Home Blog Page 56

சட்ட மன்றத்தை கலைத்த பாஜக முடிவால் மேலும் சிக்கலானது காஷ்மீர் பிரச்னை??!!

2020 ஆண்டு அக்டோபர் மாதம் வரை இருக்கும் காஷ்மீர் சட்டமன்றத்தின் ஆயுட்காலம் திடீர்  என்று பாஜக-வால் முடித்து வைக்கப் பட்டிருக்கிறது.

யாரவது இதை எதிர்த்து நீதிமன்றம் போகக் கூடும். நீதிமன்றம் முடிவை நிறுத்தி வைக்க அதிகம் வாய்ப்பும் உள்ளது.

ஏன் இந்த முடிவு.? எதிரிக் கட்சிகளான மெகபூபா முக்தியின் கட்சியும் தேசிய மாநாட்டுக் கட்சியும் காங்கிரசும் ஒன்று சேரும் என்று  பாஜக எதிர்பார்த்திருக்கவே முடியாது. இந்த மூன்று கட்சிகளுக்கும் பெரும்பான்மை உள்ளது. ஆட்சி அமைக்கும் உரிமையை கோரி மெகபூபா கொடுத்த செய்தி பேக்ஸ் மெஷின் வேலை  செய்யாததால் தெரியவில்லை என்று ஆளுநர் கூறியிருப்பது நகைப்புக் குரியது.

பி டி பி – பாஜக கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுலாக்கப் பட்டு இருக்கிறது.

காஷ்மீரை அடித்தளமாக கொண்ட இரண்டு கட்சிகள் ஒன்று சேர்ந்து  விட்டால் நிலைமையை மோசம் ஆக்கும் என்று மத்திய அரசு நினைத்தால் மிகவும் தவறு.  இப்போது மீண்டும் அவர்கள் ஒன்றிணைந்து வேலை செய்வதை எப்படி தடுப்பீர்கள்?

சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களின்போது பொதுமக்கள் பங்களிப்பு அதிகம் ஆவது நல்ல சமிக்ஞை ஆக பார்க்கப் பட்டது.

எப்போது தேர்தல் நடத்தினாலும் இதே கூட்டணி தொடர்ந்தால் அப்போது பாஜக என்ன செய்ய முடியும்?

இந்திய ராணுவத்தினர் மீது கல்லெறிந்து தாக்கும் பொதுமக்கள் மிக அதிகமாக இருக்கும் இடம் காஷ்மீர்.

ஒரு ராணுவ வீரன் ஆயுதங்களுடன் தெருவில் நடந்து  செல்லும் போது பொதுமக்கள் கூடி நின்று கேலி பேசுவதும் சில இளைஞர்கள் அந்த ராணுவ வீரனை கையால் தள்ளி  சீண்டுவதும் சகிக்க முடியாத காட்சிகள். அந்த ராணுவ வீரன் மனம் என்ன பாடு பட்டிருக்கும்.? நாடு காக்க உயிரை பணயம் வைத்து ஆயுத போராட்டம் நடத்தும் அந்த வீரன் யாருக்காக போராடுகிரானோ அவர்களே அவனை அவமதிப்பது சகிக்க முடியாதது.

ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களை தன் வசம் கொண்டு வரும் நடவடிக்கைகளில் இறங்காமல் மக்களை தனிமைப் படுத்தும் முயற்சியிலேயே இறங்குவது சரியல்ல.

எத்தனை காலத்துக்கு இப்படி ராணுவத்தை குவித்து வைத்துக் கொண்டு அவர்களை கட்டுப் படுத்த முடியும்?

இந்த முடிவு மக்களை இன்னும் பிளவுபடுத்தவே உதவும்.

யார் சேர்ந்தாலும் ஆட்சி அமைக்கும் உரிமையை அவர்களுக்கு ஆளுநர் வழங்கி இருக்க  வேண்டும் .

மெகபூபா-பாஜக கூட்டணி ஏற்பாடே ஒரு பொருந்தாக்  கூட்டணி தான். அவர்களும் இரண்டு ஆண்டுகளுக்கு  மேலாக ஆட்சியில் இருந்து விட்டார்களே?

நீதிமன்றம் தலையிட்டு ஆளுநர் முடிவின் மீது ஒரு குட்டு வைத்துத்தான் மாற்று அரசு   அமைய  வேண்டும் என்றால் அதை யார் தடுக்க முடியும்?

மீலாது நபி திருநாள் சிந்தனைகள்!!!!

இன்று மீலாது திருநாள். அதாவது நபிகள் நாயகம் பிறந்த நாள்.

ஏசு கிறிஸ்து பிறந்து 571 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்தவர்.

முகம்மது பிறந்த மதம் இஸ்லாம் இல்லை.

ஆதாம், இப்ராஹீம், மோசஸ், ஜீசஸ், வழியில் முகம்மதுவும் ஒரு தூதர். ஆனால் இஸ்லாமியர்களுக்கு இறுதித் தூதர்.

