Home Blog Page 48

காட்டை விட்டு விரட்டினால் பழங்குடிகள் எங்கே போவார்கள்? உச்ச நீதிமன்ற தீர்ப்பு திருத்தப் படவேண்டும்?!

உச்ச நீதிமன்ற தீர்ப்பு திருத்தப் படவேண்டும்?!

சட்டிச்கார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் குஜராத், மேற்கு வங்கம், ஜார்கண்ட், மற்றும் வட கிழக்கு  மாநிலங்களில் கணிசமாக பழங்குடிகள், தலித்துகள்  தலைமுறை தலைமுறையாக வசித்து வருகிறார்கள்.

வனப்பாதுகாப்பு சட்டத்தின் படி அவர்கள் கோரிய நில உரிமையை உச்சநீதி மன்றம் நிராகரித்து உத்தரவிட்டதால் அவர்கள் காட்டை  விட்டு வெளியேற்றப் படும் நிலை உருவாகி இருக்கிறது.

பழங்குடிகள் தலித்துகள் உரிமை பாதுகாப்புக்கென தனி அரசு  அமைப்புகள் இருக்கின்றன. இவைகள்  தங்கள் கடமையை செய்திருந்தால், நீதிமன்றத்தில் வலிமையாக வாதாடியிருந்தால் உச்சநீதி மன்றம் இப்படி ஒரு  உத்தரவை இட்டிருக்க வாய்ப்பே இல்லை.

நில உடமை ஆவணங்கள் அவர்களிடம் இல்லையென்றால் அதற்கு  யார் பொறுப்பு? அரசுகள் தானே?   தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருபவர் களிடம் பட்டாவை கொடு வரி ரசீதை கொடு என்று கேட்டு இல்லையென்றால் வெளியேறு என்பது என்ன நியாயம்?   ஏனென்றால் ஆவணங்களை தர வேண்டியவர்கள் தவறினால் அவர்களுக்கு என்ன தண்டனை?

படிப்பறிவில்லாத அதிகாரம் இல்லாத பாமரர் களுக்கு வாழவே உரிமை இல்லையா?  சொந்த நாட்டிலேயே அவர்களை அகதிகள் ஆக்குகிறீர்களே?

இன்றைக்கு மார்ச் 5 ம்  தேதி பந்த் அறிவித்திருக்கிறார்கள். பாஜக – காங்கிரஸ் உள்ளிட்ட அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக அறிவித்திருக்கின்றன. என்ன ஒரு ஏமாற்று வித்தை?

அவசர சட்டம் இயற்றி எங்களை பாதுகாத்து விட்டு சட்டப்படி போராடுங்கள் என்று போராட்டக் குழு கேட்டுக் கொண்டிருக்கிறது.

மத்திய மாநில அரசுகளின் இரட்டை வேடத்தை பறை சாற்றும் நாடகம் இது.

மனிதாபிமானம் அற்ற, ஈவிரக்கம் அற்ற, கொடுமையான நடவடிக்கையை இனியாவது பாஜக -காங்கிரஸ் அரசுகள் தவிர்க்க வேண்டும்.

உடனடியாக அவர்களுக்கு தேவையான சான்றாவணங்களை கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப் படுத்தும் வேலையை பாஜக -காங்கிரஸ் அரசுகள் செய்ய வேண்டும் என்பதே இந்திய மக்களின் எதிர்பார்ப்பு.

என்ன ஆனது முகிலனுக்கு? ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு இதுதான் கதியா?

என்ன ஆனது முகிலனுக்கு?

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டின் போது கொல்லப்பட்ட 13 பேர் தொடர்பாக ஒரு ஆவணப் படத்தை முகிலன் என்பவர் பெப்ரவரி 15ம் தேதி வெளியிடுகிறார்.

அன்றைய தினமே அவர் எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணமாக வேண்டியவர் மாயமாகிறார்.

அந்த ஆவணப்படத்தில் காவல்துறை திட்டமிட்டு மே மாதம் 22ம் தேதி 2018 ல்  இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது என்று குற்றம் சாட்டி இருந்ததுதான் இப்போது பிரச்னை ஆகி இருக்கிறது.

ரெயில்வே காவல் துறை வழக்கு பதிவு செய்தும் நகர காவல் துறை ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதால் இப்போது சிபிசிஐடி விசாரிக்க காவல் துறை தலைவர் உத்தரவிட்டிருக்கிறார்.

