Home Blog Page 68

பாதையை தெளிய வைத்த ஸ்டாலின் – மகிழ்ச்சியில் தொண்டர்கள்!!!

தி மு க – பா ஜ க கூட்டு வந்து விடுமோ என்ற அச்சம் பல சம்பவங்களால் தோற்றுவிக்கப் பட்டிருந்தது.

பிரதமர் மோடி வந்தது அஞ்சலி செலுத்தியது பா ஜ க தலைவர்கள் உறவாடியது எல்லாம் விவாதத்துக்கு இட்டு சென்றது.

கலைஞர் நினைவாஞ்சலி நிகழ்ச்சிக்கு அமித்ஷா வராமல் நிதின் கட்கரியை அனுப்பி வைத்தது முக்கியத்துவம்ஆனது.

வாஜ்பாய் நினைவாஞ்சலி நிகழ்ச்சிக்கு கனிமொழி சென்று வந்தது அரசியல் நாகரிகம் தமிழகத்தில் அரும்பி வருவதன் அடையாளமாக அமைந்தது.

கடைசியில்,   மாநில உரிமைகளை பறித்து மதவெறியை திணித்து இந்தியா முழுவதும் காவி வண்ணம் பூச நினைக்கும் மத்திய பா ஜ க அரசை வீழ்த்திக் காட்டுவதும் கொள்ளையடிக்கும் அ தி மு க அரசை விரட்டி அடிப்பதும் தனது இரு இலக்குகள் என்று சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டதன் மூலம் ஸ்டாலின் திமுக –பாஜக உறவு என்ற வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்.

இப்போது அணிகள் அடையாளம் காணப் பட்டு விட்டன.

திமுக தலைமையில் ஒரு அணி உறுதி.    அடுத்த அணிக்கு யார் தலைமை என்பதில் மட்டுமே குழப்பம். .

கொள்கை சார்ந்த கட்சிகள் இடையே இணக்கம் ஏற்படுவது இயற்கை. கொள்கையே இல்லாமல் தனி நபர் சார்ந்து கட்சிகள் கூட்டணி ஏற்படுத்திக் கொள்வது நல்லதல்ல.

வந்த தண்ணீர் சென்றது கடலுக்குள்? வெட்கப்படாத ஆட்சியாளர்கள்??!!

காவிரி நீருக்கு சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது சாதனை என்றால் வந்த தண்ணீரை பயன் படுத்த வழி இல்லாமல் கடலுக்குள் விட்டதை என்ன சொல்லி அழைப்பது?

அன்றே சொன்னார் குமாரசாமி – உங்களுக்கு தண்ணீர் கொடுத்து

என்ன செய்யப் போகிறீர்கள் ? கடலுக்குள் விடப் போகிறீர்கள் என்றாரே?!

உண்மையாகிவிட்டதே!

ஆண்டுதோறும் செய்ய வேண்டிய குடி மராமத்து பணிகள் தொடர்ந்து

நடந்திருந்தால் இந்த அவலம் ஏற்பட்டிருக்குமா?

இரண்டு முறை மேட்டூர் அணை நிரம்பியது. –

கடை மடைக்கு தண்ணீர் போய் சேரவில்லை !

என்ன கொடுமை இது – யார் காரணம் ?

சமவெளியில் தடுப்பணை எப்படி கட்டுவது என்று கேட்கும்

ஒருவர் தமிழக முதல்வர் ? ! முக்கொம்பும்  அணைக்கரையும் ஏன்

கல்லணையும் சமவெளியில் தானே இருக்கின்றன என்பதை

யாராவது அவருக்கு சொல்லி இருக்கக் கூடாதா?

பின் எப்படி 292  கோடி செலவில்   62  தடுப்பணைகள் கட்டுவோம்

என்று அறிவிக்கிறார்?    இந்த அறிவு முன்பு இல்லாமல் போனது ஏன்?

