Home Blog Page 79

அதிமுக எம்பிக்கள் ஆடு மாடுகள்; காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு கிடைக்காது; சு.சாமி??!! அடிமைகள் மௌனம்??!!

அறிவு ஜீவியா  பைத்தியக்காரனா?    சுப்பிரமணியசாமியை எப்படி வர்ணிப்பது?

பறையர்  என்று  யாரையோ திட்டப்போக  எதிர்ப்பு கிளம்பவும்  அது ஆங்கில அகராதியில் இருக்கிறது என்று  பதில் சொன்னார்.     எதிர்பவர்களை பொறுக்கிகள் என்று வர்ணிப்பது அவரது  வாடிக்கை.    சொல்பவர் அப்படித்தான் என்று யாரும் அதை பொருட் படுத்துவதில்லை.

ஆனால் அளவு  மீறிக்கொண்டிற்குகிறார் சு. சாமி.

இந்த அத்துமீறல்களை ஏன் பொறுப்புள்ள ஊடகங்கள் கண்டிப்பதில்லை.    அவர் பார்ப்பனர் என்பதாலா?      ஊடகங்கள் பெரும்பாலும் அவர்கள் வசம்தானே!

ஆனால் அவர் பா ஜ க வின் அகில இந்திய தலைவர்களில் ஒருவர்.       அவர் சொல்வதற்கும் பா ஜ க வுக்கும் சம்பந்தம் ஏதுமில்லை என்று தமிழிசை சொல்கிறார்.      பின் ஏன் பா ஜ க வில் வைத்திருக்கிறீர்கள்?

சங்கராசாரியுடன் சமமாக நாற்காலி போட்டு  உட்கார அவரால் முடிகிறது.    பொன். ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்தாலும் கீழேதான் உட்கார வேண்டும்.    தன்மானம் இருந்தால் வெளியே வந்திருக்க வேண்டாமா?

பலகுரல் பா ஜ க தரப்பில் இருந்து கேட்கும்.    எது உண்மையான பா ஜ க வின் குரல் என்று வெகு சிலருக்குத்தான் தெரியும்.

பா ஜ க எம்பிக்கள் எத்தனை முறை தீவிர இந்துத்துவ கருத்துக்களை வெளியிட்டிருக் கிரார்கள்.    யார் மீதாவது நடவடிக்கை உண்டா?     எனவே திட்டமுடன் தான் பேசுகிறார்கள்.

அப்படித்தான் சுப்பிரமணியசாமியும் பேசுகிறார்.

என்ன தைரியத்தில் அதிமுக எம்பிக்களை ஆடு மாடுகள் என்று விமர்சிக்கிறார்.    ஒபீஸ் சிடம் கேட்கிறார்கள் என்ன இப்படி சொல்கிறாரே என்று?     அவருக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியுமா என்று பதில் சொல்கிறார்.     இவர்களுக்கெல்லாம்  தன்மான உணர்வு என்று ஒன்று உண்டா இல்லையா?

அதைப்போல் காவிரித் தண்ணீர் தமிழ்நாட்டுக்கு கிடையாது என்று சொல்கிறார்.

பிறகு எதற்கு நடுவர் நீதிமன்றம்?   இறுதி தீர்ப்பு எதற்கு?    அரசிதழ் வெளியீடு எதற்கு?    உச்சநீதி மன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க இருக்கிறதே அது எதற்கு?      உலகில் அமுலில் இருக்கும் பன்னாட்டு நதிநீர் பங்கீட்டு உரிமை இரு மாநிலங்களுக்கு இடையே கிடையாதா?    இதெல்லாம் தெரியாமல் சுப்பிரமணியசாமி பேசியிருப்பார் என்று சொல்ல முடியுமா?

தெரிந்தே தான் ஏதோ  ஒரு செய்தியை சொல்ல வருகிறார்.    அது தமிழ்நாடு காவிரி நீரை கர்நாடகத்திடம் இருந்து எதிர்பார்க்க வேண்டாம்.   அதற்கு பா ஜ க துணை  செய்யாது .   வேறு வழிகளை பார்த்துக் கொள்ளுங்கள் .  எங்களுக்கு கர்நாடகா ஆட்சிக்கு வர வேண்டும்.   தமிழ்நாட்டில்  அதற்கு வாய்ப்பு இல்லை.    எனவே பா ஜ க விடம்  எதிர் பார்க்காதீர்கள்.     வெங்கையா நாயுடுவும் நிர்மலா சீதாராமனும் கூட இப்படித்தானே தமிழ் நாட்டு நலன்களுக்கு எதிராக பேசினார்கள்.

இஸ்ரேல் நாட்டிடம் இருந்து எந்திரம் கொண்டு வந்து தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்னையை தீர்த்து விடுவாராம்.   அதுவும் நான்கு மாதத்துக்குள் இந்த திட்டத்தை  முடிக்க முடியுமாம்?     அது முடியும் என்றால் நாட்டில் மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பிரச்னை எதுவுமே இருக்காதே?

சென்னை மீஞ்சூரிலும் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப் பட்டு வருகிறது.    ஆனால் அதற்கு ஆகும் செலவு?      குடிநீருக்கே பஞ்சம் என்றால் சாகுபடிக்கு எப்படி போதும்?

