Home Blog Page 70

மோடிக்கு ஆதரவாக அதிமுக வாக்கு? 2019ல் கூட்டணிக்கு முன்னோட்டம்!

2019 ல் பா ஜ க தமிழ்நாட்டில்  அ தி  மு க வோடும் ரஜினியுடனும் கூட்டு வைத்து தான் தேர்தலை சந்திக்கும் என்ற நிலைமைதான் இன்று.

அதற்கு முன்னோட்டம் தான் நாடாளுமன்றத்தில்  தெலுகு தேசம் கட்சி யால்  கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் வேணுகோபால் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்போக்கையும் பாரபட்சத்தையும் கண்டித்து பேசிய பிறகு பிறகு நடந்த வாக்கெடுப்பில் மோடியின் அரசின் மீது நம்பிக்கை  இருப்பதாக ஆதரவு வாக்கை அளித்துள்ளது.

பல்கலை மானிய கமிஷனை நீக்கி உயர்கல்வி கமிஷனை கொண்டு வர அ தி மு க எதிர்ப்பு தெரிவித்தது.  அதேபோல் அணை பாதுகாப்பு மசோதாவையும் அதிமுக எதிர்த்தது.    நிதி ஒதுக்கீடில் பாரபட்சம் காட்டப் படுவதையும்  எதிர்த்தது.  இவ்வளவு கடுமையாக எதிர்த்துவிட்டு  ஏன் ஆதரித்து வாக்களிக்க வேண்டும்?

சிவசேனை பிஜுஜனதாதளம் கட்சிகளே வெளிநடப்பு செய்தன.

அமைச்சர் ஜெயகுமார் மகனும் அதிமுக எம்பியுமான ஜெயவர்தன் பேசும்போதும் மத்திய அரசு மாநில விவகாரங்களில் தலையிடுவதை கண்டித்து பேசினார்.

வருமான வரித்துறை சமீப நாட்களாக முதல்வரின் உறவினர் செய்யாதுரையின் வீட்டில் நடத்திய ரைடுகள்   120    கோடி பணம்    103  கிலோ தங்கம் பறிமுதல் வரை என்பதாக செய்திகள் வந்தன.   அதை வருமான வரித்துறை அதிகாரிகள் உறுதி படுத்தியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில் எப்படி  எடப்பாடி மோடிக்கு எதிராக வாக்களிக்க ஒப்புக் கொள்வார்?

ரஜினியின் சமீப கால,  எட்டு வழி சாலைக்கு ஆதரவு பேச்சு செங்கோட்டையனுக்கு பாராட்டு போன்றவை அவரை அதிமுகவுக்கு அருகில் கொண்டு செல்கிறது.

ரஜினி பா  ஜ க வின் ஆள் என்பது எல்லாருக்கும் தெரியும்.

இந்த முக்கூட்டணி மக்களிடம் எடுபடுமா?

பாஜக வுடன் யார் சேர்ந்தாலும் அவர்கள் மக்களால் ஓரங்கட்டப் படுவார்கள்.

இது தமிழ்நாட்டு நீதி!

கர்நாடக சிரூர் மடாதிபதி விஷம் வைத்து கொல்லப்பட்டதாக அவரது தம்பி புகார்?!

மடாதிபதிகள் என்றாலே சர்ச்சைதான்.

இவர்கள் மதம் வளர்க்கிறார்களோ இல்லையோ அவர்களை சுற்றி எதிரிகளை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஏனென்றால் இவர்கள் கையில் ஏராளமான சொத்துக்கள் நிர்வாகத்தில் இருப்பதால் சொத்தாசை பிடித்தவர்கள் போட்டி  போட்டுக் கொண்டே இருப்பார்கள்.

சொத்துக்களை அவற்றின் வருமானங்களை வளைத்துப்போட கோஷ்டிகள் முயன்று கொண்டே இருப்பார்கள்.

உடுப்பி மாவட்டம் சிரூர் மடத்தின் 30 வது மடாதிபதி  54  வயதான லட்சுமி தீர்த்த சுவாமி.

