Home Blog Page 69

வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது குற்றமா? ஹீலர் பாஸ்கர் கைது ஏன்?

வீட்டிலேயே யு டியூபை பார்த்து பிரசவம் பார்க்க முயற்சித்த திருப்பூர் கிருத்திகா பலியானார்.   குழந்தை நலமுடன் இருக்கிறது.   ஆனால் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு தாய் பலியானார்.  கணவர் மீதும் உடந்தையாக இருந்த இருவர் மீதும் வழக்கு பாய்ந்திருக்கிறது.

ஆனால் தேனீ அருகே ஒரு என்ஜினியர் கண்ணன் என்பவர் தன் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்து ஆண் குழந்தை பிறந்தது . தாயும் சேயும் நலம்.

ஆனால் கண்ணன் தன் மனைவி தனக்கு தானே பிரசவம் பார்த்துக் கொண்டதாகவும் இயற்கை வழி பிரசவம் ஆக உணவு பயிற்சி போன்ற வழிமுறைகளை பின்பற்றியதுடன் ஸ்கேன் போன்ற மருத்துவ சோதனைகளையும் மேற்கொண்டு பாதுகாப்பாக இருந்திருக்கிறார்.

ஆனால் அவரது தந்தை மீது தகாத வார்த்தைகள் பேசியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே ஹீலர் பாஸ்கர் என்பவர் கோவையில் இயற்கை பிரசவம் ஒரு வரம் என்று பொதுமக்களுக்கு பிரச்சாரம் செய்வதற்காக ஆகஸ்டு மாதம்  26 ம் தேதி ஒரு முகாம் இலவசமாக நடத்த விளம்பரம் செய்திருந்தார்.

காவல்துறையினர் அவரை ஏமாற்ற முயற்சித்தல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது  செய்திருக்கிறார்கள்.

இயற்கை  மருத்துவம் பிரச்சாரம் செய்வது தவறா?    என்ன சொல்லி மக்களை ஏமாற்றினார்?    என்ன பயன் அடைந்தார்?   மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை காவல் துறைக்கு இருக்கிறது.

நாட்டில் எழுபது சதம் பிரசவம்  அரசு மருத்துவ மனைகளில் தான் நடக்கின்றன.

முப்பது சதம் மட்டுமே தனியார் மருத்துவ மனைகளில்  நடக்கின்றன.

எதற்கெடுத்தாலும் உடனே அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்து விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு.   வருவாய்க்காக இதை செய்கிறார்களாம்.

மாற்று முறை மருத்துவத்தை ஆதரிக்க வேண்டிய அரசு மிரட்டல் வழிமுறைகளை மேற்கொள்வது கண்டிக்கத் தக்கது.

ஹீலர் பாஸ்கர் தவறு ஏதும் செய்யாத பட்சத்தில் உடனே அவரை  விடுதலை செய்ய வேண்டும்.

மக்களுக்கு நலம் போதிக்கும் பல வாழ்க்கை வழிமுறைகளை அவர் நீண்ட வருடங்களாக பிரச்சாரம் செய்துவருகிறார்.

அதில் உடன்பாடு இல்லாதவர்கள் அதை பின்பற்ற வேண்டியதில்லை.   ஆனால் அதற்காக பிரச்சாரம் செய்யவே கூடாது  என்பது கருத்து சுதந்திரத்தை முடக்கும் செயல் ஆகும்.

தி.மு.க கூட்டணியை உடைக்க தினகரன் முயற்சி?!

மக்களிடம் மதிப்பிழந்து நிற்கிறது இ பி எஸ் – ஓ பி எஸ் அரசு.

இவர்களால் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது.

திருப்பரங்குன்றம் இடைதேர்தலில் இவர்களின் பலம் வெளிறிவிடும்!

அதற்கு முன் உள்ளாட்சி தேர்தல் கட்டியம் கூறிவிடும்

உயர்நீதி மன்றம் கெடு விதித்து விட்டதே தேர்தல் நடத்த?

