Home Blog Page 8

நினைவிடம் அமையுங்கள், ஆனால் ஜெயலலிதா குற்றவாளியே?

ஜெயலலிதா நினைவிடம் அமைத்தல் அவசர சட்டம்  2019க்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்  அளித்துள்ளார்.

அதாவது சொத்துக் குவிப்பு வழக்கில் மற்ற மூன்று பேர்தான் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறியது . ஆனால் ஜெயலலிதா குற்றவாளி என்று கோர்ட்டு சொல்ல வில்லை . எனவே நினைவிடம் அமைப்பதற்கு ஆட்சேபனை செய்ய முடியாது என்பது தமிழக அரசின் நிலைப்பாடு.

இது சரியா? சொத்துக் குவிப்பு வழக்கின் ஆணிவேறே ஜெயலலிதாதான் . அவர்தான் முதல்  எதிரி..மற்றவர்கள் அந்த குற்றத்தை செய்வதற்கு  அவருக்கு துணை நின்றவர்கள

குற்றம் இழைத்தவர்க்கு  துணை நின்றவர்கள் குற்றவாளிகள் என்றால் குற்றம் இழைத்தவர் எப்படி நிரபராதி ஆவார்.?

பிரச்னை ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கலாமா அமைக்க கூடாதா என்பதல்ல.

மூன்று முறை முதல்வராக இருந்தவர் . அவருக்கு நினைவிடம்  அமைப்பது அவரது தொண்டர்களின் தனி உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. தொண்டர்கள் செய்யும் காரியத்தில் குற்றவாளியா இல்லையா என்ற பிரச்னையே எழாது.

ஆனால் அரசு பணத்தில் நினைவிடம் அமைக்க  முயன்றால் அது சட்டப்படி சரியா என்ற கேள்வி நிச்சயம் எழத்தான் செய்யும்.

குற்றவாளி என்றாலும் மக்கள் பிரதிநிதிகள் முடிவெடுத்து அரசு பணத்தை செலவு செய்யும் உரிமை உள்ளது என்று சொல்லட்டும். அதை நீதிமன்றம் அங்கீகரிக்கட்டும்.  அது வேறு.

ஆனால் உச்சநீதிமன்றம் குற்றவாளி என்று சொல்லவில்லை .  எனவே  அரசு செலவு செய்வதை ஆட்சேபிக்க முடியாது என்று  சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

பட்டப்  பகலில்  இத்தகைய அக்கிரமங்கள் அரங்கேற்றப் படுகின்றன. எல்லாம் சட்டத்தின் பேரால்.

இறந்து விட்டதால் தண்டனையை அனுபவிக்க முடியாத நிலைமையில் அவர்மீதான வழக்கு  அற்றுப் போனது என்பதுதானே உண்மை.

அதாவது குற்றவாளிதான். ஆனால் தண்டனையை அனுபவிக்க அவர் இல்லை. எனவே வழக்கு  அற்றுப்  போகிறது.

அதாவது உயிரோடு இருந்திருந்தால் சசிகலாவோடும் இlளவரசியோடும்  சுதாகரனோடும் ஜெயலலிதா சிறையில் நான்காண்டு காலம் கழித்திருப்பார்.  

ஜெயலலிதாவுக்கு நூறு கோடி அபராதம். மற்றவர்களுக்கு தலா பத்து கோடி அபராதம் விதிக்கப்  பட்டது உண்மையா இல்லையா?

வாதங்கள் முடிந்து உடனே  தீர்ப்பு வந்திருந்தால் தமிழக அரசியலே திசை மாறியிருக்கும். காலம் கடத்தியது உச்சநீதி மன்றம். யாரும் உள்நோக்கம் கற்பிக்க முடியாது.  சசிகலா முதல்வராக உரிமை  கோரியதும் உடனே வருகிறது தீர்ப்பு..

நொந்து கொள்வதை தவிர என்ன செய்ய முடியும் சாமானியனால் .

இப்போது வந்திருப்பது அவசர சட்டம் சட்டமானால் அது நீதி மன்ற பரிசீலனைக்கு போகும்.  அதில் தீர்ப்பு வருவதற்குள் நினைவிடம் அமுலில் இருக்கும்.   யார் இடிப்பது.?  போகட்டும் என்று விட்டு விடுவார்கள். ஆக ஒரு அநீதி சட்ட பூர்வமாக்கப் பட்டுவிடும்.

