Home Blog Page 59

ராஜாஜி, ஜெயலலிதாவுக்கு அடுத்து இந்த தலைமுறையின் பார்ப்பனீய பிரதிநிதி கமல்ஹாசன் ??

பார்ப்பனர்கள் எல்லா துறைகளிலும் கோலோச்ச திட்டமிட்டு வெற்றியும் பெற்று வந்தவர்கள்.

எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் அதில் பார்ப்பனர்கள்தான் முன்னணியில் இருப்பார்கள்.

மற்ற துறைகளில் எப்படி இருந்தாலும் அரசியல் துறையில் மட்டும் எடுத்துக் கொண்டால் கடந்த நூறாண்டு அரசியலில் பார்ப்பனர்கள் முன்னணி வகித்தே வந்திருக்கிறார்கள்.

காங்கிரஸ் அரசியலில் ராஜாஜி பார்பனர்களின் பிரிதிநிதியாகவே செயல்பட்டார்.  ஒருபோதும் அவர் அதை ஒப்புகொள்ள மாட்டார். ஆனால் எல்லா பார்பனர்களும் அவர் பின்னே நின்றார்கள்.

காங்கிரசில் காமராஜர் கை ஓங்கிய பிறகு சுதந்திரா கட்சி தொடங்கினார்.

அவருக்குப் பிறகு திராவிட இயக்கத்தில் எம்.ஜி.ஆரின் தயவால் தன்னை இணைத்துக் கொண்ட செல்வி ஜெயலலிதா தன் செகுலர் இமேஜை காப்பாற்றிக் கொள்ள அரும்பாடு பட்டார்.

தன்னை சட்டமன்றத்திலேயே ‘ஆமாம் நான் பாப்பாத்திதான்’ என்று பெருமையுடன் சொல்லிக்கொண்ட ஜெயலலிதா மிக கவனமுடன் திராவிட இயக்க கொள்கைகளுக்கு எதிரானவராக தன்னை வெளிப் படுத்திக்கொண்டதே இல்லை.

தனிப்பட்ட வாழ்வில் மிகவும் ஆச்சாரமானவராக தன்னை காட்டிக் கொள்ளவும் அவர் தவறவில்லை.

நெற்றி செந்தூரம் அவரை அய்யங்கார் என அடையாளம் காட்டியது. கவலைப் படவில்லை. கோவில் கோவிலாய் சுற்றி வந்து பார்ப்பனர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியது முதல் வேட்பாளர் தேர்வில் ஜாதக குறிப்புகளை இணைப்பது வரை சனாதன தர்மத்தின் பிரதிநிதியாகவே தன்னை வெளிப் படுத்திக் கொண்டார். பார்பனர்கள் அவர் பின்னே அணி வகுத்தார்கள்.

எம்ஜியார் மூகாம்பிகை கோவிலுக்கு நகை காணிக்கை செலுத்தியதை தவிர தன்னை சனாதன தர்ம ஆதரவாளராக காட்டிக் கொண்டதே இல்லை.

எம்ஜியார் காலத்தில் பெரியார் அண்ணா கலைஞர் திராவிட இயக்க தலைவர்களாக உச்சத்தில் இருந்தது மட்டுமல்ல அவர்களோடு தத்துவார்த்த ரீதியாகவும் ஒத்த கருத்தில் இருந்தார். எனவே எம்ஜிஆர் அவர்களுக்கு எதிராக எத்தகைய முரண்பட்ட செயல் களையும் செய்ததில்லை. எம்ஜிஆர் திராவிட இயக்கத்தின் கொள்கை வழி தலைவர்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் பார்ப்பனீய எதிர்ப்பு மூடநம்பிக்கை எதிர்ப்பு சாதி ஒழிப்பு போன்றவைகளை அவர்கள் அளவுக்கு உயர்த்தி பிடிக்காவிட்டாலும் எதிர் திசையில் சென்றதில்லை. இதுவே ஓரளவு மென்மையான போக்காக கருதப் பட்டது.

ஆனால் ஜெயலலிதாவை அப்படி சொல்ல முடியுமா? அவர் பார்ப்பனீய பிரதிநிதி என்பதில் அஇஅதிமுக வினருக்கு ஆட்சேபம் இருக்கலாம். அதில் உண்மையிருக்கிறதா?

ஜெயலலிதா பெரியார் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செய்தார். அண்ணா பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செய்தார் என்பது எல்லாம் அவர்களின் கொள்கைகளில் அவருக்கு உடன்பாடு என்பதின் அடையாளமாக கொள்ள முடியாது.  மரியாதை செய்யாமல் திராவிட இயக்க தலைவராக நீடிக்க முடியாது என்பது அவருக்கு தெரியாதா?

சாதி அமைப்புக்கு எதிராக என்றாவது பேசியிருக்கிறாரா? சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்களின் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்ட முனைப்பு காட்டியிருக்கிறாரா?

அதைப்போலவே ஜெயலலிதா மறைவு பார்ப்பன பிரதிநிதி இடத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது. அந்த இடத்தை பூர்த்தி செய்ய வந்தவர்தான் கமல்ஹாசன்.

இரண்டு திராவிட இயக்கங்களோடும் உறவில்லை என்று கமல்ஹாசன் சொன்னது தத்துவார்த்த ரீதியில்தான்.