சிரூர் மடாதிபதி லட்சுமி தீர்த்த சுவாமியின் வக்கீல் கூறுகையில் மடாதிபதி தன்னிடம் கடந்த மாதம் வந்து புத்திகே மடத்தை தவிர கிருஷ்ணா மடம் உட்பட ஆறு மடங்கள் மீதும் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என கோரியிருக்கிறார்.   அதற்கான ஏற்பாடுகளில் வக்கீல் இறங்கியிருந்த வேளையில் திடீர் என அவரது இறந்தது மர்மமாக உள்ளதாக புகார் தரப்பட்டுள்ளது.  காவல் துறையில் புகார் அளித்தவர் அவரது தம்பி லதாவியா ஆச்சார்யா.

அவரது உடல் அமர்ந்த கோலத்தில் வைக்கப்பட்டு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

முதல்வர் குமாரசாமி தேவைப்பட்டால் உரிய விசாரணை நடத்தப் படும் என்று தெரிவித்தார்.

மடாதிபதிகளுக்கு ஏன் சொத்து நிர்வாகம்.?

இஸ்ரேல், யூத நாடு என நாடாளுமன்ற மசோதா நிறைவேறியது!!!

இஸ்ரேல் யூதர்களின் நாடு .

அதாவது பலவந்தமாக கட்டமைக்கப் பட்ட நாடு.

அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இஸ்ரேலிய அரபு உறுப்பினர்கள் உள்ளனர்.  இஸ்ரேலிய அரபு மக்கள் இருபது சதம் உள்ளனர்.

மொத்தமே  90 லட்சம் மக்கள் தொகையில் 20 %  அரபு மக்களை கொண்டிருக்கிற இஸ்ரேல் சட்டப்படி சம உரிமை பெற்றிருந்தாலும் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப் படுகிறார்கள்.  அரபு மொழிக்கான அந்தஸ்தும் குறைந்து விட்டது.

யூத நாடாக ஆக்குவதா வேண்டாமா என்பதை எட்டு மணி நேரம் விவாதித்து கடைசியில் 62   எம்பிக்கள் ஆதரவுடன் மசோதா  நிறைவேறியது.    55  எம்பிக்கள் எதிர்த்து வாக்களித்தனர் என்பதே ஆச்சரியம்.

பிரதமர் நெதன்யாகு மசோதா நிறைவேற்றத்தை சிறப்பு வாய்ந்த தருணம் என புகழ்ந்துள்ளார்.

யூத மதம் ஏசு கிறிஸ்துவை கடவுள் என்றோ இறைவனின் தூதர் என்றோ ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனாலும் கிருஸ்தவர்கள் யூதர்களை எதிரிகளாக பார்ப்பதில்லை.   ஏனென்றால் ஏசு யூதர்தானே.

யூத மதம் கடவுளை பெயர் சொல்லி  அழைக்காமல்  மிகவும் மரியாதையுடன்

‘அவர்’ ‘அந்த பெயர்’ என்று அழைக்கின்றனர்.   நிச்சயம் வருவார் என்று கடவுளை  எதிர் பார்த்து காத்திருக்கும் யூதர்கள்  வித்தியாசமானவர்கள்.

பலம் ஒன்றே வாழவைக்கும் என்பதை இஸ்ரேலிக் காரர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதுவும் ஜெருசலத்தை அவர்கள் கைப்பற்றி அதுவே தங்கள் தலைநகரம் என்று அறிவித்திருப்பது வலுவுள்ளவன் எதையும் செய்யலாம் என்பதை தற்காலத்தில் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

அஹமது டிபி என்ற அரபு எம் பி  மசோதா நிறைவேறியது ஜனநாயகம் செத்து விட்டது என்பதை காட்டுகிறது என்றார்.

ஜனநாயகம் இருந்திருந்தால் இஸ்ரேல் நாடே உருவாகி இருக்காதே!

அரசு ஊழியர் அருந்ததி சமூக சமையல்காரர் சமைத்தால் கௌண்டர் வீட்டு பிள்ளைகள் சாப்பிட மாட்டார்களா?

சத்துணவு அமைப்பாளராக அருந்ததி சமூக பெண் பாப்பாள் 2006  ம் ஆண்டிலிருந்து சத்துணவு திட்ட ஊழியராக சமையல் வேலை செய்து வருகிறார்.

அப்போதே கந்தம்பாளையம் , வையாபுரி கவுண்டன் புதூர்  திருமலை கவுண்டன் பாளையம் போன்ற ஊர்களிலும் பணியாற்ற அனுமதிக்கப்படவில்லை.