பொதுவாகவே இறந்தவர் தொடர்பாக  நினைவிடம் அமைப்பதற்கு ஆட்சேபணை தெரிவிப்பதை நாகரீக சமுதாயம் விரும்பாது.       

ஆனால் ஒரு  குற்றவாளிக்கு  அரசு அங்கீகாரம்  அளித்து நினைவிடம் அமைப்பது என்பது குற்றத்தை நியாயப் படுத்துவதாக அமையாதா என்பதற்கும் நீதிமன்றம் தான் விடை கூற வேண்டும். 

ஒரு தவறான முன்னுதாரணமாக இது அமைந்து விடக் கூடாதே என்பதே  பொதுமேடையின் கவலை.

 

மனிதன் காப்பாற்ற வேண்டிய நிலையில் கடவுள் இல்லை; விஜய் சேதுபதி சாட்டையடி?

மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதியும் விஜயும் பேசிய பேச்சுகள் மத வெறியர்களுக்கு சாட்டையடி கொடுப்பதாக அமைந்து இருந்தது.

மனிதன் காப்பாற்ற வேண்டிய நிலையில் கடவுள் இல்லை என்று விஜய் சேதுபதி பேசியதுதான் ஹைலைட் .

இன்று நாட்டில் நடக்கும் கலவரம் பெரும்பாலும் கடவுள் மதம் சார்ந்த தாகவே இருக்கிறது.

அதிலும் கடவுளை காப்பாற்ற முனையும் மனிதர்கள் கடவுளின் பெயரால் செய்யும்  அட்டூழியங்கள் அந்த கடவுளுக்கே அடுக்காது.

மதம் கடவுள் எல்லாம் தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்தது. அதை பொது பிரச்னையாக்க முயலும் எவரும் அதில் இருந்து ஆதாயம் அடைய முயற்சிக்கிறார் என்றுதான் பொருள்.

முன்பே நீங்கள் கிறிஸ்தவத்தை பரப்புகிறீர்களா என்று கேட்டதற்கு போய் வேற வேல இருந்தால் பாருங்கடா என்று காட்டமாக பதில் கொடுத்து அவர்கள் வாயை அடைத்தவர்தான் விஜய் சேதுபதி.

அதேபோல் விஜயும் தன் பங்குக்கு தன் மீது மலரையும்  இலைகளையும் கற்களையும் போடுவதை பற்றி கவலைப்படாமல் தன் போக்கில் போகிற நதியை போல் தான் பயணிக்க விரும்புவதாக சொல்லி  சமீபத்தில் நடந்த வருமான வரி ரைடை சுட்டிக் காட்டி பேசி தன் மன வலிமையை  காட்டினார்.

மொத்தத்தில்  மாஸ்டர் பட ஆடியோ வெளியீட்டு விழா பல ஊகங்களுக்கு  வித்திட்டு விட்டது.

பெட்ரோல் விலையை குறைக்காமல் கலால் வரியை உயர்த்தும் கொடுமை ?!

சர்வதேச  சந்தையில் கச்சா எண்ணை விலை பாதியாக குறைந்தும் எண்ணை நிறுவனங்கள்  பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மறுக்கின்றன.

அதாவது ஒரு பீப்பாய் 52.39 டாலராக இருந்த விலை 33.38 டாலராக குறைந்த போதும் தினந்தோறும் விலை நிர்ணயிக்கும் எண்ணை நிறுவனங்கள் விலையை குறைக்க மறுக்கின்றன. காரணம் மத்திய மாநில அரசுகள் இந்த விலை குறைவின் காரணமாக கிடைக்கும் லாபத்தை கலால்  வரியை உயர்த்தி அடைய நினைப்பதுதான்.

யாரை குற்றம் சொல்வது? கலால் வரியை உயர்த்திய மத்திய அரசையா? எண்ணை நிறுவனங்களையா?

இந்த விலை குறைவு எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது தெரியாது.

தினந்தோறும் விலையை உயர்த்தும்போது தினந்தோறும் விலையை குறைப்பதில் என்ன சிரமம்?

பொதுமக்கள் அதிக விலைக்கு பழகி விட்டார்கள். ஏன் அவர்களுக்கு விலையை குறைக்க வேண்டும்?

