Home Blog Page 54

டெல்லியைக் குலுக்கிய விவசாயிகள் பேரணியை கண்டுகொள்ளாத மோடி அரசு?!

207 விவசாய சங்கங்களை சேர்ந்த அகில இந்தியாவிலும் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்தினர்.

அகில இந்திய கிசான் சங்கர்ஷ் என்று ஒரு ஒருங்கிணைப்புக் குழு உருவாகப் பட்டுள்ளது.

பாஜக அரசு கண்டுகொள்ளவே இல்லை.

தென் இந்தியாவில் இருந்து அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மண்டை ஓடு மட்டும் எலும்புகளுடன் ஊர்வலம் சென்றனர். எப்போதும் வித்தியாசமாக போராட்டம் நடத்தும் அய்யாக்கண்ணு இப்போதும் அதேபோல் போராட்டம் நடத்தி இருக்கிறார்.

அதை நம்மூர் பொன். ராதாகிருஷ்ணன் தமிழர்களுக்கே அவமானம் என்று வர்ணித்திருப்பது அவருக்குத்தான் அவமானம். இப்படி விமர்சிப்பதை விட்டு மத்திய அமைச்சர்கள் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை சந்திக்க ஏற்பாடு செய்திருக்கலாம்.

அயோத்தி வேண்டாம் விவசாயி வேண்டும் என்றும் கடன் இல்லாத விவசாயி தற்கொலை இல்லாத இந்தியா என்றும் முழங்கி தாங்கள் மதத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று நிரூபித்திருக்கிரார்கள்.

” விவசாய விளைபொருளுக்கு கட்டுபடியாகக் கூடிய லாபகர விலை

அதுவரை கடன் நிவாரணம் ”

இந்த இரண்டு மட்டும் விவசாயிகள் கோரிக்கைகளின் அடித்தளம்.

இந்த இரண்டிற்குள் எல்லாம் அடங்கி விடும்.

நிதி ஆதாரம், விதை முதல் உரம் வரை தட்டுப்பாடில்லா விநியோகம், தடையில்லா மின்சாரம், தேவைக்கேற்ப தேவையான நீர் ஆதாரம் உறுதி படுத்தல், சந்தைப் படுத்தலில் சுலபமான வழிமுறைகள் இவையே அரசு தர வேண்டிய உதவிகள்.

ஆனால் விவசாயிகளை இரண்டாம் தர குடிமக்களாகவே எல்லா அரசுகளும் கருதி நடத்திவந்திருக்கின்றன .

தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடக அரசுகள் மூலதனத்தில் மானியம், மின்மய சந்தை, வணிகர் கூட்டணிகளை தகர்த்தல் போன்ற பிரச்னைகளில் பல விதமாக முயன்று வருகின்றன. ஆனால் தேசிய அளவில் ஒன்றிணைந்த முயற்சிகள் இல்லை.

பேரணியில் வந்தவர்களை எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்து பேச இருக்கிறார்கள்.   ஆளும் கட்சி பேசுமா?

அரசு அழைத்துப் பேசியிருக்கலாம். பிரதமர் மோடி குறைந்த பட்ச ஆதார விலை விவசாயிகளுக்கு கிடைக்கும் என மேடை தோறும் முழங்கி வருகிறார். ஆனால் நடைமுறை படுத்தல் என்று வரும்போது கண் துடைப்பாக சிறிதளவு விலையை  உயர்த்தி கொடுத்துவிட்டோம் என்று தம்பட்டம் அடிப்பதுதான் வாடிக்கையாக இருக்கிறது.

மோடியின் பேச்சுக்கள் மட்டுமே வாக்குகளை பெற உதவாது.

கொஞ்சமாவது விவசாயிகளின் பிரச்னைகளையும் தீர்த்தால் தான்

மக்கள் உங்களை நம்புவார்கள்.

காடுவெட்டி குரு குடும்பம் பிளவுபட பாமக காரணமா? மருத்துவர் ராமதாஸ் விளக்கம் தர வேண்டாமா?

மாவீரன் என காடுவெட்டி குருவை உச்சியில் தூக்கி வைத்து கொண்டாடினர் மருத்துவர் ராமதாஸ்.

வன்னியர் சங்க தலைவராக குரு பரிமளிக்க ராமதாஸ்தான் காரணம்.

ஜெயலலிதாவையே மோசமாக அர்ச்சித்த குரு அதன் காரணமாக சிறை வாசம் அனுபவித்தார். அவர் செய்த தியாகங்கள்தான் இன்று பாமக வை உயரத்தில் நிறுத்தி  இருக்கிறது.

அப்படி ஒரு சமுதாய சங்கத் தலைவராக இருந்தவரின் குடும்பம் ஒன்றாக இருப்பதையும் ஒற்றுமையாக இருப்பதையும் ராமதாஸ் உறுதி செய்ய வேண்டாமா?