அதிமுகவை இதைவிட யாரும் அவமானப் படுத்த முடியாது.   ஆனால்  எந்த அதிமுக தலைவரும் இதை ஒரு பொருட்டாக கூட எடுத்துக் கொள்ள தயாராக இல்லை.    பயம்.   வருமான வரித்துறை மீதும் அமுலாக்கதுறை மீதும் சி  பி ஐ மீதும் பயம்.      கொள்ளையடித்தவர்கள் பயந்துதான் ஆக வேண்டும்.

ஏதாவது பொறுப்புள்ள ஊடகம் இதைப்பற்றி எழுதி பிரச்னை எழுப்பி அதை  மக்கள் போராட்டமாக மாற்றினால்தான் இது போன்று பொறுப்பில்லாமல் பேசி குழப்பத்தை  ஏற்படுத்த முயற்சிப்பவர்களின்  முகமூடி கிழியும்.

 

நாகாலாந்தில் தேர்தல் நடக்குமா? மோடி செய்த ரகசிய உடன்பாடு நிலைக்குமா?

இம்மாதம் நடக்க இருக்கும் நாகாலாந்து மாநில தேர்தலை புறக்கணிக்க அனைத்துக் கட்சிகளும் முடிவெடுத்து இருக்கின்றன.

அகண்ட நாகாலாந்து அமைப்பது நாகா இயக்கங்களின் நீண்ட கால கோரிக்கை.

பக்கத்து மாநிலங்கள் ஆன அசாம் , அருணாச்சல் பிரதேசம் மணிப்பூர் போன்ற வற்றில்இருந்து நாகா மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை நாகாலாந்து மாநிலத்தில் இணைக்க வேண்டும் என்பதே கோரிக்கை.

ஏறத்தாழ மாநில பிரிவினையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது தான் .   அதற்கு மற்ற மாநிலங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லவா?

இதே கோரிக்கையை எல்லா மாநிலங்களும் எழுப்பினால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

ஆயுதம் ஏந்தி போராடியவர்களை பேச்சு வார்த்தைக்கு இழுக்க மோடி அரசு  2015 ம் ஆண்டில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது.

வேடிக்கை என்னவென்றால் அந்த ஒப்பந்தத்தில் என்ன இருந்தது என்பது வெளியில் சொல்லப் பட வில்லை.

இப்படி ரகசியமாக ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?   அது நிலைக்குமா?     மற்ற மாநிலங்களிலும் இது போன்ற கோரிக்கைகள் எழலாம் என்பதே அச்சம்.

எதுவாக இருந்தாலும் பகிரங்கமாக விவாதித்து எடுக்கப் படும் முடிவுகளே நிலைக்கும்.

அசாம் மாநிலத்தின் தீமா ஹசாவோ பகுதி விரைவில் நாகாலந்துடன் இணைக்கப் படும் என்ற ஒரு ஆர் எஸ் எஸ் தலைவரின் பேச்சால் எழுந்த வன்முறையில் இருவர் உயிர் இழந்திருக்கி றார்கள்.     இது தேவையா?

சென்ற முறை அனைத்து கட்சிகளும் தேர்தல் புறக்கணிப்பு முடிவு செய்தபோது காங்கிரஸ் மட்டும் போட்டியிட்டு வென்று ஆட்சியை பிடித்தது.   இப்போதும் அதே முறையை பா ஜ க வும் கடைபிடித்து ஆட்சியை பிடிக்க முயற்சி செய்யலாம்.    அப்படி செய்தால் மீண்டும் வன்முறை வெடிக்கும் ஆபத்து உள்ளது என்பது மறுக்க முடியாது.

பா ஜ க அரசு செய்வது ஆரோக்கியமான அரசியல் அல்ல.

துணை வேந்தர் கைது சுட்டிக் காட்டும் ஊழல் சாம்ராஜ்யம்??!!

பாரதியார் பல்கலை கழக துணைவேந்தர் கணபதி முப்பது லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்  பட்டிருக்கிறார்.

துணை வேந்தர் நியமனங்களில் கோடிகளில்  லஞ்சம் கொடுத்து பதவி பெருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

ஆனாலும் யாரும் இதை  தடுத்து நிறுத்த முனைந்ததில்லை.    ஏன்?     எல்லாருக்கும் இதில் பங்கு இருந்திருக்கிறது.

இத்தனை கோடி லஞ்சம் கொடுத்து வந்தவன் எந்த நம்பிக்கையில் கொடுக்கிறான்?    அதை விட பல மடங்கு சம்பாதிக்க  முடியும் என்ற நம்பிக்கையில் தானே?

அதை நிறுத்த என்ன செய்திருக்கிறார்கள்.?

துணைவேந்தர் களுக்கு இருக்கும் நியமன அதிகாரம் தான் இதற்கு அடிப்படை.   தமிழ் நாட்டில் இருக்கும்  19  அரசு பல்கலை கழகங்களிலும் இதே நிலவரம்தான்.