திமுக -காங்கிரஸ் கூட்டணி வலுவாக வளர்ந்து வருகிறது

பேர் சொல்லும் கட்சிகள் எல்லாம் ஸ்டாலின் தலைமையில்

இந்நிலையில் திமுக கூட்டணி யை விட்டு விட்டு வந்தால்

காங்கிரசுடன் கூட்டு சேர தயார் என்று தினகரன்

பெங்களூரில் ஊதிப் பார்த்திருக்கிறார்.

ராகுலை திருமாவளவன் சென்று பார்த்தது

அடுத்த பிரதமர் ராகுலா என்றதற்கு  தேர்தல் வரட்டும்

என்று ஸ்டாலின் பதில் சொன்னது

என்று சிலபல கணக்குகளை  வைத்து தினகரன்

சித்து விளையாடி பார்த்திருக்கிறார்.

காங்கிரசோ கம்யூனிஸ்டுகளோ யாரும் மயங்கப் போவதில்லை

இது சூழ்ச்சிகளின் காலம்.

யாரையாவது வீழ்த்த வேண்டும் என்றால்

அவர்களது எதிர்ப்பு வாக்குகளை பிரிப்பது

காலங்காலமாக பார்க்கும் நடைமுறை

சென்ற முறை திமுக ஆட்சிக்கு வர முடியாமல்

போனது  திமுக அதிமுக இல்லாத அணி

என்ற பெயரில் உருவான மக்கள்நல கூட்டணி

அது பிரித்த அதிமுக எதிர்ப்பு வாக்குகள்

இம்முறையும் அதே சூழ்ச்சி வேறு உருவத்தில் வரலாம்

மீண்டும் ஒருமுறை  பா ஜ க வந்தால் இனி

ஜனநாயகம் கடந்த காலம்தான் என்ற பயம்

எல்லாருக்கும் இருக்கும் வரையில்

தி மு க கூட்டணியை யாரும் உடைக்க முடியாது.

சிலை திருட்டை கண்டுபிடிக்கும் பொன்.மாணிக்கவேலை விரட்ட ஏன் எடப்பாடி அரசு முயற்சிக்கிறது?

சிலை கடத்தல் வழக்குகளை சி பி ஐ வசம் ஒப்படைக்க எடப்பாடியின் அரசு அரசாணை பிறப்பித்திருப்பது ஆச்சரியமில்லை.

தொடர்ந்து அவரை இந்த துறையிலிருந்து விரட்ட அரசு முயற்சித்து உச்ச நீதி மன்றத்தின் தலையீட்டால் அவர் உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வருகிறார்.

திடீரென்று அவர் அறநிலையத்துறை துணை ஆணையர் கவிதாவை காஞ்சிபுரம் கோவில் சிலையில் தங்கம் கலக்காமல் மோசடி செய்த வழக்கில் கைது செய்ததும் பிரச்னை சூடு பிடித்தது.

பதவி ஏற்றதும் காணாமல் போன  250  கோவில் சிலைகளை மாணிக்கவேல் மீட்டிருக்கிறார்.

உயர்நீதி மன்றம் 21.07.2017  அன்று பல உத்தரவுகளை பிறப்பித்து விசாரணை நடைபெற கோரிய நேரத்தில் அவைகளில் பெரும்பான்மை உத்தரவுகளை அரசு நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவது பற்றி எந்த விளக்கமும் இல்லை.

கவிதா தான் கமிஷனர் சொன்னதை தான் செய்தேன் என்று வாக்குமூலம் கொடுத்ததாக செய்திகள் வருகின்றன.

அடுத்து அடுத்து  எந்த அதிகாரி அல்லது அரசியல்வாதி மாட்டுவாரோ என்ற நிலையில் அரசு ஏன் இந்த திடீர் முடிவை எடுக்க வேண்டும்?