முரட்டு அரபு குரைஷி வம்சத்தை சேர்ந்தவர்.  அந்த மக்களுக்கு நல்வழி காட்ட இறைவனால் அனுப்பப்  பட்ட இறுதி  தூதர்.

நாற்பது வயது வரையில் கல்வி கற்காமல் இருந்தவரை இறைவன் தூதராக தேர்ந்தெடுத்து அவருக்கு மறையை  ஓதியது அவன் கருணை.

எந்த மதமும் மக்களை வாழ வைக்கத்தான் பிறந்தன. ஆனால் பிறந்த பின் அந்த மதங்கள் மக்களை வாழ வைக்கிறதா? அழிக்கிறதா?

அன்பையும், அறத்தையும் போதித்த இறைவன் வன்முறையை அறிவுறுத்தி இருப்பானா?

இறைவனுக்கு ஏற்புடையதாக இருக்காத ஒன்றை அவன் பெயராலேயே செய்கிறார்களே அவர்கள் அந்த இறைவனின் பெயரை சொல்ல தகுதி படைத்தவர்களா?

எந்த முஸ்லிமும் ஐம்பெருங் கடமைகளை நிறைவேற்றுவதில் உறுதி பூண்டால் மட்டும் போதாது.

இஸ்லாத்துக்கு எதிரான எதை செய்தாலும் இறைவன் அவர்களுக்கு தண்டனை கொடுப்பான்.  அதுவும் இஸ்லாத்துக்கு எதிரானது என்பதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்?

இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் செய்யும் கொலைகளை, அழிவுகளை , கொடுமைகளை நினைத்ததுதான் இந்த சிந்தனை.

ரமலான் மாதத்தில்  போரிடுகிறார்கள், மசூதிக்குள் வெடிகுண்டு வைத்து கொல்கிறார்கள், முஸ்லிம்கள் ஒருவர்க்கொருவர் கொன்று குவித்துக்கொள்கிரார்கள் இதெல்லாம் இஸ்லாத்துக்கு ஒப்புமை  உடையதா?

ஏக இறைவனை நம்புகிறவர்கள் அவர்களுக்குள்  புகுந்து  விட்ட பல பிரிவுகள் தங்களுக்குள் சண்டை இடாமல் வாழவே முடியாதா?

முஸ்லிம்கள் சுய  பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நாள் இந்த நன்னாள்.

இறைவன் அவர்களுக்கு நற்சிந்தனையை அருள்வானாக!!!!

கஜா புயல் விளைத்தது சோகம்; மாநில அரசு விதைத்தது அவலம்; மத்தியஅரசு காட்டியது அலட்சியம்??!!

இயற்கைப் பேரிடர் களங்களில் அரசியல் செய்வது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

ஆனால் அதற்காக அதிகாரத்தை கையில்  வைத்திருப்பவர்கள் காட்டும் அலட்சியத்தையும் அவலத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டுமா?

பத்து மாவட்ட மக்களின் துயரங்கள் எப்போது தீரும் எனத் தெரியவில்லை. தொடக்கத்தில் யாரும் அரசியல் செய்யாமல் அதிகாரிகளின் முயற்சிகளை பாராட்டவே செய்தார்கள்.

ஆனால் அடுத்தடுத்து அமைச்சர்களும் முதல் அமைச்சரும் நடந்து கொள்ளும் முறை விமர்சனத்தை தவிர்க்க முடியாததாக்கி விட்டது.

மூன்று நாள் கழித்து முதல் அமைச்சர் சில அமைச்சர்கள் புடை சூழ விமானத்திலும் ஹெலிகாப்டரிலும் சென்று குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் யந்திரத்தனமாக நிவாரணங்கள் வழங்கி விட்டு திரும்ப வருகிறார்.

அங்கேயே முகாமிட்டு இருக்கும் அமைச்சர்களுக்கு  உள்ளூர் மக்கள் எந்த மரியாதையையும் தர மறுக்கிறார்கள்.  ஓ.எஸ்.மணியன் சுவர் ஏறிக்குதித்து ,,காவலரின் இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்புகிறார். திண்டுக்கல் சீனிவாசன் இன்னும் நான்கு புயல் வந்தால் நல்லது. ஏன் என்றால் அப்போதுதான் ஏறி குளங்கள் நிரம்பும் என்கிறார். உதயகுமார் மக்கள் போராட்டங்கள் தூண்டி விடப்பட்டவை என்கிறார். மக்களை இவர்கள் புரிந்து கொள்ளவே மாட்டார்களா?

துயரத்தில் இருப்பவர்கள் போராடத்தான் செய்வார்கள். அதை பொறுத்துக் கொள்ள வேண்டாமா? உள்ளூர் அமைச்சர் ஒரத்தநாடு வைத்திலிங்கம் மக்களால் கேள்வி கேட்கப் பட்டு ஆத்திரமடைந்து சத்தம் போடுகிறார்.

இதெல்லாம் மக்களால் நேசிக்கப் படும் அரசில் நடக்குமா?

