Home Blog Page 60

சபரிமலை மக்களுக்கே சொந்தம்; தந்திரிக்கு உரிமையில்லை? கேரள முதல்வர் விளக்கம்?

ஐயப்பன் கோவிலை திருவாங்கூர் தேவஸ்தானம் தான் நிர்வகித்து வருகிறது.

இந்நிலையில் அனைத்து வயது பெண்களும் கோவிலுக்கு செல்லும் உரிமையை உச்சநீதிமன்றம் உறுதி செய்த நிலையில் சங்பரிவாரின் தூண்டுதலில் பந்தள அரச குடும்பமும் தந்திரிகளும் அறிவித்து பிரச்னை செய்தார்கள்.

பெண்கள் வந்தால் நடையை பூட்டி சாவியை கொடுக்க உத்தரவிட்டதாக பந்தள அரச குடும்பம் சொல்ல தந்திரிகள் பதினெட்டாம் படி முன் உட்கார்ந்து தர்ணா செய்த காட்சியும் நடந்தேறியது.

இதற்கெல்லாம் பதில் சொல்லும் வகையில் இன்று முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் கொடுத்தார்.

” தேவஸ்தானம் தான் கோவிலின் சட்ட பூர்வ சொந்தக்காரர். பூசாரியோ அல்லது பந்தள அரண்மனை உறுப்பினர்களோ சொந்தம் கொண்டாட முடியாது. அவர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே கோவிலை திருவாங்கூர் அரச வம்சத்திடம் ஒப்படைத்து விட்டார்கள். போராட்டம் நடத்திய பூசாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப் படும். நடையை சாத்தி விடுவேன் என அறிவிக்க தந்திரி கண்டரரு மோகனருவுக்கு அதிகாரம் கிடையாது. மலபார் பகுதியில் உள்ள கடத்த நாடு சிற்றரசுக்கு சொந்தமான லோகனற்கவு கோவிலில் தாழ்த்தப் பட்டவர்களை அனுமதிக்க பூசாரிகள் எதிர்ப்பு தெரிவித்து நடையை சாத்தினார். அவர்களை நீக்கி  விட்டு புதிய பூசாரிகளை கடத்த நாடு சிற்றரசர் நியமித வரலாறு உண்டு. தந்திரிகளின் கடமை பக்தர்களுக்கு உதவுவதுதான் . எதிர்ப்பது  அல்ல. ”

முதல்வரின் இந்த விளக்கத்தை சங்பரிவார் ஏற்றுக்  கொள்ளப்போவதில்லை.

இடது சாரி அரசுக்கு சங்கடம் ஏற்படுத்த சங்பரிவார் முடிவுசெய்துள்ளன.

பக்தர்கள் வழிபட செல்ல வேண்டுமே தவிர போராட்டம் நடத்த அல்ல.

அதுவும் சக பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க எல்லாருக்கும் கடமை உள்ளது.

எந்த சீர்திருத்தமும் போராட்டங்கள் இன்றி நிறைவேறிய தில்லை. எந்த போராட்டமும் வெற்றி பெறாமல் போனதும் இல்லை. சபரிமலையிலும் அதுதான் நடக்கும்.

சந்தி சிரிக்கும் சிபிஐ – உட்சண்டையால் நம்பிக்கை போயே போச்சு?

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் கட்டாய விடுப்பில் அனுப்பப் பட பொறுப்பு இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப் பட்டுள்ளனர்.

காரணம் பரஸ்பர குற்றச்சாட்டு. சட்ட விரோத பணப்பரிவர்த்தனை செய்த வழக்கில் இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷிக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது.

ராகேஷ் அஸ்தானா தலைமையில் இருந்த குழுவில் துணை கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் இடம் பெற்றிருந்தார்.

இந்த வழக்கில் ஹைதராபாத் தொழில் அதிபர் சதீஷ் சனா குற்றம் சாட்டப் பட்டிருந்தார். இவரை வழக்கில் இருந்து விடுவிக்க இடைத்தரகர் மனோஜ் பிரசாத்  என்பவரிடம் இருந்து அஸ்தானாவுக்கு ஐந்து கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக வழக்கு.

இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை சிறப்பு இயக்குனர் மீதும் தேவேந்திர குமார் மீதும் பதியப்பட்டு தேவேந்திர குமார் கைது செய்யப் பட்டார்.

இதே வழக்கில் அலோக் வர்மா இரண்டு கோடிரூபாய் லஞ்சம் பெற்றதாக அஸ்தானா புகார் தெரிவிக்க விவகாரம் முற்றிப்  போய் இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பி வேறு ஒருவரை இயக்குனராக நியமித்த அவலம் நடந்தேறியுள்ளது.

இருவர் மீது மட்டுமல்ல இவர்களின் கீழ் வேலை பார்த்த ஏராளமானவர்கள் இட மாற்றம் செய்யப் பட்டிருக்கிறார்கள்.

