Home Blog Page 62

காந்திஜி பிறந்த நாளில் அவரைக் கொன்ற கோட்சேவுக்கு சிலை வைக்க முயன்ற நால்வர் உபி யில் கைது?

மேல்சாதிக்காரன் அடங்கவே மாட்டான்.

ஒவ்வொரு ஆண்டும் காந்திஜி  பிறந்த  நாளில் அவரைக் கொன்ற நாதுராம் கோட்சே சிலையை வைக்க பல வழிகளிலும் முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள் .

ராஷ்ட்ரீய சனாதன் தள் – உ பி யின் சித்திரகூட் மாவட்டத்தில் சக்வாரா கிராமத்தில் மகாத்மா காந்தி பிறந்த நாளில் அவரைக் கொன்ற நாதுராம் கோட்சே சிலையை வைக்க நால்வர் முயற்சி செய்திருக்கிறார்கள்.   தகவல் தெரிந்து காவல் துறை அதன் மண்டல தலைவர் பிரிஜேஷ் பாண்டே மற்றும் சிலரை விசாரணைக்காக அழைத்து சென்றிருக்கிறார்கள்.

ராமேந்திரா என்பவரின் தனி இடத்தில் அந்த  சிலையை வைக்க திட்டம்.

2015 லும்   2017 லும் இது போன்ற முயற்சி நடந்த பொது நாம் இது பற்றி எழுதியிருக்கிறோம் .

இந்து ராஷ்டிரம் அமைக்கும் முயற்சியை அவர்கள் கைவிடுவதாக தெரியவில்லை.

காந்திஜியை கொன்ற  வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப் பட்ட நாதுராம் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்செவை 14  ஆண்டு சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்தவர்கள் காங்கிரஸ்காரர்கள்.

அவர்கள்தான் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேரை  27  ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பிறகும் விடுதலை செய்தால் அது மோசமான  முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்கிறார்கள்.

தேசிய கட்சிகள் தங்களுக் கென்று தனி விதிகள் வைத்திருக்கின்றன. அதனால்தான் மக்களிடம் இருந்து விலகியே இருக்கிறார்கள்.

பா ஜ க தனக்கு இதில்தொடர்பில்லை என்பது போல்தான் பேசி வருகிறார்கள்.

உண்மையானால் அந்த மாபாதகர்கள் மேல் குண்டர் சட்ட நடவடிக்கை எடுத்து தேச துரோக வழக்கு பதிய வேண்டும்.   இனி இது போன்ற சிந்தனை யாருக்கும் வரவே கூடாது  என்பதான நடவடிக்கையாக இது இருக்க வேண்டும்.

மாறாக விசாரித்து விட்டுக் கொண்டிருந்தால் அவர்கள் அந்த முயற்சியில் தொடர்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.

தொடர்ந்து  கொண்டு இருக்க வேண்டும் என்பதே பா ஜ க வின் விருப்பமாகவும் இருந்தால்தான் அவர்கள் விட்டுக் கொண்டே இருப்பார்கள்.

கிரண்பேடியின் ஆணவம்? எம் எல் ஏ பேச்சை நிறுத்த மறுத்ததால் மைக்கை நிறுத்தினார்?

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி காவல் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்று விட்ட பின் பா ஜ க வில் சேர்ந்து டெல்லியில் தேர்தலில் தோற்று பா ஜ க ஆட்சிக்கு வந்தபின் இங்கே வந்தவர்.

அவருக்கும்  முதல்வர் நாராயணசாமிக்கும் நடக்கும் முட்டல் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

மகாத்மா காந்தியின்  150   வது பிறந்த நாளை ஒட்டி புதுச்சேரியை திறந்த வெளி கழிப்பிடம் அற்ற பிரதேசமாக அறிவிக்க ஒரு கூட்டம்.   உள்ளாட்சி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஏற்பாடாக இருந்தாலும் அங்கே விளம்பரத்தில் துணை நிலை ஆளுநர் படம் மட்டுமே இருந்தது. உள்ளூர் அமைச்சர் அதி மு க அன்பழகன் பெயர் இல்லை.

இருந்தாலும் அவர் ஆஜராகி பிரச்னை எழுப்ப அமைச்சர் நமசிவாயம் சமாதானப் படுத்தி பேச அழைக்க அன்பழகன் தனது தொகுதி குறைகளை பட்டியல் இட்டு பேச ஆரம்பித்தார்.

துணை ஆளுநர் துண்டு சீட்டில் பேச்சை  முடிக்க எழுதி அனுப்ப அன்பழகன் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.

ஒரு கட்டத்தில் துணை நிலை ஆளுநர் எழுந்து பேசிகொண்டிருந்த அன்பழகனிடம் சென்று பேச்சை நிறுத்த சொல்ல அவர் மறுக்க அவர் நீ வெளியே போ என்று சொல்ல இவரும் திருப்பி நீ வெளியே போ என்று சொல்ல இருவரும் நடந்து கொண்ட விதம் அருவருப்பாக இருந்தது.

ஒரு சட்ட மன்ற உறுப்பினர் பேசிக் கொண்டிருந்தபோது  கிரண்பேடி இடை மறித்திருக்கக்  கூடாது.

நேரமில்லை என்றால் தனது பேச்சை  குறைத்திருக்கலாம்.  அல்லது வெளியேறிக் கூட இருக்கலாம்.  அதைவிட்டு விட்டு பொதுமக்கள் முன்னிலையில் தரக் குறைவாக நடந்து கொண்டிருக்கக் கூடாது.

கடைசியில் கிரண் பேடி விழாவில் பேசாமல் போனதுதான் மிச்சம். பாஜக மத்தியில் ஆட்சியில் இருப்பதால் துணை நிலை ஆளுநர்கள் எது வேண்டுமானாலும் செய்யலாமா?!

மேலும் ரசாபாசம் ஆகாமல் அத்துடன் விட்டார்களே என்று பொதுமக்கள் கலைந்து போனார்கள்.

தமிழ்நாடு சைத்தானின் ஆதிக்கத்தில்? கிறிஸ்தவ போதகர் மோகன் சி லாசரஸ் பேச்சு! வழக்கு பதிவு?

இருக்கும் மத மோதல்கள் போதாது என்று கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி  லாசரஸ் புதிதாக ஒரு பிரச்னைக்கு வித்திட்டிருகிறார் .

