Home Blog Page 63

உச்சநீதிமன்றம் போட்ட குண்டு; கள்ள உறவு குற்றமல்ல???!!!

உச்சநீதிமன்றம் போட்ட குண்டு; கள்ள உறவு குற்றமல்ல???!!!

இந்திய தண்டனை சட்டம் பிரிவு  497, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 198 ஆகியவைகள் அரசியல் சட்டப்படி செல்லாது என இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது .  5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது

சொல்லப்போனால் இந்திய குடும்பங்களை சிதறடிக்கும்  ஒரு வெடிகுண்டை போன்ற சக்தி கொண்ட தீர்ப்பாக இது அமைந்திருக்கிறது.    திருமணம் என்பது ஒரு அடிமைத்தனம்.    பெண்கள் ஆண்களுக்கு பாத்தியப் ப ட்டவர்கள் என்பதான ஒரு சமுதாயம் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.   தீபக் மிஸ்ரா , நாரிமன் கன்வில்கர் ,  சந்திரசூட் , இந்து மல்கோத்ரா ஆகிய ஐந்து நீதிபதிகள் இந்திய சமுதாயத்தின் குடும்ப வாழ்க்கையை மிகவும் பாதிக்கும் அல்லது மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.

திருமண பந்தத்தை மீறி வேறு ஆடவருடன் அல்லது பெண்டிருடன்  உடல் தொடர்பு வைத்துக்கொள்வது தண்டிக்கத்தக்க குற்றம் அல்ல.   ஆனால் அதன் காரணமாக பாதிக்கப்பட்டவர் விவாகரத்து கோரலாம் என்றும் அந்த தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது. அதாவது சம்மதம் தெரிவிக்கும் இரண்டு வயதானவர்கள் தங்களுக்குள் பால் உறவு கொள்வது என்பது அவர்களது தனியுரிமை என்கிறது தீர்ப்பு.    அதாவது திருமண பந்தம் என்பது புனிதமானது என்ற கோட்பாட்டிற்கு இது வேட்டு வைக்கிறது . 

இந்து மல்கோத்ரா என்கின்ற ஒரு தனி பெண் நீதிபதி ‘ இது ஒரு சிவில் தவறு  மட்டுமே அதாவது தார்மீக ரீதியில் தவறு என்ற அளவில் மட்டுமே இருக்க முடியுமே தவிர தண்டிக்கப்பட தக்க குற்றமாக முடியாது ‘என்கிறார்.   நீதிபதி  சந்திரசூட் இன்னும் ஒரு படி மேலே போய் ‘ திருமண பந்தத்திற்கு உள்ளேயே விரும்புகிற நபரோடு உறவு கொள்வது என்பது கூட அவரவர் விருப்பம் என்கிறார்’.  சமுதாயம் எப்படி விரும்புகிறதோ அப்படியே சிந்திப்பதற்கு எந்த ஒரு ஆணும் பெண்ணும் நிர்ப்பந்திக்கப்பட முடியாது’  என்கிறார் நீதிபதி சந்திரசூட்.   

இது ஒரு காலனியாதிக்க சட்டம்.  அதற்கு தற்போதைய காலத்தில் இடமில்லை என்பதுதான் இந்த தீர்ப்பின்  மையம்.    மிகப்பெரிய விவாதங்களை இந்த தீர்ப்பு உருவாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.    நாடகங்களில்,  சினிமாக்களில் எல்லாம் வரும் சம்பவங்கள் திருமண பந்தத்தின் புனிதத்தன்மையை சுற்றிச் சுற்றி தான் வரும்.    அதுவும் ‘ ஒரு நல்ல மனைவி’  என்ற தலைப்பில் நீதிபதி சந்திரசூட் அவர்கள் எழுதி இருக்கிற குறிப்புகள் சிந்திக்கத் தக்கவைதான்.    மனைவி என்பவள் அடங்கி நடக்க வேண்டும்.  குடும்பத்தில் எல்லோரையும் அனுசரித்துப் போக வேண்டும் சுய சிந்தனை கூடாது.  கட்டுப்பெட்டியாக வாழ வேண்டும் என்றெல்லாம் பெண்களுக்கு இருக்கிற கட்டுப்பாடுகளை அவர் சுட்டிக் காட்டி இவைகளை எப்படி நியாயப்படுத்த முடியும் எனவும் கேள்வி கேட்கிறார் .    காலம் காலமாக சுயமரியாதை உணர்வுகளை பரப்பியவர்கள் கூட இத்தனை பட்டவர்த்தனமாக ஏன் திருமணம் உறவுக்குள்ளேயே இருந்துகொண்டு பிறருடன் உடலுறவு கொள்ளக்கூடாது என்று கேட்டதில்லை?

எனவே இந்த தீர்ப்பு இப்படியே விடப்படுமா அல்லது இந்து மத தீவிரவாத அடிப்படையிலான யாராவது இன்னும் பெரிய நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுக்கு இது அனுப்பப்பட வேண்டும் என்று கேட்க போகிறார்களா என்பது தெரியவில்லை அதுவரை இன்றைய தீர்ப்பு தான் இறுதி.

இனி  கதை எழுதுபவர்கள் எல்லாம் தங்களது மனம் போன போக்கில் கதைகளை எழுதுவதற்கு இந்த தீர்ப்பு இடம் கொடுத்திருக்கிறது ஆதார் அட்டை தொடர்பான தீர்ப்பில் ஒரு தனி நீதிபதி தனது சிறுபான்மை தீர்ப்பை எழுதினார்.  ஆனால் இந்த வழக்கில் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்து தீர்ப்பை சொல்லியிருக்கிறார்கள்.