குருவின் சகோதரி மகனை அவர் மகள் திருமணம் செய்து கொள்வதில் பாமக வுக்கு என்ன ஆட்சேபணை ?

குருவின் மனைவி சொர்ணலதா ஒரு பக்கமும் குருவின் மகன் கனல் அரசன் மகள் விருத்தாம்பிகை மாப்பிள்ள மனோஜ் கிரண் மறுபக்கமும் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தன் மாமா பெயரில் சுமார் ரூ300 கோடி வன்னியர் சங்க அறக்கட்டளை சொத்துக்கள் இருப்பதாகவும் அதை மாற்ற குடும்பத்தினர் ஒப்புதல் வேண்டும் என்பதால் தங்களுக்கு விருப்பமான ஒருவருக்கு விருத்தாம்பிகையை திருமணம் செய்து வைக்க பாமக-வினர் முயன்று கடத்தி செல்ல முயன்றதால் தாங்கள் அவசரமாக திருமணம் செய்து கொண்டதாகவும் மனோஜ்குமார் பேட்டி கொடுத்திருக்கிறார்.

ஊருக்குள் வரக்கூடாது என்று குரு குடும்பத்தை மிரட்டி வைத்திருக்கிறார்கள் என்பது பாமக-வுக்கு தொடர்பில்லாத ஒன்றா?

நடப்பது குரு குடும்ப பிரச்னை மட்டும் என்றால் மற்றவர்களுக்கு இதில் எந்த கருத்தும் சொல்ல முகாந்திரம் இல்லை.

மாறாக அரசியலில் தூய்மையை வலியுறுத்தும் அரசியல்வாதிகளில் மருத்துவர் ராமதாஸ் முதன்மையானவர்.

தமிழகம் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்னைகளிலும் மருத்துவர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் மற்றவர்கள் பின்பற்றுகிறார்கள் என்று அவரே பெருமைப்  பட்டுகொள்வார். அதில் உண்மையும் ஓரளவு இருக்கிறது.

இப்படி மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் மருத்துவர் ராமதாஸ் யாருக்கு சிலை எழுப்பி தன் மரியாதையை வெளிக்காட்டினாரோ அவரது குடும்பத்தில் நிலவும் குழப்பங்களை தீர்த்து வைக்கும் கடமையும் உண்டு என்பதை மற்றவர்கள் சொல்லியா அவருக்கு  தெரிய வேண்டும்?

மருத்துவர் ராமதாஸ் காடுவெட்டி குரு குடும்பத்தின் குழப்பங்களை தீர்ப்பாரா?

நடிகை ஸ்ரீ ரெட்டி கூறும் பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் கூட தண்டிக்கத் தக்க குற்றம் ஆகுமா?

நடிகை ஸ்ரீ ரெட்டி புதிதாக ஒரு நடிகர்  மீது  ஒரு புகார் கூறியிருக்கிறார்.

முன் அவர் ராகவா லாரன்ஸ்  ஸ்ரீ காந்த், சுந்தர் சி  என சிலர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார்.

மீ டூ இயக்கத்துக்கு அவர் வலிவு சேர்த்து வந்ததாக இருந்தது.

இப்போது அவர் கூறும் குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டால் கூட அது தண்டிக்கத் தக்க குற்றமாக ஆகுமா என்பது தெரியவில்லை.

தனது முகநூலில் அவர் கூறியதாக வந்த செய்தி இதுதான்;

‘ என்னை பொதுக் கழிப்பிடம் போல் பயன் படுத்தினார்.   அந்த வலியும் காயமும் இன்னமும் ஆறவில்லை.   மனரீதியாக  கடுமையான பாதிப்புக்கு ஆளானேன் .  எனக்குத் தெரியும். அது என்னுடைய சம்மதத்துடன் தான் நடந்தது என. ஆனால் பட வாய்ப்புக்காக நான் ஒரு பிணத்தைப் போலத்தான் நடந்து கொண்டேன்.   எதையும் நான் முழு மனதுடன் ஈடுபாட்டுடன் செய்ய வில்லை.  என்னை நம்புங்கள்.  அவை எல்லாமே என் வாழ்க்கையின் மிக பயங்கரமான தருணங்கள்.  வெளிப்படையாக பேசுவது என் வாழ்க்கையை கடுமையாக பாதித்தது/  இதில் இருந்து நான் எப்படி மீண்டு வருவேன்.  இப்போது ஒரு தமிழ் ஹீரோ  எனது திரை வாழ்க்கையை அழிக்கப் பார்க்கிறார். அவர்  தெலுங்கு திரை உலகத்தினருக்கு மிகுத நெருக்கமானவர்.   அவர் ஒரு மிகப் பெரிய பெண் பித்தர். இந்த பூமியில் வாழ நான் தகுதியற்றவளா என்ன? ‘

‘ அது ‘ தன் சம்மதத்துடன் நடந்தது என்று அவரே ஒப்புக் கொண்ட பின்னர் அது எப்படி தண்டிக்கத் தக்க குற்றம் ஆகும்?