விபத்தால் பதவிக்கு வந்தவர்கள் விபத்துக்களை பேரிடர்களை துடைக்க முடியாமல் தடுமாறுகிறார்கள்.

ஒரு லட்சம்  மின் கம்பங்கள் சாய்ந்து விட்டன, ஒரு கோடி தென்னைகள்  விழுந்து விட்டன, பல லட்சக்கணக்கில் வாழைகள் சாய்ந்தன,   வீடுகள் உடைமைகளுடன் நாசம், குடிநீர் தட்டுப் பாடு, உடுத்த உடைகள் இல்லை, பல நூறு கிராமங்களில் பத்து மாவட்ட மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து வாடுகின்றனர். அவர்கள் பட்டினி கிடந்து அரசின் கவனத்தை ஈர்க்க ரோட்டுக்குவந்தால் அவர்கள் எதிர்க் கட்சிகளால் தூண்டி விடப் படுகிறார்கள் என்று  குற்றச்சாட்டு.

மொத்தமாக எவ்வளவு இழப்பு என்பதை இனிதான் கணக்கு பார்க்க வேண்டும்.  மாநில அரசின் நிதி ஆதாரத்தில் மட்டுமே இந்த இழப்பை ஈடு கட்ட முடியாது.

தனியார் நிறுவனங்கள் தாமாக முன்வந்து துயர் துடைக்க அரசின் பக்கம் நிற்கின்றன.

திமுக முதல் முதலாக கட்சி சார்பில் ஒரு கோடியும் சட்ட மன்ற பாராளுமன்ற உறுப்பினர் சம்பள வகையில் ஒரு கோடியும் ஆக இரண்டு கொடி அளவில் நிதி அளித் திருகிறது.   நடிகர்கள் சிவகுமார் குடும்பம் ஐம்பது லட்சம், விஜய்சேதுபதி இருபது ஐந்துலட்சம் ஊடகங்கள் உதவிப் பொருட்கள் சேகரித்து அனுப்புவது என்று உதவிக் கரங்கள் நீளுகின்றன .

ஆனால் இதுவரை மத்திய அரசு எந்த அறிவிப்பையும் செய்ய வில்லை.   எல்லாம் முடிந்து சாககாசமாக வந்து  பார்த்து இழப்பில் இரண்டு சதம் ஈடுகட்டுவார்கள்    . முந்தைய அனுபவம் பார்த்தோமே!

நாளை பிரதமரை பார்த்தபின் முதல்வர் என்ன அறிவிப்பு  வெளியிடுகிறார் என்று பார்ப்போம்.

ஆனால் தனக்கு கிடைத்த இந்த அரிய வாய்ப்பை முதல்வர் பழனிசாமி பயன்படுத்திக் கொள்ள தவறி  விட்டார் என்பதே பொது மக்களின் கணிப்பு.

ஒரு சில அமைச்சர்கள் கடுமையாக உழைத்தார்கள் என்பது உண்மைதான் என்றாலும் அவர்களிடம் என்ன அதிகாரம் இருக்கிறது?

இழப்பீடு கொடுப்பதற்கு கணக்கீடு செய்ய கால அவகாசம் வேண்டும் என்பதை ஒப்புக் கொள்ளலாம்.

ஆனால் பசியால் துடிப்பவர்களுக்கு உணவு கொடுப்பதற்கு அவகாசம் கேட்பவர்கள் அதிகாரத்தில் இருப்பதற்கு தகுதி இல்லாதவர்கள்.

3 மாணவிகளை எரித்துக் கொலை செய்த 3 அதிமுக-வினர் விடுதலை??!! 7 பேர் விடுதலையில் அரசு காட்டும் அலட்சியம்.??!!

2000 ஆண்டில் செல்வி ஜெயலலிதாவுக்கு பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் சிறை தண்டனை வழங்கப் பட்டது.

அதை எதிர்த்து தர்மபுரியில் அதிமுகவினர் வேளாண் பல்கலைக்கு சொந்தமான பேருந்தை எரித்தனர். அப்போது அதில் இருந்த மாணவிகள் மூன்று பேர் ஹேமலதா காயத்ரி கோகிலவாணி தீயில்  கருகி மாண்டனர்.

அவர்களுக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த மரண தண்டனை உச்ச நீதி மன்றத்தில் ஆயுள் தண்டனை ஆக குறைக்கப் பட்டது.

இப்போது அவர்களின் எஞ்சிய தண்டனை காலம் முடியும் முன்பே தமிழக அரசு எம் ஜி ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பத்து  ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போர்க்கு விடுதலை அளித்துள்ளது.   அதற்கு முதலில்  அனுமதி மறுத்த ஆளுனர் பின்னர் என்ன நடந்ததோ அனுமதி அளித்தவுடன் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்  பட்டிருக்கிறார்கள்.

இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

இதே கடமை உணர்ச்சியை ராஜீவ் கொலை வழக்கு  குற்றவாளிகள் ஏழு பேரின் விடுதலையில் தமிழக அரசு காட்டாதது ஏன்?

