கோட்டை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த , தகுதி நீக்கம் செய்யபட்டிருக்கிற, சட்ட மன்ற உறுப்பினர்கள் வெற்றிவேலும் தங்க தமிழ் செல்வனும் முதல் அமைச்சர் பழனிசாமி மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூறினார்கள்.
அதில் பல நூறு கோடிகள் சம்பத்தப் பட்ட ஒப்பந்தங்களை தனது நெருங்கிய ரத்த சொந்தங்களுக்கு வழங்கி பழனிசாமி ஊழல் செய்திருப்பதாக தெரிவித்தார்கள் .
அதற்காக அவர்கள் மீது காவல் துறையை கொண்டு அவர்களை கடமையை செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்து தேடி வருகிறது காவல் துறை.
இவர்கள் முன் ஜாமீன் போவார்கள். அங்கேயும் இதையே கூறுவார்கள்.
குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா இல்லையா என்பதை பழனிச்சாமி தரப்பு விளக்க முன்வரவில்லை. மாறாக சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தியதாக பொய் குற்றச்சாட்டு கூறி நடவடிக்கை எடுக்கிறார்கள்.
இது ஒருவிதத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகி விடும்.
அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்றம் செல்ல வேண்டியதுதானே பத்திரிகை யாளர்களை ஏன் சந்திக்க வேண்டும் என்கிறார்.? கோட்டை வளாகத்தில் செய்தியாளர்களை சந்திப்பது என்பது வழக்கமான ஒன்றுதானே?
ஒப்பந்த வெளிப்படை சட்டம் இருக்கும் போது தானே அதை மீறி எல்லாம் நடக்கிறது.
எல்லா ஊழல்களும் சட்டங்களை மிதித்து செய்யப் படுபவைதான்.
மக்கள் மன்றத்துக்கு ஒரு குற்றச்சாட்டை கொண்டு செல்வதை குற்றம் என்று சொல்பவர்கள் ஜனநாயக வாதிகளாக இருக்க முடியாது.
இவர்களை தூண்டி விட்டு தினகரன் பின்னால் நின்று இயக்குகிறார் என்று ஜெயக்குமார் கூறுகிறார். தினகரன் வைத்திருக்கும் கோடிக்கணக்கான சொத்துக்கள் எப்படி வந்தன என்றும் கேட்கிறார். ஆக எல்லாரும் கொள்ளை யடிப்பது தான் வாடிக்கை என்பது அவர்கள் வாயினாலே வெளியில் வருகிறது.
இன்னும் என்னென்ன வெல்லாம் வெளிச்சக்கு வர காத்திருக்கிறதோ?
வேடிக்கை பார்க்க நாமும் காத்திருப்போம்.