பட வாய்ப்புக்காக சம்மதித்தேன் என்பதை  எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

ஒரு விதத்தில் அவர் மீது  அனுதாபம் தான் வருகிறது.

நல்ல மனநல மருத்துவரிடம் அவர் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

சினிமா மட்டுமே வாழ வாய்ப்பல்ல. அப்படி வேண்டும் என்றால் தன் ஒப்புதல் இல்லாத எதையும் செய்யக் கூடாது. அந்த மன உறுதியை தக்க வைத்துக் கொண்டால் தவறுக்கு  எது இடம்?

குஷ்பு சொன்னதுபோல் யாரும் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்ட வில்லையே?

மீ டூ இயக்கத்திற்கு புது அர்த்தம் கொடுத்திருக்கிறார் ஸ்ரீ ரெட்டி.

இயக்குனர் முருகதாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்! முன் ஜாமீன் எதற்கு?

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது அரசை விமர்சித்த தாக வழக்கு பதிவுசெய்ததை அடுத்து அவர் முன் ஜாமீன் கேட்டு மனு போட்டு விசாரணை  நடந்து வருகிறது.

அதுவும் அரசுக்கு எதிராக சதி செய்வது கடுமையாக விமர்சிப்பது என்றெல்லாம் குற்றசாட்டுகள்.   இவைகள் எல்லாம் எப்படி குற்றங்கள் ஆகும்?

திரை உலகம் உள்ளிட்ட பலரும் தமிழக அரசின் இந்த பாசிச போக்கை கண்டித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் முன்ஜாமீன் கேட்ட மனுவில் அவர் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் எதிர்காலத்தில் அரசை விமர்சிக்க மாட்டேன் என்றும் உத்தரவாதம் தர வேண்டும் என்றும்  அரசு கேட்க அவர் மறுத்து விட்டார். விமர்சிப்பது என்பது அரசியல் சட்டம் தந்திருக்கும் அடிப்படை உரிமை.  அதை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஜாமீன் தருவதற்கும் அரசை விமர்சிக்க மாட்டேன் என்று உத்தரவாதம் தருவதற்கும்  என்ன தொடர்பு?

முருகதாஸ் சர்கார் படத்துக்கு தணிக்கை  சான்றிதழ் பெற்றிருக்கிறார்.    அரசை  விமர்சித்தது குற்றம் என்றால் படத்தை வெளியிட  அனுமதித்தது யார் குற்றம்?    குற்றம் அல்ல என்பதால்தானே அனுமதி அளித்திருக்கிறார்கள் .   தணிக்கை குழுவிற்கு மேலே இது யார் சூப்பர் தணிக்கை குழு? சட்டப்படி இப்படி கேட்க முடுயுமா?

முருகதாஸ் செய்தது குற்றம் என்றால் தண்டிக்கட்டும். அதை விட்டு விட்டு சட்டத்திற்கு புறம்பாக மிரட்டி பணிய வைக்க முயல்வதை அரசு கைவிட வேண்டும்.

முன் ஜாமீன் வழங்கினால் மட்டும் போதாது. பதியப் பட்ட வழக்கையே ரத்து செய்து  சட்டத்தை நிலை நாட்ட வேண்டும் நீதி மன்றம் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் .

பணம் கேட்டு பெயரைக் கெடுத்துக் கொள்ளும் இளையராஜா??!!

தனக்கு உரிமையுள்ள ஒன்றைக் கேட்டு பெயரைக் கெடுத்துக் கொள்ளும் ஒருவரை எப்படி விமர்சிப்பது?

அவர்தான் இளையராஜா?   தனது பாடல்களை பாடி பணம் சம்பாதிப்பவர்கள் தனக்குரிய ராயல்டி பணத்தை கொடுத்து விட  வேண்டும் என்று அவர் கேட்பது சட்டப்படி சரியானதுதான் என்றாலும் ஏன் அவரது கோரிக்கையை சக இசைக் கலைஞர்கள் ஆதரிக்க  வில்லை  என்பதுதான் தொக்கி நிற்கும் கேள்வி?

இவர் மட்டும்தான் இசைக் கலைஞரா? சங்கத்தில் இருக்கிறார் அல்லவா?