இன்று கூட வேல்முருகன் ஓர் சைக்கிள் பேரணி ஒன்று நடத்தி இருகிறார்.

உச்ச நீதிமன்றம் ஆளுநர் முடிவு எடுக்கலாம் என்று உத்தரவிட்ட பின்னும் ஏன் தாமதிக்க வேண்டும்.?

அதுவும் மாநில அரசு பரிந்துரையை அரசியல் சட்ட பிரிவு 161 ன் கீழ்   ஆளுநர்  ஏற்றுக்  கொண்டுதான் ஆகவேண்டும்.

இதற்கிடையில் மத்திய அரசு ஆளுநர் அனுப்பிய ஏழு பேர் விடுதலை பற்றிய  கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமலேயே அனுமதி மறுத்து விட்டதாக தகவல் வருகிறது.  எது உண்மை.?

ஏழு பேர் விடுதலை ஒரு புறம்.   மற்றொரு புறம் மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு ஆளுநர் மூலமாக தலையிட முடியுமா என்ற கேள்வி .

விடை  விரைவில் தெரிந்தே ஆக வேண்டும்.!!!

ஏசுவையும் அல்லாவையும் பாடினால் கர்நாடக இசை தீட்டுப்பட்டு விடுமா? இந்து அமைப்புகள் எதிர்ப்பு ஏன் ?

கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தனது இசைக்கச்சேரிகளில் ஏசுவையும் அல்லாவையும் போற்றி சில பாடல்களை பாடுவதை வழக்கமாக வைத்திருந்தாராம்.

அதற்கு இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

டெல்லியில் இந்திய விமான போக்குவரத்து அமைப்பு ஆதரவில் நடைபெற இருந்த டி.எம்.கிருஷ்ணாவின் இசைக்கச்சேரியை எதிர்த்து இந்து அமைப்புகள் வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்க அவரது நிகழ்ச்சி அல்ப காரணங்களை சொல்லி நிறுத்தப்பட்டது.

பிறகு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலையிட்டு அரசின் ஆதரவோடு  அவரது நிகழ்ச்சி நடை பெற்றிருக்கிறது.

அந்த நிகழ்ச்சியில் ஏசுவைப்பற்றி  ஒரு மலையாளப் பாடலையும் அல்லாவைப் பற்றி ஒரு தமிழ்ப் பாடலையும் காந்திஜியின் பஜனைப்  பாடல், துக்காராம் பாடல், கன்னட தத்துவ அறிஞர் பசவா, பெருமாள் முருகனின் எழுத்துக்கள் போன்ற கருத்து சுதந்திரம் பற்றி எல்லாம் பாடியிருக்கிறார்.

ஏன் கர்நாடக இசையில் ஏசுவையும் அல்லாவையும் பாடினால் இசை தீட்டுப் பட்டு  விடுமா?

ஏதோ கர்நாடக இசை இந்துக்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது போலவும் மற்ற மதங்களின் கடவுளர்களை  பாடினால் அது இந்து மதத்துக்கு செய்யும் துரோகம் என்பது போலவும் அவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

தங்களுக்கு பிடிக்காதவர்களை தேச துரோகிகள் என்று குற்றம் சாட்டுவது அவர்களின் வழக்கமாகவே உள்ளது.

டி.எம்.கிருஷ்ணாவின் இந்த சர்வ மத பாடல் பாடும் உரிமையை இந்து என் ராம் அவரது சகோதரர் மியுசிக் அகாடெமி தலைவர் என் என் முரளி போன்றோரும் பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் போன்றோரும் ஆதரவு  அளித்திருக்கின்றனர்.

பொதுவாகவே பார்ப்பனர்கள்  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அந்த வகையில் இல்லாமல் இந்து ராம் போன்றோர் சில சமயங்களில் மனித உரிமைகள் காப்பாற்ற குரல் கொடுத்திருக்கிறார்கள் .

டி.எம்.கிருஷ்ணா விஷயத்திலும் நியாயத்திற்காக குரல் கொடுத்திருக்கும் அனைவரையும் பொதுமேடை பாராட்டுகிறது.

அன்புமணி ராமதாசின் பல்டி; ஏதாவது ஒரு அணியில் சேருவோம்??!!

இரண்டு திராவிட கட்சிகளோடும் இனி இந்த காலத்திலும் கூட்டணி கிடையாது என்று மருத்துவர் ராமதாஸ் கூறி வந்தார்.

அதையே அன்புமணியும் வழிமொழிந்து கூறிவந்தார்.

எல்லா துன்பங்களுக்கும் இரண்டு திராவிட கட்சிகளே காரணம் என்பது அவர்களின் கண்டுபிடிப்பு.

கடந்த காலத்தில் இரண்டு கட்சிகளுடன் கூட்டணி வைத்துதான் பதவிகளை அடைந்தார்கள் பா ம க வினர். தனித்து நின்று எந்த வெற்றியையும் பெற அவர்களால் முடியவில்லை.

