Home Blog Page 71

ஏமாற்றிய ஆறுமுகம் போலி என்றால் ஏமாந்த 1425 பள்ளி கல்லூரி நிர்வாகங்களுக்கு என்ன பெயர்?

கடந்த ஆறு ஆண்டுகளாக  1425 தனியார் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்து வந்திருக்கிறார் ஆறுமுகம் என்ற மாற்றுத் திறநாளி வாலிபர்.

கோவை கலைமகள்  அறிவியல் கல்லூரியில் இதே போன்று பயிற்சி அளித்தபோது லோகேஸ்வரி என்ற மாணவியை இரண்டாவது மாடியில் இருந்து ஆறுமுகம் தள்ளிவிட்டபோது அவர் இறந்ததால் நடைபெற்ற விசாரணையில் தான் அவர் ஒரு போலி பயிற்சியாளர் என்றும் பேரிடர் மேலாண்மை அமைப்பின் அனுமதி இல்லாமல் போலி சான்றிதழ்களை தயாரித்து இதுவரை சுமார் இரண்டரை கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

மாம்பாக்கத்தில் அலுவலகம்,  மத்திய அரசு வேலை உத்தரவாதம் என்று பலரை உதவியாளராக அமர்த்தியது  , பள்ளி கல்லூரி நிர்வாகங்களிடம் பணம் பெறாமல் மாணவர்களிடம் மட்டுமே சான்றிதழ் ரூ 50 வீதம் வசூல் என்று மிகவும் சாமர்த்தியமாக செயல் பட்டு அத்தனை பேரையும் ஏமாற்றி இருக்கிறார் ஆறுமுகம்.

தொலை தூர கல்வி மூலம் டிப்ளோமா படித்து விட்டு இத்தனை கல்லூரிகளையும் அவர் ஏமாற்றி இருக்கிறார்.

கோவை கல்லூரி ஆளும் கட்சி பிரமுகர் சம்பந்தப் பட்டது என்பதால் அவர்கள் குற்ற வழக்கில் சேர்க்கப் படவில்லை.

விசாரணை எப்படி போகிறதோ அதன் படி உண்மைக் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் .

தனியாக இத்தனை பேரை அவர் ஏமாற்றி இருக்க முடியாது.

நமக்கு வரும் ஐயம் ஏமாந்த கல்லூரிகளுக்கு என்ன பெயர். ?

நிர்வாகங்களுக்கு எந்த பொறுப்பும் இல்லையா?

வெறும் சான்றிதழ் களை மட்டுமே நம்பி நிகழ்ச்சிகளை நடத்துவார்களா?

வேறு வகையில் ஒப்பிட்டு பார்த்து உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள அவர்களுக்கு கடமை இருக்கிறதா இல்லையா?

இந்த இறப்பு ஏற்பட்டிருக்கா விட்டால் அவர் தொடர்ந்து பல பள்ளி கல்லூரிகளை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்திருப்பார்.

சுய பரிசோதனை பள்ளி கல்லூரிகள் செய்து கொள்ள வேண்டும். இவர்களை நம்பி குழந்தைகளை அனுப்பும் பெற்றோர் என்ன தவறு செய்தார்கள்?

பள்ளி கல்லூரிகளை வணிக நோக்கில் நடத்தும் கல்வி வியாபாரிகள் நிர்வாகிகளாக இருப்பதால்தான் இந்த குற்றங்கள் நடை பெறுகின்றன என்றால் தவறா?

பள்ளிக் கல்வித்துறை  இதையெல்லாம் மேற்பார்வை செய்யாதா?

குற்றவாளிகள் தண்டிக்கப் பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ  அவ்வளவு முக்கியம் அந்தக் குற்றம் நடைபெறுவதை தடுக்கும் கடமையில் இருந்து தவறியோரும்  சிறு அளவிலாவது தண்டிக்கப் படுவது .

பாமரன் ஏமாறலாம்.  பயிற்றுவிப்பவன்  ஏமாறலாமா ?

