Home Blog Page 57

சந்தேகமில்லாமல் ரஜினி மோடி அடிமையே??!! வெளிக்காட்டிய ரஜினியின் பேட்டி!!!

ரஜினி அரசியலுக்கு  வருவாரா வரமாட்டாரா என்பது இருக்கட்டும்.

வரவே மாட்டார்!     வந்தால் அவர்  மோடி அடிமையாகத்தான் இருப்பார் என்று நேற்று அவர் அளித்த பேட்டியிலேயே தெரிந்து விட்டது.

7  பேர் விடுதலை என்றாலே அது ராஜீவ் கொலை வழக்கு கைதிகள்தான்   என்பதைக்கூட ஊகிக்காமல்      எந்த    7 பேர் என்று அவர் கேட்ட உடனேயே  அவர் எந்த அளவு தமிழக அரசியலில் அக்கறையாக இருக்கிறார் என்பது தெரிந்து விட்டது.

பா ஜ க ஆபத்தான் கட்சியா என்றால் எதிர்க்கிற கட்சிகளுக்கு ஆபத்தான கட்சி என்கிறார்.    மக்களுக்கு  ஆபத்தான கட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்கிறார். உங்கள் கருத்து என்ன என்றால் அதை இப்போது சொல்ல முடியாது. என் கருத்தை இப்போது சொல்ல முடியாது. நான் இன்னும் முழுவதுமாக அரசியலில் இறங்கவில்லை  என்கிறார்.

அன்றாடம் நடக்கும் கூட்டங்கள் பற்றி நான் வெளியே சொல்லிக்கொண்டிருக்க மாட்டேன் . முழுவதுமாக நான் அரசியலில் இறங்கும்போது தெளிவாக சொல்கிறேன் என்கிறார்.

எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்திருக்கிறார்களே என்றால் பத்து பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்து போராடுகிறார்கள் என்றால் யார் பலசாலி ஒருவரா பத்து பேரா என்று கேள்வி கேட்கிறார்.   அயோக்கியன் பலசாலியாக இருந்தால் பலசாலி என்பதற்காக அவனோடு  சேருவீர்களா?     எதிர்ப்பவர்கள் பலவீனமான  பத்து பேர் என்பதற்காக அவர்களோடு சேர மாட்டீர்களா?

யார் வர வேண்டும் என்பது முக்கியமா?  யார் பலசாலி என்பது முக்கியமா?

பா ஜ க வோடு கூட்டணி வைத்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு அதை அப்போது பார்த்துக் கொள்வோம் என்று சொல்லி தான் பா ஜ க விற்கு எதிரானவன் என்று சொல்ல மறுக்கிறார்.

சர்கார் பட பிரச்னை பற்றிகூட ரஜினியின் கருத்து குழப்பம்.   ‘எடுத்த எடுப்பிலேயே தியேட்டரை உடைப்பது பேனரை கிழிப்பது படத்தை நிறுத்துவது சரியல்ல என்றவர் பேச்சு வார்த்தைக்கு பிறகு அப்படி செய்யலாம் என்கிறார்.   பேச்சு வார்த்தை முறிந்தால் அதையெல்லாம் செய்யலாமா?

மொத்தத்தில் தன் மிகச்சிறந்த குழப்ப வாதி  என்பதை வெளிச்சம் போட்டு காட்டி விட்டார் ரஜினிகாந்த் .

அதைவிட ஒரு வார்த்தை கூட மோடி அரசை விமர்சிக்காமல் தான் என்றுமே மோடியின் அடிமைதான் என்பதை வெளிச்சம் போட்டு  காட்டி விட்டார் ரஜினி.

இனி தமிழ் மக்கள்தான் விழிப்பாக இருக்க வேண்டும்.

தூங்கும் தமிழக அரசு- பாலாறு தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கும் ஆந்திர அரசு??!!

கர்நாடகத்தில் துவங்கி ஆந்திரா வழியாக தமிழ்நாட்டில்  கடலில் கலக்கும் நதி பாலாறு.

கர்நாடகத்தில் 93  கி. மீட்டரும் , ஆந்திராவில் 33  கி.மீட்டரும் ,  தமிழகத்தில்   222  கி.மீட்டரும் அதன் ஓட்டங்கள்.

கர்நாடகா அதன் பகுதிகளில் பெத்தமங்களா , விஷ்ணுசாகர்,  ராம்சாகர்  என்று அணைகளையும் தடுப்பணைகளையும் கட்டி விட்டது.