இந்த உண்மை இப்போதுதான் அவர்களுக்கு உறைத்து இருக்கிறது.

‘ அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று மற்ற கட்சிகள் நினைக்கலாம். நாங்கள் தமிழ் நாட்டின் இழந்த பெருமையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதே எங்கள் பணி. இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் எந்த தேர்தல் வந்தாலும் நாங்கள்  ஏதாவது ஒரு அணியில்  இருப்போம். ஆனால் எந்த கட்சியுடன் கூட்டணி அமையும் என்பது பாராளுமன்ற தேர்தலின் போதோ அல்லது அதனுடன் இணைந்த சட்ட மன்ற தேர்தலின் போதோ தெரியும். தேர்தல் அறிவிக்கப் பட்ட பிறகே இறுதி முடிவு எடுக்கப் படும் ‘ என்று அன்புமணி ராமதாஸ் ஓர் ஆங்கில பத்திரிகையின் சிறப்பு பேட்டியில் கூறியிருக்கிறார்.

இப்பொது மருத்துவர் ராமதாஸ் அன்புமணியின் கருத்தை ஏற்றுத் தானே ஆக வேண்டும்.

தினகரனுடன் பாஜக-வுடனும் கூட்டணி பற்றி பாமக பேசி வருவதாக முன்பே செய்திகள் கசிந்தன.

இன்று வரை திமுக அல்லது அதிமுக என்பதுதான் பொது மக்கள் கருத்தாக இருந்திருக்கிறது. அதை மாற்ற முடியாது.

கருத்துக் கணிப்புகளிலும் முதல்வர் வேட்பாளர் பட்டியலில் மு.க.ஸ்டாலின் அதிக வாக்குகள் பெற்று முன்னணியில்  இருக்கிறார்.

தனித்து நின்று எந்த கட்சியும் வெற்றி பெற முடியாது என்பது அன்புமணியின் கருத்து. இதுதான் பல்லாண்டுகளாக நிலவி வரும் பொதுக் கருத்தாயிற்றே.

பிடிவாதமாக தனிக்கச்சேரி தான் நடத்துவோம் என்று நிற்காமல் நடைமுறை சாத்தியம் பற்றி சிந்திக்கத் தொடங்கியது நல்லதே.

வெற்றியைத் தராமல் இனி கட்சி நடத்த முடியாது என்பதை இரண்டு மருத்துவர்களும் புரிந்து கொண்டால் சரி.

எதிர்க்கட்சிகளை மிரட்ட இனி சிபிஐ உதவாது?! ஆந்திர, மே.வங்க அரசுகள் முடிவால் அதிர்ச்சி?! வாழ்க மாநில சுயாட்சி!!

சிபிஐ என்ற விசாரணை அமைப்பு டெல்லி சிறப்பு காவல் துறை சட்டம்  1946 ல் உருவாகப்பட்டது.

அது அந்த யூனியன் பிரதேச எல்லைக்குள் தான் அதிகார வரம்பு படைத்தது. மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்கள் அதிகாரங்கள் வழங்கினால் மட்டுமே சிபிஐ விசாரிக்க முடியும்.

ஆனால் இதுநாள் வரை எல்லா மாநிலங்களிலும் அந்த ஒப்புதலை பெற்றுத்தான் சிபிஐ  தன் அதிகார வரம்பை இந்தியா முழுமைக்கும் விரிவு படுத்தியுள்ளது.

மத்திய அரசு சிபிஐ அமைப்பை தன் கைப்பாவையாக பயன்படுத்தி தன் அரசியல் எதிரிகளை பந்தாடவும் மிரட்டவும் பயன் படுத்தி  வந்தது.

இந்த நிலையில் தான் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிபிஐ அமைப்பிற்கு கொடுத்திருந்த தடையில்லா ஒப்புதலை திரும்ப பெற்றிருக்கிறார். அதாவது இனி சிபிஐ ஆந்திராவில் விசாரணை செய்யவேண்டுமென்றால் ஒன்று மாநில அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது உயர் நீதி மன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ உத்தரவிடவேண்டும்.

தானாக முன்வந்து யார் மீதுவேண்டுமானாலும் வழக்கு போடும் வேலையை இனி  சிபிஐ செய்ய முடியாது.

சிபிஐ அமைப்பிற்குள் நடக்கும் பதவி சண்டை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டு வருகிறது. இயக்குனரும் துணை இயக்கனரும் ஒருவருக்கொருவர் கோடிகளில் லஞ்சம் வாங்கி விட்டார்கள் என்று குற்றம் சுமத்திக் கொள்கிறார்கள்.

இதில் மத்திய அரசு பஞ்சாயத்து செய்ய முயற்சித்தும் பலன் இல்லை. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது சிபிஐ இன் யோக்கியதை.

