Home Blog Page 5

எம்பிக்களை இனி யார் மதிப்பார்கள்.. பாஜகவின் திட்டம்தான் என்ன?

கொரானா வந்தாலும் வந்தது எதில்தான் அரசியல் என்றில்லை. எல்லாவற்றிலும் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இன்று மத்திய அரசு பிரதமர், குடியரசுத் தலைவர் அமைச்சர்கள் மற்றும் எம்பிக்களின் சம்பளத்தில் முப்பது சதம் குறைத்து அவசர சட்டம் கொண்டு வந்திருக்கிறது .

அதில்கூட யாரும் பெருத்த ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. எல்லாரும் நிதி அளிக்கும்போது அவர்களும் அளிப்பதாக இருக்கட்டும் .

ஆனால் எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு  நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்திருப்பதில்தான் சந்தேகம் வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தடையை  நீடிப்பார்களா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஏதாவது காரணம் சொல்லி இந்த நிதி ஒதுக்கும் அதிகாரத்தை பறித்து விடுவார்களா?

மக்கள்  பிரதிநிதிகள்  அந்த நிதியை தொகுதி மேம்பாட்டுக்குத்தானே செலவு செய்யப் போகிறாகள். அவர்களுக்கும் மக்களுக்கும் இருக்கும் தொடர்பு என்பது  இந்த நிதிதான். இது அல்லாமல் தொகுதியைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேச முடியும் என்பது மட்டுமே மிச்சம் இருக்க போகிறது.

இது ஒரு வகையில் எம்பிக்களின் பல்லைப் பிடுங்கும் வேலைதான்.

எனவே மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதனால் பாதிக்கப்  படப் போவது எங்கள் எம்பிக்களும்தானே என்று நீங்கள் சொல்ல முடியாது. ஏனென்றால் நீங்கள் அதிகாரத்தில் இருக்கிறீர்கள்.

எதிர்க்கட்சி எம்பிக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

நோய் தடுப்புக்கு நிதி தேவை. அதற்காக மக்கள் பிரதிநிதிகளின் உரிமை  பறிப்பில்  ஈடுபடக் கூடாது. 

சோதனையான இந்த நேரத்தில் மத்திய  அரசை விமர்சிக்கும் வகையில் நடந்து கொள் வதை ஒரு பொறுப்புள்ள அரசு தவிர்க்க வேண்டும்.

பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேசினார். இதுபற்றி பேசினாரா? முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தொடர்பு உடையவர்களை கலந்து கொண்டு எடுத்தால் அதில் எல்லாரும் பங்கு பெற்ற நிறைவு இருக்கும்.

இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் உங்களிடம் இருக்கும்போது ஆலோசிப்பதில்  ஏன் தயக்கம்?

மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்க்க கோரும் எடப்பாடி யாகம் நடத்த அனுமதித்தது ஏன்?

கொரானாவை தடுக்க  தமிழ்நாடு  அரசு கோவில்களில் யாகங்களை நடத்த அனுமதி அளித்து உள்ளதாக தெரிகிறது.

ஒரு பக்கம் மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்க்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுக்கிறார். அது எல்லா மதங்களுக்கும் பொருந்தும். பெரும்பாலும் இப்போது ஞாயிறன்று கிறிஸ்தவர்கள் சர்ச்சில் கூடாமல் வீட்டில்  இருந்தபடியே ஜபம் செய்கிறார்கள். முஸ்லிம்கள் வெள்ளிக் கிழமைகளில் வீட்டில் இருந்தபடியே  தொழுது  பள்ளிவாசல்களை தவிர்க்கிறார்கள்.

இன்று தென்காசியில்  மட்டும் பள்ளிவாசலில் தொழுகை நடத்தியதற்கு  முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாகை நிஜாமுதீன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

எனவே கோவில்களில் யாகம் நடத்த கொடுத்த அனுமதியை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

வழக்கமாக நடைபெறும் பூசைகளில் நோய் தடுப்பு பிரார்த்தனைகளை அர்ச்கர்கள் செய்தால் போதாதா ?

