Home Blog Page 65

சம்ஸ்க்ருதம் கற்றுக் கொடுத்து புரோகிதப் பெண்களாக்கி அடிமைப்படுத்திய பார்ப்பனீயம்??!

மும்பையை அடுத்த மொஹோபதா என்ற கிராமத்தை சேர்ந்த
ராமேஷ்வர் கார்வே என்ற பார்ப்பனர்
பிராமணர் அல்லாத 150 பெண்களுக்கு சம்ஸ்க்ருதம் கற்றுக் கொடுத்து
அவர்களுக்கு சான்றிதழ் பெற்றுத் தந்ததுடன் அவர்களை , தானே , நவி மும்பை பகுதிகளில் பிறப்பு இறப்பு மற்றும் இதர சனி சாந்தி பூஜை உட்பட எல்லா சடங்குகளையும் செய்ய வைத்திருக்கிறார். இதற்கு அவர் எடுத்துக் கொண்ட காலம் சுமார் 18 ஆண்டுகள் இதை சீர்திருத்தம் என்பதா ? அடிமைப்படுத்தும் சூழ்ச்சி என்பதா ? செய்தது தனிமனிதர் – அவர் பார்ப்பனர்
இந்த முயற்சிக்கு பார்ப்பனீய இயக்கங்கள் ஆதரவு அளிக்கின்றனவா?
ஆம் என்றால் ஏன் அவர்களே எல்லா பார்ப்பனர் அல்லாத பெண்களுக்கும்
இந்த பயிற்சியை அளிக்கக் கூடாது?

இல்லை என்றால் இது சரியல்ல என்றாவது சொல்ல வேண்டும்.
அதையும் சொல்ல மாட்டார்கள் ஏன் என்றால் ஒருவகையில்
அந்த பெண்களை புரோகிதர் ஆக்கி
சனாதன தர்மத்துக்கு அடிமைகள் ஆக்கி விட்டாரே
அந்த வகையில் அவர்களுக்கு சம்மதமே
ஐந்து பள்ளிக்கூடங்களையும் கார்வே நடத்தி வருகிறார்.
கல்வி செல்வத்தை எல்லாருக்கும் வழங்க வேண்டும் என்ற
அவரது தொண்டு உண்மையில் பாராட்டப் பட வேண்டியது தான்.
ஆனால் இந்த சமய தொண்டை அவர் மராத்தி மொழியிலும்
செய்திருக்க வேண்டும்.

பார்ப்பனர் அல்லாத ஆண்களுக்கும் செய்து கொடுத்து அவர்களை
கோவில் அர்ச்சகர்கள் ஆக உரிமை பெற்றுத் தர முயற்சித்திருக்க வேண்டும்.
அதுதான் உண்மையான தொண்டு
அம்பேத்கர் எல்லாருக்கும் அர்ச்சகர் ஆக உரிமை வேண்டும் என்று
போராடியது உண்மைதான்.

ஒருவகையில் பாராட்ட வேண்டிய முயற்சியாக இருந்தாலும்
மறுபுறம் பெண்களை பார்ப்பநீயத்துக்கு அடிமைகள்
ஆக்கும் முயற்சிக்கும் இரையாகக் கூடாது அல்லவா?
எனவே எச்சரிக்கையுடன் வரவேற்போம் இந்த முயற்சியை?!!

கன்னியாஸ்திரியை கற்பழித்தாரா ஆயர் பிராங்கோ முலக்கல் ??!!

கிறித்தவ மத நம்பிக்கை கொண்டோரை பதைக்கச் செய்யும் வகையில்
பாதிரிகள் மீதும் ஆயர்கள் மீதும் அவ்வப்போது பாலியல் குற்றச்சாட்டுகள்
இப்போது கொஞ்சம் அதிகம்தான்
ஜலந்தர் பிஷப் பிராங்கோ முலக்கல் மீது கன்னியாஸ்திரி ஒருவர்
தன்னை பலமுறை கற்பழித்து விட்டதாக குற்றச்சாட்டு கூறி காவல் துறையில்
புகார் கொடுக்க பிரச்னை விஸ்வரூபமாகி நிற்கிறது
100 பள்ளிகள் 6 மருத்துவ மனைகள் 40 திருச்சபைகள் 800 கன்னியாஸ்திரிகள்
என்று முலக்கல் பணியாற்றும் இடம் பஞ்சாப் மற்றும் இமாச்சல் பிரதேஷ் மாநிலங்களில் விரிந்து பரந்து கிடக்கிறது.

புகார் கொடுத்த வருக்கு ஆதரவாக கூட பணியாற்றும் கன்னியாஸ்திரிகள் திரள
இப்போது கேரளாவே கன்னியாஸ்திரி ஆதரவு பிஷப் ஆதாவு என்று பிரிந்து கிடக்கிறது.
பொதுமக்களும்கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவாக திரள
சட்ட மன்ற உறுப்பினர் பி சி ஜார்ஜ் புகார்கொடுத்தவரை ‘ தேவடியாள் ‘
என்றும் நடத்தை கெட்டவர் என்றும் திட்டி பேட்டி கொடுக்க
‘ வாயே மூடடா பி சி ‘ என்று இணைய தளத்தில் மீம்ஸ் பறக்க
என்னதான் நடக்கிறது திருச்சபையில் என்று அகில இந்தியாவே
கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது. போப் வரைக்கும் இந்த புகார் சென்றும்
இன்னும் தீர்வு வந்தபாடில்லை.