காலூன்ற காத்திருக்கும் பா ஜ க உள்ளிட்ட சங்கப் பரிவாரங்களுக்கு பிரசாரம் செய்ய மக்களை தூண்டி விட்டு கலவரம் விளைவிக்க ஒரு காரணியாக ஒரு கிறிஸ்தவ போதகரின் பேச்சு அமைந்தது வருந்தத் தக்கது.

ஜீசஸ் ரிடீம்ஸ்  என்ற அமைப்பின் தலைவரான அவர் பொறுப்புடன் பேச வேண்டாமா?

அவர் பேசுவதை தொலைகாட்சியில் காட்டினார்கள்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமான இடங்கள் கோவில்கள் சாத்தானின் ஆதிக்கத்தில் உள்ளன.   நான் கும்பகோணம் போனேன். அதற்கு ஆண்டவர்  அனுக்ரகம் பண்ணினார்.   நான் பார்த்தபோது இரண்டு பேர் இருந்தார்கள். யாகம் செய்தார்கள் .  அதில் பட்டு வேட்டிகள் சேலைகளை போட்டார்கள். அங்கே சாமி சிலைகள் இருந்தாலும் அந்த மனிதர்களைத்தான் கும்பிடுகிறார்கள். ”

இந்த விமர்சனத்தை ஒரு கிறிஸ்தவ போதகர் பேசுவது எதற்காக?. என்ன நோக்கத்திற்காக பேசினார்?  நம்பாதீர்கள் என்பதற்காகவா? அவரை சுற்றி இருப்பவர்கள் நம்பாதவர்கள்தானே?

காத்துக்கொண்டிருக்கும் பாஜக வினர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத நல்லிணக்கம் பேணிப் பாதுகாக்கப் பட வேண்டும். அதற்கு ஊறு விளைவிக்கும் யாராக இருந்தாலும் கண்டிக்கப் படவேண்டும். தண்டிக்கப் பட வேண்டும்.

ஒருவேளை தன் பேச்சுக்கு விளக்கம் கொடுத்து அல்லது வருத்தம் தெரிவித்து பிரச்னையை சுமுகமாக முடிக்க லாசரஸ் தயாராக இருப்பாரா?

அல்லது அரசியல்வாதிகள் போல நான் அப்படி பேசவில்லை என்றோ அல்லது படத்தில் இருப்பது நான்தான் ஆனால் குரல் என்னுடையது அல்ல  என்று வாதிடப் போகிறாரா?

எச் ராஜாக்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்களே?

என்ன செய்யப் போகிறது காவல் துறை?

டெல்டாவில் மேலும் 3 ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மோடி அரசு அனுமதி??!அதிர்ச்சியில் விவசாயிகள்??!!

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்ட விவசாயிகளை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது மோடி அரசு ஆம் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி. அதில் ஒன்று அரசு நிறுவனமான ஓ என் ஜி சி க்கு. இரண்டு வேதாந்தா நிறுவனத்திற்கு.

வேதாந்தா நிறுவனத்தின் செல்வாக்கிற்கு சான்று வேண்டாம். தமிழ்நாட்டு அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம் என்று அறிவித்து விட்டது. வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது.

13 பேரை சுட்டுக் கொன்று விட்டதால் மக்கள் இனி போராடுவதற்கு அச்சப் படுவார்கள் என்று அரசும் அகர்வாலும் நினைக்கிறார்கள்.

படுகொலைகள் நடத்த பிறகும் ஆய்வு செய்ய அனுமதி வழங்கப் படுகிறது.  அனில் அகர்வால் டெல்லியில் இருந்து பேட்டி கொடுக்கிறார். நாங்கள் ஆலையை விரைவில் திறப்போம் என்று.

இந்த தைரியத்தை யார் கொடுத்தார்கள்? மத்திய அரசின் ஆதரவு தனக்கு இருப்பதால்தான் அவர் இப்படி பேட்டி  கொடுக்க முடிகிறது.

நாட்டில் மொத்தம் 55  இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டம். அதில் 44  வேதாந்தா நிறுவனத்திற்கு என்றால் செல்வாக்கு தெரிகிறதா இல்லையா? அரசு நிறுவனத்தை மிஞ்சும் வகையில் அவருக்கு அதிக இடங்கள் ஒதுக்க என்ன காரணம் என்பதை மோடி அரசுதான் விளக்க வேண்டும்.

தாமிரம் தேவை என்று சொல்லி ஆலையை திறக்க முனைபவர்கள் ஏன் வேறு மாநிலத்திற்கு இந்த ஆலையை மாற்ற கொண்டு செல்ல கூடாது.

தாது கிடைப்பது ஆஸ்திரேலியாவில். ஆலைமட்டும் நம் பூமியிலா?

ஆஸ்திரேலியா ஏன் அங்கேயே தனது தாமிர தாதுவை பயன் படுத்தி தாமிரம் தயாரிக்க மறுக்கிறது? சுற்றுச்சூழலை மாசு கெடாமல் பாதுகாப்பதில் அவர்களுக்கு அக்கறை.

நமக்கு இல்லை. இருக்குமானால் இருக்கும் ஓ ன் ஜி சி கிணறுகளை  டெல்டா மாவட்டத்தில்  உடனே  மூட வேண்டும்.

உலகில் விவசாயம் மட்டுமே நடக்கும் பகுதிகளில் எந்த நாடுகளில் கனிம வளங்களை அல்லது இயற்கை எரி வாயு மூலப் பொருட்களை தோண்டி எடுக்க அனுமதி அளிக்கிறார்கள்?

அதைவிட இந்த எண்ணெய் எடுக்கும் கிணறுகளால் எதிர் காலத்தில் அந்த மண்ணில் விவசாயம் பாதிக்கப் படாது என்று விவசாயிகளுக்கு உறுதி கொடுக்க வேண்டுமா வேண்டாமா?

அதில் விவசாயிகளுக்கு  ஏற்படும் ஐயப்பாடுகளை தீர்க்க வேண்டுமா வேண்டாமா?

அதையெல்லாம் செய்யாமல் அதிரடியாக அதிகாரத்தை பயன்படுத்தி விவசாயிகளை மிரட்டி எண்ணெய் கிணறுகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விடலாம் என்று அரசு நினைத்தால் அது தவறான கணக்கு.

நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்கள் இன்னும் முற்றுப் பெறவில்லை. அதற்குள் வேறு போராட்டங்களை துவக்க வேண்டிய நிலைமைக்கு விவசாயிகளை மத்திய அரசு தள்ளி விட்டிருக்கிறது.

