Home Blog Page 66

சிபிஐ குற்றபத்திரிகை தாக்கல் செய்த பின்னும் குஜராத் அரசு அனுமதி அளிக்காததால் விடுதலை ஆன கேத்தன் தேசாய் ??!!

இந்திய மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைவர் டாக்டர் கேத்தன் தேசாய்
மீது ஊழல் குற்றசாட்டு சுமத்தப் பட்டு பதவி விலகினார்.
அவர் வீட்டில் இருந்து கோடிகோடியாய் பணமும்
கிலோக்கள் கணக்கில் தங்கமும் கைப்பற்றப் பட்டதாக செய்திகள் வந்தன.
குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அவர் தலைவர் பொறுப்புக்கு
மீண்டும் தேர்ந்தெடுக்கப் படுவதும் நடந்தது.

உலக மருத்துவ கவுன்சில் தேர்தலிலும் வென்று தலைவர் ஆனார்.
இவர் மீதும் இன்னும் நால்வர் மீதும் சி பி ஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
ஆனால் ஒவ்வொரு வழக்கிலும்
அரசு உரிய அனுமதி அளிக்காததால் விடுதலை ஆகி வருகிறார்.
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால்
அரசு ஊழியர் அனைவரும் சமம் அல்ல.
கீழ் நிலையில் உள்ளோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால்
விசாரணை தொடரும்.
மேல் நிலையில் உள்ளோர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டாலும்
அரசு அனுமதி அளிக்கா விட்டால் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துவிடும்.
அதுதான் கேத்தன் தேசாய் பொருத்தும் நடந்திருக்கிறது.

அதாவது இவரைத்தவிர மற்ற நால்வர் மீதும் வழக்கு தொடர்ந்ந்து நடைபெறும்.
குற்றம் நிரூபிக்கப் பட்டாலும் மேல் அதிகாரி தப்பித்து விடுவார்
கீழ்நிலை அதிகாரிகள் மட்டும் தண்டிக்கப் படுவர்.
அரசு ஏன் இவரை காப்பாற்ற வேண்டும்?
உரிய அதிகாரம் பெற்ற அமைப்பு , அதாவது மாநில அரசு , தன் விருப்பப் படி
அனுமதி அளிக்கவோ அனுமதி மறுக்கவோ முடியுமா?
இந்த அதிகாரம் தவறாக பயன்படுத்தப் படாமல் இருக்க
ஏன் நீதிமன்றம் தலையிடக் கூடாது?
அப்படிப்பார்த்தால் எவரையும் தப்பிக்க வைக்கும் அதிகாரம்
மாநில அரசுகளுக்கு இருக்கிறதா?
குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 197
ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 19 ஆகியவை
இந்த தடைகளை ஏற்படுத்துகின்றன.
மறுபரிசீலனை செய்ய வேண்டிய சட்டம் இது.

லவ் பண்ணு ,காதலியை கடத்தி தருகிறேன் என இளைஞர்களுக்கு உறுதியளித்த பா ஜ க எம் எல் ஏ ???!!!

மகாராஷ்டிரா பா ஜ க எம் எல் ஏ ராம்கதம்.
இவர் அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் கூட
ஒரு ஜன்மாஷ்டமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு
இளைஞர் களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசுகிறார்
” உங்கள் காதலி காதலை ஏற்க வில்லை என்று என்னிடம் வருகிறீர்கள்
நான் என்ன செய்வேன் . உங்கள் பெற்றோர் அவரை ஏற்றுக் கொள்கிறாரா
என்று மட்டும் பார்ப்பேன். ஏற்றுக்கொண்டால் உங்களுக்காக நான்
உங்கள் காதலியை கடத்தி உங்களிடம் ஒப்படைப்பேன்”.
இதுதான் ராம் கதம் அளித்த உறுதி.

அவர் மீது ஒரு சமூக அக்கறையாளர் புகார் கொடுத்து
அது பிணையில் வர முடியாத பிரிவுகளில்
வழக்கு பதிவாகியிருக்கிறது . நடவடிக்கை எடுக்க
நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
எடுப்பார்களா அது என்னவாகும் என்பதெல்லாம் இருக்கட்டும்.
நான் என்ன குறைந்தவனா என்று ஒரு காங்கிரஸ் அரசியல்வாதி
கதமின் நாக்கை வெட்டி வருகிறவர்களுக்கு பரிசு அறிவிக்கிறார்.
சம்பவம் முக்கியம் அல்ல.

எப்படியான ஆட்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதிகளாக அதுவும்
ஆளும் கட்சி உறுப்பினர்களாக வந்து விடுகிறார்கள்
என்பதுதான் கவலைக்குரிய விடயம்.
நடவடிக்கையை பா ஜ க எடுத்திருக்க வேண்டும்.
தகுதிக் குறைவானவர்கள் மக்கள் பிரிதிநிதிகள்
ஆவதை தடுத்தால் தவிர ஜனநாயகம் பிழைக்காது. ஏன் பிழைக்க வேண்டும்
நாங்களே பாசிச கட்சிதானே என்று பா ஜ க நினைத்தால்
குறைந்த பட்சம் மக்களாவது புரிந்து கொள்ளட்டும்.