மத்திய அமைச்சரவையில் இருக்கும் சிலர் தாங்கள் தேர்தலுக்குப் பின் மோடிக்கு பதில் வேறு ஒருவரை கொண்டுவர சதி திட்டம் தீட்டி இந்த செயலில் ஈடுபட்ட தாக சுப்பிரமணியன் சாமி கூறுகிறார்.

ரபேல் விமான ஊழல் சம்பந்தமான ஆவணங்களை கேட்டதால் தான் அலோக் வர்மா விடுப்பில் அனுப்பப்பட்டதாகவும் செய்திகள் உலா வருகின்றன.

அஸ்தானா நியமனத்திற்கு அலோக் வர்மா ஆட்சேபித்தாலும் அதையும் மீறி மத்திய அரசு வேண்டுமென்றே அஸ்தானாவை நியமித்தது. இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற இருக்கும் வர்மாவுக்கு அடுத்ததாக அஸ்தானாவை  கொண்டு வர திட்டம்.

சிபிஐ-ன் நம்பகத் தன்மை இந்த சம்பவங்களில் சிதைந்தே போனது.

பிரதமரின் நேரடிப் பார்வையில் இயங்கும் அமைப்பில் இத்தனை அரசியலா ?

இதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டியவர் யார்? கட்டாய விடுப்பில் அனுப்பப் பட்டவர்கள் நீதிமன்றம் சென்று இருக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் சிபிஐ விசாரணை கேட்கும் அரசியல் கட்சிகள் இனி கேட்குமா?

நிலுவையில்  இருக்கும் சிபி ஐ வழக்குகள் என்னவாகும்?

சிஇஐ-ல் அரசியல் நிர்பந்தம் இருக்கும் என்று ஓரளவு நிரூபணம் ஆகிவிட்டது.

எப்படியும் இந்த பிரச்னை உச்ச நீதிமன்றம் செல்லும். அங்கும் என்ன ஆகும் என்று பார்க்க வேண்டும்.

மோடியும் அமித் ஷாவும் சிபி ஐ யை பிரித்து எடுத்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்ட பதிலுக்கு பாஜக-வும் இதில் காங்கிரஸ் அரசியல் செய்வதாக் குற்றம் சாட்டுகிறது.

அயல்நாடுகளில் பதுங்கி இருக்கும் விஜய் மல்லையா நீரவ் மோடி போன்றவர்கள் மீதான வழக்குகள் இனி என்ன ஆகும் என்ற கேள்வியும் பூதாகரமாக வெடித்து கிளம்புகிறது.

குட்கா வழக்கு இனி வேகம் பிடிக்குமா? முடங்கிப்போகுமா?

சிபிஐ மீது பொது மக்களுக்கு நம்பிக்கை பிறக்க இனி வெகு காலம் பிடிக்கும்.

வீர சூர எச்.ராஜா நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்?

எல்லாரையும் கேட்ட வார்த்தைகளில் பேசி பழக்கப் பட்ட எச் ராஜா தனக்கு இதனால் மரியாதை கிடைக்கும் என்று திட்டமிட்டு  பேசிவருகிறார்.

இம்மாதிரி கேட்ட வார்த்தைகளை  பயன்படுத்தும் யாரும் எந்த  கட்சியிலும் அகில இந்திய அளவில் பொறுப்புகளை பெற முடியாது.   பா ஜ க அவர்கள் கட்சி.    அவர்கள் யாரையும் திட்டுவார்கள். எனவே திட்டுபவர்களுக்கு மரியாதை அங்கே உண்டு.

அதனால்தான் காவல் துறையையும் நீதிமன்றத்தையும் வார்த்தைகளால் அர்ச்சித்து எச் ராஜா அவமரியாதை செய்தார்.

சி டி செல்வம் தலைமையிலான அமர்வு தானாக முன்வந்து நீதிமன்றத்தின் மாண்பை காக்கும் வகையில் நீதி மன்ற அவமதிப்பு வழக்குபதிவு  செய்து நோட்டிஸ் அனுப்பியது.

சி டி செல்வம் தலைமையில்  ஆன அமர்வுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று கட்சி சொன்ன ராஜா அதற்கு என ஒரு  மனுவைப் போட தலைமை நீதிபதி  அதையும் சி டி செல்வம் அமர்வே விசாரிக்கும் என உத்தரவிட   வேறு வழி இல்லாமல் இன்று அதே அமர்வின்  முன்பு ஆஜரான எச் ராஜா தனது செயல்களுக்கு  நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.

உயர் நீதிமன்றமும் நீதிமன்றத்தின் மாண்பு அதன் பெருந்தன்மையில் இருக்கிறது என்று பதிவு செய்து நிபந்தனை யற்ற மன்னிப்பு கேட்டதால் நீதி மன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை கைவிடுவதாக அறிவித்தது.

