Home Blog Page 58

அரபு நாடுகளில் தினமும் 10 இந்தியர்கள் சாகிறார்கள் ?! என்ன செய்கிறது இந்திய வெளி உறவுத் துறை?

அதிர்ச்சி. ஆனால் உண்மை.

பக்ரைன், ஓமன், கத்தார், குவைத், சவுதி அரேபியா, அரபு எமிரேட்ஸ்  ஆகிய 6  அரபு நாடுகளில் பணி புரியும் இந்தியர்களில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சராசரியாக தினமும் 10 பேர் இறந்து வருகின்றனர் என்ற அதிர்ச்சி செய்தியை ஆர் டி ஐ என்ற தன்னார்வ அமைப்பை சேர்ந்த வெங்கடேஷ் நாயக் என்பவர் மத்திய  மனித உரிமைகள் மற்றும் பொது நல அமைப்பில் புகாராக தெரிவித்துள்ளார்.

மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்த புள்ளி விபரப்படி 2012 ம் ஆண்டு முதல் இதுவரை அரேபிய நாடுகளில் 24570  இந்தியர்கள் இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மருத்துவர் ராமதாஸ் இது பற்றி ஒரு அறிக்கை வெளியுட்டுள்ளார்.   வளைகுடா நாடுகளின் மொத்த மக்கள் தொகையான 5.49  கோடியில் 25,000 பேர் இறந்தது சாதாரணமானதல்ல.

கத்தார் அரசு வெளியுட்டுள்ள அறிக்கையில்  80%   இயற்கை மரணங்கள் 14 %    விபத்துக்கள்  6% தற்கொலைகள் என்றும் குறிப்பிடுவதை அப்படியே ஏற்றுக்கொள்ளமுடியாது.

இந்த ஆறு நாடுகளில் இருந்தும் சுமார் 15 லட்சம் கோடிக்கும் மேலாக இந்தியாவுக்கு வருமானம் வந்திருக்கிறது என்பதற்காகவாவது அவர்களில் பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டாமா?

மருத்துவர் ராமதாஸ் கூறியதுபோல் வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காக ஒரு தனி அமைச்சகத்தை ஏற்படுத்தி யாக வேண்டும்.

நல்ல உடல் நலத்துடன் தான் ஒருவர் வெளிநாடு பயணம் மேற் கொள்ள முடியும்.  அவர்கள் திடீர் என்று  இயற்கை  மரணம் எய்தினர் என்று எப்படி ஏற்றுகொள்ள முடியும்?.

கேரளம் தமிழ்நாடு தெலுங்கானா,  ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் அதிகம் பேர் வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கிறார்கள்.

மிகவும் கவலை  அளிக்கக் கூடிய தகவல்கள் இவை. இவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

அரபு நாடுகளில் வேலை வாய்ப்பு தேடும் இந்தியர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி!!!

விஜயின் ‘சர்காரை’ மிரட்டும் அமைச்சர் கடம்பூர் ராஜு??!!

விஜயின் ‘சர்கார் ‘ படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி  சமரசம் ஆகி ஒரு வழியாக வெளியாகி  விட்டது.

ஆனால் புது சர்ச்சையில் சிக்கி கொண்டுள்ளது. அதாவது படம்  அதிமுக ஆட்சியையும் அதன் இலவச திட்டங்களையும் தவறாக சித்தரிப்பதாகவும் அவைகளை நீக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் முதல் அமைச்சரை கலந்து கொண்டு தேவையான நடவடிக்கை களை எடுக்க இருப்பதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார்.

படம் மொத்தமும் அதிமுக வை சுற்றியே வருகிறது. ‘அனைத்து இந்திய ‘ அடைமொழியுடன் கூடிய கட்சி பெயர், இலவசங்களை கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குவது, சிகிச்சையில் இருக்கும்  தலைவருக்கு மகளே அதிக மாத்திரைகளை கொடுத்து இறப்புக்கு காரணமாக இருப்பது, தலைவரின் சமாதி கடற்கரையில் இருப்பது அங்கே மனைவி செல்வது, கொலைக்கு  சாட்சியாக மனைவியே வாக்குமூலம் தருவது, ஆட்சிக்கு வந்தபின் தலைவரின் இறப்புக்கு காரணமான மகளை சிறைக்கு அனுப்புவது  என்று ஏறத்தாழ அதிமுக கட்சியின் நிகழ்வுகளை போன்றே சம்பவங்கள் கட்டி எழுப்பப் பட்டிருக்கின்றன. வரலட்சுமியின் தோற்றம் சசிகலாவை ஒத்தது என்கிறார்கள்.

