Home Blog Page 64

சாதிக் கட்சிகளுக்கு தடை விதித்தால் எதுவெல்லாம் மிஞ்சும் ?!

இந்து சாதிகள்தான் சமுதாய மோதல் களுக்கெல்லாம் காரணமாக இருக்கின்றன.
சங்கம் வைத்து எங்கள் பொருளாதார உயர்வை வலுப்படுத்துகிறோம் என்றால் தப்பே இல்லை ஆனால் கட்சி நடத்தி சமுதாய பிளவை அதிகப் படுத்துவேன் என்றால் அது சரியா? சங்கம் நடத்த உரிமை உண்டு ! கட்சி நடத்த உரிமை உண்டா?
அப்படி தடை விதித்தால் இப்போது இருக்கும் கட்சிகளில் யார் யாரெல்லாம் மிஞ்சுவார்கள்?

தி மு க – அ தி மு க – காங்கிரஸ் – இந்திய கம்யுனிஸ்டுகள் – மார்க்சிஸ்டுகள் – நாம் தமிழர் கட்சி-பாரதிய ஜனதா கட்சி ,

ம தி மு க – தே மு தி க – ( இரண்டிலும் பெருமளவில் தெலுங்கு பேசும் மக்கள்
இருந்தாலும் , வைகோவின் திராவிட இயக்க பூர்விகம், விஜயகாந்தின் சினிமா ரசிகர்கள் எல்லா சாதிகளிலும் இருப்பது நிஜமே என்பதால் சாதிக் கட்சி முத்திரையில்
இவர்கள் தப்புகிறார்கள்) – –
இவர்கள் மீது சாதி சாயம் பூச முடியாது

பா ம க – மருத்துவர் ராமதாஸ் முடிந்த வரை அந்த கட்சியை
எல்லாருக்குமான கட்சியாக உருவகப்படுத்த பாடுபடுகிறார்
தாழ்த்தப் பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை கட்சியின் உயர் பொறுப்பில்
அமர வைக்கிறார் – எல்லா சமுதாயத்தை சேர்ந்தவர்களையும் கட்சி
பொறுப்பில் சேர்க்கிறார். எல்லா சமுதாய மக்களின் பிரச்னைகளுக்கும்
குரல் கொடுக்கிறார். . மருத்துவர் அன்புமணியும் தந்தை வழியில்
அயராது பாடுபடுகிறார். இன்றைக்கு எல்லா அரசியல் தலைவர்களும்
மருத்துவர் அறிக்கை வந்தபின் தான் எந்த பிரச்னை தொடர்பாகவும் நிலை
எடுக்கிறார்கள். எல்லாம் சரி. பா ம க என்றால் அது வன்னியர் கட்சி
என்ற முத்திரையை அதனால் அழிக்க முடிகிறதா?

பிற சமுதாய மக்களை தன் புகழ் பாட வைக்கும் முயற்சியாகத்தான்
கட்சியில் இருக்கும் மற்றவர்களை பார்க்கிறார்களே தவிர
கட்சி எல்லாருக்குமான கட்சியா?
நீங்கள் சித்திரை திருவிழாவில் வன்னிய சொந்தங்களை மட்டும் தானே
அழைக்கிறீர்கள் . பிற சமுதாயத்தவர் எப்படி உங்களை தங்கள்
தலைவராக ஏற்பார்கள்? கட்சியில் ஜனநாயகம் இருக்கிறதா?
இருந்தால் கட்சியே இருக்காது . உடைத்து விடுவார்கள்.

விடுதலை சிறுத்தைகள்;
தொல். திருமாவளவன் சிறந்த சிந்தனையாளர்.
ஒடுக்கப் பட்ட சமுதாயங்களின் உரிமைக்குப் போராடும் போராளி
விடுதலை என்பது தாழ்த்தப் பட்டவர்களுக்கு மட்டும் அல்ல
எல்லா ஒடுக்கப் பட்டவர்களுக்கும்தான் என்பதே அவரது குரல்
கொண்ட லட்சியத்திற்காக வாழ்க்கையே அர்ப்பணித்து வாழ்பவர்
தனிப்பட்ட முறையில் எந்த குறையும் காண முடியாத பண்பாளர்
ஆனால் கட்சி; தாழ்த்தப் பட்டவர்களிலேயே பறையர் மற்றும் கிறிஸ்தவர்
சமுதாய மக்களின் கட்சியாகதானே பார்க்கிறார்கள்.