அரசு மதங்களில் இருந்தும் கடவுள்களிடம் இருந்தும் கொரானாவை ஒதுக்கி  வைக்க வேண்டும்.!

9 நிமிட மின்சார நிறுத்தம் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்புவோம்?

ஆனாலும் சிலர் அச்சமூட்டு கின்றனர். அதாவது திடீர் என்று மின்சார தேவை குறையும்போது அதனால் மின் விநியோக சாதனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிலர் கூறுகின்றனர்.

அதுவும் மராட்டிய மின்துறை அமைச்சர் நிதின் ராவத் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகிறார். இதே கருத்தை சசிதரூரும் ஜய்ராம் ரமேஷும் வெளியிட்டுள்ளனர் .

எல்லா நல்லபடியாக நடக்கும் என்று அமைச்சர் தங்கமணி இன்று நம்பிக்கை தருகிறார்.

ஆனால் மக்கள் இந்த மின்சார நிறுத்தத்தை  கடைபிடிக்க வில்லை என்றால் ஒரு பிரச்னையும் ஏற்படாது.

ஆனாலும் கட்சி  பாகுபாடு பார்க்காமல் எல்லாரும் விளக்கை அணைப்பார்கள் என்றுதான் எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள்.

அதற்குள் சிலர் இந்த ஒன்பது நிமிட ஒளியணைத்தல் மற்றும் ஒளி பாய்ச்சுதல் ஆகியவற்றால் ஏற்படும் நன்மைகளை விஞ்ஞான ரீதியாக விவரிக்க தொடங்கி விட்டார்கள்.

அதைத்தான் விளங்கிக் கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லை.

பார்க்கலாம் என்ன நடக்கிறது  இன்று என்று?

கொரானாவை ஏவியவர் அல்லாவா? ஒரு மவுலானாவின் பிதற்றல்!

அப்படி ஒரு மவுலானா பேசிய காட்சி வாட்ஸ் ஆப்பில் உலா வருகிறது.

எல்லா முஸ்லிம் நாடுகளும் கொரானாவை எதிர்த்து மருத்துவ ரீதியில் போராடி வருகின்றன.

பேசுபவர் பாலஸ்தீனதை சேர்ந்தவர் போல் தெரிகிறது. சீனா, இத்தாலி, ஐரோப்பிய நாடுகள் , அமெரிக்கா அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதால் மட்டுமல்ல ஷியா பிரிவை சேர்ந்த ஈரானையும் அவர் சேர்த்துக் கொள்கிறார். அங்கெல்லாம் கொரானாவை  ஓர் ஆயுதமாக அல்லா அனுப்பி  இருக்கிறான் என்று அவர் பேசி இருக்கிறார். இஸ்ரெலையும் அவர் விட்டு வைக்க வில்லை.

சிறிது நேரத்தில் காஜாவிலும் கொரானா தொற்றால் ஏழு பேர் பாதிக்கபட்டதை ஒருவர் விமர்சிக்கிறார்.

இதுவரை நோய்த்தோற்றால் பாதிக்கப்படாத முஸ்லிம் நாடுகள் என்று ஏதும் இல்லை.

அடுத்து எதிரிகள் மீது நோயை இறைவன் அனுப்புவான் என்று கூறுவது அந்த இறைவனையே அவமதிப்பது ஆகாதா ?

பாகிஸ்தானில் சில மசூதிகளில் தொழுகையை ரத்து செய்ய வில்லை ஆனால் அரசு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

மலய்சியாவில் சுமார் 16000 பேர் கூடிய கூட்டத்தை இதே தபிலிகி ஜமாஅத் கூட்டி இருக்கிறது. அதனால் 600 பேர் பாசிடிவ் ஆக இருக்கிறார்கள். 