பொது மக்களை எப்படி இந்த படம் ஈர்க்கப் போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். எந்த படமும் இரண்டு மூன்று வாரங்களுக்கு மேல் ஒருவது இல்லை. அதற்குள் வசூலை எடுத்து விட வேண்டும்.

அரசியல் நேர்மை பற்றி பேசும் படம்  திரையில் காட்டப்படுவதில் எத்தனை ஊழல்?  ரசிகர் மன்றங்கள்  டிக்கெட் விலையை ஏற்றி விற்பது மட்டுமல்ல தியேட்டரே அதிக விலைக்கு விற்க கட்டாயப்படுத்தப்படுகிறதே அது என்ன வகை நேர்மை?

என்ன வகையான அரசு அமைய வேண்டும் என்பதை சொல்லாமலேயே படம் முடிகிறது. எல்லாரும் சொல்லும் மக்கள் நல அரசு அமைய நல்லவர்களை தேடி கொண்டுவருவோம் என்கிறார்களே அவர்கள் எப்படி கிடைப்பார்கள்?

மக்கள் அத்தகையவர்களை தேர்ந்து எடுக்கத்தான் தேர்தல். அதற்குத்தான் போட்டி? மக்கள் காசு வாங்கிக் கொண்டு வாக்கு அளிக்கக்  கூடாது என்ற குரல் ஏன் அழுத்தம் தந்து கூறப் படவில்லை?

எது எப்படியானால் என்ன? வசூல் தானே ‘சர்காரின்’ இலக்கு!

ரிசர்வ் வங்கியில் ஆதிக்கம் செலுத்த திட்டமிடும் மோடி அரசு – துணை போகும் ஆர் எஸ் எஸ்?!

ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளில் மத்திய அரசு  ஆதிக்கம் செலுத்த நினைப்பது விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்று வங்கியின் துணை இயக்குனர் விரால் ஆச்சார்யா பேசியது புயலை கிளப்பி  விட்டு விட்டது.

அதற்குப் பிறகு நிதி அமைச்சர் அருண் ஜெட்லி  2008 முதல் 2014 வரை வங்கிகள் வரையறை இன்றி கடன் கொடுத்து நாட்டின் நிதி நிலைமையை மோசமாக்கி விட்டதாக குற்றம் சாட்ட பிரச்னை எரிய தொடங்கியது.

ரிசரவ் வங்கியின் சட்டப் பிரிவு 7 ன் கீழ் மத்திய அரசு ரிசர்வ் வங்கியுடன் பேச்சு வார்த்தை நடத்தி தாக்கீதுகள் கொடுக்க வகை செய்கிறது. ஆனாலும் இதுவரை இந்த சட்ட பிரிவை எந்த மத்திய அரசும் பயன்படுத்தியதில்லை.

ஏனென்றால் அந்த பிரிவின் முதல் பகுதியில் ஆலோசனை செய்யும் உரிமையை பயன்படுத்த அந்த பிரிவை பயன்படுத்தி தான் பேச வேண்டும் என்று இல்லை.

இதுவரை எல்லா அரசுகளும் பேசித்தான் வந்திருக்கின்றன. ஆனாலும் சட்டப்படி பேசுவோம் என்று அழைத்ததில்லை. ஏனென்றால் அந்தப் பிரிவில் ஏதேனும் தாக்கீது தர வேண்டும் என்றால் தான் அந்த பிரிவை பயன்படுத்தி கட்டாயப்படுத்தவேண்டும். அதற்கு அவசியமே இல்லாமல் கலந்து பேசி முடிவுகளை மேற்கொள்வதுதான்  நல்லது. அந்தப் படியான சுமுக உறவு இதுவரை பேணி வந்திருக்கிறார்கள்.