இந்த சிந்தனை பொது மக்கள் மீது  அரசுக்கு இருக்கும் அலட்சியத்தை காட்டுகிறது.

அரசின் மீது மக்களுக்கு எழும் வெறுப்பு அதிகமாவதை பொருட்படுத்தவில்லை என்றால் மக்களும் உங்களை பொருட் படுத்தப் போவதில்லை. இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மமதை வெகுநாள் நீடிக்காது.

முஸ்லீம்கள் போராட காரணம் இருக்கிறதா இல்லையா ?!

டெல்லியிலும் எல்லா மாநிலங்களிலும் முஸ்லீம்கள் என் பி ஆர் என்ற மக்கள் தொகை கணக்கெடுப்பை எதிர்த்து போராடி  வருகிறார்கள்.

இதை யாராவது தூண்ட வேண்டுமா என்ன? அவர்களுக்கு  இருக்கும்  அச்சத்தால் போராடுகிறார்கள். அந்த  அச்சத்துக்கு முகாந்திரம் இருக்கிறதா என்று மட்டும் பார்த்தால் போதும்.

தமிழக அரசு மத்திய அரசின் கூட்டாளி. அவர்களே மூன்று சந்தேகங்களை எழுப்பி பதில் கேட்டிருக்கிறார்கள். அந்த சந்தேகத்தை நீக்கி விட்டால் அச்சம் அகன்று  விடும் அல்லவா?

மத்திய அரசின் இலக்கு அரசியல் சட்டம் தந்திருக்கும்  சம உரிமை. மத சார்பின்மை. அதை அகற்ற பாடுபடுகிறது பாஜக.

மதசார்பின்மையை அரசியல் சட்டத்தில் இருந்து அகற்றும் நேரத்தை எதிர் நோக்கி  இருக்கிறோம் என்று முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசினாரா இல்லையா? 

அதனால் தான் முஸ்லீம்கள் இவர்கள் ஆட்சியில் இருந்தால் தங்களுக்கு ஆபத்து என்று அஞ்சுகிறார்கள். தங்களை இரண்டாம் தர குடிமக்கள் ஆக்கி விடுவார்களோ என்று அஞ்சுகிறார்கள்.

டெல்லியில் நடைபெறும் போராட்டத்தை திமுகவா தூண்டி விட்டது?

தேவையில்லாமல் ஒரு சட்டத்தை கொண்டுவந்து கலவரத்தை உருவாகிக்கியது பாஜக. அதற்கு முட்டுக் கொடுப்பது அதிமுக.

பொதுமக்கள் வேறு  குடிமக்கள்  வேறு  என்று பாகுபாடு கொண்டுவந்து சிலரை குடிமக்கள் ஆக்காமல் இருக்க சதித் திட்டம் தீட்டுகிறாகள் என்று முஸ்லீம்கள் அஞ்சுகிறார்கள்.

இந்தியர்களோ  அகதிகளோ ஊடுறுவல்காரர்களோ யாராக இருந்தாலும் அவர்களுக்கு நிவாரணம் அளிப்பதில் மதப் பாகுபாடு மொழிப் பாகுபாடு காட்ட இந்திய அரசியல் சட்டம் அனுமதிக்கிறதா என்பதுதான் இன்று  விடை காண வேண்டிய கேள்வி ?     

உச்சநீதிமன்றம் பதில் சொல்லும் வரை காத்திருங்களேன் ?

அதற்குள் சட்டத்தை நிறைவேற்ற மத்திய  அரசு துடிப்பது ஏன்?

 

நாய்வாலை நிமிர்த்த முடியுமா பாஜக வை திருத்த முடியுமா எல் முருகனால்?!

திரு எல் முருகன் அவர்கள்  தமிழக பாஜக தலைவராக நியமிக்கப் பட்டிருக்கிறார்.

பொதுமேடை அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்  கொள்கிறது .

ஒரு வழக்கறிஞர் . தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர். அருந்ததியர்  வகுப்பை சேர்ந்தவர். அவருக்கு தலைவர் பதவியை தந்து தன்னை தாழ்த்தப் பட்டோர் வகுப்பின் நன்மையில் அக்கறை  கொண்ட கட்சியாக காட்டிக் கொள்ள விரும்புகிறது பாஜக.