எல்லாவற்றுக்கும் மேலாக முஸ்லீம்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் செல்ல விதிக்கப் பட்டுள்ள ஹஜ் யாத்திரையை இந்த ஆண்டு ஒத்தி வையுங்கள்  என்று சவுதி அரேபியா அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. 

அல்லாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் அளவு அந்த மவுலானாவின் மனம் வெறுப்பால் நிரம்பிக் கிடக்கிறது. அவர் உண்மையில் இஸ்ரேல் உடன் ஆனா  போரால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் எனக்  கருத வேண்டி இருக்கிறது.

இறைவன் அந்த மவுலானாவிற்கு நல்லறிவையும் சாந்தியையும் அருள்வானாக !

மரணம் அடைந்தபின் வாகன வசதி; தெலுங்கானா காவல் துறையின் அலட்சியம் ?

தமிழ்நாடு இளைஞர் ஒருவர் மராட்டிய மாநில நாக்பூர் பக்கத்தில் பணி செய்து வந்த நிலையில் கொறானா பாதிப்பில் சுமார் முப்பது பேருடன் கால்நடையாகவே தமிழகம் நோக்கி பயணித்தார்.

மராட்டிய அரசும் அவர்களின் போக்குவரத்துக்கு வசதி செய்து தர வில்லை. இடையில்  தெலுங்கானா காவல் துறை அவர்களை தடுத்து மண்டபத்தில்  தங்க வைத்தது .

அதில் ராஜேஷ் என்ற இளைஞர் உடல் நலம் பாதிக்கபட்டு சிகிச்சை பலன் இன்றி  உயிர் நீத்திருக்கிறார்.

உயிரோடு இருக்கும்போது அவர்களை மண்டபத்தில் தங்க வைத்த காவல் துறை மாண்டபின் அவரது உடலை வாகனத்தில் அனுப்பி வைத்திருக்கிறது.

என்ன செய்வது.? உடலுக்கு இருக்கும் மரியாதை உயிருக்கு இல்லையே ?!

கொரானா பலி வாங்குவது போதாது என்று அதிகாரிகளின் அலட்சியமும் பலி  வாங்குகிறதே ?!

ஷாருக்கான் 50 கோடி பாகிஸ்தானுக்கு கொடுத்ததாக அவதூறு?

வாட்ஸ் அப்பில் உலா வரும் ஒரு வதந்தி இந்தி நடிகர் ஷாருக்கான் பாகிஸ்தானில் கொரானா பாதிப்பை ஈடுகட்ட ரூபா ஐம்பது கோடி கொடுதுள்ளார் என்பது.

அதை உ பி முதல்வர் யோகி ஆதித்ய நாத் பேசுவதாக அமைத்திருக்கிறார்கள்.

விசாரித்ததில் அந்த செய்தி போலி எனத் தெரிகிறது. திட்டமிட்டு முஸ்லிம் நடிகர்கள் மீது மதவெறி சாயம் பூச ஒரு கூட்டம் அலைகிறது.

ஷாருக் முஸ்லிமாக இருந்தாலும் அவர் ஒரு  இந்து பெண்ணை திருமணம் செய்து அவர் மனைவி  இந்துவாகவும் இவர் முஸ்லிமாகவும் வாழ்ந்து வருகிறார்கள். பிள்ளைகள் வயதுக்கு வந்தவுடன் தங்கள் மதத்தை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் என்று அறிவித்திருக்கிறார்கள்

இருந்தாலும் மதவெறிக் கூட்டம் அவரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தி நடிகர் அக்சய் குமார் 25 கோடி ரூபாய்  சொந்த பணத்தில் இருந்து கொடுத்து எல்லாருடைய மரியாதையை யும் பெற்றார்.

நல்லதை பாராட்டுவோம். அதற்காக முஸ்லிம்களை குறிவைத்து பொய்ப் பிரச்சாரம் செய்வதை அரசு அனுமதிக்கக் கூடாது.

அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் அரசும் இதற்கு  மறைமுக ஆதரவு  என்றுதான் பொருள்படும்.

லைட் அடிக்கச் சொன்ன மோடி; திகைப்பில் இந்தியா?

நேற்று மோடி சிறிது நேரம் பேசப்போகிறார் என்றதும் இந்தியாவே பெருத்த எதிர்பார்ப்பில் இருந்தது.

பேசினார் மோடி. திகைப்பில் உறைந்தது இந்தியா.

5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டின் விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டு 9 நிமிடங்களுக்கு மாடியில் நின்று உங்கள் செல்போனில் டார்ச் அடியுங்கள் அல்லது டார்ச் லைட் அடியுங்கள் அல்லது வேறு வெளிச்சத்தை காட்டுங்கள் என்றார்.

அவரது ஆதரவாளர்களே எதற்கு சொன்னார் ஏன் சொன்னார் என்று காரணங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சொன்னது பிரதமர் என்பதால் கிண்டல் அடிக்கவும் கூடாது. விமர்சிக்கவும் கூடாது.  அது அவர் வகிக்கும் பதவியின் மாண்பைக் குலைத்து விடும்.

ஏதாவது புதிய  திட்டங்களை அறிவித்து கட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிப்பார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம்.

நோயின் தாக்குதலை ஓட்டு மொத்த தேசமும் ஒருங்கிணைந்து எதிர்த்து  போரிட்டு வருகிறது.

லைட் அடிப்பது கொரானாவை விரட்டி விடுமா ?

பத்து நிமிடம் வீடே இருளில் ஆழ்ந்திருக்குமே ஏன்?

மணி ஒன்பது, நிமிடம் ஒன்பது என்று ஏன் தேர்ந்தெடுத்தார் பிரதமர் ? 

நவம்பர் ஒன்பதாம் தேதி நடந்த இரட்டை கோபுர தாக்குதலில் ஈடுபட்ட இஸ்லாமிய தீவிரவாதிகளை நினைவுபடுத்துகிறாரா பிரதமர் ? 

மோடிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த உள்குத்து வேலை ஏதும் நடக்கிறதா ?

நீங்கள் எதைச் சொன்னாலும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஆழமாக பதிய வைக்க இதுவே வழி என்று சொல்லி உங்களை மயக்கி விட்டார்களா?  

தமிழக அமைச்சரவையே அன்று இரவு லைட் அடிக்கும் என்பது உறுதி. எதற்கு என்றால் பிரதமரை  கேளுங்கள் என்பார்கள்.

ஒண்ணுமே புரியலே உலகத்திலே என்று  பாட வைத்து விட்டார் மோடி .

மோடி பேசுகிறார் என்றால் எதிர்பார்த்திருந்த மக்கள் இனி எதிர்காலத்தில் பேச வந்தால்  என்ன குண்டைத் தூக்கிப் போடுவாரோ என்று கதி கலங்க வைத்து விட்டார் பிரதமர். 

ஒன்பதில் அப்படி என்ன விசேடம் ?

கோவில் குருக்களுக்கு உதவித்துகையும் தர வேண்டும், காணிக்கை தடையும் வேண்டும்!

இந்து சமய அறநிலயத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 36000 கோவில்களில் பணி புரியும் 10  லட்சம்  சிவாசாரியார்கள் பட்டாச்சார்யர்கள்  கொரொனா தொற்றைத் தடுக்க ஏப்ரல்  14 ம் தேதி வரை கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் வருவாய் பாதித்துள்ளது .அவர்களுக்கு  மாத சம்பளம் இல்லையாம். பக்தர்கள் வழங்கும் காணிக்கையே முக்கிய வருவாய் .

எனவே எங்களுக்கு மாதாந்திர உதவித்துகை வேண்டும். இதுதான் அகில இந்திய சைவ சிவாச்சார்யார்கள் செவ்வா சங்கத்  துணை  தலைவர் சிவசங்கர் சர்மாவின் கோரிக்கை.