இதற்கிடையில் திருச்சபை முலக்கல் உடன் அந்த கன்னியாஸ்திரி அமர்ந்து
ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டது
சட்டப்படி குற்றமாக பார்க்கப் படுகிறது. அதற்கும் ஒரு புகார்.
கிறித்துவ சபைகள் போதனைகளை பிரச்சாரம் செய்வதை விட
பொதுத் தொண்டுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவை.
அங்கே கன்னியாஸ்திரிகள் எப்படி நடத்த ப்படுகிறார்கள்
என்று அறிய எல்லாருக்கும் உரிமை உண்டு.

கேரள உயர்நீதிமன்றம் பிஷப்பை கைது செய்வதா வேண்டாமா
என்பதை விசாரணை அதிகாரியே முடிவு செய்வர் என்றது.
முன்ஜாமீன் பெற பிஷப் ஆலோசித்து வருவதாக தகவல்
பாவ மன்னிப்பு கோரி பாதிரியிடம் குற்றத்தை ஒப்புக்கொண்ட
பெண்ணை கற்பழித்த பாதிரிக்கு என்ன தண்டனை கிடைத்தது?
பதனபுரம் என்ற இடத்தில் கன்னியாஸ்திரி சூசன்னா என்பவர்
தற்கொலை செய்து கொண்டு கிணற்றில் கண்டெடுக்கப் பட்டது
பதற்றத்தை கூட்டியுள்ளது.

ஆண்டவன் பேரால் அக்கிரமம் செய்வது
அவனுக்கே அடுக்காது.
காவல் துறை விசாரணைதான் இதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

எஸ் பி வேலுமணி மீது இத்தனை புகார்களா?

நகராட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது தி மு க அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் மற்றும் கண்காணிப்பு ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
அதில் பல்வேறு குற்றச்சாட்டுகள்.
அவரது துறை சார்ந்த வேலைகளுக்கான டெண்டர்கள் அவரது பினாமிகளுக்கு சட்ட விதிகளை மீறி முறைகேடாக பல கோடி ருபாய்களுக்கு வழங்கப்பட்டன என்பது குற்றச்சாட்டு.

அதற்கான பல புள்ளி விபரங்களை அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அவருடைய சகோதரர் உறவினர்கள் நண்பர்கள் எல்லாருக்கும் பல கோடி ரூபாய் டெண்டர்களை வாரி வாரி வழங்கி இருக்கிறார் வேலுமணி என்பது குற்றச்சாட்டு.
ஆனால் அதை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அதற்கான முதல் தகவல் பதிவு எதையும் செய்யாமல் மேல் நடவடிக்கை எதையும் எடுக்காமல் தவிர்க்கிறார்கள் என்பது அடுத்த குற்றச்சாட்டு.
புகார் கொடுத்தால் ராஜினாமா செய்ய வேண்டுமா என்ன ? நீதிமன்றம் முடிவு செய்யும் வரை ராஜினாமா செய்ய மாட்டேன் என்பது முதல்வர் பழனிசாமி முதல் வேலுமணி வரை வாதம் செய்கிறார்கள்.

உண்மைதான். குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப் படும் வரை எல்லாரும் நிரபராதிகள்தான் .
கேள்வி என்னவென்றால் ஆதாரங்கள் கொடுக்கப் படும்போது , விசாரணை செய்ய வேண்டிய அமைப்பு நடவடிக்கை எடுக்காமல் இருக்கும்போது என்னதான் விடிவு?
அதற்கும் நீதிமன்றம் தலையிட்டு நேரடிக்கண்காணிப்பில் விசாரணை நடந்தால் தான் ஒப்புக் கொள்வார்களா?
DVAC மாநில அரசின் கீழ்செயல்படும் அமைப்பு. எப்படி மாநில அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்?

Tender Transparency Act ஏட்டில் மட்டுமே இருக்கும் ஒரு சட்டம். ஒரு துண்டுச்சீட்டு , அல்லது பென்சில் குறிப்பு போதும். டெண்டர் கிடைத்து விடும். இதுதான் நடைமுறை. இதை யார் மாற்றுவது?
இதற்கு என்னதான் விடிவு?
திமுக அமைச்சர்கள் மீது கொடுக்கும் நான்காவது ஊழல் புகார் இது.
அதிலும் அன்பழகன் என்ற ஒரு பத்திரிகையாளர் அமைச்சர் மீது ஊழல் புகார் கூறி மனு கொடுக்கிறார் ஏப்ரல் மாதம் 25 ம் தேதி. அதில் பார்த்திபன் என்பவர் அமைச்சரின் பலவீனங்களை பயன்படுத்தி தேன்வலை ( honey trapping ) முறையை பயன்படுத்தி சினிமா துணை நடிகைகளை பயன்படுத்தி அமைச்சரிடம் பணி மாறுதல் உத்தரவுகளை பெற்றார் என குறிப்பிடுகிறார். அதில் கோபமடைந்த பார்த்திபன் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி புகார் கொடுத்த அன்பழகனையே காவல் துறையை விட்டு முடக்குகிறார். பல பிரிவுகளில் அவர் மீது வழக்குகள் பதிவாகின்றன.