எதிர்காலத்தில் வரும் வழக்குகளையும் சி பி ஐ விசாரிக்கும் என்றால் சிலை தடுப்பு பிரிவே தேவையில்லையா?

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கும் குட்கா வழக்கிற்கும் சி பி ஐ விசாரணை வேண்டும் என்றால் மறுக்கும் எடப்பாடியின்  அரசு சிலை கடத்தல் வழக்குகளை மட்டும் மாற்றத் துடிப்பது ஏன்?

பொன். மாணிக்கவேல் வரும் நவம்பர் மாதத்தில் ஒய்வு பெறுகிறார்.   அதுவரை விசாரணையை கிடப்பில் போட்டால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற திட்டமே காரணம் என்று எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

ஏனென்றால் சி பி ஐ உடனே எடுத்து விசாரிக்க முடியாது.    சி பி ஐ ஏற்கனெவே ஆட்கள் பற்றாக் குறையால் தத்தளித்து வருகிறது.

மொத்தம 7274  அதிகாரிகள்.   அதில்    1594   காலியிடங்கள் நிரப்பப் படவில்லை.     வருடத்திற்கு  700 – 1000  கிரிமினல் வழக்குகளையே சி  பி  ஐ ஆல் கையாள முடியும்.

கொள்கை முடிவு எடுத்து அரசாணை வெளியிட்டதால் நீதி மன்றம் தலையிடாது என்று திட்டமிட்டு இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டிருக்கிறது.

ஆனால் முன்பே நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடை  பெறுவதால் இந்த வழக்கு விசாரணையை சி பி ஐ க்கு நீதிமன்றம் மாற்றும் வாய்ப்புகள் குறைவு.

அரசு பல்டி அடித்து நடப்பு வழக்குகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவே விசாரிக்கட்டும் என்று சொல்லலாம் .

எது நடந்தாலும் இந்த அரசு யாரையோ காப்பாற்ற முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டில் இருந்து மீள முடியாது.

ராம கோபாலன் சி பி ஐ வேண்டாம் என்கிறார்.   ஆனால் கி வீரமணி சி பி ஐ வேண்டும்  என்கிறார்.

அரசை , அறநிலையத்துறை யை ஆலயத்தை விட்டு விரட்ட நினைப்பவர்கள் பார்ப்பனர்கள்.

ஏனென்றால் அப்போதுதான் அவர்கள் ஆட்சி ஆலயத்துக்குள் முழுமையாகும்.                                             இதுவரை அதற்கு இடம் கொடாமல் இருந்த ஆட்சியாளர்கள்

சிலை  கடத்தல் வழக்குகளை வெற்றிகரமாக நடத்தா விட்டால்

அதையே சாக்காக  வைத்து அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு

என்ற கூச்சலை மீண்டும் எழுப்புவார்கள்  பார்ப்பனர்கள்

போராடி பெற்ற உரிமைகளை  இந்த ஊழல் ஆட்சியாளர்களால்

இழந்து விடுவோமோ என்ற அச்சம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

நீதிமன்றம் அதற்கு இடம் தராது என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்!!

பெரியார் -கலைஞர் கனவு நனவானது; முதல் பிராமணர் அல்லாதார் அர்ச்சகர் ஆக நியமனம்?

அனைத்து தரப்பினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என பெரியார்  1969  ல் தொடங்கிய போராட்டம்

கலைஞர் ஆட்சிக்கு வந்தபிறகு  அவரால் 1970 ம் கொண்டு வரப்பட்ட சட்டம் உச்சநீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு

மீண்டும்  அவரால்  2006 ல் சட்டம்  கொண்டு வரப்பட்ட சட்டம் ஆகம விதிகளுக்கு உட்படாத கோவில்களில் எல்லாரையும் நியமிக்கலாம் என்ற உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு பிறகு ,

கலைஞர் ஆட்சியில் அர்ச்சகர்  பயிற்சி  பெற்ற 206  பேரில் ஒருவருக்கு

2018ல் இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள மதுரை தல்லாகுளத்தில் உள்ள ஐயப்பன் கோவில் அர்ச்சகராக பார்ப்பனர் அல்லாத ஒரு மிகவும் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப் பட்டு

ஒருவழியாக வெற்றி பெற்றுள்ளது.