ஆந்திர அரசோ அதன் பகுதிகளில்  29  தடுப்பணைகளை கட்டி விட்டது. இப்போது  21 தடுப்பணைகளில்     2 அடி முதல்    5 அடி வரை உயரம்  அதிகரிக்கவும் புதிய மூன்று தடுப்பணைகள் கட்டவும்     ரூபாய்  41.70  நிதி ஒதுக்கீடு  செய்திருக்கிறது.

கேட்டால் இருக்கும் அணைகளைத்தானே பழுது பார்க்கிறோம் என்று சொல்வார்கள்.   ஆனால் செய்வதை  யார் கண்காணிப்பது? உயரத்தை அதிகரிக்கவும் புதிய அணைகளை கட்டவும் தமிழ் நாட்டிடம் அனுமதி பெற்றார்களா?

வேலை முடிந்து விட்டால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழக பகுதிகளில்  இருக்கும் பாலாற்றிற்கு வராது.  மிச்சம் இருக்கும் மணலை விற்று கொள்ளைக்காரர்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு விவசாயிகளையும் பொதுமக்களையும்  தவிக்க விட வேண்டியதுதான்.

தமிழக அரசு உடனடியாக செயல் பட்டு அந்தப் பணிகளை நீதிமன்றம் மூலமாக கண்காணிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் சென்னை உட்பட ஐந்து மாவட்டங்கள் குடிநீர் ஆதாரம் பறிக்கப் பட்டு பாதிக்கப் படும் சூழ்நிலை தான் இன்று  இருக்கிறது.

ஆந்திரா  செயல்படுகிறது. தமிழ் நாடு  தூங்குகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்??!!

பழ.நெடுமாறனின் விடுதலை புலிகள் ஆதரவு புத்தகங்களை அழிக்க உத்தரவிட்ட தவறான தீர்ப்பு??!

விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசுவதோ எழுதுவதோ சட்டப்படி குற்றமல்ல என்று முன்பே பல தீர்ப்புகளில் தெளிவு படுத்தப் பட்டிருக்கிறது.

வைகோ கூட அதனால்தான் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலை புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம்.

விடுதலை புலிகள் இயக்கமே இல்லாத நிலையில் அதை தடை செய்வது என்பது நகைப்புக் கிடமானது. செயல் படாத ஒரு இயக்கத்தை ஏன் தடை செய்ய வேண்டும்?

விடுதலை சித்தாந்தத்தை தடை செய்ய முடியுமா? விடுதலைக்கான ஆயுத போராட்டத்தை தடை செய்யலாம். அற வழியில் கூட போராடக் கூடாது என்று தடை செய்ய முடியும் என்றால் இந்தியாவுக்கு சுதந்திரமே கிடைத்திருக்காது.

இலங்கையில் சிங்களர்களோடு இனி சம உரிமை பெற்று வாழ முடியும் என்ற நம்பிக்கையை இழந்தவர்கள் விடுதலை கேட்கிறார்கள்.     அந்த நம்பிக்கையை விதைத்து வளர்த்து அதன் அடிப்படையில் இலங்கையில்  ஒற்றுமையை உறுதி செய்ய வேண்டியவர்கள் சிங்களர்கள்.

இலங்கையிலிருந்து விடுதலை பெறுவதா அல்லது ஒன்று பட்ட இலங்கையில் சம உரிமையுடன் வாழ அற வழியில் போராடுவதா என்பதெல்லாம் இலங்கையில்  வாழும் தமிழினம் எடுக்க வேண்டிய முடிவுகள்.

இந்தியாவில் இருக்கும் தமிழர்கள் ஆகிய நாம் நம் தொப்புள் கொடி உறவுகளான தமிழர்களின் நலன் காக்க குரல் கொடுப்பதும் தார்மீக ஆதரவு அளிப்பதும் நமது சட்ட பூர்வமான உரிமை. இது எந்த வகையிலும்  இந்தியாவுக்கு எதிரானது அல்ல.

பழ.நெடுமாறன் பழுத்த தேசியவாதி. இந்தியாவுக்கு எதிரானவர் அல்ல. அதே நேரம் ஈழத் தமிழர்கள் தன்னுரிமை பெற வேண்டும் என்ற கருத்துக் கொண்டவர்.

அவர் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசிய பேச்சுக்களின் தொகுப்பு  ‘தமிழீழம் சிவக்கும்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.

அதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டது. ஆனால்  2006 ல் அரசு அவர் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றது. அவர் 18.10.2006 விடுதலை செய்யப்பட்டார்.