உணர்ச்சிப் வசப்பட்டு பேசிவிட்டாராம்.   விடியோவை பார்த்த பின் தான் தான் செய்தது தவறு என்று தெரிந்ததாம். தான் மிகவும் மனநிலை பாதிக்கப் பட்ட நிலையிலிருந்ததாக (agitated state of mind) வும் கூறினார்.  அதைத்தானே எல்லா கட்சிகளும் சுட்டிக்  காட்டி வந்தன.   ஒருநல்ல மனநல மருத்துவரை பார்த்திருக்கலாம் .

hraja periyar
hraja

ராஜா மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள்  153  188 294 (b)  353, 505 (1)(b)(c), 506 (1)  மீது வழக்குகள் பதியப் பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது.

அதில் நடவடிக்கை எடுக்க ஏன் காவல் துறை தாமதிக்க வேண்டும்?

ஆடின காலும் பேசிய வாயும்  நிற்கவே நிற்காது.    எச் ராஜா திட்டாமல் பேசினால் அவர் பேசுவதை  யாரும் கேட்க மாட்டார்கள். இது  அவருக்கு தெரியும்.   எனவே மீண்டும் அவர் திட்டுவதை கேட்க தமிழகம் தயாராக இருக்கட்டும்.

எப்போதும் பேசுவாரா ?   மாட்டவே மாட்டார்.  அதிகாரத்தில் இருக்கும் போது மட்டும் இப்படித்தான் பேசுவார்.

அதுவும் மாநிலத்தில் இருப்பது அடிமைகளின் ஆட்சி.   தைரியம்  இருக்குமா மத்திய ஆட்சியின் கட்சி தேசிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க?

சட்டம் தன் கடமையை செய்யும் என்று எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கிறார்கள் .

 

கேட்டது வேலை! கொடுத்தது பிள்ளை? அமைச்சர் ஜெயக்குமார் மீதான குற்றச்சாட்டில் உண்மை வெளி வர வேண்டும்!

சில நாட்களாக ஒரு ஒலி நாடா பரபரப்பாக ஊடகங்களில் சுற்றி வந்தது.

அதில் ஒரு பெண் ஒரு  ஆணுடன் பேசுகிறார்.   தன் மகள் கருவுற்றிப்பதாகவும் அதை கலைக்க  முடியவில்லை என்றும் உதவி செய்யும் படியும் அந்த பெண் பேச ஆண் குரல் அந்தப் பெண்ணை வீட்டுக்கு  வரும்படியும் தேவையானதை செய்வதாகவும் கூறுகிறது.   அதில் வரும் சில வசனங்கள் அவர்கள் முன்பே அறிமுகமானவர்கள் என்றும் அந்தப்  பெண்ணுக்கு  ஆண் சில சமயங்களில் பண உதவி செய்ததாகவும் வீட்டில் உள்ளவர்கள் சிபாரிசுக்கு போனவருக்கு பிள்ளை  கொடுத்து அனுப்பி  விட்டாரே என்று திட்டுவதாகவும் சொல்கிறார்.

பாதுகாப்பு கருதி பெண்ணின் பெயர் தவிர்க்கப் பட்டுள்ளது.

அந்த ஒலிநாடாவில் இருப்பது அமைச்சர் ஜெயக்குமார் குரலை ஒத்திருந்ததால் பரபரப்பு பற்றிக்கொண்டது.

அமைச்சர் ஜெயக்குமார் இன்று அதற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.

அந்தக் குரல் தன்னுடையது அல்ல . சசிகலா தினகரன் குடும்பத்தை தீவிரமாக எதிர்ப்பதால் இப்படியெல்லாம் போலியாக ஆடியோ தயார் செய்து  தன்னை இழிவு படுத்துவதாகவும் தான் குரல் பரிசோதனைக்கு  தயாராக இருப்பதாகவும் இது போன்ற புகார்களை தான்  1982  லிருந்தே எதிகொண்டு வருவதாகவும் இதையும் சந்திக்க வழக்கு தொடர இருப்பதாகவும் இருக்கிறது அவரின் விளக்கம்.

minister-jayakumar
minister-jayakumar

அந்தப் பெண்ணுக்கு பிறந்த குழந்தையின் தந்தை பெயர் ஜெயக்குமார் என்று இருப்பதால் அது தான் இல்லை என்றும் இந்த பெயரில் பலர் இருக்கிறார்கள் என்றும் போகிறது  அவரது விளக்கம்.

இதற்கிடையில் அந்த பெண்ணின் சார்பில் மனித உரிமை கமிஷனில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஆக விவகாரம் அடங்குவதாக  இல்லை.

பொதுமக்களுக்கு உண்மை தெரிந்தாக வேண்டும்.  ஒரு அமைச்சரின் பேரில்  பாலியல் புகார் கூறப்படுகிறது.   அவர் மறுக்கிறார். ஆடியோ போலி என்கிறார்.  புகார் உண்மை என்றால் அமைச்சர் பதவில்  அவர் நீடிக்க முடியாது.    பொய் புகார் என்றால் ஆடியோ தயாரித்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை பாய  வேண்டும். இல்லை என்றால் நாளை யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் பழி வாங்க ஒரு போலி  ஆடியோவை வெளியிட்டு ஊடக மூலமாக  பெயரைக் கெடுத்து தண்டித்து விட்டு  நாளை அப்படியே மேல் நடவடிக்கை எடுக்காமல் விட்டு  விடலாம்.