முதலில் உங்கள் பிரச்னையை தீர்த்துக்  கொண்டு வாருங்கள் பிறகு  மற்ற மாநிலங்களை பார்க்கலாம் என்று சொல்லி விட்டார் நாயுடு. அவரைப் பின்பற்றி மமதா பானர்ஜியும் மே வங்க மாநிலத்திலும் கொடுக்கப்பட்டிருந்த பொது அனுமதியை திரும்ப பெற்றுக்  கொண்டு  விட்டார். சிபிஐ தன் நம்பிக்கைத் தன்மையை இழந்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

நடப்பில் இருக்கும் விசாரணைகள் மட்டும் தொடரலாம்.

இரு மாநிலங்களும் ஊழல் வழக்குகளுக்கு பயந்து சிபிஐ-யை தடுக்கிறார்கள் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி குற்றம் சாட்டுகிறார். தெலுகு தேச முக்கியப் புள்ளிகள் மீது சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு மூன்றும் விசாரணைத் தாக்குதல் தொடங்க இருப்பதை தெலுகு தேசம் மோப்பம் பிடித்திருக்கலாம். மோடி  மட்டும் அரசியல் செய்யலாமோ ?

ஏற்கெனெவே 1998-ல் கர்நாடக முதல்வர் ஜெ எச் பாட்டில் சிபிஐ க்கு கொடுத்திருந்த அனுமதியை ரத்து  செய்திருக்கிறார். அது இன்றளவும் தொடர்கிறது.

ஆந்திர அரசின் முடிவைப் பொறுத்த வரையில் அது சிபிஐ மட்டுமல்ல பிற துறைகள் தொடர்பாகவும் நடக்கும் விசாரணைகளையும் பாதிக்கும் எனத் தெரிகிறது. அதாவது ஆட்கடத்தல், ஆயுதங்கள், அணுசக்தி, கலைப்பொருட்கள், கலால், பினாமி செயல்பாடுகள், நிறுவனங்கள், காப்பீடு, போன்ற பல துறைகளிலும் எந்த மத்திய அமைப்பும் மாநில அரசின் ஒப்புதல் இன்றி நடவடிக்கை எடுக்க முடியாது.

சரியான சட்ட ஆலோசனை பெற்ற பிறகே இந்த முடிவை நாயுடு எடுத்துள்ளார்.

வேறொரு கோணத்தில் இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.

திமுக-வின் கொள்கை மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி.

அது அகில இந்தியாவுக்கும் பரவும் நல்ல நேரமாக இது இருக்கிறது.

மத்திய அரசில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் இது ஜனநாயக நாடுதானா என்ற ஐயத்தை ஏற்படுத்துகின்றன.

மத்திய மாநில அதிகாரப் பங்கீடுகள் இங்கே சரிவர வரையறை செய்யப்படவில்லை.

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மாநில அரசின் அதிகாரங்களை பிடிங்கி தன் வசம் வைக்கவே மத்திய அரசு விரும்புகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தொடங்கப் படும் ஒரு மாநில சுயாட்சி இயக்கமாகவே நாம் ஆந்திர, மே வங்க அரசுகளின் நடவடிக்கைகளை நாம்  பார்க்கிறோம்.

மாநிலங்கள் இது போன்று சுயாட்சித் தன்மையுடன் இயங்கும் ஒரு அமைப்பை செயல் படுத்த முடியுமா ?  ஒரு மாநில  தேர்தல் கமிஷனை கூட சுயாட்சி பெற்ற அமைப்பாக செயல் படுத்த நம்மால் முடியவில்லையே? உண்மைதான். ஆனால் முயற்சியை விட்டு  விட முடியுமா?

மற்ற மாநிலங்களும் இந்தப் போக்கைத் தொடர வேண்டும்.

வெல்க மாநில சுயாட்சி கோரிக்கைகள்!!!

குட்கா ஊழல் குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் பெயர்கள் இல்லை.??!!

பெரிதாக பேசப்பட்ட குட்கா ஊழல் குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் , டிஜிபி.ராஜேந்திரன் முன்னாள் கமிஷனர் ஜார்ஜ்  துணை கண்காணிப்பாளர் மன்னர் மன்னன் ஆகியோர் பெயர் இடம் பெறவில்லை.

நாற்பது இடங்களில் சோதனை நடந்தது. மாநில காவல் துறையான டிவிஏசி  விசாரணை நடத்தினால் உண்மை வெளி வராது என்றுதான் உயர்நீதி மன்றம் சி பி ஐ விசாரனைக்கு உத்தரவிட்டது.

இப்போது குட்கா வியாபாரி மாதவராவ், சீனிவாசராவ் ,உமாசங்கர்குப்தா ,கலால் வரித்துறை  அதிகாரி பாண்டியன் , உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில் முருகன் ,சிவகுமார் ஆகிய ஆறு பேர் மட்டும் கைது செய்யப் பட்டு ஜாமீன் கிடைக்காமல் சிறையில் உள்ளனர்.

