை எப்போது அது உணர்ந்து கொள்ளுமோ?

தமிழிசை கற்ற பரம்பரையா குற்ற பரம்பரையா??!!

இருக்கும் பிரச்னைகள் போதாது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை  முக்குலத்தோர்- நாடார் பிரச்னையை கிளப்பி இருக்கிறார்.

ஏற்கெனெவே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தொண்டர்களுக்கும், பெருந்தலைவர் காமராஜர் தொண்டர்களுக்கும் அரசியல் நிலைப்பாட்டில் மோதல்கள் இருந்து வருகின்றன.

இருவரும் காங்கிரசில் இரண்டு கோஷ்டிகளில் இருந்தவர்கள்.

ஒருவர் முதல்வர் ஆக மற்றவர் எதிர்கட்சித்தலைவர் ஆக இருந்தவர். ஆனால் இருவருமே சமுதாயத்தில் மதிப்பு மிக்க தலைவர்கள் ஆக விளங்கினார்கள்.

கள்ளர்கள் மீது குற்ற பரம்பரை சட்டம் ஆங்கிலேயர் காலத்தில் அமுல்படுத்தப்பட்டு அதை நீக்க போராடியவர்கள் அவர்கள். இந்த வரலாறு தமிழிசைக்கு தெரியாதா?

ஆனால் கனிமொழி வழக்குகளை சந்தித்து வருபவர் என்பதற்காக அவரை தாக்குவதாக எண்ணிக்கொண்டு அவரைப் போல் நான் வழக்குகளை சந்தித்து வரவில்லை என்ற பொருளில் நான் கற்ற பரம்பரை, குற்ற பரம்பரை அல்ல என்று தமிழிசை குறிப்பிட்டது முக்குலத்தோரை காயப்படுத்தி இருக்கிறது.

ஒரு  மாநிலத் தலைவர் எச்சரிக்கையுடன் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் .    எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவதுபோல் அமைந்து விடக்கூடாது.

தமிழிசை தனது பதிவை உடனடியாக நீக்கி விட்டார். ஆனால் வருத்தம் தெரிவிக்க வில்லை. நான் போற்றும் பரம்பரை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். நிச்சயம் அவர் திட்டமிட்டு அப்படி பேசியிருக்க மாட்டார் என்பது உறுதி. அப்படிப்பட்டவர் அல்ல அவர்.

ஆனால் அவசரப்பட்டு கருத்து தெரிவிக்கிறவர் என்ற முத்திரை அவர் மீது விழுந்து விட்டது.

இனியாவது தமிழிசை நிதானம் காட்டட்டும்.

பரிசுப்பெட்டகம் தினகரனுக்கு தோதான சின்னம்? உள்ளே என்ன இருக்கும்??!!

தொப்பி  குக்கர், சாவி மூன்றும் கேட்டு கடைசியில் பரிசுப்பெட்டகம் சின்னத்தை தினகரனின் அமமக வுக்கு வழங்கி இருக்கிறது தேர்தல் கமிஷன்.

இருபது ரூபாய் டோக்கன் ஆர் கே நகரில் கொடுத்தது போல் இங்கு தினகரன் என்ன கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருக்கிறது.

ஜெயலலிதா கொடுத்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு தேவையான பதினாறு பொருட்களை இது காட்டுகிறது என்று தினகரன் சொல்லும்போது இப்போது நீங்கள் என்ன வைத்துக் கொடுக்கப் போகிறீர்கள் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

இந்த சின்னத்துக்கு 500 வாக்குகள் தான் கிடைக்கும் என்று ஜெயக்குமார் சொல்கிறார்.

சுயேச்சைகள் ஆகத்தான் இவரது கட்சி வேட்பாளர்கள் கருதப்படுவார்கள் என்பதால் எல்லா சுயேச்சைகள் வாங்கும் வாக்குகளை எப்படி ஒரு கட்சியின் வாக்குகள் ஆக தேர்தல் கமிஷன் எடுத்துக் கொள்ளும் என்பதும் கேள்விக்குறி.

எப்படி இருந்தாலும் இனி தினகரன் அதிமுக கட்சிக்கு உரிமை கோர முடியாது.

தனிக்கட்சி என்பதால் மற்றவர்களிடம் இருந்து எவர் என்னென்ன வகையில் வேறுபட்டு நிற்கிறார் என்பதை இவர் விளக்கியாக வேண்டும்.

