Home Blog Page 55

மோடி உமாபாரதியை கீழ் சாதி என்று சாடிய காங்கிரசின் சி.பி.ஜோஷி ??!!

வட இந்தியாவில் சாதி அமைப்பு எவ்வளவு வேரூன்றி இருக்கிறது என்பதற்கு சான்றாக காங்கிரசின் சி.பி.ஜோஷி  என்ற முன்னாள் மத்திய அமைச்சர் பேசிய பேச்சு உணர்த்தியது.

பார்ப்பனர்கள் அதிகம் உள்ள ராஜஸ்தானின் நந்த்வாரா தொகுதியில் காங்கிரசின் சி.பி.ஜோஷி வேட்பாளர். பாஜக-வை தாக்குவதாக நினைத்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடியையும் உமாபாரதி சாத்வி ரிதாம்பரா போன்றவர்களை விமர்சிக்க ஆரம்பித்தார்.

‘மோடி, உமா பாரதி, ரிதாம்பரா போன்றவர்கள் கீழ் சாதியை சேர்ந்தவர்கள்.  இவர்கள் எப்படி இந்து மதத்தை பற்றி  பேசலாம். அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. இந்து மதம் பற்றி பேச பிராமணர்களுக்கு  மட்டுமே உரிமை இருக்கிறது ‘ என்று பேசிய ஜோஷியின் பேச்சு சர்ச்சையை  கிளப்பி இருக்கிறது.

தேர்தல் கமிஷன் நோட்டிஸ் கொடுக்கிறது. அதற்குள் ராகுல் காந்தி தலையிட்டு ஜோஷி பேசியது தவறு. கட்சிக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்கும் வகையில் பேசியதை ஏற்றக் கொள்ள முடியாது என்று சொன்னவுடன் ஜோஷி தனது கருத்தை வாபஸ் பெற்றார்.

அதுகூட உளப்பூர்வமாக வாபஸ் பெற்றாரா என்று சொல்ல முடியாது. ஏனென்றால் தனது கருத்து யாருடைய மனதையாவது புண் படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்றால் அது தவறு என்று உணர்ந்ததாகவா பொருள்?

வட இந்திய பார்ப்பனர்களின்  பெரும்பலானவர்களின் கருத்து ஜோஷியின் கருத்தை ஒட்டித்தான் இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

இன்று மேதகு பிரபாகரன் பிறந்த நாள் !

இன்று மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின்  64 வது பிறந்த நாள்.

கொண்டாட  வேண்டிய திருநாள். மீண்டும் வந்து பிறப்பாரா என்று ஏங்க வைக்கும் நாள்.

தியாகம் என்றால் என்ன என்பதை தன் வாழ்க்கையால் உணர்த்திய பெருமகன்.

வீரம் என்றால் என்ன உலகத்திற்கு உணர்த்திய மாவீரன்.

மறைந்தாலும் வாழும் மாவீரர்கள் தமிழ் மரபில் நடுகல் நடப்பட்டு வணங்கப் பட்டு வந்தார்களே அந்த மரபில் வணங்கப் பட வேண்டிய தமிழ்த் தாயின் தலைமகன் பிரபாகரன்.

இரண்டு சொட்டு கண்ணீர்- இரண்டு நிமிட தியானம்- இரண்டு நிமிட வழிபாடு – உளமார உறுதி பூண்டு அவர்  தம் கொள்கைகளில் சிலவற்றையாவது வெற்றி பெற செய்ய உழைப்பது – இதுவே நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

வலிமையுள்ளது பிழைத்துக்கொள்ளும் என்ற டார்வினின் தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட எதார்த்தவாதி .

உடன்படிக்கைகளை உடைத்து  எறிந்து ஏமாற்றுவதையே கலையாக பயின்று அடக்கு முறையை கொள்கையாக கொண்டவர்களிடம் நீதி கிடைக்காது என்ற முடிவுக்கு வந்தபின்னரே ஆயுத போராட்டம் மூலம் தம் மக்களுக்கு விடுதலை தேடித் தர முடியும் இலக்கோடு பணியாற்றினார்.