அரசியல் இன்னும் கெட என்ன இருக்கிறது?

எனவே காவல்துறை இதை விசாரித்து உண்மை கண்டறிய  வேண்டும் என்பதே பொது மக்களின்  எதிர்பார்ப்பு.

கருத்துக் காமெடியன்கள் ஆகும் சினிமாத் தலைவர்கள் பட்டியலில் ரஜினி, கமல்?

வருவேன் வருவேன் என்று பயமுறுத்திக் கொண்டிருக்கும் ரஜினி ஆனாலும் சரி, வந்து  விட்ட கமல் ஆனாலும் சரி இவர்கள் ஒவ்வொரு பிரச்னையிலும் வெளியிட்டுக் கொண்டிருக்கும் கருத்துக்கள் அவர்களை காமெடியன்கள் ஆக தமிழக மக்கள் மத்தியில் மேலும் பிரபலப் படுத்திக் கொண்டிருக்கின்றன.

கமல் என்னதான் உளறிக் கொட்டினாலும் அப்படியே மக்கள் நம்பி விடுவார்கள் என எதிர்பார்க்கிறார்.

அச்சு அசலான பார்ப்பனீயத்தின் பிரதிநிதி கமல்.

எதிலும் பட்டுக் கொள்ளாமல் தான் எல்லாருக்கும் நெருக்கமானவன்  , நாத்திகன் ஆனால் ஆத்திகத்தை விமர்சிக்கவே மாட்டேன் , ஏனென்றால் என் சமூகம் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஏரியா அல்லவா ?    திராவிடம் உண்டு . ஆனால் திராவிடக் கட்சிகளுக்கு எதிரானவன். சபரிமலை விவகாரம் பற்றி கருத்து சொல்ல மாட்டேன் ஏனென்றால்  நான் அங்கே சென்றதில்லை. —–இப்படியெல்லாம் உளறிக்கொண்டிருக்கும் கமல் ஹாசன் ஒருபோதும் தமிழ் நாட்டு அரசியலில் வெற்றி பெற முடியாது.

ரஜினி;    90  சத வீதம்  கட்சி தொடங்கும் வேலைகள் முடிந்து விட்டன என்று சொல்லும் ரஜினி எந்த பிரச்னையிலும் உறுதியான கருத்தை சொன்னதே இல்லை. பேட்ட படம் வெளியாகும் வரை இன்னும் அவர் நிறைய பேசலாம். அதற்குப் பிறகும் அடுத்த படம் வரும்வரை பேசிக்கொண்டே இருப்பார்.  சபரிமலை யில் பெண்கள் போகலாமா என்றால் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பையும் வரவேற்கிறாராமாம் அதே நேரத்தில் காலம் காலமாய் தொடர்ந்து வரும் சம்பிரதாயத்திலும் தலையிட கூடாதாம். இது எப்படி இருக்கு?

விஜய்; இன்னும் வரவில்லை. வந்தபின் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

சரத்; நெல்லையில் மகா புஷ்கரம் விழாவில் புண்ணிய நீராடியிருக்கிறார். எதிர்வரும் தேர்தல்களில் தனித்து நிற்பாராம். எதற்கு என்று மட்டும் சொல்லவில்லை. ஏன் தனி கட்சி நடத்துகிறார் என்பதை எப்போதாவது  விளக்கி இருக்கிறாரா? சாதிக் கட்சி நடத்துகிறேன் என்று வெளிப்படையாக சொல்லாத ஒரே ஒரு கண்ணியத்துக்காக மட்டும் பாராட்டலாம்.

கொள்கை சொல்லாமல் கட்சி நடத்த வருகிற எந்த நடிகருக்கும் எங்கும் ரசிகர் மன்றங்கள் இருக்க கூடாது. அதாவது மன்றங்கள் அரசியல் செய்யக் கூடாது.  மன்றங்களில் இருக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு பெரியவர்கள் விழிப்புணர்வு ஊட்டுங்கள்.

இதை அற வழியில் தமிழ் சமூகம் தடுக்க வேண்டும்.

இந்த அரசியல் காமெடியன்களை தடுக்க வேறு என்னதான் வழி??!!

மத சடங்குகளில் நீதிமன்றங்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டுமாம்; சென்னை உயர் நீதிமன்றம் சர்ச்சை கருத்து?

உச்சநீதிமன்றம் சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு அளித்த நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் அதற்கு மாறான சர்ச்சை கருத்தை தெரிவித்திருக்கிறது.

ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமத்தின் பீடாதிபதி ரங்க ராமானுஜ தேசிகர் ஒரு உயில் எழுதி வைத்து இறந்த நிலையில் அவர் பரிந்துரைத்த மூன்று பேரில் ஒருவர் இறந்து விட்டதால் மற்ற இருவரில் ஒருவரை நியமிக்காமல் வேறு மூன்றாவது நபராக யமுனாசாரியார் என்பவர் பீடாதிபதியாக பொறுப்பேற்க தடை கேட்டு வழக்கு.

விசாரித்த நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் தடை விதிக்க மறுத்து விசாரணையை தள்ளி வைத்தனர்.

இந்த மடம் பார்ப்பனர்கள் சமுதாயம் சம்பத்தப் பட்டது. அவர்களே மடத்தலைவராக  ஆக முடியும்.

இந்த மடத்திற்கு நன்கொடைகள் மூலமாக ஏராளமான சொத்துக்கள் உள்ளன.   அவற்றை நிர்வகிப்பதில் போட்டி வருவது இயல்பு. அதில் யாரை நியமித்தாலும் மற்றவர்களுக்கு எந்த  பிரச்னையும் இல்லை.

நீதிபதிகள் இந்த வழக்கோடு நின்று விடாமல் தெரிவித்த கருத்துதான் பிரச்னையை ஏற்படுத்தி இருக்கிறது.

மத சார்பற்ற வகையில் செயல்பட்டு வரும் நீதிமன்றங்கள் மத சடங்குகளில் தலையிடும்போது சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தது தேவையில்லாதது மட்டுமல்ல சரியானதும் அல்ல.

அப்படியானால் உச்ச நீதிமன்றம் தவறு செய்து விட்டதா?

அரசியல் சட்டம் வழங்கி இருக்கும் சம நீதி என்ற அடிப்படை உரிமையை எல்லாக் குடிமக்களுக்கும் வழங்கி பாதுகாக்க வேண்டும்  என்ற கடமை உணர்வு நீதிபதிகளுக்கு இல்லாமல் போனது ஏன்?

உச்சநீதி மன்றம் சபரிமலை பிரச்னையில் வழங்கிய தீர்ப்பு பற்றி நீதிபதிகளுக்கு தெரியாதா?

தெரிந்தே இந்த கருத்தை பதிவு செய்தார்களா? அது குழப்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தாதா? உச்சநீதி மன்ற தீர்ப்பை அமுல்படுத்த மாநில அரசு போராடிக் கொண்டிருக்கையில் இப்படியான கருத்தை நீதிபதிகள் வெளியிட்டது சரியானதுதானா என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்.

நீதிபதிகள் மூல வழக்கில் கண்ட பிரச்னைகளை மட்டும் அணுக வேண்டுமே தவிர தீர்வு சொல்ல வேண்டுமே தவிர தவறாக புரிந்து கொள்ளப்படும் வகையில் அதிலும் குறிப்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக பொதுவான கருத்துகளை சொல்வதை தவிர்க்க வேண்டும் என்பதே நமது  கருத்து.

தமிழில் பிரபந்தம் பாட இடைக்கால தடை; ஏனிந்த நாடகம்?

தமிழ்நாட்டில் வைணவர்களிடையே வடகலை- தென்கலை  சண்டையை பெரிதாக்கி மகிழ்வார்கள் சிலர்.

இந்த சண்டை மூலம் யாரை ஏமாற்ற முனைகிறார்கள் என்பதே கேள்வி?

“மீ டூ” புகழ் சின்மயி சொல்வதுபோல் நாங்கள் அய்யங்கார் என்பதை “High Engaar” எனபெருமையாக அவர்கள் நினைத்துக் கொள்வதை யாரும் தடுக்கவில்லை.

ஆனால் அய்யங்கார்கள் அய்யர்கள் இருவருமே பார்ப்பனர்கள். நாம் பிராமணர்கள் என்று அழைப்பது இல்லை. ஏன் என்றால் அப்படி அழைத்தால் மற்ற எல்லாரையும் சத்திரிய, வைசிய சூத்திர, பஞ்சமர்கள் என்ற வர்ணப் பிரிவினையை ஒப்புகொண்டதைப்போல் ஆகிவிடும். வர்ணப் பிரிவினையை மறுப்பவர்கள் அவர்களை பார்ப்பனர்கள் என்றுதான் அழைக்க வேண்டியுள்ளது. வேண்டுமானால் அந்தணர்கள் என்று அழைக்கலாம்.. நிற்க.

வைணவ மரபில் அய்யங்கார் களுக்கு எப்படி சுவாமிக்கு கைங்கர்யம் செய்யும் உரிமை கிடைத்தது?

சைவ மரபில் அய்யர்களும் வைணவ மரபில் அய்யங்கார்களும் கைங்கர்யம் செய்யும் உரிமையை கபளீகரம் செய்து கொண்டனர்.

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலில் ஆச்சார்யா வேதாந்த தேசிகரின் தமிழ் பிரபந்தங்களை பாடக்கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது.

நீதிபதி எஸ். வைத்தியநாதன் இந்த தடையை கொடுத்திருக்கிறார்.

