Home Blog Page 49

பாமக பிரமுகர் படுகொலை; மதச் சண்டையை தூண்டும் சங்க பரிவார்; எச்சரிக்கை தேவை!!

பாமக பிரமுகர் படுகொலை

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் நகர முன்னாள் பாமக செயலாளர் ராமலிங்கம் .

கொஞ்ச நாட்கள் முன்பு வாட்ஸ் அப்பில் அவர் ஒரு முஸ்லிமுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடும்  காட்சி ஒன்று உலா வந்தது. அதில் அவர் அந்த  குல்லா அணிந்த முஸ்லிமை பார்த்து நீங்கள் உங்கள் தெருவில் எங்களுக்கு வீடு தருவீர்களா நாங்கள் எங்கள் தெருவில் உங்களுக்கு வீடு தருகிறோமே, என்றும் நாங்கள் எங்கள் சாமிக்கு படைத்த உணவை கொடுத்தால் வாங்கிக் கொள்வீர்களா நாங்கள் உங்களிடம்  வாங்கிக் கொள்கிறோமே என்றெல்லாம் வாதிட்டுக் கொண்டிருந்தார். அந்த முஸ்லிம் சிரித்துக் கொண்டே ஒரு சில வார்த்தைகளை சொல்லிக் கொண்டு மறுத்து வந்தார்.

நேற்று அவர் இரவில் வீட்டுக்கு வந்தபோது காரில் வந்த சிலர் அவரது இரு கைகளையும் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். மருத்துவமனை செல்லும் வழியில் அவர் இறந்திருக்கிறார். காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

சம்பவம் தொடர்பாக முஸ்லிம் நபர்கள் ஐந்து பேர் கைது செய்யப் பட்டதாக ஊடக செய்தி ஒளிபரப்பியது. முதல் கட்ட விசாரணையில் மத மாற்றம் செய்வதை தட்டி கேட்டதால் இந்த கொலை நடந்த தாக போலீசார் கூறியுள்ளனர். உண்மையாக இருந்தால் அது ஆபத்து.

பாஜக-வின் எச்.ராஜா இறந்த ராமலிங்கம் வீட்டுக்கு சென்று துக்கம் விசாரித்து விட்டு சென்றதுடன் பாஜக-வின் கருப்பு முருகானந்தமும் இதை பெரிதுபடுத்தி அரசியல் ஆதாயம் அடைய முயற்சிப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இடையில்  சீமானும் இது தொடர்பாக உண்மை குற்றவாளிகளை கைது செய் என்று ஒரு கோரிக்கையை வைத்து கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன.

நடப்பன நல்லதற்கல்ல என்று மட்டும் தெரிகிறது.

காவல்துறை விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு  தண்டனை வாங்கிக் கொடுப்பதன்மூலம் தான் பிரச்னை பெரிதாகாமலும் மதச்சண்டை உருவாகாமலும் தடுக்க முடியும்.

குற்றவாளிகள் முஸ்லிம்களாகவே இருந்தாலும் எல்லா முஸ்லிம்களும் இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்வது எப்படி சரியாகும்?

குற்றவாளிகள் எந்த மதத்தையும் சேர்ந்தவராக இருக்கலாம். அவன்தான் தண்டிக்கத் தக்க குற்றவாளியே தவிர அவன் சார்ந்த மதத்தை சேர்ந்தவர்கள் அத்தனை பேரும் குற்றவாளிகள் என்று முடிவு கட்ட முடியுமா? அவன் இந்துவாக இருந்தாலும்  முஸ்லிமாக இருந்தாலும் அவனை தண்டிக்க வேண்டுமே தவிர அவன் சார்ந்த மதத்தை சேர்ந்தவர்களை எல்லாம் குற்றவாளிகள் ஆக முத்திரை குத்துவது சரியல்ல.

தமிழ்நாடு மதக்கலவரங்கள் அற்ற பூமியாக விளங்கி வருகிறது. அதை கெடுக்க வேண்டாம்.

பாஜக வளர்ந்த இடங்களில் எல்லாம் மதச் சண்டைகள் நிறைந்து காணப்படுகிறது என்பதை மறுக்க முடியுமா?