தமிழ் மாநில காங்கிரஸ்
பெயரில்தான் காங்கிரஸ் . உடையார் மூப்பனார் நைனார்
மக்களின் கட்சிதான் அது. அதில்லாமல் முன்பு காங்கிரஸ்
கட்சியில் இருந்தபோது இருந்த செல்வாக்கு மிக்க பிற சாதியினர்
வாசனின் பண பலத்தை நம்பி கூட இருக்கிறார்கள்

புதிய தமிழகம்
டாக்டர் கிருஷ்ணசாமி எல்லா பிரச்னைகளையும் பற்றி பேசும் வல்லமை
படைத்தவர் . சிந்தனையாளர். தன்னை மற்றவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள்
என்ற சிந்தனையில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் மட்டும் ஆதரித்தால் போதும்
என்று தீர்மானித்து கட்சி நடத்துபவர். தான் எல்லாருக்குமான தலைவர்
என்று அவரே சொல்ல மாட்டார். பள்ளர் என்று அழைப்பதை தவிர்த்து
தேவேந்திரர் என்று மரியாதையாக அழைக்க வைக்கப் படுவதை சாதனையாக நினைப்பவர்..
அதற்கான சட்ட போராட்டத்தை கையில் எடுப்பவர். இந்த சமுதாய மக்கள்
கடந்த காலத்தில் எதிர்கொண்ட அடக்கு முறைகளை கணக்கில் எடுத்துக் கொண்டால்
அவரது முயற்சியில் தவறே இல்லை.
ஆனாலும் சாதிக் கட்சி முத்திரையில் இருந்து தப்ப முடியாதே ?

பிற கட்சிகளை தலைவர்களை கொண்டுதான் அடையாளம் காண வேண்டும்.
பச்சமுத்து என்கிற பாரிவேந்தர் ; இந்திய ஜனநாயக கட்சி என்றாலும் அது
உடையார் கட்சிதான்.
ஏ சி சண்முகம் ; புதிய நீதி கட்சி என்றாலும் அது முதலியார்
கடசிதான்
டாக்டர் சேதுராமன் ஸ்ரீதர் வாண்டையார் நடிகர் கார்த்திக் எல்லாரும்
முக்குலத்தோரை தளமாக கொண்டு இயங்குபவர்கள் . விஸ்வகர்மா ,
குலாலர் குல மக்கள் ஒரு அரசியல் அமைப்பை வைத்திருக்கிறார்கள்

ஜான் பாண்டியன் தேவேந்திர குல வேளாளர் கட்சி தான்
விடுபட்டுப் போன பலரும் சாதிக் கட்சி நடத்துபவர்கள் எவருக்கும்
அந்த உரிமை உண்டா? அதை பறித்தால் என்ன?
ஆம் . எவருக்கும் சாதி அடிப்படையில் கட்சி நடத்த உரிமை கூடாது.

எல்லா சமுதாய மக்களையும் நிர்வாகிகளாக வைத்திருந்தால்தான்
தேர்தல் கமிஷன் அங்கீகாரம் அளிக்க வேண்டும்.
சாதிக் கட்சிகள் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும்.
சங்கம் வைக்கலாம் . கட்சி கூடாது என்பது சட்டமாக வேண்டும்.
தமிழ் மக்கள் சிந்திப்பார்களாக !

முஸ்லிம் கள் தனியாக மத ரீதியில் கட்சி நடத்துபவர்கள்
அப்படியே கிறிஸ்தவர்களும்
அவர்களுக்கே வேண்டுமானால் விதிவிலக்கு தரலாம்.
குறைந்த பட்சம் சாதியை சாதி சார்ந்த அரசியலை ஒழிப்போமே!!!!.

( கருணாஸ் என்ற நடிகர்  முக்குலத்தோர் புலிப்படை வைத்துக் கொண்டு

ஒரு சட்ட மன்ற உறுப்பினருக்கு உரிய எந்த அடையாளமும் இல்லாமல்

ஒரு நான்காந்தர மேடை பேச்சாளரைப் போல் பேசி தன் மீது வழக்குகளை

வரவழைத்து கொண்டு கைதாகும் நிலையில் இருப்பதை பார்த்தபின்

எழுந்த சிந்தனை இது)

9 கோடி ஊழலுக்கு ஆதாரம் கொடுத்த மு க ஸ்டாலின்! தடுமாறும் அமைச்சர் தங்கமணி!!

உற்பத்தியே ஆகாத காற்றாலையின் பெயரில்
Rs.9,17,03,379/- ஒன்பது கோடியே பதினேழு லட்சத்து மூவாயிரத்து முன்னூற்று எழுபத்து ஒன்பது ருபாய்
மதிப்புள்ள காற்றாலை மின்சாரம் பெறப்பட்டதாக
போலி ஒதுக்கீடு கணக்கு காட்டப்பட்டுள்ளது என்று
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் உள்ள
திருநெல்வேலி மண்டல ஆடிட் உதவி அதிகாரி
தனது அறிக்கையில் சொல்லியிருப்பதை ஆதாரமாக காட்டி
திமுக தலைவர் மு க ஸ்டாலின் இந்த ஊழல் குறித்து
குற்றம் சுமத்தி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதே அதிகாரி இந்த ஒன்பது கோடி ரூபாயை வட்டியுடன்
உடனடியாக வசூல் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பதில் கூறிய அமைச்சர் தங்கமணி கூடுதலாக கூறியது
‘ இது தனியார் ஆலைகளுக்குள் நடைபெற்ற விவகாரம்’
‘ மின்சார வாரியத்தில் இருந்து இந்த பணமும் கொடுக்க வில்லை’ என்பது. பின்னர் ஏன் தனியார் கம்பெனிகளுக்கு ஒன்பது கோடி வட்டியுடன் கேட்டு
அறிவிப்பு கொடுத்தீர்கள்? அவர்கள் ஏன் நீதிமன்ற தடை வாங்கினார்கள்?
அனல் மின் நிலையத்தில் உற்பத்தியான மின்சாரத்தை
தனியார் கம்பெனிகள் வாங்கியதில் நடந்த தவறை
மின்சார வாரியத்துடன் இணைக்க பார்க்கிறார்கள் என்பதுதான்
அமைச்சர் தங்கமணியின் வாதம்.

