Home Blog Page 67

கொள்முதல் நிலையங்களை மூடி டெல்டா விவசாயிகளை பழி வாங்குகிறதா மத்திய அரசு?

2022 க்குள் விவசாய விளைபொருட்களின் கொள்முதல்
விலையை இரட்டிப்பாக்குவதாக மோடியின் அறிவிப்பு இருந்தது.
இடையில் பெயரளவுக்கு கொள்முதல் விலையை உயர்த்தியது
அதிருப்தியை ஏற்படுத்தினாலும் தேர்தல் வரும்போதாவது
ஏதாவது உருப்படியாக செய்வார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது.
ஆனால் டெல்டா பகுதியை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து
விவசாயிகளை மறைமுகமாக விவசாயத்தில் இருந்து
வெளியேற்றும் நடவடிக்கையை மத்திய அரசு தொடர்ந்தது.

இந்நிலையில் இப்போது தமிழகம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல்
நிலையங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாக
தகவல் வெளியானது அதிர்ச்சி அலைகளை உருவாக்கி இருக்கிறது.
கடந்த ஆகஸ்டு 31ம் தேதி வரை கொள்முதல் செய்த நெல்லை அரைத்து
அரிசியாக தந்து விட்டு நெல் கொள்முதலை நிறுத்துமாறு மத்திய அரசு
அறிவுறுத்தி இருப்பதாக கூறப்பட்டது.

திடீர் என்று தஞ்சை மாவட்டத்தில் 59 கடலூர் மாவட்டத்தில் 49
விழுப்புரம் மாவட்டத்தில் 15 கொள்முதல் நிலையங்களும் மூடப்பட்டன.
தமிழகம் முழுவதும் 1500 கொள்முதல் நிலையங்களும்
டெல்டாவில் மட்டும் 600 கொள்முதல் நிலையங்களும் இயங்கி வருகின்றன.
கொடுமை என்னவென்றால் நெல்கொள்முதல் குவிண்டாலுக்கு ரூபாய் 1750 என்று
அறிவிக்கப் பட்டாலும் கொள்முதல் செய்வது என்னவோ
பழைய விலையான ரூபாய் 1550 க்குத்தான்.

இந்த நிலையில் தமிழக அரசின் அறிவிப்புகள் ஏமாற்றமளிப்பதாக இருக்கின்றன.
இவர்கள் மத்திய அரசின் முகவராகத்தான் செயல் படுகிறார்களாம் . இதில் சில
விதிமுறைகளை ஒட்டித்தான் இந்த மூடல்கள்.
அதாவது பராமரிப்பு பணிக்காக இந்த மூடல்கள் என்று
அமைச்சர் காமராஜ் விளக்கம் தருகிறார்.
கொள்முதல் செய்வதே குறிப்பிட்ட காலத்தில்தான்.
இடையில் உள்ள காலத்தில் இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளக் கூடாதா?
எங்கெல்லாம் நெல் வரத்து இருக்கிறதோ எங்கெல்லாம்
நேரடி கொள்முதல் நிலையங்கள் தோடர்ந்து செயல்படும்
என்றும் அவர் கூறியிருக்கிறார்.

கேள்வி ஏன் இருக்கும் நிலையங்களை மூடவேண்டும் என்பதுதான்.
ஏற்கெனெவே பல பிரச்னைகளால் நொடித்துப் போயிருக்கும் விவசாயிகளை
மீண்டும் சோதனைக்கு உள்ளாவது அரசுக்குக் நல்லதல்ல.
மாநில சுயாட்சியை வலியுறுத்தி ஆட்சி செய்பவர்கள்
மத்திய ஆட்சியை மட்டுமே நம்பி திட்டங்களை வகுப்பது சரியல்ல.
மத்திய அரசின் பங்கும் இருக்கட்டும்.
நீங்கள் சுயமாக விருத்தி செய்வதை அவர்கள் தடுக்க வில்லையே .
விவசாயிகளிடம் இருந்து எல்லாக் காலத்திலும்
சாகுபடி விளைபொருட்கள் கொள்முதல் செய்யப் படும்
என்று தமிழக அரசு உறுதியளிக்க வேண்டும்.
எதற்கும் மத்திய அரசை சாக்கு சொல்லும் போக்கை
கைவிடவேண்டும்.