போரிலும் அறம் பிறழவில்லை.   உலகம் கண்டு வியந்தாலும் இறுதி கட்ட போரில் அமெரிக்காவோடு இந்தியா உள்ளிட்ட 21  நாடுகள் இனவாத இலங்கை அரசுக்கு ஆதரவாக நின்றது ஏன் என்ற கேள்விக்கு யாராலும் இப்போது விடை காண இயலாது.

புலிகளின் தாகம் தமிழ் ஈழ விடுதலை – என்ற கனவு அடக்கி வைக்கப் பட்ட இனத்தின் குமுறல். அது ஆயுத போராட்டத்தால் கிடைக்க வழி அடைக்கப் பட்டுள்ளது.

ஆனால் அறிவாயுதத்தின் வழி என்றும் அடைபடாது அடைக்கப்  பட முடியாது.

எந்த  இனமும் நிரந்தரமாக அடிமைப்படுத்தப் பட  முடியாது.

தீர்வு தள்ளிப் போயிருக்கிறது. வந்தே தீரும்.

மாவீரர் தின உரை கேட்க உலக தமிழர்கள் காத்திருந்த காலம் வீண் போகாது.

வைகோவை கழற்றி விடுகிறதா திமுக? துரைமுருகன் பேட்டியால் சர்ச்சை??!!

‘காங்கிரசும் அகில இந்திய முஸ்லிம் கட்சியும்தான் கூட்டணிக் கட்சிகள்; வைகோ, திருமாவளவன், போன்றவர்கள் நட்புக் கட்சிகள். ஏன் கம்யுநிச்டுக் கட்சிகள் கூட அப்படித்தான். ‘ என்ற திமுக பொருளாளர் துரைமுருகனின் பேட்டியால் திமுக வைகோவையும் திருமாவளவனையும் கழற்றி விடுகிறதா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

அதே நேரத்தில்  அவர்களை நட்புக் கட்சிகள் என்றுதான் துரைமுருகனும் குறிப்பிட்டிருக்கிறார். இதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை.. நட்புக் கட்சிகள் கூட்டணிக் கட்சிகளாக மாற என்ன தடை?

கடந்த காலத்தை கவனித்தால் தேர்தல் வரும்போது அதுவரை இருந்த கூட்டணி கட்சிகள் அணி மாறி வேறு வேறு கூட்டணிகளில் இடம் பெறுவது வாடிக்கை என்பது தெரியவரும்.

2006  சட்டமன்ற தேர்தல்களில் அதுவரை திமுகவுடன் கூட்டணியிலிருந்த வைகோ 25 இடங்களில் உறுதியாக இருந்தார் கலைஞர் 22 இடங்கள் மட்டுமே தர முன்வந்தார்.  வைகோ திமுக அணியை விட்டு விலகி 35 இடங்களை அதிமுகவிடம் பெற்றுக்கொண்டு அணி மாறினார் என்பது வரலாறு.

பல தேர்தல்களில் எதிர்த்து நிற்பது என்பது யாரை வெற்றி பெறச் செய்ய வேண்டுமோ அவர்களின்  எதிர்ப்பு வாக்குகளை பிரிப்பது மட்டுமே நோக்கமாக இருந்திருக்கிறது.

கூட்டணி என்றால் எத்தனை இடங்கள் என்பதை தாண்டி எதிரியை வீழ்த்துவது  ஒன்றே நோக்கமாக இருக்க வேண்டும்.

அதில் இடங்கள் பற்றிய குறைகளை காரணம் காட்டி கூட்டணியை  முறிப்பது நோக்கம் பழுது என்றாகும்.

இன்று வீழ்த்தப் பட வேண்டிய ஆட்சி இந்த எடப்பாடியின் ஆட்சி என்றால் அதை அடைய எத்தனை வேண்டுமானாலும் விட்டுக்  கொடுக்க கூட்டணி கட்சிகள் தயாராக இருக்க வேண்டும்.