ஏன் இத்தனை அடாவடித்தனம்? குற்றம் செய்ய வில்லை என்றால் விசாரணைக்கு ஏன் தயங்க வேண்டும்?
முதல்வர், ஓ பி எஸ் , விஜயபாஸ்கர் வேலுமணி என்று அமைச்சர்கள் மீதுதொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப் படும் நிலையில் இந்த அரசு தொடர்வது என்ன நியாயம்.?
18 எம் எல் ஏக்கள் தகுதி இழப்பு வழக்கு முடிவுக்கு வந்தவுடன் இந்த அரசின் நாட்கள் எண்ணப்படும்.
அதுவரை இந்த குற்றச்சாட்டுகள் மக்கள் மன்றத்தில் விவாதிக்கப் பட்டு
நேரம் வரும்போது தீர்ப்பு சொல்ல பயன்படட்டுமே!!!

7 பேர் விடுதலை; திருந்தாத காங்கிரஸ்- வஞ்சக மத்திய அரசு – என்ன செய்வார் ஆளுநர்??!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேர் விடுதலை
இன்னும் தொங்கிக்கொண்டிருகிறது.
முடிந்து விட்டது போல் தெரிந்த விடுதலை இப்போது
காங்கிரஸ் நிலைப்பாட்டினால் மீண்டும் தொடரும் போல் தெரிகிறது.
உச்சநீதி மன்றம் தெளிவான தீர்ப்பு தந்து
அரசியல் சட்ட பிரிவு 161 ன் படி மாநில அரசே முடிவு செய்யட்டும் என்றது.

மாநில அமைச்சரவை கூடி விடுதலைக்கு ஆளுநருக்கு பரிந்துரை செய்தாகிவிட்டது.
ஏற்றுக் கொள்வதை தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை
ஏனெனில் அவர் பெயரளவில்தான் ஆட்சித்தலைவர்
அமைச்சரைவின் முடிவுக்கு கட்டுப் பட்டவர் ஆளுநர்
தனக்கென்று எந்த அதிகாரமும் கிடையாது
அவர் பா ஜ க வினால் நியமிக்கப்பட்டார் என்பதால்
மத்திய அரசின் கருத்தை கேட்க வேண்டிய அவசியமில்லை
ஆனால் என்ன செய்வார் பன்வரிலால் புரோஹித் ?
முடிவெடுக்காமல் சும்மா அமர்ந்திருக்கலாம்
அரசோ பாதிக்கப் பட்டவர்களோ மீண்டும் நீதிமன்றம் சென்று
ஆளுநருக்கு முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்க கோரலாம்
கருணை மனு மீது முடிவெடுக்காமல் பதினோரு ஆண்டுகள்
கழித்ததால் தானே உச்சநீதி மன்றம் சிலரது மரண
தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழ்நாடு தலைவர்
ஈ வி கே எஸ் இளங்கோவன் சோனியாவும் ராகுலும்
மன்னித்து விட்ட பிறகு எங்களுக்கு என்ன ஆட்சேபணை சட்டம் தன்
முடிவை எடுக்கட்டும் என்றார். அப்போது தற்போதைய தலைவர்
திருநாவுக்கரசர் அபசுரம் வாசித்தார். அதாவது
தவறான முன்னுதாரணம் ஆகி விடும் என்றார்.
ஏன் இப்படி தப்பாக அவர் பேச வேண்டும் என்ற குழப்பம் வந்தது .
மறுநாள் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ தலைமை செய்தி தொடர்பாளர்
ரன்தீப் சுர்ஜெவாலா ‘ அவர்களை தண்டிக்கும் கடமையில் இருந்து
மாநில அரசு நழுவக் கூடாது’ என்று பேட்டி கொடுக்கிறார்.

காங்கிரசின் உண்மை சொரூபம் வெளியே வந்தது .
ராகுலை நிருபர்கள் கேட்டபோது ‘ நாங்கள் அவர்களை மன்னித்து விட்டோம் ‘
என்றாரே அது பொய்யா? நாங்கள் மன்னித்து விட்டோம் என்று சொல்லி
நல்ல பெயர் வாங்கி கொள்கிறோம் நீங்கள் ஆட்சேபணை செய்யுங்கள்
என்று இரட்டை வேடம் போடுகிறார்களா?
ராகுலுக்கு தெரியாமல் அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர்
இப்படி ஒரு கருத்தை தெரிவித்து இருக்க முடியுமா?
மாநில அரசின் கடமை பயங்கரவாதிகளை கண்டுபிடிப்பதா? பாதுகாப்பதா?
என்று கேட்கிறார் சுர்ஜெவாலா .