அடுத்த வரியிலேயே மின்சார வாரியத்துக்கு வரவேண்டிய தொகையை
செலுத்துமாறு நோட்டிஸ்தான் அனுப்பியிருக்கிறோம் என்றால்
நோட்டிஸ் சரியா தவறா?
சரி என்றால் ஊழல் உண்மை.
இல்லை என்றால் ஏன் அப்படி பொய் நோட்டிஸ் அனுப்ப வேண்டும்?
வழக்கு தொடருவோம் என அமைச்சர் கூற,
தொடர வில்லையென்றால் நான் வழக்கு தொடர்வேன் என ஸ்டாலின் பதில் கொடுக்க
தங்கமணி என்ன செய்ய போகிறார் என்று நாடே எதிர்பார்க்கிறது.

முத்தலாக் தடை அவசர சட்டம்; மோடி அரசின் மோசடித் திட்டம்??!!

ஆடுகள் நனைகின்றனவே என வருத்தப் பட்டு
ஒரு ஓநாய் சிந்திய கண்ணீர்தான்
மோடி அரசு கொண்டு வந்திருக்கும்
முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டம்
என்கிற முத்தலாக் தடை அவசர சட்டம்
முத்தலாக் இஸ்லாத்தில் இல்லாத ஒன்று
ஆனால் நடைமுறையில் இருந்ததால் முஸ்லிம் நாடுகள்
பலவும் முத்தலாக் தடை சட்டம் இயற்றி உள்ளன.

ஒரே நேரத்தில் தலாக் மூன்று முறை சொல்லி
விவாகரத்து செய்யும் வழக்கம் தான் தடை செய்யப் பட்டதே தவிர
கால இடைவெளி விட்டு முறைப்படி செய்யப்படும் தலாக்
செல்லுபடியாகும் என்பதே உண்மை
இந்நிலையில் பாராளுமன்றத்தில் இந்த சட்டத்தை நிறைவேற்றி விட்டு
மேலவையில் நிறைவேற்ற பெரும்பான்மை இல்லாததால்
அப்படியே விட்டு விட்டு திடீர் என்று கொல்லைபுற வழியாக
பா ஜ க அரசு இந்த அவசர சட்டம் கொண்டு வந்ததன் நோக்கம் என்ன?
இப்படி செய்வது தவறு என்று உச்சநீதி மன்றம் ஜனவரி 2017 ல்
தீர்ப்பு சொன்னது. அப்படி செய்வது அரசியல் சட்டத்தின் பேரால்
நிகழ்த்தப் படும் ஒரு மோசடி என்றும் அது விமர்சித்தது
இந்தக் அவசர சட்டம் கூட ஆறு மாதத்தில் சட்டம் ஆக்கப் படவில்லை
என்றால் காலாவதி ஆகிவிடும். ஆறு மாதம் மார்ச் 2019 ல் வரும் .
அப்போது தேர்தல் நடைமுறை தீவிரத்தில் இருக்கும் .

தானாகவே அவசர சட்டம் காலாவதி ஆகிவிடும் . பிறகு
அமைய இருக்கும் புது அரசு மீண்டும் இதை கொண்டுவரவேண்டும் .
அதற்குள் ஏன் இந்த அவசரம் மோடிக்கு?
பிரச்சாரம் செய்ய வேண்டும். முஸ்லிம் பெண்களின் பாதுகாப்பில்
எங்களுக்கு தான் அதிக அக்கறை . மற்றவர்கள் எல்லாம்
பேசுவார்கள். நாங்கள்தான் பாதுகாக்கிறோம் என்று கொஞ்சம்
பேரையாவது இழுக்க முடிந்தால் வெற்றிதானே!
அகில இந்த முஸ்லிம் தனி சட்ட வாரியம் பிரதமருக்கு
கடிதம் எழுதுகிறது . ஐயா நாங்கள் சட்டத்தை ஏற்றுக் கொள்கிறோம்
ஆனால் அதில் உள்ள சில குறைகளை களைந்து திருத்துங்கள் என்று.
பிரதமர் இடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

உண்மையில் ஒரு முஸ்லிம் இரண்டாவது மூன்றாவது திருமணம் செய்ய
தலாக் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. வேண்டும் என்றால்
இரண்டாவது திருமணம் செய்து கொண்டு விட்டால் முதல் மனைவி
அதற்காக குற்றம் என நடவடிக்கை எடுக்க முடியாது. தனக்கு தேவையான
ஜீவனாம்ச துகையை மட்டும் கோரிப் பெறலாம்.
மனைவியும் குலா சொல்லி விவாக ரத்து செய்ய முடியும்.
கணவனை மூன்றாண்டு தண்டனைக்கு உள்ளாக்கி விட்டு மனைவி
தன் குழந்தைகளுடன் எப்படி நிம்மதியாக வாழ முடியும்?
நீதிபதியிடம் முறையிட்டு ஜாமீன் பெறலாம் என்ற திருத்தம்
மனைவியின் கருத்தை கேட்டு என்ற அம்சத்தில் அடிபட்டு போகிறது.
எந்த கோணத்தில் பார்த்தாலும் அவசர சட்டம் கொண்டு வருகிற
அவசியம் கண்ணுக்குத் தெரியவில்லை.