திருப்பூரில் கண்டெடுக்கப் பட்ட 800 ஆண்டு அய்யனார் சிற்பம் தெரிவிக்கும் செய்திகள்!!!

திருப்பூர் மாவட்டம் ஏறக்காரம்பட்டி கிராமத்தில் 800  ஆண்டு பழமையான அய்யனார் சிற்பம் கண்டெடுக்கப் பட்டது தொல்துறை ஆராய்ச்சியாளர்களை மட்டுமல்லாது தமிழ் உணர்வாளர்களையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

120   அங்குல அகலமும்  60 அங்குல உயரமும் கொண்ட இந்த சிற்பம் தனியார் ஒருவரின் வேம்பு மரத்தின் அடியில் இருந்து கண்டு எடுக்கப் பட்டது.

இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்ட வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும்  வரலாற்று ஆய்வு மைய நிர்வாகிகள் எஸ் ரவிக்குமார் , கே பொன்னுசாமி , எஸ் சதாசிவம் மற்றும் எஸ் வேலுசாமி ஆகியோர் போற்றுதலுக்கு உரியோர்.

அய்யனார் பழங்குடி மக்களால் தங்கள் குல தெய்வமாக பய பக்தியுடன் வணங்கப் படும் தெய்வம்.  இது பொதுப்பெயர்.

முன்னோர் வழிபாடு பற்றி சங்க கால கலித்தொகை பேசுகிறது.

இந்த கல் சிற்பத்தில் அய்யனார் ‘ மகாராஜா லீலாசன ‘ பாவனையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

அதாவது வலது கால் படுக்கை வாக்கில் வளைந்தும் இடது கால் நெட்டு வாக்கில் வளைந்தும் உள்ளது.   அவரது  இடது கை இடது முழங்காலில் இருக்கிறது.  வலது கையில் செண்டு என்ற ஆயுதம் ஏந்தி இருக்கிறார்.  அவர் எட்டு வித ஆபரணங்களையும் அணிந்து இருக்கிறார்.  அவரது இரு மனைவியர் பூரணை மற்றும் புஷ்கலா இரு புறமும் இருக்கிறார்கள்.

இந்த சிற்பம் 12 ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்க வேண்டும்.

எனது கருத்து அநேகமாக தமிழகத்தின் எல்லா கிராமங்களிலும் இருக்கும் எல்லா அய்யனார்களும் அந்தந்த கிராமத்து முன்னோர்கள்.     ஒவ்வொரு கிராமத்து அய்யனாருக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும்.   அதாவது அவர்கள் எல்லாம் அந்தந்த கிராமத்து முன்னோர்கள் தெய்வங்களாக வழிபடப் பட்டவர்கள்.

எல்லா அய்யனார் கோவில்களிலும் ஆடு கோழி பலியிடுவது வழக்கம்.

எனவே இவை தமிழர் குல தெய்வங்கள்.

இவர்களை சிறு தெய்வங்கள் என்று அழைப்பதே தவறு.

தெய்வங்களில் சிறு தெய்வம் பெரு தெய்வம் என்று பிரிப்பது பெரும் பிழை.

எல்லா தெய்வங்களுமே நமது முன்னோர்கள் என்று வரையறை செய்து கொண்டால் ஒரு பிழையும் வராது.

‘நடுகல் வணக்கம் ‘  என்பது தமிழர் முன்னோர் வழிபாட்டு முறை.    யாகம் வளர்ப்பதற்கும் தமிழர் வழிபாட்டு முறைக்கும் தொடர்பே இல்லை.

அதைத்தான் இப்போது திருப்பூரில் கண்டு எடுத்திருக்கிறார்கள் .

மேற்குக் கடற்கரை  ஓர முசிறி பட்டணம்  கிழக்கு கடற்கரை ஓர   பூம்புகார் இடையே இருந்த பூர்விக வணிக பாதை இதுவாகத்தான் இருக்க வேண்டும்.   வெள்ளலூர் சூலூர் காங்கேயம் கரூர் நகரங்களை இணைக்கும் ராஜகேசரி பெருவழி யாக இது இருந்ததாக ஆராய்ச்சி மையத்தின் எஸ் ரவிக்குமார் கூறுகிறார்.