சம்பளமே இல்லாமலா வேலை பார்க்கிறார்கள் அர்ச்சகர்கள். பின் எப்படி தங்கள் குடும்பத்தை நடதுகிறார்கள்?

இறைப்பணி செய்யும் அத்தனை பெரும் பார்ப்பனர்கள்.அதில் எங்களுக்கு பங்கு கொடுங்கள் என்று கேட்டால் மறுக்கிறாகள். நாங்களேதான் செய்வோம் என்கிறார்கள்.

கிராமக் கோவில்  அர்ச்சர்களுக்கு  பூசாரிகள்  என்று பெயர் சூட்டி அவர்களை தரம் தாழ்த்தி வருகிறார்கள். கிராமக் கோவில்களில் இருக்கும் சாமிகள் சிறு தெய்வங்களாம்.

இவர்களுக்கு அரசு எப்படி உதவ முடியும்?

இறைப்பணி செய்யும் எல்லாருக்கும் மாத சம்பளம் தர வேண்டும். அதுவும் அவர்களின் குடும்பத்தை காப்பாற்றும்   அளவு போதுமானதாக  இருக்க வேண்டும். அதில் யாருக்கும் ஆட்சேபணை இல்லை.  ஆனால் அதில் எல்லாருக்கும் பங்கு வேண்டும்.

தனியுரிமை என்பது ஒழிக்கப் பட வேண்டும்.

தட்டில் காணிக்கை பெறுவது தண்டனைக்குரிய குற்றமாக்கப்  பட வேண்டும். மாதம் 25000-50000 வரை சம்பளம் கொடுத்தால் ஏன் காணிக்கை ?   பக்தர்கள் அனைவரும் தங்கள்  காணிக்கைகளை உண்டியலில்தான் செலுத்த வேண்டும். பெரும்   துகையாக இருந்தால் அலுவலகத்தில் செலுத்தி ரசீது  பெற வேண்டும். 

அர்ச்சனை செய்வது அவர்களின் கடமை. சம்பளம் தந்தால் பிறகு எதற்கு கட்டணத்தில் பங்கு?

சன்னதியில் நடக்கும் அனைத்தையும் சிசிடிவி பதிவில் ஆவணப் படுத்த வேண்டும்.

கோவில் பணியாளர்களுக்கு இடையே சம்பள விகிதத்தில் பெருத்த வேறுபாடு  இருக்கக் கூடாது. எல்லாரும்தான் இறைப்பணியில் பங்கு  பெறுகிறார்கள். அதில் ஏன் பெருத்த வேறுபாடு ?

இந்த சீர்திருத்தங்களுக்கு சிவாச்சார்யார்கள் உடன்பட்டால் அவர்களுக்கு தேவையான உதவிகளை  அரசு செய்வதில் யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இருக்காது.

பாரம், கே டி கருப்புதுரை, திரௌபதி போன்ற படங்கள் நிறைய வர வேண்டும்!

சினிமாக்கள் வெறும் பொழுது போக்குக்குத் தானா  ?

பொழுதும் போக வேண்டும். பொருளும் இருக்க வேண்டும்.

அந்த வகையில் சமீபத்தில் வந்த பாரம், கே டி கருப்புதுரை, திரௌபதி, நேர்கொண்ட பார்வை , பரி ஏறும் பெருமாள் போன்ற  படங்கள் சமுதாய பிரச்னைகள் பற்றி பேசின.

அஜீத் என்ற கதாநாயகன் இருந்ததால் நேர் கொண்ட பார்வை வெற்றி  பெற்றது. பெண்ணின் விருப்பம் இல்லாமல் நடைபெறும் எந்த உறவும் குற்றமே என்பதை அழுத்தமாக சொன்னது அஜீத்  படம். திரௌபதி  சர்ச்சையும் சாதியும் கலந்ததால் வெற்றி பெற்றது. தலித்தியம் பேசியதால் பரி ஏறும் பெருமாள் வெற்றிபெற்றது.