முன்பு முயற்சி செய்து தோற்றுப் போன உக்தி அது.

பங்காரு லட்சுமணன் தேசிய தலைவராக நியமிக்கப் பட்டார். என்ன நடந்தது. ?  அவர் லஞ்சம் பெற்றதாக  தெகல்கா ஆதாரம் வெளியீட்டு அவரது அரசியலை காலி செய்தது.

இன்றைக்கும் பாஜக அதிக அளவில் தாழ்த்தப் பட்டோர் இடங்களை பாராளுமன்றத்தில் பெற்றிருக்கிறது. ஆனாலும் அவர்களுக்கு தாழ்த்தப் பட்டோர் எதிரிகள் என்பதுதானே முத்திரை.

பெற்ற இடங்கள் எல்லாம் மோடியின் ஈர்ப்பு இந்து மத ஒற்றுமையின் அடையாளம்.      தேர்ந்தெடுக்கப் பட்ட பாஜக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சென்று நீங்கள் உங்கள் தொகுதியில் சம உரிமையுடன் வாழ்கிறீர்களா உங்கள் சமுதாயத்தினர் வாழ்கிறார்களா என்று  கேளுங்கள். ஆம் என்ற பதில் வராது.  இதுதான் நிதர்சனம்.

தமிழ்நாட்டிலேயே டாக்டர் கிருபாநிதியை தலைவராக கொண்டு வந்தார்கள். அவமானப்  படுத்தினார்கள். சிறுமைப் பட்டு கடைசியில் கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தார்.

பெயருக்குத்தான் அவர் தலைவர். அதிகாரங்கள் எல்லாம் பொதுச் செயலாளரிடம்.        அப்படித்தான் இப்போதும் நடக்கும்.

 ~ தேசிய கட்சியாக இருந்தாலும்  தமிழ்நாடு பாஜக  மாநில மக்களின் எதிர்பார்ப்புகளிலும்  நலங்களிலும் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது ~

இதுதான் மாநிலக்கட்சி தலைவராக பொறுப்பேற்ற   பின் எல் முருகன் தெரிவித்த செய்தி.

மாநில பாஜக தனி கட்சியா என்ன ? தேசிய கட்சியின்  முடிவுகளுக்கு மாறாக முடிவெடுக்க !

இந்தி திணிப்பை , சமஸ்கிரித திணிப்பை , பிற்பட்டோர் தாழ்த்தப் பட்டோர் இட ஒதுக்கீடு உரிமைகளை கைவிடுவதை  , டெல்டாவை பாலைவனம் ஆக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை , மாநில உரிமைகள் பறிப்பை  எல்லாம் எதிர்த்து போராட முடியுமா மாநில பாஜகவால்? 

ஏனென்றால்  இவைகளை  எல்லாம் நிகழ்த்துவதே அகில இந்திய பாஜக தானே ?

மாநில அடையாளங்களை அழித்து அகில  இந்திய அடையாளம் ஒன்றையே நிலை நாட்ட  பாடுபட்டுக்  கொண்டிருக்கும் கட்சி பாஜக. அதுதான் அதன் இயல்பான குணம். அதை மாற்ற  முடியும் என்று நம்புகிறாரா திரு எல் முருகன்? வளைந்து செயல்படும் வாலைக் கொண்டிருப்பது நாய்.  அதை நான் நீட்டுவேன் என்று  முயற்சித்தால் முடியுமா?

யாரையும் இழிவு படுத்தும் நோக்கம் நமக்கில்லை. நம்மை ஆண்டு கொண்டிருக்கும்  அகில இந்திய  கட்சி அது. வேறு  பொருத்தமான உதாரணம் கிடைக்க வில்லை. அவ்வளவுதான். போகட்டும்.

முதலில் ஜி கலாசாரத்தை ஒழியுங்கள். வாங்க ,  அண்ணன் , தம்பி , அய்யா என்று முகமன் சொல்ல தமிழில் வார்த்தைகளா இல்லை !

இரண்டாவது பாரத் மாதா கீ ஜெய் கோஷத்தை கைவிடுங்கள்.     இந்தியா என் தாய்நாடு.    அதை என் தாய்மொழியில்தான் வாழ்த்துவேன் என்று உறுதி எடுத்து    அன்னை பாரதம் வாழ்க என்று முழங்குங்கள் . 

