Home Blog Page 51

மோடி அரங்கேற்றிய 10% இட ஒதுக்கீட்டு மோசடி அரசியல்??!!

இட ஒதுக்கீடு எதனால் வந்தது.?

நாங்கள் 90% இருக்கிறோம். ஆனால் கல்வியிலும் சமுதாயத்திலும் பின் தங்கி இருக்கிறோம். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 10% உள்ள மேல்தட்டு சிறுபான்மை மக்கள் 90% வாய்ப்பை பெற்று வாழ்கிறார்கள். எனவே எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும். இதுதானே இடஒதுக்கீடு கொள்கையின் அடிப்படை.

இப்போது கல்வியிலும் சமுதாயத்திலும் முன்னேறிய ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு கொடுக்கிறோம் என்பதை விட ஒரு மோசடிதிட்டம் இருக்க முடியுமா?

இட ஒதுக்கீடு பெற்ற மக்கள் எத்தனை சதம் பேர் முன்னேறி இருக்கிறர்கள்? ஏதாவது ஆய்வு செய்திருக்கிறீர்களா? ஒதுக்கீடு பெற்ற எல்லாரும் முன்னேறிவிடவில்லை என்பதுதானே உண்மை. அதனால்தானே 27% பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு செய்ய மண்டல் கமிஷன் பரிந்துரையை அமுல்படுத்த விபிசிங் முனைந்தபோது மந்திர் பிரச்னையை கிளப்பி அவரை ஆட்சியிலிருந்து அகற்றினிர்கள் .

முக்கியமான கேள்வி. முற்பட்ட பொது வகுப்பினரில் எத்தனை சதம் பேர் கல்வி வேலைவாய்ப்பில் தொழில்துறையில் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள்?  அதே துறைகளில் பின் தங்கிய மிக பின் தங்கிய, பட்டியல், மலைவாழ் மக்கள் எத்தனை சதம் பேர் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள்? இந்த ஆய்வை செய்த பின்தானே யாருக்கு எத்தனை சதம் ஒதுக்கீடு தேவை என்பதை நிர்ணயிக்க முடியும்? 

இட ஒதுக்கீடு நிரந்தர ஏற்பாடாக இருக்க முடியாது. கூடாது. பின்தங்கிய நிலையில் உள்ளவர்களை முன்னேறிய வகுப்பினர் எத்தனை சதம் வாய்ப்பை பெற்றிருக்கிறார்களோ அந்த அளவை தாழ்த்தப் பட்டோரும் பிற்பட்டோரும் பெற்ற பிறகு இட ஒதுக்கீடை ரத்து செய்து எல்லாரும் தகுதி அடிப்படையில் வாய்ப்புகளை பெற வைப்பது தான் சமூக நீதி.

ஆனால் ஒதுக்கீடு கொடுத்தவர்களை எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறீர்கள் என்று கணக்கீடு செய்யாமல் அவர்களை பாதிக்கும் வகையில் முற்பட்டோரில் ஏழைகளை கணக்கெடுத்து அவர்களுக்கு ஒதுக்கீடு என்பது குட்டையை குழப்பி பின்னால் இட ஒதுக்கீடு முறையை இல்லாமல் செய்வது  என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் இதை பார்க்க முடியும்.

நரசிம்மராவ் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட இதே ஒதுக்கீடை உச்ச நீதிமன்றம் முன்பு ரத்து செய்தது. இப்போது என்ன செய்யப்  போகிறது என்று பார்ப்போம்.?

அரசியல் சட்டத்தில் இல்லாத பொருளாதார அளவுகோலை நுழைத்து அனுமதிக்கப் பட்ட சமூக கல்வியறிவு பிற்பட்ட நிலை ஒதுக்கீடை அசைத்துப் பார்ப்பதுதான் உள் நோக்கம்.

இப்போது தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் நிலவும் 49.5% பட்டியல் வகுப்பார்,  மலைசாதியினர், பிற்பட்டோர் ஒதுக்கீடு தவிர மிச்சமிருக்கும் 50.5% வாய்ப்புகளை முன்னேறிய சமூகத்தினர்தான் பெரும்பாலும் கைப்பற்று கிறார்கள்.