பாராளுமன்ற தேர்தல் பரப்புரைக்கு ஒரு கருவியாக இது விளங்க வேண்டும்
என்ற பா ஜ க வின் எதிர்பார்ப்பு எதிர்வினையை தான் ஏற்படுத்தும்.
மீண்டும் இந்து வாக்கு வங்கியை வலுப்படுத்தி முஸ்லிம் வாக்கு
வங்கியிலும் ஒரு பிளவை ஏற்படுத்தும் முயற்சியே இது
பழுதுபட்ட நோக்கம் கொண்ட எந்த சூழ்ச்சியும் வெற்றியை தராது.

பாம்பன் சுவாமிகள் கருவறை சமாதி; வழக்கு நடந்தால் சமாதியை மூட வேண்டுமா?

திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கருவறை சமாதி கடந்த
33 ஆண்டுகளாக பூட்டிக் கிடந்தது என்பது வருத்தற்குரிய செய்தி.\
அதற்கு நீதிமன்ற வழக்குகள் காரணம் என்பது கூடுதல் வருத்தம்.
காரணம் அதை நிறுவியவர் ஒரு தமிழர்- முருக பக்தர்
பாம்பன் கிராமத்தில் பிறந்ததால் அவர் பாம்பன் சுவாமிகள்
1850 ல் பிறந்து 1929 ல் சித்தியடைந்த அவர் இயற் பெயர் அப்பாவு
தந்தை பெயர் சாத்தப்ப பிள்ளை – மானசீக குருவாக
அருணகிரி நாதரை ஏற்றுக் கொண்டதால் – சேதுமாதவ அய்யர்
அவருக்கு முருகனின் சடாக்ஷர மந்திரம் கற்பிக்கிறார்

திருமணமாகி ஒரு மகன் இரண்டு மகள்கள்
1895 ல் சன்யாசம் பெற்று சென்னை வருகிறார்
குமரகுருதாச சுவாமியாகிறார்
6666 பாடல்கள் 1000 முருகன் பெயர்கள்
சண்முக கவசம்- பஞ்சாமிர்த வர்ணம் என்று
அவரது படைப்புகள் புகழ் பெறுகின்றன
வேலும் மயிலும் துணை என்பது மந்திரம் ஆகிறது
மகா தேஜோ மண்டலம் என்ற சபை துவக்கம்
அவரது சமாதி அவர் நிர்மாணித்த இரண்டரை ஏக்கர்
நிலத்திலேயே அமைகிறது.

அவரது சமாதி கடந்த 33 ஆண்டுகளாக
இந்து அறநிலையத்துறை வசம் இருந்தது.
இப்போது தீர்ப்பு வந்து கருவறை திறந்து
பக்தர்கள் வழிபாட்டிற்காக திறந்து விடப் பட்டிருக்கிறது.
தனி நீதிபதி ஒருவரின் தீர்ப்பால் திறந்துவிடப் பட்ட
சமாதியை இரண்டு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை
போட்டதால் மீண்டும் மூடம் சூழ்நிலை உருவாகி உள்ளது.
பிரச்னை பக்தர் சங்கம் வசம் சமாதி இருக்க வேண்டுமா?
அல்லது அறநிலையத் துறை வசம் இருக்க வேண்டுமா? என்பதே
யார் வசம் இருந்தாலும் சமாதி திறக்கப்பட்டு
பக்தர்கள் வழிபட மரியாதை செய்ய என்ன தடை?

சிலரின் நோக்கம் பாம்பன் சுவாமிகளின் சமாதி
வழிபடும் தலமாக ஆகி விடக் கூடாது என்பதாக இருந்தால்
அதற்கு நீதிமன்றம் ஒத்துப் போக வேண்டுமா ?
விரைவில் இது தொடர்பாக நல்ல தீர்ப்பு வரும் என நம்புவோம்
முருகனின் புகழ் பாடும் எவரும் அருள் பெற்றவர் ஆவர்
மீண்டும் அறநிலையத்துறை வம்புக்கு வராமல்
பக்தர்களை வழிபட அனுமதிக்கட்டும்.
பக்தர் சபை வெளிப்படையான ஊழலற்ற
நிர்வாகத்துடன் பக்தியை பரப்பட்டும்.
சுவாமிகள் ஓரிறையை நம்பியவர்
அந்த ஓரிறை சிவன் – சிவன் அம்சம் முருகன்
வேறு சாதி பாகுபாட்டு கொள்கைகளை அவர்
பரப்பியதாக தெரியவில்லை. அதனாலேயே
அவர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் வழிபாட்டிற்கும் உரியவர் ஆகிறார்.