ஒரு ஆர் கே நகர் வெற்றியை வைத்து இதுவரை கட்சி நடத்த இவரால் முடிந்தது.   ஆனால் இந்த தேர்தலில் தோற்றால் கட்சி நடத்தும் தகுதியை இழந்து விடுவார்.

எப்படியோ பரிசுப்பெட்டகம் தினகரனை கரை சேர்க்குமா அல்லது அரசியலில் இருந்து விலக்கி வைக்குமா என்பதை இந்த தேர்தல் முடிவுகள் வந்தபின் தான் தெரியும்.

செயற்கைக் கோள்களை தாக்கி அழிக்கும் திறனையும் அரசியலாக்கிய மோடி??!!

இஸ்ரோ விஞ்ஞானிகள் 300  கிலொ மீட்டர் தூரம் பயணம் செய்து செயற்கைக் கோள்களை அழிக்கும் ஏவுகணை தொழில் நுட்பத்தை வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளது இந்தியாவின் ஆற்றலை உலகுக்கு பறை சாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.

அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு அடுத்து இந்த தொழில் நுட்பம் கொண்ட நாடாக இந்திய விளங்குகிறது. நமக்கு  பெருமைதான். இந்திய விஞ்ஞானிகள் இந்த ஏவுகணை 1000 கிமீ தூரம் வரைகூட போகும் என்கிறார்கள்.

முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் இந்த தொழில் நுட்பத்தை நாம் 2007 லேயே கொண்டிருந்தோம் என்கிறார். சீனா 12 ஆண்டுகளுக்கு முன்னரே இதை செய்து காட்டிவிட்டது.

இதை ஏன் பிரதமர் அறிவிக்க வேண்டும். நான் நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய செய்தியை சொல்லப் போகிறேன் என்று மோடி அறிவித்ததுமே ஏதோ அரசியல் அறிவிப்பாக இருக்கும் என்று பரபரத்தது ஊடகங்கள். ஆனால் மோடியோ விஞ்ஞானிகளின் சாதனையை கூறி விட்டு ஏதோ தன் அரசால் தான் இது முடிந்தது என்று தேர்தல் சாதனையாக கூறிக்கொண்டார்.

மக்கள் இதனால் எல்லாம் மோடி மீது கொண்டிருக்கும் கருத்தை மாற்றிக் கொள்ளப்போகிறார்களா என்ன?

ஏற்கனெவே விண்வெளியில் மாசுகள் படர்ந்திருப்பதற்கு அமேரிக்கா கவலை  தெரிவித்திருக்கிறது .

எல்லா நாடுகளும் செயற்கை கோள்களை தங்கள் வசதிக்காக ஏராளமாக விண்வெளியில் ஏவி விட்டிருக்கிறார்கள்.  இவை எல்லாம் கொஞ்ச காலத்திற்கு  பிறகு வலு விழந்து விடும். ஆனாலும் விண்வெளியில் மிதந்து கொண்டிருப்பதால் என்னென்ன ஆபத்துக்கள் நேரும் என்பதை கணிக்க வேண்டும்.

இது தொடர்பாக மோடியின் இந்த அறிவிப்பு தேர்தல் விதிமுறைகளை மீறியதா என்பது குறித்து மார்க்சிஸ்டுகள் புகார் கொடுத்திருக்கிறார்கள்.  தேர்தல் கமிஷன் என்ன நடவடிக்கையா எடுக்கப் போகிறது.

கடைசிவரையிலும் மக்களை திசை மாற்ற முயற்சிப்பதை மோடி மாற்றவே மாட்டார்.

மத்திய அரசுப் பணி நியமனங்களில் வட நாட்டவரே தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்துவது எப்படி?

தமிழகத்தில் மத்திய அரசின் துறைகளாக ஐம்பதுக்கும் மேலான அலுவலகங்கள் இருக்கின்றன.

வருமான வரித்துறை, கலால், பாஸ்போர்ட், சுங்கம், ரயில்வே, என்று ஏராளமான துறைகள்.

இவை அத்தனையிலும் 90% வட மாநிலத்தவரும் 10% மட்டுமே தமிழர்களும் இருப்பது மர்மமாக உள்ளது.

மத்திய பணியாளர் தேர்வாணையம் செயல்படுவது முன்பு மண்டல அளவில் தேர்வு முறை இருந்ததால் இங்கே உள்ளவர்களுக்கு உரிய பங்கு கிடைத்தது. பின்னர் உச்ச நீதி மன்ற உத்தரவின் பேரில் அகில இந்தியாவும் ஒரே  ரேங்க் முறையை பின்பற்ற வேண்டி வந்ததால் வட மாநிலத்தவர் ஆதிக்கம் அதிகமாகி விட்டது என்று காரணம் சொன்னாலும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ் நாட்டு சார்பில் ஏன் தகுந்த முறையில் வழக்காட வில்லை என்ற கேள்வி எழுகிறது.