அய்யனார் கோவில்களில் எப்படி பார்ப்பனர் புகுந்து பூசை செய்ய ஆரம்பித்தார்கள்?

முன்பெல்லாம் தமிழர்கள் தான் பூசாரிகளாக இருந்தார்கள்.   அவர்கள் இடங்களை பின்னால் பார்ப்பனர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள்.

தமிழ் அர்ச்சனைகள் மறைந்து சமஸ்க்ரித மந்திரங்கள் ஆக்கிரமித்துக் கொண்டன.

புரியாத மொழியில் அவர்கள் ஏதோ ஸ்லோகங்கள் சொல்ல இவர்கள் பொருள் புரியாமல் ஏதோ சாமியை பாடுகிறார்கள் என்று வாய்மூடி மௌனிகளாக கும்பிட்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

இது என்ன வகை பக்தி ?

அடிமைப் புத்திக்குப் பெயர் பக்தியா?

தமிழர் சிந்தனையை  இந்த திருப்பூர் கண்டுபிடிப்புகள் தட்டி எழுப்பினால் நல்லது.

221 கிலோ பழனி தண்டாயுதபாணி சிலை கும்பகோணம் நீதிமன்றம் சென்றது??!!

சித்தர் போகரால் உருவாக்கப் பட்ட நவ பாஷாண அருள்மிகு தண்டாயுதபாணி  மூலவர் சிலை தொடர் பூசையால் பாதிக்கப் பட்டதால் 221 கிலோ எடையில் உத்சவர் சிலை உருவாக்கப்பட்டது.

அதில் போதிய தங்கம் சேர்க்காமல் மோசடி செய்ததாக சிலையை உருவாக்கிய ஸ்தபதி முத்தையா, முன்னாள் நிர்வாக அதிகாரி கே கே ராஜா , மதிப்பீட்டாளர் தெய்வேந்திரன் மற்றும் பலர்  கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணை அதிகாரி ஐ ஜி பொன் மாணிக்க வேலை மாறுதல் செய்ய முயற்சிகள் நடைபெற்று அது நீதிமன்ற குறுக்கீட்டால் முறியடிக்கப் பட்டது.   அவர் நவம்பர் மாதம் பணி ஓய்வு பெற இருப்பதற்காக காத்திருக்கிறார்களாம் .

இந்து அற நிலையத்துறை ஆணையர் ஆக இருந்த தனபால் மீது குற்றம் சாட்டப் பட்டு விசாரணை வளையத்தில் இருக்கிறார் என்பதும் அவர் நீதி மன்ற பிணையில் இருக்கிறார் என்பதும் வேதனையான செய்திகள்.     வேலியே பயிரை மேய்ந்தால் காப்பது யார்?

நீதிமன்றத்தில் ஒப்படைக்க இந்த சிலை கீழே இறக்கப் பட்டு நீதிபதியால் சிலை எடை போடப்பட்டு பின் பாதுகாப்பாக வைப்பதற்கு கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில் வைப்பறைக்கு கொண்டு செல்லப் பட்டது.

இப்படி சாமி சிலைகளில் மோசடி செய்பவர்கள் எப்படிப்  பட்ட பக்தர்களாக இருப்பார்கள்?

அவர்களை எப்படி பக்தர்கள் என்று ஏற்றுக் கொள்வது?

பக்தர்களின் நம்பிக்கையை வைத்து எப்படியெல்லாம் விளையாடுகிறார்கள்?

முருகனுக்கு அரோகரா!!!

பல்லாயிரம் கோடிக்கணக்கில் மதிப்புள்ள சிலைகளை பாதுகாக்காத இந்து அறநிலையத்துறை?

தஞ்சைக்கு பக்கத்தில் அருள்மிகு சுந்தரேஸ்வரர் கோவிலில் சுமார் 30 பஞ்சலோக சிலைகள்  சுமார்   ரூ  700  கோடி மதிப்புள்ளவை.    அவைகள் ஒரு சாதாரண அறையில்   150  ருபாய் மதிப்புள்ள பூட்டு ஒன்றினால் பாதுகாக்கப் படுகின்றன.  70  வயது பாட்டி பாதுகாவலர்.   இந்த தகவல்கள் உயர்நீதிமன்றத்தில் போடப்பட்ட ஒரு வழக்கில்  தெரிவிக்கப் பட்டவை.

அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் விலை மதிப்பற்ற கதவுகளும் சிலைகளும் காணவில்லை என்று ரங்கராஜன் நரசிம்மன்  என்ற பக்தர் தெரிவிக்கிறார்.

அதேபோல் நாகை மாவட்டம் கோனேரிராஜபுரம் உமா மகேஸ்வரர் ஆலயத்திலும்  பல கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலைகள் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றன என்று யானை   ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர் நீதி மன்றத்தில்  தெரிவிக்கிறார் .

விசாரிக்கும் நீதிபதி திரு ஆர் மகாதேவன் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவில் ஒன்பது அங்குல திரிசூலத்தையும்  15 அங்குல  தண்டபாணி சிலையையும்  காணவில்லை என்ற பத்திரிகை செய்தியை குறிப்பிட்டு இந்து அறநிலையத்துறை தகுந்த முறையில் பாதுகாக்க முடியாவிட்டால் அதற்கென தனி துறையை உருவாக்க வேண்டியதுதான் என்று குறிப்பிட்டி ருக்கிறார்.    கோவிலில் உள்ள 164  சிலைகளில்   112  சிலைகள்  தொன்மை மதிப்பு மிக்கவை என்பதால் தனி அறையில் வைத்து பாதுகாக்கப் படுகின்றன.    இந்த சிலைகள் பற்றிய குறிப்புகள்  1954  ல் தான் ஆவணப் படுத்தப் பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.  இவைகள் இன்னும்கூட மதிப்பிடப் படவில்லை என்பது இன்னும் அதிர்ச்சி அளிக்கக் கூடியது.

இந்த சிலை காணாமல் போனதுகூட கணக்குத் தணிக்கையில் தான் தெரிய வந்திருக்கிறது.

ஆக கோவில்களை விலை மதிப்பற்ற சிலைகளையும் ஆபரணங்களையும் பதுக்கி வைக்கும் இடங்களாக கருதினார்களா?     எப்போது வேண்டுமானாலும்  நாமோ நமது வாரிசுகளோ எடுத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருந்திருக்கலாம்.

கோவில் சிலைகளும் சொத்துக்களும் காணாமல் போவது ஒன்றும் புதிதல்ல.

ஆனால் இத்தனை புகார்களுக்குப் பிறகும் தக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப் படாததற்கு யார் காரணம்?

எல்லாவற்றையும் சி பி ஐ தான் விசாரிக்க வேண்டும் என்றால் மற்ற காவல் துறைகள் எதற்கு?

அறநிலையத் துறையிடம் தமிழகம் முழுதும் உள்ள கோவில் சிலைகள் பற்றிய முழு விபரங்களும் உள்ளனவா?   அவைகள் ஒன்றிணைக்கப் பட்டு தகுந்த முறையில் பாதுகாக்கப் படுகின்றனவா?

கோவை பயணியர் நகர் கோவிலில் மூன்று சிலைகள் திருடப் பட்டு காவல் துறையில்  புகார் செய்யப் பட்டிருக்கிறது.   வெறும்   30000 மதிப்புள்ள சிலைகள் அவை.   சிறிய உண்டியலை கூட திருடர்கள் விட்டு வைக்க வில்லை.

கோவில் சிலைகள் பாதுகாக்கப் பட தனி துறை  ஏற்படுத்தப் பட வேண்டும் .  அதுவும் கால தாமதம் இன்றி.

முட்டை விநியோகத்தில் ரூ5000 கோடி ஊழல் – விசாரணை வருமா அல்லது வெற்று மிரட்டலா?

ஐ டி ரெய்டு என்றாலே மத்திய அரசின் மிரட்டல் என்றாகி விட்டது.