உங்களை விட்டு வைத்தால் பிறகு மாநில உரிமைகளை  காப்பது பற்றி பேசுங்கள்.

 

தமிழகத்தில் என்பிஆர் தொடங்காதாம்? எடப்பாடியின் பயமும் கவலையும்?

சென்சஸ் சட்டம் 1948 ன் படி ஒவ்வொரு பத்து ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. 1872 ஆண்டு முதல் நடைபெற்று வரும்  இந்த நடைமுறை ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது. இதன் படிதான் இந்தியாவின் மக்கள் தொகை  கணக்கெடுப்பு  ஏற்கப் படுகிறது. இதில்தான் மிக விரிவாக கேள்விகள் கேட்கப்படும்.

இது தொடர்ந்தால் ஒரு குழப்பமும் இல்லை.

இந்திய குடியுரிமை சட்டம் 1955 அடிப்படையில் ஒரு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்து அதன் அடிப்படையில் இந்திய குடியுரிமை நிர்ணயிக்கப்படும் என்று வரும்போதுதான் அது பிரச்னைக்கு உள்ளாகிறது. ஏனென்றால் இந்த கணக்கெடுப்பில் யாருடைய குடி உரிமையாவது சந்தேகமாக இருந்தால் அவர்கள் சந்தேக பட்டியலில் வைக்கப்படுவார்கள் என்ற பயம் ஏற்பட வழி வகை அதில் இருந்ததுதான்.

இத்தனை குழப்பங்களுக்கு காரணமான அந்த சந்தேக பிரிவை அகற்றி விட்டால் பிரச்னை தீர்ந்து  போகும் அல்லவா? அதை நீக்காமல் உள்துறை அமைச்சர் வெறும் உத்தரவாதம் மட்டும் அளித்தால் அது போதுமா?

அமித் சா இரண்டுக்கும் இடையே ஒரு தொடர்பும் இல்லை என்கிறார். யாருடைய குடிஉரிமையும் பறிக்கப்படாது என்று உறுதி அளிக்கிறார்.

ஏன் இந்த வெற்று உறுதி ? சந்தேக பிரிவை நீக்கிவிடுகிறோம் என்று அறிவிக்க என்ன தயக்கம்?   இந்த தயக்கம் மேலும் பயத்தை அதிகம் ஆக்கும்.

சென்சஸ் சட்டப்படி எடுக்கப்படும் விபரங்களை ஏன் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்கு போதுமான விளக்கம் இல்லை. 

சென்சஸ் சட்ட விபரங்கள் பொதுவெளியில் கிடைக்கும் ஆனால் என்பிஆர் விபரங்கள் கிடைக்காது என்பதும் அச்சத்தை அதிகரிக்கும் அம்சம்.

மத ரீதியில் மக்களை பாகுபடுத்தி முஸ்லீம்களை நாடற்றவர்கள் ஆக்குவீர்கள் என்பதுதான் உங்கள் மீது இருக்கும் சந்தேகம். நீங்கள் செய்வதும் அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில்தான் இருக்கிறது. 

உங்கள் மீது மக்களுக்கு இருக்கும் சந்தேகம் உண்மை. நீங்கள் சொல்வது ஒன்று செய்வது வேறாக இருக்கும்.

தமிழக அரசு நாங்கள் சில விளக்கம் கேட்டிருக்கிறோம் அது வரும் வரை இங்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்காது என்று சொல்கிறது. அதற்கு ஒரு சட்டமே இயற்றி இருக்கலாமே ? ஏனைய மாநிலங்கள் இப்படி சட்டம் இயற்றியபோது அது மத்திய சட்டத்தை மீறியது என்பது தெரியாமலா இயற்றினார்கள்?

மாநிலங்கள் ஒத்துழைப்பு இல்லாமல் மத்திய  அரசு செயல்பட முடியாது என்பதை வேறு எப்படி  நிரூபிப்பது?

எடப்பாடிக்கு  சட்டத்தை அமுல்படுத்தி மக்கள் வெறுப்பை சம்பாதிக்க வேண்டி வருமே என்ற கவலை. அமுல்படுத்த முடியாது என்று சட்டம் போடவும் பயம். இரண்டுக்கும் இடையில் இப்போதைக்கு  இல்லை  விளக்கம் கேட்டிருக்கிறோம் என்று காலம் கடத்துகிறார்கள் .