பிரச்னை மத்திய அரசின் கையிலும் சோனியா குடும்ப கையிலும் இல்லை
மாநில அரசின் பரிந்துரையை கேட்டே ஆக வேண்டிய ஆளுநரின் கையில்தான்
இருக்கிறது. ஆளுநர் தாமதித்தாலும் மறுத்தாலும் மாநில அரசு
தனது உரிமையை பாதுகாக்கும் பொருட்டு மீண்டும் நீதிமன்றம்
சென்று அவர்களை விடுவிக்க முடியும் என்பது உறுதி.
ஆனால் அதற்கு மீண்டும் கால அவகாசம் தேவைப்படும்.
ஆக பா ஜ க – காங்கிரஸ் இரண்டும் மாநில உரிமைகள்
அதிலும் குறிப்பாக தமிழக மாநில உரிமைகள் குறித்து
ஒரே நிலைப்பாட்டில் தான் இருப்பார்கள் என்பது புலனாகிவிட்டது.
நீதி அவர்களுக்கு தனிதான்.

தேசப்பிதா காந்தியை சுட்டுக் கொன்றவர்களை 14 ஆண்டுகளில்
விடுவித்தவர்களுக்கு இவர்களை 27 ஆண்டுகளுக்குப் பிறகும்
விடுவிக்க மனமில்லை என்றால் அதற்கு ஒரே காரணம்
இவர்கள் தமிழர்கள் என்பதும் அவர்கள் மேல்தட்டு மக்கள்
என்பதும்தானே? பார்ப்பான் கொன்றால் அவன் தலை மயிரை
சிரைத்து விடு மற்றவன் கொன்றால் தலையை வாங்கு என்று
மனு நீதி எழுதி வைத்தவர்கள்தானே ?
எல் என் மிஸ்ரா வழக்கு குற்றவாளிகள் மீதும் நாற்பது
ஆண்டுகளுக்கு மேல் வழக்கு முடியவில்லை என்பார்கள்.
அதற்கும் காரணம் இருக்கிறது.

மிஸ்ரா கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டோர்
ஆனந்த மார்க்கம் என்ற மதப் பிரிவை சேர்ந்தவர்கள்
இந்து மதத்தை திசை திருப்பி பார்ப்பன ஆதிக்கத்துக்கு
ஊறு விளைவிப்போரை அவர்கள் எப்படி மன்னிப்பார்கள்?
அதுவும் கொல்லப் பட்டவர் பார்ப்பனர் அமைச்சர் . அதற்குப் பின்
அவரது சகோதரர் ஜகன்னாத் மிஸ்ரா முதல்வராக ஆகும்
அளவு செல்வாக்குப் பெற்றிருந்தவர்கள்.

இதேபோல்தான் நாற்பதாண்டு களுக்குப் பின் எல் என் மிஸ்ராவின்
மகன் விஜய் மிஸ்ரா தண்டிக்கப்பட்ட நால்வரும்
உண்மைக் குற்றவாளிகள் அல்ல என்று பேட்டி கொடுத்தார்.
சி பி ஐ விசாரணை மீது சந்தேகம் தெரிவித்த அவர் மீண்டும்
விசாரணை நடைபெற வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.
எல்லா சாட்சிகளும் மரணித்த பிறகு எப்படி விசாரணை சாத்தியம்
என்பதை அவர் விளக்க வில்லை. இதுதான் அவர்கள் நீதி.
எல்லா சூழ்ச்சிகளையும் மீறி
தமிழர்களின் நம்பிக்கையான
அறம் வென்றே தீரும்!!!

போன் செய்தால் போதும் வீட்டுக்கு வந்து தொண்டு செய்யும் அரசு; கேஜ்ரிவால் சாதனை !!!

அரவிந்த் கேஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி முதல்வர்.
அறிவித்திருக்கும் புரட்சி திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெரும் என்பது வேறு.
ஆனால் நல்ல தொடக்கம்.
ஆம். போன் செய்தால் போதும் . அரசு அதிகாரி வீடு தேடி வந்து
40 வகையான வேலைகளை பொதுமக்களுக்கு செய்து கொடுப்பார்.

தாழ்த்தப்பட்டோர் சான்றிதழ் பிற்பட்டோர் சான்றிதழ்
குடும்ப நல திட்டங்கள் பற்றிய அனைத்து மனுக்கள்
ஓட்டுனர் சான்றிதழ் தொடர்பான அனைத்து வேலைகளும்
சொத்து உரிமை மாற்றம் தொடர்பான அனைத்து வேலைகளும்
வீட்டு தலைவருக்கு தேவையான குடும்ப அட்டைகள்
இன்னும் இதுபோன்ற சுமார் 40 பணிகள்
வரும்காலத்தில் அதை 150 பணிகளுக்கு விரிவு படுத்தும் திட்டமும் உண்டு.

நேற்று இந்த திட்டம் தொடங்கியவுடன் சுமார் 21000 போன் அழைப்புகள்
அவைகளில் சுமார் 1200 மட்டும் அதிகாரிகளால் தொடர்பு கிடைக்கப் பட்டு
விபரங்கள் கோரிப்பெற்றபின் 369 வேண்டுகோள்கள் அதிகாரிகளால்
ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரு வாரத்தில் செய்து முடிக்கப் படும்
என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டது.
எல்லா வேலைகளும் முடியுமா எல்லாருக்கும் முடியுமா
அத்தனை அதிகாரிகள் இருக்கிறார்களா என்பதை தாண்டி
ஒரு நல்ல முயற்சி மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.
அனுபவத்தின் அடிப்படையில் அதை நிவர்த்தி செய்து
முழுமையாக்கலாம். அந்த வகையில்
கேஜ்ரிவால் வெற்றி பெற்றிருக்கிறார்.

