Home Blog Page 52

ஒரே ஒரு மாணவியுடன் பள்ளி இயங்க யார் காரணம்? 3000 பள்ளிகளை அரசு மூடுமா?

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஓர் பள்ளியில் ஒரே ஒரு மாணவியுடன் ஒரு தொடக்கப் பள்ளி  இயங்கி வருகிறது .

அதற்கு ஒரு தலைமை ஆசிரியர். ஒரு ஆசிரியர். ஒரு சத்துணவு அமைப்பாளர்.

அந்த பள்ளி நீடிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறதா இல்லையா?

அந்த ஊரில் சுமார் ஐம்பது குழந்தைகள் பக்கத்து ஊரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்களாம்.

இதே பள்ளியில் படித்து பலர் அரசு பணிகளிலும் வேறு பல தனியார் பணிகளிலும் பணி புரிந்து வருகிறார்கள்.

பிறகு ஏன் அரசு பள்ளிக்கு மவுசு குறைந்து தனியார் பள்ளிகளை தேடி ஓட வேண்டும்?

சுமார் 3000 அரசு பள்ளிகளை மூட அரசு உத்தேசித்திருகிறது என்ற செய்திகளை அரசு மறுத்தாலும் 25 குழந்தைகளுக்கு கீழே இருக்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பக்கத்து பள்ளிகளில் இருந்து மதிய உணவை கொண்டுவரும்  திட்டத்தை மறுக்க வில்லை.

குழந்தைகள் எண்ணிக்கை குறைந்தால் இதெல்லாம் நடக்கும் வாய்ப்புகளை மறுப்பதற்கு இல்லை.

இதெல்லாம் தடுக்கப்பட வேண்டும் என்றால் பொதுமக்களின் பார்வை மாற வேண்டும். அரசுப் பள்ளிகள் தரம் குறைந்தவை தனியார் பள்ளிகள் தான் தரமுள்ளவை என்ற கருத்து நிலை  பெற்றுள்ளது. அதை மாற்ற வேண்டும்.

குறிப்பாக வசதி படைத்தவர்கள் அரசியல்வாதிகள் அரசு ஊழியர்கள் தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பதை கவுரமாக கருதுகிறார்கள். முடியாதவர்கள் கூட பிள்ளைகளின் எதிர்காலம் கருதி தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை கடமையாக கருதுகிறார்கள்.

கல்வித்தரம் அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் ஒன்றாக இருந்தாலும் கூட கவுரவம் பார்த்து தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.

                அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும். பாடத்திட்டம் அரசு தனியார் பள்ளிகளில் ஒன்றாக இருக்க வேண்டும். வேறு பாடத் திட்டம் என்று தவறாக கருத இடம் கொடுக்கும் வகையில் ‘மெட்ரிக்’ என்ற பெயர் சூட்டும் முறை தடுக்கப் பட வேண்டும். 

இந்த தனியார் பள்ளி மோகம் முற்றாக களையப்பட வேண்டும். அதுவும் அரசுப்பள்ளிகள் பாதிக்கப் படா வண்ணம் பாதுகாக்கும் கடமை பொது மக்களுக்கு  இருக்கிறது.

அதை விட்டுவிட்டு நாங்கள் எங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்போம் ஆனால்  அரசு பள்ளிகளை மூடினால் போராடுவோம் என்று குரல் கொடுப்பது கண்டனத்துக்கு உரியது.

அரசுப் பள்ளிகளை வலுப்படுத்துவோம் என்ற உணர்வு பரவி அதற்கு செயல் வடிவம் கொடுத்தால் மட்டுமே தமிழ் வளரும் தமிழர் வாழ்வு வளம்பெறும்.

ஜல்லிக்கட்டை தடை செய்ய சாதிப் பிரச்னையை கிளப்பும் சதிகாரர்களின் பின்னணியில் ‘பீட்டா” ??!!

தமிழனின் அடையாளங்களை அழிக்கும் திட்டத்தோடு செயல்படும் கூட்டம்  நீண்ட காலமாக திட்டமிட்டு ஜல்லிக்கட்டை சட்ட பூர்வமாகவே தடை செய்ய  வைத்தார்கள். ஜல்லிக்கட்டு பழைய கதை என்று வரலாற்றில் எழுதி வைத்துவிட்டு மறந்து விடவேண்டியதுதான் என்று இந்து பத்திரிகை தலையங்கம் எழுதியது.