2014   ம் ஆண்டே ஜெயலலிதா பிரிவு   110  ன் கீழ் சட்ட மன்றத்தில்

அறிவித்ததாம் இந்த திட்டம்.   என்ன செய்தீர்கள் எத்தனை ஆண்டுகளாய்?

மணல் கொள்ளையை தடுக்க எத்தனை உத்தரவுகளை நீதிமன்றங்கள்

இட்டிருக்கின்றன . அவற்றின் மீது ஏன் நடவடிக்கை இல்லை?

கட்சிக்காரர்கள் அடிக்கும் கொள்ளையை தடுக்க முடியாத ஒரு அரசு

இருந்தால் என்ன வீழ்ந்தால் என்ன.

முக்கொம்பில் உடைந்த மதகுகள் மீண்டும் உயிர் பெற எத்தனை

ஆண்டுகள் ஆகுமோ? ஆண்டு தோறும் அறிவிக்கப்பட்ட  திட்டங்கள் நடை முறைப் படுத்தப் பட்டிருந்தால் இந்த அவலம் நிகழ்ந்திருக்காது .

எந்த திட்டமும் இங்கே முறையாக நடைமுறைக்கு வருவதில்லை.

நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல் எல்லாவற்றையும்

இல்லாமல் ஆக்கி விடுகிறது.    இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு

கர்நாடக அரசை குற்றம் சொல்வீர்கள் ?

கேரளாவிற்கும் ஆந்திராவுக்கும் கர்நாடகத்துக்கும் இங்கிருந்து

ஆற்று மணல் செல்வது அவமானமாக உங்களுக்கு படவில்லையா?

இயற்கை அள்ளிக் கொடுக்கிறது.  சிந்திக்காதவர்கள் , ஊழல் பெருச்சாளிகள்

கையில் ஆட்சி அதிகாரம் சிக்கிக்கொண்டு எல்லாவற்றையும்

வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல்வாதிகள்-அதிகாரிகள் ஊழல் கூட்டணி முறிக்கப் பட்டால்தான்

இனி எந்த முன்னேற்றமும் இங்கே சாத்தியம். !

கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்து கொள்வாரா?

கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சிகளில் பா ஜ க காங்கிரஸ், பா ம க, கம்யுனிஸ்டு கட்சிகள் , முஸ்லிம் லீக் , போன்ற முற்றிலும் கருத்து வேறுபாடு உள்ள கட்சிகள் எல்லாம் கலந்து கொள்கின்றன.

இது ஒரு பண்பாடு .   இதற்கு என்ன அரசியல் முக்கியத்துவம் ?

மாநில ரீதியில் தலைவர் என்ற முறையில்  வேறு  ஒரு ஊரில் தமிழிசை கலந்துகொள்கிறார்.

அகில இந்திய அளவில் தலைவர்கள் கலந்து கொள்ளும்  நிகழ்ச்சியில் அமித்ஷா அழைக்கப் பட்டு அவரும் வர ஒப்புதல் தந்ததால் தான் அவர் பெயர் அழைப்பிதழில் இடம் பெற்றிருக்கிறது.

வந்து சாதிக்கலாம் என்று தேதி கொடுத்திருக்கலாம் . பயன் இருக்காது என்று தெளிந்து வேறு யாரையாவது அனுப்பி வைக்கலாம்.

வழக்கம்போல , அமித் ஷா கலந்துகொள்ள மாட்டார் என தெரிய வருவதாக சுப்ரமணிய சாமி ட்வீட் செய்கிறார்.

பா ஜ க அணிக்கு திமுக செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் பா ஜ க அனைத்து சித்து வேலைகளையும் அரங்கேற்றும்.

எதுவும் இங்கு எடுபடாது.

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வழக்கு சி பி ஐ க்கு மாற்றம்?! 4 மாதத்தில் அறிக்கை?!

100  நாட்கள் அமைதியாக நடந்த போராட்ட முடிவில்  13   பேர் அநியாயமாக சுட்டுக் கொல்லப் பட்டனர் தூத்துக்குடியில்.