ஆனால் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி பறிமுதல் செய்யப் பட்ட 1709 புத்தக படிகளை திருப்பி கொடுக்க மறுத்து விட்டார். மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதி மன்றமும் இப்போது அந்த படிகளை அழிக்க உத்தரவிட்டிருகிறது.

இது சரியான தீர்ப்பல்ல. மேன்முறையீடு சென்று மாற்றப்பட வேண்டிய தீர்ப்பு.

தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக பேசுவதும் தமிழ் மக்கள் அதற்கு ஆதரவு அளிக்க  வேண்டும் என்று கோருவதும் எப்படி குற்றம் ஆகும்? பிரச்சாரம் ஒரு ஜனநாயக வழிமுறைதானே?

விடுதலி புலிகள் அழிக்கப்படும் வரை இந்திய அரசும் இலங்கை பிரச்னை தீர அரசியல் தீர்வு மட்டுமே சாத்தியம் என்று தானே சொல்லி வந்தது. இப்போது யாருமே அரசியல் தீர்வைப் பற்றியே பேச மறுக்கிறீர்களே ஏன்?

மாண்புமிகு நீதிபதி முரளிதரன் அவர்கள் இந்த புத்தகங்களை திருப்பி கொடுத்தால் அவர் மக்களிடம் விநியோகிப்பார் என்று கூறுகிறார். அவர் பேசியது குற்றமல்ல என்றுதானே அவர் மீதான வழக்கை வாபஸ் பெற்றார்கள். பின் எப்படி அதை புத்தகமாக போட்டது மட்டும் குற்றம் ஆகும்?

வன்முறைக்கு தூண்டாத எந்த கருத்தும் புத்தகமும் தடை செய்யப் படக் கூடாது.  பிறகு எந்த புதிய கருத்தும் புத்தகமும் வெளிவரவே முடியாது.

இந்திய அரசியல் சட்டம் நமக்கு தந்திருக்கும் அடிப்படை உரிமையை இந்த தீர்ப்பு பாதுகாக்க வில்லை என்பதால் மேன்முறையீடு செய்து மாற்றப் பட வேண்டிய தீர்ப்பு இது என்பதே நமது கருத்து.

சபரிமலை; பெண்களும் பஞ்சமர்களும் அசுத்தமானவர்கள் எனவே தரிசனம் செய்ய முடியாது என்கிறது தந்திரியின் நூல் ??!!

அனைத்து வயது பெண்களும் அய்யப்பனை தரிசிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் 49 சீராய்வு மனுக்கள் விசாரணைக்கு வந்து அது எதிர்வரும் ஜனவரி மாதம் 22-ம் தேதிக்கு விசாரணைக்கு மாற்றப் பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றம் எல்லா வயது பெண்களையும் அனுமதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.

அதனால் வருகிற மகர சங்கராந்தி வரை எல்லா வயது பெண்களும் அய்யப்பனை தரிசிக்கலாம் என்பதுதான் இப்போதைய நிலை.

இதுவரை ஏறத்தாழ அறுநூறு பெண்கள் அய்யப்பனை தரிசிக்க பதிவு செய்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பத்து  முதல் ஐம்பது வயது வரையில் ஆன பெண்கள். அவர்களுக்கு அரசு போதிய பாதுகாப்பு கொடுத்து தரிசனம் செய்ய வைக்க வேண்டும்.

அரசு என்ன செய்யப் போகிறது அரசை பணிய வைக்க சங்க பரிவாரம் என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இடையில் உச்சநீதி மன்ற விசாரணையின் போது கோவில் தந்திரிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வாக்குமூலத்தில் சொல்லப் பட்ட விபரங்கள் அதிர்ச்சியானவை. சென்னஸ் நாராயணன் நம்பூதிபாத் எழுதிய கேரள தந்திர சமுசாயம்  பகுதி 10, வரி IIள் சொல்லப் பட்டதை அதில் குறிப்பிட்டிருந்தார்கள்.

அதில் மாதவிலக்கு என்பது அசுத்தமானது. அந்த காலத்தில் பெண்கள் கோவிலுக்கு வரமாட்டார்கள் எந்த மதம் சார்ந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று சொல்லப்பட்டிருந்தது

அது மட்டுமல்ல அடுத்த வரியில் சொல்லப் பட்டிருந்ததுதான் முக்கியம். அதாவது’   ‘ கோவிலுக்குள் கீழ்சாதி மக்கள் அதாவது சூத்திரர்களுக்கு கீழே உள்ள பஞ்சமர்கள் கூட நுழைவது கூட அசுத்தமானதுதான் ‘.