செம்மரம் வெட்டியதாக ஆந்திராவில் மேலும் ஒரு தமிழ்த் தொழிலாளி காவல் துறையால் சுட்டுக் கொலை?

ஆந்திர காவல் துறையின் ரத்த தாகம்
இன்னும் அடங்க வில்லை போல் தெரிகிறது.
முன்பே 23 தமிழ் த் தொழிலாளிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
அந்த விசாரணையே இன்னும் முற்றுப் பெறவில்லை.
நேற்று மீண்டும் ஒரு தமிழ்த் தொழிலாளி – காமராஜ்
செம்மரம் வெட்டியதாக சுட்டுக் கொல்லப் பட்டார்
எத்தனை எச்சரிக்கை களும் பலன் அளிக்க வில்லை.

ஏன் என்றால் வேலையில்லாதவர்கள் மத்தியில்
ஒரு நாளைக்கு சில ஆயிரங்கள் கூலி கொடுக்கிறோம்
என்று கூவி அழைக்கும் போது சபலத்துக்கு
அடிமையாகி இன்று சடலமாக கிடக்கிறார்கள்.
சம்பவம் நடத்து இரவில் என்பதால்
காவல் துறை சொல்வதுதான் எடுபடும்.
ஏன் காலுக்கு கீழே சுட வில்லை என்று கேட்பதா?
ஏன் வேலைக்கு அழைத்து வந்தவர்கள் மீது வழக்கில்லை
என்று கேட்பதா?

ஆயிரக்கணக்கானவர்கள் விசாரணையின்றி ஆந்திராவில்
சிறையில் வாடுகிறார்களே?
அவர்களை மீட்க ஜெயலலிதா
முன்பு ஒரு திட்டம் அறிவித்தார்.
திமுக தனது வழக்கறிஞர் அணியையே அனுப்பியது .
தொடர்கிறதே காவல் கொலைகள் ?
தமிழக அரசு மௌனம் காக்கிறதே?
அவர்களுக்கு ஒரு பங்கும் இல்லையா?
இது தமிழ்-தெலுங்கர் பிரச்னையாக உருமாறும்
அபாயமும் இருக்கிறது இல்லையா?
அதனை தடுக்க இரு அரசுகளுக்கும் கடமை உண்டு.
பக்கத்து மாநிலங்களில் வசிக்கும்
தமிழர் நலன் காக்க ஒரு துறையே வேண்டும் போல் இருக்கிறது.

அதிர்ச்சியளிக்கும் மோடி தந்த வாராக் கடன் விபரங்கள் – குற்றவாளிகள் யார்?!

பிரதமர் மோடி அஞ்சலக வங்கி சேவையை தொடங்கி வைத்து பேசும்போது

அதிர்ச்சியளிக்கும் வங்கி கடன்களில் வாராக்கடன் பற்றிய விபரங்களை கூறினார்.

“ சுதந்திரம் அடைந்தது முதல் 2008 வரை வழங்கப் பட்ட வங்கிக்கடன்கள்
ரூபாய் 18 லட்சம் கோடி.
ஆனால் அடுத்த 6 ஆண்டுகளில் விண்ணைதொடுகின்ற அளவுக்கு
ரூபாய் 52 லட்சம் கோடி வங்கி கடன் தரப் பட்டு உள்ளன.
தொலைபேசி வாயிலாக அழைத்தே கூட சில கடன்கள் வழங்கப் பட்டன.

ஒரு குடும்பத்தின் உத்தரவின் பேரில்
குறிப்பிட்ட சிலருக்கு கடன்கள் வழங்கப் பட்டன.
திருப்பி செலுத்தாத பொது அவைகள் மறுசீரமைப்பு செய்ய
வங்கிகள் கட்டாயப் படுத்தப் பட்டன.
வாராக் கடன்களின் பின்னால் முந்தைய காங்கிரஸ் அரசு மறந்து கொண்டது.
1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் கடன்
வெறும் 12 பேருக்கு மட்டுமே வழங்கப் பட்டது.
மேலும் 27 பேர் 1 லட்சம் கோடி ரூபாய் கடனை வாங்கி கொண்டு
திரும்ப செலுத்த வில்லை. “