மாநில அரசு கேட்கும் அந்த மூன்று அம்சங்களை  பொறுத்து மத்திய அரசு விளக்கம் அளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ?

புஸ்வாணமாகிப் போன ரஜினி வெடி?

கடைசியில்  மலை தூக்கி பயில்வானாகி விட்டார் ரஜினி.

நான் மலையைத் தூக்க தயார்! என் தோளில் மலையைத் தூக்கி வைக்க நீங்கள் தயாரா ? என்று கேட்ட மலை தூக்கி பயில்வான் கதை அப்படியே அரங்கேறி விட்டது.

மக்கள் முதலில் புரட்சியை ஆரம்பிக்க வேண்டுமாம்.  அந்த புரட்சி வெடித்து விட்டால்  அப்புறம் இவர் வருவார்.

இனி எத்தனை ரசிகர் மிச்சம் இருப்பார்கள் என்பதை முதலில் பார்ப்போம் ?

மூன்று திட்டங்களுமே நடைமுறைக்கு ஒத்து வராதது.

கட்சி வேலை செய்பவர்கள் தேர்தல் முடிந்ததும் வீட்டுக்கு போய் விட வேண்டும். ஆட்சிக்கு வேறு  நபர்கள் வருவார்கள். எவன் அப்படி கட்சி வேலை செய்ய வருவான் ?

அப்படி வரும் புதியவர் யார் அவரை எப்படி தேர்ந்து எடுப்பீர்கள்? ஒரு விளக்கமும் இல்லை.

இளைஞர்களுக்கே தேர்தலில் டிக்கட் தருவார். இப்போதிருக்கும் முதிர்ந்த ரசிகர்கள் ஒய்வு பெற வேண்டும்.

கட்சி தலைமை வேறு. ஆட்சி தலைமை வேறு. அவரை எப்படி தேர்ந்து எடுப்பீர்கள்? விளங்குமா ?

இவர் முதல்வர் வேட்பாளர் இல்லை. முடிந்தது கதை.

முதலில் ரஜினிக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். தான் முதல்வர் வேட்பாளர் இல்லை. அந்த  சிந்தனையே தனக்கு எப்போதும் இருந்தது இல்லை என்று சொல்லிவிட்டாரே !

மக்களை அறிவில்லாதவர்கள் என்று சொல்கிறார். அவர்கள்  இவருக்கு எப்படி  ஓட்டு போடுவார்கள்.?

அண்ணாவை இவர் மதிக்கிறார். ஏனென்றால் அவர் பல தலைவர்களை உருவாக்கியவர். ஆனால் அண்ணா எந்த கொள்கைகளுக்காக போராடினார் என்பதைப் பற்றி ஒரு வார்த்தை இல்லை.

அதேபோல் தமிழகத்தில் காந்தியும் விவேகானந்தரும்தான் இவர் கண்ணுக்கு தெரிகிறார்கள்.        நீதிக் கட்சி தலைவர்கள் பெரியார் காமராஜர், ஜீவானந்தம், கக்கன் போன்ற யாரும் கண்ணுக்கு தெரியவில்லை. குருமூர்த்தி எழுதிக் கொடுத்த ஸ்க்ரீப்டில் அது இல்லை போல் தெரிகிறது.

சமூக நீதி பற்றி மொழி பாதுகாப்பு பற்றி இன உரிமை பாதுகாப்பு பற்றி எதுவும் சொல்லவில்லை.

கிங் ஆக விரும்ப மாட்டார் என்பது உறுதி ஆகிவிட்டது. கிங் மேக்கர் ஆக நினைக்கும் ஆசை மட்டும் இருக்கும்போல.

அதற்கும் ஒரு தகுதி வேண்டாமா?

ஒதுங்கி விட்ட மனிதனை அதற்கு மேல் விமர்சிப்பது நியாயமல்ல.

விலகியதால் மிஞ்சியது மரியாதை.

ரஜினி சங்கியா மங்கியா? இரண்டுமா? கமலின் இடைக்குத்து?

விமான நிலையம், தன் வீட்டு கேட் இரண்டும்தான் ரஜினிகாந்த் அரசியல் கருத்துக்கள் உதிர்க்கும்  இடங்கள் .