இதனால் ஏறத்தாழ மக்கள் தொகையில் 95% பேர் ஏதாவதொரு ஒதுக்கீடுக்கு தகுதி படைத்தவர்கள் ஆகிறார்கள்.

இதுவா சமூக நீதி?

இன்னும் இதைப்போல் பல அஸ்திரங்களை வீசப்போவதாக சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சொல்லியிருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

என்ன வேண்டுமானால் செய்வார்கள். மோடி மீது அச்சம் பரவுவது மட்டும்தான் இந்த அறிவிப்பின் பலன்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறிய பின் குடியரசுத் தலைவர் ஒப்புதல் என்பது முடிவாகிபோன ஒன்று. சட்ட மன்றங்களில் நிறைவேற்ற முனையும் போது  எதிர்த்துப் பேசிய அதிமுக தலைவர்கள் நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றுவார்களா? வாக்கெடுப்பின் பொது எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தவர்கள் ஆயிற்றே?

உச்ச நீதிமன்றம் என்ன செய்யப் போகிறது என்பதில் இருக்கிறது சமூக நீதி நிலைக்குமா பறக்குமா என்பது?

பொங்கல் பரிசு ரூபாய் 1000.. தீர்ப்பை மாற்றியது உயர் நீதிமன்றம்!

அரிசி அட்டை தார்களுக்கு  மட்டுமே பொங்கல் பரிசு ரூபாய் 1000 தர வேண்டும் என்று தடை விதித்த உயர்நீதிமன்றம் தன் உத்தரவு அமுலாகும் முன்பே முக்கால் வாசிப்பேர் வாங்கி விட்டதால் வேறு  வழியின்றி சர்க்கரை அட்டை உள்ளவர்களுக்கும் தரலாம் என்று தனது முந்தைய தடையை விலக்கி  கொண்டது.

இப்போது எதுவும் வாங்காமல் இருக்கும் அட்டைதார் சுமார் ஐம்பதாயிரம் பேருக்கு மட்டும் கிடைக்காதா கிடைக்குமா என்பது தெரியவில்லை.

இப்போது இருக்கும் அட்டைகள் எதுவும் வருவாய் சான்று பார்த்து வழங்கப் பட்டதில்லை.

வறுமைக் கோட்டிற்கு மேலே இருப்பவரை அடையாளம் காண எந்த முயற்சியும் எடுக்கப் படவும் இல்லை. எல்லாருக்கும் அரசுப்பணத்தை கொடுத்து அவர்களின் ஆதரவை பெறுவது மட்டுமே நோக்கமாக இருப்பதால் அதில் அவர்கள் அக்கறை  காட்ட வில்லை.

இனிமேல் ஆவது குடும்ப அட்டைகளை வருவாய் அடிப்படையில் இனம் பிரிக்க அரசு முயற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

என்னென்ன வழிகளில் அரசின் சுமையை குறைக்கலாம் என்பதை அரசியல் காரணங்களுக்காக இல்லாமல் பொதுநலன் ஒன்றை மட்டுமே அடிப்படையாக வைத்து கொள்கை வகுக்க அரசு உடனடியாக முன்வர வேண்டும்.

அதில் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒருமித்த கருத்து உருவாக்க முயற்சிக்க வேண்டும். செய்வார்களா?

சிபிஐ ; உச்சநீதிமன்ற தீர்ப்பை செல்லாதது ஆக்கிய மோடி ?!

அலோக் வர்மாவின் கட்டாய விடுப்பை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்து மீண்டும் பணியில் அமர்த்தியது.

அவரும் பணியில் சேர்ந்து அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.