பிரதமர் மோடியின் இந்த குற்றச்சாட்டு காங்கிரசை மையப் படுத்தி இருக்கிறது.
இதற்கு பதில் கூறும் வகையில் ப. சிதம்பரம்
தனது ட்விட்டரில் ” நாங்கள் கொடுத்ததாகவே இருக்கட்டும் .
அதில் எத்தனை கடன்களை வசூலிக்க தற்போதைய அரசு நடவடிக்கை எடுத்தது. ?
எத்தனை கடன்களை மீண்டும் கொடுத்தது ஏன்?
அவர்களுக்கு இந்த அரசு சலுகைகளை நீட்டித்தது ?”
என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியிருக் கிறார்.
இவைகளில் இருந்து ஒரு உண்மை மட்டும் வெளிவருகிறது.
யார் ஆட்சியில் இருந்தாலும் அதில் பலன் பெறுபவர்கள்
பெரு முதலாளிகள் மட்டுமே என்பதுதான் அந்த உண்மை.

சாதாரண விவசாயி ஒரு டிராக்டர் கடன் வாங்கி
ஒரு தவணை பாக்கி வைத்தால் ஜப்தி செய்யும் வங்கிகள்
ஏன் இந்த பெரு முதலாளி மோசடிக்காரர்கள் மீது
கடும் நடவடிக்கை எடுக்க வில்லை என்பதை விளக்குவார்களா?
எத்தனை சட்டங்கள் இருக்கின்றன வங்கி நிதி ஒழுங்கு படுத்த
அத்தனையும் ஒரு சிலரின் கொள்ளைக்குத்தானா?
சட்டங்களையும் மறு சீரமைப்பு செய்ய வேண்டும்.
வங்கி நடவடிக்கைகள் பொது வெளியில்
பகிரங்கமாக வெளியிடப் பட்டால்தான்
இந்த மோசடிகள் முடிவுக்கு வரும்.

பேரூர் ஆதீனம் மறைவு தமிழ் மறுமலர்ச்சிக்கு ஏற்பட்ட இழப்பு??!!

பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார்
93 வயதில் மறைந்திருக்கிறார்.
மு க ஸ்டாலின், மருத்துவர் ராமதாஸ் , கி. வீரமணி ,
போன்றவர்களுடன் இராம. கோபாலனும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
கோவில் குடமுழுக்குகளையும் திருமணங்களையும்
தமிழ் முறைப்படி நடத்தி மாற்றத்தை ஏற்படுத்தியவர்.
அறநெறியும் சமய நெறியும் மாறாமல் வாழ்ந்த அவர்
தீண்டாமை ஒழிப்புக்காக குரல் கொடுத்தவர் என்பதிலிருந்தே
சமயம் சார்ந்திருந்தும் சீர்திருத்தக் கொள்கைகளில்
நம்பிக்கை கொண்டவர் என்பது புலனாகும்.

மதம் பேசினார் என்பதற்காக மட்டுமே ராம கோபாலன்
போன்றவர்கள் ஏற்றுக் கொண்டார்களே தவிர
அவரது சீர்திருத்தத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல.
தமிழ்க் கல்லூரி நடத்தி தமிழ் பரப்பினார் என்பது
கூடுதல் முக்கிய நினைவுப் பணி.
தமிழ் திருமணம் நடத்துவோர் குறைந்து கொண்டிருப்பது
கவலை அளிக்கிறது.

சீர்திருத்த திருமணம் என்ற பெயரில்
கடவுள் மறுப்பு திருமணம் நடப்பதில்லை.
அரசியல் தலைவர்களை முன்னிறுத்தும் திருமணங்கள் தான்
நடை பெற்று வருகின்றன.
திராவிட இயக்கங்கள் உண்மையான சீர்திருத்த திருமணங்களை
நடத்த வலியுறுத்த தொடங்கினால் மட்டுமே உண்மையான திருப்பம் ஏற்படும்.
கடவுள் மறுப்பு திருமணம் மட்டும் முக்கியமில்லை.
சாதி மறுப்பு திருமணங்கள் தான் மிகவும் முக்கியம் .

இட ஒதுக்கீடால் சமுதாயம் முன்னேற முடியாதாம்??!! டாக்டர் கிருஷ்ணசாமியின் பிதற்றல்??!!