பதவி நியமனம், பணி  இட மாறுதல் , போன்றவற்றில்  ஒவ்வொரு காரியத்திற்கும் லட்சங்களில் பேசப்படும் பேரம்தான் ஊற்று .

அனைத்திலும் வெளிப்படையான நடைமுறை அமுலில் இருந்தால் இந்த பேரத்திற் கெல்லாம் தேவை இருக்காதே?

ஆக இந்த ஊழல் என்பது எல்லா மட்டத்திலும் நிலை பெற்றிருக்கிறது.

இந்த ஊழல் ஒருமட்டத்தில் மட்டும் நிலை பெற்றிருக்க முடியாது.

அமைச்சரவைக்கு இதில் எந்த பங்கும் இல்லையா?   அமைச்சருக்கு என்ன பொறுப்பு?   செயலாளர் தரும் வழிகாட்டுதல் களையும் மீறி துணை வேந்தர் செயல் பட்டிருக்கிறார் என்றால் அதில்  யார் யாருக்கு  பங்கு இருக்கிறது. ?  கல்வித்துறை செயலாளர் தான் இதில் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இதில் முழுமையான விசாரணை இல்லாமல் ஒரு துணை வேந்தர் மீது மட்டும் நடவடிக்கை என்றால் அதில் எந்த அர்த்தமும் இல்லை.

எந்த பல்கலையிலும் இனி இத்தகைய ஊழல் நடை பெற கூடாது.

அதற்கான வழிமுறைகளை உடனடியாக வகுப்பதுதான் உடனடி தேவையே  தவிர   ஒரு குற்றவாளியை மட்டும் தண்டிப்பது அல்ல.

கல்வித்துறையில் நிலவும் இந்த ஊழல் ஒழிக்கப் படும்வரை எந்த சீர்திருத்தமும் செய்ய முடியாது.

பட்ஜெட்; மோடி அரசின் மாயா ஜால அறிவிப்புகள்; நடைமுறைக்கு வருமா??!!

முதல் முறையாக பட்ஜெட்டை ஆங்கிலத்திலும் இந்தியிலும் படித்ததுதான் அருண் ஜெட்லியின் சாதனை.       இந்தியை ஒருவழியாக பட்ஜெட் உரையில் திணித்தாகிவிட்டது.

இனி தொடரும் என்று உறுதி செய்யப் பட்டு விட்டது.     எதில் வேண்டுமானாலும் பேசி விட்டுப் போங்கள்.   அப்போதே மாநில மொழிகளில் பெயர்த்துச் சொல்லுங்கள்.     பிரச்னையே இல்லை.   அது வரும் வரை இந்த திணிப்பை எதிர்த்துக் கொண்டுதான் இருப்போம்.

வருமான வரி விலக்கை ஐந்து லட்சம் ஆக உயர்த்தப் படும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப்  போனது.    மாத வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும் நாற்பதாயிரம் நிரந்தர விலக்கு என்று ஆறுதல் தர முயன்றி ருக்கிறார்கள்.

நூறு நாள் வேலைத்திட்டத்துக்கு போதிய நிதி  ஒதுக்கப் பட வாய்ப்பில்லை. மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் 75,000 கோடி போதாது. தமிழகத்துக்கு என்று எந்த புதிய வாய்ப்பும் இல்லை.

250 கோடி வரை வருமானம் ஈட்டும் நிறுவங்களுக்கு மட்டும் ஐந்து சதம் வரி குறைப்பு செய்யப் பட்டிருக்கிறது.

பெரு நிறுவங்களுக்கு வழங்கப் படும் சிறப்பு சலுகைகள் நீடிக்கப் படும்.

வழக்கம் போல விவசாயம் சிறப்பு கவனம் பெறும் என்று சொல்லி விட்டு அதற்கான நிதி எங்கே இருந்து வரும் என்று சொல்லாமல் விட்டு விட்டார்கள்.

குறிப்பிடும் அறிவிப்பு வேளாண் விளை பொருள்களுக்கு குறைந்த பட்ச  ஆதரவு  விலை உற்பத்தி செலவில்  1.5  மடங்கு உயர்வு.        இதை எப்படி அமுல் படுத்தப் போகிறார்கள் என்பதை பொறுத்துதான் இதன் உண்மைத் தன்மை வெளிவரும்.

பயிர் காப்பீட்டு திட்டம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.      லாபகர  விலை ,  உத்தரவாதமான பயிர் காப்பீடு ,  இடைத்தரகர் இல்லா சுலப சந்தைப் படுத்தும் வசதி இருந்தாலே விவசாயிகளுக்கு வேறு எந்த சலுகைகளும்  தேவை இல்லை.

இந்த ஒரு அறிவிப்பை மட்டும் மோடி அரசு உறுதி செய்தால்   அது  விவசாயிகள் வாழ்வில்  பெரிய  மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

வெறும் வாய்ச்சவடால் என்பதே முந்தைய மோடியின் அறிவிப்புகளின் தன்மை.

எனவே நம்பகத் தன்மையை மோடி அரசு பெற வேண்டுமானால் எப்படி இந்த அறிவிப்புகளை அமுல் படுத்த போகிறார்கள் என்பதை வைத்தே எடை போடுவார்கள் மக்கள்.