அ தி மு க அரசுக்கு இந்த அளவாவது கொள்கை பிடிப்பு இருப்பது வரவேற்கத்தக்கது.

ஏன் இன்னும் மிச்சம் உள்ள 205  பேருக்கு வேலை வழங்க வில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

கேரளாவில் பணி காலியாக இருந்த இடங்களில்  ஐம்பது சதம்  இடங்களுக்கு பார்ப்பனர் அல்லாதாரை அர்ச்சகர் களாக நியமித்து இடது சாரி அரசு சாதனை புரிந்துள்ளது.

மதுரையில் நியமிக்கப்பட்ட அந்த அர்ச்சகர்    யார் அவர் பெயர் என்ன என்பதையெல்லாம் அரசு சொல்லவில்லை.

அதனால் பிரச்னை வரலாம் என்ற பயமாம்.

இவர்கள் எப்படி இந்த முற்போக்கான நடவடிக்கையை தொடர்வார்கள்?

யாரோ பக்தர் போர்வையில் சிலர்  செயற்கையாக ஆட்சேபிக்க இந்த திட்டத்தையே முடக்க சதியா என்ற சந்தேகமும் எழுகிறது.?

இல்லையேல் கேரளாவைப்போல் பணி காலியாக உள்ள இடங்களில் எல்லாம் பயிற்சி பெற்றவர்களை நியமித்து இருக்கலாமே?

ஏன் இந்த ஒற்றை நியமனம்?

எல்லா பெரிய கோவில்களிலும் அனைத்து தரப்பினரும் அர்ச்சகர் ஆக பணி நியமனம் பெற உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு பக்தர் பேரவைகள் முன் முயற்சி எடுக்க வேண்டும்.

நடிகை ஸ்ரீ ரெட்டியின் பாலியல் புகார்கள் சட்டப்படி செல்லுமா?

தெலுகு நடிகை ஸ்ரீ ரெட்டி சிலகாலமாக தெலுகு தமிழ் நடிகர் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி வருகிறார்.

தன்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு பட வாய்ப்பு தராமல் ஏமாற்றிய நடிகர்கள் இயக்குனர்கள் பட்டியலையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

இவர் மீது செக்ஸ் புகார் கூறி பணம் பறிக்க முயற்சிப்பதாக நடிகர் இயக்குனர் வாராகி புகார் கொடுக்க அவர் மீது இவர் என்னை விலைமாது என்று கூறியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்திருக்கிறார்.

அறைக்குள் நடப்பதை அம்பலத்துக்கு கொண்டு வந்தவர் என்று வேண்டுமானால் ஸ்ரீ ரெட்டி  மீது பாராட்டு தெரிவிக்கலாமே தவிர அவரது குற்றச்சாட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தக்கதுதானா ?

தன்னை கற்பழித்தார்கள் என்று அவர் புகார் கொடுக்க வில்லை.   ஏனென்றால் அது இந்திய தண்டனை சட்டம் பிரிவு  375  ல் சொல்லப்பட்ட விளக்கங்களுக்குள் இவர் குறிப்பிடும் சம்பவங்கள் வராது என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது.

விருப்பத்துக்கு மாறாக , சம்மதம் இல்லாமல், அச்சத்தில் ஆழ்த்தி சம்மதம் பெறல், கணவன் இல்லையென்று தெரிந்தே ஆனால் தான்தான் கணவன் என்று நம்பசெய்து பெற்ற சம்மதம் மனநிலை சரியில்லாதபோதோ மயக்க மருந்துகள் செலுத்தியோ பெற்ற சம்மதம், பதினாறு வயதுக்குள் இருக்கும்போது பெற்ற சம்மதம் ஆகிய விதி விலக்குகள் சம்பவத்தை குற்றம் என வரையறைப் படுத்தாது.

பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றினார்கள் என்றால் ஏன் அப்போதே நடவடிக்கை எடுக்க வில்லை. ?

எத்தனை பேரிடம் வேண்டுமானாலும் இவர் ஏமாறுவார்  சட்டம் தானாக வந்து காப்பாற்றுமா?

ஒன்று தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை கோர வேண்டும். அதாவது  பட வாய்ப்பு வேண்டாம் தண்டனை பெற்று தருவேன் என்று நடவடிக்கை கோரவேண்டும்.    இதுவரை அவர் எவர் மீது தண்டனை கோரி புகார் கொடுத்திருக்கிறார் ?

இல்லையென்றால் இனிமேல் ஆவது எச்சரிக்கை ஆக இருக்க வேண்டும்.

பாரதிராஜா சொல்வதுபோல் ஊசி  இடங்கொடாமல் நூல் நுழைய முடியாது அல்லவா?

பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவது ஸ்ரீ ரெட்டி கையில்தான் இருக்கிறது.

ஒருமுறை நடந்தால் விபத்து! தொடர்ந்து நடந்தால் கொலைகள்!! யார் பொறுப்பு?

பத்து நாளில் ஏழு பேர் மரணம்- மூன்று சம்பவங்களில்??!!

சென்னை மின்சார ரயிலில்  நடந்த இறப்புகள்

வெறும் விபத்துக்கள் தானா அதற்கும் மேலா?

ரயிலுக்கும் கட்டுமானத் திற்கும் ஏழடி இடைவெளி  இருந்தால் போதும்

என்றாலும் முதல் சம்பவத்தில் ஒருவர் இறந்தவுடன்

கண்டிப்பு காட்டியிருக்க வேண்டாமா ரயில் நிர்வாகம்?

தொத்திக்கொண்டு செல்வது தடை செய்யப் பட்டதாயிருந்தலும்

ஏன் கதவுகள் அமைக்க வில்லை என்ற கேள்விக்கு என்ன விடை?

வேறு வழியில்லாமல் தானே ரயிலில் செல்கிறார்கள்

அதற்காக நீங்கள் விதி மீறினால் நாங்கள் பொறுப்பல்ல என்பீர்களா?

மனசாட்சியே இல்லாதவர்கள் நிர்வாகிகளா?

முதல்வர் அறிவித்த ஒரு லட்சம் யாருக்கு என்ன நிவாரணம் தரும்?

உயிரைப் பறித்த கட்டுமானம் ஏன் இன்னும் அகற்றப் படவில்லை?

விபத்துகளை தடுக்கத் தவறியவர்கள் தண்டிக்கப் பட்டால் தான்

விபத்துகள் குறையும்.

நிர்மலாவிடம் அவமானப் பட்டு திரும்பிய ஓ பி எஸ் ?!

தமிழகத்தின்  துணை முதல்வர்  ஓ பி எஸ் – நேரம் கொடுக்கப்படாமல்

சந்திக்க சென்றதாகவே இருக்கட்டும்

அறை வாசல்  வரை அனுமதித்து காக்க வைத்துவிட்டு

நேரத்தில் மைத்ரேயனை மட்டும் உள்ளே  அழைத்துக் கொண்டு

ஓ பி எஸ் ஐ சந்திக்க மறுத்து திருப்பி அனுப்பினாரே நிர்மலா

என்ன காரணமாக இருக்கும்?

மோடிக்கும் அமித் ஷாவுக்கும் தெரியாமலா இது  நடக்கும்?

நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பில்

கேட்காமலேயே ஆதரித்து வாக்களித்ததற்கு இப்படியா தண்டிப்பது?

தனிப்பட்ட முறையில் ஏர் ஆம்புலன்ஸ் கொடுத்து சகோதரருக்கு

உதவிதற்கு  நன்றி சொல்ல என்று உண்மையை உடைத்து விட்டாரே

என்ற கோபமா?