இட ஒதுக்கீடு வந்திராவிட்டால் இன்றைக்கு தாழ்த்தப்பட்டோராகவும்,
பிற்பட்டோராகவும், மிக பிற்பட்டோராகவும் இருப்பவர்கள் முன்னேறி இருக்கவே
முடியாது. இந்த அடிப்படை அறிவு எல்லாருக்கும் இருக்கிறது.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு
இல்லாமல் போனதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது.
இட ஒதுக்கீட்டை ஒழிக்கத்தானே பார்ப்பனர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள் .
அவர்களுக்கு துணை போவதுபோல் இருக்கிறது கிருஷ்ணசாமியின் பேச்சு.

சமூக நீதியை தவறாக புரிந்து கொள்கிறோமாம்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு சமுதாயம்
மேலாதிக்கம் செய்தது என்று ஒப்புக் கொள்ளும் கிருஷ்ணசாமி
ஒட்டு மொத்த சமுதாய முன்னேற்றத்துக்கு
அந்த ஒரு பார்முலாவை மட்டும் பயன் படுத்துவது சரியல்ல என்கிறார்.
ஏதோ ஒரு ஏற்பாடு அவரை இப்படி பேச வைத்திருக்கிறது என்று மட்டும் புரிகிறது.
பாராளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பலர்
எப்படியெல்லாம் பேசப் போகிறார்களோ?

முன்பே அவர் பா ஜ க வுடன் நெருங்குகிறார் என்று செய்தகள் வந்தன.
இப்போது உறுதி பட்டு விட்டது
இடஒதுக்கீடு வருவதற்கு முன் – பின் என்று புள்ளி விபரங்களை
அவர் ஆராய்ந்தாரா என்று தெரிய வில்லை.
ஆதிக்க சக்தியிடம் ஆட்பட்டு விட்டார் என்று மட்டும் தெரிகிறது.
இரண்டு கருத்துக்களை அவர் கூறியிருக்கிறார்.
அதில் இட ஒதுக்கீடு குறித்து அவர் கூறிய கருத்துக்கள் தான்
நமக்கு சரி என்று படவில்லை
காட்டிக்கொடுக்கும் வேலையை இதைவிட சிறப்பாக செய்யமுடியாது.
எல்லாரும் இட ஒதுக்கீடுக்காக போராடிக்கொண்டிருக்கும்போது
இவர் மட்டும் வேண்டாம் என்றால் அதற்கு என்ன பெயர்?
திருமாவளவனும் ஜான் பாண்டியனும் இதர தலித் தலைவர்களும்
ஒப்புக் கொள்வார்களா?

இன்றைக்கும் கூட இட ஒதுக்கீடு எந்த அளவு சாதித்திருக்கிறது
என்பதற்கு புள்ளி விபரம் வேண்டுமா வேண்டாமா?
சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் சராசரியாக
ஐம்பது சதம் அளவுக்கு முன்னேறி சமமாகத்தான்
வாழ்கிறார்கள் என்றால் இட ஒதுக்கீடு தேவையில்லைதான்!
அந்த நிலை வந்து விட்டது என்று எதை வைத்து சொல்கிறார்?
கடுமையான கண்டனத்துக்கு உரிய கருத்து இது.

அடுத்து பள்ளன், காலாடி, கடையன் , குடும்பன், பண்ணாடி, தேவேந்திர குலத்தான்
ஆகிய ஆறு பேரையும் தேவேந்திர குல வேளாளர் என்று வகைப்படுத்தி
பட்டியல் வகுப்பிலிருந்து அவர்களை நீக்க வேண்டும் என்பது
அவரது அடுத்த கோரிக்கை.

இதில் ஜான் பாண்டியனும் இவரும் ஒரே கருத்தில் இருக்கிறார்கள்.
பொருளாதார ரீதியிலும் , சமுதாய ரீதியிலும், கல்வி ரீதியிலும்
இவர்கள் முன்னேறி விட்டார்கள் என்று இவர்களே ஒப்புகொண்டால்
பட்டியல் வகுப்பிலிருந்து நீக்க யாருக்கும் ஆட்சேபணை இருக்காது.
எஸ் சி என்ற முத்திரை முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டையாக
இருக்கிறது என்ற இவர் கருத்தும் ஆராய்ச்சிக்குரியது.
அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு கலைஞர் தந்த போது
இவர் எதிர்த்தது ஏன்? அவர்கள் மீது இவருக்கு அக்கறை இல்லையா?
அவர்கள் பங்கை அவர்களுக்கு கொடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை?