ராயல்டி வசூலிக்கும் உரிமையை சங்கத்துக்கு கொடுத்து விட்டு அவர்களுக்கு 20%   இவருக்கு  80% என்று ஒப்பந்தம் போட்டிருக்கிறாரே அவர்களை விட்டு பேச சொல்லி இருந்தால் இந்த விவாதம் தேவையற்ற ஒன்றாகி விடும்.

முன்பே இவருக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கும் தகராறு வக்கீல் நோட்டிஸ் வரை போனது. நட்பு முறிந்ததுதான் மிச்சம்.

Intellectual  Property Rights  Society  ல் இவர் முன்பு அங்கத்தினர் ஆக இருந்து அவர்களுக்கு இந்த ராயல்டி உரிமையை வசூலிக்கும்  உரிமையை வழங்கி இருந்தாராம்.  பின்னர் இவர் அதில் இருந்து வெளியே வந்து அந்த  உரிமையை இசையமைப்பாளர் சங்கத்துக்கு  வழங்கியிருக்கிறார்.

உண்மையில் ஜேம்ஸ் வசந்தன் சொல்கிறபடி ஒரு பாடலுக்கு படம் தயாரித்தவர் , இசை அமைத்தவர், பாடல் எழுதியவர்  ,பாடல் பாடியவர் என நால்வர்க்கும் ராயல்டியில் பங்கு இருக்க வேண்டும்.   அப்படி இருக்கிறதா?

ஒருவரை விட்டு மற்றொருவர் மட்டுமே பங்கு கோர முடியாது.  மற்றவர்களுக்கு தர வேண்டும் என இளையராஜா சொல்லவில்லை.  தனக்கு உரியதை மட்டும் கேட்கிறார்.

அதை ஏன் சுமுகமாக செய்து கொள்ள முடியவில்லை?

கங்கை அமரன் சொன்ன படி இளையராஜாவுக்கு தேவை இரண்டு இட்லி, கொஞ்சம் சோறு, இரண்டு சப்பாத்திகள் மட்டுமே.

இளையராஜா இசைஞானி மட்டுமல்ல மக்களால் நேசிக்கப் படும் நல்லவர்.

அவர் தன் பெயரை  கெடுத்துக் கொள்ளும் விதமாக நடந்து கொள்ள கூடாது என்பதே அவரது அபிமானிகளின் அக்கறை.

முஸ்லிம் நகரப் பெயர்களை மாற்றும் பாஜக-வின் திட்டம் சாதிக்கப் போவது என்ன??!!

முஸ்லிம் நகர மாவட்ட பெயர்களை மாற்றும் முயற்சியில்  பாஜக ஆட்சி தீவிரமாக இருக்கிறது.

குறிப்பாக உ.பி.யில் முதல்வர் ஆதித்ய நாத் மிகவும் தீவிரமாக முஸ்லிம் பெயர்களை கொண்டிருக்கும் நகரங்களின் பெயர்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

வளர்ச்சியே எங்கள் இலக்கு என்று சொல்லிக்கொண்டே வரலாற்றை மாற்ற முயற்சிப்பது என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை விட  என்ன சாதிக்கப் போகிறது என்பதே கேள்வி.

ஆக்ரா-வை அகர்வால் அல்லது ஆக்ராவன்; முசாபர் நகரை லட்சுமி நகர் ; சிம்லாவி ஷ்யாமளா,; அலஹாபாத்  நகரை கர்னாவதி; அவுரங்காபாத் நகரை சாம்பாஜி நகர்; உச்மானாபாத் நகரை தாராசிவ் நகர் என்றெல்லாம் பெயர் மாற்றம் செய்யப்  போகிறார்கள்.

கடந்த பல நூற்றாண்டுகளில் நாம்  பலரால் ஆளப்பட்டிருக்கிறோம். அதெல்லாம் வரலாறுகள். மாற்றப் பட முடியாதது. இன்று விடுதலை அடைந்து இருக்கிறோம் என்பதே உண்மை. வரலாற்றை மாற்றுகிறோம்  என்று நாம் மீண்டும் ஐம்பத்தாறு தேசமாக மாற முடியுமா?

உலக நாடுகள் பலவும் தங்கள் பெயர்களை மாற்றி கொண்டிருக்கிறது. பர்மா மியான்மர் எனவும் சிலோன் ஸ்ரீ லங்கா எனவும் பெர்சியா ஈரான் எனவும் பெயர்கள் மாறியிருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் இப்போது பாஜக வின் நோக்கத்தோடு ஒப்பிட முடியாது.

தமிழ்நாட்டில் எத்தனையோ மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறோம். ஆனால் அவையெல்லாம் எவரையும் இழிவு படுத்தும் நோக்கம் கொண்டதல்ல.