நேரு காலத்திலேயே இந்த பிரச்னை வந்தபோது மத்திய அரசோடு கலந்து உரையாடி  முடிவுகளை மேற்கொள்ளும்போது மட்டும்  ரிசர்வ் வங்கி தன்னாட்சி பெற்ற அமைப்பாக இயங்க  வேண்டும் என்ற முடிவு எட்டப்பட்டது. மத்திய அரசு  ஒருபக்கமும் ரிசர்வ் வங்கி ஒரு பக்கமுமாக பயணிக்க முடியாது அல்லவா என்று  விளக்க வேறு  தரப் பட்டது.

இப்போது பாஜக அரசுக்கு  ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள நிதி மத்திய அரசின் திட்டங்களுக்கு  தேவை.  அந்த  தேவை வங்கித்துறை அல்லாத நிதி நிறுவனங்களுக்கு ( Non banking Finance Companies )  உரியது. ஆம். அவை வாராக் கடன்களின் தாக்கத்தால் நிலை குலைந்து போய் கிடக்கின்றன.

அவைகளை தூக்கி நிறுத்து துடிக்கிறது மத்திய அரசு. அதற்கான நிதியைப் பெறத்தான் ரிசர்வ் வங்கி தனது கட்டுப் பாடுகளை தளர்த்த வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது.

ஏதோ சிறு குறு மத்திய நிதி நிறுவனங்களுக்கு உதவி செய்ய விரும்புவதாகவும் அதற்கு ரிசர்வ் வங்கி முட்டுக்கட்டை போடுவது போலவும் ஒரு பிம்பத்தை உருவாக்க மோடி  அரசு விரும்புகிறது. ஆனால் உண்மை அதுவல்ல என்கிறார்கள். ரிசர்வ் வங்கியின் கையிருப்பு நிதியில் கை வைத்தால் அது விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று அஞ்சுகிறார்கள் ரிசர்வ் வங்கி இயக்குனர்கள்.

வருகிற  19 /11/2018  ல் நடைபெற இருக்கும் வங்கியின் நிர்வாக குழு கூட்டத்தில் இது பற்றி பொறி பறக்கலாம். வங்கியின் மத்திய குழுவில் இடம் பெற்றிருக்கும் ஆர் எஸ் எஸ் சார்புள்ள ஆடிட்டர் குருமூர்த்தி சதீஷ் மராத்தே போன்றவர்கள் இதற்கான அழுத்தத்தை கொடுக்க முயற்சிக்கலாம்.

எட்டப்படப் போகும் முடிவு நாட்டின் நிதிநிலையை பாதுகாக்கும் விதத்தில் அமைய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

காற்றில் பரந்த உச்ச நீதிமன்ற தடை; ஓயாமல் வெடித்த பட்டாசுகள்??!!

காலையில் ஒரு மணி நேரம் இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு இந்த ஆண்டு ஏட்டில் தான் இருந்தது.

இன்று சென்னை மாநகரில் மாலை ஆறு மணிக்கு வெடிக்க தொடங்கிய பட்டாசு வெடி சத்தங்கள் குறையவே இல்லை.

நெல்லை போன்ற சில இடங்களில் சிலர் காவல் துறையினர் நேரம் தாண்டி பட்டாசு வெடித்ததாக கைது செய்து பிறகு எச்சரித்து அனுப்பி இருக்கின்றனர். நீதிமன்றம் கேட்டால் அல்லது ஊடகங்கள் கேள்வி எழுப்பினால் நாங்களும் நடவடிக்கை எடுத்தோம் என்று சொல்லலாம் அல்லவா?

அடுத்த ஆண்டு சிறு குறு பட்டாசு ஆலைகள் இருக்குமா என்பது சந்தேகமே. ஏன் என்றால் மத்தாப்பு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் வேதிப் பொருளான பேரியம் பயன் படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதற்கு மாற்றான ரசாயன பொருள் என்னவென்று ஆராய்ச்சி நிறுவனங்கள் தான் சொல்ல வேண்டும்.