பாஜக வை எதிர்த்து எப்போதாவது கமல்ஹாசன் கடுமையான விமர்சனத்தை வைத்திருக்கிறாரா ?

ஸ்ருதி என்பது வேதத்தின் பெயர். வேதத்தை ஏற்றுக் கொள்ளாத எவரும் வேதத்தின் பெயரான ஸ்ருதியை தன் மகளுக்கு பெயராக வைப்பாரா?

கமல்ஹாசன் என்ற தனி நபருக்கு அரசியலுக்கு வரவும் கொள்கைகளை பிரச்சாரம் செய்யவும் எல்லா வகையான உரிமையும் உண்டு. பார்ப்பனர் என்பதால் அவருக்கு எந்த உரிமையும் இல்லாமல் போய் விடாது.

ஆனால் அவரை ஏதோ எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவரைப் போலவும் சாதி மதங்களுக்கு எதிரி போலவும் சிலர் சித்தரிக்க முயல்வதை தவறு என்று சொல்வதே நமது நோக்கம்.

தமிழர்களை  எந்த வேடம் பூண்டு வந்தாலும் ஏமாற்ற முடியாது. அது தமிழர் என்ற வேடமானாலும் கூட.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசர சட்டம் இயற்ற ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தல் ??

அயோத்தி ராமர் கோயில் – பாபர் மசூதி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறைஈட்டில் உள்ளது.

அலஹாபாத் உயர் நீதிமன்றம் தாவா இடமான ஏக்கர் 2.77 இடத்தை மூன்று பங்காக பிரித்து ஒரு பங்கை நிர்மொஹி அஹாரா என்ற இந்து அமைப்பிற்கும் இரண்டாவது பங்கை ராம் லல்லா விராஜ்மன் என்ற ராமர் விக்ரஹத்துக்கும் மூன்றாவது பங்கை சன்னி வக்பு போர்டுக்கும் தந்து தீர்ப்பளித்தது .

இந்த தீர்ப்பை எதிர்த்துதான் இப்போது உச்சநீதி மன்றத்தில் மேன்முறையீடு.      சாதாரண சிவில் வழக்கு அல்ல இது. ஆனால் உச்சநீதிமன்றம் இதை சாதாரண சிவில் வழக்காக பாவித்து மூன்று நபர் அமர்வு விசாரித்தால் போதும் என்று நினைகிறது .

ஆனால் இந்து அமைப்புகள் குறைந்தது ஏழு அல்லது ஒன்பது நபர் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கோருகின்றன.

தீர்ப்பு எப்படி வரும் என்பதில் குழப்பம் இருப்பதால் இந்து அமைப்புகள் பொறுமை இழந்து வருகின்றன.

ஏதாவது ஒரு அவசர சட்டம் இயற்றி அதன் மூலம் ராமர் கோவில் காட்ட ஆர் எஸ் எஸ் ஆதாரவளிக்கிறது.. சமீபத்தில் அதன் தலைவர் மோகன் பகவத் கோவில் கட்ட சட்டம் இயற்றுவதை ஆதரித்து பேசியிருப்பது சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளர் அருண் குமார் நீதிமன்றம் விரைந்து தீர்ப்பு தர வேண்டும் அரசு கோவில் கட்ட ஏதேனும் தடைகள் இருந்தால் அவற்றை நீக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் சொல்லிவிட்டால் அதன் அத்தனை துணை அமைப்புகளும் சேர்ந்து குரல் கொடுப்பார்கள்.

முஸ்லிம் தரப்பு சட்டம் இயற்ற படுவதை விரும்பவில்லை. கொண்டு வந்தாலும் அதுவும் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டே தீர வேண்டும்.

இதற்கிடையில் விஸ்வ இந்து பரிஷத்தின் தலைவர் சாத்வி ப்ராச்சி என்பவர் உச்சநீதிமன்றம் எந்த வகையில் தீர்ப்பளித்தாலும் கோவில் கட்டியே தீருவோம் என்கிறார். இவர்தான் இஸ்லாம் ஒரு ஆபத்தான மதம் என்றும் முஸ்லிம் பெண்கள் மதம் மாறி இந்து இளைஞர்களை மணந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியவர்.

நரேந்திர மோடியின் ஆட்சிக்  காலத்தில் ராமர் கோவில் கட்ட முடிய வில்லை என்றால் இனி யார் காலத்தில் இது முடியும் என்பது சங்கத்தின் கவலை.

எப்படியானாலும் வரப்போகும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ராமர் கோவில் பிரச்னையை ஆதாயம் அடையும் பாஜக-வின் திட்டம் நிறைவேறாது என்றே தெரிகிறது.

ஏனென்றால் ஜனவரி 2019-ல் உச்சநீதி மன்றத்தில் விசாரணை தொடங்கினாலும் தேர்தல் நடைபெற வாய்ப்பிருக்கும் ஏப்ரல் மாதத்திற்குள் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வாய்ப்பு குறைவு.

உயர் நீதிமன்றத்தில் 90 நாட்கள் நடந்த வழக்கறிஞர்-களின் வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் அதற்கும் குறையாமல் நடக்கலாம் அல்லவா?

ஆக தேர்தலுக்கு பிறகுதான் தீர்ப்பு.