தேதி ராசி பார்த்து சட்ட மன்றத்தை கலைத்த தெலுங்கானா முதல்வர்? பாஜக வுடன் கூட்டா?

தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகரராவ்
ஜோதிடம் எண் ராசி பார்ப்பவர்.
அவருக்கு எண் 6 ராசியாம்.
அதனால் அந்த தேதியில் சட்ட மன்றத்தை கலைத்து தேர்தலுக்கு தயார்
என அறிவிப்பார் என ஊடகங்கள் எழுதின.
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழும் எழுதியது.
பலரும் நம்பவில்லை. ஆனால் அதைத்தான் செய்தார் கே சி ஆர்.

கலைத்து மட்டுமல்ல ஜெயலலிதா ஸ்டைலில்
119 சட்ட மன்ற தொகுதிகளில்
105 தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அறிவித்தார்.
மிச்ச தொகுதிகளை பா ஜ க உள்ளிட்ட ‘ நண்பர்களுக்கு’ என வைத்திருக்காலாம்.
அடுத்த ஆண்டு ஆகஸ்டு வரை இருக்கும் பதவியை
ஏன் சுருக்கிக் கொள்ள வேண்டும் ?
அடுத்த ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தல் வரும்
அதோடு சேர்த்து நடத்தியிருக்கலாமே ?
பாராளுமன்ற தேர்தலோடு சேர்த்து நடத்த கே சி ஆர் விரும்பவில்லை
ஏனென்றால் அப்போது மோடியா ராகுலா என்பதுதான் பிரதானமாக இருக்கும்.

தனியாக நடத்தினால் கே சி ஆருக்கு போட்டி இருக்காது
என நம்புகிறார். இப்படி
முன்கூட்டியே தேர்தல் நடத்திய வாஜ்பாய் 2004 ல் தோற்றார்.
காங்கிரசை மோசமாக திட்டும் கே சி ஆர் பா ஜ வை அப்படி திட்டுவதில்லை.
ஏனென்றால் கே சி ஆரின் இந்த திட்டத்திற்கு
பிரதமர் மோடி ஆதரவாக இருப்பதுதான்.
இவர் சட்ட மன்ற கலைப்பை அறிவித்த உடனே
தேர்தல் கமிஷன் அப்படியே ஏற்றுக் கொள்கிறது.
மாநில தேர்தல் நடக்க இருக்கும் ராஜஸ்தான் மத்திய பிரதேஷ்
சட்டிஸ்கார் மிசோரம் உள்ளிட்டவைகளோடு தெலுங்கானாவையும்
சேர்த்திருக்கலாம். ஆனால் தேர்தல் கமிஷன் டிசம்பரிலேயே
தெலுங்கானா தேர்தலை நடத்த தயாராக இருக்கிறது.

அதுவும் எப்படி தெரியுமா? வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு
தேர்தலுக்கு 2019 ம் ஆண்டு ஜனவரி 20 ம் தேதி தான் முடிவுறும்
என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.
இப்போது சென்ற ஆண்டு வாக்காளர் பட்டியலை வைத்தே
டிசம்பரின் நடத்தி விடலாம் என திட்டமிடுகிறார்கள்.
தேர்தல் கமிஷன் ஒத்துழைப்புடன்.
மோடியின் ஆசியில்லாமல் இது நடக்குமா?
இவர்கள் தான் சட்ட மன்ற தேர்தல்களையும் பாராளுமன்ற தேர்தலையும்
ஒரே நேரத்தில் நடத்துகிறவர்களாம் .
கே சி ஆர் ராகுலை ‘ பெரிய கோமாளி” என்று வருணித்து
தன் முதல் எதிரி யார் என்பதை அறிவித்து விட்டார்.

பாராளுமன்றத்தில் மோடியை கட்டிபிடித்ததையும் கண்ணடித்ததையும்
சுட்டிகாட்டி விமர்சித்தாலும் அது தரமானதா?
சாதனைகளால் தன்னால் வெல்லமுடியும் என்று
கே சி ஆர் நம்பியிருந்தால் இப்படி தேர்தலை
முன்னேற்றி இருக்க வேண்டியதில்லையே ?!!
பார்க்கலாம் கே சி ஆர் – மோடி ரகசிய கூட்டு வெல்கிறதா என்று
மோடிக்கு கே சி ஆரின் ஆதரவு பாராளுமன்ற தேர்தலுக்கு பின்
உறுதியானால் போதும். அதற்கு இப்போது கே சி ஆரின் திட்டங்களுக்கு
ஆதரவு அளிக்கிறார்.
ஆனால் மக்களின் தீர்ப்பு
எண் ராசியினால் நிர்ணயிக்கப் படுவதில்லை.

டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தாவிற்கு மத்திய அரசு அனுமதி??!!

ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்பாக தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்து
13 பேர் இறந்த நிலையிலும்,
ஆலையை மூடி உத்தரவிட்ட நிலையிலும் ,
மீண்டும் திறக்க அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனம்
தன் முயற்சிகளை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் கச்சா எண்ணெய் ஹைட்ரோ கார்பன் எடுக்க
டெல்டா பகுதியில்
வேதாந்தா நிறுவனத்திற்கு மரக்காணம்- கடலூர் மற்றும் பரங்கிபேட்டை-வேளாங்கண்ணி
என்று இரண்டு பகுதிகளிலும்
குள்ளஞ்சாவடி – தரங்கம்பாடி என்ற பகுதியில்
ஓ ன் ஜி சி நிறுவனத்திற்கும் மத்திய அரசு அனுமதி அளித்து
உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மொத்தம் 40 எண்ணெய் வள பகுதிகளை
வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு கொடுக்க இருக்கிறதாம்.
மத்திய அரசின் எண்ணெய் வளத்தை சுரண்டும் கொள்கை
நாட்டை எங்கே கொண்டு விடப் போகிறதோ தெரியவில்லை.
1993 ல் தொடங்கப் பட்ட ஹைட்ரோ கார்பன் இயக்ககம்
( Directorate General of Hydrocarbons)
நாட்டில் இன்னும் தோண்டப் படாமல் இருக்கும் எண்ணெய் வளங்களை எல்லாம்
சுரண்டி எடுப்பதில் தீவிரமாக இருக்கிறது.
எண்ணெய் தேவைதான் . அத்தியாவசியப் பொருள்தான்.
தற்போது இந்திய தனது எண்ணெய் தேவைகளில்
81 % த்தை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. .

அதை நரேந்திர மோடியின் அரசு
67 % ஆக 2022 ம் ஆண்டுக்குள்ளும்
50 % ஆக 2030 ம் ஆண்டுக்குள்ளும்
ஆக குறைக்க திட்டமிடுகிறது.
எல்லாம் சரி. இந்த திட்டத்தில் பெரும்பங்கு
ஆற்றப் போகிறவர்கள் தனியார் முதலாளிகள்.
ஓ ன் ஜி சி நிறுவனமே குறிப்பிட்ட பங்குதான் ஆற்றப் போகிறது.
தனியார் நாட்டு நன்மையை முன்னிறுத்துவார்களா ?
தங்கள் லாபத்தை பெருக்குவார்களா?
இந்த திட்டங்கள் நடைமுறைப் படுத்தப் படும்போது
அதனால் சுற்றுச் சூழல் பாதிக்கப் படுமா என்று ஆய்வு செய்ய
விவசாயிகள் பாதிக்கப் படுவார்களா என்பதை ஆய்வு செய்ய
சட்டத்தில் இடம் இருந்தாலும் மீறித்தான் செயல் படுகிறார்கள்.
சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தில் பொதுமக்கள் கருத்துக் கேட்கும்
அவசியம் இல்லை என்று
சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு சொல்லி இருக்கிறதே .

எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் அவசியம் என்ன
என்பதை ஏன் இந்திய அரசு ஆராயவில்லை.
லாபத்தை விட நட்டம்தான் தான் அதிகம் இருக்கும்.
அதிலும் குறிப்பாக நம் நாட்டு விவசாயிகள் பொதுமக்கள் தான்
அதிகம் பாதிக்கப் படுவார்கள்.
நம் மக்களை பாதிக்க வைத்து ஒரு திட்டத்தை ஏன் அமுல் படத்த வேண்டும்?
பாலைவனப் பகுதிகளில் எண்ணெய் எடுப்பதற்கும்
விவசாயம் செழிக்கும் பகுதிகளில் எண்ணெய் எடுப்பதற்கும்
வேறுபாடு இல்லையா?
தூத்துக்குடிப் பகுதிகளில் மக்கள் அச்சம் அடைந்தது பாதுகாப்பு கருதி
டெல்டா பகுதியின் அச்சம் வாழ்வாதாரம் போய் விடுமே என்பது
நமக்கும் ஒரு அரசு இருக்கிறது. அது நமது அரசுதான் .

விழிப்புணர்வு ஊட்ட மக்களை திரட்ட ஏன் அனுமதி மறுக்கிறார்கள்?
சொல்வது தவறு என்றால் நீங்கள் நியாயப் படுத்துங்கள்
இந்த அடக்குமுறைதான் மக்களின் அச்சத்தை அதிகமாக்குகிறது.
மாநில அரசு உறுதியாக நின்றால் மத்திய அரசு அடக்க முடியாது
நம் காவல் துறை நம் மக்களை அடக்குவதா?
தவறான உத்தரவுக்கு கட்டுப் பட மாட்டோம் என்ற
ஜெயப்பிரகாஷ் நாராயணின் முழுப்புரட்சி
உதிக்கும் நாளே நன்னாள் !!!