கோடிக்கணக்கில் வரவு செலவு செய்யப் பட்ட ஊழல் புகாரில் கைப்பற்றப் பட்ட டைரியில் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப் பட்டது என்று குறிக்கப் பட்டு விசாரணை துவங்கியது. அதில் கண்ட பெரிய மனிதர்களின் பெயர்கள் தான் அப்போது மக்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிறகு என்ன நடந்தது? சிபிஐ தலைமையிலேயே பெரிய அதிகாரப் போட்டி நடந்து வருகிறது.  அதனால் இன்று இருக்கும் சிபி ஐ தலைவரால் எந்த முக்கிய முடிவும் எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்.

அதற்குள் இப்படி அரைகுறையாக முதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதுதான் இறுதியானது என்கிறார்களா? அப்படி இருந்தால் இது மிகப்பெரிய ஏமாற்றம்.

சாட்சியங்கள் அடிப்படையில் தான் வழக்குப்புனைய முடியும். அந்த வகையில் சி பி ஐ எவரையும் தப்ப விடாது என்று நம்புவோம். நீதிமன்ற தலையீட்டில் நடைபெறும் வழக்கு இது என்பதால் தவறு நிகழ இடம் தர மாட்டார்கள் எனவும் நம்புவோம்.

ஆனால் நடப்பவைகள் அந்த நம்பிக்கையை தோற்றுவிப்பவையாக தோன்றவில்லை.

நிர்மலாதேவிக்கு பிணை வழங்க மறுப்பதன் பின்னணி?! வாய் திறப்பார் என்ற பயமா?

கொலை வழக்குகளில் கூட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துவிட்டால் அல்லது மூன்று மாதங்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யா விட்டால் பிணையில் விடுவது வழக்கமாக இருக்கிறது.

ஆனால் அருப்புகோட்டை தேவாங்கர் கலை கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவி  , துணை பேராசிரியர் முருகன், பிஎச்டி மாணவர் கருப்பசாமி ஆகிய மூவருக்கும் மட்டும் தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டு அவர்கள் சிறையில் இருந்து கொண்டே வழக்கு விசாரணையை சந்திக்கட்டும் என்று நீதிமன்றமே கருதுகிறது என்பது சற்று நெருடலாக இருக்கிறது .

அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள்  370 (1) (3) ,120(b) 354A, மற்றும் விபசார ஒழிப்பு சட்டம்  போன்ற பல சட்டப் பிரிவுகளில் குற்றப்  பத்திரிகை தாக்கல் ஆகி இருக்கிறது.

அவர்களுக்கு சென்னை உயர்நீதி மன்றம் பிணை மறுத்து விட்டதால் அவர்கள் உச்ச நீதிமன்றத்துக்கு பிணை கேட்டு செல்ல விருப்பதாக தகவல்.

விருதுநகர் மாவட்ட மகளிர் நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற இருக்கிறது.

மாணவிகளை தவறாக வழி நடத்த முயற்சித்த குற்றம் சாதாரணமானதல்ல என்பதும் குற்றம் நிருபிக்கப் பட்டால் அவர்கள் கடுமையாக தண்டிக்கத் தக்கவர்கள் என்பதும் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியாயம்தான்.

ஆனால் இதில் மாநில ஆளுநர் பந்வாரிலால் புரோஹித் சம்பந்தப் பட்டிருப்பதுதான் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. அவசர அவசரமாக அவர் சந்தானம் தலைமையில்  ஒரு நபர் கமிட்டியை நியமித்து ஒரு அறிக்கையை பெற்று வெளியிட முயற்சித்ததுதான் சந்தேகத்தின் முதல் விதை. அதை நீதிமன்றமே ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை.

உச்சநீதி மன்றம் நிச்சயம் பிணை வழங்கும் என நம்பப் படுகிறது.  கொடுத்தால் சென்னை உயர் நீதிமன்றம் பிணை தர மறுத்தது தவறு என்றாகி விடும்.

எல்லாருக்கும் ஒரு நீதி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஒரு நீதியா என்ற கேள்விக்கு நீதித்துறை என்ன பதில் சொல்லும்?

எதையோ மறைக்க முயற்சிக்கிறார்கள் என்ற கேள்வியை அப்படியே விட்டு விடுவார்களா?

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அவர்களுக்கு பிணை மறுப்பது சட்டத்தின் படியும் வேறு வழக்குகளில் கடைப்பிடிக்கப் படும் நடைமுறைகளின் படியும் தவறு என்றே தோன்றுகிறது.

விசாரணைக்கு பிறகு குற்றம் நிரூபணம் ஆனால் அவர்களை தூக்கில் வேண்டுமானாலும்  போடுங்கள்.  அதுவரை எல்லா வழக்குகளிலும் என்ன நடைமுறை பின்பற்றப் படுகிறதோ அதையே அவர்களுக்கும் பின் பற்றி பிணை வழங்குவதை  பொறுத்து மட்டும் கடைப்  பிடிப்பதுதான் சரி என்பதே நமது கருத்து.

உச்ச நீதி மன்றம் என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்?!

20 தொகுதிகளில் இடைத்தேர்தல் ஏன் இல்லை? -தினகரனும் தேர்தல் கமிஷனும் நடத்தும் அரசியல்??!