தமிழ்ச் சமுதாயங்களுக்குள் உரசல் உண்டாக்கும் கருணாஸ் போன்றவர்கள் திருந்த வேண்டும்?!

தமிழ் சமுதாயம் பல சாதிகளாகப் பிளவு பட்டு கிடப்பதாலேயே
தமிழர் ஒற்றுமை கானல் நீராய் கிடக்கிறது.
இந்நிலையில் நடிகர் கருணாஸ் போன்றவர்கள் இருக்கும் ஒற்றுமையையும்
சிதைத்து விடுவார்கள் போலிருக்கிறது.
சமீபத்தில் அவர் உதிர்த்ததாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட
வார்த்தைகள் எவரும் ஏற்றுக் கொள்ளமுடியாதது
ஒரு காவல் துறை துணை கண்காணிப்பாளரை
நீ சட்டையை கழற்றி விட்டு வா என்கிறார்.

பத்திரிகைகளை நாடாரும் பார்ப்பனர்களும் கட்டுப்பாட்டில்
வைத்திருக்கிறார்கள் என்று பேசுகிறார்
நீங்களாவது உங்களை சேர்ந்தவர்களாவது
பத்திரிகை நடத்த வேண்டாம் என்று யாராவது தடுத்தார்களா?
மருத்துவர் ராமதாஸ் சொல்லுவதுபோல்
பெரும்பான்மை வன்னியர்கள் இல்லை
முக்குலத்தோர் தான் பெரும்பான்மை என்கிறார்.

எப்போது இந்த சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினார்கள்
அவரவரும் சொல்லிக் கொள்வதற்கு என்ன ஆதாரம்?
கவுண்டர் ஒருவர் முதல் அமைச்சர் ஆனது
சின்னம்மா போட்டது என்கிறார் – ஏன் இதுவரை
அவரிடம் இவர் ஒட்டிகொண்டிருக்கிறார்
இந்த பேச்செல்லாம் எந்த வகையில் இப்போதைய தேவை
என்ன சொல்ல வருகிறார் கருணாஸ் ?
எல்லாம் சொல்லி விட்டு எச் ராஜாவைப் போல்
இதனால் எல்லாம் யார் மனதாவது புண்பட்டிருந்தால்
அதற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்கிறார்.

தமிழ் சமுகத்தின் சாபக்கேடு தகுதி இல்லாதவர்கள்
எல்லாம் தலைவர்களாக பாவித்துக்கொண்டு பேசுவதுதான்
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சேர்த்து வைத்த
நல்ல பெயரை எல்லாம் அவருக்குப் பின் வந்த
எவரும் தக்க வைக்க வில்லை
சட்ட மன்ற உறுப்பினர் என்ற ஒரு தகுதியை தவிர
வேறு தகுதி ஏதும் கருனாசுக்கு இருப்பதாக தெரியவில்லை
அடுத்து வருவாரா என்பது நிச்சயமில்லை
இவரது பேச்சுக்கு மற்றவர் எவரும் பதில் கூறி
இருக்கும் ஒற்றுமையை கெடுக்க வேண்டாம்
பாராளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க இன்னும்
யாரார் எல்லாம் என்னென்ன பேசுவார்களோ?

சிலை காணாமல் போனால் அர்ச்சகர்கள் புகார் தரவில்லையே ஏன்? நீதிமன்றம் கேள்வி!!!

மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் ஒரு மயில் தன் அலகுகளில்
ஒரு மலரை கௌவிக் கொண்டு காட்சி தருவதுதான் கதை.
ஆனால் இப்போது இருப்பதோ மயிலின் அலகுகளில் ஒரு பாம்பு.
எனவே இது திருடப் பட்ட சிலையின் மாற்று என்றும்
நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி
புகார் கொடுக்கப் பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இது தொடர்பாகத்தான் டி வி எஸ் சுந்தரம் அய்யங்காரின் பேரன்
வேணு சீனிவாசன் முன் ஜாமீன் கோரி மனுப் போட்டதை நாம் எழுதியிருக்கிறோம்.
இப்போது ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் கோர்ட்டில் வழக்கு போட்டு
அறங்காவலர்கள் செயல் அதிகாரிகளை நீக்கி விட்டு
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆகம வல்லுனர்களையும் சட்ட வல்லுனர்களையும் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும் என்றும் கோரினார்.
நீதிபதிகள் மகாதேவன் ஆதிகேசவலு கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் போது கேட்டார்கள்
‘ ஏன் சிலை மாயமானது சிலை மாறிவிட்டது என்று
அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்ல?
அது அர்ச்சகர்களின் கடமை இல்லையா?
இப்போது எல்லாம் அர்ச்சகர்கள் எந்திரத் தனமாக செயல் படுகின்றார்களே தவிர
தெய்வீக பணி ஆற்றுவதில்லை . வேதனையாக இருக்கிறது ‘
என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள்.