பிறகு ஒச்சாம்பளையம் பள்ளியில் சமையலராக பணியாற்றி வந்திருக்கிறார்.

பிறகு திருமலை கவுண்டன் பாளையம் ஊருக்கு மாறுதல் செய்யப் பட்டிருக்கிறார். அங்கு பணியில்  சேர்ந்தவுடன் பணியில் தொடர அந்த ஊர் மக்கள் ஆட்சேபம் தெரிவித்தி ருக் கிறார்கள்.

பெற்றோர் ஆட்செபித்தவுடன் அவரது பணியிட மாற்றத்தை ரத்து செய்திருக்கிறார் வட்ட வளர்ச்சி அதிகாரி.

பிறகு திமுக இந்திய கம்யுனிஸ்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  கண்டன குரல் எழுப்பியவுடன் மீண்டும் அதே பணிக்கு  அதே ஊரில் நியமிக்கப் பட்டிருக்கிறார்.

தீண்டாமை , அரசு ஊழியர் பணியில் எவ்வளவு தூரம் ஊடுருவி இருக்கிறது என்பதற்கு இது ஒரூ அடையாளம்.

ஒரு கவுண்டர் சொல்கிறார்.  ‘ வேறு ஊரிலிருந்து எந்த தலித் பெண்மணியை நியமித்தாலும் ஏற்றுக் கொள்வோம்.  இவர் வேண்டாம். ‘    அதாவது வெளி  ஊர் தலித்தை ஏற்றுக் கொள்கிற கவுண்டர் உள்ளூர் தலித்தை ஏற்றுக்  கொள்ள மாட்டாராம்.

320   கவுண்டர் குடும்பங்களுக்கு இடையே     70 அருந்ததியர் குடும்பங்கள் வசிக்கின்றன.

இத்தகைய இழிவு சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக சொல்கிறார்கள்.

இது ஏதோ தனித்த நிகழ்வல்ல.    தொடர் ஆதிக்க மனநிலை.

இதை அரசியல் கட்சிகள் முன்னெடுத்து சென்று இந்த ஆதிக்க மனோபாவத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணையம் திருப்பூர்  மாவட்ட  ஆட்சியர் காவல் துறை கண்காணிப்பாளர் போன்றோரை  அழைத்து விசாரித்து மேல் நடவடிக்கை இருக்கிறது.

பெரியார் மண் இது என்று மார் தட்டும் வேளையில் இது போன்ற சம்பவங்கள் தலை குனிவை ஏற்படுத்தி விடுகின்றன.

விழிப்புணர்வு இருப்பதால் தான் பணி மாறுதல் நிறுத்தப் பட்டது.  இருந்தாலும் இந்த சம்பவம் நிகழ்ந்ததுவே ஒரு அவலம்தான்.

தமிழ்நாடு அகில இந்தியாவுக்கும் வழி காட்ட இதுவே தக்க தருணம்.

அயனாவரத்தில் 11 வயது சிறுமியை நாசப் படுத்திய 17 மனித மிருகங்கள்??!!

தமிழ் நாட்டுக்கு தலை குனிவை ஏற்படுத்திய கொடூர சம்பவம் அது.

11     வயதேயான  பேச,  கேட்க இயலாத மாற்றுதிறநாளி சிறுமியை அடுக்கு மாடி குடியிருப்பில் வைத்து அங்கே வேலை செய்த காவலாளிகள் முதலான   17  மனித உருவில் உலவிய மிருகங்கள் ஆறு மாதங்களுக்கு மேலாக சீரழித்து வந்திருக்கிறார்கள்.

பெற்றோர் கவனமின்மை காரணமா , அக்கம் பக்கத்தில் உள்ளோர் யாருமே கவனிக்க வில்லையா என்ற பல கேள்விகள் அணிவகுத்து நின்றாலும் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மை அச்சத்தை உண்டு பண்ணுகிறது.

குற்றங்கள் வித விதமாக நாளும் நடக்கின்றன.  அதிலே இதுவும் ஒன்று என கடந்து போக இயலா அளவு குற்றத்தின் கொடூரம் எல்லாரையும் பாதித் திருக்கிறது.

போஸ்கோ சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க இருக்கிறார்கள்.

விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டு விசாரணை  நடந்து குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப் படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

தாமதமாக விழித்துக் கொண்டாலும் சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும்.

வழக்கறிஞர்கள் யாரும் குற்றவாளிகளுக்கு ஆஜராக தயாராக இல்லை என்றாலும் சட்டப்படி நீதிமன்றம் அவர்களுக்கு ஒரு வழக்கறிஞரை நியமிக்கும்.   ஆனால்  எவராலும் காப்பற்ற முடியாத குற்றத்தை செய்த அந்த கொடூரர்கள் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப் படவேண்டும்.

இதற்கிடையே கஸ்தூரி என்ற பார்ப்பன நடிகை இந்த சம்பவத்தை கண்டிக்கும் சாக்கில் ‘ இது  என்ன தமிழ் பண்பாடு ?” என்று கேள்வி எழுப்பி இருப்பது அவரது நரிக்குணத்தை காட்டுகிறது.

ஒரு பார்ப்பன அர்ச்சகர் ,  தேவநாதன் என்பவர்,  சாமி சந்நிதியிலேயே காம களியாட்டம் நடத்திய காட்சிகள் வலம் வந்தது. யாரும் பார்ப்பனர் அர்ச்சகர் எல்லாருமே காமுகர்கள் என்று சொல்லவில்லை. அவன் தீயவன். தண்டிக்கப் பட வேண்டிய குற்றவாளி . அவ்வளவுதான்.

எல்லா சமுதாயங்களிலும் குற்றவாளிகள் இருக்கிறார்கள்.     அவர்களை வைத்து   அந்த  சமுதாயத்தை இழிவாக சித்திரிக்க முயல கூடாது.

கொலைக்கு  மரணம் தண்டனை என்றாலும் கொலைகள் குறைய வில்லையே?!

தண்டனை பற்றிய பயம் குற்றவாளிகளுக்கு இல்லை. எனவே குற்றம் குறைய,

தண்டனைச் சட்டம் இன்னும் கடுமை ஆக்கப் பட வேண்டும்.

சபரிமலையில் பெண்களுக்குத் தடை நீக்கி உச்சநீதிமன்றம் சவுக்கடி தருமா?

10  வயதுக்கு மேல்    50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு சபரிமலையில் அனுமதி கிடையாது.

எத்தனையோ தடைகளை பார்ப்பனீயம் ஏற்படுத்தி இருந்தாலும் பல நூற்றாண்டுகளாக போராடி இந்த சமுதாயம் கொஞ்சம் கொஞ்சமாக மூட நம்பிக்கைகளை அகற்றி வந்துள்ளது.

உடன் கட்டை ஏறுதல் முதற்கொண்டு தீண்டாமை முதல் நூற்றுக் கணக்கான தீமைகள் மத நம்பிக்கையின் பேரால்தான் அமுல் படுத்தப் பட்டு வந்தன.

பட்டியலிட்டால் மாளாது.

ஐயப்பன் பிரமச்சாரி.   அதனால் பெண்கள் அருகில் சென்று வழிபட கூடாதா?

அவர் இறைவன் என்றால் எல்லாருக்கும் தானே இறைவன்.      ஆண்களுக்கு மட்டும்தான் இறைவனா?

மாதவிலக்கு பெண்களுக்கு இயற்கை தந்த வரம்.   அதில் குற்றமென்ன?

இன்று பெண்கள் செய்யாத வேலை ஒன்றுமில்லை.   எல்லாம் மாத விலக்கை பொருட்படுத்தாமல் பணி செய்வதால்தான் சாத்தியம்.

இறைவன் படைப்பில் குற்றம் காண முயற்சித்தால் இறைவனையே குற்றம் சுமத்துகிறாய் ?

பெண்கள்தான் எல்லா காரியங்களையும் ஏற்பாடு செய்து ஆண்களை வழி அனுப்புகிறார்கள்.   அவர்களின் பங்களிப்பு இல்லாமல் யாரும் சபரிமலை செல்வதில்லை.   யாத்திரை பங்கப் பட்டுவிட்டதா?

சீர்திருத்தங்களை ஏற்றுக் கொண்டு எல்லாரையும் அரவணைக்க வேண்டிய கோவில் நிர்வாகிகள் கண்ணை மூடிக் கொண்டு முடிவுகளை எடுக்கிறார்கள்.