 ஒரு அரைமணிநேரம் செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சுயமாக சிந்தித்து பதில்  அளித்து விட்டால் அதற்குப் பின் நாம் அவரை அரசியல் தகுதிக்கு எடை  போடலாம். மங்கி அல்ல என்பதை நிரூபிக்கலாம்.    

 ஏதோ வரும்போது போகும்போது இரண்டொரு வார்த்தைகளை சொல்லி விட்டால் அதற்கு ஆயிரம் விளக்கங்கள் கொடுத்து பொழிப்புரை தருவதா ஊடகங்கள் வேலை?

ஒரு மனிதன் திரை உலகத்தில் சாதித்த சாதனைகள் காரணமாக மக்கள் கொண்டாடினால் அதற்கு பிரதி பலனாக  அவர்கள் தலையில் உட்கார்ந்து மிளகாய் அரைப்பதா?

பாஜக செல்வாக்கு இழக்கிறது என்பதை  அறிந்து தன்னை அதனோடு இணைத்து பேசுவதை விரும்பாத ரஜினி பாஜக அரசுக்கு எதிராக பேசுவதற்கு மட்டும் நிரம்பவும் கட்டுப்பாடுகள் விதித்துக் கொள்கிறார். சங்கி என்ற ஆர் எஸ் எஸ் ஆதரவாளர் என்ற முத்திரையை ரஜினியால்  விலக்க முடியவில்லை. குருமூர்த்தியின் ஆலோசனைகளை இவர் கேட்கும் வரை இந்த முத்திரை அழியாது.

இப்போதும் கூட வன்முறையை கட்டுப்படுத்த  முடியாவிட்டால் ராஜினாமா செய்து விட்டுப்  போங்கள் என்று சொல்லும் ரஜினி  குடிஉரிமை திருத்த சட்டத்தை அவர்கள்  திரும்ப வாங்க மாட்டார்கள் என்று சொல்கிறார். என்ன போராட்டம் செய்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை என்கிறார்.

என்ன சொல்கிறார் இவர்? போராட்டம் சரி என்கிறாரா சட்டம் சரி என்கிறாரா?    

சட்டத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் போராடத்தான் செய்வார்கள். பிரிட்டிஷ் காரன் போட்ட சட்டத்தை எல்லாம் நாம் ஏற்றுக் கொண்டோமா?   அது அந்நியன் போட்ட சட்டம். இது நமக்கு நாமே போட்டுக் கொண்ட சட்டம்.  இது செல்லும் என்று இன்னமும் உச்சநீதி மன்றம் தீர்ப்பு  சொல்ல வில்லையே?   போராடும் உரிமையை  அரசியல் சட்டம் தந்திருக்கிறது.   அதை அரசே நினைத்தாலும்  பறிக்க முடியாது.

உளவுத்துறையின் தோல்வி என்று சொல்லும் ரஜினி இவற்றை முளையிலேயே கிள்ளி எறிய  வேண்டும் என்கிறார். எதைக் கிள்ளி எறிய வேண்டும் என்பதில்தான் தெளிவில்லை.

போராட்டத்தை ஒழுங்கு படுத்துங்கள். நீதிமன்ற கண்காணிப்பில் நடவடிக்கை எடுங்கள்.

35 பேர் இதுவரை மாண்டிருக்கிரர்கள். இப்போதைக்கு போராட்டங்கள் முடிகிற காட்சி தெரியவில்லை. என்ன செய்ய போகிறார்கள் ஆட்சியாளர்கள்?

 மோடியின் குஜராத் மாடல் அரசு மத்திய அரசுக்கு  மாறிவிட்டது என்பதை தானே காட்சிகள் காட்டுகின்றன. முன்பு  கோத்ரா. இப்போது  டெல்லி. நாளை..? 

தன்னை பாஜகவின் ஊதுகுழல் என்று சொல்வதற்கு வருந்தும் ரஜினி பாஜக மதவாத அரசியல் நடத்துகிறது  என்பதை ஏன் சொல்ல மறுக்கிறார்.

குடிமக்கள் பதிவேட்டை அமுல்படுத்த போவதில்லை என்றால் சட்டம் ஏன்? திரும்ப பெற வேண்டியதுதானே?

அமுல்படுத்த முடியாத ஒரு சட்டம் நமக்கெதற்கு?