டன்சூர் தஞ்சாவூர்; டிருச்சி திருச்சி; கொல்ரூன் கொள்ளிடம்; டுடிகோரின் தூத்துக்குடி; என்று ஆங்கிலப் பெயர்களை தமிழ் படுத்தும் முயற்சியே இன்னும் முற்றுப் பெறவில்லை.

மெட்ராஸ் சென்னை ஆவதில் ஒன்றும் தவறில்லை.

ஆனால் முஸ்லிம்கள் நம் நாட்டவர் அல்ல அவர்கள் படை எடுத்து வந்தவர்கள் என்பதை நிலை நாட்டுவதே நோக்கமாக இருந்தால் யார் படை எடுத்து வந்தவர்கள் என்ற வரலாற்று குறிப்புகளை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும்.

அப்படி ஆராய்ந்தால் ஆரியர்கள் என்று தங்களை கூறிக்கொள்வோர் பெர்சியாவில் இருந்து குடி ஏறியவர்கள் என்று நிலை நாட்டப் பட்டதால் இன்றைய பிராமணர்கள் எல்லாருமே அயலார்தான்.

யார் பூர்வ குடி என்று ஆராய்ந்தால் மிச்சமிருப்போர் எண்ணிக்கை சொற்பம் தான்.

இருக்கும் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி அனைவருக்கும் நல்வாழ்வு தேடிக்கொடுப்பதே ஆட்சியாளர்களின் கடமை.

யார் பெரியவர் என்று நிலைநாட்ட பெயர் மாற்றத்தை பயன் படுத்துவதை வெளிச்சம் போட்டு காட்டியது உபி.

அங்கு சமாஜ்வாதி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மேற்கு உபி இன் ஒரு  மாவட்டத்திற்கு ஹாத்ராஸ் என்று பெயரிடும். மாயாவதி ஆட்சிக்கு வந்தால் உடனே அதை மஹாமாய நகர் என்று மாற்றுவார். மஹாமாய புத்தரின் தாயின் பெயர்.     மீண்டும் சமாஜ்வாதி ஆட்சிக்குக் வந்து ஹாத்ராஸ் என்று மாற்றுவதும் அதை  மாயாவதி  மீண்டும் மாற்றுவதும் என்று இந்த வேடிக்கை நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது.

சாதி மதங்களிடையே பேதங்களை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் அடைய  பெயர் மாற்றங்களை பயன்படுத்துவது கேவலமான போக்கு. அது நீடிக்கக் கூடாது.

மேகதாது அணை அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்து தமிழர்கள் முதுகில் குத்திய மத்திய அரசு??!!

மத்திய நீர் வளத்துறை கர்நாடகாவின் காவேரி நீராவரி நிகம் அமைப்பிற்கு மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தாக்கல் செய்ய அனுமதி  அளித்து தமிழர்கள் முதுகில் குத்தி இருக்கிறது.

நினைத்தாலே இதயம் பதறும் கொடுஞ்செயல் இது. டெல்டா விவசாயிகளுக்கு சொட்டு நீரும் கிடையாது என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்கும்  என்று சொல்வதெல்லாம் வெளி வேடம்.

பெங்களுருக்கு குடிநீர்  , மின் உற்பத்தி இரணடும் தான் நோக்கம் என்று  சொன்னாலும் உள்  நோக்கம் வேறு. பாசன பகுதிகளை விரிவாக்கம் செய்வது கர்நாடகாவில் கிடைக்கும் நீரை எல்லாம் அங்கேயே அணைகளில்  சேகரித்து வைத்துக் கொண்டு  பயன் படுத்தியது போக  மிச்சம் ஏதாவது இருந்தால் கழிவு நீரை வெளியேற்றுவது போல் கொஞ்சம் தருவார்கள்.

காவிரி நீர் நிர்வாக ஆணையம்  மத்திய நீர் வளத்துறை இரண்டிற்கும் மசூத் உசைன் தான் தலைவர்.    அவர் நீர் வளத்துறை சார்பில் அனுமதி அளித்து விட்டு இறுதி அறிக்கையை ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் அதற்கும் அனுமதி அளிப்பார்.   மத்திய அரசின் ஆணைப்படி இயங்கும் அமைப்புகள் தான் இரண்டும்.  மறுக்க முடியுமா?

காவிரி தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இறுதி செய்து கடந்த  16/02/2018 ல் இறுதி  தீர்ப்பு  வழங்கி விட்டது. அதன் படி தமிழகத்திற்கு ஆண்டிற்கு  177.25  டி எம் சி தண்ணீர் வழங்க வேண்டும். மேலும் காவிரி நீர் தொடர்பாக எது செய்தாலும் ஆணையத்தில் தான் அணுகி பெற வேண்டும்.