அன்புநாதன் , சேகர் ரெட்டி விடயத்தில் அப்படித்தானே ஆனது.

இப்போது சத்து மாவு  முட்டை விநியோகத்தில் கிறிஸ்டி நிறுவனம் ரூ ஐந்தாயிரம் கோடிக்கு  மேல் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை 72 இடங்களுக்கு மேல் சோதனை நடத்தி இருபது கோடி பணம் பதினைந்து கிலோ தங்கம் கணக்கிட முடியாத அளவு ஆவணங்களை கைப்பற்றியதாக செய்திகள் வருகின்றன.

இவையெல்லாம் வெறும் வருமான வரி ஏய்ப்புக்குத்தானா அல்லது தமிழக அரசை நடத்தும் முதல்வர் பழனிச்சாமியை மிரட்டி பணிய வைக்கும் முயற்சியா என்ற ஐயம எழுகின்றது.

பாராளுமன்ற தேர்தல் வரும் சமயம் நெருங்க நெருங்க இன்னும்  எத்தனை சோதனைகள் நடை பெறுமோ என்ற எதிர்பார்ப்பும் அதிகரிக்கிறது.

அரசியல் காரணங்களுக்காக சி பி ஐ   , ஐ டி , அமுலாக்க த்துறை போன்றவை பயன் படுத்தப் படுவதாக வரும் குற்றச்சாட்டுகளை தவறு என்று நிரூபிக்க அந்த அமைப்புகளுக்கு கடமை இருக்கிறது.

இவ்வளவு பெரிய ஊழலை தனி ஒருவர் செய்து விட முடியாது.

அரசில் பொறுப்பில் இருப்பவர்கள் சம்பத்தப் படாமல் எப்படி ஒரு நிறுவனம் ஊழல் செய்து விட முடியும். ?

இந்த அடிப்படை உண்மையை கணக்கில் எடுத்துக் கொண்டு தான் விசாரணை நடத்தப் பட  வேண்டும்.

லோக் ஆயுக்தா சட்டம் வேறு நிறைவேற்றப் பட்ட நிலையில் இந்த ஊழல் குற்ற சாட்டுகளை எப்படி விசாரிக்கப் போகிறார்கள். ?

இதை வெறும் வருமான வரி பிரச்னையைப் போல் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவது  இந்த  அரசுக்கு  ஊழலில் சம்பந்தம் இல்லை என்பது போல் இவரே சான்றிதழ் அளிப்பது போல் இருக்கிறது.

அதுவும் நுகர் பொருள் வாணிப கழக இயக்குனர் ஐ ஏ எஸ் அதிகாரி சுதா தேவியும் இதில் சம்பத்தப் பட்டிருப்பதால் அரசுக்கு தொடர்பு இல்லை என்று சொல்லவே முடியாது.

முட்டை ஊழல் சம்பந்தமான விசாரணையும் முட்டையாகி விடக்கூடாது.

லோக் ஆயுக்தா சட்டத்தை அவசர அவசரமாக ஒரே நாளில் நிறைவேற்றிய மர்மம் என்ன?

உச்ச நீதி மன்றம் சொல்லி விட்டதே என்று தமிழக அரசு அவசர அவசரமாக சட்ட மன்ற கூட்டத்தின் கடைசி நாளன்று லோக் ஆயுக்தா சட்டத்தை இன்று நிறைவேற்றி உள்ளது.

அதில் உள்ள குறைகளை சட்ட மன்றத்தில் முழுவதுமாக விவாதிக்க வில்லை.

சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு  என்னதான் வேலை. ?

ஒரு சட்டத்தை  யாவது ஒழுங்காக விவாதிக்க தயாராக இல்லை என்றால் சட்ட மன்றம் எதற்கு?

வெற்றுச் சடங்காக ஒரு சட்டத்தை நிறைவேற்றி விட்டால் உச்ச நீதி மன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என்ற ஒன்றைத் தவிர நாம் இதில் மகிழ்ச்சி கொள்ள ஒன்றுமில்லை.