அரசு அலுவலகத்தில் இரண்டற கலந்திருக்கும் ஊழல் நோயை
விரட்ட இந்த முறை முழுமையாக பயனளிக்கும்.
இந்தியா முழுமைக்கும் எல்லா அரசுகளும்
பின் பற்ற வேண்டிய முன்மாதிரி திட்டமாக
இந்த வீடு தேடி வரும் அரசுப் பணி திட்டம்
விளங்கும் என்பதில் ஐயம் இல்லை.
நிறை குறைகளை ஆராய்ந்து
மற்றவர்களும் முயற்சிக்கட்டுமே?!

ஆந்திராவில் சோழர் காலத்து வீரனின் சிலை கண்டுபிடிப்பு; நடுகல் வணக்க முறைக்கு சான்று கிடைத்தது

ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி வாகவேடு கிராமத்தில்
தமிழர் நாகரிகம் சம்பத்தப் பட்ட பழங்கால சிலை ஒன்று கண்டுபிடிக்கப் பட்டது.
Archaelogical Survey of India தொல்லியல் துறையின் வின் ஆந்திர பிரிவு இதை கண்டுபிடித்திருக்கிறது .

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால சிலை.
அந்த அமைப்பின் துணை ஆய்வாளராக Asst Epigraphist , இருக்கும் பி டி நாகராஜன்
என்பவர் இந்த சிலையை தோண்டி எடுத்த குழுவின் உறுப்பினர்.
ஓர் வயலில் இருந்து இது கண்டு எடுக்கப் பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் எல்லை பகுதிகளில் பல முறை இது போன்ற
தமிழ் எழுத்துக்கள் பொறித்த சிலைகள் கண்டெடுக்கப்பட்டிருகின்றன.
இந்த சிலையின் உயரம் ஐந்தடியாம். அகலம் நான்கடி.
கிராநைட் கல்லில் செதுக்கப் பட்ட ஒரு மனிதன் கையில் வாள் ,
கேடயம் இடுப்பில் கட்டிய கத்தி இருக்கிறது.

அதில் பொறிக்கப் பட்ட வாசகங்கள் படி, இரண்டு பெயர்கள் குறிக்கப் படுகின்றன.
ஒருவர் பெயர் சிந்தன். மற்றொருவர் பெயர் பெரும்பீமன் .
இவர் ஏத்தா என்ற கோட்டையை காக்கும் பொருட்டு
ஏராளமான எதிரிகளை வீழ்த்தியிருக்கிறார்.
சிந்தன் போரில் இறக்க, அழகன் கருப்பருடையார் என்ற குறுநில மன்னர்
வரியில்லாத வளமான நிலங்களை வாகவேடு கிராமத்தில் இருந்த
அவரது சகோதரர் சோழர் மால்துயன் என்பவருக்கு தானம் அளித்திருக்கிறார்.
இந்த தானம் கருப்பருடயான் என்ற அதிகாரியால் சாட்சி செய்யப் பட்டிருக்கிறது.
நாகராஜன் சொல்லும்போது இந்த பதிவு பதினோரு நூற்றாண்டுகளாக அப்படியே இருக்கிறது என்றார்.

தமிழ்நாட்டில் போர் வீரர்களுக்கு கல் நாட்டி வழிபடுவது வழக்கமான ஒன்று.
உள்ளூர் காரர்களுக்கு இதன்முக்கியத்துவம் தெரியாததால் அப்படியே கிடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் கூட குல தெய்வ அய்யனார் கோவில்களில் முன்பெல்லாம் நடுகல் வணக்க முறையில் செதுக்கப் பட்ட சிலைகள் தான்
இருந்திருக்கின்றன. அவைகள் அந்தந்த கிராமத்தின் வெற்றி வீரர்கள்.
அந்தந்த ஊர் வீரர்கள் பெயரில் அய்யனார் அழைக்கப் படுவார்.
அய்யனார் என்பது பொதுப்பெயர். பெயரோடு அய்யனார் சேர்க்கப் படும்.
பெயர் கல்யாணி என்றால் அவர் கல்யாணி அய்யனார்.
பெயர் சேர்வராயர் என்றால் அவர் சேர்வராயர் அய்யனார்.
பெயர் பரமநாதன் என்றால் அவர் பரமநாத அய்யனார்.
இப்படி ஆயிரக்கணக்கான பெயர்களில் இருந்த அய்யனார்களை
ஒரு கால கட்டத்தில் பார்ப்பனர்கள் சாஸ்தா அய்யனார் ஆக்கி விட்டார்கள்.