காவிரி கடலோடு கலக்கும் ஒரு  இடத்தில் 1794 சதுர கி .மீ. பரப்பளவிலும் மற்றொர் இடத்தில் 2574  சதுர கி .மீ. பரப்பளவிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கப் படும் என்றால் அந்த இடங்களில் விவசாயம் இன்னும் ஐம்பது ஆண்டுகளில் இருக்காது என்றுதான் அர்த்தம்.   விவசாயிகள் வேறு வேலை தேடி ஓட வேண்டியதுதான்.

எல்லாம் இருக்கட்டும். ஒ என் ஜி சி யை எதிர்த்து  அல்லது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து துண்டறிக்கை கொடுப்பதை இந்த அரசு முரட்டுத் தனமாக முடக்கப் பார்க்கிறதே அது ஏன்?

மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டிய அரசே விழிப்புணர்வு பிரசாரத்தை முடக்கலாமா?

எங்காவது நடத்திக் கொள்ளுங்கள். இங்கு வேண்டாம். ஒப்பந்தம் ரத்தாக வில்லையென்றால் நீங்களே மக்கள் போராட்டத்தை தூண்டியவர்கள் ஆவீர்கள் என்பதை மட்டும் மறக்க வேண்டாம்.

சபரிமலை; உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை மதிக்கும் தேவசம் போர்டு , மதிக்காத சனாதனிகள் மீது என்ன வழக்கு போடுவது?

10 -50 வயதுக்குள் உள்ள பெண்கள் அய்யபனை தரிசிக்கலாம் என்று உச்ச நீதி  மன்றம் உத்திரவிட்டது சனாதனிகள் மத்தியில் பெரிய பூகம்பத்தையே கிளப்பி விட்டது.

நாம் நம் சுயநலனை பாதுகாக்க எழுதிவைத்த  எல்லாவற்றையும் இனி நீதிமன்றம் பரிசீலித்தால் என்ன ஆவது என்ற கேள்வி அவர்களை உலுக்கி இருக்கலாம்.

பன்முனை தாக்குதலை தொடங்கி விட்டார்கள்.

ஒருபுறம் பெண் பக்தர்கள் யாரும் வர மாட்டார்கள் என்று பிரச்சாரம்.

அதுதான் வரமாட்டார்களே பின் ஏன் பிரச்சாரம்? வருபவர்கள் வந்து விட்டு போகட்டுமே.

மாநில அரசு வரவேற்று விட்டது. தேவஸ்தானம் பெண்களுக்கு  தனி வரிசை கிடையாது என்று அறிவிக்கிறது. பொது வரிசையில் தான் வர வேண்டும் என்றார்கள்.. பெண்களின் மீது அவ்வளவு அக்கறை வரக்கூடாது என்று சொல்லியும் வருபவர்களுக்கு பாதுகாப்பு தர முடியாது என்று சொல்கிறார்களா?

இப்போது பந்தள அரச குடும்பத்தை வைத்து மிரட்ட முனைந்திருக்கிறார்கள்.

அய்யப்பனுக்கு அணிவிக்க ஆபரணங்கள் தர மாட்டார்களாம்?

உச்சநீதி மன்றத்தை மிரட்டுகிறார்களா? தீர்ப்பை எப்படி அமுல் படுத்துகிறீர்கள் என்று நாங்கள் பார்க்கிறோம் என்று பொருள்!

தீர்ப்பை வரவேற்று நான் கோவிலுக்கு போகப் போகிறேன் என்று அறிவித்த புனே பெண் ஆர்வலர் தீப்தி தேசாய் என்பவருக்கு மிரட்டி இருநூறு கடிதங்கள்வந்திருக்கிறதாம்.   தொலைபேசியிலும் கொலை மிரட்டல் வருகிறதாம்.  எப்படிஇருக்கிறது?

ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த அடாவடித்தனத்தை அவர்கள் தொடரும் போது எல்லாம் பொது மக்கள் அவர்களுக்கு  எதிராக திரும்பியது தான் வரலாறாக இருந்திருக்கிறது.

இன்று தேவசம் போர்டு கூடி உச்ச நீதி மன்றத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவது  இல்லை  என்ற நல்ல முடிவை  எடுத்துள்ளது.  இதனை அதன் தலைவர்  பத்மகுமார் அறிவித்தார்.

ஆனால் சனாதனிகள் அடங்கி விடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

சனாதனம் வஞ்சனையை விதியாக்க முயல்வதும் பகுத்தறிவு அவைகளை போரிட்டு அகற்றுவதும் தொடர்ந்து நடைபெறும் மாற்றங்கள் தான். இப்போதும்  வெல்லப்போவது பகுத்தறிவே?!

திருமுருகன் காந்தி சிறையில் இருந்து உயிருடன் திரும்பினார்?

திருமுருகன் காந்தி சிறையில் இருந்து உயிருடன் திரும்புவாரா என்ற கேள்வி அவரது ஆதரவாளர்களால் எழுப்பப் பட்டு வந்தது.

தமிழ் உணர்வாளர்கள் போராட்டக்காரர்கள் அடக்கு முறைக்கு ஆளாகி பல வழிகளிலும் சித்திரவதைக்கு ஆளாவதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.    ஆனால் இவையெல்லாம் செய்திகளாக மக்களுக்கு கொண்டு செல்லப் படுகின்றனவா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

அவருக்கு சிறையில் கொடுக்கப்படும் உணவில் ஏதோ கலந்து கொடுக்கிறார்கள்.  அதனால் அவருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு அவதிக்கு உள்ளாகிறார் என்று அவரது  இயக்கத்தினர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள்.

அவரை முழுவதுமாக மருத்துவ சிகிச்சைக்கு உள்ளாக்குகிறார் களா ?   ஏன் அவரை தனிமை சிறையில் வைக்க வேண்டும்?   அத்துணை அளவு அவர் பயங்கரவாதியா?    மனித உரிமை பாதுகாப்புக்காக ஐ நா வில் அவர் பேசியது மட்டும்தான் குற்றம் என்றால் அது மிகப்பெரிய கொடுமை.    அரசியல் அமைப்புக்கு உட்பட்டு போராடுவது குற்றமா?  தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப் பட்டவர்கள் பற்றி ஐ நா வில் பேசியது எப்படி தேச விரோதம் ஆகும்?