ஒட்டு மொத்தமாக் சாதி ஒழிப்பு இலட்சியமாக இருக்க வேண்டும்
என்று சாதித் தலைவர்கள் ஒவ்வொரு முறையும் சொல்லிக்
கொண்டே இருக்கிறார்களோ அன்றுதான் அவரகள் மதிக்கப் படுவார்கள்.
தமிழர் என்று அனைவரும் இணைவோம் என்பதே இறுதி இலட்சியம்
என்பதை இவர்கள் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.!
இல்லைஎன்றால் சாதியை வைத்து தங்கள் இருப்பை செல்வாக்கை
தக்க வைக்க முயற்சிக்கிறார்கள் என்ற பழி உங்கள் மீது தங்கி விடும்.

ஒரே நாடு ஒரே தேர்தல்; மோடி , அமித்ஷாவின் சர்வாதிகார கனவு ?!

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பா ஜ க வின் கனவு.
பிரதமர் மோடி அடிக்கடி இந்தக் கனவுக்கு உருவம் கொடுத்துக்கொண்டே இருப்பார்.
ஆனால் நடக்கவே முடியாத கனவு இது.
அடுத்த ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தலோடு
29 மாநிலங்களுக்கும் தேர்தல் கொண்டு வர இருவருக்கும் ஆசை.

வாஜ்பாய் வெல்வோம் என்று நம்பி – 2004 ல்
தேர்தலை முன்கூட்டியே நடத்தினார்- தோற்றார்
எனவே இவர்கள் நம்புவது நடக்குமா என்பது வேறு
மோடியின் செல்வாக்கில் பல மாநிலங்களில் ஆட்சியை
பிடிக்கவும் தக்க வைக்கவும் ஆசை.

சட்ட கமிஷனின் தலைவர் பதவி முடியும் முன்
அதன் தலைவர் சௌஹன் எல்லோரையும்
கலந்து கொண்டு ஒரே தேர்தலாக நடத்த
அழைப்பு விடுத்திருக்கிறார்
மத்திய அரசின் விருப்பத்தின் படிதான் இந்த அழைப்பா?
எல்லா கட்சிகளும் ஒப்புக் கொள்ள வேண்டும்
அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும்
சில சட்ட மன்ற ஆயுளை கூட்ட வேண்டும்
சில வற்றின் ஆயுளை குறைக்க வேண்டும்
இவையெல்லாம் நடக்க கூடியதா?

ஐந்து வருடம் தேர்ந்தெடுக்கப்படும்
மாநில அரசோ மத்திய அரசோ
முழுக்காலத்தையும் நிறைவு செய்யும்
என்பதற்கு என்ன உத்தரவாதம்?
இடைப்பட்ட காலங்களில் மத்திய அரசு
அதிகாரத்தை கைப்பற்றும் வாய்ப்புகள் தான் அதிகம்.
அது ஜனநாயகத்துக்கு நல்லதா?
1967 க்குப் பிறகு ஒரே தேர்தலாக நடத்த முடியவில்லையே ஏன்?
செலவு மிச்சம் என்றால் மக்களின் குரலுக்கு மதிப்பு ?

மோடியின் நிறைவேறாத ஆசைகளில் ஒன்றாக
ஒரே நாடு ஒரே தேர்தல் சேரப்போகிறது.
ஒரே தேர்தல் ஒரே கல்வி ஒரே மொழி
ஒரே மதம் ஒரே மருத்துவம் கடைசியில்
ஒரே கல்லறை – இதுதானா உங்கள் ஆசை மோடி அவர்களே?!
நூறு பூக்கள் பூக்கட்டும் என்றார் மாவோ
பன்மையில் ஒருமைத்தன்மை ( Unity in Diversity)
அதுதான் இந்தியாவின் அழகு முகம்
பன்மைத்தன்மையை போற்றுவோம்
இந்தியாவுக்கு வலிவும் வளமையும் தரும்
மந்திரம் அது ஒன்றே ?!

மிரட்டி நுழையப் பார்க்கும் அழகிரி! தப்புக் கணக்கு போடுகிறார்?!