அதே நேரத்தில் முஸ்லிம்களில் தீவிரவாதிகள் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. ஐஎஸ் இயக்கத்தில் ஆள் சேர்க்க  முயன்ற சிலர் கைது செய்யப்பட வில்லையா? அவர்களை அடக்கி வைக்க வேண்டியதும் அவசியம்.

கொலைகாரர்களுக்கு  மிகக் கடுமையான தண்டனை வாங்கிக் கொடுப்பதன் மூலம்தான் மதச் சண்டையை முளையிலேயே கிள்ளி  எறிய முடியும்.

ஒபிஎஸ் தாக்கல் செய்த உப்பு சப்பில்லாத பட்ஜெட் ?!

ஒபிஎஸ் தாக்கல் செய்த உப்பு சப்பில்லாத பட்ஜெட்

2019-2020 ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஒபிஎஸ் இன்று தாக்கல் செய்தார்.

மோடி விவசாயிகளுக்கு அறிவித்த ஆண்டுக்கு ஆறாயிரம் போல தெலுங்கானா முதல்வர் கே சி ஆர் அறிவித்த தைப்போல ரைத்து பந்து திட்டத்தின் வழி  ஆண்டுக்கு எட்டாயிரம் போல ஓடிசாவின் நவீன் பட்நாயக்  அறிவித்த காலியா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு பத்தாயிரம் போல தமிழ்நாடு அரசு அறிவித்த பொங்கல் பரிசு ஆயிரம் போல ஏதாவது அறிவிப்பார் என்று எதிர்ப்பார்த்த தமிழ் மக்களுக்கு அறிவிக்க இவர்களுக்கு ஒன்றும் கிடைக்க வில்லை என்பது ஏமாற்றம்தான்.

மத்திய அரசு தங்களுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி வரி பங்கு பாக்கியை தரவில்லை என்று மட்டும் தெரிவித்து அதற்கு ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை.

தனியார் வருமானம் ஆண்டுக்கு ரூபாய் 143267 ஆக உயர்ந்திருக்கிறது என்று சொல்லி ஏதோ தனி நபர் ஆண்டுக்கு அவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அது ஒரு தனி நபர் ஆண்டுக்கு சேவை மற்றும் பொருள் வரி அளவுக்கு பயன் படுத்துகிறார் என்ற பொருள் தானே தவிர வருமானம் அல்ல. மொத்த உள்நாட்டு உற்பத்தியை மக்கள் தொகையை கழித்தால் வரும் தொகை ஒரு தனி நபர் வருமானமாக கணக்கிடப் படுகிறது. அது ஒரு மாயத் தோற்றம்தான்.

நிதிக் கமிஷன் பரிந்துரைக்கும் அளவுப்படி தமிழ்நாட்டுக்கு வருவது மத்திய வருவாயில் 4.023 % தான். ஆனால் மத்திய பிரதேசத்துக்கு 7.548% மும் மேற்கு வங்கத்துக்கு 7.324 % மும் இன்னும் பல மாநிலங்களுக்கு கூடுதல் அளவிலும் வழங்கப் படுகிறது. ஏன் இந்த பார பட்சம்?  இது பற்றி வாய் திறக்க  தமிழ் நாட்டு அரசு தயாராக இல்லை.

பல வகைகளிலும் மாநிலங்களை பலவீனப் படுத்தும் முயற்சியில் மத்திய அரசு  இறங்கி இருக்கிறது. அது பற்றி கவலைப் படும் அரசாகவும் இல்லை.

நீட்  தேர்வில் விலக்கு  அளிக்கும் சட்டம் ஒப்புதலுக்கு அனுப்பியது என்ன ஆனது என்று கேள்வி கூட கேட்க தயாராக  இல்லை.

நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு   ரூபாய் 1800  ஆக நிர்ணயித்து விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது.  கரும்புக்கும் போதிய விலை இல்லை. கொள்முதல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளை சீர்  செய்ய எந்த திட்டமும் இல்லை.