அரசு வழக்கறிஞர் இது தொடர்பாக விசாரித்துக் கொண்டு இருக்கிறோம்
என்று சொன்னதால் அறநிலையத் துறை பதில் அளிக்க உத்தரவிட்டு
விசாரணை தேதியை மாற்றி இருக்கிறார்கள்.
நீதிபதிகள் கேட்ட இந்த கேள்விகளை இந்த வழக்குக்கு மட்டும் அல்ல
சிலை கடத்தல் புகார் நிலுவையில் இருக்கிற
அத்துணை வழக்குகளிலும் கேட்கப் பட வேண்டும்.
வழிபாடு செய்வோர் கோவிலுக்கு செல்கிறார்களோ இல்லையோ
அர்ச்சகர்கள் அனுதினமும் கோவிலுக்கு சென்று
தொண்டு செய்கிறவர்கள். வேறு பணி இல்லாதவர்கள்.
அவர்களுக்கு மட்டுமே கோவிலின் அத்துணை அம்சங்களும் அத்துபடி.
இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்குத் தெரியாமல்
\ கோவிலில் அணுவும் அசைய முடியாது.

அப்படி இருக்கும்போது கோவிலில் சிலைகளோ ஆபரணங்களோ
காணாமல் போனால் அவர்களுக்கு தெரியாமல் எப்படி இருக்கும். ?
அதுவும் அல்லாமல் இதை சாக்காக வைத்து எப்படியாவது
கோவில் நிர்வாகத்தை கைப்பற்றுவது மட்டுமே அவர்களின்
நோக்கமாக இருக்கிறது. இவர்களின் நோக்கத்தைத் தான்
மனுப் போட்ட ஸ்ரீரங்கம் நரசிம்மன் பிரதிபலிக்கிறார்.
கோவில் சிலைகளுக்கும் ஆபரணங்களுக்கும் கோவில் அர்ச்சகர்களும்
சேர்ந்து பொறுப்பேற்க வேண்டும் என்று சட்ட திருத்தம் செய்வதை
ஆலோசிக்க வேண்டும். எப்போது நகைகள் பயன்படுத்த வேண்டும்
என்பதை அவர்கள் தானே தீர்மானிக்கிறார்கள்.
அதுவே சரியான தீர்வு.

பெரியார் பிறந்த நாள் விழாவை சீர்குலைக்க சங்கப் பரிவாரங்கள் சூழ்ச்சி ??!!

தந்தை பெரியாரின் 140 வது பிறந்த நாள் இன்று.
பகுத்தறிவுப் பகலவன் என்னும் ஈ வே ரா தமிழ் மண்ணில் தோன்றியிராவிட்டால்
தமிழர்கள் இன்னும் பலகாலம் அடிமைகளாகவே வீழ்ந்து கிடந்திருப்பர்கள்.
அகில இந்தியாவிலும் பகுத்தறிவு சுடர் ஒளிவிட பெரியார் தான் காரணம்
எந்த பகுத்தறிவாளரும் பெரியாரை குறிப்பிடாமல் சிந்திக்கவோ செயல்படவோ முடியாது.

பெரியார் அண்ணா கலைஞர் ஆகியோர் இந்த மண்ணில் கொண்டாடப் படும்வரை
தாங்கள் கால் பதிக்க முடியாது என்பதை
சங்கப் பரிவாரங்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.
அதனால்தான் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம்
அவர்களை இழிவு படுத்துவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
பா ஜ க வின் எச் ராஜா பலமுறை மேடைகளில் பெரியாரை இழிவாக பேசியிருக்கிறார்.

பெரியார் தான் வாழ்நாளில் பல செருப்பு வீச்சுக்களை எதிர் கொண்டவர்
ஒரு செருப்பு வீசப்பட்டவுடன் எங்கே மறு செருப்பு என்று தேடியவர் அவர்
அதனால் தான் அவரை இன்று பட்டி தொட்டியெங்கும் சிலைகளை வைத்து
தமிழ் சமூகம் நினைவு கூர்கிறது.
புத்தக கண்காட்சிகளில் பெரியார் புத்தகங்கள் அதிக அளவில் விற்பனையாகின்றன.

எதிரிகளும் வியக்கும் பெரியார் மதிக்கப் பட காரணம்
தன்னை எவரும் கண்மூடித்தனமாக பின்பற்றுவதை அவர் விரும்பவில்லை.
நான் சொல்கிறேன் நீ சிந்தித்து முடிவெடு என்பதுதான் அவர் விரும்பியது
இன்று ஒரு பா ஜ க ஆதரவு வக்கீல் ஒருவன் பெரியார் சிலை மீது
காலணி வீசியிருக்கிறான் . அருகில் இருந்த வி சி க தொண்டர்கள்
அவனை அடித்து காவல்துறையிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள்.

திருப்பூர் தாராபுரத்தில் பெரியார் சிலை மீது காலணிகளை வைத்திருக்கிறார்கள்
நேற்றுத்தான் காவல்துறையும் நீதிமன்றத்தையும் அவதூறாக பேசிய வழக்கில்
எச் ராஜா நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப் பட்டிருக்கிறது.
அவர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவாகி இருக்கிறது.
கலவரத்தை தூண்டும் வகையில் அவர்கள் பேசுவதால் தான் இப்படி
பெரியார் அவமதிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இப்போது இருக்கும் ஆட்சி நம் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்
என்று அவர்கள் நம்புகிறார்கள்.