கேரள மாநிலத்தை சேர்ந்த ஜோசப் ஷைன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்து இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு செல்லாது என அறிவிக்கக் கோரி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . அவர் கிறிஸ்தவர் என்பதால் இந்து சமுதாயத்தில் அடிநாதமாக விளங்கக்கூடிய கணவன்-மனைவி பந்தத்தை உடைப்பதற்கு சதி செய்து இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார் என்று கூட குற்றம் சாட்டப்படலாம். 

இன்னும் எந்த வகையில் எல்லாம் இந்து மத தீவிரவாதிகள் இந்த தீர்ப்பை எதிர்த்து நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை நாம் பார்க்கத்தான் போகிறோம்.  ஆனால் பழமைவாதிகள் எந்த சீர்திருத்தத்தையும் எப்போதுமே தாங்களாக ஏற்றுக் கொண்டது இல்லை.  சட்டத்தின் கட்டாயத்தினால் தான் அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.    இந்த தீர்ப்பு மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.   

அதே நேரத்தில் இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தப்போகும் சமுதாய  மாற்றங்கள் நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவில்தான் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

ஆதார் சட்டம் செல்லும் ; உச்சநீதி மன்ற தீர்ப்பு பிரச்னைகளை தீர்க்க உதவுமா?

ஆதார் சட்டம் செல்லும் ; உச்சநீதி மன்ற தீர்ப்பு பிரச்னைகளை தீர்க்க உதவுமா?

ஆதார் அட்டைஅரசுக்கு  அவசியம் தனியாருக்கு தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு சொல்லிவிட்டது .

நிரந்தர கணக்கு எண் இணைக்க ஆதார் அவசியம் .  வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கட்டாயம் வேண்டும்.. நலத்திட்டங்கள் மற்றும் அரசின் மானியங்கள் பெற அவசியம் தேவை .

தேவையில்லாதது. வங்கிக் கணக்குடன் இணைக்க தேவையில்லை செல்போன் நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டியதில்லை. மத்திய கல்வி வாரியப் பல்கலைக்கழக மானியக்குழு தேர்வுகளுக்கு அவசியமில்லை பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு தேவையில்லை. .  சிறுவர்-சிறுமிகள் பயன்களை பெறுவதற்கு ஆதார் தேவையில்லை.

ஒட்டுமொத்தமாக ஆதார் அடையாள அட்டை செல்லும். ஆதார் சட்டத்தை நிதி மசோதாவாக மக்களவையில் நிறைவேற்றியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இருக்கிறது . அதாவது ராஜ்யசபாவை தவிர்த்து இந்த சட்டம் இயற்றியது சரி என்கிறது . அதேநேரத்தில் தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் எண்ணை பெறும் உரிமை இல்லை என்றும் தீர்ப்பளித்தது.   

யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வி என்பதை விடுத்து இரண்டு தரப்புகளும் தங்களுக்கே வெற்றி என்று கூறுவதுதான் வேடிக்கை. ஒரு பக்கம் பாஜக தங்களுக்கு வெற்றி என்கிறது. மறுபக்கம் காங்கிரஸ் தங்களுக்கு வெற்றி என்கிறது. ராஜ்யசபாவுக்கு இந்த சட்டத்தை கொண்டு செல்லவில்லை என்றால் மேல் முறையீடு செய்யப்போவதாக காங்கிரஸ் அறிவித்திருக்கிறது .

தீர்ப்பின் பெரும்பாலான பகுதிகளை வரவேற்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கருத்து தெரிவித்திருக்கிறார்.  தனியார் நிறுவனங்களுக்கு உரிமை கொடுக்கும் பிரிவு 57. நடவடிக்கை எடுக்க நிறுவனத்திற்கு உரிமை அளிக்கும் பிரிவு 47 இரண்டும் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. 4 நீதிபதிகள் பெரும்பான்மை தீர்ப்பு எழுதி சட்டம் செல்லும் என்றும் ஒரு நீதிபதி சிறுபான்மை தீர்ப்பு எழுதி சட்டம் செல்லாது என்றும் அறிவித்து இருக்கிறார்கள். நீதிபதி சந்திரசூட் இந்த சட்டம் அரசியல் சட்டத்தின் மீது செய்யப்பட்ட ஒரு மோசடி என்று கூட சொல்லியிருக்கிறார் .

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஒரு பிரச்சனை தீர்வை நோக்கி சென்று இருக்கிறது என்றாலும் பாமர மக்கள் ஆதார் அட்டை காரணமாக பாதிக்கப் படக்கூடாது என்பது இந்த தீர்ப்பின் மூலமாக உணர்த்தப்பட்டிருக்கிறது .  பல நாடுகளில் பல விதமாக அடையாள அட்டைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆதார் அட்டை இன்று ஒரு சட்ட பின்புலத்தை பெற்றிருக்கிறது. அது வரவேற்கத்தக்க ஒரு அம்சமாக பார்க்கப்படும் . ஆதார் தகவல்களை பாதுகாப்பதற்கு என சட்டப்படியான ஒரு அமைப்பு தேவை என்பதை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது. மக்களின் துன்பங்களை களைய செய்யப்படும் எந்த சீர்திருத்தமும் வரவேற்கத்தக்கதே.