தேர்தல் முறைகேடுகள் , ஒப்பந்த முறைகேடுகள், நியமன முறைகேடுகள் இவற்றை விசாரிக்க சத்தத்தில் இடம் இல்லை.  பெரும் ஊழல் நடப்பதே இவற்றில்தான்.

எதிர்க்கட்சித் தலைவர்  என்ற முறையில் ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு விடை தராமலே சட்டம் நிறைவேற்றப் பட்டு விட்டது.

ஏதோ ஒரு சட்டம் இருக்கிறது என்பதில் பெருமைகொள்ள என்ன இருக்கிறது?

தாங்கள் செய்ய இருக்கிற ஊழல்கள் இந்த சட்டத்தால் விசாரிக்க முடியாது என்று இந்த அரசு உறுதி செய்து இருக்கிறது.

நாட்டில் பல மாநிலங்களில் இந்த சட்டம் ஒரே மாதிரி இல்லை.

லோக்பால் சட்டத்தில் உள்ள பல நல்ல அம்சங்கள் இந்த சட்டத்தில் விடுபட்டிருக்கின்றன .

இதற்கும் உச்ச நீதி மன்றம் சென்றுதான் அவைகளை சேர்க்க வேண்டும் என்ற நிலை வருந்தத் தக்கது.

அரசு காட்டிய அவசரம் இவர்கள் ஊழல் வாதிகள் என்ற கருத்தை மக்களிடம் ஊன்றி விட்டது.

சட்ட மன்ற நடவடிக்கைகள் வெளிப்படையாக ஒளிபரப்பப் பட்டால்தான் இவர்களின் முகத்திரை கிழியும்.

தங்கள்  பிரதிநிதிகள் எப்படி பணியாற்று கிறார்கள் என்று நேரடியாக பார்க்க மக்களுக்கு உள்ள உரிமை நிலை நாட்டப் பட்டாக வேண்டும்.

மழை வேண்டி மரங்களுக்கு திருமணம் செய்யும் தமிழர்கள் இருக்கிறார்களே?!

பக்திக்கும் நம்பிக்கைக்கும் எல்லை இல்லை.

ஆனால் அது அறிவு பூர்வமாக இருக்க வேண்டும்.

வேம்பு அரச மரங்களுக்கு திருமணம் செய்வித்தால் மழை பொழியும் என்ற நம்பிக்கையின் அடிப்படை அந்த மரங்களை பாதுகாக்க வேண்டும் என்பதுதான்.

அதற்காக அவைகளுக்கு பத்திரிகை அடித்து திருமணம் செய்விக்க முடிவு செய்த திருவாரூர் மாவட்டம் தில்லை விளாகம் கிராமத்தில் தமிழர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள்.

அதிர்ச்சி தரும் வகையில் இரண்டு மரங்களும் ஒரு சேர பட்டுப் போனதால் திருமணத்தை நிறுத்தி விட்டார்கள்.

பட்டுப் போக நீர் பற்றாகுறை உள்ளிட்ட இயற்கை காரணங்கள் இருக்கலாம்.   ஆனால் அதற்காக மக்களின் மழை வேண்டி பிரார்த்தனை செய்யும் நம்பிக்கை இத்தனை தூரம் போக வேண்டுமா என்பதை அம்மக்கள் சிந்திக்க வேண்டும்.

பெரியாரின் சீர்திருத்த இயக்கம் இன்னும் வேரூன்ற வில்லை என்பதை இது காட்டுகிறதா என்று தெரியவில்லை.

அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி தொண்டர்களை சீர்திருத்த பாதைக்கு ஓரளவு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியத்தை இந்த நிகழ்வு காட்டுகிறது என்பதில் சந்தேகமில்லை.

மோடி கூட்டத்திற்கு அரசு செலவு ரூ 7 கோடி ?!

ராஜஸ்தான் அரசு பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்திற்கு அரசு செலவில் ரூ 7 கோடி  செலவிட்டிருப்பது எல்லாரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

5600 பேருந்துகள் மூன்று லட்சம் பேரை ஜெய்ப்பூர் அழைத்து வருகின்றன.