கேரள அரசு தடையை நீக்குவதை ஆதரிக்கிறது.    தேவஸ்வோம் போர்டு எதிர்க்கிறது.

அரசியல்  சட்டம் தந்திருக்கும் சமத்துவ உரிமையை எந்த மத சம்பிரதாயமும் பறிக்க முடியாது.

அதைத்தான் உச்ச நீதி மன்றம் நிலைநாட்டும் என்று நாட்டு மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.

தீபக் மிஸ்ரா, நாரிமன், கன்வில்கர், சந்திர சூட் , இந்து மல்ஹோத்ரா கொண்ட அரசியல் சாசன பெஞ்சு விரைவில் தீர்ப்பு வழங்க இருக்கிறது.

முஸ்லிம், கிறிஸ்தவ நம்பிக்கைகளில் நீதி மன்றம் தலை இடுமா என்று கேட்கிறார்கள். தலையிட வேண்டும்.   சமத்துவத்தை நிலை நாட்ட வேண்டும்.

முதலில் சமத்துவம் நிலவட்டும்.  பிறகு நம்பிக்கை  மட்டும் போதும் மதம் வேண்டாம் என்ற நிலைக்கு மக்கள் வருவார்கள்.  .

நல்ல தீர்ப்பு வரட்டும்.

நீட் தேர்வில் 0 மார்க் முதல் குறைந்த மார்க் வரை எடுத்தவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்த கொடுமை??!!

2017 ம் ஆண்டு மருத்துவ படிப்பில்  , நீட் தேர்வில்  , 400  மாணவர்கள் இயற்பியல்,  வேதியியல் தேர்வுகளில் ஒற்றைப் படை மார்க்குகள் வாங்கியும்  110  மாணவர்கள்  0 மார்க்குகள் பெற்றும் , தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் வாங்கியிருக்கிறார்கள்  என்ற தகவலை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் வெளியிட்டிருக்கிறது.

மார்க்கே வாங்காதவர்கள் கூட மருத்துவ கல்லூரிகளில் இடம் வாங்க முடியும் என்றால் ஏன் இந்த தேர்வுகளை நடத்த வேண்டும்?

150 க்கும் குறைவான மதிப்பெண் வாங்கியவர்கள் தர வரிசையில் இடம் பிடித்து  1990  பேர் தனியார் நிகர் நிலை பல்கலை கழகங்களில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.

இயற்பியல் வேதியியல் பாடங்களில் பத்துக்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் எப்படி சிறந்த மருத்துவர்களாக பணியாற்ற முடியும்?

+2 தேர்வில் குறைந்த பட்ச மதிப்பெண் கள் கட்டாயம்.  நீட்  தேர்வில் அது தேவையில்லை என்றால் எது நல்ல தேர்வு?

+2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை மருத்துவ படிப்பில் சேர்ப்பதே நியாயம்.

கட்டாய நீட் என்பது ஒருவகை பலாத்காரம்.    ஏற்றுக் கொள்ளவே முடியாத குற்றம்.

பல  வகை பாடத் திட்டம்.  ஆனால் ஒரு வகை பாடத் திட்டத்தில் தான் கேள்விகள்  என்பது அநீதி .

உச்ச நீதி மன்றம் தான் தலையிட்டு நல்ல தீர்ப்பு தர வேண்டும்.

 

 

நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ தொடர் அடம்! உயர் நீதி மன்ற தீர்ப்பை ஏற்க மாட்டார்களாம்?

தமிழில் நீட் எழுதியவர்களுக்கு , தமிழில் வினாத்தாள் மொழிபெயர்ப்பு குளறுபடியால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதால்  அவர்களுக்கு   49 கேள்விகளுக்கு  தலா    4 மதிப்பெண் வீதம்     196 மதிப்பெண்கள் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

நியாய உணர்வு இருந்தால் அதை அமுல் படுத்த வேண்டிய சி பி எஸ் இ இதை எதிர்த்து உச்சநீதி மன்றம் செல்ல இருக்கிறது.