தமிழ் ஊடகங்கள் விலை போய்விட்டனவா?    காவல்துறையின் அத்துமீறல்களை எத்தனை ஊடகங்கள் மக்களுக்கு கொண்டு சென்றிருக்கின்றன?     நீதிமன்றங்கள் இல்லை என்றால் பல தமிழ் உணர்வாளர்கள் போராட்டக்காரர்கள் இன்று உயிருடன் இருக்கவே முடியாது என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன் நின்று நடத்தியவர்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகள் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதா?    தமிழ் ஊடகங்கள் இதில் காட்டும் பாராமுகம் தான்  நம்மை மிகவும் வருத்துகிறது.    இன்றைக்கு இருக்கிற அரசு அதிமுக அரசு அல்ல என்பதும் பாரதிய ஜனதா கட்சி யின்  பொம்மை அரசு என்பதும்  எல்லோருக்கும் தெரியும்.    ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பாரதிய ஜனதாவின் சித்தாந்தத்திற்கு எதிராக பேசுபவர்கள் எழுதுபவர்கள் பிரச்சாரம் செய்பவர்கள் அத்தனை பேரையும் சித்திரவதை செய்து அடக்கும் முயற்சியில் மாநில அரசு தானாக செய்கிறது என்று யாரும் நம்பவில்லை.    தங்கள் ஆட்சி அமைவதற்கு தடையாக இருப்பவர்களை அகற்றும் முயற்சியில் யார் இருக்கமுடியும்?

இ பி எஸ் – ஓ பி எஸ் – சே குவாரா –பிடல் காஸ்ட்ரோ போன்றவர்கள் என்று பேசி ஜெயக்குமார் இந்த ஆட்சியின் இருப்போர்களின் தரத்தை வெளிப்படுத்தி விட்டார்.    போராளிகளை இத்தனை இழிவு படுத்தியிருக்க வேண்டாம்.

திருமுருகன் காந்தி  மீது 30 வழக்குகளா?     அவரை சிறையில் சித்திரவதை செய்வதாக குற்றச்சாட்டுகள்  பற்றிய உண்மைகளை தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்களுக்கு ஏன் முழுமையாக கொண்டுசெல்லவில்லை?   சட்டத்தை பயன்படுத்தி அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேடாக பாசிச கொள்கைகளுக்கு வலு தேடுவோர் தாங்களாக திருந்துவார்கள் என்று ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது .    மக்களின் விழிப்புணர்வால்  தேர்தலில் வெற்றி பெற முடியாது என்கின்ற ஒரு அச்ச உணர்வு மட்டும்தான் அவர்களை திருத்த முடியும்.

அந்த வகையில் திருமுருகன் காந்தி மட்டுமல்ல  போராடும் மாணவ-மாணவிகள் அத்தனை பேருக்கும் இந்த அரசு காவல்துறையை கையில் போட்டுக்கொண்டு இழைக்கும் அநீதிகள் பற்றிய செய்திகள் மக்களுக்கு வலுவாக பிரச்சாரம் செய்யப் பட்டால் தான் ஆட்சியாளர்களுக்கு கொஞ்சமாவது அச்சம் வரும்.

இல்லையேல் பாசிச ஆட்சியாளர்களுக்கு ஊடகங்கள் விலை போய் விட்டன என்ற கருத்துதான் வலுப்பெறும்.     திருமுருகன் காந்தி உயிருடன் வெளியே வருவாரா என்று  சிலர் அச்சம் தெரிவிக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம்  அவருடைய பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு  பாரதிய ஜனதா எதிர்ப்பு , ஏழை மக்களின் உரிமை பாதுகாப்பு ஆகிய குரல்கள்தான் .

இந்த கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போதே அவர் வேலூர் சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப் பட்டார் என்று செய்தி வந்திருக்கிறது.  நல்லது. சிறை அனுபவங்களை அவர் நேரிடையாக பேசலாம்.

ஊடகங்கள் திருந்துமா ? காவல் துறை உங்கள் நண்பனாக மாறுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் வசூலிக்கப்படுமா? உச்சநீதிமன்ற தீர்ப்பில் புது குழப்பம்?

14 /02/2017 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் கர்நாடக அரசின்  மேல்முறையீட்டை அனுமதித்து உத்தரவிட்டது . நீதியரசர் குமாரசாமி அளித்த விடுதலை தீர்ப்பை ரத்து செய்து நீதியரசர் மைக்கேல் டி குன்ஹா அளித்த நான்காண்டு சிறை ஜெயலலிதாவுக்கு நூறு கோடி மற்றவர்களுக்கு தலா பத்து கோடி என்ற தண்டனை தீர்ப்பை உறுதி செய்தது.

அதே நேரத்தில் ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவர் மீதான மேல்முறையீடு அற்றுப் போகிறது என்றும் உத்தரவிட்டது.     அந்த இடத்தில்தான் குழப்பம் ஏற்பட்டது. ஜெயலலிதா இறந்தது 5/12/ 2016ல். அதற்கு முன்பே பல மாதங்களுக்கு முன்பே வாதங்கள் முடிந்து தீர்ப்புக்காக என்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டு விட்டது.      வாதங்கள் முடிந்த நிலையில் குற்றவாளி ஒருவர் இறந்துவிட்டால் தீர்ப்பு சொல்லப்பட வேண்டும் . ஆனால் மேல்முறையீடு ஜெயலலிதாவை பொறுத்து அற்றுப் போனது என்று உச்சநீதி மன்றம் சொன்னது. அற்றுப் போனது சிறை தண்டனையா அபராதமா என்ற கேள்வி எழுந்ததால் இதை விளக்க கோரி கர்நாடக அரசு
மீளாய்வு மனு செய்தது.. அதுவும் 23/ 8/ 2017ல் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது .

அதன் காரணமாக கர்நாடக அரசு கியூரேட்டிவ் மனு செய்ய முடிவெடுத்தது .அதற்கு அடிப்படை இரண்டு காரணங்கள் இருக்க வேண்டும்.      ஒன்று இயற்கை நீதிக்கு முரணானது என்பது. இரண்டு நீதிபதிகள் பாரபட்சமாக இருந்தார்கள் என்பது. இரண்டாவது காரணம் சொல்லமுடியாது.  எனவே முதல் காரணம் அடிப்படையில்தான் அந்த கியுரேடிவ் மனு விசாரிக்கப் பட வேண்டும். .