யார் துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டது என்ற கேள்விக்கு

நேரடியான பதில் கிடைக்க வில்லை உடனேயே!

ஒரு சம்பவத்திற்கு இருநூறுக்கும் மேலான வழக்குகள்

நீதிமன்றம் தலையிட்டு ஒரு வழக்காக்கியது

போராடியவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்

நீதிமன்றம் தலையிட்டு ரத்து செய்திருக்கிறது

மாநில அரசின் மீதான குற்றச்சாட்டை அதுவே

விசாரித்துக் கொள்ளுமா?  எனவேதான் சிபி ஐ

காவல் துறை மக்களுக்கு எதிரான ஏவல் துறையானது

எப்படி ஏன் யாரால்?  எல்லாவற்றுக்கும் பதில் வேண்டும்

மூடிவிட்டோம் என்கிறது தமிழக அரசு

பசுமை தீர்ப்பாயம் நிர்வாகம் செய்ய அனுமதி அளிக்கிறது

செயல்பட முடியாதவர்கள் எதை நிர்வகிக்க போகிறார்கள்?

முழு அனுமதிக்கான முன்னேற்பாடா என்ற ஐயம் தீர்க்க

அப்பீல் போயிருக்கிறது தமிழக அரசு -பாராட்டுவோம்

உச்சநீதி மன்றம் என்ன செய்யுமோ என்ற கவலையும்

தமிழ் மக்களை வதைக்கிறது!  அனில் அகர்வால்

அப்படிப்பட்டவர் ஆயிற்றே ?   ஆமாம்

துப்பாக்கி சூட்டில் இத்தனை பேர் இறந்தபிறகும்

அப்பீல் போனால் அவனெல்லாம் என்ன மனிதனா

என்று கேட்ட ரஜினி இப்போது எங்கே?

அழகிரியின் பேட்டி சொல்லும் செய்தி என்ன?

மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான்

கொல் எனும் சொல்

வள்ளுவம் வகுத்த நெறிக்கு புதிய உரை எழுத விரும்புகிறார் கலைஞரின் மகன் அழகிரி.

பின்னணியில் யார் என்பதுதான் மிகபெரிய கேள்வி.

பின்னணி இல்லாமல் பேசியிருக்க துணிவு வந்திருக்காது!

தந்தை எதை தன் உயிருக்கும் மேலாக மதித்து வாழ்ந்தாரோ அதற்கு ஊறு விளைவிக்கும் நோக்கத்தில் செயல் படும் மகனுக்கு என்ன பெயர் சூட்டுவது?

ஊழல் ஆட்சியில் இருந்து மாநில சுயாட்சிக்கு உயிர் கொடுக்கும்  வகையில்  திமுக  ஆட்சிக்கு வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் திமுகவுக்குள் குழப்பம் எனும் சூழ்நிலையை யார்

தோற்றுவித்தாலும் அவர்களை கலைஞர் மன்னிக்க மாட்டார்.

திமுக தொண்டர்கள் விபரமானவர்கள்.   அவர்களை யாரும் குழப்ப முடியாது என்பது வேறு.

ஆனால் எதிரிகள் இதை எப்படி எல்லாம் பயன் படுத்த முனைவார்கள்.?   அதுவும் மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் தமிழகத்தை திராவிட சித்தாந்த ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்க எதையும் செய்ய காத்திருக்கிறார்கள்.   எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

அப்படி இருக்கும்போது கட்சி எத்தனை கட்டுகோப்புடன் இருக்க வேண்டும்?

கலைஞர் உயிருடன் இருந்த போதே 2014 ன் ஆண்டு ஜனவரி மாதம் 24 ம் தேதி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து  பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டு பின்னர் நிரந்தரமாவும் நீக்கப் பட்டார அழகிரி.