பெரிய முதலீட்டில் இயங்கும் ஆலைகள் மட்டுமே இனி கட்டுபபாடுகளை மதித்து பட்டாசு உற்பத்தி செய்ய முடியும். சிறிய ஆலைகள் இயங்கவே முடியாது.

விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் 900 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இனி எப்படி இயங்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழக அரசு இதுவரை எந்த முன் முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை .

உச்ச நீதிமன்றம் இது போன்ற உத்தரவுகளை இடும்போது அமுல்படுத்தப்படும் சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து அதன் பின் உத்தரவிட்டால் தான் அவற்றிற்கு மதிப்பிருக்கும்.

தீப ஒளித்திருநாள் மதம் சார்ந்தது அல்ல !!!

தீபாவளியை கொண்டாடுகிறவர்கள் பெரும்பாலானவர்கள் எதை மனதில் வைத்து கொண்டாடுகிறார்கள்?

தீமை என்ற இருள் அகன்று  அனைவரது வாழ்விலும் ஒளி தோன்ற வேண்டும் என்பதே அனைவரும் விருப்பமும் வேண்டுதலும்.

மனிதர்கள் வாழ்வில் சந்திக்கும் எண்ணிலடங்கா பிரச்னைகளை ஒருநாளேனும் மறந்து குடும்பத்தாருடன் சுற்றத்தாருடன் நட்புகளுடன் கொண்டாடி மகிழ்வதே தீப ஒளித்திருநாள் .

இதற்கு எதற்கு மதச்சாயம்?  தொடக்கம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.  எத்தனை பேர் மதம் சார்ந்த சிந்தனைகளை இன்று பாராட்டுகிறார்கள்?

புராணக் கதைகளை இன்று நினைவு கூர்வோர் மிகச் சிலபேர்தான். மகாவிஷ்ணுவுக்கும் பூமாதேவிக்க்கும் பிறந்த நரகாசூரனை அவனது தாயின் அம்சமான சத்தியபாமா கொல்வதுதான் புராணக் கதை. அதாவது தாயே மகனைக் கொன்றதுதான் தீபாவளி பண்டிகை. அவன் இறந்த நாளை கொண்டாட அவனே கேட்டுக்கொண்டனாம்.

இதையே வட மாநில மக்கள் ராமர் வனவாசம் முடிந்து நாடு திரும்பிய நாளை வீடு தோறும்  தீபங்களை ஏற்றி தீபாவளியாக கொண்டாடுகிறார்கள்.  வங்காளத்தில்  காளி பூஜை செய்யும் நாளாகவும் குரு கோவிந்த் சிங் சீக்கிய அமைப்பான கால்சாவை அமைத்த தினமாகவும் புத்தர் நிர்வாண தீட்சை பெற்ற தினமாகவும் மாவலி சக்கரவர்த்தி முடிசூடிய தினமாகவும் இன்னும் பல்வேறு நிகழ்வுகளை முன்னிறுத்தியும் தீப ஒளித்திருநாள் கொண்டாடப் படுகிறது. எனவே இதற்கு மத சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை. இந்த புராணக்கதைகளை தீபாவளி கொண்டாடுவோர் நினைவு கூறுகிறார்களா என்றால் இல்லை என்று உறுதியாக  கூறலாம்.

அதை அங்கீகரிக்காதவர்கள் தான் பெரும்பான்மை. ஆனால் அவர்கள்தான் தீபாவளிதிருநாளை கொண்டாடி மகிழ்கிறார்கள்.

பழக்கப் பட்டு விட்டார்கள்.  வெந்நீரில்  எண்ணெய்குளியல், புத்தாடை,  இனிப்புகள் பண்டிகையுடன் இரண்டற கலந்து விட்டன. பாரம்பரியமாக கொண்டாடுவதை ஏன் நிறுத்த வேண்டும்? அந்த மகிழ்ச்சி குடும்பத்துக்கு சொந்தமானது. ஏன் அதை தவிர்க்க வேண்டும்.?