ஆனால் பிரதமர் உச்ச நீதிமன்ற நீதிபதி எதிர்க்கட்சி தலைவர் மூன்று பேரும் சேர்ந்து முடிவெடுக்கலாம் என்று கூறியதால் பிரதமர் நீதிபதி சிக்ரி எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகிய மூன்று பேரில் பிரதமரும் நீதிபதியும் சேர்ந்து மீண்டும் அலோக் வர்மாவை வேறு இடத்துக்கு தூக்கி அடித்தார்கள். எதிர்கட்சி தலைவரின் ஆட்சேபனைகளை கேட்கவில்லை. அதுவாவது பரவாயில்லை. உத்தரவு போடும் முன் பாதிக்கப்பட்ட அலோக் வர்மாவிடம் விளக்கம் கூட கேட்கவில்லை.   அது இயற்கை நீதிக்கு முரண் இல்லையா? முரண் என்று நீதிபதிக்கு  தெரியாதா?

ஆக தன்னிடம் இணக்கமாக இல்லையென்றால் அவர்களை பழிவாங்க பிரதமர் எந்த எல்லைக்கும் செல்வார்.

நல்ல பிரதமர் . நல்ல சிபிஐ.  விளங்கி விடும் நீதி??!!

ரசிகப்பசங்க செய்யும் அட்டகாசங்களை தடுக்க சட்டத்தில் வழியே இல்லையா??!!

ரசிகர் மன்றங்கள் செய்யும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சட்டம் வேண்டும்.    அல்லது இருக்கும் சட்டங்களை பயன்படுத்தி அவர்களை கட்டுப்  படுத்த வேண்டும்.

சினிமா நடிகர்களுக்கு என்று இருக்கும் ரசிகர் மன்றங்கள் செய்யும் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சினிமா ரசிகர்களால் அரசியல் அதிகாரம் நிர்ணயிக்கப் பட்டு வந்திருக்கிறது. 

                இனியும் அது தொடர வேண்டுமா?

தொடக்கத்திலேயே அரசியல்வாதிகள் நடிகர்களையும் அவர்களது மன்றங்களையும் தங்கள் அரசியல் இலக்குகளுக்காக பயன்படுத்த துவங்கிய காரணத்தால் இப்போது அவர்கள் தமிழ்நாட்டில்  தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக மாறியிருக்கிறார்கள் .

இன்று ரஜினி, அஜித் படங்கள் இரண்டு வெளியாகி இருக்கின்றன. பேட்ட, விஸ்வாசம்.

சட்டத்தை மதிக்காது அரசு அனுமதி பெறாமல் ஐந்து  காட்சிகள். பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்கள் பணத்தை யார் அதிகம் சுருட்டுகிறார்கள் என்பதில் தான் போட்டி. ஒரு  தியேட்டருக்கு ஐம்பதாயிரம் அபராதம் விதித்து அரசு உத்தரவிட்டிருக்கிறது.

மக்களை மகிழ்விக்க கலைஞர்கள் தங்கள் தொழிலை செய்வதிலும் அதில் மக்கள் ஈடுபாட்டுடன் கொண்டாடுவதும் வரவேற்கத் தக்கதே.

கலைஞர்களை  போற்றாத சமூகம் உணர்வற்றுப் போனதாக கருதப் படும். ஆனால் கலைஞர்களை கலைஞர்களாக மட்டுமே போற்ற வேண்டும். ஆட்சியாளர்களாக அல்ல. அதற்கு அந்த கலைஞன் தன்னை தகுதியான அரசியல்வாதியாக நிரூபிக்க வேண்டும். அப்படியா நடக்கிறது இங்கு?

ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது.?

அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்பது நியாயமா? அதை ரசிகர்கள் ஊக்கப்படுத்த வேண்டுமா?

அஜித் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்ய  முயன்ற போது  கட் அவுட் கீழே விழுந்து ஐந்து ரசிகர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். நல்ல வேளையாக வேறு எதுவும் ஆகவில்லை.

ஒரு அஜித் ரசிகன் தந்தை பணம் கொடுக்கவில்லை என்று அவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியிருக்கிறான் .

ஒரு தியேட்டரில் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்து பட்டு இருவர் அவசர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஜப்பான் ரசிகர்களை பேட்டி எடுத்து இமேஜை பெரிதுபடுத்துகிறார்கள்.