பல்வேறு நலத் திட்டங்கள் மூலம் சுமார் இரண்டரை லட்சம் பேர் பயன் அடைந்திருப்பதாக வசுந்தரா ராஜே சிந்தியா அரசு அறிவித்திருக்கிறது.

ஒரு மக்களின் அரசு இப்படி விரயம் செய்வதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

தேர்தல் வர இருக்கும் நிலையில் இப்படி அரசு பணத்தில் மக்களை மயக்க திட்டமிடுவது ஒருவகையில் ஊழல் நடவடிக்கை என்றே கூறலாம்.

சமீபத்தில் எந்த அரசும் இப்படி அரசு செலவில் கட்சியை பலப் படுத்திக் கொள்ள முயன்றது இல்லை.

மோடியின் பிம்பம் சரியும் நிலையில் இந்த ஆடம்பாம் மேலும் அதை மேலும் வீழ்ச்சி அடையவே செய்யும்.

ஆளுநருக்கு ஆள அதிகாரமில்லை; உச்ச நீதிமன்றம் அதிரடி? பன்வாரிலால் திருந்துவாரா?

டெல்லி அரசு தொடுத்த மேன்முறைஈட்டில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு அளித்தது.

டெல்லி உயர் நீதி மன்றம் துணை நிலை  ஆளுநர் தான் அதிகார தலைவர் என்று தீர்ப்பு அளித்தது வரலாற்றுப் பிழை. அதை எதிர்த்துத்தான் டெல்லி  அரசு மேன்முறையீடு செய்தது.

மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுக்கு எந்த வகையிலும் ஆளுநர் இடையூறு செய்யக் கூடாது.

மத்திய அரசு ஆளுநர்களை வைத்துக் கொண்டு மறைமுகமாக தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுகளை மிரட்டுவது என்ற போக்கு இனி நீடிக்காது.

மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல்வர் கேஜ்ரிவால் ஆளுனரை சந்திக்க முடியாமல் அவரது அலுவலகத்திலேயே தர்ணா செய்தார்.

எத்தனை ஊடகங்கள் இதனை பெரிது படுத்தின. ?

எட்டு நாட்கள் ஒரு முதல் அமைச்சர் ஒரு ஆளுனரை சந்தித்து முறையிட வாய்ப்புக் கிடைக்காமல் அங்கேயே தர்ணா செய்ய வேண்டிய அவலம் நடந்ததே?

நீதிமன்றம் ஏன் அங்கே தர்ணா செய்ய வேண்டும் என்று கேட்டது வேறு விடயம்..   வேறு வழி தெரியாமல் தர்ணா செய்தார்கள்.

வீடு தோறும் மளிகை  பொருட்களை அரசே கொண்டு சேர்க்கும் திட்டம் அமுல்படுத்தப் பட ஏன் வேண்டும் ஆளுநர்  அனுமதி?

தோற்றுப் போன அரசியல் வாதிகளின் கடைசிப் புகலிடம் ஆளுநர் மாளிகைகள் ஆகிவிட்டன என்பது உண்மைதானே?

ஆள முடியாத இடங்களில் ஆளுநர் மூலமாக காலூன்ற முடியாதா என்று  மத்திய ஆளும் கட்சி திட்டம் இடுவது என்ன நியாயம்?

புதுவையில் கிரண் பேடி செய்வதும் டெல்லியில் துணை நிலை ஆளுநர் செய்வதும் ஏறத்தாழ ஒன்றுதான்.

தமிழகத்தில் வந்திருக்கும் புரோஹித் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

நிர்மலாதேவி விவகாரத்தை விட்டு விடுவோம்.

மாவட்டம் தோறும்  ஆய்வு செய்ய போகிறேன் என்று புது விதியை உருவாக்க திட்டமிடும் இவருக்கு யார் பின்னால் இருக்கிறார்கள்?  மத்திய அரசு இருக்கிறது.