பட்டாசுகள் தீபாவளியின் ஒரு அங்கமாக சில நூற்றாண்டுகளாக உருவாகி இருக்க வேண்டும். சீனாவில்  தோன்றிய பட்டாசு இந்தவுக்கு இறக்குமதி ஆகி சில பல நூற்றாண்டுகள் ஆகியிருக்கும்.  அதற்கும் பூர்விக பண்டிகைக்கும் சம்பந்தமே இல்லை.  அதிலும் இப்போது உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கே பிறகு பட்டாசின் மகத்துவம் சிறிது சிறிதாக குறையும்.

தீபாவளி வாழ்த்து சொல்லும் அரசியல் தலைவர்கள் கூட புராண சம்பவங்களை மேற்கொள் காட்டுவதில்லை.  அறியாமை இருள் அகல, துன்பம் நீங்க  , மகிழ்ச்சி  பொங்க என்று பொதுவாகத்தான் குறிப்பிடுவார்கள்.  அதிலும் திமுக, கம்யுனிஸ்டு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து சொல்வதில். அதில் பார்ப்பனீய மதத்தின் புராண கதைகள் தொடர்பிருப்பதால் வாழ்த்து சொல்வது அங்கீகரிப்பது ஆகிவிடும் என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.

ஏனைய மதம் சார்ந்த விழாக்களுக்கும் தீபாவளிக்கும் இருக்கும் வேற்றுமைகள் ஏராளம்.

அவற்றை மனதில் கொண்டு  தீபாவளியை மதம் சாராத பண்டிகையாக மற்றும் ஒரு பொங்கல் விழாவாக கொண்டாடுவதே தமிழர்களுக்கு சிறப்பு .

எந்த குறிப்பிட்ட இறைவனையும் வணங்க வேண்டியதில்லை. தீபத்தை ஏற்றி   ஒளியை மட்டுமே வணங்கினால் கூட போதுமே.

தமிழில் கேள்வித்தாள் தயாரிக்க முடியாத அரசுப் பணியாளர் தேர்வாணையம் ?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அரசுத் துறைகளில் உள்ள பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் சிலவற்றை நடப்பாண்டில் தமிழில் நடத்த முடியாது என்று அறிவித்திருப்பது அவமானகரமானதாகும் .

தமிழில் கேள்வித்தாள் தயாரிக்கப்படாததை காரணமாக கூறியிருப்பது ஒழுங்கு நடவடிக்கை  எடுக்கத்  தக்க தவறுதல். ஆங்கிலத்தில் தீர்வு நடக்கும் என்றால் அதையே தமிழில் மொழிமாற்றம் செய்ய என்ன பிரச்னை? இதை செய்ய தவறிய அதிகாரி மீது என்ன நடவடிக்கை? இது தவறுதலா அல்லது திட்டமிட்ட சதியா?

தமிழ்நாட்டில் தமிழில் போட்டித் தேர்வுகளை நடத்த முடியாது என்று கூறுவது அவமானமில்லையா?

இதை மிகவும் சாதரணமாக கூற தேர்வாணையம் தயங்கவில்லை.

ஏன் சில வாரங்கள் கழித்து தமிழில் கேள்வித்தாள் தயாரித்து தேர்வு நடத்தக் கூடாது?

தேர்வாணையம் தவறை திருத்திக்கொள்ளாவிட்டால் போராட்டம் அறிவித்திருக்கிற மருத்துவர் ராமதாஸ் பாராட்டுக்குரியவர்.

தமிழக அரசில் ஒளிந்திருக்கும் இந்த தவறுக்கு காரணம் ஆன கறுப்பாடுகள் களைஎடுக்கப்படவேண்டும் !!

சமஸ்கிருதத்துக்கு பல்கலைக்கழகங்களில் முக்கியத்துவம் தரும் பாஜக அரசு???!!!

சமஸ்க்ரிதத்தை எப்படியாவது எல்லா பல்கலைக்கழகங்களிலும் திணித்து விட மத்திய பாஜக அரசு உறுதி பூண்டுள்ளது.

மத்திய மனிதவள அமைச்சகம் இதற்கு செயல்வடிவம் கொடுத்துள்ளது.