வெறும் 2000 பம்பு செட்டுகளுக்கு 90% மானியத்துடன் சூரிய ஒளி மோட்டார்களை அமைக்க அறிவித்து இருப்பது பிரச்னையை  தீர்க்க உதவாது.

உரிமைகளுக்கு போராடும் சமுதாயத்தின் எந்த பிரிவையும் சமாதானப் படுத்தும் வகையில் அறிவிப்புகள் இல்லை.

எட்டாவது ஆண்டாக பட்ஜெட் தாக்கல் செய்யும் ஒபிஎஸ் பழைய கணக்கை துகை மாற்றி புதிதாக அறிவித்திருக்கிறார்.

எந்த தொலைநோக்கு  பார்வையும் இல்லாத உப்பு சப்பில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்து கடமையை நிறைவேற்றி இருக்கும்  ஒபிஎஸ் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கண்டனங்களுக்கு  என்ன பதில்  சொல்லப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

தினகரனுக்கு குக்கர் சின்னம் இல்லை; இரட்டை இலை யாருக்கு என ஒரு மாதத்தில் தீர்ப்பு?!

உச்ச நீதிமன்றம் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க மறுத்துவிட்டது

ஒரு அரசியல் கட்சியாக கூட தன் அமைப்பை பதிவு செய்யாமல் எப்படி தேர்தல் கமிஷன் தன் கட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று தினகரன் எதிர்பார்க்கிறார் என்பது தெரியவில்லை.

ஒரு இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் போதுமா?

டெல்லி உயர் நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கும் இரட்டை இல்லை வழக்கை நான்கு வாரத்துக்குள் முடிக்க சொல்லியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

23 /11/2017 அன்று தேர்தல் கமிஷன் ஒபிஎஸ் – இபிஎஸ் இருவரின் மனுக்களை ஏற்று அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கியது. அதை எதிர்த்து தினகரன் தொடுத்த வழக்கு தான் டெல்லி உயர்நீதி மன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.

இருவரின் இணைப்பும் மோடியால் அறிவுறுத்தப் பட்டு அமுலுக்கு வந்ததை ஒ பி  எஸ் உறுதிபடுத்தி இருக்கிறார். ஆனால் அஇஅதிமுக வின் சட்ட திட்டப்படி அதன் பொதுக்குழுவே விதிகளை மாற்றும் அதிகாரம் கொண்டது. இல்லாத ஒருங்கிணைப்பாளர் -இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளை ஏற்படுத்தியது அஇஅதிமுக தொண்டர்களை கட்டுப்படுத்தாது என்று கே.சி.பழனிச்சாமி போன்றோர் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இரட்டை இலை தீர்ப்பு தேர்தலுக்கு முன்பே வந்துவிடும். அதன் தாக்கம் எப்படியும் இரு தரப்பிலும் எதிரொலிக்கும்.

சின்னத்துக்காக சண்டை இடுபவர்கள் தமிழ் நாட்டின் உரிமைக்காகவும் மத்திய அரசுடன் சண்டையிட்டால் நாட்டுக்கு  நல்லது.

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு 80% வேலை கொடு !! ம.பி முதல்வரை பின்பற்று?

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு 80 % வேலை கொடு

காங்கிரசின் மத்தியபிரதேச முதல்வர் கமல்நாத் நல்லதொரு காரியத்தை செய்திருக்கிறார்.

அங்கே அரசு உதவியுடன் ஊக்க சலுகைகளுடன் இயங்கும் தனியார் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் இனி உள்ளூர் வாசிகளுக்கு 70% வேலை கொடுத்ததாக வேண்டும்.

காங்கிரஸ் முதல்வர் அறிவித்ததை பாஜக ஆட்சேபிக்க முடியாது. ஏனென்றால் அவர்களே குஜராத்தில் உள்ளூர் வாசிகளுக்கு 80% வேலை வாய்ப்பை உறுதி செய்வோம் என்று அறிவித்து இருக்கிறார்கள். இத்தனைக்கும் வெளி மாநில தொழிலாளிகள் மிக அதிக அளவில் குஜராத்தில் அதன் வளர்ச்சிக்காக உழைத்திருக்கிறார்கள்.