திமுகவில் அனுமதித்தால் ஸ்டாலின் தலைமையை ஏற்க அழகிரி தயாராம் . கலைஞர் இருக்கும் வரை ஏதும் செய்யாமல் மறைந்த பின் கட்சியை காப்பாற்ற வருகிறேன் என்று வரும் அழகிரி செய்யும் காரியங்கள் நல்லதற்கல்ல. வெளியில் இருந்து கொண்டே இப்படி மிரட்டுகிறாரே, உள்ளே விட்டால்? அவரிடம் இருக்கும் அத்தனை பேரும் தி மு க வின் தொண்டர்கள் தான். எல்லாரும் அவர் திமுக வை விட்டு விலகினால்கூட நாங்கள் கூட போகமாட்டோம் என்பவர்கள்தான்.

செப்டம்பர் ஐந்தாம் தேதி அழகிரி கூட்டும் அமைதிப் பேரணி எந்த நோக்கத்திற்காக ? பதவி வேண்டாமாம். கட்சியில் அனுமதித்தால் போதுமாம். இன்று திமுக வில் கருப்பசாமி பாண்டியனும் , முல்லைவேந்தனும் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்திருக்கிறார்கள். கட்சியில் சேருவது என்றால் அதற்கு முறை இல்லையா? கடமை கண்ணியம் கட்டுப்பாடு எல்லாம் கட்சியில் நுழைபவர்களுக்கு வேண்டாமா? அதெல்லாம் தெரியாதவரா அழகிரி? கட்சியில் அனுமதிக்கும் முன்பே திமுக ட்ரஸ்ட்டில் ஸ்டாலின் மனைவிக்கும் மருமகனுக்கும் என்ன வேலை என்று கேட்கும் அழகிரி உள்ளே வரும் நோக்கம் எல்லாருக்கும் தெரியும்.

கட்டுச் சோற்றில் பூனையை சேர்த்துக் கட்டினால் என்ன ஆகும்? சோதனைகளை வெற்றிகரமாக சந்தித்து வரும் திமுக அடுத்த சோதனையையும் தாண்டி செல்லும் . எந்த அளவுகோளிலும் அடங்காத அழகிரி அதிக பட்சம் செய்யப் போவது துரோகம். அதை செய்யாதவர்கள் தான் குறைவு. ஏராளமான துரோகங்களை சந்தித்து தான் இன்று திமுக வலிவுடன் முன்னேறுகிறது. சேருவது வலிவு சேர்க்கத்தான் என்றால் யாரும் வரவேற்கத்தான் செய்வார்கள். அதுவே பலவீனமாக்கும் என்றால் ? எதையும் தாங்கும் வலிமை கொண்டு திமுக தலைமை இயங்கி வருகிற நேரத்தில் இதையும் தலைமை வலிவோடு எதிர்கொள்ளும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பு.

செல்லாத நோட்டு அறிவிப்பால் மத்திய அரசுக்கு நட்டம் ரூபாய் 2000 கோடி?

கறுப்புப் பணத்தை மீட்கப் போகிறோம் என்று சொல்லித்தான்
மோடி அரசு ஆயிரம் ஐநூறு நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது.
சொல்லி மாளாத இழப்புகளை சந்தித்த அந்த நடவடிக்கையின் முடிவு என்ன?
ரூபாய் 15.31 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டன.

ரூபாய் 10720 கோடி மதிப்புள்ள நோட்டுகள் தான் வராமல் தங்கி விட்டன.
ரூபாய் 12877 கோடி புதிய நோட்டுகள் அச்சடிக்க மத்திய அரசு செலவு செய்துள்ளது.
ஆக கடைசியில் நோட்டு அச்சடித்த செலவு கூட தேறாத நிலையில்தான்
மோடியின் ரூபாய் நோட்டு புரட்சி சாதித்திருக்கிறது.
3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கருப்பு பணம் கிடைக்கும் என்று திட்டமிட்ட
மோடிக்கு முக்காடு போட்டுக் கொண்ட நிலைதான் .

கறுப்புப் பணம் என்பது நோட்டுக்களால் மட்டும் ஆனது அல்ல என்பதை புரிந்து கொள்ள மத்திய அரசுக்கு வக்கில்லை.. அதிகாரிகளை மட்டும் நம்பி ஆட்சி நடத்துபவர்கள் இப்படித்தான் ஏமாறுவார்கள்.

அடக்குமுறையை கையில் எடுக்கும் மோடி அரசு வெற்றி பெற முடியுமா?