இப்போது வந்திருக்கும் மூன்று பாராளுமன்ற இரண்டு சட்ட மன்ற இடைதேர்தல் களில்

பா ஜ க தோற்றிருப்பது மக்கள்  பா ஜ வை  நம்பத் தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது.

இலங்கையின் அடாவடிச்சட்டமும் இந்தியாவின் கள்ள மௌனமும் ??!!

தமிழ் மீனவன் எவனும் இனி மீன் பிடிக்கக் கூடாது என்று இலங்கை முடிவெடுத்து விட்டது.

இந்தியாவும் அதற்கு ஒப்புதல் அளித்து விட்டது போல்தான் தோன்றுகிறது.

ஆம்.   இலங்கையின் புதிய சட்டப் படி கடல் எல்லையை தாண்டி மீன் பிடிக்கும் தமிழ் மீனவர்களுக்கு ஐம்பது லட்சம் முதல் ஏழரை கோடி வரை அபராதம் விதிக்கும் வகையில் கடுமையான வகையில்  தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப் பட்டிருக்கிறது.

Sri lanka Fisheries and Aquatic Resources Act 1960   – Fisheries ( regulation of Foreign Fishing Tawlers ) Act  dated 24.01.2018  ன் படி இனி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப் படும் தமிழ் மீனவர்கள் இனி ஐம்பது லட்சம் முதல் ஏழரை கோடி வரை அபராதம் செலுத்தி விட்டுத்தான் வர முடியும் என்ற சட்டம் இயற்றப்பட்டு விட்டது.     இது பற்றி இந்திய அரசு மௌனம் சாதிக்கிறது.    இது இலங்கை அரசு மட்டும் முடிவெடுக்கக் கூடிய பிரச்னையா?

கடல் எல்லை நிர்ணயம் கச்சதீவை தாரை வார்க்கப் பட்டபின் தமிழ் மீனவர்களுக்கு எதிராக இருக்கிறது.

தாரை வார்த்தது நியாயமா சட்டப்படி சரியா என்பது உச்ச நீதி மன்றத்தில்  இருக்கிறது.   ஆனால் எந்த தீர்வும் கிடைக்குமா என்பது ஐயமே?

இந்நிலையில் ஒரு கேள்விதான் மிச்சமிருக்கிறது.

தாரை வார்த்தபோதுதான் தமிழகத்தை கேட்கவில்லை.

அப்போது பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமல் செய்யப் பட்ட தாரை வார்த்தல் செல்லுமா செல்லாதா என்பது  இருக்கட்டும்.  பெருபாரி வழக்கில் அந்த இடத்தை வங்காள தேசத்துக்கு தாரை வார்த்தது செல்லாது என்ற உச்ச நீதி மன்ற தீர்ப்பு கச்சதீவுக்கும் செல்லுமா செல்லாதா என்பதை உச்சநீதி மன்றம் தான் சொல்ல வேண்டும்.

அதற்கு பிறகு இரண்டு நாட்டு வெளி உறவு செயலாளர்களுக்கு இடையே செய்யப்  பட்ட ஒப்பந்தம் செல்லுமா செல்லாதா என்பதுதான் இப்போதைய கேள்வி.

அதன் படி தமிழ் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை இரு நாட்டு அரசுகளாலும் பாது காக்கப் படும் என்று செய்து கொண்ட ஒப்பந்தம் என்னவாயிற்று?

அந்த ஒப்பந்தத்தை இரு நாட்டு அரசுகளும் அமுல் படுத்துவதில்  உறுதியாக  இருந்தாலே  கச்சத்தீவு பிரச்னை எழவே வாய்ப்பு இல்லை.

உரிமைகள் பறிக்கப் படும்போது கடிதம் எழுதும் உரிமை மட்டுமே தான் நமக்கு  இருக்கிறது என்பது அவமானம்.   அதைவிட அவமானம் தமிழ் நாட்டு மீனவர்கள் இந்திய மீனவர்கள் என்பதை  இந்திய அரசு அங்கீகரிக்க வில்லை என்பதுதான்.

சோடா பாட்டில் வீசவும் கல் எறியவும் எங்களால் முடியும் ; சடகோப ராமானுஜ ஜீயர் பேச்சு ??!!

ஆச்சரியமாக இருக்கிறதா?

ஸ்ரீ வில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் வைரமுத்து மன்னிப்பு கேட்க பிப்ருவரி மூன்றாம் தேதி கெடு வைத்திருக்கிறார்.

இல்லையென்றால் உண்ணாவிரத போராட்டம் இருப்பேன் என்றும் மிரட்டி இருக்கிறார்.

அப்படி பேசும்போதுதான் இறை நம்பிக்கைக்கு எதிராக யாராவது பேசினால் எங்களால் சோடா பாட்டில் வீசவும் கல் எறியவும் முடியும் என்று பேசியிருக்கிறார்.   அதாவது நாத்திகம் பேசுவதே குற்றம் என்பது அவரது தெளிவான கருத்து.

இந்த திமிர் அவருக்கு எப்படி  வந்தது.?