இரண்டு தியேட்டர்களில் திருமணங்கள் நடத்தி இருக்கிறார்கள். நல்ல காரியம்தான்.  அதை இப்படி நடத்துவது யாருக்கு பெருமை சேர்க்க? யாரை இழிவுபடுத்துகிறீர்கள்?

இவைகள் எல்லாம் வரவேற்கத்தக்க போக்குகளா? மக்களின் தரத்தை நிர்ணயிக்கும் போக்குகளா?

தமிழனின் தரத்தை இந்த நிகழ்வுகள்தான் நிர்ணயிக்கும் என்றால் நாம் தலை கவிழத்தான் வேண்டும்.

தமிழனின் தலையை நிமிர வைக்கும் தலைமை அரசியல் அதிகாரத்திற்கு வரவேண்டும்.

வாவர் மசூதிக்கு பெண்கள் வரலாம் என்ற அறிவிப்பால் இந்து அமைப்புகள் ஏமாற்றம்??!!

வாவர் மசூதிக்கு பெண்கள் வரலாம்

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் வரலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு உருவம் கொடுக்க முயலும் பெண்கள் காவல் துறையால்  தடுத்து திருப்பி அனுப்பப் படுகிறார்கள்.

அதையும் மீறி இதுவரை நான்கு பெண்கள் அய்யப்ப தரிசனம் செய்து இருக்கிறார்கள்.

இடையில் பெண்கள் தரிசனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் இந்து அமைப்புகள் பெண்களை வாவர் மசூதிக்கு அழைத்து சென்று அதன் மூலம் பிரச்னையை கிளப்பி இந்து கோவிலுக்குள் பெண்களை அனுப்பும் நீதிமன்றம் மசூதிக்குள் அனுப்புமா என்ற கேள்வியை எழுப்ப திட்டமிட்டு அதற்காக பெண்களை திரட்டி வாவர் மசூதிக்கு அனுப்பி வந்தனர். காவல் துறையும் சிலரை திருப்பி அனுப்பி வந்தனர். அவர்கள் மீது மதக்கலவரம் ஏற்படுத்தும் முயற்சி உட்பட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது.

பிரச்னை வேறு திசையை நோக்கி பணிப்பதை அறிந்த மசூதி நிர்வாகிகள் பிரச்னையை தெளிவுபடுத்த தீர்மானித்து ஒரு அறிக்கை வெளியிட்டார்கள்.

அதில்’ வாவர் மசூதியில் பல ஆண்டுகளாக பின்பற்ற பட்டு வரும் ஆச்சாரங்களில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. வாவர் மசூதிக்கு வயது வித்தியாசம் இன்றி ஆண்களும் பெண்களும் வருகிறார்கள். இங்கு வரும் பெண்கள் உட்பட பக்தர்கள் பிரார்த்தனை செய்து காணிக்கை செலுத்தி விட்டு  சபரிமலைக்கு  செல்கிறார்கள். பள்ளி வாசலுக்குள் தொழுகை நடத்தும் இடத்திற்கு பெண்கள் செல்வது கிடையாது. நல்ல எண்ணத்துடன் இங்கு வர யாருக்கும் தடையில்லை. ‘ என்று தெளிவு படுத்தியிருந்தார்கள் .

அதனால் இந்து முஸ்லிம் பிரச்னை ஏற்படுத்த முயன்ற இந்து அமைப்பினர் ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இடையில் காவல்துறையின் பாதுகாப்போடு தரிசனம் செய்த பிந்து, கனகதுர்கா மற்றும் இலங்கை சசிகலா தவிர தற்போது மஞ்சு என்ற பெண் தான் காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் பக்தர்களோடு பக்தராக கலந்து பதினெட்டாம் படி ஏறி இருமுடி கட்டி நெய்யபிஷேகம் உட்பட சடங்குகளை செய்து சுவாமி  தரிசனம் செய்திருக்கிறார்.

இதற்கும் பரிகாரம் செய்வார்களோ? நடையை சாத்திய தந்திரிகள் மீதான விசாரணை முடிந்து அவர்களுக்கு எச்சரிக்கையோ தண்டனையோ அளித்தால் பின்பு எந்த தடையும் இருக்காது.