இடது சாரி சிந்தனையாளர் வக்கீல் சுதா பரத்வாஜ் ,
மாவோயிஸ்ட் ஆதரவாளர் வெர்ணன் கோன்சால்வாஸ் ,
பத்திரிகையாளர் கௌதம் நவ்லகா
அருண் பெரைரா, எழுத்தாளர் கவிஞர் வரவரராவ் இவர்களெல்லாம் பயங்கரவாதிகளாம் .

அரசு நினைத்தால் எப்படி எல்லாம் எவரை எல்லாம் வழக்குப் போட்டு
அலைக்கழிக்கலாம் என்பதற்கு இவர்கள் மீது மகாராஷ்டிரா அரசு எடுத்திருக்கும் கைது நடவடிக்கை உதாரணம்.
கிட்டத் தட்ட அவசர நிலையை நினைவூட்டும் நடவடிக்கைகள்.
என்ன குற்றம் செய்தார்கள் இவர்கள் என்பதற்கு
அரசு வைத்திருக்கும் ஆதாரங்கள் நகைப்புக்குரியவை.

உச்ச நீதி மன்றமே இவர்களை சிறைக்கு அனுப்ப கூடாதென
வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டிருக்கிறது.
அறிவுஜீவிகளுக்கு சிறைக்கூடம் தான் தண்டனையா?
மாவோயிஸ்டுகளுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்த வில்லையா?
இடது சாரி – தலித் செயற்பாட்டாளர்கள் தேச துரோகிகள்
என்று முத்திரை குத்த பார்க்கிறது மத்திய அரசு.

பாராளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க
இன்னும் என்னென்ன ஆயுதங்களை எடுப்பார்களோ தெரியவில்லை.
அவசர நிலை பிரகடனத்தால் அவதிப் பட்டவர்கள் ஜனசங்கத்தினர்
ஆட்சிக்கு வந்தவுடன் இவர்களே அறிவிக்கப் படாத அவசர நிலையை
உருவாக்கலாமா? ‘ஜனநாயக நாட்டில் எதிர்ப்பு இருந்தால்தான் அது
சரியான பாதையில் செல்வதாக இருக்கும்.

எதிர்ப்பு என்பது
குக்கரில் உள்ள சேப்டி வால்வ் போன்றது. வால்வ் இல்லையென்றால்
குக்கர் வெடித்து விடும் . எதிர்ப்பு குரல் கொடுப்பவர்களை ஒடுக்கினால்
அது ஜனநாயகத்துக்கு ஆபத்து ஆகிவிடும்.’ –
நீதிபதி தீபக் மிஸ்ரா சொன்ன வார்த்தைகள் இவை.
ஹிட்லர், முசோலினி , என்று எண்ணற்றோர்
சர்வாதிகார போக்கில் சென்று தோற்கவே செய்தார்கள்.
வென்றதாக வரலாறு இல்லை.
மோடி மட்டும் அதற்கு விதிவிலக்கு ஆகிவிடமுடியாது.
ஆனால் சர்வாதிகாரிகள் திருந்தியதாகவும் வரலாறு இல்லை.
மோடி வரலாறு படைப்பாரா? திருத்திக் கொள்வாரா?

வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் இந்தி பதிப்பிற்கு பரிசு!!!

வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் சாஹித்ய அகாடமி பரிசு பெற்றது.

அந்த நூல்  23 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டு வருகிறது  என்பது வரவேற்கத் தக்க செய்தி.

கூடுதலாக சாஹித்ய அகாடெமிக்கு  அதன் இந்தி மொழிபெயர்ப்பில் உருவான கள்ளிக்காட்டு இதிகாசம் நூலுக்காக இந்த ஆண்டின் சிறந்த இந்தி புத்தக விருது  கிடைத்திருக்கிறது .

Nagaphani Van Ka Itihaas –  என்பது இந்திப் புத்தகத்தின் பெயர்.

இந்த விருதை இந்திய வர்த்தக தொழில் கழகம் வழங்கி உள்ளது.

நமது சிந்தனை தமிழ் கூறும் நல்லுலகத்தின் உள்ளே மட்டும் நின்று விடாமல் பல மொழிகளுக்கும் பரவுவதுதான் சிறப்பு.

அந்த வகையில்  தமிழ் சிந்தனையை பல மொழிகளுக்கும் கொண்டு சென்ற  வைரமுத்து பெருமைக்குரியவர்.

வாழ்த்துக்கள்.