ஆனால் வயதான பெற்றோரை கருணை கொலை செய்யும் சமுதாய  பிரச்னையை  பேசிய கருப்புத்துரையும் பாரமும் அந்த அளவு  பேசப் பட வில்லை.  ஆனாலும் பாராட்டுதல்களை பெற்றது. ஒருவேளை கதாநாயகன் பிரபலம்  இல்லை.

தென் மாவட்டங்களில் பெண் சிசுக் கொலை மட்டுமல்ல வயதானோர் கருணைக் கொலையும்  கண்டு கொள்ளப் படாத நிதர்சனங்கள் .

அதையும் விஞ்ஞான பூர்வமாக செய்கிறார்கள். எண்ணைக்குளியலை தொடர்ந்து இளநீர்களை குடிக்க வைத்தால்  ஜன்னி கண்டு இறந்து விடுவார்கள் .

இன்னும் முடியாமல் போனால் ஊசி  போட்டு முடிக்கவும் தயாராக இருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய சமூக அவலம்.

முற்காலத்தில் முதுமக்கள் தாழி என்ற முறை  இருந்திருக்கிறது.சுட்ட களிமண் பானையில்  முதுமக்களை வைத்து  கீழே இறக்கி விடுவார்களாம்.

எப்படியோ சமுதாய பிரச்னைகளை ஜன ரஞ்சகமாக சொல்லியாவது வெற்றிப் படங்களாக தமிழ்  சினிமா தரும் என்று  எதிர்பார்ப்போமாக,

முஸ்லீம்கள் கொரானவை பரப்புகிறார்கள் என்று திட்டமிட்டு அவதூறு பிரசாரம் ?

1926 ல் இருந்து தப்லீக் இ ஜமாஅத் என்ற அமைப்பு டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இயங்கி வருகிறது. அவர்கள் மார்ச் மாதம் ஐந்து நாட்கள் மாநாடு நடத்த தீர்மானித்து உலகம் முழுதும் இருந்து பிரதிநிதிகளை அழைத்து நடத்தி இருக்கிறார்கள்.

அதற்குள் கொரானா பாதிப்பு வந்து விட்டது. ஆட்சியில் இருப்பவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்?

அவர்களை மாநாடு நடத்த அனுமதித்து இருக்கக் கூடாது. அல்லது  அவர்கள் அனைவரையும் கண்காணிப்பில் வைத்திருக்க  வேண்டும்.

1850 பேர் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் சவுதி அரபியா, இந்தோனேஷியா, மலேசியா , இலங்கை , தாய்லாந்து  போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் வந்து போய் இருக்கிறார்கள்.

கடைசியில் 24ம்  நிகழ்ச்சியை மட்டும் ரத்து செய்திருக்கிறார்கள்.

இப்போது அந்த மாநாட்டில் கலந்து  கொண்டவர்கள் கொரானாவை பரப்புகிறார்கள் என்று பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதை விட அதிகாரிகள் ஏன் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வில்லை என்ற  கேள்விக்கு என்ன பதில் ?

அதே நேரம் கலந்து கொண்டவர்கள் தாங்களே முன்வந்து தங்களை சோதனைக்கு ஆட்படுத்தி இருக்க வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.

அச்சம் காரணமோ அறிவீனம் காரணமோ அதற்காக திட்டமிட்டு நோயை பரப்புகிறார்கள் என்று அவதூறு பரப்புவதில் என்ன நியாயம் இருக்கிறது? 

அதில் அவர்களும்தானே பாதிக்கப்படுவார்கள்.

கொரானா மதம் பார்த்து உயிர்களை எடுக்க வில்லை.

மனிதர்கள்தான் கொரனாவை பயன்படுத்தி மதம் பிடித்து அலைகிறார்கள்.