அதை விசாரித்த தீபக் மிஸ்ரா     ரஞ்சன் கோகாய் , மதன் பி லோக்கூர் அடங்கிய பெஞ்ச் அதையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது .     இந்த உத்தரவின் காரணமாக ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட நூறு கோடி ரூபாய் அபராதத்தை அவரது சொத்துக்களில் இருந்து வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது .  இது சரியா? நியாயமானதா?

முதல் குற்றவாளி ஜெயலலிதா .     மற்ற மூன்று பேரும் அவருக்கு குற்றமிழைக்க துணை புரிந்தவர்கள் . இப்பொழுது தீர்ப்புக்குப் பிறகு என்ன நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால், ஜெயலலிதா இறந்ததால் சிறை தண்டனை அனுபவிக்க முடியாமல் போனது என்பது சரி . ஆனால் அவருக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்க முடியுமா முடியாதா என்பதுதான் கேள்வி .

தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வந்தன . காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அதுதொடர்பாக உத்தரவிடப்பட்டு நிலுவையில் இருப்பதாகவும் செய்திகள் வந்தன.       ஆனால் இப்பொழுது உச்சநீதிமன்றம் இந்த கியூரேட்டிவ் மனுவை தள்ளுபடி செய்த பிறகு அதற்கு உயிர் இருக்குமா என்பது தெரியவில்லை.

இன்றைக்கு சிறையில் இருக்கிற இரண்டு முதல் நான்கு குற்றவாளிகளான சசிகலா  இளவரசி சுதாகரன் ஆகியோர் தலா 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.  அதே நேரம் குன்ஹா அவர்களின் தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் 4 பேரும் குற்றவாளிகள் ஆகின்றனர் அதில் ஜெயலலிதா இறந்து விட்டதால் அவர் தண்டனை அனுபவிக்க முடியாது என்பது வெளிப்படை. இதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தைக் அவருக்கு சொந்தமான சொத்துக்களிலிருந்து அரசு ஏன் வசூலிக்கக் கூடாது என்பதற்கு எந்த காரணமும் சொல்லப்படவில்லை.

அந்த அம்சத்தை தான் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்த தவறிவிட்டதாக நாம் கருதுகிறோம். ஜெயலலிதா சொத்தை பறிமுதல் செய்ய வில்லை என்றால் சிறையில் இருப்பவர்கள் மட்டும்தான் குற்றவாளிகள். இறந்துபோன ஜெயலலிதா குற்றவாளி அல்ல என்று ஆகிறது. அது தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பா? குற்றவாளிதான் என்றால் அபராதம் எப்படி அற்றுப்போகும்? சொத்துக்கள் இருக்கின்றனவே?

வாதம் முடிந்த நிலையில் இறந்ததை பொறுத்து “ Judgement subsequently pronounced will have the same force and effect as if the same was pronounced before the death of Jayalalitha. என்று விளக்கம் அளித்து இருப்பது மேலும் அபராதம் பற்றிய அம்சத்தை குழப்புகிறது. “ Order of confiscation of 6 companies by trial court is unexceptionable is hereby restored and would be construed to be an order of this court as well “ என்றும் விளக்கம் அளிதிருக்கிறார்கள்.

சட்டப்படி இதற்கு மேல் வேறு நடவடிக்கைகள் இருப்பதாக தெரியவில்லை. அப்படி எனில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் தொடர்பான நிலை என்ன என்பதைப்பற்றி நீதிமன்றம் தான் விளக்க வேண்டும் .    அதாவது ஒருவர் வாதங்கள் முடிந்து தீர்ப்பு தேதி ஒதுக்கப்பட்ட நிலையில் இறந்தால் மேன்முறையீடு அற்றுப் போகும் என்றால் அது சிறை தண்டனையை பொறுத்தமட்டிலுமா அல்லது அபராதத்தை பொருத்தும் உள்ளடக்கியதா என்ற  கேள்விக்கான விடை தெரியவில்லை.

இந்த குழப்பம் தீர்க்கப்படவில்லை என்றால் ஜெயலலிதா குற்றவாளி இல்லை என்றாகிவிடும். சசிகலாவும் மற்றவர்களும் மட்டும் தான் குற்றவாளிகள் துணை நின்றார்கள் என்று ஆகிவிடும். துணை நின்றவர்களுக்கு  சிறை என்றால் முதல் குற்றவாளி அரசு ஊழியர் எப்படி நிரபராதி ஆவார். இந்த கேள்விக்கு தான் விடை தெரியவில்லை.

ஒருவேளை இந்த தீர்ப்பினால் ஜெயலலிதாவின்  தனிப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டிய அவசியம் இருக்காது என்று ஆனால் ,   முதல் குற்றவாளியின் சொத்துக்கள் பறிமுதலுக்கு ஆளாகாமல் அவருக்குத் துணை நின்றவர்களின்  சொத்துக்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்படும் ஒரு வழக்காக வினோதமான சாட்சியமாக, இந்த வழக்கு வரலாற்றில் ஒரு பாடமாக இருக்கும்.

தீர்ப்புக்கு ஒதுக்கப் பட்ட சில மாதங்களிலேயே தீர்ப்பு சொல்லப்  பட்டிருந்தால் தமிழ்நாட்டின் வரலாறே மாறியிருக்கும். ஜெயலலிதா முதல்வராக அப்போது இருந்தார். ஆக முடிந்தது நீதியரசர் குமாரசாமியின் தவறான கூட்டுதல் கணக்கால். அதைத்தான் உச்சநீதிமன்றம் “ incorrect arithmatical calculation”   என்று குறிப்பிட்டு இருந்தது. அதற்கு மேல் அவர்களால் அதை விமர்சிக்க முடியவில்லை. அவர் நோய் வாய்ப்பட்டு சிகிச்சையில் இருந்து மீள முடியாமல் மரணித்து  அதற்கடுத்து யார் என்ற கேள்வி எழுந்து சசிகலா சட்ட மன்ற கட்சி தலைவராக உரிமை கோரியபின் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து கொண்டு சென்னை வர காலம் தாழ்த்த ,  அப்போது வந்த தீர்ப்பு இது என்பதையும் வரலாறு பதிவு செய்திருக்கிறது.

மகாபுஷ்கரம் தமிழர் பண்டிகை அல்ல !??

மகாபுஷ்கரம் தமிழர் பண்டிகை அல்ல !??