தன் பாலின உறவு குற்றமல்ல ; உச்சநீதி மன்றம் வரலாற்றைத் திருத்தியது !!!

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377
இயற்கைக்கு முரணாக ஆணுடனோ பெண்ணுடனோ மிருகத்துடனோ
பாலுறவு கொண்டால் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கொடுக்க வழி செய்கிறது.
இதற்கு எதிராக உலகளாவிய அளவில் எல் ஜி பி டி என்று சொல்லக்கூடிய
lesbian பெண்ணோடு பெண்
gay ஆணோடு ஆண்
bisexual இரு தரப்பு உறவு
transgender பாலின மாற்றியோர் ஆகிய
சமுதாயத்தினர் தங்கள் பாலின வாழ்க்கை தனிப்பட்ட உரிமை சம்பந்தப் பட்டது என்றும் அதற்கு வேறு யாரும் ஆட்சேபிக்க முடியாது என்றும் எனவே அதற்கான
சட்ட பாதுகாப்பு வேண்டும் எனவும் போராடி வந்தனர்.

அவர்களின் கோரிக்கையில் இருந்த நியாயத்தை ஏற்றுக்கொண்டு
ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பெல்ஜியம் கனடா , கொலம்பியா, இங்கிலாந்து ,
பின்லாந்து ,பிரான்ஸ்,ஜெர்மனி,நார்வே,போர்ச்சுகல்,ஸ்காட்லாந்து,
தென் ஆப்ரிக்கா ,ஸ்பெயின,அமேரிக்கா,ஸ்வீடன்
உள்ளிட்ட 24 நாடுகளுக்கும் மேல்
இவர்கள் திருமணமே செய்து கொள்ள அனுமதித்து விட்டன.

இன்னும் 74 நாடுகளில் தன் பாலின உறவு குற்றம்தான்
குறிப்பாக இஸ்லாமும் கிறித்தவமும் தன்பாலின உறவை ஏற்கவில்லை
13 இஸ்லாமிய நாடுகளில் அது மரண தண்டனைக்கு உரிய குற்றம்
இவை எல்லாவற்றையும் மீறி தனி மனித உரிமை தான் இப்போது பிரச்னை
என் படுக்கை அறைக்குள் நானும் விரும்புகிற ஆணோ பெண்ணோ
எப்படி வாழ்ந்தாலும் மற்றவர்களுக்கு அதை ஆட்சேபிக்க உரிமையில்லை
இதுதான் இன்று உச்ச நீதிமன்றம் தந்திருக்கும் ஆணை
அரசியல் சாசன அமர்வின் ஐந்து நீதிபதிகளும்
ஒருமித்த தீர்ப்பினை வழங்கி வரலாற்றையே மாற்றியிருகிறார்கள்
இந்த தீர்ப்பும் சாதாரணமாக வரவில்லை.

இதே உச்சநீதிமன்றம் தன் பாலின உறவு குற்றம் என்றது
குற்றமில்லை என்ற உயர்நீதி மன்ற தீர்ப்பை மாற்றியது
பின்னால் 2017 ல் உச்ச நீதி மன்றம் 9 நீதிபதிகள் கொண்ட
அரசியல் சாசன அமர்வில் தனி நபரின் அடிப்படை உரிமை
பாதுகாக்கப் படவேண்டும் என்ற தீர்ப்பின் அடிப்படையில்
இந்த ஐந்து நீதிபதிகள் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி
வரலாற்றை மாற்றியிருகிறது.

பாராளுமன்றம் இதை பரிசீலிக்கட்டும் என்ற வாதத்தையும் அது ஏற்கவில்லை
சட்டம் இயற்றப் பட்டால் கூட அதையும் உச்சநீதி மன்றம் பரிசீலிக்குமே
தீபக் மிஸ்ரா, நாரிமன், கன்வில்கர், சந்திரசூட் ,இந்து மல்ஹோத்ரா
ஆகிய ஐவரும் போற்றப் படுவார்கள்.
தீர்ப்பில் முக்கியமாக, தன் பாலின உறவு
குற்றமல்ல ( not immoral ) என்றும்
கட்டுப்பாடு அவர்களை விலங்கிடுவதற்கு சமம் என்றும்
இதுவரை ஒடுக்கி வைத்ததற்கு சமுதாயம் மன்னிப்பு கோரவேண்டும் என்றும்
தடை அறிவுக்கு பொருந்தாதது ,தான்தோன்றித்தனமானது ,
புரிந்து கொள்ள முடியாதது என்றும் கடுமையான
வார்த்தைகளால் சாடியிருக்கிறது.

அதே நேரத்தில் அந்தப் பிரிவில் மிருகங்களுடன் உறவு கொள்வது
தண்டிக்கப்படும் குற்றமாக நீடிக்கும் என்றும் தெளிவு படுத்தியிருக்கிறது .
அவர்களையும் மனிதர்களாக மதிக்க வேண்டும் என்ற அளவில்
இந்த தீர்ப்பு போற்றப் பட வேண்டியதே
திருநங்கைகளாய் பிறந்தோர் என்ன குற்றம் செய்தார்கள் ?
அவர்களை ஒதுக்கி வைப்பதோ இழிவு படுத்துவதோ என்ன நியாயம்?
முன்னேறிய நாடுகள் எல்லாம் எடுத்த முடிவுகள்
மற்றவர்களுக்கு முன் உதாரணம்தான்
மனிதம் காப்போம் மதிப்போம் என்பதே தீர்ப்பு.