இப்போது அவர் திமுக வில் இல்லை. திடீர் என்று

கலைஞர் நினைவிடத்தில் நின்று கலைஞரின்

உண்மை விசுவாசிகள் என் பக்கம்தான்  என்று

சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

தனி கட்சி தொடங்க போவதில்லையாம்

ஒரு மாதம் கழித்து தன் திட்டத்தை சொல்வாராம்

அதுவரை மக்கள் காத்திருக்க வேண்டுமாம்.

தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி இதுதானா?

குடும்பத்தை விட கட்சியை நேசித்த

கலைஞர் எங்கே? இவர் எங்கே?

கலைஞர் பெயரை சொல்லுகிற உரிமைகூட

இவருக்கு இருக்கிறதா?

கட்சிக்கு கடமை ஆற்றுங்கள் என்று அறிவுரை

கூறிய வீரமணியை -சோறுக்கு அலைகிறவர்

என்று விமர்சிக்கிறார் அழகிரி மகன்!

இவரால் ஒன்றும் ஆகாது என்றாலும் குழப்பத்தை

உண்டாக்க முடியுமே?   அதுதான் தொண்டர்களின் கவலை.

ஊடகங்கள் எத்தனை உற்சாகத்துடன் விவாதிக்கின்றன ?

நோக்கம் எப்போது எப்படி உடையும் விளைவென்ன

என்பதுதானே? நல்லதற்கா விவாதிக்கிறார்கள்?

எதிரிகள் முழு மூச்சுடன் சதி திட்டங்களை

நிறைவேற்ற தொடங்கி விட்டார்கள் என்பதுதான் செய்தி !

எத்தனையோ சோதனைகளை வெற்றிகரமாக சந்தித்த

திமுக இதையும் சந்தித்து வெல்லும்!!!

சுந்தரம் ஐயங்கார் பேரன் சிலை திருட்டு வழக்கில் முன் ஜாமீன் கோரலாமா?

டிவிஎஸ் மோட்டார்ஸ் தலைவர் வேணு சீனிவாசன் சுந்தரம் ஐயங்காரின் பேரன்.

பல ஆலயப் பணிகளின் தர்மகர்த்தா.    அவரே சொல்லுகிறபடி ஸ்ரீரங்கம் கோவில் திருப்பணிகளுக்கு மட்டும் தன் சொந்த செலவாக  25 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார்.   அவர்தான் கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவர்.

அவர் மயிலை கபாலீஸ்வரர் கோவில் திருப்பணி கமிட்டி உறுப்பினராக இருந்த காலத்தில் சுமார் எழுபது லட்ச ரூபாய் கோவிலுக்கு செலவு செய்திருக்கிறார்.

ஆனால் அந்த கோவிலில் இருந்த ஒரு மயில் சிலை ஒன்று சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாம் .

அதன் வாயில் ஒரு இலை இருக்குமாம்.   அது பழுது அடைந்தது என்று புதுப்பிக்க முடிவு செய்து புதிய சிலை ஒன்று செய்திருக்கிறார்கள்.  அந்த புதிய சிலையின் வாயில் பாம்பு இருந்திருக்கிறது.  எனவே அது பழைய சிலை அல்ல என்ற புகார் எழுந்து விசாரணைக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள்.

அந்த புகார் தான் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பதிவாகி பின்னர் சிலை கடத்தல் பிரிவுக்கு மாற்றி இருக்கிறார்கள். அதில் வேணு சீனிவாசன் பெயரும் இருக்கிறதாம்.

தான் கபாலீஸ்வரர் கோவில் பக்தன் . தான் குற்றமற்றவன் எனும் சீனிவாசன் செய்திருக்கும் காரியம்தான் நம்மை திகைக்க வைக்கிறது.

இதுவரையில் அவர் மீது எந்த குற்றமும் சுமத்தப் பட்டதில்லை.

அவர் குற்றம் செய்திருப்பார் என்று நாமும் நினைக்க வில்லை.

ஆனால் அவர் எதற்காக முன் ஜாமீன் கோர வேண்டும் என்பதுதான் நமக்கு புரியவில்லை.