தமிழர்கள் கொடுத்த இடம்.     தமிழர்களுக்கு எதிராக தமிழர்களையே தூண்டி விட அவர்களால் முடிகிறது.

இன்று மத்தியில் அவர்களது ஆட்சி.    மானிலத்தில் அவர்களுக்கு அடங்கிய ஆட்சி.    எனவே என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று துணித்து விட்டார்கள்.

அதே கெடு வைத்து திராவிடர்  கழக தலைவர் கி . வீரமணி  விஜயேந்திரர் மன்னிப்பு கேட்காவிட்டால் சங்கர மடங்களை முற்றுகை  இடுவோம் என்று எச்சரித்திருக்கிறார்.

இது எங்கே கொண்டு போய் விடும் என்று தெரியவில்லை.

ஒன்று மட்டும் தெரிகிறது.   பார்ப்பானுக்கு ஆட்சி அதிகாரம் கையில் கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வான் .

வைரமுத்து பிரச்னை நீதிமன்றத்தில் இருக்கிறது.    நீதிபதியே வைரமுத்து ஒரு கருத்தை மேற்கொள் காட்டியதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்டிருக்கிறார்.

தவறு என்று நீதிமன்றமே சொல்லாத போது .

செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று  கோரும் சடகோப ராமானுஜ ஜீயரை கைது செய்ய வேண்டும் .   அவர் மீது சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விதம் நடந்து கொண்டதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையில் நியாயம் இருக்கிறதா இல்லையா?

விஜயேந்திரர் தமிழ்த்தாய் அவமதிப்பு செய்ததை எந்த பார்ப்பானும் தவறு என்று சொல்லவில்லை.

ஏதாவது சொல்லி நியாயப் படுத்தவே பார்க்கிறார்கள்.    கமல் உள்பட.

இன்னிலையில் ஒரு மடத்தின் பொறுப்பில் இருப்பவர் இப்படி வன்முறையை தூண்டும் விதமாக சோடா பாட்டில் வீசுவோம் என்று பேசுவது கேவலத்திலும் கேவலம்.

அந்தப் பொறுப்பில் இருக்க அவருக்கு தகுதி  இருக்கிறதா என்பதை அதிகாரிகள் ஆராய வேண்டும்.

உடனடியாக ஜீயர் மீது காவல் துறை தக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

கமலின் சங்கர மட பாசம்??!!

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு விஜயேந்திரர் ஏன் எழுந்து நிற்கவில்லை என்று தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்திருக்கிறது .

ஒரு பார்ப்பனர் கூட விஜயேந்திரர் செய்தது சரியில்லை  என்று சொல்லவில்லை.   .   அந்த பட்டியலில் கமலஹாசனும் சேர்ந்துகொண்டார்.

நிருபர்கள் கேட்கிறார்கள் சங்கராச்சாரி செய்தது சரியா என்று.   சரி அல்லது  தவறு என்று  சொல்லவேண்டும்.

கமல் சொல்கிறார்.   ‘ கண்ட இடத்தில்  பாடுவது தவறு.   ‘   நூல் வெளியீட்டு விழா கண்ட இடமா?    பின்னர் சினிமா தியேட்டர் என்றும் சொல்கிறார்.     விழாவும் தியேட்டரும் ஒன்றா?

ஏன் தியானத்தில்  இருந்தார் என்ற கேள்விக்கும் பதில் சொல்கிறார்.

‘ தியானம் செய்வது அவர் கடமை.   எழுந்து நிற்பது  என் கடமை.”

அப்படியென்றால் விஜயேந்திரர் எழுந்து நிற்காதது தவறில்லை என்பதுதானே கமலின் வாதம்.    அவர் கடமை தியானம்  என்றால் எழுந்து நிற்பது தவறில்லை என்பதுதானே அர்த்தம்.

உண்மையில் கடவுள் வாழ்த்து ஒன்று பாடப் பட்டு அதில் விஜயேந்திரர் எழுந்து நிற்கவில்லை என்றால் கூட அது பிரச்னை ஆகி இருக்குமா என்பது  கேள்விக்குறி.

சமஸ்க்ரிதத்தில்  கடவுள் வாழ்த்து பாடல் ஒன்று  பாடி  உட்கார்ந்து கொண்டு விட்டு போயேன்?    யார் கேட்கிறார்கள்.?

தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது 1970  முதல் அரசாணை மூலம் கட்டாயம் ஆக்கப்பட்டது உங்களுக்கு ஏற்புடையது இல்லை என்று நினைத்தால் நீதிமன்றம் மூலம் அதை நீக்க முயற்சித்து இருக்க வேண்டும்.    ஆணை இருக்கும்போது அதை மதிப்பது தான் குடிமக்களின் கடமை.

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப் படுத்த வேண்டும் என்று கிளம்பினால் எதிர்ப்பை சந்தித்து தான் ஆக வேண்டும்.

பார்ப்பானர் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பது தெளிவு.

இந்த தெளிவு மற்றவர்களுக்கு இல்லை என்பது துயரம்.

வைரமுத்து சொன்னது போல் ரஜினியும் கமலும் இரு கண்கள் என்றார்.    கண்கள் பேசுவதில்லை என்றும் சொன்னார்.