சபரிமலை; எல்லா மதத்தவரும் செல்லலாம்- கேரள உயர் நீதிமன்றம் கருத்து

சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய காவல் துறை பாதுகாப்பு கேட்டு மனு செய்த நான்கு பெண்களின் மனு கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கருத்து சொன்ன ராமச்சந்திர மேனன் தேவன் ராமச்சந்திரன் அடங்கிய அமர்வு இந்துக்கள் அல்லாதோரை சபரிமலைக்கு அனுமதிக்க மறுப்பது கேரளாவில் நிலவி வரும் சமய ஒற்றுமையை சீர் குலைக்கும் என்றனர்.

மேலும் கூறுகையில்  சபரிமலை மட்டுமே எல்லா மதத்தவரும் சென்று வழிபட உரிமை படைத்த கோவிலாக விளங்கி வருகிறது. அங்கேதான் பக்தர்கள் சபரிமலை பிரயாணத்தின் ஒரு பகுதியாக வாவர் மசூதிக்கும் சென்று வழிபடுகின்றனர் என்றனர்.

இந்து ஆலயத்தின் ஒரு பகுதியாக மாற்று மதத்தவர் வழிபாட்டிடம் இடம் பெறுவது  அரிது.

வாவர் ஒரு இஸ்லாமியர். ஐயப்பன் சுவாமி. இஸ்லாம் தோன்றி 1600 ஆண்டுகள்தான் ஆகின்றன. இஸ்லாம் இந்தியாவுக்கு வந்து அங்கே இருக்கும் ஒரு குடிமகன் இஸ்லாமியனாக மாற சில நூற்றாண்டுகள் பிடித்திருக்கும். அவர் சுவாமி அய்யப்பனின் நண்பராக விளங்கி இருக்கிறார். அதுவும் சுவாமி அய்யப்பன் ஆலயம் இருக்கும் இடத்திலேயே வாவருக்கும் ஒரு மசூதி எழுப்பி அவரையும் வணங்கி வரவும் அனுமதி வழங்கப் படுகிறது. அதிலும் குறிப்பாக மசூதியிலேயே விபூதி பிரசாதம் வழங்கப் படுவது ஆச்சரியம். இதெல்லாம் இஸ்லாத்தில் அனுமதிக்கப் படுவதில்லை என்றாலும் பல நூற்றாண்டுகளாக இந்த நடைமுறை அமுலில் இருந்து வருகிறது.

போகிற போக்கை பார்த்தால் வாவர் மசூதியை அங்கே இருக்கக் கூடாது என்று கூட குரல் எழுப்பலாம். அப்படி செய்தால் சுவாமி அய்யப்பனையே அவமதித்ததாக ஆகலாம்.

மாற்று மதத்தவர் இருமுடி கட்டாமல் பதினெட்டாம்படி ஏற முடியாது. இருமுடி கட்டாதவர்கள் வேறு வழியில் சுவாமி  அய்யப்பனை தரிசிக்கலாம். இதுதான் நடைமுறை.

இந்து இயக்கங்கள் எதைச் செய்தாவது பாஜக வெற்றி பெற ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்கள் வழிபடும் உரிமை பிரச்னையை பெரிதாக்கி வருகிறார்கள்.

நீதிமன்றங்கள் இருக்கும் வரை அவர்கள் எண்ணங்கள் ஈடேற போவதில்லை.

நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு பொருளாதாரம் தெரியாது; பாஜக எம்.பி சு.சாமி ?!!

பாஜக-வின் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் சுப்பிரமணிய சாமி.

சமீபத்திய பேட்டி ஒன்றில் ப.சிதம்பரம் ஜெயிலுக்கு போவார் என்றும் பாஜக-வல் சேர முயன்று பாஜக சேர்க்க மறுத்ததால் சேர வில்லை என்றும் கூறியவர் சோனியாவும் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை வழக்கில் சிறை செல்வார் என்று கூறினார்.

அதுவாவது பிற கட்சிகளில் விமர்சிப்பதாக் எடுத்துக் கொள்ளலாம். அடுத்து கூறியதுதான் முக்கியம். மத்திய அரசின் சேவை பொருள் வரி சட்டத்தை மக்கள் மீது திணிக்கக் கூடாது என்றவர் நிதி அமைச்சர் என்பவர் பொருளாதாரத்தில் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். துரத்ரிஷ்டமாக நமக்கு அப்படி கிடைக்கவில்லை. அருண் ஜெட்லிக்கு பொருளாதாரம் தெரியாது என்றார்.

இப்படி சொல்லி விட்டு யார் வேண்டுமானாலும் கட்சியில் நீடித்து விடமுடியுமா?

பாஜக சுப்பிரமணிய சாமியை உள்ளே வைத்திருப்பதே அவர் ஆட்சி மீது தாக்குதல் நடத்தாமல் இருக்கத்தான். ஆனால் அதையும் மீறி அவர் தொடர்ந்து மோடி அரசின் நடவடிக்கைகளை விமர்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இது பாராட்ட வேண்டிய உட்கட்சி சுதந்திரமா? வேறு யார் வேண்டுமானாலும் இப்படி பேசி விட்டு கட்சியில் நீடிக்க முடியுமா?