ராஷ்ட்ரிய சமஸ்க்ரித சந்ஸ்தான் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ராஷ்ட்ரிய வித்யா பீடம் இரண்டும் இணைந்து தேசிய அளவில் சமஸ்க்ரிதத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசின் கீழ் வரும் 41 பல்கலை கழகங்களில் இந்த செயல் திட்டத்தை உடனடியாக நடைமுறைபடுத்த நாடாளுமன்ற சிறப்பு சட்டம் ஒன்றை கொண்டு வரவும் திட்டம் இடப்பட்டுள்ளது.

இங்கெல்லாம் சமஸ்க்ரித இளங்கலை முதுகலை வகுப்புகள் துவங்கவும் மாணவர்களுக்குக் சிறப்பு சலுகைகள் தர வழி வகுக்கும்.

2014-ல் முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி தலைமையில் சமஸ்க்ரித மேம்பாட்டு திட்டத்தை அவர் கொடுத்திருந்தார். அவர் பரிந்துரைகள் இப்போது அமுல் படுத்தப் பட போகின்றன.

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழிக்கு பதிலாக அண்ட் இடத்தில் சமஸ்க்ரிதத்தை கட்டாய மொழியாக ஆக்கினர்.

ஸ்மிருதி இரானி மனிதவள துறை அமைச்சராக இருந்தபோது ஐஐடி-க்களில் சமஸ்க்ரித ஆய்வேடுகள் குறித்து புதிய பிரிவு ஒன்றை துவக்க ஆணை இட்டிருந்தார். அதை இப்போது அமுல்படுத்த மத்திய அரசு திட்டம் இட்டுள்ளது.

அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,  இது ஒன்றும் பிற மொழிகளுக்கு எதிரான நடவடிக்கை  அல்ல என்று கூறியிருந்தார். சில மத்திய பல்கலைகழகங்கள் உருது மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்று தற்போது சம்ஸ்க்ருததுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினாலும் ஏன் இதே போன்ற முக்கியத்துவம் பிற மொழிகளுக்கு கொடுக்க கூடாது என்பதற்கு விளக்கம் ஏதும் அவர் தரவில்லை.

41 பல்கலை கழகங்களில் சமஸ்கிருதம் வளர்க்கப்பட மட்டும் அல்ல டெல்லி ராஷ்ட்ரிய சம்ஸ்க்ருத சந்ஸ்தான் இந்தியா முழுதும் 60 க்கும் மேற்பட்ட கல்வி  நிலையங்களை நடத்தி வருகிறது. இது மத்திய அரசின் கீழ் வரும் நிறுவனம்.        2015-லேயே பல்வேறு கல்வி நிறுவனங்களில் சமஸ்க்ரித வகுப்புகள் துவங்க மத்திய அரசு வலியுறுத்தியதும் குறிப்பிடத் தக்கது.

எல்லாம் சரி. சமஸ்க்ரிதம் படித்த எல்லா சாதி மாணவர் களுக்கும் இதனால் வேலை  வாய்ப்பு அதிகரிக்குமா? அல்லது அவர்களை வர்ணாசிரம தர்ம அடிமைகளாக உருவாக்க மட்டுமே இது பயன்படுமா?

மத்திய அரசின் மொழி வளர்ச்சி நிதி எல்லா மொழிகளுக்கும் சரி சமமாக வழங்கப் படுகிறதா?

பட்டாசுத் தொழிலும் நடைமுறைப் படுத்தவே முடியாத உச்ச நீதிமன்ற தீர்ப்பும்?

இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படி அமுல் படுத்தப்படப் போகிறது என்பது பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது .

பட்டாசுகள் எழுப்பும் ஒலி 120 டெசிபலுக்கு கீழாகத்தான் இருக்க வேண்டும் என்பது நியாயமான கட்டுப்பாடு .

ஒரே ஒருநாள் பட்டாசுகள் வெடிப்பதால் மாசு ஏற்பட்டு விடும் என்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

லட்சக்கணக்கான ஆலைகளும்  கோடிக்கணக்கான மோட்டார் வாகனங்களும் ஏற்படுத்தாத  மாசை ஒருநாள் வெடிகள் ஏற்படுத்தி விடும் என்பது ஏற்றுக் கொள்ளக் முடியாத ஒன்று.