ஆனால் இதை பெருமுதலாளிகள் வரவேற்பார்களா என்பது சந்தேகமே. அவர்களுக்கு பிற மாநில தொழிலாளிகள் குறைந்த ஊதியத்தில் பணி செய்ய கிடைப்பார்கள்.

தமிழ் நாட்டில் கட்டுமான தொழிலில் உணவு விடுதிகளில் சில்லறை கடைகளில் வெளி மாநிலத்தவர் ஆதிக்கம் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது.

இங்கே தமிழ்நாட்டில் நெய்வேலியில் நிலம் எடுக்கும் போது உள்ளூர் கார்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவோம் என்ற உறுதிமொழி  காற்றில் பறக்க விடப் பட வில்லையா?

எல்லா மாநிலங்களிலும் இந்த முறை அமுல்படுத்தப்பட்டாலும் ஒன்றும் தவறில்லை.

ஆனால் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு 80% வேலை வாய்ப்பை அனைத்து துறைகளிலும் உறுதி செய்பவர்கள் தான் இனி ஆட்சிக்கு வர முடியும்  என்ற நிலையை உருவாக்குவோம்.

ஆங்கிலப் பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் ஆவது எப்போது?

தமிழ்நாடு என்பதை டமில் நாடு என்றுதான் ஆங்கிலத்தில் எழுதுகிறோம்.

நமது தமிழ் கலாச்சார துறை அமைச்சர் பாண்டியராஜன் மாநில அளவிலான கமிட்டி ஒன்று இது பற்றி ஆராய்ந்து ஏறத்தாழ 7,000 ஆங்கிலப் படுத்தப்பட்ட பெயர்களை தமிழாக ஆக்கி அறிவிப்போம் என்றார்கள்.

ஆனால் அது எப்போது முடிவுக்கு வரும் என்பதும் இப்போதைய நிலை என்பதும் தெரியப் படுத்தப்படவில்லை.

சீனாவிலும் மியான்மரிலும் இன்னும் பல ஆசிய நாடுகளிலும் ஆங்கிலப்படுத்தப்பட்ட பெயர்களை தங்கள் மொழிகளில் மாற்றி கொண்டார்கள்.

ஆங்கிலேயன் வாயில் நுழையவில்லை என்பதற்காக நமது மொழியை காவு  கொடுத்துக் கொண்டிருந்தோம். விடுதலை பெற்ற பின்னும் அதிலேயே தொங்கிக் கொண்டிருக்க வேண்டுமா?

கொள்ளிடம் என்பதை ஆங்கிலத்தில் கொல்ரூன் ( Coleroon ) என்று எழுத வேண்டிய அவசியம் என்ன?

மாற்று மொழியை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டின் பெயரை மட்டுமல்ல அதன் இன்றியமையாத அம்சங்களை தமிழ் மொழியிலேயே தெரிந்து கொள்ள வேண்டும். பயன்படுத்த வேண்டும். அதுதான் அந்த மொழி சார்ந்த மக்களின் உரிமை.

மற்ற மொழிகளில் இல்லாத ‘ழ’  என்ற அழகிய சொல்லை அதன் உச்சரிப்பை நாம் ஏன் கைவிட வேண்டும் அல்லது பலிகொடுக்க வேண்டும்?

இது ஒரு பிரச்னையா என்று திசை திருப்பி அதன் முக்கியத்துவத்தை குறைக்க முயற்சிக்கிறார்கள். அரசு இடம் கொடுத்து விடக் கூடாது.

நீதிமன்ற மொழியாக உயர் நீதிமன்றம் வரையாவது இப்போதைக்கு நிறைவேற்றியே ஆக வேண்டும். இறுதியாக உச்சநீதி மன்றத்திலும் எல்லா இந்திய மொழிகளும் ஆட்சி மொழிகள் ஆக வேண்டும்.

எப்படி என்று  கேட்டு குழப்பக் கூடாது. மக்களுக்காக நீதிமன்றமா? நீதிமன்றத்திற்காக மக்களா?