ஆனால் இந்த விதி இப்போது கடைப்பிடிக்கப் படுவது இல்லை. காலப் போக்கில் இது மறைந்து விட்டது என்றால் பெண்கள் நுழைந்தால் அசுத்தம் என்ற விதியும் காலப் போக்கில் மறைய வேண்டியதுதானே.

கீழ்சாதி மக்கள் கோவிலுக்கு வருவது கோவிலை அசுத்தம் செய்வதாகும் என்ற விதியை எப்படி தைரியமாக உச்சநீதி மன்றத்தில் வாக்குமூலமாக தாக்கல் செய்தார்கள்?

இந்த லட்சணத்தில் தலித் மக்களை எப்படி ஈர்ப்பது என்று சங்க பரிவாரங்கள் திட்டம் தீட்டி வருகிறார்கள்.

அந்த நூல் கோவிலை எப்படி சுத்தி செய்வது என்றும் சொல்கிறது. அதாவது அப்படி ஏதாவது அசுத்தம் ஏற்பட்டு விட்டால் என்ன செய்ய வேண்டும்?

ஒரு சுத்திகரிப்பு; பிராமண பாத தீர்த்தம் – அதாவது பிராமணன் கால் கழுவும் தண்ணீரை தெளிப்பது. மற்றொன்று பிராமணனுக்கு உணவளித்து அவன் சாப்பிட்ட மிச்சத்தை அசுத்தம் பட்ட இடத்தில் வைப்பது.

ஏமாந்தால் இதையும் செய்ய பார்ப்பான் செய்ய தயாராகவே இருப்பான்.

தர்மபுரியில் மலை சாதி மாணவி கற்பழித்துக் கொலை??!!

தர்மபுரி அருகில் ஒரு மலை சாதி மாணவி, வயது 17, இயற்கை கடன் கழிக்கச் சென்ற இடத்தில் அதே சாதியை சேர்ந்த இரண்டு வாலிபர்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதில் காணப்படும் சமுதாய கொடுமைகள்;

நூற்றைம்பது குடும்பங்கள் வாழும் கிராமத்தில் சுமார் நாற்பது வீடுகளில்தான் கழிப்பறை வசதி உள்ளது. மற்றவர்கள் திறந்த வெளியில்தான் போக வேண்டும்.

கற்பழித்தவர்கள் மிகவும் கொடுமையான முறையில் அரக்கத் தனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். வாயில் துணியை திணித்து மூச்சு விடாமல் செய்து அந்த தவறை செய்திருக்கிறார்கள். நிர்பயா வழக்கில் இருந்த அத்துணை கொடுமைகளும் இதிலும் நடந்திருக்கிறது.

காவல் துறை மிகவும் கேவலமாக நடந்திருக்கிறது. தாமதமாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததில் இருந்து   கற்பழிப்பை வெளியில் சொல்லாதே என்று புகார் கொடுத்தவரை மிரட்டியது, அவர்களிடம் செலவுக்கு என்று ரூபாய் ஆறாயிரம் பெற்றது, குற்றவாளி ஒருவனின் தாய் சாராய வியாபாரம் செய்து வந்ததில் காவல் துறையிடம் இருந்த செல்வாக்கை வைத்து அவனை கைது செய்வதில் மெத்தனம் காட்டியது, உடனே மருத்துவமனை கொண்டு செல்லாமல் காப்பகம் கொண்டு சென்று தாமதம் செய்தது என்று காவல் துறை செய்த அக்கிரமங்கள்தான் அதிகம்.  ஆய்வாளரை மாற்றினால் மட்டும் போதுமா?

எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் விசாரணை கேட்டிருக்கிறார்கள்.

விசாரணை நடந்து இனிமேலாவது இத்தகைய கொடுமைகள் நிகழா வண்ணம் அரசு உறுதி செய்ய வேண்டும்.

ரஜினியை எதிர்த்து போட்டியிட கட்சி தொடங்கும் கவுதமன்; காமெடிகளுக்கு பஞ்சமில்லாத தமிழக அரசியல்??!

இயக்குனர் கவுதமன் தமிழ் உணர்வாளர்.

இப்போது படம் ஏதும் செய்வதாக தெரியவில்லை.

போராட்ட குணம் உள்ளவர். சக தமிழ் இயக்கங்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.