அந்த சதியை ‘ மெரீனா புரட்சி’ மூலம் முறியடித்து மத்திய மாநில அரசுகளை பணிய வைத்து இன்று சட்ட பூர்வமாகவே நடந்து வருகிறது ஜல்லிக்கட்டு.

எதிரிகள் விடுவார்களா? இன்னும் ஜல்லிக்கட்டில் வன்முறை நிகழ்வதாகவும் அதில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகமாவதால் ஜல்லிக்கட்டை மீண்டும் தடை செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் கதவுகளை தட்டிக் கொண்டே இருக்கிறார்கள் பீட்டா அமைப்பின் கூலிகள்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அமைப்பாளர்கள் இன்னும் கவனக் குறைவாகவே இருக்கிறார்கள். அதனால் ஜல்லிக்கட்டுக்கு வந்த ஆபத்து முற்றிலும் நீங்கி விட்டதாக கருத முடியாத நிலையே இருக்கிறது.

இன்னிலையில் ஜல்லிக்கட்டு நடத்தும் குழுவில் எங்களுக்கும் இடம் வேண்டும் என்று சில சாதி அமைப்பை சேர்ந்தவர்கள் நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள் .

எல்லாரையும் அரவணைத்து செல்ல வேண்டிய விளையாட்டில் சாதி வன்மம் புகுவது நல்லதல்ல. கருத்து வேறுபாடுகள் வரலாம். அதை களைய வேண்டிய முறை வழக்கா?

போராடிய பொது சாதி பார்த்தா போராடினார்கள்.? எல்லா சாதிகளும் சேர்ந்துதானே போராடினோம். பெற்ற வெற்றி எல்லாருக்கும் தானே சொந்தம். வெற்றியை இழக்க சாதியை பயன்படுத்தலாமா?     

தமிழர் ஒற்றுமை சாதியால் பாதிக்கப்படுகிறது என்பது உண்மைதான். எனவே சாதி ஒழிப்பை இலக்காகக் கொள்வோம். இலக்கை அடையும் வரை ஒற்றுமையை குலைக்க சாதியை பயன் படுத்த வேண்டாம்.

தொடர்புடைய சமுதாயங்களை சேர்ந்த தலைவர்கள் அமர்ந்து பேசி தீர்வு காண முயல்வதே நல்லது.

உரிமை கோருவது தவறல்ல. ஆனால் அதன் பின்னால் வேறு யாரும் இருக்கக்கூடாது.

சட்டப் போராட்டத்தில் தோற்ற ” பீட்டா ” இப்போது சாதியை தூண்டி வெற்றி பெற திட்டமிடுகிறது.

தமிழர் வாழ்வில் சாதி புகுந்ததே சதியால் தான். அந்த சதி இப்போது ஜல்லிக்கட்டிலும் சாதி வடிவில் புகுந்து பெற்ற வெற்றியை இழக்க அனுமதிக்க கூடாது.

குழந்தைகளின் மீது ‘ஜெய் ஹிந்தை’ திணிக்கும் குஜராத் அரசு?!

‘ஜெய் ஹிந்தை’ திணிக்கும் குஜராத் அரசு

பள்ளிப் பிள்ளைகள் வருகைப்பதிவின் போது ‘ ஜெய் ஹிந்த் ‘அல்லது ‘ஜெய் பாரத்’ என்று சொல்ல வேண்டும் என்று குஜராத் அரசு சுற்றறிக்கை அனுப்பி இருப்பது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

மாணவர்களுக்கு நாட்டுப்பற்றை வளர்க்க எத்தனையோ வழிகள் உள்ளன. அவர்கள் வளர்ந்து உணர்ந்து வாழ வேண்டிய உணர்வு  நாட்டுப்பற்று. அதை இப்படி திணிப்பது எப்படி சரியாகும்.?     அதற்கு ஒரு வயது வேண்டாமா? புரிந்து கொள்ள வேண்டாமா?

கல்வியின் தரம் மட்டுமே அடிப்படைக் கல்வியின் தேவை. அதில் செலுத்த வேண்டிய கவனத்தை கட்டாயப் படுத்தி ஒரு முழக்கத்தை எழுப்பச் செய்வதன் மூலம் அரசு வேறு ஏதோ இலக்கை வைக்கிறது.