இந்த ஆண்டு மகா புஷ்கர விழாவை தாமிரபரணி ஆற்றில் கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள்.     அது தமிழர்களுக்கு தொடர்பான விழாவா சைவர்கள், வைணவர்கள் யாருக்கு சொந்தம் என்ற கேள்விகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் எல்லோரையும் இந்துக்கள் என்ற போர்வையில் பலதரப்பட்ட நம்பிக்கை உள்ளவர்களையும்,  கொண்டு வந்து விட்ட பிறகு நடைபெறும் விழாக்கள் தேவையா என்று ஆராய்ந்து அதன் பின்னரே அதை அனுசரிக்கவேண்டும் . பழக்கப்பட்டு விட்டீர்களா, குறைந்த பட்சம் அனுசரிக்கும் முன்பாக அதைப் பற்றி ஆராய வேண்டும்.

நம்பிக்கை உள்ளோர் எச்சரிக்கையுடன் பாதுகாப்புடன் நீராட வேண்டும் .  பார்ப்பனர்கள் எழுதி வைத்த புராணக் கதைகளை நம்பி பண்டிகைகளை கொண்டாடுபவர்கள் தான் இந்துக்கள் என்பதான ஒரு தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு விட்டது.      தமிழர்களுக்கு அந்நியமான பண்டிகைகள் புகுத்தப்பட்டு விட்டன. ஒரே நாளில் ஒழிக்க முடியாது. அதில் ஒன்று தான் புஷ்கரம்.

12 ஆறுகளை தேர்ந்தெடுத்து 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதில் லட்சக்கணக்கான  மக்களை வரவழைத்து அங்கே முன்னோர்களுக்கு பிரார்த்தனை செய்து திதி கொடுங்கள்  என்று அவர்களுக்குப் போதித்து அங்கே பார்ப்பன பண்டிதர்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் உத்தியாகத்தான் இந்த புஷ்கர விழா நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன .   ஒவ்வொரு 12 ஆண்டிற்கும் ஒரு புஷ்கரம் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாபுஷ்கரம் என்று கொண்டாட வைத்துவிட்டார்கள்.

இதனுடைய தொடக்கம் எங்கே தெரிகிறது என்றால் 1426ல்  வெளியான ஜாதக பாரிஜாதம் என்ற நூலில் இதன் மூலம் வெளிப்படுகிறது .     அதாவது ஒருபிராமணனுக்கு அவனுடைய பக்தியை மெச்சி சிவன் ஒரு வரம் கொடுக்கிறார் .     அந்த வரம் என்னவென்றால் அவனுக்கு நீருக்குள் வாழ்ந்து கொண்டு புனித ஆறுகளை தூய்மைப்படுத்துகிற திறன் பெற்றவனாக அவன் வாழ்கிறான் .     அந்த பிராமணன் பெயர் புஷ்கரன் .

பிரகஸ்பதி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவன் ஒரு கிரகத்திலிருந்து  மற்ற கிரகத்திற்கு அவர் மாறும்போது தானும் ஒரு நதியில் பிரவேசிப்பதாக தீர்மானிக்கிறான்.    இந்தியாவில் அந்த நதிகள் கங்கை நர்மதை, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா காவேரி ,   பீமா – தாமிரபரணி , தப்தி, துங்கபத்ரா, சிந்து, பர்நிதா ஆகியவை ஆகும். இதில் சரஸ்வதி நதி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.     பீமா நதி மகாராஷ்டிரத்திலும் தாமிரபரணி நதி தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆனால் இரண்டுமே ஒரே விருச்சிக ராசி யில் குரு புகும்போது நடக்கும் என்று சொல்கிறார்கள்.     

அவர்கள் எந்தப் புராணத்தை எழுதி வைத்தார்களோ  அவைகளைப் பற்றி இந்த விழாக்களில் கலந்துகொள்ள வரும் பக்தர்களுக்கு  சொல்ல மாட்டார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் முன்னோர்களுக்கு திதி கொடுங்கள்,  மத நம்பிக்கைகளை பிரச்சாரம் செய்யுங்கள், நதியை வழிபடுங்கள், நீங்கள் வேண்டியதெல்லாம் கிடைக்கும்,    இப்படித்தான் அவர்கள் பக்தர்களுக்கு பரப்புரை செய்கிறார்கள் .

திருமுறைகளை பாடச் செய்வதும்சுவாமி தீர்த்தவாரி நடத்துவதும் அதிலேயே ஒரு சில அங்கங்கள் .             ஹோமம் செய்வது யக்ஞம் செய்வது எல்லாம் பார்ப்பனர்கள் மட்டுமே செய்யக்கூடிய சடங்குகள் . இதை நடத்துவதற்கு ஒரு கமிட்டி அமைப்பார்கள்.      அவர்கள் எல்லா பக்கங்களிலும் நிதி பெறுவார்கள். அரசின் ஆதரவையும் தேடிப் பெறுவார்கள்.

தென்னாட்டை விட வட நாட்டில் இதன் தாக்கம் அதிகம்.   ராஜமுந்திரியில் கோதாவரி மகாபுஷ்கரத்திற்கு மூன்று கோடி பக்தர்களை எதிர்பார்த்தார்களாம்.     இந்த ஆண்டு தாமிரபரணி புஷ்கரத்தை காஞ்சி காமகோடி பீடம் நடத்துகிறது . இந்த விழா எத்தனை ஆண்டுகளாக  நடந்தது, , அதற்கு என்ன ஆதாரம , என்பவைகளை எல்லாம் நாம் இப்போது ஆராயத் தேவையில்லை. நதிகளை தாயைப்போல வணங்குவது என்பது வேறு .   நீராதாரத்தை பாதுகாப்பது என்பது வேறு. இந்த நதிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கின்றன . அவைகளை நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும் மதிக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னால் அதில் பகுத்தறிவு இருக்கும் .           ஆனால் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிற ஒரு நதியில் குறிப்பிட்ட நாளில் மட்டும் சென்று கோடிக்கணக்கில் மக்கள் நீராட வேண்டும் வழிபட வேண்டும் அங்கே திதி கொடுக்க வேண்டும் எல்லாம் பரப்புரை செய்து அவர்களை நம்ப செய்வது என்பது எப்படி பக்தி ஆகும் என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும்.   