ஆனால் எவ்வளவுதான் பதவி போட்டி இருந்தாலும்
திராவிட இயக்கங்கள் பெரியாரை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்
என்பதையும் இந்த சம்பவங்கள் நிருபித்திருகின்றன
அ தி மு க அமைச்சர் ஜெயக்குமார் பெரியாரை இழிவுபடுத்துவதை
சகித்துக் கொள்ள மாட்டோம் என்று சொல்லி நடவடிக்கை உறுதி என்றிருக்கிறார்.
பெரியாரியம் நிச்சயம் வெல்லும்.
மதவாதம் மண் கவ்வும்

உயர்நீதி மன்ற நீதிபதி பணியிடங்களை நிரப்பிட 15 ஆண்டுகள் ஆகும்

இந்தியாவில் மொத்தம் 24 உயர் நீதிமன்றங்கள்
மொத்த நீதிபதிகள் 1079
இப்பொது இருப்பவர்கள் 652
காலியிடங்கள் 427 அதாவது 40%
இவர்களை நியமிக்கத்தான் 15 ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிடப்பட்டிருக்கின்றது .
முந்தைய காங்கிரஸ் அரசு நியமித்தது 250 கூடுதல் நீதிபதிகளாம்
இப்போதைய அரசு நியமித்தது 313 நீதிபதிகளாம்

உயர் நீதி மன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் 39.52லட்சம்
22% வழக்குகள் பத்தாண்டுகளுக்கும் மேலானவை
நீதிபதிகள் நியமனங்களை உச்சநீதி மன்றம் தன் அதிகாரத்திலேயே வைத்திருக்கிறது.

கொலிஜியம் எனப்படும் மூத்த நீதிபதிகள் முடிவெடுக்கிறார்கள்
மத்திய அரசுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு பனிப்போர் நடந்து வருகிறது.
மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தை உச்சநீதி மன்றம் நிராகரித்து விட்டது.
சமுதாயத்தின் பல தரப்பினரும் அதிகாரம் பெற வழி வகை செய்யும்
நீதிபதிகள் நியமனம் தாமதிக்கப் படுவதில் நியாயமே இல்லை.

அதுவும் உச்சநீதி மன்றம் தன் கையில் வைத்திருக்கும் அதிகாரம்
பயன் படுத்தப் படுவதில் வேண்டுமென்றே தாமதம் ஏற்படுத்தப் பட்டாலும்
அதுவும் ஒருவித அநீதியே அரசும் நீதிபதிகளும் முட்டி மோதிக்கொள்ளும்
இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு கண்டு அனைத்து நீதிபதி பணியிடங்களும் உடனடியாக நிரப்பப் பட வேண்டும். மக்கள் சக்தி இதற்கு அழுத்தம் தந்தால்தான் இது சாத்தியமாகும் மக்கள் பிரதிநிதிகள் இதில் கட்சி சார்ந்து பராமுகமாக இருப்பார்கள்
கட்சி சாராத அமைப்புகள் தான் இந்த அழுத்தத்தை தர வேண்டும்.

ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவரா  இல்லையா?

 ஆளுநர் மாளிகை ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் ஏழு பேர் விடுதலை குறித்து தவறான தகவல் கொண்டிருக்கிறது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக  அனுப்பி வைக்கப்படுகிறது என்ற ஒரு செய்தி வருகிறது. அடுத்த நாளே அந்த செய்தி மறுக்கப்பட்டு ஆளுநர் படித்துக் கொண்டிருக்கிறார் என்று வருகிறது. பத்திரிகைகள் எப்படி அந்த தவறான செய்தியை வெளியிட்டன? அதற்கு காரணமானவர்கள் யார்?

அது ஒருபுறம் இருக்கட்டும் ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவரா  இல்லையா? அரசியல் சட்டப் பிரிவு 161 மாநில அரசின் தனி உரிமையா  இல்லையா? ஆளுநருக்கு என்று தனி அதிகாரம் ஏதேனும் இருக்கிறதா? உச்ச நீதிமன்றம்   ஆளுநர் தீர்மானிக்கட்டும் என்று சொன்னது தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானத்தை குறித்ததாக இல்லையா?

நாளை ஆளுநர் இதர எல்லா பிரச்சனைகளிலும் மாநில அமைச்சரவை முடிவுகளை இதேபோல நான் மத்திய அரசை கேட்டு முடிவெடுக்கிறேன் என்று சொன்னால்  குழப்பம் வராதா? அரசியல் சட்ட பிரிவுகள் 161  32 72 எல்லாம் தனித்தனி அதிகாரம் உள்ளது. ஒன்றை சார்ந்து மற்றொன்று இல்லை

நாளையே ஆளுநர் மாநில அரசின் பரிந்துரையை ஏற்கவில்லை என்றோ இந்தியர்களுக்கு ஒரு முடிவாகவும் இலங்கை தமிழர்களுக்கு ஒரு முடிவாகவும் எடுத்தாலும் எதிர்காலத்தில் அது புதிய பிரச்சனைகளுக்கு வித்திடும் ராஜீவ் காந்தியோடு கொல்லப்பட்ட இதர தமிழர்கள் இதுதொடர்பாக ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்து சொல்ல முனைவது இப்போதைய பிரச்சினைக்கு தேவையற்றது.