7 பேர் விடுதலை; இன்று உச்சநீதிமன்றம் சொன்னதைத்தானே இத்தனை ஆண்டுகளாய் கேட்டோம்?!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரையும்
அரசியல் சட்டம் மாநில ஆளுநருக்கு வழங்கியிருக்கிற
பிரிவு 161 ன் படி விடுதலை செய்யுங்கள் என்றுதான்
இத்தனை நாளும் திமுக பாமக ,விடுதலை சிறுத்தைகள்,
மதிமுக நாம் தமிழர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட
அத்தனை பேரும் கேட்டுக் கொண்டிருந்தோம்.
ஜெயலலிதா தேவையில்லாமல் சட்ட மன்றத்தில்
மத்திய அரசின் அனுமதியோடோ அனுமதி இல்லாமலோ
ஏழு பேரையும் விடுதலை செய்வோம் என்று அறிவித்து
மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி தடை பெற வழி செய்தார்.

அதற்குப் பிறகும் தேவையில்லாமல்
குற்ற விசாரணை சட்ட பிரிவுகள் 432 433, மற்றும் 435 ன் படி
மத்திய அரசின் ஒப்புதல் வேண்டுமா தகவல் தெரிவித்தால் போதுமா
என்ற விவாதத்திலேயே இத்தனை ஆண்டுகளாய் இந்த பிரச்னை
உச்ச நீதிமன்ற பரிசீலனையில் இருந்து வந்து
இன்று ஒரு முடிவை எட்டியிருக்கிறது.
உச்சநீதி மன்றம் இன்று தமிழக ஆளுநர்
தன்னிடம் அளிக்கப் பட்டிருக்கும் கருணை மனு மீது
முடிவெடுக்க உத்தரவிட்டிருக்கிறது.

தமிழக அரசு உடனே அமைச்சரவையை கூட்டி
விடுதலை செய்ய தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு
அனுப்பினால் அவர் அனுமதி அளித்து தான் ஆக வேண்டும்.
மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் அவர்களை விடுவித்தால்
‘ மிகவும் மோசமான முன் உதாரணம் ஆகிவிடும்’ என்றும்
‘ சர்வதேச பின்விளைவுகள் ‘ ஏற்படும் என்றெல்லாம் கூறி
விடுதலையை எதிர்த்தது.

இப்போதும் ஆளுநர் தன் முடிவை எடுக்க மத்திய அரசு
தன் அதிகாரத்தை செலுத்த முடியாது என்றாலும்
புற வழிகளில் தாமத படுத்த முனையலாம்.
அதற்கு இடம் கொடுக்காமல் உடனடியாக தமிழக அரசு
அமைச்சரவையை கூட்டி தீர்மானம் இயற்றி
ஆளுநருக்கு அனுப்ப வேண்டியது அவசரமும் அவசியமும் ஆகும்.
குட்கா விவகாரத்தில் சிக்கி தவிக்கும் தமிழக அரசுக்கு
இதற்கு நேரம் இருக்க வேண்டுமே?!
அல்லது இதற்கும் மத்திய அரசின் அனுமதியை
எதிர்நோக்கி காத்திருப்பார்களா ?

சாயம் வெளுத்த அழகிரி ? 1 லட்சம் 12000 ஆனது!

சிலர் பேசியே காணமல் போவார்கள்.
அந்த பட்டியலில் சேர்ந்து கொண்டார் அழகிரி.
ஒரு லட்சம் பேரை கூட்டி அமைதி ஊர்வலம் என்று அறிவித்து
இன்று கூடிய கூட்டம் 12000 என்று சத்தியம் தொலைக்காட்சி
வந்திருந்த வாகனங்கள் மக்கள் ஆகியோரை நேரில் அனுப்பி
ஆய்வு செய்து கணக்கு காட்டியது
பதினோரு மணிக்கு தொடங்கிய ஊர்வலத்தை அழகிரி
நடத்திய விதம் விநோதமானது.

பின்னால் நெருக்கிய தொண்டரை திரும்பி கையை ஓங்கித் தள்ளுகிறார்.
பிறகு ஒரு ஜீப்பில் தன் குடும்ப உறவுகளோடு
ஒரு சில பெயர் தெரிந்த நபர்களோடு
எந்த கட்டுப்பாடும் இன்றி விசில் அடித்துக் கொண்டு வந்தது கூட்டம்
கலைஞருக்கு இப்படியா மௌன அஞ்சலி செலுத்த வேண்டும்.
ஏதோ அறிவிப்பு வெளியிடுவார் என்று
எதிர்பார்த்த நிலையில் – கடைசியில்
இங்கே வந்திருக்கும் ஒன்றரை லட்சம் பேர் மீதும்
நடவடிக்கை எடுப்பார்களா என்று அங்கே சென்று கேளுங்கள் என்றார்.

