எப்படியும் ஒன்பதாம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் அமைய உச்ச நீதி மன்றம் வழி வகுத்து விடும் என்று நம்பியிருந்த வேளையில் ஈயத்தை காய்ச்சி ஊற்றினால் போல் அடுத்த மாதம் மூன்றாம் தேதி ஒரு திட்ட மாதிரியை கொடுங்கள் என்று மத்திய அரசுக்கு வாய்தா கொடுத்து தமிழர்களுக்கு அல்வா கொடுத்து விட்டது உச்ச நீதிமன்றம்??!!!
தனது தீர்ப்பையே தானே திருத்தி எழுதிக் கொண்டது உச்ச நீதி மன்றம்.
இது என்ன வகை நீதி ??
அளவைத்தான் குறைத்தார்கள் . அதையாவது உறுதி செய்வார்கள் என்று பார்த்தால் அதையும் தொங்கலில் வைத்து விட்டார்கள்.
இனி யாரை எதிர்த்து போராடுவது?
ஆறு வாரம் கெடு விதித்த போது ஏன் கெடு முடிந்து மேலும் மூன்று மாதம் கேட்டு மனு போட்டீர்கள் என்று கேட்கவில்லை.
திட்டம் என்பதின் பொருள் தெரியாமாலா பெரிய வழக்கறிஞர் களை வைத்து வழக்கு நடத்தினீர்கள் என்று கேட்கவில்லை.
கர்நாடக தேர்தலை காரணம் காட்டுகிறீர்களே தவறில்லையா என்று கேட்கவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக 2007 ல் இறுதி தீர்ப்பு சொல்லப்பட்டு 2013 ல் அரசிதழில் வெளியிடப் பட்ட நடுவர் மன்ற தீர்ப்பு எல்லா வகையிலும் செல்லும் என்று சொல்லிவிட்டு இப்போது அது திட்டமா ஆணையமா என்று கேட்டால் முதலில் திட்டத்தை தாக்கல் செய்யுங்கள் பிறகு அதை எப்படி அமுல் படுத்துவது என்பதை நாங்கள் தீர்மானிக்கிறோம் என்று புது தீர்ப்பை இன்று சொல்கிறார் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா .
நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் சொல்லப் பட்ட மேலாண்மை ஆணையமே உச்ச நீதி மன்றத்தால் உறுதி செய்யப் பட்டது என்று எல்லாரும் நம்பியிருந்த வேளையில் நடுவர் மன்ற தீர்ப்பில் சொல்லப் பட்டவை எல்லாம் தங்கள் தீர்ப்பில் அடங்கி விட்டன என்றும் அதைப்பற்றி கவலைப் படாமல் நீங்கள் ஸ்கீம் என்ற திட்ட வரைவை தாக்கல் செய்யுங்கள் என்று தீபக் மிஸ்ரா சொல்லியதன் மூலம் தமிழர்களின் நெஞ்சில் வேலைப் பாய்ச்சி விட்டார் அவர்.
இனிமேல் திட்ட வரைவு என்னென்ன மாற்றங்களை எல்லாம் பெறுமோ யார் கண்டது.?
எல்லாவற்றுக்கும் மேலாக எந்த திட்டமாக இருந்தாலும் அதை நிறைவேற்றும் அதிகாரம் யார் கையில் இருக்கும் என்பதுதான் பிரச்னை முடியுமா முடியாதா என்பதை தீர்மானிக்கும்.
அதைப்பற்றி எந்த தெளிவும் இல்லை.
எந்த திட்டமாக இருந்தாலும் கட்டுப்பாடு கர்நாடகத்திடம் இருந்தால் மீண்டும் பழைய பல்லவியை பாடி மிச்சமிருந்தால் தான் திறப்போம் என்று மகுடி ஊதுவார்கள். மீண்டும் உச்சநீதி மன்றம் விளக்க வேண்டும். உச்ச நீதி மன்றம் தான் எப்படி விளக்கும் என்பதை பார்த்து விட்டோமே?
தீர்ப்பு சொல்கிறவர்கள் சட்டத்தையும் நியாயத்தையும் மட்டுமே பார்க்காமல் , தேர்தல் , இரு மாநில மக்களின் உணர்வுகள், அதனால் ஏற்படும் சட்ட ஒழுங்குபிரச்னைகள் , மத்திய அரசின் அணுகுமுறை என்று எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு சமன் செய்ய நினைத்து தீர்ப்பு சொன்னால் இப்படித்தான் ஒருதலைப் பட்சமாக அது முடியும்.
நீங்கள் என்ன நல்ல நோக்கம் கொண்டிருந்தாலும் இது அநீதியேதான்.
ஆக தமிழகம் கொந்தளிப்பு நிலையில் இருக்கும் போது அதை அடக்க வேண்டிய உச்ச நீதி மன்றம் கொதிப்பை அதிகப் படுத்தி இருக்கிறது.
ஆக பிரச்னை திட்டமா ஆணையமா என்பதை உச்ச நீதி மன்றம் தீர்மானிப் பதற்குள் கர்நாடக தேர்தல் முடிந்து விடும்.
உச்சநீதி மன்றத்திற்கு நாம் உள்நோக்கம் கற்பிக்க வில்லை. ஆனால் அதன் செயல்பாடுகள் அந்த மாதிரி சிந்திக்க தூண்டுகிறது.
இங்கே நமக்குள் நிலவும் பகை தான் முதல் கேடு. பிரதமர் வரும்போது நாங்கள் கருப்பு கொடி காட்டுவோம் எதிர்ப்பை பதிவு செய்வோம் என்றால் நாங்கள் பச்சை கொடி காட்டுவோம் என்று ஆளும் கட்சியே துணிந்து விட்டது. ஒரு கட்டத்தில் இந்த ஐந்தாம் படையின் ஒரு பகுதி பா ஜ க வில் இணைந்தாலும் ஆச்சரியம் இல்லை.
வயிறு காயும்போது ஐ பி எல் விளையாட்டு ஒரு கேடா என்றால் காவல் துறை வலிமை காட்டி நடத்தியே தீருவோம் என்று கொக்கரிக்கிறார்கள்.
நமக்குள் அடித்துக் கொண்டு வீழ்வதா?
கேவலம் கூட்டுறவு சங்க தேர்தல்களை கூட நமக்குள் சண்டை போடாமல் நடத்திக் கொள்ள முடியவில்லை.
ஜனநாயகத்திற்கே நாம் தகுதி யானவர்கள் தானா?
தமிழகத்திற்கு எதிராக கச்சை கட்டி நிற்கும் மோடியின் மத்திய அரசு; தன் தீர்ப்பையே தானே மாற்றி எழுதி வஞ்சிக்கும் உச்ச நீதி மன்றம்; யார் சொன்னாலும் நாங்கள் கேட்க மாட்டோம் என்று கொக்கரிக்கும் கர்நாடக அரசு;
இப்படி தொடர் வஞ்சனையில் சிக்கி இருக்கும் தமிழகம் காக்கப் படுமா?
இல்லை வஞ்சிக்கப் பட்டே மடிவதுதான் தமிழனின் தலை விதியா?
இவர்களுடன் ஒன்றிணைந்து வாழவே முடியாதா?