அதுவும் பலரும்  முகிலனின் கதி குறித்து கவலை தெரிவித்த பின் இந்த விசாரணை.  காவல் துறை மீதே குற்றம் சுமத்தியவர் காண வில்லை என்றால் அதே காவல் துறை எப்படி நியாயமாக விசாரிக்கும் என்ற சந்தேகம் எழுந்தாலும் நம்புவதை தவிர வேறு வழியில்லை.

முதல் அமைச்சரிடம் கேட்டபோது எல்லா குடிமக்களையும் கண்காணிக்க முடியாது என்று கூறிய பதில் அதிர்ச்சியை அளித்தது. இது எடப்பாடி நியாயம்.

உண்மையை வெகு காலம் மறைக்க முடியாது.

விளக்கம் சொல்ல திணறிய அன்புமணி ராமதாஸ் பேட்டியை பாதியில் முடித்தார்?

விளக்கம் சொல்ல திணறிய அன்புமணி ராமதாஸ்

கார் உள்ளளவும் பார் உள்ளளவும் திமுக அதிமுக வோடு  கூட்டு  கிடையாது என்று மார் தட்டிய மருத்துவர் ராமதாஸ் கடைசியில் அதிமுகவோடு கூட்டு சேர்ந்து அதை விருந்து வைத்தும் கொண்டாடி விட்டார்.

ஆனால் மக்கள்தான் ரசிக்கவில்லை.

அதிமுக அரசு மீது ஊழல் புகாரை ஆளுநரிடம் கொடுத்த பாமக எந்த முகத்தோடு இப்போது கூட்டணி வைக்கிறது?

விளக்கம் சொல்கிறேன் என்று அன்புமணி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.  ஏடாகூடமாக கேள்விகள் எழுந்தவுடன் பதில் சொல்ல மிகவும் திணறிப் போனார் அன்புமணி. ஒரு கட்டத்தில் எரிச்சல் அடைந்தவர் நிதானம் இழந்து நிருபர்களை பார்த்து உட்காருங்கள் என்று கட்டளை  இட தொடங்கினார்.  மீண்டும் மீண்டும் பழைய நிலைப்பாடுகளை நினைவு படுத்தவே பாதியில் பெட்டியை முடித்துக் கொண்டு  கிளம்பினார் அன்புமணி.

இப்படி எரிச்சல் அடைந்த  முகத்தோடு அன்புமணியை யாரும் பார்த்ததில்லை.

இப்போதும் அதிமுக மீதான ஊழல் புகாரில் உறுதியாக இருக்கிறோம் என்றவர் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை கோருவோம் என்றார். முகாந்திரம் இல்லாமலா ஊழல் புகார் கூறினார்?

தாங்கள் கொடுத்த பத்து கோரிக்கைகளை அதிமுக அரசு பரிசீலிக்க தயாராக இருந்ததால் இந்த முடிவு என்றதுதான் இடித்தது. இதுவரை கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதால் இந்த முடிவு என்று கேள்விப் பட்டிருக்கிறோம் .  பரிசீலனை செய்வதாக கூறியதை ஏற்றுக் கொண்டு  முடிவு எடுத்தது இதுதான் முதல் முறை.

பாமக வைத்த பத்து கோரிக்கைகளும் மாநில அரசு மட்டுமே ஏற்றுக் கொண்டு  அமுல் படுத்தக் கூடியது அல்ல. மத்திய அரசும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டியவை.

கோதாவரி-காவிரி இணைப்பு, ஏழு தமிழர்கள்  விடுதலை சாதிவாரி கணக்கெடுப்பு, மேகதாது அணை தடுத்தல், நீட் தேர்வு கைவிடல் ஆகியன மத்திய அரசு முடிவெடுக்க வேண்டியவை. தமிழ் நாட்டின் இருபது பாசன திட்டங்கள், காவிரி வேளாண்மை மண்டலம், மதுக்கடைகள் மூடல், மணல் குவாரி  மூடல், பழைய பென்ஷன், உழவர் ஊதிய குழு மற்றும் கடன் தள்ளுபடி மாநில அரசு முடிவெடுக்கக் கூடியவை.

இதில் எந்த மோரிக்கையை மாநில அரசு ஏற்றுக்  கொண்டது என்பதில்  கூட விளக்கம் ஏதும் இல்லை. பரிசீலிக்கிறோம் என்பது எப்படி ஏற்றுக் கொண்டது ஆகும்?