ஒரு நாடு தனது குடிமகனை அடையாளம் காண ஒரு அட்டையை பயன்படுத்துவதில் தவறில்லை. அதே நேரத்தில் அது எவரையும் துன்புறுத்துவதாகவும் அமையக்கூடாது . எவரையும் தடுக்கவோ அல்லது தவிர்க்கவோ அல்லது உளவு பார்ப்பதற்காகவோ ஆதார் அட்டை பயன்படுத்தப்படக் கூடாது. இந்த திட்டத்தின் வெற்றி அவைகளை  உறுதி செய்வதில் தான் இருக்கும். மொத்தத்தில் பாதி வரவேற்பும் பாதி அதீருப்தியுமாக இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது

பிற்குறிப்பு; தமிழ்நாட்டரசு தனது மாநிலத்தில்  வாழும் மக்களை அடையாளம் காணவும் நலத்திட்ட உதவிகளை வழங்கவும் இன்னும் சட்டம் அனுமதிக்கின்ற காரியங்களுக்காகவும் ஒரு மாநில அடையாள அட்டையை வழங்கினால் என்ன என்பதை பற்றி பொது மேடை முன்பே  எழுதியிருக்கிறது.

மாணிக்கவாசகர் கூற்றை மேற்கோள் காட்டிய நல்லூர் சரவணனுக்கு  கொலை மிரட்டல்???!!!

தமிழர் சமயம் ஆரியத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் எதிரானது என்ற

மாணிக்கவாசகர் கூற்றை மேற்கோள் காட்டிய

நல்லூர்  சரவணனுக்கு  கொலை மிரட்டல்???!!!

 

கல்வெட்டு ஆராய்ச்சியாளரான முனைவர் பத்மாவதி எழுதிய

“திருவாசகம் அருளிய  மாணிக்க வாசகரின் காலமும் கருத்தும்”

என்று நூலை சைவ சித்தாந்த பெருமன்றத்தின் மூலம் நல்லூர் சரவணன் வெளியிட்டிருக்கிறார்.

அவர் சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறையின் தலைவர்.

பல நூல்களை எழுதி இருக்கிறார்.

அவரைப் போய் ரவுடி  என்று குறிப்பிட்டு

பாஜக செயலாளர் ஹெச் ராஜா பேசியிருக்கிறார்

 

நல்லூர் சரவணனை பதவி நீக்கம் செய்யக் கோரி இந்து அமைப்பினர் என்று சொல்லிக் கொண்டு சிலர் சென்னை பல்கலைகழகத்தை முற்றுகை இட்டு இருக்கிறார்கள் .

ஆராய்ச்சிக் கட்டுரையில் தவறு என்றால் அதை எடுத்துச் சொல்லி மறு புத்தகம் வெளியிடு.    அதை விட்டுவிட்டு ஆராய்ச்சியே செய்யக்கூடாது என்கிறார்களா ?

பார்ப்பனியத்தை எதிர்த்து  யாரும் பேசக்கூடாது .

ஆராய்ச்சியாளர் பத்மாவதி மாணிக்கவாசகர் பற்றி பல செய்திகளை  சொல்கிறார் .

புதுக்கோட்டை மாவட்டம் திருப்பெருந்துறை ஆவுடையார் கோவிலில்

மற்ற சிவன் கோயில்களில்  இருப்பதைப்போல் லிங்க வழிபாடு இல்லை.

அங்கு உருவமற்ற சிவனையே வழிபடுகின்றனர்.   

ஆரிய வேத கருத்துகளுக்கு எதிராக சைவ சமயத்தை சேர்ந்த மாணிக்கவாசகர் சொன்ன  கருத்துகளை மேற்கோளாக வைத்து

வேத  மதத்திற்கும்  சைவ சமயத்திற்கும் இடையிலான போராட்டம் பற்றி நல்லூர் சரவணன் பேசியிருக்கிறார்.

 

அதுதான் அவர்களை எரிச்சல் அடைய வைத்திருக்கிறது.

அவர்கள் அந்த புத்தகத்தை படித்தார்களா  என்பது கூட தெரியவில்லை.

30 வருடமாக  30க்கும் மேற்பட்ட சைவ சமய நூல்களை

நல்லூர் சரவணன் எழுதி இருக்கிறார் .   

நிறைய சொற்பொழிவுகள்  நிகழ்த்தி அனைத்திலும்

சைவ சமய மேன்மை பற்றி  பிரச்சாரம் செய்திருக்கிறார்.

இதிலென்ன அவதூறு இருக்கிறது?

 

இந்து அமைப்புகள் என்று சொல்லிக்கொண்டு

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு  அடி பணிந்து போகிறவர்களாக

சில தமிழர்கள் செயல்படுவது வருந்தத்தக்கது

அதில் முதன்மையானவர்  அர்ஜுன் சம்பத்

அவர்களால் ஓரங்கட்டப் பட்டு தனி கட்சி கண்டவர்

தமிழர்கள் சார்பில் பேசுவதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் தந்தது?

பக்தர்கள் சார்பிலும் இவர்கள் பேச முடியாது .  

மாறுபட்ட கருத்துடைய பக்தர்கள் இருக்கக் கூடாதா?

 

இத்தகைய அச்சுறுத்தும் பிரச்சாரத்திற்கு ஆட்சியாளர்கள் அடிபணியக் கூடாது.

இரண்டு  மாறுபட்ட கருத்துக்களை உடைய

இந்துக்களுக்கு  இடையே ஆன பிரச்சினைகளை  அவர்களே

தீர்த்துக் கொள்ளும் படி அரசு விட்டு விட வேண்டுமே தவிர

ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்படுவது  கூடாது.