தவறு. தேவைப்  படும்போது , இனம் என்று வரும்போது விட்டுக் கொடுக்காமல் பேசும் என்று நிரூபித்திருக்கிறார் கமல்.

அடையாளம் காட்டிக் கொண்டவரை நல்லது.

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த சங்கரமட விஜயேந்திரர் மன்னிப்புக் கேட்க வேண்டும் ???!! கோரிக்கை வலுக்கிறது!!!

தமிழ் நீஷ பாஷை என்பது சங்கர மட கொள்கை.

அதனால்தான் பூஜை வேளையில் சங்கராச்சாரியார் நீச பாஷையில் பேச மாட்டார் என்று தமிழில் பேசாத தற்கு விளக்கம் தரப்பட்டது சந்திர சேகரேந்திரர் காலத்திலேயே.

தமிழில் குடமுழுக்கு நடத்த விட மாட்டார்கள்.

தமிழில் அர்ச்சனை செய்ய விட மாட்டார்கள்.

தமிழனை கர்ப்ப கிருகத்திற்குள் விட மாட்டார்கள்.

கும்பிடவும் காணிக்கை செலுத்தவும் மட்டுமே இவர்களுக்கு தமிழர்கள் வேண்டும்.

அதன் வழியில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது உட்கார்ந்தே இருந்தார்.       அவருக்கு மட்டும் சற்று உயரமாக ஒரு மேடை.   அவருக்கும் கீழே உள்ள இருக்கை களில் ஆளுநர் , சாலமன் பாப்பையா , எச் ராஜா போன்றோர் அமர்ந்திருந்தார்கள்.

அந்த விழாவே எச் ராஜாவின் தகப்பனார் தமிழ்-சமஸ்க்ரிதம் பொருள் கூறும் நூலை எழுதியதை வெளியிடும் விழா.    அதில் தனது தாய் மொழி சமஸ்க்ரிததிற்கு தான் செய்யும் தொண்டு என்று அதன் ஆசிரியர் ஹரிஹரன் குறிப்பிடுகிறார்.

விழா முடிவில் தேசிய கீதம் பாடும்போது விஜயேந்திரர் எல்லாரையும் போலவே எழுந்து நின்றார்.

அடப்பாவி ! தமிழ்த்தாயை அவமதிக்க எப்படி இவருக்கு மனம் வந்தது?    இந்தக் கேள்வி எல்லா தரப்பிலும் எழுப்பப் பட்டு கண்டனம்  தெரிவிக்கப் பட்டு வருகிறது.

எதிர்ப்பு கிளம்பியவுடன் கடவுள் வாழ்த்து பாடும்போது அவர் தியானத்தில் இருந்தார் என்றும் அப்போது எழுந்து நிற்பது வழக்கம் இல்லை என்றும் சங்கர மடம் விளக்கம் சொல்கிறது.

ஏன் தேசியகீதம் பாடிய போது த்யானத்தில் இல்லை என்ற கேள்விக்கு பதில் இல்லை.

அவை மரபு கருதி கூட தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற உணர்வு இல்லாமல் அவமரியாதை செய்திருக்கிறார் விஜயேந்திரர்.

1970  ல் கலைஞர் ஆட்சி காலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது உரிய மரியாதை செலுத்த அரசாணை பிறப்பிக்கப் பட்டது.

தேசிய கீதம் பாடும் போது எழுந்து நிற்க வேண்டுமென்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டபோது பல திரை அரங்குகளில் தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்காத பலர் மீது தாக்குதல் நடத்தப்  பட்டது குறிப்பிடத் தக்கது.     மாற்றுத் திறனாளிகள் எழுந்து நிற்காத போது கூட தாக்கப் பட்டனர்.   இப்போது தேசிய கீதம் இசைப்பது திரை அரங்குகளின் விருப்பம் என்று தீர்ப்பு மாற்றப் பட்டது.

மன்னிப்புக் கேட்டு தனது தவறுக்கு வருந்தி தமிழ் சமுதாயத்திடம் விஜயேந்திரர் பரிகாரம் தேட வேண்டும்.

சமுதாய நல்லிணக்கம் கருதி யாவது விஜயேந்திரர் தகுந்த விளக்கம் தந்து மன்னிப்புக் கேட்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

மறுத்தால் அல்லது பிடிவாதமாக நாங்கள் அப்படித்தான் என்று நின்றால் தமிழ் சமுதாயம் தனது எதிர்ப்பை அற வழியில் , அவர் உணரும் வண்ணம், திருந்தும் வண்ணம் காட்ட தயாராக வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு.

வைரமுத்துவின் கம்பீரமும் பார்ப்பனர்களின் சாக்கடைப் பேச்சுகளும் !!??

ஆண்டாள் சர்ச்சையில்  சாதி மத சண்டை களுக்கு முயற்சி செய்த பார்ப்பனீய சூழ்ச்சி தமிழகத்தில் மூக்கு உடை பட்டு நிற்கிறது.