கொள்கை என்று எல்லாம் இனிமேல் மருத்துவர் ராமதாசோ அல்லது அன்புமணியோ பேச முடியாது. யாரும் நம்ப மாட்டார்கள்.

மாற்றம், முன்னேற்றம், அன்புமணி,

பதவி, பணம், வாரிசு என்றாகிவிட்டது.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு Rs.6000 மோடி கொடுப்பது லஞ்சமா? சாதனையா?

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு Rs.6000 மோடி கொடுப்பது லஞ்சமா?

தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆண்டுக்கு  எட்டாயிரம் , ஓடிசாவில் நவீன் பட்நாயக் ஆண்டுக்கு பத்தாயிரம் கொடுத்தால் நான் ஆண்டுக்கு ஆறாயிரம் கொடுப்பேன் என்று மோடி விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்திருக்கிறார்.

ஓடிசாவில் குத்தகைதாரர்களுக்கு கிடைத்திருக்கும் நிவாரணம் தெலுங்கானாவிலும் மோடி அறிவித்திருக்கும் திட்டத்திலும் இல்லை.

நாடு முழுதும் 12 கோடி விவசாயிகளும் தமிழ்நாட்டில் மட்டும்   75லட்சம் விவசாயிகளும் பயனடைவார்கள் என்று எதிர்பார்ப்பு.

மத்திய அரசுக்கு 75 ஆயிரம் கோடி செலவு.  முதல் தவணையாக  ரூபாய் 2000  வீதம் ஒரு கோடி பேருக்கு வழங்கப் பட்டு விட்டது.

கருப்பு தினம் என்று ப.சிதம்பரம் விமர்சித்து இருப்பது முழுவதும் தவறல்ல.  ஏனென்றால் மோடியின் நோக்கம் பாராளுமன்ற தேர்தலில்  வாக்குகளை வாங்குவதுதான் என்பது மறுக்க முடியாத உண்மை.  அது லஞ்சம்தானே .

இன்னும் மெருகேற்றப்பட வேண்டிய திட்டம் இது. ஆனால் ஏதோ மோடி விவசாயிகளின் நண்பன் என்ற தோற்றத்தை  இது உருவாக்கி விடும் என்று பாஜக நம்பினால் ஏமாந்துதான்  போவார்கள்.

மோடி  அரசு கார்பரேட் அரசு என்பது எல்லாருக்கும் தெரியும். அந்த தோற்றத்தை உடைக்க எந்த முயற்சியையும் மோடி செய்ய  வில்லை.  இருந்து விட்டுப் போகட்டுமே என்று தான் நினைக்கிறார். அதனால் வாக்குகள் வருவது நின்று  விடப் போவதில்லை என்பது அவரது நம்பிக்கை.

ஒருவேளை  தேர்தல் நேரத்துக்கு முன்னால் செய்திருந்தால் மக்கள் நம்பியிருப்பார்கள். இப்போதும் வாங்குவதில் ஆர்வம காட்டும் அத்தனை  பேரும் மோடிக்கு வாக்களித்து விடப் போகிறார்களா என்ன?

மோடி மீது   விவசாயிகளின் நண்பன் என்ற பெயரை  விட மதவாதி ,மாநில உரிமை பறிப்பாளர் , கார்பரேட் ஆதரவாளர்  என்ற முத்திரைதான் ஆழமாக பதிந்து விட்டது.

உண்மையிலேயே விவசாயிகளின் நண்பன் என்றால் விளைபொருட்களுக்கு கட்டுபடி ஆகக் கூடிய லாப விலை நிர்ணயித்திருக்க வேண்டும்.  அதற்கு இவர் நிர்ணயித்திருக்கும் கெடு இன்னும் மூன்றாண்டுகள். ஏன் ஆட்சியில்  இருந்த ஐந்தாண்டுகளில் செய்ய  வில்லை?

நோக்கம் பழுது

காரியம் நல்லது

எனவே வரவேற்போம்.

நெல் கொள்முதலில் மூட்டைக்கு ரூபாய் 30-40 லஞ்சம் ?! கேட்க நாதியில்லையே??!!

நெல் கொள்முதலில் மூட்டைக்கு ரூபாய் 30-40 லஞ்சம் ?

விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்து மத்திய அரசுக்கு ,  இந்திய உணவுக்கழகத்துக்கு கொடுக்கிறது தமிழக அரசு.

இந்த கொள்முதலில் பல ஆண்டுகளாக நிலவும் லஞ்சத்தை ஒழிக்கவே முடியவில்லை.

எத்தனை கண் துடைப்புகள். நேரடியாக பணம் கொடுத்தால் கமிஷன் எடுத்துக் கொண்டு விடுகிறார்கள் பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவோம் என்றார்கள். அது ஒரு வாரம் முதல் பத்து நாட்களுக்குள் வந்து  சேரும். பரவாயில்லை என்றால் கொள்முதல் செய்யும் போதே மூட்டைக்கு முப்பது ரூபாய் கொடுத்தால் தான் கொள்முதல் ஆகும் என்பதுதான் எதார்த்தம்.

மறுத்தால் நிலையத்தின் முன்னால் கொட்டி விட்டுப்  போங்கள் வரிசைப்படி வாருங்கள் என்பார்கள். மழை பெய்தால் அவ்வளவுதான். எப்போது காய வைத்து எப்போது விற்பது? திருட்டுப் போனாலும் பாதுகாப்பு இல்லை. நெல்லை தூற்ற வைத்து கொண்டு வரவேண்டும். அதற்கு தனியாக  செலவு செய்ய வேண்டும்.  தூற்ற என்று ஒரு  மிஷின் இருக்கிறது. அதில் 17 % க்கு மேல்  ஈரப்பதம் இருந்தால்  கொள்முதல் செய்ய  மாட்டார்கள்.  சாக்கு இல்லை என்று  கொள்முதல் செய்ய மாட்டார்கள்.

எப்போது சாக்கு வருவது எப்போது கொள்முதல் நடக்கும்?  வந்தாலும் ஒரு  நாளைக்கு அறுநூறு மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்ய மாட்டார்கள். தூற்றும் மெஷின் அத்தனை மூட்டைகளை தான் ஒரு நாளைக்கு தூற்றும். அதற்கு  மேல் வாங்கினால் தூற்றாமல் வாங்கினீர்கள் என்று அர்த்தம்  என்பதால் அதற்கு மேல் கொள்முதல் செய்ய மாட்டார்கள்.

இதெல்லாம் கட்டுப்பாடுகள் என்றால் அதையும் சந்தித்து விற்கப் போனால் ஏதாவது  புதிது புதிதாக கண்டுபிடித்து கொள்முதல் செய்யாமல் இருக்க காரணம் சொல்வார்கள்.

வேறு வழியில்லாமல் தான் அத்தனை விவசாயிகளும் மூட்டைக்கு முப்பது ரூபாய் கொடுத்து வருகிறார்கள். கணக்குப் பார்த்தால் பல கோடிகள்.  கேட்டால் அமைச்சர் முதல் கணக்கர் வரை பிரித்து போகிறது என்கிறார்கள்.  யார் கேட்பது இந்த அநியாயத்தை?

சில இடங்களில் துணிச்சல் கொண்ட ஓரிருவர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்து சிலர் கைது செய்யப் படுவதும் நடக்கிறது. எத்தனை பேர் புகார் கொடுக்க முன்வருவார்கள்?

விவசாய சங்கங்கள் அரசியல்  கட்சிகள் பொதுநல அமைப்புகள் என்று எத்தனை இருந்தாலும் எவருக்கும் கட்டுப்படாமல் இந்த ஊழல் கடந்த பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் இருந்தாலும்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் இருக்கத்தானே செய்கிறது??!!

பாராளுமன்ற தேர்தலோடு 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துமா தேர்தல் ஆணையம்?!

அவசர அவசரமாக திருவாரூருக்கு மட்டும் இடைதேர்தல் என்று அறிவித்து பின்னர் அதை ரத்து செய்து யாருடைய உத்தரவையோ நிறைவேற்றும் அமைப்பாக தன்னை காட்டிக் கொண்டது தேர்தல் ஆணையம்.

இப்போது பாராளுமன்ற தேர்தல் வரப்போகிறது. 21  சட்ட மன்ற இடங்கள் காலியாக இருக்கின்றன. சேர்த்து அறிவிக்க வேண்டியதுதானே?

திமுக தலைவர் முன்கூட்டியே எச்சரிக்கையுடன் தேர்தலை  சேர்த்து நடத்துங்கள் என்று கோரிக்கையை வைத்துவிட்டார்.