வடகலை- தென்கலை அய்யங்கார்கள் இடையே வேதம் பாடுவதா ப்ரபந்தம் படுவதா  என்ற பூசல்.

வ்டகலையை சேர்ந்த சுரேஷ் என்பவர் பிரபந்தம் பாட உரிமை கேட்டு நீதிமன்றம் செல்கிறார். குறிப்பாக செப்டம்பர் 21 ம் தேதி பாட அனுமதிக்க வேண்டும் என்பது கோரிக்கை. விசாரணைக்கு வந்தபோது தனி நீதி பதி ஒருவர் பிரபந்தம் பாடலாம் என வாய் மொழியாக உத்தரவிடுகிறார்.

அந்த தேதிக்கு பின்னரும் பிரபந்தம் பாடப்படுவதை நிறுத்தக் கோரி தென்கலையை சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்பவர் நீதிமன்றம் செல்ல அப்போதுதான் நீதிபதி வைத்தியநாதன் இந்த தடையை விதிக்கிறார்.

தடையையும் கொடுத்து விட்டு” கோவில் என்பது எல்லாரும் வழிபடும் இடம். உலகம் உள்ளவரை இந்த வடகலை தென்கலை இடையிலான கருத்து வேறுபாட்டுக்கு தீர்வு வராது. மனித குலம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று அறிவுரை கூறியிருக்கிறார்.

இவர்களுக்குள் சண்டை இடுவதை பெரிதாக்கி இரண்டு முக்கிய விடயங்களை விவாதத்துக்கு வர விடாமல் செய்திருக்கிறார்கள்.

அங்கே சுவாமிக்கு கைங்கர்யம் செய்யும் உரிமையை மற்ற சாதிக்காரர் களுக்கும் பகிர்ந்து தர வேண்டும். கருவறையில் தமிழ் இடம் பெறுவதை  உறுதி செய்ய வேண்டும். இந்த இரண்டும் தான் முக்கிய உரிமை பிரச்னைகள். பெரும்பான்மை பக்தர்களான தமிழர்கள் பிரச்னை.

வடகலை தென்கலை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறீர்களா?

அய்யர் அய்யங்கார்கள் பிராமண சங்கத்தில் சேர்ந்துதானே இருக்கிறீர்கள்?

போலியான பிளவுகளை ஏற்படுத்தி அங்கும் கூட தமிழுக்கு எதிராக சதி  செய்கிறீர்கள் என்றால் உங்களை யார் நம்புவார்கள்?

மதத்தில் புரட்சி செய்த மகான் என்று ஸ்ரீ ராமானுஜர் பற்றி  தொடர் எழுதியவர் கலைஞர்.

ஏனென்றால் ராமானுஜர் ஸ்தாபித்த விசிஷ்டாத் வைதம் இறைவனை எந்த ஆன்மாவும் இடையறாத பக்தியினால் அடையலாம் என்றது.

மத்வரின் த்வைத சித்தாந்தம் போல சில ஆன்மாக்கள் நிரந்தர நரகத்தில் உழலும் என்பதை அவர் ஏற்கவில்லை.

சங்கரரின் அத்வைதம் கூட இரண்டல்ல ஒன்று என்றே கூறி ஆத்மனும் பிரம்மனும் ஒன்றே என்றே கூறியது.

எல்லாம் ஒன்று என்று எழுதி வைத்து விட்டு நடைமுறையில் சாதி பாகுபாடு காட்டி பெரும்பான்மை மக்களை வெளியே நிறுத்தி வைத்திருப்பது என்ன நியாயம் என்ற கேள்வி கேட்கப் படாமலே செய்து விட்டார்கள்.

உங்கள் சண்டை பெரிதல்ல. அவசியமும் அல்ல.

எந்தக் கோவிலாக இருந்தாலும் ஆண்டு தமிழ் ஆட்சி  செய்ய வேண்டும்.  தமிழர்  கருவறையில் இடம் பெற வேண்டும். அதுவே இன்றைய தேவை.

இந்த கோரிக்கை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல. எல்லா மாநிலங்களிலும் அந்த மாநில  மொழிகள் அர்ச்சனையில் இடம் பெற வேண்டும். அந்தந்த மாநில அனைத்து சாதி மக்கள் கருவறையில் இடம் பெற வேண்டும். அதுவே உண்மையான இறை வழிபாடாக விளங்கும்.

பயமுறுத்தும் டெங்கு; ஊசலாட்டத்தில் ஆட்சியாளர்கள்; ஆபத்தில் பொது மக்கள்?

பெயருக்குத்தான் மே 16 உலக டெங்கு விழிப்புணர்வு தினம். இப்போது வருடம் முழுவதும் டெங்கு தாக்கும் அபாயம் அதிகரித்திருக்கிறது. முன்பெல்லாம் அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை டெங்கு பரவும் ஆபத்து என்று பிரச்சாரம் செயப்  பட்டு வந்தது. அதுதான் இப்போது மாறியிருக்கிறது. டெங்கு விற்கு என்று குறிப்பிட்ட மருந்து என்று எதுவும் இல்லை. வரும் முன் காப்போம் என்பது மட்டுமே டெங்குவிற்கு மருந்து.

இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் டெங்கு காய்ச்சல் பரவி இருக்கிறது.

காய்ச்சல் வந்தவுடன் இது டெங்கு தான் என்று அறிவிக்க ரத்த பரிசோதனை செய்தால் மட்டுமே முடியும். அதுவும் உறுதி ஆனால் சிகிச்சை என்பது சுற்றுவட்டப்  பாதைதான். அதாவது அதற்கென்று மருந்தில்லா விட்டாலும் அதிக அளவு நீர்சத்து பானத்தை பருக செய்து சத்து உணவு கொடுத்து ரத்தத்தில் தட்டணு எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது மட்டுமே சிகிச்சை.

சிலர் ஓரிரண்டு நாட்களில் இறந்து விட்டால் அது அவர்கள் தலைஎழுத்து. இப்படித்தான் போய்கொண்டிருகிறது டெங்கு சிகிச்சை இந்தியாவில். கொசு உற்பத்தி நடக்காமல் செய்வது ஒன்றே முழுமையான நடவடிக்கை. யார் செய்வது? கொசு உற்பத்தி ஆக தேவைப்படும் ஏழு நாட்கள் எங்கும் தண்ணீர் தேங்கி நிற்காமல் செய்ய யார் உறுதி செய்ய முடியும்?

சென்ற ஆண்டு 22000 பேர் காய்ச்சல் என்று வந்தார்கள் என்றும் இந்த ஆண்டு இதுவரை   2100   பேர் மட்டுமே வந்திருக்கிறார்கள் என்றும் பெருமை பேசும் மாநில அரசு இனி வரும் மாதங்களில் எத்தனை பேர் வருவார்கள்  என்று உறுதி சொல்ல முடியுமா ?

திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் ரிஸ்வான் என்ற 13 வயது சிறுவன்  டெங்கு வால் இறந்தான் என்று அறிவித்த அடுத்த நாளே மணலியில் கவிதாசன் என்ற 9 வயது சிறுவனும் காய்ச்சலால் இறந்திருக்கிறான்.  அது டெங்கு என்று சந்தேகம் இருந்தாலும் அரசு, மரணம் எதனால் என்று அறிவிக்க தயங்கி மர்ம மரணம் என்று அறிவிக்கிறது. ஏன் டெங்கு மீது அத்தனை பயம்?

வடகிழக்கு பருவ மழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் என்று தெரிகிறது.  அப்போது கொசு உற்பத்தி அதிகமாகும் என்ற நிலை உள்ளது.

எனவே அதற்கான தடுப்பு நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் இழப்புகளை தவிர்க்க முடியாது. டென்குவோடு பன்றி காய்ச்சலும் சேர்ந்து வருகிறது. எனவே இரட்டை எச்சரிக்கை தேவை.

நகரில் எங்குமே எந்த விதமான குப்பைகளும் சேர விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அங்குதான் கொசு உற்பத்தி ஆகும் ஆபத்து மறைந்திருக்கிறது. நிலவேம்பு கஷாயம் சிறந்த நோய் தடுப்பு சக்தி என்று தெரிந்தும் அதை எல்லாருக்கும் கிடைக்க  செய்ய என நடவடிக்கை?

நிதி ஒதுக்கீடு அறிவிப்பு வருகிறது. அதை கேட்கும் பொதுமக்கள் அறிவிப்பு வந்த தங்கள் பகுதிக்கு ஏன் நிதி வரவில்லை என்று கேட்கிறார்களே?

நிர்வாகம் என்ற ஒன்று தமிழகத்தில் இருக்கிறதா என்பதே தெரியவில்லை.

சென்னையில் 16 பேருக்கு டெங்கு காய்ச்சல் என்று பத்திரிகை செய்தி வருகிறது.  ஆனால் அவர்கள் யார் யார் என்று தகவல் வரவில்லை. எங்கு சென்று விசாரிப்பது?

அரசு இனியாவது விழித்துக் கொள்ளட்டும்.?

கணவன் தலைவர்- மைத்துனர் இளைஞர் அணித்தலைவர்- இப்போது மனைவி பொருளாளர்; தேமுதிக கதை?

விஜயகாந்த் தலைவராக உள்ள தேமுதிக வில் அவரது மைத்துனர் சுதீஷ் இளைஞர் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து கட்சிப்பணிகளை பார்த்துக் கொண்டாலும் பெயர் அளவுக்கு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பொறுப்பு எதுவும் இல்லாமல் இருந்தார்.

ஆனாலும் எல்லா முடிவுகளையும் அவர்தான் எடுத்தார் என்பது எல்லாருக்கும் தெரியும்.

இன்னும் சொல்லப்போனால் சென்ற தேர்தலில் திமுகவோடு கூட்டு சேர்ந்திருக்க வேண்டிய தேமுதிக வை பிரித்து சென்றதே பிரேமலதாதான் என்ற குற்றசாட்டு இன்னும் இருக்கிறது.