வேற்று மொழியில் நீதி வழங்கும் நாட்டை எப்படி நம் நாடு என்று ஏற்றுக் கொள்வது?

பாராளுமன்றத்திலும் நீதிமன்றத்திலும்  என்றைக்கு எட்டாவது அட்டவணையில் கண்ட அத்தனை மொழிகளும் ஆட்சி மொழி ஆகின்றனவோ அன்றுதான் உண்மையான சுதந்திரம்.   

அதுவரை மற்றவர்கள் இரண்டாம் தரக் குடிகள்தான்.

சபாஷ் விஜய் சேதுபதி!! முற்போக்கு சிந்தனையாளர் என்பதை நிரூபித்தார்!!

சபரிமலை பெண்கள் வழிபாடு தொடர்பாக இன்று  உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரணை செய்கிறது.

எப்படித்தான் மறு பரிசீலனை செய்ய முடியும் என்பதை  பொறுத்திருந்து பார்ப்போம்.

நடிகர் விஜய் சேதுபதி இது தொடர்பாக கருத்து சொல்லி முற்போக்கு சிந்தனையாளர்களின் பாராட்டுதல்களையும் சனாதன வாதிகளின் கண்டனங்களையும் பெற்று வருகிறார்.

”மாதவிலக்கு காலத்தில் பெண்கள் கடுமையாக வலிகளை தாங்கிக் கொள்கின்றனர். ஆணாக இருப்பது எளிது. பெண்ணாக வாழ்வது அப்படி அல்ல. அந்த வலி எப்படி வருகின்றது என்று அனைவருக்கும் தெரியும். அந்த வலியில் இருந்துதான் நாம் வந்தோம். மாதவிலக்கு தூய்மையானது அல்ல என்று யார் சொன்னது.? அது மிகவும் புனிதமானது. அந்த வலி இல்லையெனில் இங்கு ஒரு மனிதர் கூட  இருக்க முடியாது.  பெண்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கேரள முதல்வர் பினராயி விஜயன் சரியான முடிவை எடுத்துள்ளார். இதனை எதற்காக சர்ச்சை ஆக்குகின்றனர் என்று புரியவில்லை” என்று தனது புரட்சிகரமான நியாயமான கருத்தை  தெளிவாக பதிவிட்டுள்ளர்.

எதிர்க்கும் நபர்கள் அவரது கருத்தில் இருக்கும் சரி தவறை விவாதிக்காமல் அவரது படங்களை புறக்கணிப்போம் என்று பரப்புரை செய்வது எந்த வகையில் நீதி?

இப்படியான மிரட்டல்களால் உண்மை பேசுபவர்களை அடக்கி விட முடியாது.

வளரட்டும் நற்சிந்தனை!!!

மமதாவிடம் மண்ணைக் கவ்விய சிபிஐ ?!

சாரதா – பொன்சி நிதி நிறுவன ஊழல் வழக்கு 2013 ல் தொடங்கியது.

2014ல் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில் விசாரணை நடந்து வருகிறது. மமதா கட்சியை சேர்ந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டார்கள்.  அப்போதெல்லாம் மமதா பிரச்னை  செய்ய வில்லை.

ஆனால் கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமாரை கைது செய்ய சிபிஐ முயற்சித்த போதுதான் மமதா எதிர்த்தார். தர்ணா செய்தார். அகில இந்திய எதிர்கட்சிகள் ஆதரவு அளித்தன.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மமதா கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கில்  சிபிஐ செயல்படுவதாக மமதா குற்றம் சுமத்துகிறார்.

பிரச்னை குற்றவாளிகள் மீது நடவடிக்கை வேண்டுமா வேண்டாமா என்பதல்ல .

பிரச்னை சிபிஐ அமைப்பிற்கு இருக்கும் அதிகாரம் பற்றியது.

சிபிஐ டெல்லி காவல் துறை சட்டத்தின் படி அமைக்கப்பட்டது. மாநிலங்கள் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே அங்கு சிபிஐ நுழைய முடியும். அந்த அதிகாரத்தை ஆந்திராவும் மேற்கு வங்கமும் திரும்ப பெற்றுக் கொண்டன. பழைய வழக்கு என்பதால் சிபிஐ விசாரணை அங்கு நீடிக்கும்.