எல்லாவற்றையும் விட இங்கே அரசியல் செய்பவர்கள் ஏன் இந்த முக்கியமான பிரச்னையை கையில் எடுத்து கொண்டு பரிகாரம் காணவில்லை.?

இந்தி ஆங்கிலம் மட்டுமே  தேர்வு மொழி என்றால் தமிழ் படித்தவன் மத்திய அரசின் துறையில் பணி புரிய தகுதி படைத்தவன் ஆக மாட்டானா?

தேர்வு முறையில் முறைகேடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஹரியானாவில் உள்ளவன் தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெறுகிறான்.  தமிழ் நாட்டு மாணவன் தோல்வியடைகிறான் என்றால் தேர்வு முறையில் ஊழல் நடைபெருகிறது என்றுதான் பொருள்.

கடந்த பத்தாண்டுகளில் நடந்த மத்திய அரசுப் பணி தேர்வுகளை ஒரு தகுதி படைத்த ஆய்வுக் குழுவிடம் ஆராயச் சொல்லி தவறு செய்தவர்கள் மீது தண்டனை நடவடிக்கை எடுத்தால் தான் இது போன்ற தவறுகள் இனி நடவாமல் தடுக்க முடியும்.

கேள்வித்தாள்கள் அந்தந்த பிராந்திய மொழிகளில் தயார் செய்ய வேண்டும். அதேபோல் தேர்ச்சி பெற்றவர்களை அந்தந்த மண்டலங்களில் பணி அமர்த்த வேண்டும்.

அகில இந்தியா என்ற பெயரில் தமிழகத்தை வடவர்களின் காலனியாக மாற்றிட அனுமதிக்கக் கூடாது.

இங்கே இயங்கும் சாலை சுங்க வரி வசூலிக்கும் நிறுவனங்கள் கூட வட மாநிலத்தில் இருந்து ஊழியர்களை நியமித்தால் இங்கே இருப்பவர்களுக்கு வேறு என்ன வேலை தருவீர்கள்?

ஏழைகளுக்கு மாதம் ரூபாய் 6,000 தருவோம் என ராகுல் சொல்வது நடக்குமா?

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 5 கோடி குடும்பங்கள் அதாவது 25 கோடி மக்கள் பயனடையும் வகையில் ஆண்டுக்கு ரூபாய் 72,000/- அதாவது மாதம் ரூபாய் 6,000/- கொடுத்து குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்வோம் என்று ராகுல் காந்தி அறிவித்திருக்கிறார்.

முடியுமா என்பது பெரிய கேள்வி. பிரதமர் மோடி சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6,000/- கொடுப்போம் என்று அறிவித்ததை ஒட்டி காங்கிரசின் உறுதிமொழியாக நாங்கள் ஆண்டுக்கு  ரூபாய் 72,000/- தருவோம் என காங்கிரஸ் அறிவித்திருக்கிறது .

3.6 லட்சம் கோடி செலவு  அல்லது உள்நாட்டு உத்தேச மொத்த உற்பத்தியில் 1.88%  அல்லது ஆண்டின் மொத்த வரி வருவாயில் 24% அல்லது உத்தேச குறைந்த பட்ச வருவாயில் இது இந்தியாவின் தனி நபர் வருவாயாக  57% என்று மதிப் பிடப்பட்டிருகிறது.

ஏறத்தாழ 950 மத்திய அரசின் நலத்திட்டங்களில்  11 மட்டுமே  50% நிதிநிலை ஒதுக்கீட்டை பெறுகின்றன என்றும் மற்ற 939  திட்டங்களும் மறு  மதிப்பீடு செய்யப் பட வேண்டும் என்றும் கூறப் படுகிறது.

படிப்படியாக இது அமுல்படுத்தப் படும் என்று  கூறினாலும் இது சாத்தியக் கூறா அல்லது  முடியாததா என்பது பற்றி விவாதங்கள் நடக்கின்றன.

ப.சிதம்பரத்தின் உத்தி இது என கருதப்படுகிறது. அதை உறுதி படுத்தும் வகையில்  சென்னையில்  இன்று ப சிதம்பரம் இது எப்படி சாத்தியம் என விளக்கி பேட்டி கொடுத்தார்.