இன்னிலையில் மேகதாது அணை தொடர்பாக மத்திய நீர் வளத்துறை இப்போது சாத்தியகூறு கூறு அறிக்கையை ஏற்றுக்  கொண்டு திட்ட அறிக்கை அளிக்க அனுமதி அளிக்க வேண்டிய அவசிய அவசரம் என்ன?

உச்சநீதி மன்றதையோ ஆணையத்தையோ அணுகாமல் அணை கட்டுவது தொடர்பாக உத்தரவிட நீர் வளத்துறைக்கு அதிகாரம் உண்டா?

இதெல்லாம் மத்திய அரசுக்கு தெரியாமலா நடக்கிறது.

தமிழ்நாட்டின் அனுமதி  இல்லாமல் அணை  கட்ட முடியாது என்பது உண்மையானால், தமிழ்நாடு முன்பே அனுமதி மறுத்த  நிலையில் அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க ஏன் உத்தரவிட வேண்டும்.?

அணை கட்ட உரிமை உண்டு என்று நிலை நாட்டிய  பிறகல்லவா  திட்ட அறிக்கை தயாரிப்பதில் அர்த்தம் இருக்கும்.

டெல்டா பகுதி விவசாயிகள் சாகுபடி  செய்ய வழியில்லாமல் நிலங்களை விட்டு ஓட வேண்டும். அந்தப் பகுதிகளை பெட்ரோலிய மண்டலமாக அறிவிக்க வேண்டும்.   தனியாருக்கு தாரை  வார்த்து ஹைட்ரோ கார்பன் உறிஞ்சி எடுத்து நிலங்களை மலடாக்க  வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் திட்டமா?

முன்பே கர்நாடகாவில் 110  டிஎம்சி  தண்ணீர் தேக்குமளவு அணைகள் உள்ளன.   மேகதாதுவும் சேர்ந்துகொண்டால் 170  டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.     அது மேட்டூரில்  தேக்கும் நீரை விட இரண்டு மடங்காகும். மேட்டருக்கு நீரே வராதே.

ஏற்கெனெவே உச்ச நீதி  மன்றம் பெங்களுருக்கு குடிநீர் தேவைக்கு  என  இறுதி தீர்ப்பில் 7 டிஎம்சி நீர் ஒதுக்கி  உள்ளது. கர்நாடகா திட்டமிடும் 400  மெகா வாட் மின் உற்பத்திக்கு எவ்வளவு நீர் தேக்கி ஆக வேண்டும்?

நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிற நேரத்தில் கர்நாடகாவில்  வாக்கு வங்கியை  உறுதி படுத்திக் கொள்ள மத்திய அரசு இந்த திட்டத்தை அறிவித்திருக்கிறது.   தமிழ் நாட்டில் தான் அதற்கு வேலை இல்லையே?

தமிழ் நாட்டில் ஒரு அடிமை ஆட்சி இருக்கிறது . என்ன செய்து விடுவார்கள் என்ற கணிப்பு.

ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் எதிர்க் கட்சிகள் சும்மாவா இருப்பார்கள்!

திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டியுள்ள சர்வ கட்சி  கூட்டத்தில் இது தொடர்பாக எதாவது செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருக்கிறது.

உடனடியாக மாநில அரசு உச்சநீதிமன்றதையோ காவிரி ஆணையத்தையோ அணுகி தடை கோர வேண்டும்.

அதையும் மீறி மத்திய அரசு செயல்பட்டால் மக்கள் திரண்டு அறவழிப் போராட்டத்தை துவங்க வேண்டும்.

ஏனென்றால்  எட்டு மாவட்டங்களில் உள்ள டெல்டா விவசாயிகளுக்கு இது வாழ்வா சாவா என்ற வாழ்வாதார பிரச்னை.

பள்ளிச்சிறுவர்கள் செய்த ஆணவக் கொலை; நந்தீஷ்-சுவாதி கொலையை தொடர்ந்து நெல்லையில் பயங்கரம்?!!

ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும்  என எல்லா அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

சாத்தியமா என்பதை விட சாத்தியப்படுத்தப்பட வேண்டும் என்ற உணர்வு பரவத் தொடங்கி இருப்பது நல்ல அறிகுறி.

கிருஷ்ணகிரியில் நந்தீஷ் – சுவாதி இருவரில் ஒருவர் தலித். சுவாதி தலித் அல்லாதவர். இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்த நிலையில் சுவாதியின் தந்தையே வஞ்சகமாக கூட்டி சென்று இருவரையும் கொலை செய்துள்ளார்.

திருப்பூரில் இதேபோல் ஆணவக் கொலை செய்யப் பட்ட சங்கரின் மனைவி கௌசல்யா நந்தீஷ் குடும்பத்துக்கு ஆறுதல்  கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் இதுவரை 185 ஆணவக் கொலைகள் நடைபெற்றிருப்பதாக கூறிய கௌசல்யா அரசின் சொல்லும் தகவல்கள்  பொய்  என்றார்.