ஒரு பிராமணனுக்கு சிவன் கொடுத்த வரம் வேறு நாடுகளுக்கு செல்லுமா செல்லாதா என்பதையும் அவர்கள் தான் விளக்க வேண்டும்.       ஐரோப்பா ஆப்பிரிக்கா அமெரிக்கா கண்டங்களில் சென்று இதே மாதிரி ஆறுகளை தேர்ந்தெடுத்து புனிதப்படுத்த சொல்வார்களா? கடவுளை  நாம் நம்புகிறோம். அவருக்கு உருவம் கிடையாது என்றும் அதே நேரத்தில் பல ரூபங்களிலும் காட்சி தருவார் என்றும் நம்புகிறோம்.     இறைவனுக்கு எந்த சடங்குகளும் அத்தியாவசியம் இல்லை. எதையும் எதிர்பார்ப்பவன் இறைவனாக இருக்க முடியாது . தன்னால் படைக்கப்பட்ட ஜீவன்களுக்கு அனைத்தையும் அள்ளி தருவதே இறைவன் கடமை.     அதே நேரத்தில் தன்னை படைத்த இறைவனுக்கு நன்றியுடன் நடந்து கொள்வதே படைக்கப்பட்ட ஜீவன்களின் கடமை. அவ்வளவே. இதைத்தாண்டி பக்தி என்ற ஒன்று இருக்க வேண்டிய அவசியமில்லை.

பண்டிகைகளை மறுபரிசீலனை செய்யவேண்டிய கடமை தமிழர்களுக்கும் ஏனைய இந்தியர்களுக்கும் இருக்கிறது .       காலம் காலமாக ஒரு தவறான பழக்கத்துக்கு ஆளாகி இருந்தால் அதைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை.       அரசும் பொறுப்பு உணர்ந்து நடக்க வேண்டும். நம்பிக்கையோடு வருகிற மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது . நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ தாமிரபரணி ஆற்றில்   குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோயில் கொக்கிரகுளம் இரண்டு பகுதிகளில் படித்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அறநிலைத்துறை அங்கே பக்தர்கள் குளிக்க வேண்டாம் என்று தடை விதித்திருக்கிறது. .   ஏனைய இடங்களில் தடையேதும் இல்லை . சிந்தித்து செயல்பட்டு நம்பிக்கையில் பழக்கப் பட்டவர்கள் அங்கு எச்சரிக்கையுடன் சென்று பாதுகாப்புடன் எந்தவித அசம்பாவிதத்திற்கும் இடம் கொடுக்காமல் தாங்களாகவே பெயருடைய துணையின்றி வழிபாடு நடத்தி திரும்ப வேண்டும் என்பதே நமது வேண்டுகோள் .   

இன்னும் கூரிய  சிந்தனை உடையோர்  வீட்டில் இருந்தவாறே கூட வழிபாடு செய்யலாம்.    

அறநிலையத்துறை அதிகாரிகள் வீட்டுப் பெண்களை கொச்சைப்படுத்திய  ஹெச் ராஜா மீது நடவடிக்கை என்ன?

இந்து அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் நாடு முழுதும் எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்  கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள் . இதற்கு திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற பல கட்சி நிர்வாகிகள் ஆதரவளித்திருக்கிறார்கள் .

எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயாராக இல்லை.     அடிமை அரசாங்கம் என்று குற்றம் சுமத்தினால் கூட அதைப்பற்றி கண்டு கொள்வதில்லை இந்த அரசு.       அதனால் தான் ராஜாவுக்கும் எஸ்வி சேகருக்கும் ஒரு நீதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் கருணாசுக்கு ஒரு நீதி என்று இந்த அரசு பட்டவர்த்தனமாக பாரபட்சம் காட்டி வருகிறது..

இந்து அறநிலைத்துறை தவறாக நிர்வகிக்கப்படுகிறது என்பது ராஜாவின் குறையாக இருந்தால் அதற்கு போராடட்டும்.     யாரும் தடுக்கவில்லை. ஆனால் அறநிலையத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு கோவில் நிலங்களை விற்பனை செய்கின்றனர்.     இந்த அதிகாரிகள் தங்கள் வீட்டு பெண்களை விலைபேசி விற்பதை போலதான் அது என்று பேசியிருக்கிறார்.

அந்தப் பேச்சுக்குத்தான் அறநிலை துறை ஊழியர்கள்  கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுநாள் வரையில் இந்த அரசு அவர்களின் உணர்வுகளை புறந்தள்ளி நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது .

எச் ராஜா தான் என்ன பேசினேன் என்பதையும்  அரசு ஊழியர்களை அவர்கள் வீட்டுப் பெண்களை தரக்குறைவாக பேசினாரா இல்லையா என்பதையும் விளக்கமாக கூறி இருக்கலாம். அதற்கு அவர் தயாராக இல்லை என்பது தான் வேதனை. ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருந்தால் பார்ப்பனர்கள் எத்தகைய மமதையோடு நடந்து கொள்வார்கள் என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.      பேசினாரா இல்லையா என்பதை அவர் தானே சொல்ல வேண்டும்? அவர் மௌனம் காப்பது , நான் அப்படிதான் பேசுவேன் யாரும் என்னை கேட்க முடியாது என்று சவால் விடுவதைப் போல அல்லவா இருக்கிறது?

இதைப்போலத்தான் பாராளுமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் பற்றியும் அவர் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து இருப்பதாக பேசினார்.    அதற்கு அருண்மொழித்தேவன் மறுப்பு தெரிவித்திருக்கிறார் ,சவால் விட்டிருக்கிறார். அதற்கும் இதுவரை எச் ராஜா எந்த பதிலையும் சொல்லவில்லை இவர்கள் தரக்குறைவாக பேசிக்கொண்டே இருப்பார்கள் ஆனால் இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்றால் எத்தனை காலம் இந்த நிலை நீடிக்கும் என்பதை மானமுள்ள தமிழர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும் . நேரம் வரும் காத்திருப்போம்!!!

சபரிமலை; பெண்களின் மீதான சனாதன தடையை உடைத்தது உச்சநீதிமன்றம்!!!