ஒருவகையில் பள்ளிக் குழந்தைகளின் சிறுவயதிலேயே தங்கள் அரசியல் சித்தாந்தத்திற்கு வலு சேர்க்கும் முயற்சி என்று கூட சொல்லலாம்.

ஏன் பிள்ளைகளுக்கு நாட்டுப்பற்றை சொல்லிக் கொடுப்பது தவறா என்ற கேள்விக்கு இங்கு இடமில்லை.  ஏனென்றால் ஜெய் ஹிந்த் முழக்கம் வேண்டாம் என்று யாருமே சொல்லவில்லை.   அதிக பட்சம் அவரவர் தம்தம் தாய் மொழியில் நாட்டை வாழ்த்தி முழக்கம் இடுவார்கள்.

  நான் இந்தியா வெல்க என்று முழக்கம் இடுவேன். அது தவறாகுமா? அல்லது அன்னை பாரதம் வாழ்க என்றோ அன்னை பாரதம் வெல்க என்றோ முழக்கம் இட்டால் அது தவறா? 

தேசிய கீதம் பாடுவது நடைமுறையில் இருக்கும் போது வேறு வகையிலும் பாஜக அரசு தனது நோக்கங்களுக்கு பள்ளிப்பிள்ளைகளை பயன்படுத்துவது தவறான விளைவுகளைத் தான் உருவாக்கும்.

தானாக சொல்ல வேண்டிய முழக்கத்தை கட்டாயப் படுத்தி வீணாக்கி விடாதீர்கள்.

நடையை அடைத்து நீதிமன்றத்தை அவமதித்த கோவில் தந்திரிகள்??!!

பிந்து , கனகதுர்கா இருவரும் சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்து வந்ததும் அதை அறிந்து இரண்டு மணிநேரம் கோவில் நடையை அடைத்து பரிகார பூஜை செய்து பின்னர் திறந்திருக்கிறார்கள் கோவில் தந்திரிகள்.

இது நீதி மன்ற அவமதிப்பு அல்லவா?

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.

சங்க பரிவாரங்கள் பெண்கள் தரிசனத்தை எதிர்த்து அரசியல் செய்து வருகிறார்கள்.

அந்த இருவரும் தரிசனம் செய்தபோது அதைப்பார்த்த பக்தர்கள் யாரும் ஆட்சேபிக்க வில்லை என்பதும் அப்போது எந்த பிரச்னையும் எழவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. அதாவது ஆட்சேபணை பக்தர்களுக்கு  இல்லை.  அதை வைத்து அரசியல் செய்யும் சங்க ஆதரவாளர்கள் தான் பிரச்னையாக்கி வருகிறார்கள்.

ஒரு அய்யப்ப பக்தர் கல் வீச்சில் பலியான சோக சம்பவமும் நடந்துள்ளது.

இதுவரை எந்த சீர்திருத்தமும் போராடாமல் வந்ததில்லை. எதையும் பக்தர்கள் எனப்படுவோர் தாங்களாகவே ஏற்றுக் கொண்டதும் இல்லை.

சட்டத்தின் மூலமாகவே அத்தனை சீர்திருத்தங்களும் அமுலுக்கு வந்திருக்கின்றன.

அதே வழியில் ஐயப்பன் சன்னதியில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யும்  உரிமையும் அமுலுக்கு வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .

ஆனால் அதற்கு தூண்டி விடப்படும் போராட்டங்களால் என்னென்ன விலை கொடுக்கப்  படும் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.

மத்திய அரசு தலையிட்டு மேலும் பிரச்னையை பெரிதாக்கும் என்பதால் மாநில அரசு நிதானமாக செயல்படுகிறது. மாநில காங்கிரசும் இந்த பிரச்னையில் பாஜக வோடு சேர்ந்து கொண்டு அரசை விமர்சிப்பது அதன் இரட்டை வேடத்தை காட்டுகிறது. அகில இந்திய தலைமை மௌனம் காப்பதும் சரியல்ல.

கன்னியாகுமரியில் மட்டும் பாஜக போராட்டத்தை தூண்டி விட்டிருக்கிறது.  இவர்கள் வலுப்பெற்றால் மத நல்லிணக்கம் காணாமலே போய்விடும்.