நிலம் , காவல்  , சட்ட ஒழுங்கு  மூன்றைதவிர வேறு  எதிலும் ஆளுநர் தலையிடக் கூடாது  என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்பின் முக்கிய அம்சம்கள் இவைதான்;

           ‘ஆளுநர் ஒரு தடுப்பு சக்தியாக செயல் படக் கூடாது . ‘

                       ‘ ஏதாவது மாற்றுக் கருத்து வந்தால் விவாதிக்கலாமே தவிர தடை செய்யக்  கூடாது. ‘

             ‘  அரசு ஆளுநருக்கு தன் முடிவுகளை தெரிவிக்க வேண்டும். அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ‘

                     ‘ மாற்றுக் கருத்து இருந்தால் ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விளக்கம் கேட்கலாம். ‘

இந்த தீர்ப்பு இனிமேலாவது மத்திய அரசுக்கு ஆளுநர்களை வைத்து அரசியல்  செய்யக் கூடாது என்ற படிப்பினையை கொடுக்குமா?

ஏற்கெனவே பல  தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம்  ஆளுனர்களின் அதிகார வரம்புகள் குறித்து வரையறை செய்திருக்கின்றன.

ஆட்சியில் இருப்போர் அவைகளை திருத்த முயற்சிப்பதுதான் வேதனை.

மோடி அரசு திருந்தும் என்று எதிர்பார்ப்பதும் நாய் வாலை நிமிர்த்த முடியும் என எதிர்பார்ப்பதும் ஒன்றுதான்.

அதன் அதன் இயல்புகளை திருத்த முடியாதுதானே!

மோடி அரசு தெரியாமல் தவறு செய்தால் திருத்திக் கொள்ளும்.   அவர்கள் செய்வது எல்லாமே  தெரிந்தே செய்பவைகள். எப்படி திருத்திக் கொள்வார்கள்?

மக்கள் விழிப்புணர்வு ஒன்று மட்டுமே மக்களாட்சி தத்துவத்தை உயிர்ப்போடு வைத்திருக்கும்.

18 எம்.எல்.ஏ தகுதியிழப்பு வழக்கு 3 வது நீதிபதி இறுதி விசாரணை ஜூலை 23- 27 தேதிகளில்?

ஒருவழியாக இம்மாதத்தில் மூன்றாவது நீதிபதி தீர்ப்பு வந்து விடும் .

18  எம் எல் ஏக்களின் பதவி தப்புமா என்பதை விட இந்த அரசின் பதவிக்காலம் தப்புமா என்பதே எதிர்பார்ப்பு.

நீதிபதி  சத்யநாராயணா ஜூலை 23  முதல்  27  வரை தினந்தோறும் இந்த வழக்கை  முதல் வழக்காக  எடுத்து விசாரிப்பதாக சொல்லி இருந்தாலும் அதற்கு முன்பே  வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒதுக்கப்  படும் வாய்ப்பு அதிகம்.

தகுதியிழப்பு செல்லும் என்றாலும் செல்லாது என்றாலும் மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பே இங்கு  இறுதியானது.

பாதிக்கப் படும் தரப்பு உடனடியாக உச்சநீதி மன்றம் சென்றாலும் அங்கு இங்கு போல் பல மாதங்கள் இல்லாமல் சில மாதங்களில் தீர்ப்பு வந்து விடும்.  எனவே இன்னும் சில மாதங்களுக்கு எடப்பாடி  அரசுக்கு ஆயுள் உண்டு.

அதற்குள் வேறு பிரச்னைகள் குறுக்கிடாமல் இருக்க வேண்டும்.

முதல் பெஞ்சில் வழக்கு விசாரணையில் வாதப் பிரதி வாதங்கள் சுமார் நான்கு மாதங்கள் நீடித்தது அநியாயம்.  இதை உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.

இந்த வழக்கில்  மட்டுமல்ல.    பல அரசியல் வழக்குகளில் தாமதங்கள் வழக்கறிஞர்கள் வாதங்கள் வைப்பதில் ஏற்படுகிறது.  இதை அவர்களில் சங்கம்தான் பரிசீலிக்க வேண்டும்.

நீதி தேவதை  கால தாமதத்தை கண் கொண்டு பார்க்க மாட்டேன்  என்றா சொல்லுவாள்?