அவர் நேற்று ரஜினி எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாகவும் அதை நாங்களே நிரப்புவோம் என்றும்  அறிவித்தவர் அதற்காக புதிய அரசியல் கட்சியை தொடங்க போவதாகவும் அறிவித்தார்.

கட்சி பெயர் கொடி எல்லாம் மாநாட்டில் அறிவிக்கப்படுமாம்.

அரசியல் கட்சி தொடங்குவது அவ்வளவு மலிவாக போய் விட்டது.

தமிழர்களை அவமானப்படுத்தியே தீருவது வீழ்த்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் தமிழ் இன விரோதிகளுக்கும் இவர்களுக்கும் என்ன பெரிய வேறுபாடு இருக்கிறது. ?

ரஜினியே அரசியலுக்கு வருவது இன்னும் நிச்சயமாகவில்லை.

வந்து என்ன சொல்லப் போகிறார் என்பதும் தெரியவில்லை.

ரஜினி கமல் இருவருமே என்னப்பா உங்கள் கொள்கைகள் என்றால் தலை தெறிக்க ஓடுகிறார்கள்.

இவர் வந்து புதிதாக என்ன சொல்லப் போகிறார்.? எல்லா தமிழ் உணர்வாளர்களும் இப்போது சொல்லிக் கொண்டிருப்பதைதானே இவரும் சொல்லப் போகிறார். அதற்கு ஏன் புதிய கட்சி?

என்று நிற்கும் இந்த காமெடிகள்??!!

ஜெயலலிதாவை விஷம் வைத்து கொன்று விட்டனர்; திண்டுக்கல் சீனிவாசனின் சர்ச்சை பேச்சு??!

ஜெயலலிதா மரணம் குறித்து  ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் நடை பெற்று வருகிறது.

அதில் சாட்சிகள் விசாரிக்கப் பட்டு  குறுக்கு விசாரணை செய்யப்பட்டு இன்னும் சில மாதங்களில் தீர்ப்பு  வர இருக்கிறது.

அப்போதும் கூட அதை மட்டும் வைத்தே ஒருவரை சிறைக்கு  அனுப்பி விட முடியாது.

கமிஷன் ஒருவரை குற்றவாளி என்று கூற வேண்டும் அந்த அறிக்கையை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்   ஏற்றுக்கொண்டு அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு  தொடுக்க வேண்டும் அந்த வழக்கில் அவர்கள் குற்றவாளிகள் தான் என்று மீண்டும் தீர்ப்பு வர வேண்டும் அதற்குப் பிறகுதான் அவர்கள் குற்றவாளிகள் ஆவார்கள்..

இந்த நிலையில் கமிஷன் விசாரணை நிலுவையில் இருக்கும் போதே அமைச்சர் பொறுப்பில் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா சர்க்கரை நோயாளி அவருக்கு எதை கொடுக்க கூடாதோ அதை வேண்டுமென்றே கொடுத்து ஸ்லோ பாய்சன் கொடுப்பது போல் அவரை சசிகலா குடும்பத்தினர் கொலை செய்து விட்டனர் என்று நிலக்கோட்டை தொகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதாக மாலை மலர் செய்தி வெளியிட்டிருக்கிறது.

கமிஷன் போட்டது நீங்கள். அதன் முடிவு வரும் முன்னரே நீங்களே தீர்ப்பு சொல்வதாக இருந்தால் ஏன் கமிஷன் அமைக்க வேண்டும்.? நேராக வழக்கு போட்டிருக்க வேண்டியதுதானே?

மறைமுகமாக கமிஷன் இப்படித்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை சொல்வதாகவோ மிரட்டுவதாகவோ ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது?

ஏற்கெனெவே பல சர்ச்சை பேச்சுக்களை பேசி கெட்ட பெயர் வாங்கியவர்தான் சீனிவாசன்.

இத்தகையவர்களிடம் தமிழகம் மாட்டிக் கொண்டு இருப்பதுதான் வேதனை  அளிக்கிறது.

வகிக்கும் அமைச்சர் பொறுப்புக்காவது மரியாதை பெற்றுத் தர வேண்டாமா?

பொறுப்பற்றுப் பேசுவதுதான் அமைச்சராவதற்கு தகுதியா?

இப்படி பொறுப்பற்றுப் பேசுபவர்களுக்கு என்ன தண்டனை?    யார் கொடுப்பது?

எம்.ஏ பாடத்திட்டத்தில் இருந்து அண்ணாவின் ‘நீதிதேவன் மயக்கம்’ நீக்கம்?