உச்சநீதிமன்றம் தலையிட்டு இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்க வில்லையென்றால் கேரள இடது சாரி அரசை கலைக்கும் எல்லைக்கும் கூட மதவாத பாஜக அரசு துணியும். தடுப்பது வர இருக்கும் பாராளுமன்ற தேர்தல்தான்.

ஆட்சி செய்யப் போவது சட்டமா சட்டத்தை அமுல்  படுத்த மறுக்கும் மத வாதிகளா என்பதை உச்ச நீதிமன்றம் தான் தெளிவு படுத்த வேண்டும்.

மதத்தில் இருப்பவன் முட்டாள்! மதம் மாறுபவன் படு முட்டாள் !! மதமாற்றத்தை எதிர்ப்பவன் உலக மகா முட்டாள்!! பின் குறிப்பு; நான் மதமற்ற இறை நம்பிக்கையாளன்!!

மதத்தில் இருப்பவன் முட்டாள் ! மதம் மாறுபவன் படுமுட்டாள்

மதத்தின் பேரால் உலகில் நடைபெறும் சர்ச்சைகளும் சண்டைகளும் அமைதியின்மையும் மதங்களின் மீது ஒருவித வெறுப்பை மக்களிடம் தோற்றுவித்திருக்க வேண்டும்.

மாறாக மதப் பிரச்சாரம் வளர்ந்து கொண்டே போவதன் காரணம் மதங்கள் ஆதிக்க சக்திகளின் பிடியில் வலுவாக சிக்கியிருப்பதுதான். மற்ற மதங்களை மதிப்பதாக உதட்டளவில் சொல்லிக்கொண்டே தன் மதப் பிரசாரத்தை வலுவாக்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.
பிறக்கும் குழந்தைக்கு பெற்றோரின் மதத்தை திணிக்கும் செயலில் நியாயம் இருக்கிறதா?

இந்த நடைமுறையை மாற்ற சட்டம் கொண்டு வந்தால் என்ன? பதினெட்டு வயது வந்தபின்தான் ஒருவருக்கு தன் மதத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப் பட வேண்டும்.

கிறிஸ்துவும் முஹம்மது நபியும் பிறந்து பல நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் பைபிளும் திருக்குரானும் அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள் தந்த சாட்சியத்தை அடிப்படையாக வைத்து தொகுத்ததாகவும் அதிலும் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு சாட்சியம் இல்லாதவற்றை நீக்கிவிட்டு  திருத்தி இறுதி  வடிவம் கொடுத்ததாக வரலாறு கூறுகிறது.

எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டால் ஏதோ ஒன்றுதான் உண்மை என்றாகிவிடும். மற்றது பொய் . இந்த விவாதம் தேவைதானா?

எல்லாவற்றிலும் இருக்கிற நன்மைகளை மட்டும் ஏற்றுக்கொள்வோம் என்றால் அதற்கு ஒருவர் அந்த மத அடையாளத்தை சுமந்து திரிபவர் ஆக இருக்க வேண்டும். அறிவாயுதத்தை விட இன்று கொலை ஆயுதமே வெற்றி பெற நம்பப்படுகிறது.

இந்து என்பது ஒரு மதமே அல்ல , அது ஒரு வாழ்க்கை முறை என்று  உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்ன பிறகும் , அதன் தீர்ப்பு அனைவரையும் கட்டுப்படுத்தும் , என்று  அரசியல் சட்டம் சொல்லும் நிலையிலும் , அது ஒரு மதமாகவே மாநில மத்திய அரசுகளால் அங்கீகரிக்கப் படுவது எப்படி?

தமிழன் இறை நம்பிக்கை உள்ளவன். அவன் இறைவன் எந்த மதத்தையும் சார்ந்தவன் அல்ல. அவன் வணங்கும் கடவுளர் அவன் முன்னோர்களே!! எந்த உருவத்திலும் மதம் சாரா இறைவனை அவனால் உணர முடியும்.    திருக்குரானில்  1,25,000  தூதர்கள் மண்ணில் வந்திருக்கிறார்கள் என்றும் இன்று பல மதங்களால் அடையாளங்காட்டப்படும் அனைவருமே முந்தைய நபிமார்களின் எண்ணிக்கையில் அடங்குபவர்கள் என்றும் சொல்கிறார்கள்.