தமிழில் எழுதுபவர்களுக்கு தமிழில்தானே கேள்வி தாள் தரவேண்டும்.   அதற்கு ஆங்கில கேள்விதாளையும் கொடுத்து தமிழில் தவறாக இருந்தால் ஆங்கில கேள்வித் தாளே  பொருந்தும் என சி பி எஸ் இ வாதிடுகிறது.

தர வரிசை பட்டியலை திருத்த மறுத்து இந்த மேல்முறையீடு.

இதற்கிடையே ஆங்கிலத்தில் எழுதி இடம் வாங்கிய மாணவர் ஒருவர் தீர்ப்பை எதிர்த்து மனு செய்திருக்கிறார்.

உச்ச நீதி மன்றம் என்ன செய்ய போகிறது என்பதை தாண்டி சிபீஎஸ் இ தான் நினைத்ததை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை அவர்கள் நிரூபிக்கிறார்கள்.

எங்களை விட்டு விடுங்கள் நாங்கள்  எங்கள் கல்வியை பார்த்துக் கொள்கிறோம் என்று அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது.

கல்வியை உடனடியாக மாநிலப்  பட்டியலுக்கு மாற்ற வேண்டிய போராட்டத்தை தமிழ் சமுதாயம் கையில் எடுக்க வேண்டும்.

கல்வி வணிகப் பொருளாக மாற்றப் படுவதை எதிர்த்தும்  அனைவருக்கும் கல்வி அரசு செலவில் கிடைப்பதை உறுதிபடுத்தவும் அனைத்துக்  கட்சிகளும் ஒன்று திரள வேண்டும்.

இதிலாவது கட்சிகள் அரசியல் செய்யாமல் ஒன்றிணைவார்களா?

உலக கோப்பை ஓட்டப்பந்தயம்- தங்கம் வென்ற மங்கை ஹிமா தாஸ் -நெகிழ்ச்சிக் காட்சிகள்!

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஹிமா தாஸ்,  இருபது வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பின்லாந்தில் நடந்த  ஐ ஏ ஏ எப் உலக கோப்பை  400  மீட்டர்  ஓட்டப்பந்தயத்தில் 51.46  வினாடியில் கடந்து வென்று தங்கப் பதக்கம் வென்றார்.

அகில உலக   ஓட்டப் பந்தய  போட்டி ஒன்றில் இந்தியா பெற்ற முதல் தங்கபதக்கம் இது.

மகிழ்ச்சிக்குரிய விடயம் ஹிமா தாஸ் தங்கம் வென்றவுடன் இந்திய கொடியுடன்  இந்திய தேசிய கீதம் இசைக்கப் பட்ட பொது உணர்ச்சி வசப்பட்டு அழுதார்.

பிரதமர் மோடியே இதைப்பார்த்து விட்டு பாராட்டினார்.

ஹிமாவின் உணர்ச்சி தன்னை நெகிழ வைத்து விட்டதாக எழுதி இருக்கிறார்.     பிரதமர் பாராட்டினால் மட்டும் போதாது.  அரசு செலவில் சிறப்பு  பயிற்சி  , மனதளவில் தெம்பாக இருக்க தேவையான பொருளாதார உதவி எல்லாம் செய்து தர வேண்டும்.

மற்ற இந்தியர்கள் என்ன செய்தார்கள்  தெரியுமா?

கூகுளில் சென்று ஹிமா தாசின் சாதி என்ன என்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

சாதி எவ்வளவு ஆழமாக இந்திய சமுகத்தில் ஊடுருவி இருக்கிறது என்பதற்கு இது சான்று.

இதேபோல்தான் முன்பு பி வி சிந்து வெள்ளிப்பதக்கம் வென்ற வுடன் அவரது சாதி அடையாளம் கேட்டு கூகுளில் விசாரித்தார்கள்.

இந்திய அரசு ஹிமா தாசுக்கு மிகப் பெரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும்.

அடுத்த ஒலிம்பிக் போட்டி வரை அவருக்கு சில சலுகைகளை மத்திய அரசு அறிவித் திருக்கிறது.       நிச்சயம் இது போதாது.

ஏனோ தானோ வென்று சில சலுகைகளை மட்டும் தந்தால்

அவர் ஏதோ ஒரு பிற்பட்ட சாதியை சேர்ந்தவர் என்று ஊகித்துக் கொள்ளலாம்.