இந்து தமிழர்களுக்கு இடையே விழிப்புணர்வு ஏற்படும் வரை

இத்தகைய  போலி இந்துக்களின் ஆர்ப்பாட்டங்கள் எல்லாம்

பார்ப்பனிய ஆதிக்கத்தை  ஏற்றுக் கொள்வதாகவே அமையும்

 

நல்லூர் சரவணனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற கொலை மிரட்டல்களை பற்றி

தமிழக ஊடகங்கள் விவாதிக்க வில்லையே ஏன்?

செய்தித்தாள்கள் ஒருதலைப்பட்சமான நிலைப்பாட்டை எடுப்பது நல்லதல்ல.

அரசியல் கட்சிகளும் கூட இதுபற்றி நிலை  எடுக்க வேண்டும்.

கண்டும் காணாமலும் செல்வாக்குள்ள கட்சிகள் இருப்பதினால்தான்

இவர்களின் கொட்டம் அதிகரிக்கிறது.

காவல் துறை சரவணனுக்கு போதிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

 

தமிழர் சமயம் பார்ப்பனீயம் அல்ல அல்லவே அல்ல

விவாதிப்போம் தெளிவு படுத்துவோம்  வாருங்கள் !!!

 

ஊழல் ஆட்சி என்று சொன்னால் நாக்கை அறுப்பேன் ; அமைச்சர் துரைக்கண்ணு சொல்லிவிட்டு பின்வாங்கினார்??!!

நான்காம் தர பேச்சாளர்களை கேள்விப்பட்டிருக்கிறோம்

பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு

கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்து பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

சமீபத்திய உதாரணம் கருணாஸ்-சட்ட மன்ற உறுப்பினர்

முறைகேடாக பேசி  இப்போது சிறையில் இருக்கிறார்

எப்போது பிணையில் வருவாரோ அவருக்கே தெரியாது?

 

திடீரென்று ஆளும் கட்சி எதிர்க்கட்சிக்கு  எதிராக

பொதுக்கூட்டங்களை அறிவித்தது

எதிர்க்கட்சி ஆளுங்கட்சிக்கு  எதிராகப் போராடலாம்

ஆளுங்கட்சி  போராடுவது தமிழ்நாட்டில்தான் .

அந்த அதிசயம் நடந்தது .   

அத்தகைய கூட்டம் ஒன்றில் பேசும் போது தஞ்சையில்

அமைச்சர் துரைக்கண்ணு பேசுகிறார். என்ன ஊழல் ஆட்சி ஊழல் ஆட்சி என்று சொல்லிகிட்டே இருக்கே ? இனிமே அப்படி பேசினா நாக்கை அறுத்துப்போடுவேன் “

இப்படி பேசுபவர்களை நாம் அமைச்சர்களாக கொண்டிருக்கிறோம்.

எப்படி உருப்படும் தமிழ்நாடு?

 

அமைச்சர் மீது என்ன நடவடிக்கை யார் எடுப்பார்கள்?

இவர்களுக்கு மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க

 என்ன தார்மீக உரிமை இருக்கும்?

ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு, திண்டுக்கல்  சீனி வாசன்

வீரமணி ,   ஓ எஸ் மணியன்    விஜயபாஸ்கர் போன்ற

காமெடி அமைச்சர்கள் பட்டியலில்

இப்போது  சேர்ந்து கொண்டார்  துரைக்கண்ணு .

குறிப்பு; விமர்சனங்கள் வலுத்ததும் ‘ நாக்கு அழுகிவிடும் ‘  என்ற கிராமத்து

அடைமொழியை வாய் தவறி ‘ அறுத்துவிடுவேன்’ என்று தவறாக

பேசிவிட்டதாக அமைச்சர் துரைக்கண்ணு விளக்கம் அளித்திருக்கிறார்.

இனிமேல் பேசாமல் இருந்தால் சரி.

அதிர்ச்சியளிக்கும் குழந்தை கடத்தல் குற்றங்கள்!

சென்னை உயர் காவல்துறை துணைத்தலைவர் கொடுத்த அறிக்கையின் படி 2016-2018 ஆகிய  ஆண்டுகளில் காணாமல் போன  குழந்தைகளின் எண்ணிக்கை 9882. இதைக் கண்டுபிடிப்பதற்கு என்று anti child trafficking யூனிட் செயல்படுகிறது மாநிலத்தில் அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்யப்படாத குழந்தைகள் காப்பகம், அனாதை இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. அவைகளைப் பற்றி அறிக்கை உயர் நீதிமன்றம் கேட்டு இருக்கிறது, கொடுமை என்னவென்றால் 874 வழக்குகள் குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைக்க முயற்சித்ததாக விசாரணையில் நிலுவையில் இருக்கிறது.

இரண்டு வழக்குகளில்தான் தண்டனை. பத்தில் விடுதலை. 532 வழக்குகள் மூடப்பட்டு விட்டன. காவல்துறை அளித்திருக்கும் இந்த புள்ளிவிவரங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. சென்னை நகர போக்குவரத்து காவலர் இருக்கும்போதே வயதானவர்கள், குழந்தைகள் தெரு முனைகளில் பிச்சை  எடுப்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏன் புகார் தெரிவிப்பது இல்லை? ஏன் வழக்கு பதிவு செய்வது இல்லை?