வலுவான கூட்டணி அமைய எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

சீக்கியர்களை கொன்ற வழக்கில் 34 வருடங்களுக்குப் பிறகு ஒருவருக்கு மரண தண்டனை??!!

1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்

இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு ஏற்பட்ட கலவரத்தில் 1984 ல் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எண்ணாயிரத்துக்குக் குறையாது.

இதைப்பற்றி கேட்டவுடன்தான் காலஞ்சென்ற ராஜீவ் காந்தி ஒரு யானை நடந்தால் எறும்புகள் சாவது இயற்கைதானே என்றார். அப்படித்தான் காங்கிரஸ்காரர்கள் மனநிலை இருந்தது.

அப்போது மகிபால்பூர் என்ற இடத்தில் அவதார் சிங் ஹர்தேவ் சிங் என்று இருவர் வீட்டில் இருந்து இழுத்து வரப்பட்டு கொல்லப்பட்டனர்.

அவர்களை கொன்றதாக யாஷ்பால்சிங் நரேஷ் செஹ்ராவாத் என்று இரண்டு பேர் மீது வழக்கு.

அவர்களின் மீதான வழக்கை காவல்துறை சென்ற 1996 லேயே மூடிவிட்டது. அதற்குப் பின்னால் உச்சநீதிமன்றம் 2015-ல் அமைத்த சிறப்பு விசாரணை குழு இந்த வழக்குகளை எல்லாம் மீண்டும் கோப்பில் எடுத்து மறு விசாரணை  செய்து குற்றபத்திரிகை தாக்கல் செய்து விசாரணை நடந்தது.

அதில்தான் யாச்பால்சிங் மரண தண்டனை யும் நரேஷ் ஆயுள் தண்டனையும் விதிக்கப் பட்டுள்ளனர்.

அவர்கள் நிச்சயம் மேன்முறையீடு செல்வார்கள்.   இதற்கே இத்தனை ஆண்டுகள் என்றால் மேன்முறையீடு முடிந்து நீதி நிலைநாட்டப் பட இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?

இப்போதாவது நீதி கிடைத்ததே என்று பாராட்டுவதா இதற்கே இத்தனை ஆண்டுகளா என்று  நிந்திப்பதா?

இது தாமதிக்கப்பட்ட நீதி என்பதில் சந்தேகம் இல்லை.

இலவச அரிசி இனி வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே!! உயர் நீதி மன்றம் அதிரடி!!!

ஏழைகளுக்கு உதவ தமிழ்நாடு அரசு கொண்டு வந்த இலவச அரிசி திட்டம் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் அது மக்களை சோம்பேறிகளாக்கி விட்டதாகவும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.

இதனால் வேலைக்கு ஆள் கிடைப்பது கூட அரிதாகி விட்டது என்றும் வேலைக்கு வட நாட்டில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்யும் அளவுக்கு நிலைமை போய்விட்டது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

நீதிபதிகள் கிருபாகரன் அப்துல்  குத்தூஸ் கொண்ட அமர்வு வழக்கு விசாரணையை இம்மாதம் முப்பதாம் தேதிக்கு தள்ளிவைத்து விட்டு அதற்குள் இந்த திட்டத்தை அமுல் படுத்த வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் பற்றி கணக்கெடுப்பு எடுக்கப் பட்டதா என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் மூலமே இலவச அரிசி திட்டத்தின் கீழ் வழங்கப் பட இருந்த அரிசியை  கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்க போடப்பட்ட மனுவின் மீதான விசாரணையின் போதுதான் உருவானது.

தமிழக அரசு ஆண்டுக்கு ரூபாய் 2110 கோடி இந்த திட்டத்திற்கு செலவழிக்கிறது.  இது பொது மக்களின் வரிப்பணம். இதற்குப் பதில்  வேறு அவசியமான திட்டங்களுக்கு இந்த பணம் பயன்படுத்தப் படலாமே என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

நீதிமன்றத்தின் இந்த கருத்தால் எப்படியும் எல்லாருக்கும் இலவச அரிசி திட்டம் இனி சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது .

ஒட்டு வாங்கும் ஒரு திட்டமாகவே இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல. கொடுப்பது கடினம் என்றால் நிறுத்துவது அதைவிட கடினம்.

நிறுத்தியவர்களை ஏழைகளுக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்த முடியும்.

1,96,16,093 கோடி குடும்ப அட்டைகளுக்கு 5 விதமான வகைகளில் பொருட்கள் வழங்கப் பட்டு வருகின்றன.

சில இடங்களில் இலவச அரிசியை வசதி உள்ளவர்கள் பெற்று அதை மற்றவர்களுக்கு கொடுத்து விடுவதாகவும் விற்று விடுவதாகவும் புகார் வருகின்றன.  எந்த திட்டமாக இருந்தாலும் கால வரையறையில் ஆய்வு செய்யப் பட்டால் மட்டுமே தவறுகளை திருத்த முடியும்.

திட்டத்தின் மைய நோக்கத்தையே சிதைக்கும் அளவு முறைகேடுகள் நடைமுறையில் இருப்பது உண்மைதானே?

சரியான நேரத்தில் நீதிமன்றம் தலையிட்டு தவறுகள் தொடரா வண்ணம் கடிவாளம் போட இருக்கிறது.

திருத்தப்பட வேண்டிய நல்ல திட்டம்.

நீட்; தவறான கேள்விகளுக்கு உயர் நீதிமன்றம் அளித்த கருணை மதிப்பெண்களை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்??!!

நீட் தேர்வை தமிழில் எழுதியவர்களுக்கு தவறான தமிழ் மொழிபெயர்ப்பு கேள்வித்தாள் வழங்கப்பட்டது.

அதனால் பாதிக்கப் பட்ட மாணவர்களுக்கு 49 கேள்விகளுக்கு தலா 4 மார்க் வீதம் 196 கருணை மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம் இப்போது அதை ரத்து செய்திருக்கிறது.

மூலக் கேள்வியான ஆங்கிலத்தில் கேள்வி சரியாக இருக்கும்போது அதன் தமிழ் மொழி பெயர்ப்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஆங்கில மொழியில் இருப்பதைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது விதி என்பதை சுட்டிக்  காட்டிய உச்ச நீதிமன்றம் அடிப்படை ஆங்கில அறிவு மாணவர்களுக்கு இருந்திருக்க வேண்டும் என்றும் அதனால் கருணை மதிப்பெண் கொடுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் சொன்னதோடு  இந்த ‘அறிவை பயன்படுத்தாமல் கண்ணை மூடிக்கொண்டு கருணை மதிப்பெண்கள் வழங்கப் பட்டிருப்பதாக உயர் நீதிமன்றத்தை குறை கூறியிருப்பதுதான் இந்த தீர்ப்பில் முக்கியமாக சுட்டிக் காட்டப் படுகிறது. ” blind allocaion of 19 grace marks was ordered without application of mind’

ஒரு குறையை களைய வேண்டும் என்ற அக்கரையில் உயர் நீதிமன்றம் இன்னும் சற்று கவனமாக  இதை அணுகி இருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.

இதனால் மக்களுக்கு நீதிமன்றங்கள் மீதான மரியாதை குறையத்தான் செய்யும்.

பொன் ராதாகிருஷ்ணன் செய்த சபரிமலை அரசியல்??!!

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இருமுடி கட்டி சபரி மலை யாத்திரை சென்றார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து நடந்து வரும் பிரச்னைகளால் காவல் துறை பல கட்டுப்பாடுகளை விதித்து சட்ட ஒழுங்கை பாதுகாத்து வருகிறார்கள்.

ஒரு இடத்தில் அவரது காரை மட்டும் அனுமதித்து அவருடன் வந்தவர்கள் கார்களை காவல் துறை அனுமதிக்க மறுத்திருக்கிறது .