எந்த வழக்காக இருந்தாலும் விசாரிக்கட்டுமே!    விசாரணையில் அவர் மீது குற்றம் நிரூபிக்கப் பட்டால் தானே நடவடிக்கை இருக்கும்.   நிரூபிக்க முகாந்திரம் இல்லை என்றால் ஏன் அவர் கைது பற்றி அச்சப் பட வேண்டும்?

அதுதான் நமக்கு புரியவில்லை.

பொன் மாணிக்கவேல் விசாரிக்கிறார் என்றால் பலருக்கு பயம் வந்து விடுகிறது.   அதில் வேணு சீனிவாசனும் சேருவது வியப்பு.

அவர்க்கு ஆதரவாக வைகோ அறிக்கை கொடுத்திருக்கிறார்.

குற்றம் பற்றியோ விசாரணை பற்றியோ முன்கூட்டியே எதையும் சொல்வதற்கில்லை.

ஆனால் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில்  இருப்பவர்கள் பாமரர்கள் போல் நடந்து கொள்ளக் கூடாது என்பது தான் நமது விருப்பம்.

விசாரணை விரைவில் முடிவடைந்து உண்மை வெளிப்படும் என நம்புவோம்.

திருமுருகன் காந்தி கைது ஒரு ஜனநாயக படுகொலை??!!

குற்றம் செய்திருந்தால் யாராக இருந்தாலும் கைது செய்யப் பட்டு விசாரணை செய்வதில் தவறு இல்லை.   அது கடமையும் கூட.

ஆனால் குற்றங்களை தடுக்கிறோம் என்று மனித உரிமைகளுக்கு கல்லறை கட்டுவதை ஏற்க முடியுமா?

மே 17  இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி  பல பிரச்னைகளை கையாளுகிறவர்.

அவர் மீது 22 வழக்குகள் பதியப் பட்டுள்ளனவாம்.

அவர் என்ன அவ்வளவு பயங்கரவாதியா?  அரசுக்கு எதிரான  பல கருத்துக்களை கொண்டிருப்பவர் என்றால் பரப்புரை செய்வது அவர் கடமை. அதில் அரசுக்கு ஆட்சேபணை இருக்க முடியாது.

அரசை, அரசின் கொள்கைகளை விமர்சிக்கவே கூடாதா?

சமீபத்தில் ஜெனீவாவில் மனித உரிமை சம்பந்தப் பட்ட உரை ஒன்றை அவர் ஐ நா வின் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

அதில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அதில் 13பேர் இறந்தது பற்றியெல்லாம் பேசினாராம்.  அதற்காக அவர் இந்தியா திரும்பி பெங்களூரில் வந்திறங்கியபோது கைது  செய்யப் பட்டிருக்கிறார்.  தேச துரோக குற்றமாம்.

நீதிமன்றம் அவரை ரிமாண்ட் செய்ய மறுத்து காவல் துறை விசாரணைக்காக அனுப்பி இருக்கிறது.  ஐநா வில் பேசியது எப்படி தேச விரோத மாகும் என்று கேள்வியும் எழுப்பி இருக்கிறது.

நீதிமன்றத்தால் விடுதலை செய்யப் பட்ட அவரை விசாரணைக்குப் பின் மீண்டும் வேறு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்கள்.   புழல் சிறையில் இருந்தால் வந்து பார்ப்பார்கள் என்று வேலூர் சிறைக்கு மாற்றி இருக்கிறார்கள்.

இப்படியா ஒரு ஜனநாயக நாட்டில் கருத்துரிமை நசுக்கப் படும்?

நீதி மன்றத்தில் வெளியே வரும் அவரை வலுக்கட்டாயமாக கைது செய்து ஜீப்பில் ஏற்றி அழைத்துச் செல்வதை கண்டு ஏன் எந்த பத்திரிகையும் கண்டித்து எழுதவில்லை. ?

தமிழ் நாட்டில் ஊடகங்கள் எப்படி செயல் படுகின்றன என்பதற்கு இதுவே சான்று.