திராவிட இயக்கத்தின் மீதான மறைமுக தாக்குதல்கள் தொடர்கின்றன என்பதற்கு சாட்சியாக அரசு நடத்தும் அழகப்பா பல்கலை கழகத்தின் எம் ஏ தமிழ் முதுகலை பாடத்திட்டத்தில் இருந்து அண்ணாவின் புகழ் பெற்ற ‘ நீதிதேவன் மயக்கம்’ நாடகம் நீக்கப் பட்டிருக்கிறது.

அந்தப் பல்கலை கழகத்துடன் இணைந்த ஏறத்தாழ  40  கல்லூரிகளில் இருந்து அண்ணாவின் நாடகத்துக்கு பதிலாக அரு.  ராமநாதன் எழுதிய ‘ ராஜ ராஜ சோழன் ‘ இடம் பெரும் என்று அதன் தலைவர் /கல்லூரி வளர்ச்சி குழு , எஸ் ராஜமோகன் அறிவித்துள்ளார்.    அதாவது இந்த முடிவு  Board of Studies ‘  பாடத்திட்ட குழுவின் பரிந்துரையால் எடுக்கப் பட்டதாக அவர் கூறினார்.

இந்த முடிவு எடுக்கப்பட அந்தக் குழு கூறும் காரணம்தான் வியக்கத் தக்கது.    தகுதியானவர்கள் தான் குழுவில் இருக்கிறார்களா என்ற ஐயத்தை அது ஏற்படுத்துகிறது.

அதாவது மாணவர்கள் அண்ணாவின் நாடகத்தை விளக்க போதுமான விளக்க ஏடுகள் ( guides ) கிடைக்காமல் சிரமம் அடைகிறார்கள் என்பதுதான் அந்த காரணம். அவற்றை பெற மாணவர்கள் அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறதாம்.

1940 களில் வெளிவந்த இந்த நாடகம் ராமாயண மகாபாரத படிப்பினைகள் குறித்து ஒரு நீதிபதியுடன் உரையாடுவது. இதற்கு ராமாயணம் மகாபாரதம் தெரிந்தால் போதுமே.  அதுதான் நாடு முழுதும் அறியப் பட்டதாயிற்றே? ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் பற்றி கேள்விகள் கேட்கப் படக் கூடாது என்று நினைப்பவர்கள் தான் திட்டமிட்டு இந்த நூலை அகற்றி இருக்கிறார்கள்.

பாமரரும் அறியும் வண்ணம் அண்ணா இயற்றிய அந்த நாடகம் எதிர்கால சந்ததியினருக்கு போய் சேரக் கூடாது என்று கயவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள் .

எதிர்ப்பு கிளம்பிய பின் டீன் ராஜமோகன் நாங்கள் மீண்டும் அண்ணாவின் நாடகத்தை பாடப் புத்தகத்தில் வைக்கத் தயார் என்றும் முன்பு அனுப்பிய சுற்றறிக்கையை செல்லாது என்று அறிவிக்க இருப்பதாகவும் கூறுகிறார்.

மீண்டும் வைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்பதை ஊகித்து இப்போதைக்கு அவர்கள் பின்னால் சென்றாலும் மீண்டும் வரலாற்றை மறைக்க முயற்சிப்பார்கள் என்பது உறுதி.

அண்ணாவின் வேலைக்காரி  , ஓரிரவு,  கம்பரசம் போன்ற  படைப்புகள் திராவிட இயக்க வளர்ச்சியில் மகத்தான பங்காற்றியவை.

இந்த சூழ்ச்சியாளர்கள் , மத்திய அரசின் ஊது குழலாக ஆட்சி செய்யும் அதிமுக அரசு ஆட்சியில் இருப்பதை பயன்படுத்தி இந்த கேவலமான முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

வரலாற்றை மறைக்க முற்படுவோர்  தோல்வியே காண்பர்.

பெரியாரை இழிவு படுத்த இ.வெ.ராமசாமி நாயக்கர் என்று சாதிபெயருடன் பிழையான வினாத்தாள்?!

பெரியாரை இழிவு படுத்த என்றே ஒரு கூட்டம் அலைகிறது.

தமிழ்நாடு  அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தப் பட்ட குரூப் 2 தேர்வுத் தாளில் திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்று ஒரு கேள்வி.

அதற்கு 1. இ.வெ.ராமசாமி நாயக்கர் 2. ராஜாஜி  3. காந்திஜி  4. சி.என் அண்ணாதுரை என்று பதில் தயாரித்திருக்கிறது ஆணையம்.