சொத்துக் குவிப்பு வழக்கில் ஏன் சி பி ஐ விசாரணைக்கு

உத்தரவிடக் கூடாது  என்று உயர் நீதி மன்றம் கேள்வி கேட்ட

நிலையில் ஏன் நமக்கு இந்த ஆள் சகவாசம் என்ற அச்சமா?

மோடி சொன்னதால் இணைந்தேன் என்று மார் தட்டியவருக்கு

ஏன் இந்த சோதனை?

கே பி  முனுசாமி மனோஜ்  பாண்டியன் மைத்ரேயன் என்று

தன் அணியை மட்டும் கூட்டிச் சென்றது அவர்களுக்கு பிடிக்கவில்லையா?

துணை முதல்வரை பார்க்க விருப்பமில்லை

எம் பி சத்யபாமா அன்றே பார்க்கிறார்  நிர்மலாவை .

நாளை தங்கமணியும் வேலுமணியும் பியுஷ் கோயலை பார்க்கிறார்கள்

இது என்ன புதுவித கண்ணாமூச்சி விளையாட்டு

புலம்ப வைத்து  விட்டாரே நிர்மலா

விமான நிலையத்தில் சொன்னாரே ஓ பி எஸ் அண்ணா சொன்னதை

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று

அது இப்படி அவமானப் படுத்தப் பட்டதற்கா சொன்னார் ?

கொள்கைப்போரில் எதிர்கொள்ளும் தோல்விகளுக்கு

சொன்னதை  இப்படி கொள்ளையடித்து தப்பிக்க  முயலும்போது

எதிர்கொள்ளும் அவமானங்களையும் சேர்க்கலாமா ?

இனி ஓரங்கட்டப் படுவார் ஓ பி எஸ் என்பது

நிதர்சனமாகி விட்டது.   ஓரங்கட்டுவது இ பி எஸ் ஆ

மத்திய அரசும் சேர்ந்தா என்பது விரைவில்

வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

இன்னும்  வண்ண வண்ண வேடிக்கை காட்சிகள்

அ தி முகவில் அரங்கேறும் என்பது மட்டும் நிச்சயம்.

எப்படி அடித்தாலும் அழ மாட்டோம் என்று

அடிமை சேவகம் செய்தோருக்கு இதுதான் பரிசு

என்றாலும்

ஒரு தமிழ் நாட்டு துணை முதல்வருக்கு  இழைக்கப் பட்ட

அவமானம் கொஞ்சம் சுடத்தான் செய்கிறது.

சூழ்ச்சி வலை விரிக்கும் பா ஜ க தமிழ் சமுதாயத்தின்

மீது தொடுக்கப் போகும் அடுத்த காட்ட தாக்குதல்

என்ன யார்  யாரெல்லாம் கோடரிக்காம்புகள்

ஆக்கப்  படுவார்கள்?

சகிக்க முடியாதது ; அமைச்சர் ஓ பி  எஸ் ஐ சந்திக்கவில்லை’

என டிவிட்டர் போட்டதுதான்

இ பி எஸ் வாய் திறக்க வில்லையே

மெளனமாக மகிழ்கிறாரா?

தேர்தல் நெருங்க நெருங்க

அடிமைகளுக்கு சோதனைகள் தான் !!!

 

 

 

 

மத சார்பற்ற, தனி நபர் உரிமையை மதிக்கும் நாடுகள் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றிருக்கின்றன- ஆய்வில் முடிவு!

பிரிஸ்டல் பல்கலைக்கழகம் டேமியன் ரக் தலைமையில் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.

பொருளாதார வளர்ச்சிக்கு எந்தெந்த அம்சங்கள் ஒரு நாட்டிற்கு உதவி இருக்கின்றன?

எல்லா நாடுகளின் மத நம்பிக்கைகள் அவற்றின் உள்நாட்டு மொத்த உற்பத்தி ஆகியவை அளவு கோள்களாக எடுத்துக் கொண்டு ஆராய்ந்தார்கள் .