சிபிஐ மதிப்பிழந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன.

  அலோக் வர்மாவும் ராகேஷ் அஸ்தானாவும் என்றைக்கு பரஸ்பரம் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக  குற்றம் சாட்டிக்கொண்டார்களோ  அன்றைக்கே சிபிஐ-ன் மானம் கப்பல்  ஏறி விட்டது. 

குற்றச்சாட்டு ஒன்று உண்மையாக இருக்க  வேண்டும். அல்லது பொய்யாக இருக்க வேண்டும். உண்மையாக இருந்தால் லஞ்சம் வாங்கியவர் தண்டிக்கப் படவேண்டும்.    பொய்யாக இருந்தால்  ஆதாரமில்லாமல் பொய் குற்றம் சாட்டியவர் தண்டிக்கப்பட வேண்டும். இரண்டுமே நடக்க வில்லையே? இனி யார் சிபிஐ-ஐ நம்புவார்கள்?

எப்படியோ பிரச்னை உச்ச நீதிமன்றம் சென்ற போது சிபிஐ விசாரணைக்கு கமிஷனர் ராஜீவ் குமார் ஆஜராக வேண்டும் என்றும் அதுவரை கைது செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டு பிரச்னையை தற்காலிகமாக தீர்த்து வைத்திருக்கிறது.

சிபிஐ-ன் கமிஷனரை கைது செய்து மமதாவிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் திட்டம் தோல்வியடைந்தது.

தமிழ்நாட்டில் டிஜிபி ராஜேந்திரன் இல்லத்தில் சோதனை  நடந்தது. எடப்பாடி வாய் திறக்க வில்லை.

அந்த வகையில் மாநில உரிமையை மேற்கு வங்கம் பாதுகாத்தது பாராட்டத் தக்கது.

சிபிஐ சும்மாயிருக்காது என்பது நமக்கு தெரியும். இப்போதே ராஜீவ் குமார் மேல்  ஒழுங்கு நடவடிக்கை எடுக்க  மேற்கு வங்க தலைமை செயலருக்கு உள் துறை அறிவிப்பு அனுப்பியிருக்கிறது.

அதிகாரம் இருக்கும் வரை அவர்கள் அரசியல் செய்யப் போவதை நிறுத்தப் போவதில்லை.

பாஜக, சிபிஐ அமைப்பை பயன்படுத்தி எடுக்கும் அரசியல் நடவடிக்கைகள் அதற்கு ஒருபோதும் உதவப் போவதில்லை.

பல்டி அடித்த அன்புமணி ராமதாஸ்?!

பல்டி அடித்த அன்புமணி ராமதாஸ்

திமுக- அதிமுகவுடன் பேசிவருகிறோம் என்று அன்புமணி ராமதாஸ் பேசியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டது. இந்து தமிழ் அதிமுகவுடன் பாமக பேச்சுவார்த்தை என்று செய்தி வெளியிட்டது.

அதையடுத்து விமர்சனங்கள் எழுந்தன. நாமும் எழுதியிருந்தோம்.

இன்று மாலை பேட்டி கொடுத்த அன்புமணி தான் பேசாததை செய்தியாக வெளியிட்டதாக மறுத்திருக்கிறார். ஆனால் அந்த பேட்டியில் யாரோடு பேசி வருகிறோம் என்று கூட சொல்ல அவர் தயாராக இல்லை.   பேசி வருகிறோம் என்றுதான் சொன்னேனே தவிர யாருடன் என்று கூறவில்லை என்கிறார்.

சொல்லாமல் எழுத தந்திக்கும் இந்து வுக்கும் என்ன அவசியம் வந்தது?

விளக்கம் தந்தவர் யாரிடம் என்றாவது சொல்லி இருக்கலாம்.  இல்லையென்றால் மருத்துவர் ராமதாஸ் அவர்களாவது அறிக்கை வெளியிட்டு இருக்கலாம்.