எதிர்க் கருத்து சொல்பவர்களை எல்லாம் தேச விரோத வழக்கில் சிக்க வைப்பது மிகவும் ஆபத்தான போக்கு.

ரிமாண்ட் செய்ய மறுத்த நடுவர் தன் கடமையை செய்திருக்கிறார்.   ஆனால் அவரது முடிவை  காவல் துறை ஏற்றுக் கொள்ளவில்லை.

சம்மன் அனுப்பி ஆஜராக தவறினால் மட்டுமே கைது போன்ற நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

காவல் துறையின் மதிப்பை இம்மாதிரி நடவடிக்கைகள் சீர்குலைத்து விடும்.

மெரினாவில் அண்ணாவுக்கருகில் இடம் பிடித்தார் கலைஞர் !

கடைசியில் தொண்டர்களின் நம்பிக்கையை தகர்த்து விட்டு ஆகஸ்டு 7 ம் தேதி மாலை   6.10 க்கு கலைஞர் மறைந்தார் என்ற செய்தியை காவேரி மருத்துவமனை வெளியிட்டது.

தமிழகம் அடுத்த நொடி அசைவற்றுப் போனது.

மறுநாள் காலை முதல் ராஜாஜி ஹாலை நோக்கி தொண்டர்கள் படையெடுக்க ஆரம்பித்தனர்.

லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிய ஆரம்பித்தாலும் எந்த அசம்பாவிதமும் நடக்க வில்லை.

மாநில முதல்வர்கள் முதற்கொண்டு பிரதமர் வரை அனைத்துக் கட்சித் தலைவர்களும் அகில இந்திய அளவில் கலைஞரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு தங்கள் மரியாதையை செலுத்தினார்கள்.

நானும் அவருக்கு எனது அஞ்சலியை  ராஜாஜி ஹால் சென்று செலுத்தி விட்டு வந்தேன்.

எடப்பாடியின் அரசு  மெரினாவில் இடம்  கொடுக்க முடியாது என்றும் காந்தி மண்டபம் அருகே இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்குவதாகவும் செய்தி வெளியிட பிரச்னையை நீதிமன்றம் கொண்டு என்றது திமுக.

பா ஜ க சொல்லி இந்த மறுப்பை அ தி மு க அரசு தெரிவித்ததா அல்லது தானே முடிவெடுத்ததா என்பது ஒருபுறம் இருக்க இந்த பிரச்னையில் எடப்பாடி அரசு பெருந்தன்மையுடன் நடந்து கொண்டு இருக்கலாம் என்பதுதான் பொது மக்கள் கருத்து.

பகுத்தறிவு வாதிகள் இங்கே கோலோச்சுவது பா ஜ க வுக்கு பிடிக்காமல் இருக்கலாம்.   ஆனால் தங்களை திராவிட இயக்க கட்சி என்று கூறிக் கொண்டு பெரியாரையும் அண்ணாவையும் படம் போட்டு காட்டுகிறவர்கள் கொஞ்சமாவது பகுத்தறிவு கொள்கைக்கு ஆதரவாக இருந்திருக்க வேண்டாமா?   ஆம்.  கலைஞருக்கு  மெரினாவில் இடம் கொடுக்க ஆதரவு அளிப்பதே  அவர்கள் பகுத்தறிவு கொள்கைக்கு ஆதரவாளர்கள் என்பதற்கு ஆதாரமாக இருந்திருக்கும்.

ஜெயலலிதா சமாதியை எதிர்த்து வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் அந்த வழக்குகள் திரும்ப பெறப் பட்டன.

நீதிமன்றம் அனுமதி  அளிக்க பிரச்னை தீர்க்கப் பட்டு கலைஞருக்கு அண்ணா சமாதி அருகேயே இடம் ஒதுக்கப் பட்டு அங்கே வைக்கப் பட்டார் கலைஞர்.

நீதிமன்றம் தலையிட்டு இருக்கா விட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்பட்டிருக்குமோ?