ஈரோடு வெங்கடப்ப ராமசாமி என்பதுதான் ஈ.வெ.ரா. என்பது கூட தெரியாமல் கேள்வித்தாள் தயாரித்திருப்பார்கள் என்று யாரும் நம்ப மாட்டார்கள்.

தெரிந்தே தான் இழிவு படுத்தியிருக்கிறார்கள். வாழ்நாள் முழுவதையும் சாதி ஒழிப்பையே லட்சியமாக கொண்டு வாழ்ந்தவர் பெரியார். சாதிக்கு மூலமாக மதம் இருப்பதால்தான் மதத்தையும் அதற்கு மூலமாக இருக்கும் கடவுளையும் நிராகரித்தார். தன்னை சாதி ஒழிப்பு கிளர்ச்சிக்காரன் என்றே அடையாளப்படுத்திகொண்டார்.

அப்படிபட்டவரும் சாதி உணர்வாளர்தான் என்று நிலை நாட்ட முயற்சிக்கிறார்கள்.  இதைவிட அயோக்கியத்தனம் என்ன இருக்க முடியும்?

அதிலும் ராஜகோபாலாச்சாரியை ராஜாஜி என்றும் மகாத்மா காந்தியை காந்திஜி என்றும் குறிப்பிட்டவர்கள் அண்ணாவை சி என் அண்ணாதுரை என்றும் பெரியாரை ராமசாமி நாயக்கர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்றால் கேள்வி தயாரித்தவர்கள் மனதில் எத்தனை வன்மம் இருந்திருக்க வேண்டும்.?

அண்ணா என்று குறிப்பிடவும் பெரியார் என்று எழுதவும் அவர்களுக்கு மனமில்லை.

இதற்கு ஆணையத்தின் செயலாளர் நந்தகுமார் வருத்தம் தெரிவித்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை  எடுக்கப்  படும் என அறிவித்திருக்கிறார்.    வினாத்தாள் தயாரிக்கும் பணி அனுபவம் மிக்க பேராசிரியர்களால் தயாரிக்கப் பட்டு மேலும் பலரால் சரி பார்க்கப் பட்டு பின்னால்தான் இறுதி  செய்யப் படுகிறது. அதில் எப்படி  இந்த தவறு தெரியாமல் நடந்திருக்க முடியும்?

மேல்சாதி வெறியர்கள் யார் இந்த பணியில் இருந்தார்கள் என்று ஆய்ந்து கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் எதிர்காலத்தில் இது போன்று செய்ய முடியும் என்ற எண்ணமே எழாமல் செய்ய முடியும்.

தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின்  கண்டனம் தெரிவித்திருக்கிறார் .

இதுபற்றி அமைச்சர்கள் யாரும் வாய் திறக்க வில்லையே ஏன்?

கமலின் தேவர் மகன் 2 விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி??!!

கமல்ஹாசன்  சிவாஜி கணேசன் நடித்த தேவர் மகன் பெரிய வெற்றியை பெற்றது.

அதற்கடுத்து கமல் ஹாசன் சண்டியர் என்ற தலைப்பில் படம் எடுக்க முனைந்தபோது அப்போதும் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்தார்.   படத்தின் பெயர் விருமாண்டி என மாற்றப் பட்டு வெளியாகி வெற்றி பெற்றது.

கமல் ஒரு சினிமா வியாபாரி. எந்த   சாதியையும்  தூக்கி பிடிப்பது அவரது வேலையல்ல.   எதை சொன்னால் யாரிடம் வெற்றி பெரும் என்ற கணக்கே சினிமாவை தீர்மானிக்கிறது.   எல்லா சாதிகளையும் தனக்கு உழைக்க வைப்பதே அவரது இலக்கு.

இப்போது மார்கெட் இழந்த நிலையில் எதையாவது செய்து மீண்டும் வெளிச்சத்தில் நிற்க பணம் சம்பாதிக்க பார்ப்பது அவரது நோக்கம்.  அதில் விளைந்ததுதான் தேவர் மகன் 2  திரைப்படம்.

அதையும் எதிர்த்து விளம்பரம் தேடவும் முக்கியத்துவம் பெறவும் டாக்டர் கிருஸ்ணசாமி முயற்சித்திருக்கிறார்.

தனது அறிக்கையில் ——மகன் 2 திரைப்படம் எடுக்கப் போவதாக அறிவித்து இருக்கிறீர்கள் என்று கமலுக்கு கடிதம் எழுதுகிறார். தேவர் என்ற பெயரை தவிர்த்து எழுதுகிறார்.