அதாவது ஐயப்பன் தான் அய்யனார் என்று திருத்தி சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
தமிழர்களும் கேட்டுக் கொண்டு கும்பிடு போட்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.
எனவேதான் இந்த இந்த கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
வரலாற்றை இழந்து நிற்கும் தமிழன்
கொஞ்சமாவது சிந்திக்க ஆரம்பித்தால்
வரலாறு மீண்டும் திரும்பும் என்பது நிச்சயம்.
ஆட்சிக்கு வருபவர்கள் தான் இந்த உணர்வைப் பெறவேண்டும்.
பெறுவார்களா? தமிழ்நாட்டு அரசு இதுபற்றி ஏதாவது
கொஞ்சமாவது கவனம் செலுத்த வேண்டுமே?
அதற்கு அவர்களுக்கு நேரம் இருக்க வேண்டுமே?

இறக்குமதியான விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் ??!!

விநாயகர் வழிபாட்டுக்கும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கும்
பெருத்த வேறுபாடு உண்டு.
வரும் 13 ம் தேதி விநாயகர் சதுர்த்தி .
நம்பிக்கையாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
விநாயகர் நம்பிக்கை வேறு. அது தமிழர்களுக்கு உரியதா என்பதெல்லாம் இருக்கட்டும்.
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறவர் பிள்ளையார் .
புராண கதைகள் பற்றி விவாதிப்பதோ விமர்சிப்பதோ
நமக்கு இப்போது தேவையில்லை. நேரமுமில்லை.

எல்லா தெய்வங்களையும் ஒன்றெனக் கருதும் தமிழர்
இதையும் ஒன்றாக பாவித்துக் கொள்வதில் ஒன்றும் பிரச்னை இல்லை
அனைத்து தெய்வங்களுமாக இருந்து அருள்புரியும் ஓரிறை
அதில் பிள்ளையாரும் ஒருவர். அவ்வளவுதான்.
ஆனால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் தமிழ்நாட்டில் எப்போது வந்தன . ?
சுதந்திர போராட்ட காலத்தில் பால கங்காதர திலகர்
இந்துக்களை ஒன்று திரட்டி போரட்டத்திற்கு வலு சேர்க்க முயன்றார்.
அதன் விளைவாக மும்பையில் தோன்றிய இந்த ஊர்வலங்களை
ஆர் எஸ் எஸ் தனதாக்கிக் கொண்டு இன்று நாடு முழுதும்
இந்துக்களை ஒன்றிணைத்து ஒரு சக்தியாக்கிட பயன்படுத்தி வருகிறது.

பின்னணியில் இந்து முன்னணி விஸ்வ இந்து பரிஷத் பா ஜ க என்ற பல
பெயர்களில் பார்ப்பனர்கள் தூண்டு கோலாய் இருந்து
செயல்பட வைக்கிறார்கள். அவர்கள் இல்லையென்றால்
இந்த விழா இல்லை ஊர்வலங்கள் இல்லை.
இதனால் பல நன்மைகளும் தீமைகளும் உண்டாயின.
நன்மை என்றால்
பலருக்கு வாழ்வளித்து வருகிறது.
சிலை உருவாக்குவதில் தொடங்கி அதை பராமரித்து
கரைக்கும் வரை பலருக்கும் அதில் பங்கிருக்கிறது.

எல்லா சாதி மக்களையும் பங்கேற்க வைக்க முடிகிறது. அதுவரை எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தவர்கள்
இந்த நிகழ்ச்சிகள் மூலமாக சங்கமிக்கிறார்கள்
நேரடியாக சாமிக்கு வைவேத்யம் தீப தூபம் காட்ட முடிகிறது.
அதாவது பார்ப்பன அர்ச்சகர் கிடைக்காத இடங்களில்.
எங்களுக்கு ஒரு திருவிழா இருக்கிறது என்று மாற்று
மதத்தவர் மத்தியில் சொல்லிக் கொள்ள முடிகிறது.
இந்துக்கள் ஒன்றாகத்தான் வலுவாகத்தான் இருக்கிறார்கள்
என்று மாற்று மதத்தவர்களுக்கு தரும் செய்தியாக இருக்கிறது.
பலர் தங்களுக்கு இந்த மதத்தில் இருந்து கொண்டு ஏதோ தொண்டு
செய்ய கொடுக்கப் பட்ட வாய்ப்பாக இதை வரவேற்கிறார்கள்.

சமயத் தொண்டு செய்த ஒரு திருப்தி பலருக்கு.
தீமை என்றால் சிலை செய்வதில் ரசாயன கலப்பு செய்து
அதை நீர்நிலைகளில் கரைக்கும் போது பெருத்த
தீமைகளுக்கு அடி கோலுகிறது.
வேண்டும் என்றே முஸ்லிம் பள்ளிவாசல்கள் வழியாக
செல்வோம் என்று பிடிவாதம் பிடித்து தீராத பகையை உருவாக்குகிறார்கள்.
பல இடங்களில் இந்துக்கள் என்போர் இடையே கூட பல
கும்பல்கள் தோன்றி வன்முறைக்கு வித்திடும் சம்பவங்கள் தொடர்கின்றன.