10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலையில் சுவாமியை தரிசிக்க அனுமதி இல்லை.    இதுதான் காலங்காலமாக இருந்து வரும் நடைமுறை . அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் “ சுவாமி ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி”  அவரை தரிசிக்க மாதவிலக்கு வருகிற பெண்கள், அதாவது 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் தகுதி பெற்றவர்கள் அல்ல. ஏனென்றால் 41 நாள் விரதத்தை அவர்களால் கடைப்பிடிக்க முடியாது.    இதுதான் சனாதனவாதிகளின் வாதம். அதைத்தான் உச்சநீதிமன்றம் இன்று ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

1991இல் கேரள உயர் நீதிமன்றம் இந்தத் தடை செல்லும் என்று தீர்ப்பளித்தது .2006ஆம் ஆண்டு ஜெயமாலா என்கிற ஒரு கன்னட அரசியல்வாதி நடிகை,  தான் 1987 ல் 28 வயது இருக்கும்போது ஒரு அர்ச்சகரின் உதவியோடு தான் ஐயப்ப தரிசனம் செய்ததாக சொல்லியிருந்தார் . அது ஒரு வழக்கு ஆகி பெரிய பிரச்சனையாக உருவாகி விவாதத்திற்கு வந்தது .   

அதற்கு பிறகு 2008 ஆம் ஆண்டு கேரளாவின் இடதுசாரி அரசு எல்லோரும் கோயிலுக்குள் நுழைய  இடமுண்டு என்று நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தது . 2016 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் ஆன பொதுநல வழக்கு இப்பொழுது  இறுதி விசாரணைக்கு வந்தது. விசாரித்தது ஒரு அரசியல் சாசன அமர்வு . 5 பேர் கொண்ட அமர்வில் தீபக் மிஸ்ரா , நாரிமன் , கன்வில்கர் , சந்திரசூட் ஆகிய நால்வரும் பெரும்பான்மை தீர்ப்பாக எல்லா வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்ய உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தார்கள் .    இந்து மல்ஹோத்ரா என்ற ஒரே பெண் நீதிபதி மட்டும் நம்பிக்கை சார்ந்த சமய வழிபாட்டு முறைகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது அது பாரபட்சமாகவே இருந்தால் கூட தலையிடக்கூடாது என்று தீர்ப்பளித்திருக்கிறார் .

எனவே பெரும்பான்மை தீர்ப்பு அடிப்படையில் இனிமேல் எல்லா வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது.  இதை அந்த கோவிலின் தலைமை அர்ச்சகர், காலங்காலமாக இருந்த ஒரு மரபு தடைபடுவதற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார். பந்தள அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இதில் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்கள்..ஆனால் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் இதை வரவேற்று இருக்கிறார். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்துவதற்கான வேலைகளை பார்ப்போம் என்று அவர் உறுதிபடதெரிவித்திருக்கிறார் . தமிழ்நாட்டில் மதுரை ஆதீனம் இந்த தீர்ப்பை வரவேற்று பேட்டி கொடுத்திருக்கிறார் .    அர்ஜுன் சம்பத் போன்ற சனாதன ஆதரவாளர்கள் மட்டும் எதிர்த்திருக்கிறார்கள்.

இந்தத் தீர்ப்பு பல அம்சங்களை நிலைநாட்டி இருக்கிறது. அதாவது மதம் சம்பந்தமான பல பிரச்சினைகளுக்கு இது ஒரு விடை கொடுத்து இருக்கிறது என்றே சொல்லலாம் .    தனிமனித உரிமையை எந்த காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் வழிபாட்டு உரிமையை மதம் என்ற ஒன்றைக் காட்டி மறுக்க முடியாது என்றும்  mob morality மந்தை நியாயத்தை அமல்படுத்த முடியாது என்றும் இந்த சம்பிரதாயமே ஒரு ஆணாதிக்க வெளிப்பாடு என்றும் ஐயப்ப வழிபாடு என்பது ஒரு தனி மதம் அல்ல என்பதையும்  இந்த மரபு ஒருவகையான தீண்டாமையை ஒத்தது என்பதையும் இந்த தீர்ப்பு வலியுறுத்துகிறது .

பலகோணங்களில்  பார்க்கும்போது இந்த தீர்ப்பு ஐயப்ப வழிபாட்டிற்கு மட்டும் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.    ஒரு விடயம் இந்த தீர்ப்பின் மூலமாக தெளிவுபடுத்தப்படுகிறது. எந்த வகையான மத நம்பிக்கை அடிப்படையிலும்  எந்த ஒரு தனி மனிதனுடைய அடிப்படை உரிமையையும் பறிக்க முடியாது என்பதுதான் அது . ஏறத்தாழ எல்லாக் கோயில்களுக்கும் இது பொருந்தும் . அதுதான் நாம் கவனிக்க வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக நாம் இந்தத் தீர்ப்பை பார்க்கிறோம்.

இன்னும் பல கோயில்களில் சம்பிரதாயம் என்ற பெயரில் பல வகையான தீண்டாமைகளும் பாரபட்சங்களும் அமுலில் இருக்கின்றன.     அவைகளை எல்லாம் கண்டறிந்து நீக்குவதற்கு இந்து மத ஆர்வலர்கள் என்போர் இனி பாடுபட வேண்டும். அதுதான் இறைவனுக்கு செய்கிற தொண்டு.     அதை விட்டு விட்டு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போகிறோம் என்றோ அமல்படுத்த மாட்டோம் என்றோ நிலை எடுப்பார்களே ஆனால் அது இந்து சமுதாயத்திற்கு செய்கிற பெரிய தீமையாகத் தான் முடியும்.     

இந்துத்துவத்தை தூக்கிப்பிடிக்கும் பாஜகவின் மோடி அரசு இந்த தீர்ப்பின் பின் விளைவுகள் ,   பல மாநிலங்களில் பல கோயில்களில் எதிரொலிக்கும் என்பதை உணர்ந்தே இருக்கும். எனவே இந்த தீர்ப்பை அப்படியே விட்டு விடுவார்களா அல்லது இதை அமுலாக்கம் செய்யாமல் இருப்பதற்கு வேறு வழி என்ன என்பதை திட்டமிடுவார்களா  என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .

நம்மைப் பொறுத்த வரையில் இறைவழிபாட்டுக்கு ஆலயம் செல்ல கூட தேவையில்லை என்பதுதான் நிலைப்பாடு. ஆனால் நம்பிக்கையாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இடையே சமத்துவம் நிலவுவதை உறுதி செய்வதும் ஒரு நாகரிக சமுதாயத்தின் மற்றும்  அரசின் கடமை என்ற வகையில் இந்த தீர்ப்பை பொதுமேடை வரவேற்கிறது. உச்ச நீதி மன்றத்தை வாழ்த்துகிறது .