பெருந்தலைவர் காமராஜ் 116 வது பிறந்த நாள் இன்று! தமிழர் தலைவர்கள் சாதித் தலைவர்கள் ஆக்கப் படுகிறார்களே?

சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்து நகர் மன்றத் தலைவர் , முதல் அமைச்சர் , பாராளுமன்ற உறுப்பினர், அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் என்று  பல பரிணாமங்களை எட்டி இன்று கல்வித் திருவிழாவாக அவர் பிறந்த நாள் கொண்டாடப் படும் அளவு மக்கள் மனங்களில் நிறைந்திருப்பவர் காமராசர்.

பொதுவாழ்வில் உழைப்பதற்கும் உயர்வதற்கும்  படிப்பு தேவை இல்லை நேர்மை மட்டுமே போதும் என்ற இலக்கணத்தை வகுத்தவர் காமராசர்.

அவர் வாழ்ந்த காலம் அப்படி.

பெரும்பான்மையானவர்கள் ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால்  என்ன என்ற மனப்போக்கில் வாழ்ந்தவர்கள் தானே.

சாதியம் என்ன சாதித்திருக்கிறது?

காமராசரை நாடாராகவும்,  முத்துராமலிங்கத் தேவரை முக்குலத்தோராகவும், வ.வு.சி. யை வெள்ளாளர் ஆகவும் , அம்பேத்கரை மகராகவும் , ரெட்டைமலை சீனிவாசனை தாழ்த்தப் பட்டோர் ஆகவும் ம பொ சி யை கிராமணி ஆகவும்  அடையாளம் காட்டியிருக்கிறது .

அவர்கள் அந்த சாதிய எண்ணத்தோடு சமுதாயத்துக்கு உழைத்தார்களா ?

இன்று காமராசர் பிறந்த நாள் விழாவுக்கான ஏற்பாடுகளை நாடார் மகாஜன சங்கம் செய்வது வரவேற்கத் தக்க ஒன்றா?

எல்லா சாதிகளும் அல்லது சாதிகளை விட்டொழித்து எல்லா தமிழர்களும் எல்லா தமிழ்த் தலைவர்களின் பிறந்த நாள் விழாக்களை கொண்டாட வேண்டும்.

இன்றும் எல்லா தமிழ்த் தலைவர்களும் அவரவர் சாதி அடையாளத்தோடு அளவிடப் படுகிறார்களா இல்லையா?

முதல்வர் பழனிசாமி  கவுண்டர், மருத்துவர் ராமதாஸ் வன்னியர்,  ஜி கே வாசன் மூப்பனார் , திருமாவளவன் பறையர், கிருஷ்ணசாமி  ஜான் பாண்டியன் எல்லாம் பள்ளர் , நெடுமாறன் வெள்ளாளர், ஓ பி எஸ் மறவர் திருநாவுக்கரசு மறவர் வைகோ விஜயகாந்த் தெலுங்கர் சீமான் நாடார் என்று அநேகமாக எல்லா தலைவர்களுமே ஏதோ  ஒரு  சாதியை வைத்தே அடையாளம் காணப் படுகின்றனர்.    ஆனால் எல்லாருமே தங்களை அப்படி சொல்லிக் கொள்வதில்லை.   சாதி ஒழிப்புக்காக பாடு படுபவர்கள் கூட சாதியை வைத்து அடையாளம் காணப படுவதுகொடுமை.

கலைஞரும் ஸ்டாலினும் இசை வேளாளர்கள் என்று கொண்டாடுவதில்லை.   அவர்கள் எல்லா சாதிகளிலும் மணவினை கொண்டு சாதிக்கு அப்பாற்பட்டவர்களாக மாறிவிட்டார்கள்.

சாதி ஒழிப்பு எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.  சாதி ஒழிந்தால் சங்கங்களுக்கு என்ன வேலை?

அதுவரை,

முதலில் பெருந்தலைவர் காமராசர் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்களை மற்ற சாதி சங்கங்கள் பேரால் கொண்டாட ஏற்பாடுகள் செய்வோம்.

அவர்களை  மற்ற சாதி சங்கங்கள் கொண்டாடுவதுதான் அவர்களுக்கு பெருமை  சேர்ப்பதாக இருக்கும்.

சாதி ஒழிப்பில் இது ஒரு முக்கிய பரிமாணமாக அமையட்டும்.