காவல் துறைக்கு மாளாத துன்பங்களை உருவாக்குகின்றன.
பக்தி என்றால் அவரவர் வீடுகளில் வணங்குவதே
தெரு விநாயகர் வழிபாடு வலு காட்டுவதற்கே
அதிலும் ஊர்வலங்கள் பிறரை எச்சரிப்பதற்கே
எல்லாவற்றையும் விட முக்கியம்
பார்ப்பனீயத்திடம் அடங்கிப் போவது உறுதிபடுத்தப் படுகிறது
இதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்
விநாயகர் என்ற பிள்ளையார் வழிபாடு வீட்டில் அல்லது ஆலயத்தில்
தருவது பக்தர்களுக்கு ஆத்ம திருப்தி
அதே பிள்ளையாரை தெருத் தெருவாக ஊர்வலமாக
அழைத்துச் சென்று பரப்புவது தமிழர் கலாச்சாரமல்ல.
விவாதிக்கட்டுமே தமிழ்ச்சமூகம்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மத்திய அரசு ஆடும் நாடகம் ??!!

ஸ்டெர்லைட் ஆலை மூடியாகிவிட்டது.
வழக்கு உச்சநீதிமன்றத்தில் உயர்நீதிமன்றத்தில்
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருக்கிறது. 13 பேர் சுட்டுக் கொலை செய்யப் பட்ட வழக்கும்
சி பி ஐ விசாரணையில் நிலுவையில் இருக்கிறது.
இந்தநிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர்
அறிக்கை வெளியிடுகிறார்.

மத்திய அரசின் அமைச்சகம் உத்தரவின் பேரில்
மத்திய நிலத்தடி நீர் வாரியம்
தூத்துக்குடியில் நிலத்தடி மாசு குறித்து
தன்னிச்சையாக ஒரு ஆய்வு நடத்தி அதன்
அறிக்கையை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறது என்றும்
இது பற்றி தமிழக அரசுக்கு எதுவும் தெரியாது என்றும்
தூத்துக்குடி பகுதியில் ஏற்பட்டுள்ள மாசுக்கு
ஸ்டெர்லைட் மட்டுமே காரணம் என்று கூற முடியாது
என்ற அறிக்கை ஆலைக்கு ஆதரவாக உள்ளது என்றும்
அதை திரும்ப பெற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

நம்பும்படியாகவா இருக்கிறது?
உண்மையாக இருந்தால் யார் நாடகம் நடத்துவது?
உச்சநீதிமன்ற விசாரணையில் இருக்கும்போது ஏன் இத்தகைய
ஆய்வு நடத்த வேண்டும்? யார் சொல்லி இந்த ஆய்வு நடந்தது?
ஆலை நிர்வாகம் சொல்லி நடந்ததா? இல்லையா?
இல்லையென்றால் தானாக இந்த் ஆய்வை நடத்த வேண்டிய அவசியம் என்ன?
இந்த வேதாந்த குழுமத்துக்கு தான் மத்திய அரசு
டெல்டா மாவட்டங்களில் 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு
அனுமதி அளித்திருப்பது குறிப்பி டத்தக்கது.

தவறுக்கு மேல் தவறாக மோடியின் மத்திய அரசு
தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.
அதற்கு ஆதரவாக எடப்பாடியும் ஓ பி எஸ் உம்இருப்பார்கள்
என்று பா ஜ க எதிர்பார்ப்பதில் பொருள் இருக்கிறது.
நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு ஆதரவாக ஆவணங்களை
உருவாக்கும் மோடி அரசின் இந்த முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது.

பாலியல் புகார் கொடுத்த மாணவிக்கு ஆதரவாக சக மாணவிகள் ஏன் இல்லை?

திருவண்ணாமலை அடுத்த வாழவச்சானுரில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில்
இரண்டாம் படிக்கும் ஒரு மாணவி உதவி பேராசிரியர் ஒருவர் தனக்கு பாலியல்
தொல்லை கொடுத்ததாக புகார் கொடுத்தார். அதில் தான் தங்கியிருந்த விடுதியின் காப்பாளர்கள் இரண்டு பேராசிரியைகள் அந்த உதவி பேராசிரியருக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் புகார்கூறினார். சாதாரணமாக ஒரு மாணவி புகார் கூறினால்
சக மாணவ மாணவிகள் அவர் பக்கம் இருந்து போராட வேண்டும்.

ஆனால் இங்கே குற்றம் சாட்டப் பட்டவர்கள் உதவி பேராசிரியர்கள் என்பதால் அவர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு மாணவ மாணவிகளை தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு பாதிக்கப் பட்ட மாணவிக்கு எதிராக செயல்பட வைத்திருக்கிறார்கள்.
அந்த மாணவி வகுப்புக்குள் சென்றவுடன்
மற்ற மாணவ மாணவிகளை அழைத்துக் கொண்டு
உதவி பேராசிரியர்கள் வெளியேறி இருக்கிறர்கள்.