ஆனால் நெல்லை வெள்ளன்குளி கிராமத்தில் நடந்தது அதைவிட கொடுமை.

இங்கே தன் அக்காவை திருமணம் செய்ய இருந்த பையனை அவளின் தம்பி தன் சகாக்களோடு சேர்ந்து கொலை செய்திருக்கிறான்.

தம்பி வயது 16. அவன் நண்பர்கள் அனைவரும் பத்தாம் வகுப்பும் பிளஸ் டூ முதலாண்டும் படிப்பவர்கள். மேலும் இருவர் பத்தாம் வகுப்பு  படித்து விட்டு வேலை செய்பவர்கள். எல்லாருக்கும் வயது பதினேழுக்குள் தான்.

இசக்கி சங்கர் கோனார் சத்தியபாமா தேவர். முதலில் சத்தியபாமா வீட்டில்  மறுத்தாலும்  இசக்கி சங்கர் படித்து விட்டு வேலையில் இருந்ததால் திருமணத்திற்கு சம்மதித்து தேதியும் குறித்து விட்டார்கள்.

தம்பியின் நண்பர்கள் செய்த கேலியில்தான் கொலை சிந்தனை தம்பிக்கு வந்திருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் தம்பியின் நண்பர்கள் எல்லாரும் தேவர் அல்ல. பல சாதிகளையும் சேர்ந்தவர்கள்.

ஆற்றுக்கு வந்தவனை கொலை செய்து விட்டு சிறுவர்கள் ஏழு பெரும் ஏதும் நடக்காது போல் பள்ளிக்கும் வேலைக்கும் சென்றிருக்கிறார்கள்.

கொலையுண்ட இசக்கி சங்கருக்கும் அவரது ஒன்று விட்ட சகோதரர்களுக்கும் சொத்து தகராறு  இருந்து வந்ததையும் காவல்துறை கணக்கில் எடுத்து விசாரித்து வருகிறது.

ஆக இது ஓர் சமுதாய சீரழிவு. புரையோடிபோயிருக்கும் நோய்.

சம்பந்தப் பட்டவர்களின் மீது வழக்கு தொடுத்து தண்டிக்கட்டும்.

அது போதுமா? நின்று விடுமா ஆணவக் கொலைகள்?

சமுதாய சீர்திருத்த இயக்கங்கள் உயிர் பெற வேண்டும்.

சாதி சங்கங்கள் உயிர்ப்போடு இருக்கும் அளவு சீர்திருத்த இயக்கங்கள் துடிப்போடு இருக்கின்றனவா?

ஏன் அரசியல் கட்சிகளுக்கு பொறுப்பு ஏதும் இல்லையா? அவர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுக்கு கட்டளை ஏதும் பிறப்பிக்க வில்லையே ஏன்?

சொன்னால் கேட்கமாட்டார்கள் என்ற அச்சமா? வாக்குகளை பாதிக்கும் என்ற பயமா?

சட்டமும் வேண்டும். அதைதொடர்ந்து சீர்திருத்த பிரச்சாரமும் வேகம் பிடிக்க வேண்டும்.

அதை அரசியல் கட்சிகள்தான் தொடங்க வேண்டும்.

சாதிக் கட்சிகள் நடத்துபவர்கள் தயாராக இருக்க மாட்டார்கள்.

மற்றவர்கள் முன்னெடுக்கலாமே  !!!!

தேர்தலுக்கு முன் ராமர் கோவில் பிரச்னையை கையில் எடுக்கும் பாஜக ??!!

நானூறு ஆண்டுகளாய் இருந்து வந்த அயோத்தியில் ராமர் கோவிலா பாபர் மசூதியா என்ற பிரச்னையில் 1992-ல் பல லட்சம் கர சேவகர்களை கூட்டி வைத்து இருபதே நிமிடத்தில் மசூதியை தரை மட்டமாக்கி விட முடிந்தது சங்கப் பரிவார சக்திகளால்.

ஆனால் நிலுவையில் இருப்பது இடம் யாருக்கு சொந்தம் என்ற சிவில் வழக்கு.

அதுவும் உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. மூன்று பேருக்கு பங்கு போட்டுக் கொடுத்த உயர் நீதி மன்ற தீர்ப்பு நிலைக்குமா அல்லது புது தீர்ப்பு வருமா என்பது இறுதி விசாரணையை எப்போது எடுத்துக் கொள்வது என்று ஜனவரி மாதம்தான் தெரியவரும்.