ஆண்டாள் எனக்கும் தாய்தான் . எனக்குத் தமிழ்ப்பால் கொடுத்தவள். அவளை நான் அவதூறு செய்வேனா என்றும் தனது ஆராய்ச்சிக் கட்டுரைக்கு மூலம் இரண்டு பேராசிரியர்கள் எழுதிய கட்டுரைகள் என்றும் வைரமுத்து பேட்டி கொடுத்திருந்தார்.    அந்தப் பேராசிரியர்  நாராயணனை  தந்தி டி வி தொலைபேசியில் பேட்டி கண்ட போது ஆமாம் நான்தான் அந்த மேற்கோளை எழுதினேன் என்று அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.    மூலம் எழுதியவர் எந்த குற்றமும் செய்யாதவர் என்றால் அதை மேற்கொள் காட்டிய நான் எப்படி குற்றவாளியாவேன் என்ற வைரமுத்துவின் கேள்விக்கு எந்த புத்திசாலியும் பதில் சொல்ல முடியவில்லை.

ஆராய்ச்சி கட்டுரை என்பது அனைத்து அம்சங்களையும் கொண்டதாகத்தான் இருக்க வேண்டும் என்ற அடிப்படை கூட புரியாதவர்களாக இவர்கள் இருக்க மாட்டார்கள்.    தெரிந்தே இதை வைத்து ஏதாவது செய்ய முடியாதா என்று ஏங்குபவர்க ளாகத்தான் தமிழ் சமூகம் பார்க்கிறது.

இன்னமும் தேவதாசி நடைமுறை தெலுங்கானா ஆந்திரா மாநிலங்களில் இருப்பதாகவும் அதை ஒழிக்க முயன்று கொண்டிருக்கிறார்கள் என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.     அதில் பாதிக்கப்  பட்டிருப்பவர்கள் பெரும்பாலும் தலித்துகள்.

தமிழ் நாட்டில் தேவதாசி ஒழிப்பு சட்டம் வந்த போது சத்தியமூர்த்தி அய்யர்  எதிர்த்தார்.   முத்துலெட்சுமி ரெட்டி ஆதரித்து பேசி வேண்டும் என்றால் உங்கள் வீட்டுப் பெண்களையும் அதில் அந்த தேவ கைங்கரியத்தில் ஈடுபடுத்துங்களேன் என்று கேட்டதாகவும் சொல்வார்கள்.

இவர்கள்  வருத்தம் எல்லாம் அந்த தேவதாசி முறை இருந்ததா இல்லையா  என்பதை பற்றி எல்லாம் இல்லை.

அந்தப் படி இறைவனுக்கு தன்னை ஒப்புக் கொடுத்தவராக ஆண்டாள் வாழ்ந்தாரா இல்லையா என்பது என்பதே விவாதத்துக்கு கூட வரக்கூடாது என்றுதான் அவர்கள் வாதம் இடுகிறார்கள்.

வருத்தம் தெரிவித்தது கூட சக மனிதனை நான் நேசிக்கிறேன் என்பதற்காகத்தான் என்று தனது பெருந்தன்மையையும் அடிக்கோள்  இட்டு காட்டியிருக்கிறார் வைரமுத்து.    உண்மையில் தமிழர்களின் கௌரவத்தை நிலை நாட்டிய வைரமுத்து கொண்டாடப் பட வேண்டியவர்.

இத்தனைக்கும் அவர் அரசியல் வாதியல்ல.   தமிழுக்காக வாழ்பவர்.

அவரை கொச்சைப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு எஸ் வி சேகர் என்ற பார்ப்பனர் வாய்க்கொழுப்போடு ‘ முட்டாள் தனமாக’ வைரமுத்து அறிக்கை கொடுத்திருப்பதாக பேட்டி கொடுக்கிறான்.    இன்னொரு பார்ப்பன ர் உபதேசம் செய்து பேசுகிறவர்  இவனெல்லாம் ஏதோவொரு சோழன் போல  புழுத்து சாவான் என்று சாபம் கொடுக்கிறான்.     வேளுக்குடி கிருஷ்ணன் ஓரளவு நிதானமாக பேச கூடியவர் என்று பேர் எடுத்தவர்.   அவர்கூட இது சரியில்லை என்று கூறுகிறார்.   எந்த ஒரு பார்ப்பனரும் வைரமுத்துவின் பக்கம் இருக்கும் நியாயத்தை பார்க்கக் கூட  தயாராக  இல்லை.

ராஜாஜி ஒரு பார்ப்பனர்.  அவர் தனது கட்டுரை ஒன்றில் திருப்பாவையை ஆண்டாள் எழுதியிருப்பாரா பெரியாழ்வாரே எழுதி ஆண்டாள் பெயரில் வெளியிட்டிருப்பாரா  என்ற சந்தேகத்தை எழுப்பியதாக சொல்கிறார்கள்.   அப்போது யாரும் ஆட்சேபிக்க வில்லையே?

எல்லாம் போகட்டும் இப்போது கூட கோவில்களில் தமிழர்களுக்கு என்ன இடம்.?

சூத்திரர்களாக , வெளியில் இருந்து வணங்கும் உரிமை மட்டுமே கொண்டவர்களாக , இழிவு படுத்துகிறார் களா இல்லையா?