மதத்திற்கும் வளத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்தார்கள்.  ஒன்று தெரிந்தது.

ஆம்.  மிகவும் வறுமையில் உள்ள நாடுகள் தான் மிகவும் மதம் சார்ந்த நாடுகளாக இருக்கின்றன.

பொருளாதார வளம் மத சார்பின்மைக்கு இட்டு  செல்லவில்லை.   மாறாக மத சார்பின்மைதான் பொருளாதார வளத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது .

அதே சமயம் வெறும் மத சார்பின்மை மட்டும் போதாது.

அதோடு கூட தனி நபர் உரிமைக்கு தரப்படும் மரியாதையும்  இணைந்து கொள்ள வேண்டும்.

எதனால் இது ஏற்பட்டது என்பதை அரிதியிட்டு கூற முடியாவிட்டாலும்  ஒன்றை உறுதியாக கூறுகிறார்கள். அதுதான் சமீப காலத்தில் ஏற்பட்ட மதசார்பின்மைக்கு பொருளாதார வளர்ச்சி மட்டுமே  காரணம் என்று கூறமுடியாது என்பதே.   வேறு பல காரணங்களும் இணைந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

அதே நேரத்தில் தனி நபர் சுதந்திரத்திற்கும் சகிப்புத் தன்மைக்கும் கொடுக்கப் படும் முக்கியத்துவம்தான் , மத சார்பின்மையை விட, பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருந்துள்ளது என்பது உண்மை.

சகிப்புத் தன்மைதான் சமுதாயத்தின் வெற்றிக்குத் துணை என்பதை மட்டும் யாரும் மறுக்க முடியாது.

மத தீவிர வாதிகள்தான் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கிரண் பேடியீன் அராஜகம்! நிபந்தனை விதித்து நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க உரிமை உண்டா?

புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண் பேடியின் அராஜகம் உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.

மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்காமல் மூன்று பா ஜ க பிரமுகர்களை சட்ட மன்ற உறுப்பினர்களாக நியமித்தார்.

அவர்களின் தகுதி பற்றி கேள்வி எழுப்பிய மாற்றுக் கட்சியினர் தொடுத்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து நியமனம் செல்லும் என தீர்ப்பளித்தது.

சட்ட மன்றம் நடந்து கொண்டிருந்தபோது அவர்களை அனுமதிக்க சபாநாயகர் மறுத்தார்.

அவரது நடவடிக்கை சரியா சரி இல்லையா என்பது வேறு .    ஆனால் அவர்களை அனுமதிக்க கூடாது என்பதற்காகவே சட்ட மன்றம் ஒத்தி வைக்கப் பட்டது.

யார் செய்யும் அரசியல் சரி என்பது இருக்கட்டும்.

பிரச்னை உச்ச நீதி மன்றம் சென்றது.   அங்கு உச்ச நீதி மன்றம் ஏன் அவர்களை அனுமதிக்க கூடாது என்று கேள்வி கேட்டு விட்டு அவர்களை அனுமதிக்கலாம் என்று ஒரு கருத்தை மட்டும் வெளியிட்டு விட்டு விசாரணைக்கு வழக்கை  ஒத்தி  வைத்தது.

ஆக பிரச்னை உச்ச நீதிமன்றத்துக்கு சென்று விட்டது.    உச்ச நீதி மன்றத்தின் கருத்தை சபாநாயகர் மதிக்க கடமைப் பட்டிருக்கிறாரா என்பது அடுத்து வர இருக்கும் விசாரணையில் உச்ச நீதி மன்றமே தீர்மானிக்கும்.

விசாரணை முடியும் வரை உச்சநீதி மன்றம் தெரிவிக்கும் கருத்து எந்த அளவு கட்டுப் படுத்தும் என்பதையும் உச்ச நீதி மன்றமே தான் தீர்மானிக்க வேண்டும்.