இந்திரா காலத்தில் ஏழ்மையை ஒழிப்போம், Garibi Hatao என்ற முழக்கத்தை முன்னெடுத்தார். வென்றார். ஆனால் வறுமைதான் ஒழியவில்லை.

ஆனால் இன்றைய கால கட்டத்தில் பொருளாதார ரீதியில் பிற்பட்டோருக்கு அரசு நிதி  உதவி செய்வது அவசியம் என்ற கருத்து மேலோங்கி நிற்கிறது.

பிரதமர் அறிவித்தால் முடியும் எதிர்க்கட்சி தலைவர் அறிவித்தால் முடியாதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

ஆக ஏழைகளை அந்த நிலையிலேயே வைத்துக்கொண்டு இனி ஆட்சிக்கு வரமுடியாது  என்ற உணர்வு ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும்  வந்திருப்பது நல்லதே.

முடியுமா முடியாது என்பதை தாண்டி மக்கள் நிச்சயம் இந்த அறிவிப்பால் ஈர்க்கப் படுவார்கள் என்பது மட்டும் உறுதி.

நான் பிராமணன் எனக்கு பணி செய்யத்தான் காவலாளிகள் தேவை; சுப்பிரமணியன் சுவாமியின் திமிர் பேச்சு ??!!

” சவுக்கிதார் மோடி ‘” அதாவது காவல்காரர் மோடி என்று தன்னைத்தானே நாட்டின் காவலாளி என்று அழைத்துக் கொண்டார் பிரதமர் மோடி.

உடனே அடுத்த கட்ட தலைவர்கள் அனைவரும் அமித்ஷா, அருண்ஜெட்லி, சுஷ்மாசுவராஜ் உட்பட தங்களை சவுக்கிதார் என்று பெயருக்கு  முன்னே போட்டுக் கொண்டு விளம்பரப் படுத்திக் கொண்டனர்.

ஆனால் சுப்பிரமணியசாமி பாஜக வின் உயர் மட்டக் குழுவில் இருந்தாலும் மோடியையும் அமைச்சரவை சகாக்களையும் நேரம் வரும்போது எல்லாம் தாக்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அவருக்கு பதவி கொடுக்காமல் அதே நேரத்தில் வெளியிலும் விட்டு விடாமல் பாஜக சலுகை கொடுத்து வருகிறது.

பார்ப்பனர் என்பதால் சு. சாமிக்கு கிடைக்கும் சிறப்பு  சலுகை  அது. வேறு யாரும் சு. சாமி  போல் பேசிவிட்டு பாஜக வில் நீடிக்க முடியுமா?

தான் தன்னை சவுக்கிதார் என்று அழைத்துக்  கொள்ள விரும்பாத சு. சாமி  அதற்கு சொன்ன விளக்கம் தான் அவரது சனாதன திமிரை காட்டுகிறது.

இவர் பார்ப்பனராம். இவர்  மற்றவர்களுக்கு காவலாளியாக இருக்க மாட்டாராம். மாறாக மற்றவர்கள்  தான் இவருக்கு காவல் வேலை செய்ய வேண்டுமாம். இதைவிட சனாதன திமிரை வெளிக்காட்ட முடியுமா?

அருன்ஜெட்லிக்கும் பிரதமர் மோடிக்கும் பொருளாதாரம் தெரியாது என்று சொல்கிறாரே?  இவரை ஏன் பாஜக கட்சியில் வைத்திருக்கிறது?

தமிழ்நாட்டுக்கு  வந்து ஏழு பேரை விடுவிக்க முடியாது என்கிறார். பாஜக வின் தேர்தல் அறிக்கையை  குப்பையில் போட வேண்டும் என்கிறார்.  பார்ப்பனீயம் அதிகாரத்தில் இருந்தால் எப்படிஎல்லாம் மற்றவர்களை அடக்கி ஒடுக்கும் என்பதற்கு சு. சாமி  சிறந்த உதாரணம்.

சின்னத்தில் தேர்தல் கமிஷன் செய்யும் சின்னத்தனம்??!!

தேர்தல் கமிஷன் ஆளும் பாஜக வின் ஊதுகுழலாக செயல்படுகிறது என்பது எல்லாருக்கும் தெரியும்.

ஆனால் அதை கொஞ்சமும் வெட்கமில்லாமல் செய்கிறார்கள் என்பது கவலைக்குரியது.