பாலா இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள் திரைப்படம் சமூகத்தில் நிலவும் இந்த அவலங்களை அப்படியே படம் பிடித்துக் காட்டியது. ஆனால் காவல் முறையாக செய்திருந்தால் இந்த தொடரும் அவலங்களை களைவதற்கு காவல்துறையின் நடவடிக்கைகள், கண்காணிப்புகள் போதாது. மனிதத்தை மரத்துப் போகச் செய்யும் இந்த குழந்தை கடத்தல்  குற்றவாளிகளுக்கு கடுமையான   தண்டனை தரப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் கரூரில் ஒரு 17 வயது சிறுவனை செல்போன் திருடினான் என்று குற்றம் சுமத்தி கட்டி வைத்து அடித்து கொன்று இருக்கிறார்களே? அங்கேயும் மனிதம் மரித்துப் போனதுதானே? தண்டனை கொடுக்க  காவல் துறையும் நீதி  மன்றமும் இருக்கையில்  சட்டத்தை கையிலெடுத்து தண்டித்த அந்த மிருக கூட்டத்திற்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். காவல்துறையே விரைந்து செயல்படு!

 

சாதி ரீதியில் இயங்குகின்றனவா பத்திரிகைகள்?

கருணாஸ் மீது சுமத்தப்பட்ட  குற்றச்சாட்டுகளில் ஒன்று பார்ப்பனர், நாடார் சாதி ஆதிக்கத்தில் பத்திரிகைகள் இருக்கின்றன என்பது. எல்லோருக்கும் தெரிந்த உண்மைதானே இது இருப்பதில் என்ன தவறு என்றுதானே கேட்கவேண்டும்? யார் பத்திரிகை தொடங்குவதை யார்  எதிர்த்தார்கள்? சி. பா.ஆதித்தனார் உழைப்பால் உயர்ந்தவர். தினத்தந்தி ஆரம்பித்தபோது அது முதல் தமிழர் நாளிதழ். கூடவே நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கினார்.

நெடுங்காலமாக இருந்த பார்ப்பனர் ஆதிக்கத்தை ஊடகத்தில் இருந்து ஒதுக்கி வைத்து தமிழர்களுக்கும்  இடம் தேடிய முயற்சி அது. தினத்தந்தியை எல்லா தமிழ்ச் சாதிகளின் கொண்டாடின. நீதிக்கட்சி திராவிடர் கழகம் திமுக  போன்ற மக்கள் இயக்க செய்திகளை பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்த இந்து , தினமணி போன்ற பத்திரிகைகள் நான்காம் தர செய்திகளாக வெளியிட்டன.

அந்தக் காலகட்டத்தில் தமிழ் இன, மொழி  எழுச்சி செய்திகளை பரப்பியது தினத்தந்தி. எனவே அது எல்லா சாதிகளுக்குமான பத்திரிகை தான். உரிமையாளர் நாடார் சமூகத்தை சேர்ந்தவராக இருந்தார். இன்றைக்கும் தினத்தந்தி நம்பர் 1 இடத்தில் இருப்பதற்கு எல்லா சாதி தமிழர்களும்தான் காரணம். எல்லோருடைய ஒத்துழைப்பும் இல்லாமல் அது முதலிடத்தில் நீடிக்க முடியாது. பாரபட்சமின்றி எல்லா தரப்பு நியாயங்களையும் அது முன்னிறுத்துகிறது. தமிழர்களின் வாழ்வோடு இணைந்து விட்ட உறுப்பினர் தினத்தந்தி.

இன்றைக்கும் தினத்தந்தி மெருகு குறையாமல் தமிழர் உரிமைக்  குரலை ஒலிக்கும் வாகனமாக பயணம் செய்கிறது அதன் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. அதேபோல மாலை முரசு,  மாலை மலர், ராணி போன்ற பத்திரிகைகளும் எல்லா தரப்பினரையும் தான் வசீகரித்திருக்கிறது. அதன் நிறுவனர்  பிறந்தநாள் நிகழ்ச்சிகளுக்கு  முக்கியத்துவம் அளிப்பதினாலேயே அது  ஒரு சாதி பத்திரிகை ஆகிவிடாது. தினத்தந்தியின் செல்வாக்கை குறைக்க இந்து தமிழ் செய்தி வருகிறது. தினமலர் தோற்றுப்  போன இடம் அது. தினமணி வைத்தியநாதய்யர் ஆண்டாள் பற்றிய வைரமுத்து கட்டுரையை பிரசுரித்தற்காக சங்கர மடத்தில் சென்று  மன்னிப்பு கேட்பாரா இல்லையா? அன்றே நடுநிலை என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை தினமணி இழந்துவிட்டது.

எத்தனை பெரிய மக்கள் திரளாக  இருந்தாலும் அதை நான்கு வரி செய்தியாக போடுவது  இந்து பத்திரிகைவழக்கம். மகாத்மா காந்தி இறந்த செய்தியை இரண்டாம் பக்க செய்தியாக வெளியிட்ட பத்திரிகை அது. காரணம் சொன்னார்கள். அப்போது முதல் பக்கம் முழுதும் விளம்பரம் போட்டோம் என்று. அடப்பாவிகளா,  ஒரு தேசத்தின் தந்தை சுட்டுக் கொல்லப்  பட்ட செய்தியை விட உனக்கு விளம்பரம் முக்கியமாக போய் விட்டதா? கேட்க ஆளில்லை.