அதை பொன்னார் பிரச்னை ஆக்கி இருக்கிறார். அவருடன் விவாதித்த காவல் துறை அதிகாரி தன் உடல் மொழியால் தனக்கு உரிய மரியாதை அளிக்க வில்லை என்ற குறை இருந்திருக்கலாம்.

அவர் திரும்பி வந்தபோதும் இதே பிரச்னை வந்திருக்கிறது. போலிஸ் அத்துமீறி  நடக்கிறது என்பது பாஜக-வின் குற்றச்சாட்டு.

கேரள இடது சாரி அரசை குற்றம் சுமத்துவதே பாஜக வின் நோக்கமாக இருக்கிறது.

முத்தாய்ப்பாக கேரள அரசை  கண்டித்து கன்னியாகுமரி  மாவட்டத்தில் இன்று முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருக்கிறது பாஜக.

ஆக அரசியல் செய்யத்தான் இத்தனையும்.

தனக்கிருந்த நல்ல பெயரை கெடுத்துக் கொண்டிருக்கிறார் பொன்னார்.

விவசாயிகள் கடன் ரூ 4 கோடியை வங்கியில் செலுத்திய அமிதாப் பச்சன் !!

விளம்பரத்திற்காக நன்கொடை கொடுப்போர்கள் மத்தியில் ஓசைப் படாமல் உத்தர பிரதேச மாநில விவசாயிகள் 1398 பேர் வாங்கியிருந்த ரூபாய் 4 கோடி வேளாண் கடனை அந்த வங்கிகளில் செலுத்தி இருக்கிறார் அமிதாப் பச்சன்.

இதற்கு முன்பு மராட்டிய மாநில விவசாயிகள் 350 பேர் வாங்கி இருந்த வேளாண் கடன்களை வங்கிகளில் செலுத்தி அவர்களை தற்கொலை முடிவில்  இருந்து மீட்டிருக்கிறார்.

மராட்டியத்திலும் உபி-யிலும் விவசாயிகள் வேளாண் கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகி வருகிறது.

உத்தர பிரதேச விவசாயிகளை மும்பைக்கு வரவழைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்திருக்கிறார்.

காந்திஜி சொன்னார் பணக்காரர்கள் கையில் இருக்கும் பணம் ஏழைகளுக்கானது என்று.

எல்லா பணக்காரர்களும் சமுதாய நோக்க உள்ளவர்களாக இருந்தால் பணக்கார்கள் மீது யாருக்கும் கோபம் வராது. தேவை ஏற்படும்போது கொடுக்கப்  போகிறார்கள்.   யாரிடம் இருந்தால் என்ன?

அமிதாப் அரசியலில் இல்லை. அவரது மனைவி சமாஜ்வாதி கட்சியீன் சார்பில் பாராளுமன்ற மேலவைக்கு தேர்தெடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் தீவிர அரசியலில் இல்லை.

இங்கேயும் கொடுக்கிறார்கள். அதில் அரசியல் இருக்கும். அரசியல் இல்லாமல் கொடுப்போரும் இருக்கிறார்கள் .

நம்மூர் நடிகர்களுக்கு மட்டுமல்ல எந்த வகையிலோ சொத்து சேர்த்து வைத்திருப்போர் மனதில் இந்த நற்சிந்தனை வளர்ந்தால் நல்லது.

குரு நானக் பிறந்த நாள் சிந்தனைகள்; போதனைகளுக்கும் நடைமுறைக்கும் தொடர்பு அற்றுப் போன கதை.??!!

இன்று குரு நானக் பிறந்த நாள். சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர்.

சீக்கிய மக்களுக்கு மூன்று நாள் கொண்டாட்டம்.

அவர் இந்து சமய சீர்திருத்தவாதி. ஆனால் அவரது வழிமுறை தனி மதமாகிப் போனது தான் துயரம்.