நடத்த மாட்டார்கள் என்ற கணிப்புதான் கோரிக்கைக்குக் காரணம்,

மத்திய அரசின் அரசியல் நோக்கங்களுக்கு இரையாகும் அமைப்பாக தேர்தல் ஆணையம் இருக்கக் கூடாது.

21 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தால் மத்தியில்  யார் வந்தாலும் மாநிலத்தில் நடக்கும் ஆட்சி ஆட்டம் கண்டுவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?

இதற்கும் நீதிமன்றம் போகவேண்டுமா?

கமலை காங்கிரசின் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரி அழைக்கும் மர்மம்??!!

திமுக – அதிமுக இரண்டோடும் கூட்டு இல்லை தனித்தே நாற்பது தொகுதிகளிலும் போட்டி என்று கமல்ஹாசன் அறிவிக்கிறார்.

திமுகவோடு கை குலுக்கி என் கையை கறையாக்கிப் கொள்ள மாட்டேன் என்று சொல்லி தன் திமுக வெறுப்பை வெளிக்காட்டினார் கமல்.

முன்பே திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தனது புதிய தலைவர் மூலமாக கமலுக்கு அழைப்பு விடுத்திருப்பது விந்தையாக இருக்கிறது.

பாஜக எதிர்ப்பு வாக்குகளை பிரிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார் கமல். மறைமுகமாக அது அதிமுக ஆதரவு நிலை தான்.

இந்நிலையில் கே.எஸ்.அழகிரியின் அழைப்பை ஒருவேளை கமல் ஏற்றால் காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டு விலகி கமலுடன் சேருமா?  அதற்கு வாய்ப்பே இல்லை.

கமல் திமுக கூட்டணியில் சேர தயார் என்று சொன்னாரா?

தனது முதல் எதிரி என்று கமல் யாரை அடையாளம் காட்டுகிறார் ?

மோடி அரசு மீண்டும் வரவேண்டும் என்கிறாரா? அல்லது மோடி அரசு மீண்டும் வராமல் தடுப்பேன் என்கிறாரா? இந்த இரண்டு நிலைப்பாட்டில் ஒன்றை கமல் அறிவிக்காதவரை அவரை அழைப்பதில் என்ன பொருள் இருக்கிறது?.

நாற்பதிலும் நின்று தனது வாக்கு வங்கியை நிருபித்து சட்ட மன்ற தேர்தல்களில் தனது பேரம் பேசும் சக்தியை உயர்த்திக் கொள்ளும் திட்டம் கமலுக்கு இருப்பதாகத் தான் தெரிகிறது.

கழகங்கள் இல்லா தமிழகம் என்ற  பாஜக-வின் முழக்கத்தை வேறு வகையில் வெளிப்படுத்தும் கமல்ஹாசன் உள்ளிருந்தே கொல்லும் நோய்??!!

திருப்பதி கோவிலில் 3 தங்க கிரீடங்கள் மாயம் ?!

திருப்பதி கோவிலில் 3 தங்க கிரீடங்கள் மாயம்

தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆந்திராவிலும் கோவில் நகைகள் திருடு போவது வழக்கமாகிவிட்டது.

திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவில் திருப்பதி தேவஸ்தான பராமரிப்பில் இருப்பது. பாதுகாப்பு அதிகாரிகள் சரிபார்த்து தான் தினமும் இரவில் நகைகள் பாதுகாக்கப் படும். அப்படி பார்க்கும்போது மூன்று தங்க கிரீடங்கள் மட்டும் காணாமல் போயிருப்பது தெரிய வந்திருக்கிறது. மூன்று அர்ச்சகர்கள் இருந்திருக்கின்றனர்.  கண்காணிப்பு காமிராக்கள் பழுதடைந்து இருக்கின்றன.

வெளி ஆட்கள் இந்த திருட்டை செய்திருக்க முடியாது என்று காவல்துறை கருதுகிறது.

களவு போன நகைகளின் மதிப்பு பல கோடி பெறும் என்பது குறிப்பிடத் தக்கது.

என்ன செய்வது? களவு செய்தவர்கள் பக்தர்களாக இருந்தால் அவர்களுக்கு சாமி பற்றிய பயமே இல்லை என்றாகிறது.

குற்றம் செய்தவன் கள்வன். பழி சுமப்பது சாமியா?