பாஜக ஆட்சி இருப்பதால் தீர்ப்பை செல்லாதது ஆக்கி விட முடியும் என்று நம்புகிறார்கள்.

கம்யுனிஸ்டு ஆட்சியை அகற்றும் அளவுக்கு  கூட போக பாஜக தயாராக இருக்கிறது.   அதற்கு நீதிமன்றம் அனுமதிக்காது என்பது வேறு.

மதவாதம் தோற்பது உறுதி.!

பாதி கிணறு தாண்டிய முதல்வரின் ஆயிரம் ரூபாய் பொங்கல் அன்பளிப்பு திட்டம் ?!

பொங்கலுக்கு அரிசி சர்க்கரை கரும்பு முந்திரி திராட்சை ஏலக்காய் மட்டும் கொடுத்திருந்தால் அரசுக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும்.

எல்லா குடும்ப அட்டைகளுக்கும் ஆயிரம் ரூபாய் அன்பளிப்பு என்ற திட்டம் தொடங்கி பாதி கொடுத்திருந்த நிலையில் உயர்நீதி மன்றம் தலையிட்டு வறுமை கோட்டுக்கு மேலே இருப்பவர்களுக்கு கொடுக்கக் கூடாது என்று தடை விதிக்க அரசின் திட்டம் பாதி கிணறு தாண்டிய நிலையில் இருக்கிறது.

அதுவும் நீதிமன்றம் தமிழக அரசின் நிதி நிலையை சுட்டிக் காட்டி அரசின் பணம் எந்த அளவுகோலும் இல்லாமல் இப்படி விரயம் செய்யலாமா என்று கேட்டது அரசுக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கி விட்டது.

நியாயப்படுத்த முடியாத அரசு நீதிமன்றத்தில் தடுமாறியது. பாராளுமன்ற தேர்தலையும் வர இருக்கும் இடைத்தேர்தல்களையும் அரசு மனதில் கொண்டு இந்த அன்பளிப்பு திட்டத்தை உருவாக்கி இருக்கலாம். மக்களுக்கு உண்மை தெரியாதா என்ன?

இன்று நீதிமன்றம் தடை கொடுத்த பின்பும் எங்களுக்கு உத்தரவு நகல் வரவில்லை என்று சொல்லிக்கொண்டு பொங்கல் பரிசுப் பொருட்களோடு ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள் கடை அலுவலர்கள். நாளை என்ன செய்வார்களோ?

தடை கொடுத்த நீதிமன்றம் இனி என்ன செய்யும்?

பாதி கொடுத்திருந்த நிலையில் தகுதி இல்லாதவர்கள் பெற்றிருந்தால் எப்படி திரும்ப பெறுவது? தகுதி இல்லாதவர்களில் எப்படி பாகுபாடு பார்த்து தவிர்ப்பது என்று ஊழியர்கள் திண்டாடி போனார்கள்.

அதிலும் பல கடைகளின் ஆறு பொருட்களுக்கு பதில் ஐந்து பொருட்களே கொடுத்தார்கள். கரும்பு வெட்டிதர ஆள் இல்லையாம். வந்தது வரை லாபம் என்று யாரும் புகார் கொடுக்க தயராக இல்லை.

ஏற்கெனெவே நடப்பு நிதி ஆண்டில் 25,000 கோடி பற்றாக்குறையில் திண்டாடும் அரசு இந்த இரண்டாயிரம் கோடி செலவில் பாதியை மிச்சப் படுத்தி இருக்கலாம்.

நல்ல பெயர் வாங்கி கொடுத்திருக்க வேண்டிய அன்பளிப்பு திட்டம் எடப்பாடிக்கு மேலும் கெட்ட பெயரையே வாரித் தந்திருக்கிறது.

சிபிஐ இயக்குனர் கட்டாய விடுப்பை ரத்து செய்து மோடி அரசின் முகத்திரை கிழித்த உச்சநீதிமன்றம் !!!