தோற்பதற்காகவே தேர்தலில் நின்ற கட்சி அது. விளைவு திமுக ஆட்சிக்கு வரும் வாய்ப்பை இழந்தது. திட்டம் வெற்றி.

பத்து சதவீதம் ஒட்டு வங்கி வைத்திருந்த கட்சி இரண்டு சத வீத கட்சியாக சுருங்கியதற்கும் பிரேமலதாதான்  காரணம்.

இந்நிலையில் கட்சியின் பொருளாளராக இருந்த டாக்டர் இளங்கோவனை அவைத்தலைவராக ஆக்கி விட்டு அவைத் தலைவராக இருந்த அழகாபுரம் மோகன்ராஜை கொள்கை பரப்பு செயலாளராக அறிவித்து விட்டு மனைவி பிரேமலதாவை கட்சியின் பொருளாளராக அறிவித்து விட்டார் விஜயகாந்த்.

விசேடம் என்னவென்றால் பொறுப்பேற்றவுடன் பிரேமலதா கொடுத்த பேட்டிதான்.

‘குடும்பத்தில் யாரும் கட்சி பொறுப்பிற்கு  வர மாட்டார்கள் என்று கேப்டன் சொன்னாரே என்று கேட்கிறீர்கள். எனக்கு தெரிந்து அப்படி அவர் சொன்னதே இல்லை. அதற்கும் மேல் கேட்டீர்கள் என்றால் நான் பதில் சொல்ல தேவை இல்லை.’

இதுதான் அவர் கொடுத்த பேட்டி. அதற்கு பேசாமல் இது குடும்ப கட்சி நாங்கள் தான் தீர்மானிப்போம். மற்றவர்கள் கேள்வி கேட்க உரிமை இல்லை என்று சொல்லி இருந்தால் அது மரியாதை யாக இருந்திருக்கும்.

இப்படிப் பட்ட கட்சிகளில் இன்னமும் உறுப்பினர்களாக இருப்பவர்கள் கொஞ்சமாவது சிந்தித்தால் நல்லது.

கட்சிகளுக்கா பஞ்சம். கொஞ்சமாவது உங்களுக்கு பிடித்த  கொள்கை உள்ள கட்சி ஏதாவது ஒன்றில் சேர்ந்து தமிழகத்தை காப்பாற்றுங்கள்.

பகத்சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவியை இடைநீக்கம் செய்த அரசு கல்லூரி?

கேட்பதற்கே அருவருப்பாக இருக்கிறதா இல்லையா?

ஒரு அரசு கல்லூரியில் சுதந்திர போராட்ட வீரரும் போராட்டத்தில் தன் இன்னுயிரை ஈந்தவரும் ஆன மாவீரன் பகத்சிங்கின் பிறந்த நாளை கொண்டாடிய குற்றத்திற்காக எம்.ஏ வரலாறு முதல் ஆண்டு படிக்கும் மாணவி மாலதியை கோவை அரசு கல்லூரி முதல்வர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

குற்றம் என்ன? செப்டம்பர் மாதம் 28 ம் தேதி பகத் சிங்கின் பிறந்த நாளை ஒட்டி இதர மாணவர்களுடன் சேர்ந்து 45 நிமிடம் அவரைப்பற்றி புகழ்ந்து பேசி கலைந்ததுதான்.

மாணவர்கள் எந்த விதத்திலும் ஒன்று சேர்ந்து விடக்கூடாது.

இப்போது அனுமதித்தால் பிறகு எல்லா பிரச்னைகளிலும் தலையிடுவார்கள் .

முதலில் கல்லூரியில் விழா நடத்த அனுமதி கேட்டுள்ளார்கள்.  அனுமதி மறுத்த முதல்வர் வேண்டுமானால் துறையின் தலைவரிடம் அனுமதி பெற்று துறை அளவில் நடத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

துறைத் தலைவர் விடுப்பில் இருந்ததால் அதற்கடுத்த நிலை ஆசிரியர் அனுமதி மறுத்திருக்கிறார். எனவேதான் மாணவர்கள் விழாவை நடத்தி இருக்கிறார்கள்.

எதிர்த்து குரல் கொடுப்பவர்களை தேச துரோகம், ஊபா சட்டம் என்கிற சட்ட விரோத அமைப்புகள் தடுப்பு சட்டம் போன்ற வழக்குகளில் நடவடிக்கை எடுத்து முடக்குவது என்ற மோசமான போக்கை மாநில அரசு மட்டுமல்லாமல் கல்லூரிகளும் கடைபிடிக்க தொடங்கி இருப்பது மிகவும் ஆபத்தானது.

முதல்வர் சித்ரா அக்டோபர் 22 ம் தேதி விசாரணை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று சொல்லி இருகிறார்.

கல்லூரிகள், உரிமைகளுக்கு  குரல் கொடுக்க மாணவர்களை தயார் செய்ய வேண்டும். முடக்கக் கூடாது.