தான் முடிவெடுத்த பின் அறிவிப்பேன் என்று சொல்கிறாரே தவிர தான் இதுவரை  சொல்லி வந்த திமுக அதிமுக வுடன் கூட்டு இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறாரா இல்லையா என்பதையாவது சொல்லி இருக்கலாம். அதில்தானே பிரச்னை.

பாஜக அதிமுகவை மிரட்டி  வருகிறது. அதிமுகவும் மிரண்டு பணியும் நிலையில்  இருக்கிறது. அதில் யார் யார் எல்லாம் இடம் பெருவார்கள் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது.

குறைந்த பட்சம் இதுவரை பாஜக வின் மத்திய அரசை தமிழர் நலனை புறக்கணிக்கும் அரசு என்று விமர்சித்து வந்தவர்கள் இனிமேல் அந்த நிலைப்பாட்டில் நிலைக்கப் போகிறார்களா அல்லது  தேர்தலுக்காக சமரசம் செய்து  கொள்ளப்போகிறீர்களா இல்லையா? அதை மட்டும் சொல்லுங்கள்.

தேவநாதன் தாமரை சின்னத்திலும் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்திலும் போட்டி என்று செய்திகள்.

கத்தரிக்காய் முற்றினால் கடைக்கு வந்துதானே ஆகவேண்டும். அதற்கு பாமக மட்டும் விதிவிலக்கா என்ன!

பாமக-வின் சந்தர்ப்பவாத அரசியலை ஒப்புக்கொண்ட அன்புமணி ராமதாஸ்?!

சந்தர்ப்பவாத அரசியலை ஒப்புக்கொண்ட அன்புமணி ராமதாஸ்

திமுக -அதிமுக வோடு இனி கூட்டணி கிடையாது என்று மருத்துவர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இருவரும் ஊழல் குற்றவாளிகள் என்பது அவரது முடிவு.

வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டு என்பது அவரவர் உரிமை. ஆனால் அதற்கு ஏதாவது காரணம் கூற வேண்டும். நேற்று வரை எதிரியாக இருந்தவர்களுடன் இன்று கூட்டு வைத்துக் கொண்ட செயலை எல்லாக் காலத்திலும் எல்லாரும் செய்திருக்கிறார்கள்.

ஆனால் நான்தான் நாணயமானவன் மற்ற எல்லாரும் அயோக்கியர்கள் என்று மார் தட்டிக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் சொல்லியபடி நடக்க வேண்டும்.

திமுக- காங்கிரஸ்-கம்யுனிஸ்டுகள் -முஸ்லிம் லீக் -வி சி -மதிமுக கூட்டணி ஏறத்தாழ முடிவாகி  விட்ட நிலையில் மற்றவர்களுக்கு ஏதாவது வழியை தேட வேண்டிய நிலை.  அதிமுக பாஜக வலையில் விழுந்து விட்டதாக அறிகுறிகள் தெரிகின்றன. அதில் பாமகவும் தேமுதிகவும் சேரும் என்ற அடுத்த கணக்கு தவிர்க்க முடியாதது.

            ஆனால் இன்று அன்புமணி ராமதாஸ் ‘  நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக- மற்றும் திமுக வுடன் பேச்சு வார்த்தை நடக்கிறது. முடிந்தவுடன் அறிவிப்போம்’ என்று பேசியிருக்கிறார். 

  இதைவிட சந்தர்ப்ப வாதம் வேறென்ன இருக்க முடியும்? 

பாமக வுக்கு யாருடன் கூட்டணி என்று தீர்மானிக்க இருக்கும் உரிமையை யாரும் கேள்வி கேட்க முடியாது.

பாமக -விடுதலை சிறுத்தைகள் கூட்டணி முறிந்ததன் காரணத்தை ஊர் ஒப்புக் கொள்ளும் வகையில் யாராவது விளக்கி இருக்கிறார்களா?

தமிழர் ஒற்றுமையை வலியுறுத்தும் பாமக  சாதிய அரசியலில் இருந்து வெளி வர வேண்டும் என்று ஏன் முடிவெடுக்க வில்லை? மீண்டும் மீண்டும் சாதி அரசியலை விரிவாக்கும் வேலையை தானே செய்து வருகிறார்கள். சாதி நிலைத்தால் தமிழர் ஒற்றுமை கானல் நீர் தானே?