பாஜக என்பது உயர் வகுப்பார் கட்சி. அதனால்தான் அவர்கள் மட்டும் எந்த பயமும் இன்றி தங்கள் மனதில் தோன்றியதை பேசமுடிகிறது.

பாஜக என்றாலே இரட்டை நாக்குதானா?

கையாலும் காலணியாலும் அடிக்க முடியாதபடி சிவலிங்கத்தின் மீது இருக்கும் தேளைப் போன்றவரா மோடி??

ஆர் எஸ் எஸ் தலைவர் ஒருவர் பத்திரிகையாளர் வினோத் ஜோஸ் என்பவரிடம் 2012 ல் நரேந்திர மோடி பற்றி  ஒரு கட்டுரையில் கூறியதாக காங்கிரஸ்  தலைவர் சஷி தரூர் ஓர் இலக்கிய விழாவில் பேசும்போது கூறியது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

‘அவர் சிவலிங்கத்தின் மேல் இருக்கும் தேளைப்போன்றவர். அவரை நீங்கள் கையாலும் தள்ள முடியாது . தேள் கொட்டிவிடும். காலணியாலும் அடிக்க முடியாது. இறை நிந்தையாகிவிடும். ‘அதாவது இந்துத்வா சக்திகளுக்கும் மோடிக்கும் இருக்கும் உறவுமுறை பற்றி அவர் கொண்டிருந்த கருத்தை இப்படி உவமை மூலம் பதிவு செய்திருந்தார். ”

ஆர்.எஸ்.எஸ். தலைவர் அப்படி  சொன்னாரா இல்லையா என்பதை நிரூபிக்க கோரிக்கை வைக்க வேண்டிய பாஜக அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சசி தரூர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்..

ஆர். எஸ் எஸ் தலைவர்கள் எப்படியும் பேசக் கூடியவர்கள். பேசியதை மறுத்து பேசவும் தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரவும் தயாராக இருப்பவர்கள் என்று பேர் பெற்றவர்கள்.

இது எப்படி சிவலிங்கத்தை அவமதிப்பது ஆகும் என்பது  தெரியவில்லை.

‘ இந்து கடவுள்களை அவமதிப்பதை இந்த நாடு சகித்துக் கொள்ளாது.  இதை சோனியாவும் ராகுலும் அங்கீகரிக்கிறீர்களா? விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறார் பிரசாத்.

உண்மையிலேயே ஒரு தேள் சிவலிங்கத்தின் மீது இருக்கும் பட்சத்தில் ஒரு சிவ பக்தர் காத்திருப்பதை விட என்ன செய்து விட முடியும்? அர்ச்சகரை விட்டு நீரை ஊற்றி விரட்டலாம்.

எப்படியிருந்தாலும் கற்பனையான இந்த உவமை ரசனையாக இருப்பதால் பாராட்டலாம்.

சிறிசேன-ரணில் விக்ரமசிங்கே சண்டையில் தமிழர்களுக்கு என்ன தீர்வு கிடைக்கும்?

இலங்கை பிரச்னையில் இப்போது இந்திய தமிழ் ஊடகங்கள் சிறிசேன-ரணில் விக்ரமசிங்கே பதவி சண்டையை மையப் படுத்தி எழுத தொடங்கிவிட்டன.

எத்தனை வீழ்ச்சி!  சிங்களர் சண்டை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.  முடிவடைகிற அரசியலா அது? அதனால் தமிழர் பிரச்னை எப்படி தீரும்?

போர் முடிந்து விடுதலை புலிகள் வீழ்த்தப் பட்டு ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன.  தமிழரது பிரச்னை பற்றி எவர் பேசியிருக்கிறார்?. என்ன விவாதம் நடந்திருக்கிறது?  அரசியல் தீர்வு மட்டுமே சாத்தியம் என்று கடைசி வரை சொல்லி வந்த இந்திய அரசு இப்போது எதையும் பேசுவதில்லையே ஏன்?

எல்லா வித நாடகங்களும் சிங்கள அரசியலில் அரங்கேறுகிறது. பாராளுமன்ற  பெரும்பான்மை இல்லாமல் சிறிசேன – ராஜபக்சே கூட்டணி திடீர் என்று ரணில் விக்ரமசிங்கேவை பதவி நீக்கம் செய்து அவரது இடத்தில் ராஜபக்சேவை பிரதமர் ஆக நியமிக்கிறது. ரணில் நான்தான் பிரதமர் என்கிறார். பாராளுமன்ற சபாநாயகர் ரணிலே பிரதமர் என்கிறார். அமெரிக்கா பாராளுமன்றத்தை கூட்டி முடிவெடுங்கள் என்கிறது.   இந்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்கிறது. சீனா சிறிசேன பக்கம் நிற்கிறது. ரணில் பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டு பேரை சுட ஒருவர் இறக்கிறார். இத்தனை களேபரத்துக்கும் இடையில் இன்று ராஜபக்சே பிரதமர் ஆக பதவி ஏற்கிறார். அவருடன் அமைச்சரைவயும் பதவி ஏற்கிறது.