‘    ஓய்வறியாமல் உழைத்தவன் இதோ இங்கே  ஓய்வெடுக்கிறான் ‘ என்ற வாசகங்கள் பொறிக்கப் பட்ட சந்தன பேழையில் ஓய்வெடுக்கப் பட்டார் கலைஞர்.

ஆக அண்ணாவுக்குப் பின்புறம் கலைஞர்   எம்ஜியாருக்கு பின்னால் ஜெயலலிதா என்று நான்கு பேரும்  இப்போது மெரினாவில் உறங்குகிறார்கள்.

கலைஞர் இல்லாமல் இனி தி முக இயங்கினாலும் அவரது தாக்கம் இல்லாமல் இயங்க முடியாது.

6863   நாட்கள் கலைஞரும்

5239  நாட்கள் ஜெயலலிதாவும்

3634  நாட்கள் எம்ஜியாரும்

3432  நாட்கள் காமராஜரும்

முதல் அமைச்சராக பணியாற்றி இருக்கிறார்கள்.    ஆக அதிக நாட்கள் முதல் அமைச்சர் ஆக பணி புரிந்தவர் கலைஞர்தான்.

ஒன்று மட்டும் உறுதி.

மறைந்தும் அவர்தான்  உந்து சக்தியாக நின்று

திமுகவை ஆட்டுவிக்கப் போகிறார்.

எதிரிகளே இல்லாமல் ஆன கலைஞர்!! போராட்டமே வாழ்க்கை என்பதை உணர்த்தும் கலைஞர்!!!

கலைஞர் கருணாநிதி  என்ற ஒற்றை மனிதரை சுற்றி கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக  தமிழக அரசியல் சுற்றி சுழன்று கொண்டே இருக்கிறது.

அவர் மட்டும் வெற்றியானாலும் தொல்வியானாலும் துவளுவதே இல்லை.

சாமானியர்களின் குரலாகவே அவரது குரலும் எழுத்தும் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருந்தது.

சாதனைகளின் பட்டியல் நீண்ட நெடியது.

அவர் எதிர் கொண்ட எதிரிகளின் பட்டியலும் மிக நீண்டது.

எல்லாக் காலத்திலும் அவரை யாராவது விமர்சித்துக் கொண்டே இருப்பார்கள்.

இப்போதுதான் அவரை யாரும் விமர்சிப்பது இல்லை.   இது ஏதோ ஒரு அரசியல் நாகரிகம் கருதி மட்டும் இல்லை.

அவரது உழைப்பின் விளைவுகளை எல்லாரும் நினைத்துப் பார்த்து அவர் ஒரு கட்சிக்கு மட்டும் தலைவர் அல்ல தமிழ் நாட்டவர் அனைவருக்கும் தலைவர் என்ற உணர்வு தான் அவரை விமர்சிப்பதை தடுக்கிறது.

கடவுள் நம்பிக்கை இல்லாத கலைஞருக்காக ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறார்கள்.   அதுவும் எல்லா மத சாமிகளையும்.

தமிழ் தன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடிந்ததில் கலைஞரின் பங்களிப்பு மிக  அதிகம்.

வசனகர்த்தா , பாடலாசிரியர், நடிகர், சீர்திருத்தவாதி , எழுத்தாளர்,  இலக்கியவாதி , 13 முறை தோல்வியே சந்திக்காத சட்ட மன்ற உறுப்பினர்,  ஐம்பதாண்டுகளாக ஒரு கட்சியின் தலைவர்,  ஐந்து முறை முதல் அமைச்சர் என்று பன்முகத் தன்மை கொண்ட தலைவர் கலைஞரைப் போல் யாரும் இல்லை.    இனி தோன்றப் போவதும் இல்லை.