குற்றவாளிகளா தண்டிக்கப்பட வேண்டியவர்களா என்பதை தாண்டி குற்றவாளிகள்தான் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான் என ஒப்புக்கொண்டு அவர்களும் 27 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்த பிறகு ஆயுள் தண்டனை என்பது குறிப்பிட்ட காலம் வரையிலுமா அல்லது இறக்கும் வரையிலுமா என்பதையும் தாண்டி இப்போதைய ஒரே கேள்வி தண்டனையை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டா இல்லையா என்பது மட்டுமே.

அரசியல் சட்டம் மாநில அரசுக்கு தந்திருக்கும்  உரிமையை விவாத பொருள்  ஆக்குபவர்கள் நாட்டுக்கு நல்லது செய்பவர்கள் ஆக மாட்டார்கள் ஆளுநர் அலுவலக குறிப்பு கவலை அளிக்கக் கூடியது இந்த பிரச்சனை சிக்கலான ஒன்று என்பது எப்படி சரியாகும்? இதில் இனிமேல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் என்ன? தேவைப்படும் ஆலோசனைகள் பெறப்படும் என்று சொல்லியிருப்பது பற்றி யாருடைய ஆலோசனை என்று தெளிவுபடுத்தப்பட வேண்டாமா ? நியாயமான முடிவு எடுக்கப்படும் என்றால் அமைச்சரவை பரிந்துரை நியாயமானது இல்லையா?

ஆளுநர் மாளிகை அறிவிப்பு குழப்பங்களைத் தான் அதிகப்படுத்துகின்றது. ஆளுனர் அவர்களே தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளும் விலை மதிப்பில்லாதது தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எச் ராஜா மீது பாயுமா?

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச் ராஜா
தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில்
நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில்
காவல் துறையை அவமதிக்கும் வகையில்
மிகக் கடுமையாக பேசியிருக்கிறார்.
என்ன செய்யப்போகிறது காவல்துறை என்று
தமிழகமே மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது.
மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்ற மமதையில்
பல முறை அவர் இப்படி பேசியிருக்கிறார்.
இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்
துணிவு அதிகமாகிவிட்டது.

நம் மீது நடவடிக்கை யார் எடுக்க முடியும்
என்ற அகந்தை தான் இதற்கு காரணம் .
எஸ்வி சேகர் , எச் ராஜா போன்றவர்களுக்கு
சட்டம் இங்கே வேற மாதிரி.
மற்றவர்களுக்கு சட்டம் வேறாகத்தான் இருக்கும்
என்பது தமிழ்நாட்டில் பல முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
உயர் நீதிமன்றம் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலங்களை
கலவரங்கள் ஏற்படாத வண்ணம் நெறிப்படுத்தி
நிபந்தனைகளை விதித்து உள்ளது .

அதைத்தான் காவல்துறை அமுல்படுத்த முயன்றிருக்கிறது.
அதை மீறி மேடை போடுவேன் பேசுவேன் என்று
எச் ராஜா முனைந்த போது தான் காவல்துறை தலையிட்டு தடுத்திருக்கிறது.
அப்போதுதான் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி
எல்லாரையும் இழிவு படுத்தி இருக்கிறார் எச் ராஜா .
” ஹை கோர்ட் என்ன மயிரா”
” போலீஸ் எல்லாரும் ஊழல்வாதிகள்”
“கிறித்தவனிடமும் முஸ்லீமிடமும் லஞ்சம் வாங்கி இருக்கிறீர்கள்”
” நீங்கள் இந்து விரோதிகள் ”
“போலீஸின் ஈரல் அழுகிவிட்டது”
” யூனிஃபார்ம் போடஉங்களுக்கு தகுதி இல்லை”
” லஞ்சம் நான் தருகிறேன் வாங்கிக் கொள்ளுங்கள் ”
” டிஜிபி வீட்டில் ரெய்டு வந்த பிறகு நீங்கள் யூனிபார்ம் போடலாமா”
இவைதான் ராஜா உதிர்த்த வார்த்தைகள்.

அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துறை
கெஞ்சிக் கொண்டு இருந்ததையும் விடியோவில் பார்த்தோம்.
ஏன் அப்போதே நடவடிக்கை எடுத்து
அவரை கலவரம் ஏற்படுத்த முயற்சித்ததற்காக காவல்துறை கைது செய்யவில்லை?
தங்க தமிழ்ச்செல்வன் மீது தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்த
தமிழக தலைமை அரசு வழக்கறிஞர் இப்போது அதே நடவடிக்கையை எடுப்பாரா?
தமிழக அமைச்சர் ஜெயக்குமார் சட்ட ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்.

எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் எச் ராஜா வை கண்டித்து கருத்து சொல்லியிருக்கிறார்கள்.
காவல்துறையின் கண்ணியத்தை காக்க வேண்டும் என்றால்
எச் ராஜா மீது நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டாக வேண்டும்.
காத்திருப்போம்.