நாளை எது நடந்தால் நமக்கென்ன? எந்த சிங்களர் வந்தால் என்ன நன்மை நடக்கப்  போகிறது? ரணில் தமிழர் ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்படுகிறது. இதுவரை என்ன செய்திருக்கிறார்? இத்தனை ஆண்டுகள் பிரதமராக இருந்தபோது தமிழர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு பற்றி  பேசியிருக்கிறாரா? சிறிசேனவை விடவும் ராஜபக்சேவை விடவும் ரணில் பரவாயில்லை என்று சொல்வதில் உண்மையிருந்தாலும் அதில் என்ன ஆகப்போகிறது?

தமிழர் உரிமை மறுப்பதில் எல்லா சிங்களர்களும் ஒன்று சேர்ந்து விடுகிறார்களா இல்லையா?

இந்திய அரசுக்கு இந்திய பெரு முதலாளிகளின் முதலீடு பாதுகாப்பு முக்கியம்.  சீனாவுக்கு ராணுவ தளம் அமைப்பது முக்கியம். அதற்கு ராஜபக்சே உதவிக் கரம்  நீட்டுகிறார் என்றால் அவர் இந்தியாவுக்கும் மோடிக்கும் நண்பராக  நீடிப்பது எப்படி?

இரண்டு லட்சம் ராணுவ வீரர்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் யாழ் தமிழர்களைப் பற்றி யார் பேசுவது? அங்கே மனிதன் சுதந்திரமாக வாழ முடிகிறதா?

மலையகத் தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக உரிமை பறிக்கப் பட்டு வாழ்ந்து வருகிறார்களே அவர்களைப்  பற்றி பேச முடிகிறதா? பாவம் அவர்களின் தலைவர்கள் எந்த சிங்களர் ஆட்சிக்கு வந்தாலும் கேட்காமலேயே ஆதரவளித்து அடிமைகள் ஆகிவிடுகிறார்கள். இப்போது ராஜபக்சேவுக்கு கேட்காமலேயே ஆதரவளித்தது போல.

நாம் சொல்வது இலங்கையில்  சிங்களர் சண்டை இங்கே தலைப்புசெய்தியாக ஆகக் கூடாது. ஒரு பத்திச் செய்தியாக வேண்டுமாளால் வரலாம்.

மேதகு பிரபாகரன் சொல்லி வந்தது இதுதான்.   சிங்களர் சண்டை போடுவதும் நாம் வேடிக்கை  பார்த்துக் கொண்டிருப்பதும்  சமாதானம் பேசுவதும் உடன்படிக்கை செய்து கொள்வதும் பிற்கு அதை ரத்து செய்வதும் ஆன இந்த நாடகங்களை எத்தனை காலம் நாம் பார்த்துக் கொண்டிருப்பது  என்றே அவர் சொல்லி வந்தார் /.   அதனால்தான் ஆயுத போர் என்ற தீர்வுக்கான வழியை  தேர்ந்தெடுத்தார்.

அது முற்றுப் பெற்ற பின் மீண்டும் அதே சிங்களர் அரசியல் நாடக காட்சிகள் அரங்கேறுகின்றன. இதையும் நாம் விவாதித்து பொழுதை கழிக்க வேண்டுமா?

இனப்பிரச்னைக்கு அரசியல் தீர்வுதான் ஒரே வழி என்றானபின் அதைப்பற்றி மட்டுமே தமிழர் சிந்திக்க வேண்டும். விவாதிக்க வேண்டும்.

வடக்கு மாகாண முதல் அமைச்சர்  விக்னேஸ்வரன்  இனி தமிழர் கூட்டணியுடன் கூட்டு இல்லை  என்றும் தனியாக போட்டி என்றும் அறிவிக்கிறார்.

சிங்களர் சண்டை போடும்போது தமிழர் மட்டும் ஒற்றுமையாகவா இருப்பார்கள்?

தகுதி படைத்த தமிழர் தலைவன் அறவழியில் போராடி ஈழத்தமிழர் உரிமை  மீட்க தோன்றுவான் என்று எதிர்பார்த்து தமிழினம் காத்திருக்கிறது.

சர்கார்- செங்கோல் திரைக்கதை சண்டை ??~~!!

சர்கார்- செங்கோல் திரைக்கதை சண்டை.

காலங்காலமாக நடைபெற்று வருவது தான் சினிமா கதை காபிரைட் சண்டை.

அதில் விஜய் நடித்து தீபாவளிக்கு வர இருக்கும் சர்கார் படமும் சேர்ந்துள்ளது.   இந்த செங்கோல் திரைக்கதையை பத்து வருடத்திற்கு முன்பு எழுத்தாளர் சங்கத்தில் வருண் என்கிற ராஜேந்திரன் பதிவு செய்து வைத்திருக்கிறார்.

அந்த கதையை திருடிதான் ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்கி இருக்கிறாராம். ஏ.ஆர்.முருகதாஸ் ஆட்சேபனை இரண்டும் வெவ்வேறு கதைகள் என்பது. எழுத்தாளர் சங்க உறுப்பினர்கள் ஆறு பேர் இரண்டும் வேறு வேறு கதைகள் என்று சொன்ன நிலையில் தலைவர் பாக்கியராஜ் 5 உறுப்பினர்களை ஆதரவை மட்டும் வைத்து இரண்டும் ஒரே கதைதான் என்று கடிதம் கொடுப்பது எப்படி என்று அவர் கேள்வி கேட்கிறார் .   