பசுமை பட்டாசுகள் தான் இனி வரும் ஆண்டுகளில் இருக்கும் என்பதும் அதை அமுல் படுத்த பட்டாசுத் தொழில் இருக்குமா என்பதும் அடுத்த கேள்விக்குறி. பசுமை பட்டாசுகளை வியாபார ரீதியில் லாபகரமாக தயாரித்து நடத்த முடியுமா என்பதும் சந்தேகம்தான். முடிந்தால் நல்லதே!!!

தீபாவளி தவிர ஏனைய பண்டிகை நாட்களில் பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடுகள் வருமா அல்லது இந்த வரையறையே அவற்றிற்கும் பொருந்துமா என்பதும் தெரியவில்லை.

காலை 4 மணி முதல் 5 வரையிலும் அதன் பின் இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலும் வெடிக்கலாம் என்ற உத்தரவு எப்படி அமுல்படுத்தப் படும் என்பதுதான் மிகப் பெரிய சவால்.

இதை அமுல்படுத்த காவல் துறைக்கு போதிய பலம இருக்கிறதா?

யார் மணியை கண்காணிப்பது? மீறி வெடிப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் படும். எடுத்தால் குழந்தைகள் மீதுதான் எடுக்க வேண்டும். அடு சாத்தியமா? ஏனென்றால் வெடிகள் வெடிப்பது பெரும்பாலும் குழந்தைகள்தான். இதையெல்லாம் சிந்திக்காமலா உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கும்!

சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளுக்கு மூடு விழா நடத்த அரசும் நீதிமன்றங்களும் தீர்மானித்து விட்டனவா என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

இந்த கட்டுப்பாடுகள் ஏனைய நாடுகளில் இருக்கின்றனவா? அங்கெல்லாம் இல்லாத புதிய கட்டுப்பாடுகள் இங்கு மட்டும் எதற்கு?

நம்மை பொறுத்தவரை தீபாவளி பண்டிகையே கொண்டாடப்பட வேண்டிய ஒன்றா என்பதில் மாற்றுக் கருத்துக்கள் உள்ளன.

இருந்தாலும் கொண்டாடுபவர்கள் உரிமை பற்றித்தான் நாம் பேசுகிறோம்.

அமுல்படுத்தப்படும் என்ற எந்த நம்பிக்கையில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது?

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் மீண்டும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியது இந்த பட்டாசுத் தீர்ப்பு??!!

ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்த வல்லபாய் படேலுக்கு உலகின் உயரமான சிலை; மோடி திறந்தார்!!!

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்படும் சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் பல சிறப்புகளுக்கு உரியவர்.

அப்போது  550 க்கும் மேற்பட்ட குறுநில அரசுகள் அதாவது சமஸ்தானங்கள் இருந்தன. அத்தனையையும் தனது சாதுர்யத்தால் பேசியே இணைத்தவர். அதாவது அதுவரை இந்தியா ஒன்றாக இல்லை. இணைய மறுத்த ஹைதராபாத் நிஜாம் ஜுனாகத் நிஜாம் ஆகியோரை வல்லமையால் இணைய வைத்தவர். அதிலும் ஹைதராபாத் குறுநில அரசை இணைக்கும் போரில் ஏறத்தாழ 40,000-க்கும் அதிகமானோர் கொல்லப் பட்டனர். ஜுனகத் குறுநில அரசை மக்களின் வாக்குப்படி இணைய வைத்தார்.    ஜுனாகத் அரசின் பெரும்பாலான மக்கள் இந்துக்கள். மன்னர் முஸ்லிம். அங்கே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அரசு இணைக்கப்பட்டது. காஷ்மீர் மன்னர் இந்து. பெரும்பாலான மக்கள்  முஸ்லிம். வாக்கெடுப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டு  இன்னும் முழுமையாக தீர்க்கப் படாத பிரச்னையாக காஷ்மீர் நீடிக்கிறது.

நேரு குடும்பம் படேலுக்கு தகுந்த மரியாதை தரவில்லை என்ற குறை இருந்தது.  எல்லா அரசின் திட்டங்களுக்கும் அவர்கள் குடும்ப பெயரையே வைத்துக்கொண்டார்கள் .