வந்தவர்கள் திமுக தொண்டர்களா கூட்டி வரப்பட்ட கூலிகளா
என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
எதற்காக இந்த மௌன அஞ்சலி கூட்டம்
யாரை மிரட்ட – மிரட்டியா கட்சிப் பணி செய்ய முடியும்
உண்மையிலேயே கட்சிப்பணி செய்யும் எண்ணம் இருந்தால்
மௌனம் காக்க வேண்டும்.
ஒரு பெயர் தெரிந்த தலைவர் கூட கூட இல்லை
எல்லாரும் எதிர்பார்ப்பது சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று
யார் அவர்கள் தெரியுமா திமுக தோற்க வேண்டும் என்று
அனுதினமும் அங்கப் பிரஷ்டம் செய்பவர்கள்
அவ்வளவு அக்கறை? இவர் நுழைய வேண்டும்
குடைச்சல் கொடுக்க வேண்டும்-

ஸ்டாலின் மனஅமைதி இழக்க வேண்டும்
எத்தனையோ சோதனைகளை தாண்டிய திமுக
இதையும் தாண்டும். அழகிரியின் தொண்டாற்றும்
ஆசையை பொறுத்த வரை
மற்றவர்கள் சொல்ல வேண்டும் இவர் சேவை தேவை என்று
அன்று வரை இவர் காத்திருந்தால்
ஒருவேளை அந்த வாய்ப்பு வரலாம்

குட்கா ஊழல் – சிபிஐ விசாரணையில் சினிமாவை மிஞ்சும் அதிரடி திருப்பங்கள்?

குட்கா ஊழல் தொடர்பாக சிபி ஐ மேற்கொண்டு வரும் விசாரணையில்
சினிமாவை மிஞ்சும் அதிரடி காட்சிகள் அரங்கேறி வருகின்றன.
இன்று 40 க்கும் மேற்பட்ட இடங்களில் சி பி ஐ அதிரடி சோதனை
நடத்தி வருகிறது.

காவல் துறை தலைவர் – தமிழக டிஜிபி டி கே ராஜேந்திரன் வீட்டில்
அவரை அலுவலகம் செல்ல விடாமல் விசாரணை நடத்தி வருகிறது.
அதேபோல் முன்னாள் சென்னை காவல் துறை கமிஷனர் ஜார்ஜ் வீட்டில்-
தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் என்று
சோதனைகள் நீள்கின்றன.

இந்த வழக்கில் தொடக்க முதலே குற்றவாளிகளை பாதுகாக்க
எல்லா வேலைகளையும் செய்து வந்த தமிழக அரசு
இப்போது மட்டும் எப்படி காட்டிக் கொடுக்கும்
அல்லது பதவி நீக்கும். ?

திமுக தலைவர் ஸ்டாலின் -மருத்துவர் ராமதாஸ் கம்யுனிஸ்டு தலைவர்கள்
எல்லாம் கேட்டுக்கொண்டபடி எடப்பாடி விஜயபாஸ்கரை நீக்கிவிடுவாரா?
முதல்வர் பிழைப்பு 18 எம் எல் ஏ வழக்கு தீர்ப்பில் தொங்கிக்கொண்டிருகிறது.!
இதில் அவராவது நடவடிக்கை எடுப்பதாவது.?

என்னென்ன செய்து விசாரணையை தடுக்க முயற்சித்தார்கள்?
வருமான வரித்துறை கடிதம் பற்றி விசாரிக்க நினைத்த
டி ஜி பி அசோக்குமாரை பதவி விலக்கினார்கள.
அந்தக் கடிதத்தை காணமல் அடித்த ராம்மோகன் ராவை காப்பாற்றினார்கள்.
கடிதம் காணோம் என்று கிரிஜா வைத்தியநாதனை
உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வைத்தார்கள்.

வருமான வரித்துறை கடிதம் காரணமாக நடவடிக்கை எடுக்கப் பட்டிருந்தால்
விஜயபாஸ்கர், ஜார்ஜ் ,ராஜேந்திரன் எல்லாம்
விசாரணை வளையத்துக்குள் வருவார்கள்
என்பதற்காக ஜார்ஜை விட்டு கீழ் மட்ட அதிகாரிகளை குற்றம்
சுமத்தி கடிதம் எழுத வைத்து மேலே உள்ளவர்கள் மீது
நடவடிக்கை போகாமல் இருக்குமாறு பார்த்துக் கொண்டார்கள்.
திமுக நடவடிக்கையால் உயர் நீதிமன்றம் சி பி ஐ விசாரணைக்கு
உத்தரவிட்டதும் – அதை எதிர்த்து ஒரு கடைநிலை ஊழியரை வைத்து
உச்ச நீதி மன்றத்தில் மேன்முறையீடு செய்ய வைத்தார்கள்.
அதை உச்சநீதி மன்றம் நிராகரித்ததால்இப்போது சிபிஐ
குடோன் அதிபர் மாதவராவை விசாரித்து
இப்போது எல்லார் வீடுகளிலும் ரைடு நடத்தி வருகிறது.