இந்நிலையில் துணை நிலை ஆளுநர் பேடி நிதி மசோதாவுக்கு தர வேண்டிய ஒப்புதலை தராமல் இழுத்தடித்தார்.   அதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கூட போட முடியாத நிலையை தோற்றுவித்திருக்கிறார் .

பிரச்சினை பெரிதானவுடன் உடனே ஒரு ஒப்புதலை கொடுத்து விட்டு அதனோடு ஒரு நிபந்தனையும் விதித்திருக்கிறார்.   அதாவது நியமன உறுப்பினர்களை சட்ட மன்றத்தில் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனை தான் அது.

இது அராஜகம் இல்லையா?     உச்ச நீதிமன்ற கருத்தை தன் நிபந்தனை உத்தரவுக்கு ஆதாரமாக குறிப்பிட்ட கிரண் பேடி அது தன் வேலை இல்லை என்பதை ஏன் உணரவில்லை?.

உச்ச நீதி மன்ற உத்தரவை அமல் படுத்த மறுத்தால் , அது குற்றம் என்றால்   , உச்ச நீதி மன்றம் நடவடிக்கை எடுத்து விட்டு போகட்டுமே?

இவரே நிபந்தனை விதிப்பது எந்த வகையில் நியாயம்?

இதை உச்ச நீதி மன்றம் அனுமதிக்குமா என்பது தெரியவில்லை.

ஆட்சியிலும் அதிகாரத்திலும் உள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுதான் இன்றைய நீதியா என்பதையும் உச்ச நீதி மன்றம் விளக்கினால் நல்லது.

நாடாளுமன்றத்தில் ராகுல் மோடிக்கு செய்த கட்டிப்புடி வைத்தியம்??!!

நாடாளுமன்ற நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான  விவாதத்தில் உறுப்பினர்கள் பேசிய விவாதங்கள் எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டு ராகுல் மோடிக்கு செய்த கட்டிப்புடி வைத்தியம் பேசுபொருளாகி விட்டது.

தெலுகு தேசம் கட்சி தங்களுக்கு மோடி அரசு மாநில பிரிவினையின் பொது  அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை  என்று நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தது.

அதில் ராகுல் ஆவேசமாக மோடி அரசின் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

பதிலுக்கு மோடியும் ஆவேசமாக பேச இறுதியில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோற்றுப் போனது.

ஆனால் தான் பேசி முடித்த பின் ராகுல் செய்த காரியம் யாரும் எதிர்பாராதது .

நேராக மோடியிடம் போய் எழுந்திருங்கள் என்று சொல்ல அவர் எழுந்திருக்காமல் அமர்ந்தே இருக்க இவர் அவரை குனிந்து கட்டிப் பிடிக்க அசையாமல் இருந்த மோடி பின் ராகுலை அழைத்து சில வார்த்தைகள் பாராட்டி சொல்ல ராகுல் திரும்பி வந்து தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு தன் கட்சி உறுப்பினர்களை பார்த்து கண் சிமிட்ட , எல்லாம் ஒரு நாடகம் போலவே அமைந்து விட்டது.

சிவசேனா கட்சி ராகுல் பேச்சை மிகவும் பாராட்டியது.    கால் பந்து போட்டியை ஒப்பிட்டு கோப்பையை பிரான்ஸ் வென்றிருந்தாலும் மனங்களை வென்றது குரோஷியா தான் என்றது.   அதைப்போல் நம்பிக்கை வாக்கெடுப்பில் மோடி வென்றாலும் மக்கள் மனங்களை  வென்றது ராகுல்தான் என்றது.

ஆனால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ராகுலின் நடவடிக்கை ஏற்கத் தக்கது அல்ல என்றார்.

இதுவரையில் நாடாளுமன்றத்தில் இப்படி நடந்தது இல்லை.

ராகுல் நடந்து  கொண்டது கண்ணியமா இல்லையா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.