அந்த மாணவி வகுப்புக்குள் இருந்தால்
பாடம் எடுக்கமாட்டோம் என்று உறுதியாக சொல்லி இருக்கிறார்கள்.
இது என்ன வகை வன்முறை?. உதவி பேராசிரியர்கள் இப்படி செய்யலாமா?
சக மாணவிகள் என்ன செய்திருக்க வேண்டும்?
ஒன்று மாணவியின் புகார் பொய் என்பது அவர்கள் நிலைப்பாடாக இருந்தால்
அவர்கள் அந்த மாணவியை கூப்பிட்டு
பொய் புகாரை திரும்ப பெற சொல்லியிருக்க வேண்டும்.
புகார் உண்மையாக இருந்தால்
மாணவியின் பக்கம் நின்று
குற்றம் செய்த உதவி பேராசிரியர்கள் தண்டிக்கப் பட உதவியிருக்க வேண்டும்.

பலவகை அழுத்தங்கள் தரப்பட்ட நிலையில்
புகார் கொடுத்த மாணவியை திருச்சி நாவலூர் அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை
கல்லூரிக்கு மாற்றப்பட்டு
குற்றம் சாட்டப்பட்ட இரண்டு உதவி பேராசிரியர்களும்
திருவள்ளூர் கோவை என்று மாற்றம் செய்யப் பட்டிருக்கிறார்கள்.
குற்றம் சாட்டப்பட்ட உதவி பேராசிரியர் பணி இடைநீக்கம் செய்யப் பட்டிருக்கிறார்.
எல்லாம் சரி. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மாற்றம் செய்யப் பட்டால் பொருள் இருக்கிறது.

குற்றம் சுமத்திய மாணவி ஏன் மாற்றம் செய்யப் பட வேண்டும். ?
உதவி பேராசிரியர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு
நிர்ப்பந்தம் செய்தால் நிர்வாகம் பணிந்து விடுவதா?
அந்த மாணவி வேறு கல்லூரிக்கு செல்ல மாட்டேன் என்று கூறிவிட்ட நிலையில்
எப்படி நிர்வாகம் நிர்பந்திக்க முடியும்.
வகுப்பெடுக்க மறுத்த பேராசிரியர்கள் மீது
ஏன் நடவடிக்கை எடுக்க நிர்வாகம் தயங்க வேண்டும்?
உதவிபேராசிரியர்கள் தவறுக்கு துணை போகிறார்களா என்றால்
சக பணியாளர் மீது அக்கறை எனலாம்.
ஆனால் மாணவ மாணவிகள்
ஏன் சக மாணவியை புறக்கணிக்க வேண்டும்?
அரசு கல்லூரி என்பதால் அரசுதான் பதில் கூற வேண்டும்?

தள்ளாடும் எடப்பாடி அரசு கையில் எடுக்கிறது அடக்குமுறையை ??!! யோகேந்திர யாதவ் கைதாகி விடுதலை ?!!

எடப்படியின் அரசு இன்னும் எத்தனை நாள் நீடிக்குமோ
என்றுதான் நாட்களை எண்ணி வருகிறது
இவர்களுக்கு ஏன் அடக்குமுறை ஆசை ?
சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டம் எதிர்ப்புக்களை சந்தித்து வருகிறது
10000 கோடி செலவு ,அது தரும் ஒப்பந்த கமிஷன்
எல்லாம் சேர்ந்து ஆட்சேபணைக் குரல்களை ஒடுக்கி வருகிறது.

நீதிமன்றம் வேறு மக்களின் கருத்துக் கேட்பு அவசியமில்லை
என்ற சட்ட பிரிவு செல்லும்
என்று தீர்ப்பு கூறியதால் தெம்பு வந்து விட்டதால்
அடக்குமுறையை கையில் எடுக்க தயங்க வில்லை எடப்பாடி
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப் பட்ட பிறகு
ஜெய் கிசான் அந்தோலன் என்று விவசாயிகள் உரிமை பாதுகாப்பு
அமைப்பை நடத்தி வருகிறார் யோகேந்திர யாதவ்
அவர் திருவண்ணாமலை வந்து மாவட்ட ஆட்சியரிடம் பேசி
விவசாயிகளை சந்திக்க முயன்றிருக்கிறார்.

அவரை கைது செய்து செங்கம் காவல் நிலையத்தில்
வைத்திருக்கிறார்கள். கைபேசியை பிடுங்கி வைத்திருக்கிறார்கள்.
தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும்
யோகேந்திர யாதவ் கூறியது அதிர்ச்சி யளிக்கிறது.
வடமாநில விவசாயிகள் கவனத்திற்கு இங்கே நடக்கும்
விவசாயிகள் மீதான அடக்குமுறை சென்று விடக் கூடாது
என்று ஆட்சியாளர்கள் அஞ்சுகிறார்கள்.

தமிழ் நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தி விட்ட நடவடிக்கை இது
அதேபோல் காவிரி ஆற்றில் ஏற்பட்ட உடைப்பை
பார்வையிடச் சென்ற விவசாயிகள் சங்க பி ஆர் பாண்டியனையும்
தினகரன் கட்சிக்காரர் களையும் கூட அரசு கைது செய்திருக்கிறது.
இந்த அடக்குமுறை எதற்கு ? என்ன சாதிக்கப் போகிறார்கள்?
மக்களிடம் மதிப்பிழந்து வரும் எடப்பாடி பழனிசாமியின் அரசு
இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதை யையும்
அழித்துக் கொள்ள வேண்டாமே?