கிராம கோவில்களில் கூட சாதி பிரிவினைகள் இருக்கின்றவே தவிர பார்ப்பன ஆதிக்கம் குறைந்திருக்கிறதா?

இவர்களை நாம் அடிமைப் படுத்தி வைத்திருந்தோம் இப்போது நம்மோடு இருக்கிறார்கள் அவர்களுக்கு உரிய உரிமைகளை கொடுத்து   விடுவோம் என்று பார்ப்பனர்கள் வருவார்களா?

சமத்துவம் தான் இந்துக் கோவில்களில் இனி கோலோச்சும்.    அங்கு பார்ப்பனர்களுக்கு தனி சலுகை இல்லை. வருவாய் இல்லை என்றால் ஒரு பார்ப்பானும் இந்துவாக இருக்க மாட்டான்.

பெரிய கோவில்களின் வருவாய்களை எப்படி பிரித்து கொள்கிறார்கள் என்பதை சாதாரண இந்து அறிவானா?

எப்படியோ, ஆண்டாள் சர்ச்சையில்

எல்லாத் தமிழர்களும் ஓரணியில்.

காட்டி கொடுத்து லாபம் பார்க்க நினைக்கும் நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன் , தமிழிசை போன்ற பா ஜ க வில் தங்களை அடிமைப் படுத்திக் கொண்ட வர்கள் மட்டும் மறுபக்கம்.

இன்னும் தமிழன் சுயமரியாதை இழக்க வில்லை.

நீட் தேர்வு சூழ்ச்சி நடப்பு ஆண்டும் தொடரும்! சி.பி.எஸ்.இ போர்டு அறிவிப்பு!!??

மனித வள மேம்பாட்டு அமைச்சரகத்தின் கீழ் இயங்கும் சி பி எஸ் இ  நீட் தேர்வை அதன் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்துகிறது.

இதனால் மாநில பாடத்திட்ட மாணவர்கள் பாதிக்கப் படுவார்கள் என்பது சென்ற ஆண்டு சி பி எஸ் இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப் பட்ட நீட் தேர்வின் முடிவுகளில் நிரூபணம் ஆனது.

தமிழக மாணவர்கள் மருத்துவர்கள் ஆகும் வாய்ப்பை தட்டிப் பறித்தது  நீட் தேர்வு!

சி பி எஸ் இ பாடத்திட்டத்திற்கு இணையாக மாநில பாடத் திட்டத்தை மாற்றுவோம் என்றும் நீட் தேர்வை எதிர் கொள்ள பயிற்சி மையங்கள் அமைப்போம் என்றும் சொல்லி மக்களை ஏமாற்றும் நோக்கத்திலேயே மாநில அரசு இயங்கியது.

இவர்களை சமாதானப் படுத்தும் விதமாக மத்திய  அமைச்சர்  ஒருவர் இனி நீட் தேர்வு மாநில பாடத் திட்டங்களில் இருந்தும் இணைத்து நடத்தப் படும் என்று அறிவித்தார்.

இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக சி பி எஸ் இ ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதாவது   ‘நீட் 2018  தேர்வின் பாடத்திட்டம் நீட் 2017 ஆண்டில் இருந்தது போலவே இருக்கும் ‘ என்று சொல்கிறது.    அதாவது இந்த ஆண்டும் சி பி எஸ் இ பாடத் திட்ட அடிப்படையிலேயே நீட் தேர்வு இருக்கும்.

மற்ற மாநிலத்தவர்கள் மருத்துவர்கள் ஆக வாய்ப்பு மறுக்கும் இந்த  பார பட்ச நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது மட்டுமல்ல.    மாநில உரிமைகளுக்கு  எதிரானதும் கூட.

கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப் பட்டால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்.

நமது மருத்துவர்களை நாமே உருவாக்கிக் கொள்ள முடிய வேண்டும்.    அதுவே மாநில உரிமை.

மாநில பட்டியலில் இருந்த கல்வியை மத்திய பட்டியலுக்கு அவசர நிலையின் போது இந்திரா காந்தி மாற்றியது ஒரு துரோகம்.

மாநிலங்களுக்கு துரோகம் செய்து விட்டு ஒரே நாடு என்று சொல்லிக் கொண்டு உங்களை கொள்ளையடிப்போம் என்று சட்டப் படி வெளிப்படையாக கொடுமை செய்கிறார்கள்.

இதற்கு உச்ச நீதி மன்றம் கூட ஒரு விதத்தில் துணை போயிருக்கிறது.

நீட் பயிற்சி கொடுக்கிறோம் என்று கொள்ளையடிக்கும் கூட்டம் பெருகி வருவதுதான் நடக்கிறது.

பிறகு என்ன செய்யத்தான் இந்த பள்ளிகள் இயங்குகின்றன?  இவைகள்  நடத்தும் தேர்வில் தேறிய மாணவர்களுக்கு என்ன மதிப்பு இருக்கிறது?

தொடரும் இந்த கொடுமையை தமிழக அரசியல் கட்சிகள் எவ்விதம் எவ்விதம் எதிர் கொள்ளப் போகின்றன?