மோடி அரசின் முகத்திரை கிழித்த உச்சநீதிமன்றம்

நியாயமான விசாரணை வேண்டுமா கூப்பிடுங்கள் சிபிஐ என்று ஒரு காலத்தில் நம்பிக்கை இருந்தது.

அத்தனையும் மோடி காலத்தில் காலாவதியாகி விட்டது.

இப்போது மோடி எதை செய்தாலும் அது அவருக்கு கரும்புள்ளியாகவே அமைகிறது.

அவர் காலத்தில்தான் இரண்டு மூத்த சிபிஐ அதிகாரிகள் பரஸ்பரம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டு இவர்களை நம்பியா நாடு இருக்கிறது என்ற இழிநிலையை உருவாக்கினார்கள்.

இப்போதும் கூட உச்சநீதிமன்றம் அலோக் வர்மாவின் கட்டாய விடுப்பை ரத்து செய்திருக்கும் நிலையில் அவரது பதவிக்காலம் இந்த மாதம் 31 ம தேதி முடிவுக்கு வந்தபின் அடுத்து என்னவாகும் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

பிரதமரும் எதிர்கட்சிதலைவரும்தலைமை நீதிபதியும் இணைந்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பார்கள் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு நடைமுறைக்கு வரும் என்று தோன்றவில்லை.

அதுவும் இடைக்கால ஏற்பாடாக மோடி நியமித்த இயக்குனர் உபி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மீது புதிய குற்றச்சாட்டுகளை கூறி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பது அரசியல் நோக்கம் கொண்டது என்பது எல்லாருக்கும் தெரிந்து விட்டது. ஆக தனது அரசியல் எதிரிகளை பலவேனப்படுத்த மோடி என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பது சிபிஐ கையாளப்பட்ட விதமே சான்று கூறுகிறது.

மோடிதான் யோக்கியர் என்ற பிம்பம் உடைபட்டு விட்டது.

நீதிபதிகளே விசாரணை கூண்டில் நின்றால் குற்றவாளிகளுக்கு கொண்டாட்டம்தான்.   அது தான் சிபிஐ விடயத்தில் நடந்திருகிறது.

பங்கப் பட்டிருப்பது சிபிஐ மட்டுமல்ல, மோடியின் மதிப்பும்தான்.

தேர்தல் ஆணையத்தின் இடைத்தேர்தல் நாடகம் முடிவுக்கு வந்தது??!!

திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28 ம் தேதி இடைதேர்தல் என்ற தனது அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று ரத்து செய்தது.

இதன் மூலம் இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்க இருந்த அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப் படும் என்று தெரிகிறது.

டிசம்பர் மாதம் 3 ம் தேதியே இப்போது இடைதேர்தல் நடத்தும் சூழல் இல்லை என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் ஏன் அவசர அவசரமாக தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்தது என்பதற்கு எந்த விளக்கத்தையும் தரவில்லை.

தேர்தல் ஆணையம் மத்திய பாஜக அரசின் அரசியல் விளையாட்டுகளுக்கு உடன் பட்டுசெயல்  படுகிறது என்ற குற்றச்சாட்டு இதன் மூலம் மேலும் வலுப்பெறுகிறது.

அதிமுக-வும் பாஜக வும் தனது வேட்பாளர்களை அறிவிக்காத போதே இந்த சந்தேகம் பலருக்கு இருந்தது.

ஏன் இந்த வீண் விளையாட்டு? கஜா புயல் நிவாரண பணிகள் நிறைவடையாத நிலையில் அதனால் அதிகம் பாதிக்கப்பட்ட திருவாரூர் தொகுதியில் தேர்தல் அறிவித்து எந்த அரசியல் கட்சி யாருடன் சேருகிறது என்றெல்லாம் ஆழம் பார்க்க தமிழக மக்கள் தானா கிடைத்தார்கள்?