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்னெடுத்த தன்மான நேர்மையான அரசியல் இன்று பா ம க வுக்கு அன்னியப் பட்டு விட்டதா?

பாமக  எடுக்கும் முடிவுக்கு அப்போது அவர்கள் விளக்கம் அளித்து இருக்கலாம்.

மாறாக திமுக -அதிமுக இருவருடனும் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று ஒப்புக் கொண்டதன்  மூலம் அரசியல் லாபத்துக்காக யாருடனும் சேரத் தயாராக இருக்கும் கட்சிதான் பாமக என்று அன்புமணி ராமதாஸ் ஒப்புக்கொண்ட தாகத்தான் பொருள்.

விடுதலை சிறுத்தைகள் முன்பே திமுக அணியில் இருக்கும் போது பாமக பேசிக்கொண்டிருகிறது  என்று செய்தி வெளியிட்டு அவர்களுக்குள் பிளவை  ஏற்படுத்தும் முயற்சியாக அன்புமணி இப்படி பேசினாரா என்பதும் தெரியவில்லை.

அதையும் தாண்டி மீண்டும் விடுதலை சிறுத்தை களோடு கை கோர்க்கத் தயார் என்பது அன்புமனியின் செய்தியாக இருக்கு மானால் அது நல்ல செய்தியாக இருக்கும். அதை திமுக வரவேற்கவும் செய்யலாம்.

திருமாவளனோடு சேர்ந்ததால் தான் வன்னியர் வாக்கு கிடைக்க வில்லை என்பது  மருத்துவர் ராமதாசின்  தவறான மதிப்பீடு. ஒற்றுமையை ஏற்படுத்த உழைத்தவர் பின் வாங்கிய நிகழ்வு வரலாற்றின் சோகம்.

என்ன முடிவை அறிவித்தாலும் இன்று அன்புமணி தன் இரட்டை முகத்தை வெளிக்காட்டி இருக்க  வேண்டாம்.

தமிழ்த்தாய் வாழ்த்தை கேட்க விரும்பவில்லையோ பிரதமர் மோடி? விளக்கம் இல்லையே ஏன்?

எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு பிரதமர் மோடிஅடிக்கல் நாட்ட வந்தபோது நிகழ்ச்சி தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடவில்லை. நிகழ்ச்சி முடித்த பின் தேசிய கீதமும் இசைக்கப்படவில்லை.

தமிழத்தாய் வாழ்த்தை கேட்க பிரதமர் மோடி விரும்பவில்லையோ?

இதைப்பற்றி பல விமர்சனங்கள் எழும்பியும் தமிழக அரசிடம் இருந்தோ அதிகாரிகளிடம் இருந்தோ விளக்கம் ஏதும் வந்ததாக தெரியவில்லை. ஏன் இந்த மௌனம்?

ஒரு மொழிக்கு வாழ்த்தா? அதுவும் அந்த பாடலில் திராவிட நல் திருநாடும் என்று வேறு வரிகள் இருக்கின்றன. அது மோடியை உறுத்தும் என்று நினைத்து இருப்பார்களோ?

ஏற்கெனெவே ஜன கன மன பாடலுக்குப் பதிலாக வந்தேமாதரம் பாடலை கொண்டுவர வேண்டும் என்பதில்  ஆர்.எஸ்.எஸ் உறுதியாக இருக்கிறது. சங்க சேவகர் மோடிக்கு நன்றாக  தெரியும்.

அதிலும் திராவிட உத்கல வங்கா என்று வரிகள் வரும். அதுவும் ஆகாது.                                 தமிழ்த்தாய் வாழ்த்தை  பாடாமல் தேசிய கீதத்தை மட்டும்  இசைத்தால் பிரச்னை வரும் என்பதால் இரண்டையும்  நிறுத்தி விட்டார்கள். 

இதுதான் பாரதீய பிராண்டு தேச பக்தி. ??!!