20 தொகுதிகளை காலியாக வைத்துகொண்டு இங்கு ஒரு ஆட்சி நடக்கிறது. இது எப்படி  மக்களாட்சி ஆகும்.?

எல்லாருக்கும் தெரிந்தே ஒரு மைனாரிட்டி ஆட்சி நடக்கிறது. யாரும் எதுவும் செய்ய முடியவில்லை.

மோடியின் மத்திய அரசு எப்போது விரும்புகிறதோ அப்போதுதான் தேர்தல் வரும் .

என்ன விசித்திரங்கள்?! காரணம் சட்டமோ நீதிமன்றமோ நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தவர்கள் இன்று ஆட்சியில் பங்குதாரர்கள். அப்படி வாக்களிக்காதவர்கள் சட்ட மன்றத்துக்கு வெளியே.

குறை ஒன்று சட்டத்தில். அல்லது நீதி மன்றத்தில். பாதிப்புக்கு உள்ளாவது மக்களாட்சி.

ஒரே ஒரு நாடாளுமன்ற கூட்டத்தில்தான் கலந்து கொள்ள முடியும் இப்போது கர்நாடகத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் தேர்தெடுக்கப்பட்டிருக்கிற மூன்று உறுப்பினர்கள். ஏன் இடைதேர்தல்  நடத்தினார்கள்?  நான்கு மாத காலத்திற்கு ஒரு எம்.பி யா?

ஆர்.கே.நகர் திருப்பரங்குன்றம் தொகுதிகள் பற்றி வழக்கு இருக்கிறது. அதை எப்போது நடத்துவீர்கள் என்று உயர்நீதி  மன்றம் கேள்வி எழுப்பியிருகிறது.

மற்ற  18  தொகுதிகள்  பற்றி நீதிமன்றம் கேட்க முடியாது.  ஏன் என்றால் தகுதி நீக்கம் செய்யப் பட்ட தினகரன் அணியை சேர்ந்த  18 பேரின்  தகுதி இழப்பை உறுதி செய்து சென்னை உயர்நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றம் போகப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்களே தவிர அதை தேர்தல் கமிஷன் கருத்தில்  எடுத்துக்  கொள்ளுமா  என்பதில் தெளிவில்லை.

அவர்கள் பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்தார்களே தவிர  தேர்தல் கமிஷனுக்கு தகவல் கொடுத்தார்களா என்பதும் தெரியவில்லை.  18 பெரும் தனித்தனியாக தேர்தல் கமிஷனிடம் கடிதம் கொடுத்தால் தவிர பத்திரிகை செய்திகளை அடிப்படியாக வைத்து அவர்கள் ஒரு  முடிவு எடுக்க மாட்டார்கள். ஏன் என்றால் தேர்தல் கமிஷன் அப்பீல் காலக்கெடு இன்னும்  90  நாட்கள் என்றால் அதுவரை பொறுத்திருப்போம் என்பார்கள். ஏன் தினகரன் அப்படி தகவல் கொடுக்காமல் இருக்கிறார்?  அவருக்கும் இடைதேர்தலில் தீவிர அக்கறை இல்லை. வந்தால் வெற்றி பெறுவோம் என்று சொல்லிக்கொண்டே தொண்டர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கலாம் அல்லவா?

யாராவது ஒரு தகுதி இழப்பு செய்யப் பட்ட எம்.எல்.ஏ உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தால் இடைத்தேர்தல் வராது.

எடப்பாடி பழனிசாமி அரசு நிம்மதியாக மிச்ச காலத்தை ஒட்டி விடும்.

நாடாளுமன்ற தேர்தலில் தான் பாஜக அரசுக்கு கவலை. இங்கே எடப்பாடி ஆண்டால் என்ன வேறு யார்  வந்தால் என்ன? இன்றைய நிலையில் அரசு கவிழ்ந்தால் திமுக வந்து விடும் மு.க.ஸ்டாலின் வந்து விடுவார் என்றால் எப்படி இடைத்தேர்தலை நடத்துவார்கள்?

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏன் நாங்கள் பாஜக வோடு கூட்டணி வைத்தால் என்ன தவறு என்று கேட்கிறார். விதை போட்டாகி விட்டது அல்லவா?

ரஜினி பாஜக-வை பலசாலி கட்சி  என்கிறார். கூட்டணி  சேருவீர்களா என்றால் வரட்டும் பார்க்கலாம்  என்கிறார். இல்லை என்று சொல்ல நா வரவில்லை. ஏன் என்றால் மனதில் காவி இருக்கிறதே?!

ஆக எடப்பாடி-ரஜினி- பாஜக  கூட்டை உறுதி செய்தபின் தான் தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலோடு இடைத்தேர்தல்களை நடத்த மோடி – அமித்ஷா அனுமதிப்பார்கள் .

என்ன செய்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ன? ஏன் என்றால் சதிகள் என்றும் வெற்றி பெற்றதில்லை.