இன்றைய நிலையில் ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடத்தியாக வேண்டிய சூழலில் தேர்தல் ஆணையம் இருக்கிறது. இடையில் பிப்ருவரி மாதம் நடத்துவேன் என்று மீண்டும் விளையாட்டு காட்டாமல் பாராளுமன்ற தேர்தலோடு காலியாக இருக்கும் இருபது தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தலை நடத்துவதே ஒரே தீர்வாக இருக்கும். இதைத்தான் எல்லாரும் எதிர்பார்த்தார்கள்.

இடையில் இடைத்தேர்தல் நாடகம் ஆடியதன் மூலம் தனது மதிப்பையும் நம்பிக்கைத் தன்மையையும் இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம் என்பதே பொதுமக்கள் கருத்து.

அதுவும் நன்மைக்கே. பாஜக வின் உண்மை சொரூபம் மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டிருப்பது நல்லதுதானே.

தெருக்களை ஆக்கிரமித்து இருக்கும் வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்படுமா?

தெருக்களை ஆக்கிரமித்து இருக்கும் வழிபாட்டுத்தலங்கள்

பொது இடங்களை ஆக்கிரமித்து எத்தனை வழிபாட்டு தலங்கள் உள்ளன என்று அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு இட்டு இருக்கிறது.

அரசு அலுவலக வளாகங்களில் வழி பாட்டு தலங்கள் இருக்கக்கூடாது என்ற 1968-ம் ஆண்டின் தமிழக பொதுத்துறை ( சட்டம் மற்றும் ஒழுங்கு ) அரசாணை மற்றும் அதை வலியுறுத்தி 1994-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ஆகியவைகளை அமுல்படுத்த தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சென்னை உயர் நீதிமன்றம் மேற்கண்ட அறிக்கை கேட்டு உத்தரவிட்டிருக்கிறது.

இப்போது, நீதிமன்றம், மருத்துவமனை,  காவல் நிலையங்கள் அரசு அலுவலகங்கள் என்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் தெய்வங்களும் சிலுவைகளும், பிறைகளும் அகற்றப் பட்டால்தான் இந்த நாடு மதம் சார்ந்தது அல்ல என்ற உணர்வு  தழைக்கும். மத போட்டி மறையும்.

தெரு ஆக்கிரமிப்பு கோவில்கள் லட்சக் கணக்கில் இருக்கும். கிறிஸ்தவர்கள் தெரு முனைகளில் ஆக்கிரமித்து மேரிமாதா, சிலுவை போன்றவற்றை வைத்து இருப்பார்கள். முஸ்லிம்கள் சில இடங்களில் நட்ட நடுத்தெருவில் தர்காக்களை வைத்திருக்கிறார்கள். நீதிமன்ற கருத்துப்படி எல்லா ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட வேண்டும்.

இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற பாகுபாடு கூடவே கூடாது. அவர்கள் அனைவரும் ஆக்கிரமிப்பாளர்கள் என்ற முறையிலேயே அணுகப்பட வேண்டும்.

அநேகமாக எல்லா ஆக்கிரமிப்புக் கோவில்களும் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டவையே. மத உணர்வுள்ளவர்களின் ஆதரவைப் பெற்று பின்னர் விரிவு படுத்திவிடுகிறார்கள்.

அதுவும் சென்னை போன்ற நகரங்களில் தான் தெரு ஆக்கிரமிப்பு கோவில்கள் அதிகம்.

மிகவும் சிறிதாக ஒரு சிலையை வைப்பார்கள். பின்னர் சில மாதங்களில் அது சிறிதாக விரிவு படுத்தப்படும். கோவில் கட்டுவதை ஒரு தொண்டாக இல்லாமல் ஒரு வணிகமாக பார்த்துத் தான் இவை தோன்றுகின்றன.

அதிலும் சில காலமாக சீரடி சாய்பாபா கோவில்கள் நடமாடும் வண்டிகளில் ஆரம்பித்து தெரு முனை கோவில் என்று பல ரூபங்களில் கிளை பரப்பிக்கொண்டிருக்கிறது. அதற்கு என்று முதலீடு போடுவதற்கு என்று சிலர் இருக்கிறார்கள்.