கரு ஒன்றாக இருந்தால் கதையும் ஒன்றுதான் என்று எடுத்துக்கொள்ள முடியுமா? கர்ணன் கதையை கருவாகக் கொண்டது தான் இயக்குனர் மணிரத்தினம் தயாரித்த ரஜினிகாந்த்தின் தளபதி படம். ஆனால் ட்ரீட்மெண்ட் வேறு.   

ஒரே தன்மை கொண்டதாக பல கதைகள் உருவாகுவதற்கு வாய்ப்புகள் உண்டு.  ஆனால் அந்த கருவை எப்படி மெருகேற்றி ட்ரீட்மென்ட் செய்து சம்பவங்களை புதிதாக கற்பனை செய்து அந்தக் கருத்துக்கு வலு சேர்க்கிறார்கள் என்பது தான் கேள்வி?     

இரண்டுக்குமே கதையின் மையக்கரு ஒன்றுதான் என்பது தான் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் கருத்து. கதாநாயகனின் ஓட்டை வேறு யாரோ போட்டு விடுகிறார்கள். அதற்கு கதாநாயகன் காணும் தீர்வு என்ன ? இதுதான் கரு என்றால் அது போதுமா என்பதை நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும். இப்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. 

முருகதாசை மிரட்டி பணம் வாங்குவதற்கு செய்த சூழ்ச்சிக்கு கே.பாக்யராஜ் துணை போனாரா அல்லது கருவைத் திருடி படம் எடுத்துவிட்டு ட்ரீட்மெண்ட் வேறு கொடுத்தேன் என்று சொல்லி ஏஆர் முருகதாஸ் தப்பிக்க பார்க்கிறாரா என்பதை நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தான் நம்மால் சொல்லமுடியும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி.   

சினிமா எடுப்பவர்கள் எல்லோரும் மனச்சான்றின் படிதான் நடக்கிறார்களா என்பது  கேள்விக்குறிதான். மீ டூ சம்பவங்கள் காட்டும் உண்மை இதுதான். 

இதில் நடிகர் விஜய் ஏன் எந்தக் கருத்தும் சொல்லவில்லை? அவர் வெறும் கதாநாயகனாக மட்டும் இருந்திருந்தால் இந்தக் கேள்விக்கு இடம் இருந்திருக்காது. அவர்தான் வருங்காலத் தலைவராக உருவகப் படுத்தப் பட்டு வருகிறாரே? எனக்குத் தெரியாது என்ற ஒற்றை வரியோடு அவரின் பங்கு முடிந்து விடுமா என்ன?

ஆசிரமம் மீது தாக்குதல் நடத்திய இந்து அமைப்புகள் ??!

ஆசிரமம் மீது தாக்குதல் நடத்திய இந்து அமைப்புகள் .

யார் பயங்கரவாதிகள்? இந்து அமைப்பபுகள் இகாற்கு விடைஅளித்திருக்கின்றன.  சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியும் இந்து அமைப்புகளும் பல்வேறு வகைகளில் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள்.   

இந்த எதிர்ப்பு பக்தர்களின் தன்னெழுச்சியா  அல்லது தூண்டிவிடப்பட்ட வன்முறையா இதுதான் கேள்வி. ஆட்சேபணை செய்பவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறலாம். அதற்காக சட்டப்படி மக்கள் ஆதரவை திரட்ட சட்டப்படி எதிர்ப்புகளை காட்டலாம். ஆனால் நடந்தது என்ன?   

மத வன்முறையை தூண்டி விட்டு அரசியல் லாபம் அடைவது ஒன்று தான் பாரதிய ஜனதா கட்சி லட்சியம் என்பதை நிரூபித்து விட்டார்கள். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்களை கைது செய்வதை எதிர்த்து நடவடிக்கைகளை நிறுத்தவில்லை என்றால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று அமித்ஷா எச்சரிக்கிறார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதற்கு கேரளாவில் உள்ள பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதுதான் அவருடைய நிலைப்பாடு. பெண்கள் மட்டும்தான் போராடுகிறார்களா? ஏற்பாடு செய்தது யார் ?   

உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்கும் உரிமை இருக்கிறது அல்லவா? அதை சங்க பரிவாரங்கள் அனுமதிக்கின்ற்னவா? கேரளாவை சேர்ந்த சாமியார் சந்தீபானந்தா வெளிப்படையாக உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இந்த நிலைப்பாட்டை விளக்கி கூறி வருகிறார். அவருக்கு ஐயப்ப பக்தர்களும் சில இந்து அமைப்புகளும் எதிர்ப்புகளை பதிவு செய்து வந்தனர். 

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள சாமியார் சந்தீபானந்தாவின்  ஆசிரமத்தில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் அடித்து நொறுக்கி ஆசிரமத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த 2 கார் மற்றும் இரு சக்கர வாகனம் ஒன்றுக்கும் தீ வைத்திருக்கிறார்கள்.     

அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் சொல்லியிருந்தாலும் பாரதிய ஜனதா கட்சியையும் சங்பரிவார் அமைப்புகளை அடையாளம் கண்டு கொள்வதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சியாக விளங்குகிறது.    மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய தவிர்க்க வேண்டிய எதிர்க்க வேண்டிய சக்தி இந்து அமைப்புகள்தான் என்பதை இந்த சம்பவம் மேலும் உறுதிப்படுத்துகிறது.   