இன்று எத்தனை பேர் எல்லா மதங்களையும் ஆய்ந்து தெளிந்து மதத்தில் இருக்கிறார்கள்?   திணிக்கப் பட்ட மத அடையாளத்தைதானே சுமந்து திரிகிறார்கள்.
ஆன்மிக பாதை காட்டுகிறோம் என்று சொல்லி இருட்டில் வைத்துக்கொண்டு ஆதாயம் அடைய முயற்சிக்கிறார்கள்.

இப்படி ஆய்ந்து தெளிந்து மதத்தை தேர்ந்தெடுக்காதவர்களை முட்டாள் என்று சொல்வது எப்படி தவறாகும்?

இருக்கும் மதத்தின் உண்மைகளையே முற்று முழுதாக அறிந்து கொள்ளாமல் அல்லது ஆராயாமல் மற்றொரு மதத்தை தேர்ந்தெடுப்பவனை    படு முட்டாள் என்று கூறுவது எப்படி தவறாகும்?

சரியோ தவறோ, ஆராய்ந்தோ ஆராயாமலோ ஒருவன் தனக்கு அதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பதற்காக  அல்லது ஆதாயத்திற்காக,  தனக்கு இருக்கும் தனி மனித உரிமையை பயன் படுத்தி மதம் மாறுவது தவறு என்றோ குற்றம் என்றோ சொல்பவனை உலா மகா முட்டாள் என்று சொன்னால் அது எப்படி தவறாகும்???

எவர் மனதையும் புண் படுத்தும் நோக்கம் நமக்கில்லை. ஏதோ ஒரு மதத்திற்கு சாமரம் வீசினால் மட்டுமே உள் நோக்கம் கற்பிக்க முடியும். இது சிந்தனையை தூண்டும் நோக்கத்தை மட்டுமே கொண்டது என்பதால் சிந்திப்பீர் உலகத்தீரே!!!!

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

தரிசனம் செய்து வரலாறு படைத்த பிந்து, கனகதுர்கா; இப்ப என்ன செய்வீங்க??!!

தரிசனம் செய்து வரலாறு படைத்த பிந்து, கனகதுர்கா

ஐயப்பன் கோவிலில் பத்து முதல் ஐம்பது வரையிலான பெண்கள் தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் சங்கப் பரிவாரங்கள் செய்து வந்த அடாவடித்தனத்தினால் தரிசனம் செய்ய முடியாமல் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பெண்கள் தரிசனம் செய்ய சென்றும் செய்ய  முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டு வந்தனர்.

இன்னிலையில் நேற்று பிந்து, கனகதுர்கா என்ற இரண்டு பெண்கள் அய்யப்ப கோவிலில் இரவு நேரத்தில் பதினெட்டாம் படி ஏறுவதை தவிர்த்து வேறு வழியில் சென்று சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்து விட்டார்கள். அவர்கள் இருவரும் நாற்பது வயது உடையவர்கள். இனி சங்க பரிவாரங்கள் என்ன செய்வார்கள் ?

தீட்டுக் கழிப்பார்களா? இனி அடுத்தடுத்து பெண்கள் தரிசனம் செய்தால் எத்தனை முறை தீட்டுக் கழிப்பார்கள்? அது சாத்தியம் தானா?

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தாலும் ஏற்க மாட்டோம் என்பது நல்ல செய்தி அல்ல.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வுக்கு மனுவும் செய்து விட்டு தரிசனம் செய்ய விடவும் மாட்டோம் என்று போராட்டம் நடத்தும் சங்க பரிவாரங்கள் எப்படியாவது இதை அரசியல் ஆக்கி லாபம் அடைய திட்டம் போடுவது கேரளத்தில் எடுபடாது.

ஏனென்றால் பெண்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க 620 கி.மீ நீளத்துக்கு பெண்கள் கலந்து கொண்ட  35 லட்சம் பேரை கொண்ட மகளிர் சுவர் போராட்டம் கேரளாவில் பெரு வெற்றி பெற்றிருக்கிறது.

தரிசனம் செய்த பெண்களின் வீடுகளுக்கு காவல் துறை பாதுகாப்பு  போடப்பட்டிருக்கிறது. இது சங்க பரிவாரங்கள் அவர்களை மிரட்டவும் இனி வரும் எண்ணங்களோடு இருப்பவர்களை அச்சுறுத்தவும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற ஊகத்தின் அடிப்படையில் போடப்பட்டிருக்கிறது.

எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்து பிந்து, கனகதுர்கா இருவரும் வரலாறு படைத்திருக்கிறார்கள். பாராட்டுவோம்.

ரமலான் மாதத்தில் முஸ்லிம்களை கொல்பவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகளா ? மனித குலத்தின் எதிரிகளா?

தீவிரவாதிகளா? மனித குலத்தின் எதிரிகளா?

ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக் -சிரியா நாடுகளில் மட்டுமல்லாமல் ஏமன், துனிசியா போன்ற பல நாடுகளிலும் வசிக்கும் சியா பிரிவு முஸ்லிம்களை கொல்லுமாறு புனிதமான ரமலான் மாதத்தில் கட்டளை இட்டதன் விளைவாக எண்ணற்ற சியா பிரிவு முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டினர் பலரும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
பகலில் உணவு எடுத்துக் கொண்டதற்காக இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மனித நேயம் அற்றதா இஸ்லாம்? நம்பிக்கை அற்ற காபிர்களை எல்லாம் கொலை செய்வது என்றால் மனித குலத்தின் பெரும் பகுதியை கொல்ல வேண்டி வரும். முடியுமா என்பது வேறு? அதைதான் இஸ்லாம் போதிக்கிறதா? சியா பிரிவினருக்கும் சன்னி பிரிவிற்கும் பெருத்த வேறுபாடு இல்லை. இருவரும்  ஓரிறைக்கொள்கை உடையவர்கள்தான். முஸ்லிம்கள்தான்.
சியா பிரிவினர் இஸ்லாத்தை திரித்து கூறுகிறார்கள் என்று வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும் அதற்கு தீர்வு கொலையாக இருக்க முடியுமா? மாற்றுக் கொள்கை உடையவர்கள் வாழக் கூடாது என்பது ஐ.எஸ் பிரிவினரின் கொள்கை என்றால் அவர்கள் ஒருபோதும் வெற்றி அடைய முடியாது. இஸ்லாத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் ஐ.எஸ் தீவிரவாதிகள் அடக்கப்பட வேண்டியவர்களே! அடக்கும் பொறுப்பு மற்றவர்களை விட உண்மை முஸ்லிம்களுக்கே அதிகம் உள்ளது. என்ன செய்யப் போகிறார்கள் முஸ்லிம்கள்?

திருவாரூரில் மட்டும் இடைத்தேர்தல் ஏன்? பாஜக அரசின் பிடியில் இருக்கிறதா தேர்தல் கமிஷன்?

ஜனவரி மாதம் 28 ம் தேதி இடைதேர்தல் என இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கிறது.

அதிர்ச்சி அளிக்கும் இந்த அறிவிப்பில் மறைந்து கிடக்கும் அரசியல் இந்த தேர்தல் கமிஷன் சுயமாக செயல்  படுகிறதா என்ற ஐயத்தை  ஏற்படுத்தி  இருக்கிறது.

திருபரங்குன்றம் தொகுதிக்கு  வழக்கு நிலுவையில் இருக்கிறது  என்று காரணம் சொன்னாலும்  17 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவிக்காமல் இருக்க என்ன காரணம் சொல்லும் தேர்தல்  கமிஷன்.?  மேல்முறையீடு இல்லை என தினகரன் அறிவித்த பின் ஏன் இந்த பாரபட்ச முடிவு?

ஏன் திருவாரூருக்கு மட்டும் தேர்தலை அறிவிக்க வேண்டும்?

அங்கு திமுக-வை தோற்கடித்து கலைஞர் பெற்ற மகத்தான வெற்றியை தற்போதைய தலைவர் ஸ்டாலினால் பெற முடியவில்லை என்று கறை பூசி திமுக காங்கிரஸ் கூட்டணியை பலவீனப் படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறது பாஜக அரசு.

முடிந்தால் பலவீனப்படுத்துவது. முடியாவிட்டால் அது அவர்கள் வெற்றி பெற்ற தொகுதிதானே என்ற சமாதானம்.

திமுக வை தோற்கடிக்க முடியுமா முடியாதா என்பது வேறு. செல்வாக்கு உள்ள  கம்யுநிச்டுகளை எதிர்த்து நின்று கலைஞர் பெருத்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இப்போது கம்யுனிச்டுகளும் திமுக அணியில். வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதிமுக வெற்றி  கல்லில் எழுதப் பட்ட ஒன்று என்று பேட்டி கொடுக்கிறார்.