அதேபோல் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கும் தகுந்த மரியாதை தரப்படவில்லை என்ற குறை பரவலாக இருக்கிறது.

அவருக்கு நர்மதை நதிக்கரை ஓரம் 597 அடி ( 182 மீட்டர் ) உயரத்தில் உலகின் மிக உயரமான சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

விவசாய குடும்பத்தில் பிறந்த சாதாரண மனிதர் இரும்பு மனிதராக விளங்கி புகழ் பெற்றது பெருமைதான்.

இன்னொரு பெருமையும் அவருக்கு  உண்டு. மகாத்மா காந்தி சுடப்பட்டு இறந்தவுடன் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தடை செய்யப் பட்டது. அதைசெய்தவர் வல்லபாய் படேல்தான்.

தடையை நீக்க கோரி சங்கம் படேலுடன் கடித போக்குவரத்து நடத்தியது. கொலைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றது.

பதில் எழுதினாராம் வல்லபாய் படேல்’ கொலையில் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம். அதற்காக மகாத்மா இறந்தவுடன் இனிப்பு வழங்கி இருக்கக்கூடாது  அல்லவா”?

பிறகு ஆர்.எஸ்.எஸ் மீதான் தடை நீக்கப் பட்டது என்பது வேறு. ஆனால் களங்கம் அகற்றப்பட்டதா என்றால் நிச்சயமாக சொல்ல முடியாது.

அத்தகைய இரும்பு மனிதர் வல்லபாய் படேலுக்கு சங்கத்தின் சேவகர் ஆன நரேந்திர மோடி சிலை வைத்து திறந்திருப்பது நல்ல முன்மாதிரி.

தினகரன் முடிவால் 20 தொகுதிகளின் இடைதேர்தல் வருமா? எடப்பாடி அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன!!

நீதிபதி சத்யநாராயணா தீர்ப்புக்கு மேல் உச்சநீதி மன்றத்துக்கு மேன்முறையீடு செல்வார்கள் என்று  எதிர் பார்க்கப் பட்ட நிலையில் மேன்முறையீடு இல்லை தேர்தலை சந்திப்போம் என்ற தினகரனின் அறிவிப்பு தமிழக அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.

துணிச்சலான முடிவுதான். ஆட்சிக்கு மட்டுமல்ல. பல கட்சிகளின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் முடிவு இது.

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி எப்படி அமையும் என்பதையும் இது தீர்மானிக்கும்.

மேன்முறையீடு சென்றால் ஆட்சிக்கு ஆபத்தில்லை என்று நிம்மதியாக இருந்தார் எடப்பாடி பழனிசாமி. அந்த நிம்மதி போயேபோச்சு.

18 தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் தொகுதிகளோடு திருப்பரங்குன்றம் திருவாரூர் தொகுதிகளும் இடைத்தேர்தலுக்கு தயாராக வேண்டும்.

தேர்தல் கமிஷன் இப்போது என்ன செய்யும் என்பதுதான் அடுத்த எதிர்பார்ப்பு. எதை சொல்லி தேர்தலை தள்ளி வைக்க முடியும் ?

பாஜக தனது பாராளுமன்ற தேர்தல் கூட்டணியை இப்போதே தீர்மானிக்கும் கட்டாயத்துக்கு ஆளாகும்.

பாராளுமன்ற தேர்தலோடு இந்த இருபது தொகுதிகளின் தேர்தலையும் நடத்துவார்கள் என்பதுதான் பொதுவான எதிர்பார்ப்பு.

ஆனால் அதற்கு முன்பே வேறு இடங்களில் தேர்தல் நடத்தினால் இங்கும் நடத்தியாக வேண்டும். ஜனவரி அல்லது பிப்ருவரியில் நடத்தலாம். ஏப்ரலில் தான் பாராளுமன்ற  தேர்தல் வரும்.

பத்து இடங்களில் அதிமுக தோற்றாலே அரசு விழுந்து விடும்.

எப்படியோ எடப்பாடி அரசின் நாட்களின் எண்ணிக்கை தொடங்கி விட்டது.