நகைகளால் சாமிக்கு மகிமையா? சாமியால் நகைகளுக்கு மகிமையா?

ஆண்டிற்கு ஒருமுறை  மட்டுமே சுவாமிக்கு நகைகள் அணிவிப்பது என்று ஒரு புதிய சம்பிரதாயம் உருவாக்கினால் என்ன?

கோவில்கள் பக்தி செய்ய  மட்டும் என்று உருவானால் தான் இத்தகைய குற்றங்கள் குறையும்.

ஏ.ஆர்.ரகுமான் மகள் கதிஜாவின் பர்தா கிளப்பிய விவாதம்?!

ஏ.ஆர்.ரகுமான் மும்பையில் தாராவியில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து  கொண்டார். அவருடன் மேடையில் தோன்றிய மகள் கதீஜா பர்தா அணிந்திருந்தார்.

ரகுமான் சொல்லித்தான் மகள் பர்தா  அணிந்து தோன்றினார் என்று விமர்சங்கள் எழுந்தன. இஸ்லாத்தை தழுவிய பின்பும் ரகுமானின்  இசையை  ரசிக்க மதம் ஒரு தடையாக இருந்ததில்லை. அவர் தன் மகளை பர்தா அணிய நிர்பந்தித்து இருப்பாரா என்ற கேள்வியும் எழுந்தது.

பதில் சொல்கிற வகையில் அவர் மனைவியும் இன்னொரு மகளும் பர்தா இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உடை அவரவர் விருப்பம் என்ற ரீதியில் பதிவிட்டிருந்தார்.

உடை சுதந்திரம் தான். ஆனால் எதுவும் நம் நாட்டில் பிரச்னை ஆக்கப்படும் என்பது தெரிந்தது தானே.

அதுவும் திரைத்துறையில் வெளிப்படை தன்மையை எதிர்பார்க்கும் தன்மை அதிகம்.

அதற்காக உடலை வெளிக்காட்ட வேண்டும் என்று பொருள் அல்ல. இதுவரையில் முகத்தை மறைத்துக் கொண்டு எந்த ஒரு சினிமா கலைஞரும் பணி செய்ததாக நமக்குத் தெரியவில்லை.

இதில் ரகுமானை குற்றம் சொல்ல எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால் ஒரு மகளை பர்தா இல்லாமலும் மற்றவரை பர்தா வோடும் பார்க்கும் போது  பெற்றோர் மகள்களின் உடைகளில் தலையிடுவது  இல்லை என்பது தெரிகிறது.

எப்படியிருந்தாலும் ஒருவரின் தனிப்பட்ட உரிமையை விமர்சிப்பது நாகரிகம் அல்ல.

வந்தே மாதரம் பாட மறுத்த முஸ்லிம் ஆசிரியர் மீது தாக்குதல் ?!

பீகார் மாநிலம் அப்துல்லாபூரில் அரசு பள்ளியில் அப்சல் உசைன் தலைமை ஆசிரியர்.

குடியரசு தின பள்ளியில் கொண்டாடப்பட்ட போது தேசிய கீதமும் வந்தே மாதரமும் பாடப்பட்டது.

தேசிய கீதத்துக்கு எழுந்து நின்ற அவர் வந்தே மாதரம் பாடப்பட்ட  எழுந்து நிற்கவில்லை.

தனது மதம் வந்தே மாதரம் பாடலில் வரும் பாரத மாதாவை வணங்க சொல்ல வில்லை என்பது அவரது வாதம். அதே நேரத்தில் தேசிய கீதத்தில் அப்படி ஏதும் இல்லாததால் அதற்கு அவருக்கு ஆட்சேபணை ஏதும் இல்லை.

எழுந்து நிற்காததற்காகன் அவரை சிலர் உள்ளே புகுந்து அவரை அடித்து உதைத்திருக்கிறாகள்.

முன்பே பலமுறை இந்த பிரச்னை எழுந்து  வந்தே மாதரம் பாடலுக்கு  முஸ்லிம்கள் எழுந்து நிற்க வேண்டியதில் என்று பொது கருத்து இருக்கிறது.

கட்டாயப்படுத்தி பாட வைப்பது எந்த வகையில் நியாயம்.  ?

அதற்கு அவசியம்தான் என்ன?

ஆசிரியரை அடித்த நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான் இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காது .