பக்தி வணிகம் பல ரூபங்களில் கிளை பரப்பிக் கொண்டிருக்கிறது.

இதிலே பலி ஆவது உண்மை பக்திதான்.

அதிலும் திடீர் திடீர் என்று கிராமப் புறத்து அய்யனார் கோவில்களுக்கு பக்கத்தில் ஆஞ்சநேயர் கோவில்கள் முளைக்கின்றன. இதெல்லாம் யார் வேலை என்றால் தமிழர் தெய்வங்களுக்கு பதில் சனாதன தெய்வங்களை பிரபலபடுத்தும் வேலையில் யாருக்கு அக்கறை இருக்கிறதோ அவர்களால் முடுக்கி விடப்படுகிறது.

பாமர இந்துக்களுக்கு தெருக்கொவில்கள் பெரிதும் ஆறுதல் என்பதும் உண்மைதான்.    அவர்களுக்கு பக்தியை வீட்டிலேயே கடைப்பிடிக்க கற்றுக்  கொடுக்க வேண்டும்.

உண்மையான் பக்தி மார்க்கம் பரவ தெருக்கோவில்கள், சிலுவைகள், பிறைகள் இடம் கொடுத்து ஒதுங்க வேண்டும் அல்லது அரசு ஒதுக்க வேண்டும்.

அதற்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

கலைஞர் பற்றிய தீர்மானத்தில் அதிமுக தலைவர்கள் காட்டிய திராவிட இயக்க சகோதர பாசம்!!!

கட்சி வேறுபாடு இன்றி அனைத்து தலைவர்களும் புகழாரம் சூட்டி சட்டமன்றத்தில் கலைஞருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிலும் ஏதோ சம்பிரதாயத்துக்காக என்று இல்லாமல் உளபூர்வமாகவே முதல்வர் எடப்பாடி பழநிசாமியும் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வமும் போட்டி போட்டுக்கொண்டு கலைஞரின் சிறப்பு இயல்புகளை பட்டியல்  இட்டதை பார்த்தவர்கள் என்ன இருந்தாலும் இருவரும் திராவிட இயக்கத்துக்குச் சொந்தக்காரர்கள் என்பதை நிருபித்து விட்டார்களே என்ற உணர்வுதான் மிஞ்சியது.

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கலைஞரின் சாதனைகளை முதலில் ஒ பி எஸ் அவை முன்னவர் என்ற முறையில் எடுத்து உரைத்தார்.

1957 முதல் தொடர்ந்து 13 முறை தோல்வியே காணாமல் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தது- ஒரு முறை சட்ட மன்ற மேலவை  உறுப்பினர்-   ஐந்து முறை தமிழக முதல் அமைச்சர் –  50 ஆண்டுகளாக திமுக தலைவர் – என்று கலைஞர் சாதனைகளை தொகுத்தார்.

அடுத்து முதல்வர் உரையில், கலைஞர் 14  வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதில் இருந்து 17  வயதில் தமிழ்நாடு மாணவர் மன்றத்தின் தலைவர்  அண்ணாவின் திராவிட நாடு பத்திரிகையில் படைப்பாளியாக இளமைப்பலி எழுதி அவரை கவர்ந்தது- நாடக ஆசிரியர் ஆகவும் நாவல் ஆசிரியர் ஆகவும் அவர் எழதிய படைப்புகள் –  75 திரைப்படங்களுக்கு கதைவசனம் எழுதிய பேராற்றல் என அனைத்தையும் நினைவு கூர்ந்து குறிப்பிட்டது உணர்வு பூர்வமாகவே இருந்தது.

அரசியல் செய்வோம். ஆனால் குடும்பத்தை மறக்க மாட்டோம் என்ற இந்த உரை எதிரிகளுக்கு ஒரு உண்மையை உணர்த்தி  இருக்கும்.

இந்த மண் வள்ளலாராலும், வள்ளுவராலும், திருமூலராலும், பெரியாராலும் அண்ணாவாலும் பண் படுத்தப்பட்ட மண்.

இங்கே அன்னியர் வந்து புகல் என்பது நடவாது.