வேறு வழியில்லாமல்தான் இவைகளை வாங்கியே ஆக வேண்டிய கட்டாயத்தில் தமிழர்கள். ஜல்லிக்கட்டை வரலாற்றின் கடந்த காலமாக கருதி மறந்து போக வேண்டியதுதான் என்று தலையங்கம் எழுதியது இந்து. பாரபட்சமாக செய்திகளை வெளியிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதை அவர்களே சொல்லட்டும்! அதனால்தான் அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை கொண்டு செல்ல கட்சி பத்திரிகைகள் நடத்துகிறார்கள் .

முரசொலி , நமது எம்ஜிஆர், நமது அம்மா, விடுதலை, தீக்கதிர் ,  இன்னும் எண்ணிலடங்கா கட்சிப் பத்திரிகைகளின் தேவை அதனால் தான். இன்று ஆங்கில பத்திரிகைகளில் இந்து, இந்தியன்  எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, எல்லாம் அவர்களால் நடத்தப்படுகின்றன. அவர்களோடு போட்டி போட்டு ஆங்கில பத்திரிகைகளை நடத்தி விட முடி முடியுமா?

தினத்தந்தி யின் DT next  ஆங்கில இதழ் முன்னேறவில்லையே. எனவேதான் பத்திரிகை தர்மம் கடைப்பிடிக்க அனைவரையும் வலியுறுத்துகிறோம் பத்திரிகை என்பது எல்லாருக்குமான பத்திரிகைகளாக உலா வர வேண்டும் அதை வலியுறுத்தும் சக்தி வாசகர்களுக்கு இருக்கவேண்டும். அதுதான் ஆரோக்கியமான ஜனநாயகம்.

உரிமையாளரை வைத்து சாதி ரீதியாக குறை சொல்வது சமூக மோதல்களை வளர்க்கவே உதவும்.. கருணாஸ் பேச்சும் சரி  அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடுக்கப்படும் ஒருசில  நாடார் சங்க நடவடிக்கைகளும் சரி அனைத்தும் இதைத்தான் நமக்கு போதிக்கின்றன. எல்லாரும் சேர்ந்து தமிழர் ஒற்றுமைக்கு உலை வைக்காதீர்கள்.

பெரியார் சிலை அவமதிப்பு தொடர்கிறது!! காவல்துறை என்ன செய்யப்போகிறது?

பெரியார் சிலை அவமதிப்பு தொடர்கிறது, காவல்துறை என்ன  செய்யப்போகிறது ? பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா காவல்துறையை மிக கேவலமாக திட்டி பேசிய பிறகும் கூட நடவடிக்கை ஏதும் இல்லாமல் பொதுக் கூட்டங்கள் பேசி வருகிறார். அதன் விளைவு தொடங்கிவிட்டது. ஏனென்றால் அவர்தான் பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என்று பேசியவர். இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் பெரியார் சிலைகள் அவமதிப்பு செய்யப்படுவது தொடர்கதையாகி விட்டது.

ஒரத்தநாடு காவராப்பட்டு  கிராமத்தில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து இருக்கிறார்கள். திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள அல்லித்துறை பஸ் நிறுத்தத்தில் பெரியார் சிலையின் 5 அடி உயர கைத்தடி சிலையிலிருந்து  உடைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் தஞ்சாவூரிலும் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டிருகிறது. வழக்கம்போல காவல்துறை தேடி வருகிறது.

பெரியாரியத்தை தமிழக மண்ணில் இருந்து அகற்றாத வரை தாங்கள் இங்கே காலூன்ற முடியாது என்ற நிலையில் இருப்போர் யாரோ அவரே இந்த கோழைத்தனமான காரியங்களில் ஈடுபட்டிருக்க முடியும். இதனால் எல்லாம் பெரியார் செல்வாக்கு கூடுமே தவிர குறையாது ஆனால் எதிரிகளை அடையாளம் காண இந்த சம்பவங்கள் தமிழர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை

என்ன செய்வது? மத்தியில் ஆட்சி செய்வோருக்கு அடங்கி நடப்போர், இங்கே  ஆட்சியில் இருக்கிறார்களே?

ராஜீவ் காந்திக்கு ஒரு போபர்ஸ்!! நரேந்திர  மோடிக்கு ஒரு  ரஃபேல்??!!

போபர்ஸ் பீரங்கி ஊழலில் ராஜீவ்காந்தி பெயர் அடிபட்டு

அதன்  காரணமாகவே  தேர்தலில் தோல்வியை சந்தித்தார்

கடைசி வரை அந்த ஊழல் வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டாமலேயே போனது

ஆனால்  அதன் தாக்கம் கடைசி வரையில் இருந்தது

இன்றுவரை காங்கிரசால் போபர்ஸ் பீரங்கி ஊழல் கறையில்  இருந்து தப்ப முடியவில்லை

 

இன்று பிரதமர் நரேந்திர மோடி  அரசு ரபேல் போர் விமானங்கள்

கொள்முதல்விவகாரத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது

ஊழலற்ற அரசு என்று மோடி அரசு இனி மார்தட்டிக் கொள்ள முடியாது

பிரதமர் இது குறித்து   வாய் திறக்க மறுக்கிறார்.

 

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு

2012ல்   126 விமானங்களுக்கு ஒப்பந்தம் போட்டது

ஒரு விமானத்தின் விலை 526 கோடி

2015ல் நரேந்திர மோடி பிரான்ஸ் சென்ற போது

தானாக முடிவெடுத்து 36 ரபேல் விமானங்கள்  வாங்க

ஒப்பந்தம் செய்கிறார்

ஒரு விமானத்தின் விலை 1670 கோடி

 

இதுதான் இப்போது பிரச்சினை ஆகி இருக்கிறது

இந்த  விலை உயர்வு காரணம் யார்?