அங்கீகாரம் இழந்தாலும் பாமக கேட்டவுடன் மாம்பழம் கிடைக்கிறது. அது பாஜக வின் கூட்டணிக்கட்சி.

ஆனால் சீமான் பழைய சின்னம் கேட்டால் மறுக்கப் பட்டு புதிய சின்னம் கொடுக்கப் படுகிறது.  பாஜகவுக்கு எதிரிக்கட்சி.

திருமாவளவன் கேட்டால் மோதிரம் மறுக்கப்பட்டு பானை கொடுக்கப் படுகிறது. எதிர்க்கட்சி கூட்டணி.

தினகரன் குக்கர் கேட்டால்  பதிவில்லை  என்ற காரணம் காட்டி மறுக்கப் பட்டு புது சின்னம் என்கிறது. இது சம்பந்தமாக உச்சநீதி  மன்றம் இன்று தினகரன் கட்சி வேட்பாளர்களை சுயேச்சைகள் ஆக பாவித்து அனைவருக்கும் குக்கர் சின்னம் இல்லாமல் ஒரு பொது சின்னம் கொடுக்க பரிசீலிக்க உத்தரவிட்டுள்ளது. இதுவே அவருக்கு வெற்றிதான்.

இவர்களுக்கு என்ன வரையறை? ஆளும் கட்சிக்கு வேண்டியவர்களா வேண்டாதவர்களா என்ற ஒரே வரையறைதான்.

தேசிய  மலர் தாமரை பாஜக வுக்கு தரப்பட்டது எப்படி? அவர்கள் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர்கள் .

கை சின்னம் காங்கிரசுக்கு. எல்லாருக்கும் இப்படி  எளிய சின்னம் கிடைக்குமா?

மிருகங்கள் முடியாது என்றால் யாணை பகுஜன் சமாஜ் கட்சிக்கு எப்படி?  சிங்கம், குதிரை சின்னங்கள் கிடைக்கின்றனவே?

லாந்தர் சைக்கிள் இரட்டைப்பூ, கடிகாரம், சீப்பு, டெலிபோன், தீபம், தராசு, சங்கு, வில் அம்பு, கண்ணாடி, கலப்பை, கார், என்று ஏராளமான சின்னங்கள்.

இங்கு திமுகவும்  உதயசூரியனும் பிரிக்க முடியாதவை.

அதிமுகவும் இரட்டை இலையும் பிரிக்க முடியாதவை.

வாக்களிப்பவர்கள் சின்னத்தை மட்டுமே பார்த்து வாக்களிப்பதில்லை.  வேட்பாளரையும் பார்த்துதான் வாக்களிக்கிறார்கள்.

தீவிரமான கட்சிப் பற்றுள்ளவர்கள் மட்டுமே சின்னத்திற்கு வாக்களிப்பார்கள்.

ஆனால் தேர்தல் கமிஷன் எப்படி இருக்க வேண்டும்.? நடுநிலையாக இருக்க வேண்டுமல்லவா?

யார் எதைக் கேட்டாலும், மற்றவர்களுக்கு ஆட்சேபணை எதுவும் இல்லாதபோது இருந்தாலும் அதில் நியாயம் இல்லாதபோது கொடுக்க வேண்டியதுதானே தேர்தல்  கமிஷனின் வேலை.

தேர்தல் கமிஷன்  ஒருதலைப் பட்சமாக செயல்படுவது  ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. 

இப்படி பாகுபாடு பார்க்கும் தேர்தல் கமிஷன் தேர்தல்  முடியும் வரை இன்னும் என்னென்ன செய்யும் என்பதுதான் கவலைக்குரியது.

தேர்தலில் போட்டிடாததற்கு வெட்கப் படாத கமல்ஹாசன் தமிழினத்தின் எதிரி ??!!

கமல்ஹாசன் கட்சி தொடங்கி தேர்தலில் நிற்பது அவரது உரிமை.

மக்கள் ஏற்றுக்கொண்டால் தாராளமாக எந்தப் பொறுப்பிற்கும் வரலாம்.

ஆனால் ஏமாற்றுவதையே ஒரு கலையாக செய்து வருவத்தைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.

அரசியலுக்கு வந்த பின் எத்தனை வேடம் போட்டிருக்கிறார் என்பதை நினைத்துப்  பாருங்கள்.

முதலில் மீசை வைக்காமல், பிறகு சண்டியர் பாணி மீசை, பிறகு இளைஞர் மீசை, தாடியோடு கொஞ்ச நாள், இப்போது அரைகுறை மீசை என்று சினிமாவில் சீனுக்கு சீன் கெட்டப்பை மாற்றுவதுபோல் அரசியலிலும் செய்து வருகிறார்.