ரஜினிகாந்த் ஏமாற்றுகிறாரா? ஏமாறிக் கொண்டிருக்கிறா?

ரஜினிகாந்த் ஏமாற்றுகிறாரா ஏமாறிக் கொண்டிருக்கிறா?

மீண்டும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது விவாதப் பொருளாகியிருக்கிறது.    23ஆம் தேதி ரஜினிகாந்த் கொடுத்த அறிக்கை அவரது ரசிகர்களை பெருமளவு  ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

 வெறும்  ரசிகர் மன்றத்தை வைத்துக்கொண்டு அரசியலில் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால் அவரது புத்தி பேதலித்து உள்ளது என்று அர்த்தம் என்று இப்போது சொல்லும் ரஜினிகாந்த் ரஜினி ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றுவதாக அறிவித்தது ஏன்?     

அப்போதே மக்களை உறுப்பினராக சேர்ப்பதற்கு இவர் முன்வந்திருக்க வேண்டும் .   அரசியலுக்கு வருவது உறுதி, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவது உறுதி, 90 சதவிகித வேலைகள் முடிந்துவிட்டன என்றெல்லாம் சொல்லும் ரஜினிகாந்த் 30,  40 ஆண்டுகள் ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறவோ அரசியலில் ஈடுபடுவோ தகுதி ஆகிவிடாது என்பவர் உங்களுக்கு என்ன அரசியல் அனுபவம் என்று யாராவது கேட்டால் என்ன பதில் சொல்வார்?

ரஜினிகாந்த் தன் குடும்பத்தை பார்த்துக் கொண்டது உண்மைதான். ரசிகர்களை விசேஷ காட்சிகளுக்கு அதிக விலை கொடுத்து விற்கக்கூடாது என்று எப்போதாவது கட்டுப்பாடு விதித்து இருக்கிறாரா? கட்டவுட்களுக்கு அபிஷேகங்கள் கூடாது என்று எப்போதாவது சொல்லி இருக்கிறாரா? இவை எல்லாம் கை செலவு செய்யாமல் எந்த ரசிகன் வசூல் செய்து செய்திருக்க முடியும்?   

யாரையும் செலவு செய்யவேண்டும் என்று நான் சொல்லவில்லை என்கிறாரே அரசியலுக்கு வருபவர்கள் செலவு செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன் என்று சொல்வாரா? அரசியலுக்கு என்று பல எழுதப்படாத விதிகள் இருக்கின்றன.   

கொள்கை என்ன என்பதை விளக்க வேண்டும் என்ற அடிப்படை தேவைகள் அரசியலில் இல்லை என்பதுதான் ரஜினிகாந்தின் நம்பிக்கையா? ஓட்டுக்கு  காசு கொடுக்க மாட்டேன் என்ற  உறுதியான நிலைப்பாடு எடுக்காமல் என்ன மாற்றத்தை இவர் கொண்டு வர மீண்டும்  அரசியலில் செலவு செய்பவர்களுக்கு மட்டும்  பொறுப்புகள் கொடுத்தால் அவர்கள் செய்த செலவுகளை திருப்பி எடுக்கத்தான் முயற்சிப்பார்கள். இதற்கு என்ன விடை வைத்து இருக்கிறார் ரஜினி?

இவர் சங்கப் பரிவாரங்களின் பிரதிநிதி என்பது இதுவரை இவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் முத்திரை. அதை உடைப்பதற்கு என்ன செய்து இருக்கிறார் ரஜினி? ஆம் அப்படித்தான் என்கிறாரா ?     

இவர் நினைத்தபோது பிரச்சினைகளைப் பற்றி கருத்து சொல்வார். அதுவரை பிரச்சனைகள் காத்திருக்க வேண்டுமா? இது என்ன நியாயம் ரஜினிகாந்த் ?  என்னையும் ரசிகர்களையும் பிரிக்க முடியாது என்று சொல்லும் ரஜினிகாந்த் அவர்களை மட்டுமே வைத்து அரசியல் செய்ய போவதில்லை என்று அறிவித்த பின் அரசியலுக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கும் ரசிகர் மன்ற பொறுப்பாளர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல்களுக்கு  என்ன தீர்வு வைத்திருக்கிறார் ரஜினி? 

ரசிகர்களை ஏமாற்றி பொது மக்களையும் ஏமாற்றி தானும்  ஏமாறாமல் இருப்பதற்கு ரஜினிகாந்த் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். தேர்தலில் நின்று வென்றாலும்  அரசு பொறுப்பிற்கு வரமாட்டேன் என்பதுதான் அது. பொறுப்புக்கு வராமல்  ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என்றால் நாட்டுக்கு நன்மை செய்வதற்கு சட்டமன்ற உறுப்பினராக பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் இருந்து பணி செய்ய முடியாதா?   அரசு பொறுப்பிற்கு வந்து தான் செய்ய வேண்டுமா?   

மக்கள் மனதறிந்து ரஜினி பேசட்டும்.   

இதற்குத்தானா இத்தனை தாமதம்? 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்? 3-ம் நீதிபதி சர்ச்சை தீர்ப்பு?