நானக் தனி கடவுளை கற்பிக்க வில்லை. எல்லா மதங்களும் உபதேசிக்கும் அன்பு , அறம், கருணை, போன்ற நல்ல குணங்கள்தான் சீக்கிய மதத்திற்கும் அடிப்படை.

எல்லா மதங்களில் இருந்தும் துதிப் பாடல்களை தொகுத்து அதுதான் குரு கிரந்த சாஹிப் என்று பெயரிட்டு அதையே மத நூல் ஆக்கினார்.

இந்து மத சம்பிரதாயங்களை ஒழிக்க விரும்பி தானே புது சம்பிரதாயங்களை உருவாக்கி விட்டார்.

ஐந்து காரியங்கள் சீக்கியர்களுக்கு கடமையாக்கப் பட்டன.

தாடி வளர்த்து தலைமுடியை டர்பன் கொண்டு கட்டிக் கொள்ளுதல், சீப்பு  வைத்துக் கொள்ளுதல், கைகளில் இரண்டு காப்புக் கட்டிக் கொள்ளுதல், இடையில் கிர்பன் என்ற குறுவாள் வைத்துக் கொள்ளுதல், இடையில் பாதுகாப்பான முடிந்து கொள்கிற அணிந்து கொள்ளுதல்  இவை ஐந்தும் கடமைகள்.

ஆனால் இந்துக்களின் சாதி பாகுபாடு விடாப் பிடியாக சீக்கியர்களை பிடித்துக் கொண்டது.   அதில் இருந்து அவர்களால் வெளியே வர முடியவில்லை. ஆம்.   சாதியை அங்கீகரிக்காத மதத்தில் சாதி இருக்கிறது.

ஜாட் சாதி சீக்கியர்கள் உயர்ந்தவர்கள். செலவாக்கு வசதி மிக்கவர்கள். தலித் மற்றும் இதர சாதி சீக்கியர்கள் கொஞ்சம் கீழேதான்.

ஜியானி ஜெயில் சிங் ஜனாதிபதியானாலும் அவர் ஆசாரி சீக்கியர்தான். பூட்டா சிங் மந்திரியானாலும் அவர் தலித் சீக்கியர்தான். மதம் மாறினாலும் இந்து சாதி  அடையாளம் விட மாட்டேன் என்று துரத்துகிறது.

நானக் போதனைகளில் முக்கியமானவை;

1. குருவின் துணை இல்லாமல் கடவுளை அறியமுடியாது.

  1. மன்னனாக இருந்தாலும் அன்பு நிறைந்து எறும்புக்கு ஈடாக முடியாது.

3. தன் மீது நம்பிக்கை இல்லாதவன் கடவுள் மீது நம்பிக்கை கொள்ள முடியாது.

  1. எதைப் பேசினால் உனக்கு கௌரவம் கிடைக்குமோ அதை மட்டுமே பேசு.
  2. உண்மையை அறிவது மேலானது அதற்கும் மேலானது உண்மையாக வாழ்வது.
  3. உலக ஆசையை துறை.
  4. கனவில் நடக்கும் நாடகமே உலகம்.
  5. உண்மையாக இறப்பது எப்படி என்பதை அறிந்து கொண்டால் அதை கேட்டது என்று அழைக்க மாட்டீர்கள்.

9. உலகத்தில் மகிழ்ச்சியை கேட்டால் துன்பம் வரும்.

  1. உலகை பாதுகாக்கிறவன் என்னை எங்கே வைக்கிறானோ அந்த இடமே எனக்கு சொர்க்கம். .

நமது வள்ளலார் போதித்த பலவும் குரு நானக் போதனைகளோடு ஒத்துப் போகின்றன.

நானக்கின் சீடர்கள் தனி மதம் ஆகிப் போனார்கள். வள்ளலார் சீடர்கள் இந்து மத வளையத்துக்குள் இருந்து வெளியே வர முடியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்.

இறை நாமத்தை ஜபிப்பது, கடமை ஆற்றுவது தொண்டு செய்வது இவைதான் சீக்கிய மதத்தின் சாரம்.