வெறும் 36 ரபேல் விமானங்களாக  குறைக்கப்பட்டது ஏன்?

இதில் பிரச்சனை ஆகி இருப்பது அனில் அம்பானியின்

ரிலையன்ஸ் நிறுவனம் ரபேல் உற்பத்தி கம்பெனிக்கு

 வணிக கூட்டாளியாக   ஆனதுதான்

 

முன்னாள்  பிரான்ஸ் பிரதமர்  ஹாலண்டே

ரிலையன்ஸ் நிறுவனம்  சேர்க்கப்பட்டது இந்தியா சொல்லித்தான் என்கிறார்

இந்திய அரசு தனக்கு தொடர்பு இல்லை என்கிறது

எது உண்மை?

கடனில் தவிக்கும் அனில் அம்பானி யின் ரிலையன்ஸ் கம்பெனிக்கு

உதவும் நோக்கத்தில்  பிரதமர் மோடி செய்த மாற்றம் இது என்று

 காங்கிரசும்  ராகுல் காந்தியும்  குற்றம் சுமத்துகிறார்கள்

 

பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்கிறது காங்கிரஸ்

தேவை இல்லை என்கிறது  மோடி அரசு

மக்களுக்கு உண்மை தெரிந்தாக வேண்டும்

நீதிமன்றம்  தலையிட்டால் மட்டும் தான் உண்மை வெளிவருமா ?

வெளிப்படைத்தன்மை இல்லை என்பதில் சந்தேகமில்லை

ராணுவ ரகசியம்  இதில் என்ன இருக்கிறது?

 

இதே நிறுவனம் வேறு நாடுகளுக்கும் இதே விமானத்தை விற்பனை செய்திருக்கிறது

அந்த நாடுகள் கொடுக்கும்  விலையைவிட

நாம் ஏன் அதிக விலை தர  வேண்டும்?

எந்த காரணம் கொண்டும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய மாட்டோம்

என்று  பிடிவாதம் செய்கிறது மோடி அரசு

 

விமானத்தின் தரம் தேவை பற்றியெல்லாம் எந்த கேள்வியும் எழவில்லை ஏனென்றால் உலக நாடுகள் பலவும் ஒப்புக்கொண்ட தரம் அது

கேள்வி ஒன்றுதான்

டசால்ட் ஏவியேஷன்நிறுவனம்  தனது தொழில் கூட்டாளியாக

ரிலையன்ஸ் நிறுவனத்தை  தானாக சேர்த்துகொண்டதா ?

அல்லது இந்திய அரசு சொல்லி சேர்த்துக் கொண்டதா ?

 இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம்

30,000 கோடி ரூபாய்  ஆதாயம் அடைய யார் காரணம்?

 

Offset contract  ல் ( உள் ஒப்பந்தந்தில் ) இந்திய அரசின் தலையீடு இல்லை

என்பது உண்மை என்றால் பிரான்ஸ் முன்னாள் பிரதமர் ஏன்

இந்திய அரசு முடிவு செய்தபின் எங்களுக்கு வேறு வழி இல்லை

என்று சொல்ல வேண்டும்?

எனவே விசாரிக்கப்பட வேண்டிய விவகாரங்கள் இதில்

நிறையவே இருக்கின்றன. .

மோடி அரசின் இன்னொரு முகம் இதில் வெளிப்பட்டிருக்கின்றது .

இது தேர்தலின் நிச்சயம் பிரதிபலிக்கும்.

எச்.ராஜா மீது வழக்கை ரத்து செய்ய கோருகிறது பிராமண சங்கம்; மனுநீதியை ஏற்கிறதா எடப்பாடி அரசு?

மனுநீதியை ஏற்கிறதா எடப்பாடி அரசு?

எச் ராஜா எஸ்வி சேகர் இருவருக்கும் ஒரு நீதி

கருணாசுக்கு  ஒரு நீதி-

எடப்பாடிஅரசின் நடவடிக்கைகள் இதைத்தான் காட்டுகின்றன

 

எஸ் வி சேகர் மீது வழக்கு பதியப்பட்டு பல நாட்களாக

கைது செய்யப்படாமல் வலம் வந்து கொண்டிருந்தார்

தலைமைச் செயலாளரின் உறவினர் என்பதால்

அரசு பேசாமல் இருக்கிறதா என்ற கேள்வி அதிகரித்தது

உச்சநீதிமன்றம் வரை சென்ற சேகரை கைது செய்ய

தடை விதிக்க மறுத்தது நீதிமன்றம்

வேறு வழி இல்லாமல் ஒரு நல்ல நாள் பார்த்து

காவல் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜராகி

உடனே பிணையில் விடுதலையானார் சேகர்

 

எச் ராஜா கதை வேறு அவர் மீது வழக்கு பதியப் பட்டிருக்கிறது

2 தனிப்படை அமைத்து  தேடிக்கொண்டிருக்கிறது காவல்துறை

அதே காவல் துறை பாதுகாப்புடன்  நான் சுதந்திரமாக இருக்கிறேன்

என  அறிவித்து விட்டு  வலம் வந்து கொண்டிருக்கிறார் எச் ராஜா

 

சட்டமன்ற உறுப்பினர்  கருணாஸ் மீது வழக்கு பதிவானது

உடன் காவல்துறை சுறுசுறுப்பாகி  அதிகாலை நேரத்தில்

கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது

அவரது பேச்சு நியாயமானதா  என்பது விவாதத்துக்கு உரியது

 பேச்சின் சில பகுதிகள் ஏற்றுக்கொள்ளவே முடியாதவை

ஒரு சட்ட மன்ற  உறுப்பினர் என்ற தகுதிக்கு தகாதவை

 

 இப்போது பிரச்சனை  அதுவல்ல

ஏன் இதே நடவடிக்கை  எச் ராஜா மீது பாயவில்லை என்பதுதான் கேள்வி?