அதற்குள் சங்க பரிவாரங்கள் இரண்டு லட்சம் பேர் அயோத்தியாவில் கூடி ஒரு தர்ம சபையை கூட்டி பேசியிருக்கிறார்கள்.

தீர்மானம் ஏதும் போட்டதாக தெரியவில்லை. வழக்கு உச்சநீதி மன்றத்தில் இருக்கும்போது என்ன தீர்மானம் போட முடியும்?

தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு இல்லையென்றால் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் பரிவாரங்கள் இல்லை என்பது மட்டும் உறுதி.

கலவரம் செய்து  குறுகிய நேரத்தில் அழிக்க முடியும். கட்ட முடியுமா?

பல மாதங்கள் ஆகும் என்றால் அதுவரை உச்சநீதி மன்றம் பார்த்துக்  கொண்டு இருக்குமா?

நாட்டில் சட்டம் கோலோச்சுமா ? தடி எடுத்த கூட்டம் கோலோச்சுமா?

உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அயோத்தியா வழக்கை பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை எடுத்துக் கொள்ளாதீர்கள்  இல்லையென்றால் உங்கள் மீது ராஜத்ரோக ( impeachment ) குற்றம் சுமத்தி பதவி இழக்க வைப்போம் என்று காங்கிரசின் வழக்கறிஞர்கள் உச்ச நீதிபதிகளை மிரட்டுவதாக மோடி குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஆனால் இப்போது தர்மசபை  கூடியது எதற்காக யாரை மிரட்ட என்பதை மட்டும் சொல்லவில்லை.

மீண்டும் ஜனவரியில் கூடுவார்களாம்.    மத்தியில்  மட்டுமல்ல மாநிலத்திலும் அதிகாரத்தில் இருந்து கொண்டே இத்தகைய அத்துமீறல்களை பா ஜ க செய்யுமானால் அவர்கள் எதைத்தான் செய்ய மாட்டார்கள்?

வளர்ச்சி என்று பேசியதெல்லாம் மக்களிடம் எடுபடாது என்பதால் மீண்டும் ராமருக்கு திரும்பி இருக்கிறார்கள் மதவாதிகள்.

மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள்.

செவ்வாயில் இறங்கியது நாசா விண்கலம் இன்சைட் ( InSight )

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அனுப்பிய விண்கலம் இன்சைட்.

செவ்வாய் கிரகத்தை நோக்கி சென்ற மே மாதம் ஐந்தாம் தேதி அனுப்பிய விண்கலம் இன்று தனது இலக்கை அடைந்து புகைப்படங்களை பூமிக்கு அனுப்ப தொடங்கியது.

இறங்கியதும் எழுந்த புகைப்படலத்தில் எதுவுமே  தெரியவில்லை.

ஆனால் பின்னர் அனுப்பிய புகைப்படங்களில் தகவல்கள் தெரிந்தன என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இது எட்டாவது முயற்சியாம். முன்பெல்லாம் எதிர்பார்த்த பலன்களை தராமல் இருந்த நிலையில் இந்த முயற்சி பெற்ற வெற்றி விஞ்ஞானிகளை மகிழ வைத்திருக்கிறது.

டிசைன் தொடங்கி இறங்கியது வரை ஏழாண்டுகள் திட்டம் .

993 மில்லியன் டாலர்கள் செலவு. 2030-ல் மனிதர்களை அனுப்புவோம் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள் .

54.6 மில்லியன் கி மீ. மிக அருகாமையிலும் சராசரியாக   225 மில்லியன் கி. மீ  தூரத்திலும் இருக்கும் செவ்வாய் நம்மால் சிவப்புக் கிரகம் என்று அழைக்கப்  படுகிறது.

இவைகள் எல்லாம் அறிவியல் உண்மைகள். மறுக்க முடியாதவை. ஆனால் நாம் மட்டும்தான் அந்த சிவப்புக் கிரகம் அமைந்திருக்கும் நிலைகளால் மனித வாழ்வில் மாற்றங்கள் நிகழும் என நம்புகிறோம்.

அது இருக்கும் நிலை தோஷம் தரக் கூடியது என்றும் அதற்குப்  பரிகாரம் என்று சில தெய்வங்களை துதிப்பதும் சிறப்பு பூசைகள் செய்வதும் என விதிக்கப் பட்டுள்ளதாகவும் நம்புகிறோம்.

உலகத்தில் வேறு யாரும் இந்தியாவைதவிர இத்தகைய நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்களா என்பது சந்தேகமே.

அறிவியல் உண்மைகளை இந்த நம்பிக்கைகளோடு பொருந்திப் பார்த்து பிறகு எது ஏற்புடையது என்று ஏற்றுக் கொள்ளும் மனோநிலை என்று வருகிறதோ அன்றுதான் நமக்கு விடிவு காலம்.