வடிவமில்லா இறைவன் தன் படைப்புகள் வழியே காட்சி யளிக்கிறான். இறைவனை ஆராதனை களாலும் பலிகளாலும் திருப்திப் படுத்த முடியாது. மூட நம்பிக்கைகள்  சிலை வழிபாடுகள் எல்லாம் பொருள் அற்றவை.

ஆனால் நடைமுறையில் சீக்கியர்கள் இந்து கடவுளர்களை வணங்க மறுப்பதில்லை.

பெரும்பாலும் இந்துக் கடவுளர் பெயர்களையே வைத்துக் கொள்கிறார்கள்.

நாங்கள் இந்துக்கள் இல்லை என்று ஒரு இயக்கம் தோன்றினாலும் அது வலுப்  பெறவில்லை.

இன்றும் இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே சீக்கிய மதம் பாவிக்கப்  படுகிறது.

போற்றத் தக்க குரு நானக் மக்களின் மனங்களில் நீடு  வாழ்வார்.

ரெயிலில் பிடிபட்டது ஆட்டுக்கறியே! நாய்க்கறி அல்ல??!! ஆய்வறிக்கை தெளிவுபடுத்தியது??!!

கெட்டுப் போன இறைச்சி ஜோத்பூரில் இருந்து சென்னைக்கு வருகிறது  என தகவல் வந்ததை அடுத்து ரயில்வே வாரியம் சார்பில் விசாரனை முடுக்கிவிடப்பட்டது .

மீன் இறைச்சி என ஏற்றுமிடத்தில் பதிந்திருக்க பறிமுதல் செய்யப்பட்டு ஆராய்ந்த போது  அது வால் நீண்டிருந்ததால் அது நாய்க்கறி என அதிர்ச்சியாக தகவல் பரவி பத்திரிகைகளில் செய்திகள் பரபரப்பாக வெளியாயின.

எல்லாரும் மீம்ஸ் தடபுடலாக வேடிக்கை காட்ட ரண களமானது இறைச்சி சாப்பிடுவோர் கூட்டம்.

அனுப்பியவர்  சென்று சேர வேண்டிய முகவரிகள்  தெளிவாக இல்லை என்பதால் ரெயில்வே பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு இறைச்சி பெறுவதாக இருந்த முகவர் ஜெய்சங்கர் என்பவர் கைது செய்யப் பட்டார்.

ஆனால் அவர்கள் தொடக்கம்  தொட்டே நாங்கள் ஆட்டு இறைச்சிக்குத் தான் ஆர்டர் கொடுத்திருந்தோம் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

இறைச்சி சென்னை எழும்பூர் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப் பட்டு ஆய்வுக்கூடத்தில் பரிசோதிக்கப் பட்டது.

இன்று வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் பறிமுதல் செய்யப் பட்ட இறைச்சி ஆட்டு இறைசியே என்றும் நாய் இறைச்சியல்ல என்றும் தெளிவு படுத்தப் பட்டிருக்கிறது.

இதுவறை  மட்டன் பிரியாணி  சாப்பிட்டவர்கள் நிம்மதி அடைந்திருக்கலாம்.  ஆனால் இறைச்சியை அனுப்பிய பார்சல் அதிகாரிகள் ஜோத்புரில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

அவர்களால் தான் இத்தனை களேபரங்கள் !

இனிமேல் ஆவது இதுபோன்ற செய்திகளை வெளியிடும்போது மக்களின் உணர்வுகள் பாதிக்கப் படும் என்பதால் உண்மையை உறுதி செய்து கொண்டு வெளியிடுவது நல்லது.

ராஜஸ்தானின் செம்மறி வகை ஆடுகளுக்கு நீண்ட வால் இருக்கும் என்பதுதான் இத்தனை சந்தேகங்களுக்கும் அடிப்படையாக இருந்திருக்கிறது.

ரெயில்வே காவல்துறை விழித்துக் கொள்ளட்டும்.