               திருவாரூருக்கு தேர்தலை அறிவித்தது முக்கியம் அல்ல.   மற்ற 17  தொகுதிகளுக்கும் அறிவிக்காததுதான் பிரச்னை. நடத்தினால் தினகரனின் பலமும் வெளிப்பட்டிருக்கும். அது அவர் அணியை இணைப்பதில் தடையை  ஏற்படுத்தும்.

செந்தில் பாலாஜி திமுகவுக்கு தாவியபின் தினகரன் அணியில் இருந்து மேலும் பலர் தாவுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் ஏன் தேர்தல் கமிஷன் தேர்தலை தவர்க்க வேண்டும்? அதுவும் தினகரன் தாங்கள் உச்சநீதி மன்றத்தில் மேன்முறையீடு செய்யப் போவதில்லை என்று அறிவித்து விட்ட பின் தேர்தல் கமிஷன் ஏன் தேர்தலை நடத்துவதை தள்ளிப் போட வேண்டும்?

எடப்பாடி அரசை காப்பாற்று வது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும்.      நடத்தினால் ஒன்று எடப்பாடி அரசு கவிழும் அல்லது திமுக அரசு உருவாகும்.

இரண்டையும் தவிர்க்க அதிகார வர்க்கம் எடுத்த முடிவுதான் திருவாரூருக்கு மட்டும்  இடைதேர்தல் .

தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் எத்தனை ஆட்டங்களை ஆட இருக்கிறதோ பாஜக அரசு?

இது ஒரு அரசியல் கள்ளாட்டம்?!

ஜெயலலிதா மரணத்தை அரசியலாக்கி ஆதாயம் அடைய துடிக்கும் அதிமுக ??!! துணை போகிறதா விசாரணை கமிஷன்??

ஜெயலலிதா மரணத்தை அரசியலாக்கி ஆதாயம் அடைய துடிக்கும் அதிமுக

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் திசை தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கிறது.

விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே அதிமுக அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கள் விசாரணை கமிஷன் முடிவு எப்படி எடுக்க வேண்டும் என கட்டளை இடுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சசிகலா குடும்பம் ரூபாய் ஒரு கோடிக்கு இட்லி தோசை சாப்பிட்டது என அமைச்சர் சண்முகம் குற்றம் சாட்டுகிறார். இவர்தான் முன்பு  சசிகலாவை அவர் எங்க சின்னம்மா இல்லை அம்மாதான் அம்மாதான் என்று தொலைக்காட்சி முன்பு கதறியவர்.

கமிஷன் முடிவு  எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.   அதன்படி இந்த அரசு நடக்க தயாராக இருக்கிறதா என்பதே தெரியவில்லை.  கமிஷன் முடிவு வந்தபின் அரசு என்ன முடிவு எடுக்கப்;  போகிறது என்பதும் தெரியவில்லை.

முடிவு  வரும் முன்பே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும் என்று  எதிர்பார்க்கிறார்களா?   அது சட்டப்படி சரியாக இருக்குமா?

அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சட்ட அமைச்சர் கூறுகிறார்.    விசாரணை கமிஷன் ஓராண்டு செயல்பட்டு சாட்சிகளை விசாரித்து வருகையில் மருத்துவ துறை செயலாளரை எதிர்பார்ட்டியாக சேர்க்க வேண்டும் என கமிஷனின் வழக்கறிஞர் மனு  போடுகிறார்.  ஏன் அவரை இன்னும் வைத்துக்  கொண்டிருக்கிறீர்கள். ?

எல்லாமே தவறாக போய்க்கொண்டிருக்கிறது. சட்டம் நாட்டில் ஆட்சி செய்கிறதா அல்லது சட்டத்தை வளைக்கிறவர்கள் ஆட்சி செய்கிறார்களா என்ற கவலையை நடக்கும் சம்பவங்கள் ஏற்படுத்து கின்றன.

எடப்பாடி சசிகலாவை நோக்கி குற்றம் சாட்ட மறுக்கிறார். தினகரனை மட்டுமே ஒதுக்கி  வைத்து மற்றவர்களை வளைக்க திட்டமிடுகிறார்.