18/09/2017 ல் 18 எம் எல் ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தீர்ப்பு அளித்தார்.

14/06/2018 ல் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தகுதி நீக்கம் செல்லும் என்றும் நீதிபதி சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது என்றும் தீர்ப்பளிக்க 3 வது நீதிபதியாக நீதிபதி  சத்யநாராயனாவை உச்ச நீதி மன்றம் நியமித்தது.

31/08/2018 ல் பனிரெண்டு நாள் வாதத்துக்குப்பின் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி இன்று 25/10/2018 ல் தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு அளித்திருக்கிறார்.

பாமரனுக்கு சட்டம் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறான். ஆம். நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த ஓ பி எஸ் ம் கூட்டாளிகளும் துணை முதல்வராகவும் எம் எல் ஏக்களாகவும் தொடர்கிறார்கள். ஆனால் அப்படி எந்த வாக்கும் ஆட்சிக்கு எதிராக அளிக்காமலே 18  எம் எல் ஏக்கள் தகுதி இழந்து நிற்கிறார்கள்.

இதைப்பற்றி  நீதிபதி இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பில் குறிப்பிடும்போது “குறைந்த பட்சம் தகுதி நீக்க மனு போடப்பட்ட பின்பாவது அவர்களுக்கு அறிவிப்பு அனுப்பி இருக்க வேண்டும். இருந்தாலும் அதை செய்யத் தவறிய காரணத்தாலேயே அதற்கு கெட்ட எண்ணம் காரணம் என்று அனுமானிக்க முடியாது ” என்று குறிப்பிடுகிறார்.

பின் அதை எப்படி எடுத்துக கொள்வது என்பது பற்றி அவர் விளக்க வில்லை.

முதல்வரை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் மனு கொடுத்த செயல் மட்டுமே தகுதி நீக்க அடிப்படையாக அமைய முடியுமா என்பது இன்னும் புதிராகவே உள்ளது.

எடியூரப்பா வழக்கிலும் ஜார்கண்ட் அரசுக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்த வழக்கிலும் இரண்டு நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்தான் உச்ச நீதிமன்றம் சபாநாயகர் முடிவு செல்லாது என்று அறிவித்தது.

18 எம் எல் ஏக்களும் உச்சநீதி மன்றம் செல்லப் போகிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை.

ஆனாலும் உச்ச நீதி மன்றம் மற்றும் மக்கள் மன்றம் என்ற இரண்டிலும் நீதி தேடுவதுதான் அவர்களுக்கு வாய்ப்பாக இருக்கும்.

ஏற்கெனெவே இருபது தொகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் பொதுமக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையம் செய்யும் தவறுகள் சொல்லி மாளாது. மத்திய அரசின் அறிவுருத்தல் இல்லாமலா இப்படி நடக்கும்?

 ஏன் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் எல்லா மாநிலத் தேர்தல்களோடு இடைத் தேர்தல் நடத்த  தேர்தல் ஆணையம் முன்வரவில்லை? 

 ஏன் இன்னும் ஐந்து மாதத்திற்குள் பாராளுமன்ற தொதுத் தேர்தல்  வரப்போகிற நிலையில் கர்நாடகத்தில் பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும்? 

யார் கேட்பது இதையெல்லாம்? யாரிடம் கேட்பது?

நீதிபதி சத்யநாராயணா விடம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது இரண்டு நீதிபதிகள் எதில் எல்லாம் முரண்படவில்லையோ அவை தவிர்த்து எதில் முரண்பட்டிருந்தார்களோ அதில் மட்டுமே  இவர் தனது கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் வாதங்கள் முன் வைக்கப் பட்டதாக 18 எம் எல் ஏக்களின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்திருந்தார்.

எனவே முரண் படாத பிரச்னை பற்றி வாதம் செய்யப்படவில்லை.

ஆனால் இப்போது நீதிபதி சத்யநாராயணாதான் தனிப்பட்டு மனதை செலுத்தி முடிவெடுக்கப் போவதாக சொல்லி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இரண்டு மாறுபட்ட கருத்துக்களில் எது சரி என்று இவர் தீர்ப்பளிப்பார் என்று எல்லாரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இவர் தனியாக வேறு  ஒரு  முடிவை  எடுப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

முழுத் தீர்ப்பு விபரங்களும் இன்னும் வெளியாகவில்லை. முழுமையான தீர்ப்பை படித்தால்தால் நீதிபதி வேறு என்னென்ன கோணங்களில் பிரச்னையை அணுகியிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

நீதிமன்றங்களுக்கு அரசியல் சூழ்நிலையை கவனிக்கும் கடமை இல்லை. ஆனால் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் தொகுதி மக்கள் துன்பப்படுவதை கவனத்தில்  எடுத்துக் கொள்ளலாம். எடுத்துக் கொண்டிருந்தால் தாமதங்களை தவிர்க்கலாம்.

நீதிபதிகள் எவ்வளவோ சிரமங்களுக்கு இடையே பணி செய்கிறார்கள். பாமரனுக்கு அது தெரியுமா?

நீதி வழங்கப் பட்டதை அவர்களும் உணர்கிராற்போல் கால அளவு நடைமுறைகள் பின்பற்றப் பட்டால் தான் நீதிமன்றங்களின் மாண்பு பாது காக்கப் படும்.