மனு நீதியில்தான்  பிராமணன் கொலை செய்தால்

தலை முடியை சிரைத்து  நாடுகடத்து

 மற்றவன் செய்தால் தலையை வெட்டு   என எழுதி வைத்தார்கள்

இந்த இரட்டை நீதி எடப்பாடி ஆட்சியில்  தொடர்கிறதா?

 

கருணாசுக்கு  பரிந்து எந்த முக்குலத்தோர் அமைப்பும்  அறிக்கை விடவில்லை

ஆனால் தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர் நாராயணன்

தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசிய அதன்  தலைவர் பேசுகிறார்

”  பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா மீது வழக்குகள் பதிவு செய்ததற்கு

சங்கம் சார்பில் கண்டனம்  தெரிவிக்கப்படுகிறது . மேலும்

அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என சங்கம் சார்பில்

வலியுறுத்தப் படுகிறது”  என்று பேசியிருக்கிறார்.

 

வழக்கின் தன்மை பற்றி எதுவும்  சொல்லாமல் எப்படி

வாபஸ் பெறுங்கள் என்று சொல்கிறார்?

இதுதான் சாதி வெறி.

சாதியத்தை  தமிழக ஊக்குவிக்கிறதா?

இதற்கும் நீதிமன்றம் செல்ல வேண்டுமா? பொறுத்திருப்போம்?

ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவதில் ஏன் இத்தனை தாமதம்?

ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவதில் ஏன் இத்தனை தாமதம்?

என்ன செய்கிறது தமிழக அரசு?
உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைப் போல
பேசி வருகிறார்கள் அதிமுக அமைச்சர்கள் ?
ஜெயலலிதாவுக்கு செய்யப்படும் மரியாதைகள் அத்தனைக்கும்
தகுதி படைத்தவரா அவர்?

முதல் குற்றவாளி ஜெயலலிதா. 2 முதல் 4 வரை யிலான குற்றவாளிகள்தான் சசிகலாவும் இளவரசி சுதாகரனும்
அவர்கள் அத்தனை சிறையில்.
ஜெயலலிதா உயிருடன் இருந்து இருந்தால்
அவரும் சிறையில் இருந்து இருப்பார்.
உச்ச நீதிமன்றம் அவருக்கு விதித்த அபராதம் ரூபாய் நூறு கோடியை
பறிமுதல் செய்யும் படி உத்தரவிட்டது.

மற்றவர்களுக்கு அபராதம் தலா ரூபாய் பத்து கோடி மட்டுமே

அதைக்கூட அவர்கள் இன்னும் செலுத்தவில்லை.
2017 மே மாதம் இறுதியில் தமிழக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு
வழக்கு மற்றும் உச்ச நீதி மன்ற தீர்ப்பு விபரங்கள் உள்ளடக்கி
சொத்துகளை கையகப்படுத்த
வேண்டிய கடிதங்களை சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர்
திருவாரூர், தூத்துக்குடி ஆகிய 6 மாவட்ட ஆட்சியர்களுக்கும்
அனுப்பி இருப்பதாக தெரிகிறது.
ஆனால் தொடர்ந்து நடவடிக்கை இருப்பதாக தெரிய வில்லை..
அம்மா அரசு என்று மார்தட்டிக் கொள்ளும் இந்த அரசு
அம்மா சொத்துக்களை எப்படி கையகப்படுத்தும் ?

இறுதித் தீர்ப்பு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில்
இந்த அபராத வசூல் வசூலிக்கும் நடவடிக்கைகள் ஏன் முடிவடையவில்லை?
ஜெயலலிதா சொத்து அரசுடமை ஆனால் தான்
இவருக்கு எப்படி அரசு மரியாதை செய்ய முடியும் என்ற கேள்வி எழும்!
எனவே தான் தாமதம் செய்கிறது எடப்பாடி அரசு.
நக்கீரன் இதழ் மட்டுமே இதுபற்றி கேள்வி எழுப்பியிருக்கிறது?
பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் நடவடிக்கை இது.

பொது மக்கள் தான் குரல் கொடுக்க வேண்டும்.
அரசே ! முதல் குற்றவாளி ஜெயலலிதாவின் சொத்துக்களை
உச்சநீதிமன்ற தீர்ப்புபடி உடனே கையகப்படுத்து!
என்ற குரல் உரத்து எழ வேண்டும்.
அப்போதுதான் இந்த ஆட்சியாளர்கள் யார் என்பது தெரிய வரும்.
நீதிமன்ற தீர்ப்பை அமுல் படுத்தி சட்டத்தின் முன் எல்லோரும் சமமே
என்று நிலைநாட்டுகிறார்களா அல்லது
அம்மா பெயரில் ஆட்சி நடத்திக் கொண்டு எப்படி அவர் சொத்துக்களை
பறிமுதல் செய்வது எப்படி அதன்பின் எப்படி யார் பேரைச் சொல்லி
கட்சி நடத்துவது என்று குழம்பிப் போய்
சொத்து பறிமுதல் நடவடிக்கைகளை வேண்டும் என்றே
தள்ளிப் போடுகிறார்களா என்று பார்க்கலாம்?!