தமிழ்த்தாய் வாழ்த்தும் , செம்மொழி சிறப்பும் , வள்ளுவர் கோட்டமும் , திருவள்ளுவர்  சிலையும் , சென்னையும், சமத்துவபுரங்களும் , சத்துணவு திட்டமும், அவசரநிலையின்போது அவர் காட்டிய எதிர்ப்பும், பிற்பட்டோர் மிக பிற்பட்டோர் அருந்ததியர் இட ஒதுக்கீடும், இந்தி திணிப்பு எதிர்ப்பும், தொய்வில்லாத வர்ணாசிரம எதிர்ப்பும், பார்ப்பனர் அல்லாதோர் அர்ச்சகர் ஆன வரலாறும், சாதி மறுப்பு திருமணங்களும், சுயமரியாதை திருமணம் சட்டப்படியானதும் இன்னும் எண்ணற்ற சாதனைகளும் கலைஞரின் புகழை உயர்த்திப் பிடித்துக் கொண்டே இருக்கும்.

காவேரி மருத்துவனை வெளியே இருந்து ‘   எழுந்து வா தலைவா ‘ என்று தினமும் எழும்பும் தொண்டர்களின் குரல் அவரது காதில் கேட்காமலா போகும்?

இளவயதில் தொடங்கிய போராட்டத்தை இப்போது மருத்துவ மனையில் தொடர்கின்றார் கலைஞர் .

மீண்டு மீண்டும் வருவார்!!!

தலித் அர்ச்சகரை ஏற்றுக் கொண்ட திருச்சி புத்தூர் கிராமம் !!!

கலைஞர் கொண்டு வந்த அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் வெற்றி பெறத் துவங்கி விட்டது.

திருச்சி புத்தூர் கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் நாற்பதாண்டுகளாக பூட்டிக் கிடக்கிறது.    நாயுடு , வெள்ளாளர், முத்தரையர் ரெட்டி சாதி மக்களை அதிகமாக கொண்ட ஊரில் ய யார் இந்த கோவிலை நிர்வகிப்பது என்பதில் தகராறு.

அறநிலையத்துறை  யின்  கீழ் இந்த கோவில் இருக்கிறது.

கலைஞர் திட்டத்தில் ஓராண்டு சான்றிதழ்  பயிற்சி பெற்ற  206  பேரில் கரியமாணிக்கம் ஊரை சேர்ந்த தலித் இளைஞர் சிவசங்கரனும் ஒருவர்.    பட்டதாரி யான இவர் வேலையில்லாமல் இருந்து வந்தார்.

திருவரங்கம் கோவில் இணை ஆணையர் இவரை அழைத்து இந்த கோவிலில் மாதம் ரூபாய் முப்பதுக்கு வேலையில் அமர்த்தியிருக்கிறார் .

ஆறே மாதத்தில் உள்ளூர் இளைஞர்களையும் பெரியவர்களையும் சேர்த்துக் கொண்டு கோவிலை புதுப்பித்துக் கட்டியதுடன் நில்லாமல் குடமுழுக்கும் செய்திருக்கிறார்.

இடையில் இவர் தலித் என்று தெரிந்தவுடன் சிலர் இவரை ஒதுக்க ஆரம்பித்துள்ளனர்.   ஆனால் ஊரில் பெரும்பாலானவர்கள் இவர்க்கு ஆதரவு அளித்த துடன் அக்கம் பக்கத்து கிராம மக்களும் பெருமளவில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டனர்.

பயிற்சி பெற்ற இதர 204  பேரையும்  தமிழக அரசு உடனே  அர்ச்சகர்கள் ஆக பணி அமர்த்துவதுடன்   தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சி வகுப்புகளை நடத்திக் கொண்டே இருக்க வேண்டும்.    அதில் தமிழ் அர்ச்சனைகள் கட்டாயம் இடம் பெற வேண்டும்.

மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்திய புத்தூர் இதர கிராமங்களுக்கும் பரவ வேண்டும்.

கோவிலில் தமிழ் பாசுரங்களை பாடுகிரார்களா என்று தெரிய வில்லை.

மாற்றங்கள் சிறிது சிறிதாக வாவது பரவட்டுமே!!