இதே கிருஷ்ணசாமி சபாஷ் நாயுடு என்ற பெயரில் படம் எடுக்கும்போது எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. ஆக அவர் சாதிக்கு  எதிராக இல்லை.    குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமே தான் எதிரி என அறிவித்துக் கொள்கிறார். இது நல்லதா நல்ல விளைவுகளை ஏற்படுத்துமா என்பதை அவர்தான் சிந்திக்க வேண்டும்.

தேவேந்திரர் மகன் என்று படம் எடுங்கள் என்றும் கோருகிறார். எடுத்தால் படம் நன்றாக ஓடும் என்றும் கூறுகிறார். யாரையும் இப்படி கட்டாயப் படுத்த முடியும் என்று பேசுவதும் எழுதுவதும் சட்டப்படி சரியா என்பது கேள்விக்குறி.

பார்வர்டு ப்ளாக் தலைவர் கதிரவன் ஆட்சேபணை தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

சாதி ஒழிய வேண்டும் என்று நோக்கம் கொண்டவராக இருந்தால் முதலின் அவர் தேவேந்திரர் சாதி அமைப்பிலிருந்து வெளி வர வேண்டும். சாதியை சட்ட பூர்வமாக ஒழிப்பது பற்றி ஒத்த கருத்துக் கொண்டவர்களோடு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

ஆனால் சாதியை சட்ட பூர்வமாக ஒழிக்க முடியுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. ஆனால் அரசியல் தலைவர்கள் சாதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சாதி மோதலுக்கு வழி ஏற்படுத்தி  விடக்கூடாது.

கனன்று கொண்டிருக்கும் ஏரி  தழலைப் போன்றது சாதிய உணர்வுகள்.   அதை அணைக்க முயற்சிக்க வேண்டுமே தவிர ஊதி பெரிதாக்க எந்த வகையிலும் முயற்சிக்க கூடாது.

யாரும் தங்களை உயர்த்தி பெருமை பேசுவது கூட தவறில்லை.   தேவேந்திரர் சாதிப் பெருமையை மட்டுமே அவர் முன்னிருத்தினால் யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை.    பிறரை தாழ்த்திப் பேசும்போது பிரச்னை எழும்.

இத்தனை ஆண்டுகள் அரசியலில் இருக்கும் அவருக்கு இது தெரியாதா.   நிச்சயம் தெரியும்  . தெரிந்தே அரசியல் ஆதாயம் அடைய சாதியை  பயன் படுத்துகிறார் .

பொதுவாகவே சாதிப் பெயரில் சினிமா எடுப்பதை பொது மேடை எதிர்த்தே வந்திருக்கிறது.    சபாஷ் நாயுடு விளம்பரம் வந்தபோது நாம் கண்டித்தே எழுதினோம்.

அந்த வகையில் கமல் எந்த சாதியை வைத்தும் சினிமா எடுக்க வேண்டாம்.   அதேநேரம் டாக்டர் கிருஷ்ணசாமி போன்றவர்கள் சாதிப் பூசலை ஊதிப் பெரிதாக்கும் முயற்சியிலும் இறங்க வேண்டாம்.

பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே இது போன்ற பிரச்னைகள் .   சாதாரணமானவர்கள் தயாரிக்கும் எந்த படமும் பிரச்னைக்கு உள்ளாவதில்லை.

டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஒரு வேண்டுகோள்;  தேவர்-தேவேந்திரர் இடையே நல்லிணக்கத்தை , ஒற்றுமையை   நிலைப்படுத்த உறுதி பூணுங்கள்.    உங்களைப் போன்ற படித்தவர்கள் இதைசெய்யத் தவறினால் காலம் உங்களை மன்னிக்காது.

இத்தனை சோதனைகளுக்கு இடையிலும் இருவரும் இணைந்து தான் வாழ்கிறார்கள்.  இனியும் வாழ்வார்கள்.  இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை இன்றில்லை.   இன்றிக்கும் ஒருசில பிணக்குகளும் நாளை இருக்காது.

தாழ்த்தப் பட்ட பிரிவினரில் அருந்ததியருக்கு தனி ஒதுக்கீட்டை எதிர்த்து தனது பெரிய மனதை வெளிக் காட்டியவர்தான் டாக்டர் கிருஷ்ணசாமி.

டாக்டர் கிருஷ்ணசாமிகள் நல்லது பேசட்டும்.    அல்லது பிரச்னைகளை உருவாக்காமல் செயல்படட்டும் .