வருமான வரி துறை கடிதத்தின் அடிப்படையில்தான்
நடவடிக்கைகள் தொடங்கப் பட்டிருக்க வேண்டும்- அது கடைசியில்
போயஸ் கார்டன் வீட்டில் சசிகலா அறையில் கிடைத்தது ?!
சி பி ஐ விசாரணை தொடரட்டும் – உண்மை வெளிவரட்டும்!
ஆனால் குற்றம் சாட்டப் பட்ட டிஜிபி ராஜேந்திரனுக்கு
பதவி நீட்டிப்பு வழங்கியதன் மூலம்
இந்த ஆட்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
அவர்கள் எங்கள் ஆசி பெற்றவர்கள்தான்
எனவே நாங்கள் பாதுகாப்போம் !

இவர்களாவது அரசியல்வாதிகள்- டி ஜி பி அவர்களே
உங்களுக்காவது காவல் துறையின் மதிப்பை காக்க வேண்டும்
என்ற உணர்வு வரவில்லையா?
அதெப்படி குற்றச்சாட்டை சுமந்து கொண்டே
காவல் துறை தலைவர் பொறுப்பில் தொடர்கிறீர்கள்?
அது காவல் துறைக்கே களங்கம் என்பது புரியாதவரா நீங்கள்?
நீதிமன்றம் தலையில் குட்டும் வரையில்
காத்திருக்கப் போகிறீர்களாக்கும் ?!

கச்சா எண்ணெய் வாங்கும் விலை பாதியாக குறைந்தும் பெட்ரோல் டீசல் விலை உயர யார் காரணம்?

2014 ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை 145 டாலர்
பெட்ரோல் விலை ரூபாய் 60
டீசல் ரூபாய் 45
பால் ரூபாய் 40
2018 ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை 70 டாலர்
பெட்ரோல் விலை ரூபாய் 80
டீசல் ரூபாய் 72
பால் ரூபாய் 52
ஏன் இப்படி நடக்கிறது? யார் காரணம்?
நமது மத்திய மாநில அரசுகள்தான் காரணம்.

இவர்கள் தங்கள் வருமானத்தை இழக்க மாட்டார்களாம் .
பொதுமக்கள் இந்த உயர்வை தாங்கிக் கொள்ள வேண்டுமாம்!
அதாவது மத்திய மாநில அரசுகள் தங்கள் வருவாயை
உயர்த்திக் கொண்டே போகிறார்கள்.
2014 ல் மத்திய மாநில அரசுகள் வசூலித்த வரிவிகிதத்தை
2018 ல் வசூலிக்கும் வரிவிகிதத்தோடு ஒப்பிட்டு பார்த்தால்
இந்த அநியாயம் விளங்கும்.
நான்கு அம்சங்கள் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கின்றன.
டீலர் விலை
மத்திய அரசின் கலால் வரி
டீலர் கமிஷன்
மாநில அரசின் வாட் வரி
இந்த நான்கும் சேர்ந்து விற்கும் விலையாக மாறுகிறது.

தற்போது மத்திய அரசு பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூபாய் 21.48 வசூலிக்கிறது.
மத்திய அரசுக்கு மொத்த வரிவருவாயில் 23 % கலால் வரியில் கிடைக்கிறது.
மாநில அரசுகளுக்கு மொத்த வரிவருவாயில் வாட் மூலம்
சராசரியாக 10% முதல் 14 % வரை கிடைக்கிறது.
மாநில அரசுகள் தங்களுக்கு கிடைக்கும்
வாட் வரி வருவாய் குறைந்து விடும்
என்றுதான் ஜி எஸ் டி யை எதிர்க்கிறார்கள்
அதாவது இருவரும் தங்கள் வருவாயை குறைத்துக் கொள்ளமாட்டார்கள்
பொதுமக்கள் மீது வரியை அதிகரிக்க தயங்க மாட்டார்கள்.
சில மாநில அரசுகள் தங்கள் விகிதத்தை குறைத்துக் கொண்டு
நல்ல பெயர் வாங்கின.

அதெல்லாம் சரி மத்திய அரசு பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூபாய் 34 வீதம் 15 நாடுகளுக்கும் டீசலுக்கு லிட்டருக்கு ரூபாய் 37 வீதம் 29 நாடுகளுக்கும்
ஏற்றுமதி செய்வது ஏன்? தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கிடைத்த இந்த செய்தி
அதிர்ச்சி அளிக்கிறதல்லவா ? லாபமே இல்லாமல் நல்ல பெயர் வாங்கவோ ஒப்பந்தம் காரணமோ வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க தயங்காத மத்திய அரசு
சொந்த நாட்டு மக்களுக்கு விலையை உயர்த்தி
விலைவாசி உயர காரணமாக இருக்கலாமா?
நியாயப் படுத்தவே முடியாத அக்கிரமங்கள் இவை??!!