கமிஷனும் தன் கடமையை  செய்வதில்  காட்டும் தாமதம் உண்மையை நோக்கித்தான் விசாரணை செல்கிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

ஏனென்றால் கமிஷன் ஒன்றும் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய முடியாது.  பரிந்துரை தான் செய்ய முடியும்.   சந்தேகம் இருந்தால் குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியும்.   அதையும் வேறொரு அமைப்புதான் மீண்டும் பரிசீலனை  செய்து குற்றப் பத்திரிகை  தாக்கல் செய்யமுடியும்.

நடக்கும் சம்பவங்கள் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்தும் சட்ட மன்ற இடைத்தேர்தல்களை எதிர்நோக்கியும் ஜெயலலிதா மரணத்தை அரசியலாக்கி ஆதாயம் அடையும் நோக்கில் கொண்டு செல்லபடுகின்றனவோ என்ற சந்தேகத்துக்கு இடமில்லாமல் செய்யவேண்டும் என்றால் அதை விசாரணை கமிஷன் தான் செய்ய வேண்டும்.

இத்தகைய விமர்சனங்களை கமிஷன் அனுமதிக்க கூடாது.  அமைதி காத்தால் தவறான ஊகங்களுக்கு இடம் கொடுத்தது போல் ஆகிவிடும்.   கமிஷனும் உடந்தையா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது ஆகி விடும்.

விமர்சனங்களை தவிர்க்க ஆணையிடுவதுடன் விசாரணையை துரிதப் படுத்தி விரைந்து தனது முடிவை வெளியிட வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு.

முத்தலாக் மசோதா தோற்கும் எனத் தெரிந்தும் பாஜக நிறைவேற்றத் துடிப்பது ஏன்?

முத்தலாக் மசோதா

முத்தலாக் எனப்படும் முஸ்லிம் விவாகரத்து முறையை செல்லாது என அறிவிக்கும் மசோதாவை மக்களவையில் நிறைவேற்றி விட்டு மேலவையில் நிறைவேற்றமுடியாமல் தவிக்கிறது மோடி அரசு. காரணம் பெரும்பான்மை இல்லை.

இருபது முஸ்லிம் நாடுகளில் தடை சட்டம் இருக்கிறது என்று காரணம் சொல்லும் பாஜக அங்கெல்லாம் அது மூன்றாண்டு தண்டனைக்கு உரிய  குற்றமாக இல்லை என்பதை  ஏற்க மறுக்கிறது.

ஒரு சிவில் சட்டத்தை கிரிமினல் சட்டமாக மாற்ற முயற்சிப்பது ஏன் என்ற கேள்விக்கு பாஜக விடம் பதில்  இல்லை.

முஸ்லிம் ஆண்களை மிரட்டுவது  மட்டும்தான் பாஜக வின் நோக்கமாக இருக்கிறது. முஸ்லிம் பெண்கள் திரண்டு வந்து ஆதரிப்பார்கள் என  எதிர்பார்த்தது நடக்க வில்லை.

அதில் உள்ள ஓட்டைகளை அடைத்து விட்டு நிறைவேற்றினால் எல்லா கட்சிகளின் ஆதரவும் கிடைக்கும். ஆனால் அதற்கு பாஜக தயாராக இல்லை.

அவசர சட்டம் கொண்டு வந்து எத்தனை நாட்களுக்கு உயிர் கொடுக்க முடியும்?

அஇஅதிமுக வின் அன்வர் ராஜா மிக கடமையாக எதிர்த்து பேசியிருக்கிறார். இது  முஸ்லிம்களுக்கு  எதிரான சட்டம் இல்லை. இறைவனுக்கு எதிரான சட்டம் என்று பேசியிருக்கிறார்.

எடப்பாடி என்னதான் முயன்றாலும் கட்சியை முழுவதும் பாஜக அடிமையாக மாற்ற முடியாது என்பதற்கு சான்றாக  தம்பிதுரை முதல் எல்லாரும் எதிர்த்து பேசியிருக்கிறார்கள் .

இந்த முயற்சி மூலம் மேலும் முஸ்லிம்களின் வெறுப்பை பாஜக சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.  அதனால் இந்துக்களின் ஆதரவை ஒன்று திரட்டி விடலாம் என்று பாஜக எதிர்பார்த்தால் அதுவும் நடவாது என்பதுதான் இன்றைய  நிலைமை.