ஏன் இந்த அரசியல் நாடகம்.?

கொள்கை என்றாலே என்னவென்று விளக்கம் சொல்லவே மாட்டார். சொன்னால் யாராவது எதிரியாவார்களே? சொல்லாமல் விட்டால் எல்லாரும் ஏமாறுவார்கள்.

ஒரே நேரத்தில் தேசியத்தையும் திராவிடத்தையும் தமிழியத்தையும் ஏமாற்ற வேண்டும். அதற்கு கொள்கை சொல்லக் கூடாது.

அவைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் சொல்லக் கூடாது. எதிரியாகி விடுவார்களே?

அதேபோல் எந்தப் பிரச்னையிலும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவே மாட்டார். யாருக்கும் புரியாமல் பேசுவதை திட்டமிட்டே செய்கிறார்.

ஸ்டெர்லைட், காவிரி , முல்லை பெரியாறு, பெட்ரோலிய மண்டலங்கள் , இலங்கை தமிழர், தமிழ் மொழி பாதுகாப்பு, இந்தி திணிப்பு , தமிழர் உரிமை என்று எதை எடுத்தாலும் உறுதியான நிலைப்பாட்டை கமலஹாசன் சொன்னதே கிடையாது. எதற்கெடுத்தாலும் மழுப்பலான இரட்டை நிலைப்பாட்டைத் தான் பதிலாக கூறுவார்.

நோகாமல் நோன்பிருப்பது, பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன், என்ற பழமொழிகள் அவர் போன்றவர்களால் தான் உருவாகி இருக்க முடியும்.

நாத்திகர் என்று பீற்றிக் கொள்கிறவர் எப்போதாவது பெரியாரை உயர்த்திப்  பிடித்திருகிறாரா? அண்ணாவை பாராட்டி பேசியிருக்கிறாரா? அடக்கி வைக்கப்பட்டவர்கள் மீள் எழுவது எப்படி என்று பேசியிருக்கிறாரா?  நூற்றாண்டுக் காலமாக தமிழ் தன் இடத்தை பெறுவதை தடுத்தவர்கள் யார் என்று பேசியிருக்கிறாரா?

இனத்தைப் பற்றி மொழியைப் பற்றி பேசாத கமல்ஹாசன் தமிழ்நாட்டில் அரசியல் செய்யத் துணிகிற செயல் பார்ப்பனீயத்தின் சூழ்ச்சி இல்லையா?

ஏமாந்த தமிழர்கள் அவருடன் அணிவகுத்து நிற்கிறார்கள். அவர்கள் மீது  தவறில்லை.

அரசியலில் அணிவகுத்து நிற்கும் அவலங்கள் அவர்களை அவரிடம் அடைக்கலம் அடையச்  செய்திருக்கிறது.

ஆனால் உங்கள் வெற்றி யாரை பலனடையச் செய்யும்? இன எதிரியை உள்ளிருந்தே கொல்லும் நோயை?

தான் உண்மையானவர் என்று நிரூபிக்க கமல்ஹாசன் எதையுமே செய்ய வில்லை.

எத்தனையோ பார்ப்பனர்கள் பொதுஉடைமை இயக்கங்களில் பங்கேற்று  மிக உயர்ந்த பதவிகளில் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். யாரும் அவர்கள் மீது இனப் பாகுபாடு குற்றச்சாட்டு கூறியதில்லை.

இப்போதும் கூட எல்லாரையும் களத்தில் இறக்கி விட்டுவிட்டு தான் ஒதுங்கி நிற்க வேண்டிய அவசியம் என்ன என்பதற்கு அவர் கூறும் விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படியாகவா இருக்கிறது?

சொல்லுவதைக் கேட்கும்போதே யோவ் நீ சரியான ஏமாற்றுக் காரனைய்யா என்றுதானே எண்ணம் தோன்றுகிறது.

ஏமாறும் தமிழினம் இவரிடமும் ஏமாந்து விடக் கூடாதே என்ற ஏக்கமும் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை .

  தோல்வி நிச்சயம். ஆனால் தோல்வியால் பார்ப்பனீயம் ஒருபோதும் துவண்டு விடாது.  அதுதான் நமக்கு அச்சம்.    

    அச்சம் அகல ஒரே வழி பெரியாரைத் துணைக் கொள்வதுதான்.