ஆராய்ச்சி மாணவி சோபியா கைது; தமிழிசையின் சகிப்பின்மையும் ஆணவமும்???!!!

கனடாவில் பயிற்சி பெரும் ஆராய்ச்சி மாணவி சோபியா
தூத்துக்குடிக்கு விமானத்தில் வரும்போது தமிழிசையும் வந்திருக்கிறார்
‘ பாசிச பாஜக ஆட்சி ஒழிக ‘ என்று முழக்கம் எழுப்பிருக்கிறார்
விமானத்தில் வேறு எந்த பயணியும் ஆட்சேபிக்க வில்லை
விமான பணியாளர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை
தமிழிசை தமிழக பா ஜ க தலைவர்- குமரி அனந்தன் மகள்
வசந்த குமாரின் அண்ணன் மகள் – இவர்கள் எல்லாம் காங்கிரஸ்
மாணவி சோபியா முழக்கத்தை தவிர்த்திருக்கலாம் – அது வேறு
இவருக்கு சகிப்புத்தன்மை வேண்டாமா ?

மத்தியில் ஆட்சி புரியும் மமதை தலையில் ஏறி விட்டதா? புகார் கொடுக்கிறார்
எடப்பாடியின் காவல் துறை மாணவியை கைது செய்து
சிறையில் அடைக்கிறது- அவர் பிணையில் வெளியில் வருகிறார்
தமிழிசை மீது சொபியாவின் தந்தை தங்கள் மீது தாக்குதல்
என புகார் கொடுக்கிரார் – நடவடிக்கை ஏதும் இல்லை ?!
சோபியா தலித் என்பதால் பிரச்னை வெடிக்கிறது
மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். வலைத்தளங்கள்
தமிழிசைக்கு எதிரான பதிவுகளால் நிறைகின்றன
இதெல்லாம் தேவையா தமிழிசை?
உங்களுக்கு பெருமை சேர்க்க கூடியவையா நடப்பவை?
அறிவுரை கூற கூட யாரும் இல்லையா?

பா ஜ க வில் இருக்கும் பார்ப்பனர் அல்லாதாரை
சுயநலத்திற்காக காட்டிக் கொடுப்பவர்கள் என்றுதான்
தமிழ்ச்சமூகம் பட்டம் கட்டி வைத்திருக்கிறது.
அல்லது தவறாக வழி தவறி சென்றவர்கள்
அல்லது இந்து என்ற சொல்லின் கவர்ச்சியால்
இன உணர்வு மறந்தவர்கள்
எல்லாவற்றுக்கும் மேலாக எதிரியின் சுயரூபத்தை
அறியாதவர்கள் உணராதவர்கள் தெரிந்தே தவறான இடத்தில் இருப்போரும்
தெரியாமல் அங்கே இருப்போரும் இப்போது மத்தியில் ஆட்சியில் இருப்பதால் கொஞ்சம் அகங்காரம் தலையில் ஏறியிருக்கலாம் அன்புச்சோதரி தமிழிசை உடனே புகாரை திரும்பப் பெற்று தமிழர்கள் ஒருவர்க்கொருவர்
விட்டுக் கொடுத்துக் கொள்வார்கள் என்று நிரூபி.

ஏதோ இயக்கம் பின்புலத்தில் இருப்பதாக தமிழிசை
சந்தேகிப்பதில் உண்மை இருந்தால் காவல் துறை
விசாரிக்கட்டும்- ஆனால் பா ஜ க தலித்துகளை
அடக்கி வைத்துக் கொண்டே பல கட்சிகளில்
இருந்து அவர்களை வளைக்க முயற்சிப்பது
உண்மைதானே?? அடக்குவது நாங்கள் அல்ல
இதர பிற்பட்டோரே என்று பார்ப்பனர்கள்
பின்னால் ஒளிந்து கொள்ள முடியாது.

ஏனென்றால் இந்த சாதி முறையை உருவாக்கி
எல்லாரையும் பிரித்து வைத்திருப்பது யார்?
தான் மட்டும் மேலே அமர்ந்து கொள்கிறேன்
கீழே இருக்கும் மூவரும் எப்படி வேண்டுமானாலும்
அடித்துக் கொள்ளுங்கள் – இதுதானே சூத்திரம்
பிரச்னை பெரிதாகக் கூடாது
அதற்கு ஒரே வழி தமிழிசை சோபியா மீதான
புகாரை திரும்பப் பெறுவதுதான்??!!
நானும் சொல்கிறேன் ‘ பாசிச பாஜக ஆட்சி ஒழிக’
என்று திமுக தலைவர் ஸ்டாலினும் சொல்லியிருக்கிறார்.
எத்தனை லட்சம் பேர் மீது வழக்குப் போடுவீர்கள்??