இரும்பு கரம் கொண்டு மத்திய அரசு இதை  அடக்க வேண்டும் என்கிறார் ரஜினி? எதை? அரசுக்கு எதிரான போராட்டத்தையா? அந்த போராட்டத்தை ஒடுக்க முனையும் பாஜக ஆதரவு கலவரக்காரர்களையா?

கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிய சொன்ன டெல்லி  உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் இரவோடிரவாக பஞ்சாப் அரியானா உயர்நீதி மன்றத்திற்கு இட மாற்றம் செய்யப் படுகிறார்.

கொலிஜியம் செய்த பரிந்துரைப்படி இடமாற்றம் இதில் அரசியல்  இல்லை என்கிறார் சட்ட அமைச்சர். நம்பத்தான் ஆளில்லை!

மத்திய அரசுக்கு எதிராக ரஜினி பேசி விட்டார் என்று சொல்ல ஊடகங்கள் முயற்சித்தாலும் அவரது சொற்கள் நேரெதிர்  நோக்கம் கொண்டவை என்பது தெளிவாக புலப்படுகிறது.

கொசுறு; ரஜினியின் இந்த நிலைப்பாட்டை வரவேற்று பேசிய கமல் ரஜினிக்கு ஒரு இடைக்குத்தும் கொடுத்திருக்கிறார். ‘சபாஷ் நண்பர் ரஜினி அவர்களே.. அப்படி வாங்க.. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல. ஒரு இனமே நடக்கும் ராஜபாட்டை..” என்று சொல்லி இருக்கிறார்.

 அதாவது இனிமேல் ரஜினி ‘ என் வழி தனி வழி’ என்று சொல்ல முடியாதாம். சினிமாக்காரங்க நல்லாத்தான் நடிக்கிறான் கப்பா!!!

மு.க.ஸ்டாலினை மிரட்டும் பாஜகவின் முரளிதர் ராவ்!

பாஜக இருக்கும் வரை மு க ஸ்டாலின் முதல்வராக முடியாது என்று பாஜக வின் முரளிதர் ராவ் சொல்லி இருக்கிறார்.

ஒருவேளை ஸ்டாலின் முதல்வர் ஆனால் பாஜகவை கலைத்து விடுவாரா என்பதை அவர் சொல்லவில்லை. ஏன் என்றால் அதற்கான அதிகாரம் அவருக்கு இல்லை.

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தனி கட்சி  நடத்தி  வருகிறார். அவர் பேச்சைக் கேட்காமல் காதல் திருமணம் செய்து கொண்டு வசிக்கும் வீரப்பன் மகள் வித்யாராணி பாஜக வின் சேர்ந்த நிகழ்ச்சியில் பேசிய ராவ் எப்படி பாஜக ஸ்டாலினை தடுக்கும் என்பதை விளக்கவில்லை.

திமுகவில் வேறு நபர் வந்தால் பாஜக அனுமதிக்குமா? அனுமதிப்பதற்கு இவர்கள் யார் ? மக்கள் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அவர் ஆட்சிக்கு வரப் போகிறார். சட்டத்துக்கு புறம்பான முறையில் இவர்கள் தடுப்பார்களா? அதை மக்கள் அனுமதிப்பார்களா?

நீதிமன்றங்கள் எதற்காக இருக்கின்றன? அவற்றையும் இவர்கள் அடக்கி விடுவார்களா?

வெகுமக்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக இயங்கிக் கொண்டு இங்கே காலூன்ற முயற்சிக்கும் பாஜக  முதலில் தன்னை திருத்திக்கொள்ளட்டும்.

இது போன்ற மிரட்டல்கள் மூலம் ஸ்டாலினை அடிபணிய வைக்க முடியும் என்று நம்புகிறதா பாஜக?

இது போன்ற வெத்து மிரட்டல்கள் மூலம் மேலும் மேலும் இவர்கள் வெறுக்கப் படுவார்கள்.

திருத்தப்பட வேண்டிய தீர்ப்பு; ஆள்வது பேடியா? நாராயணசாமியா?

புதுவையில் காங்கிரசின்  நாராயணசாமி எதை செய்தாலும்  துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அரசியலாக்கி விடுகிறார்.

நாராயணசாமி மக்கள் பிரதிநிதி. மக்களுக்கு இலவச அரிசி தருவோம் என்பது தேர்தல் வாக்குறுதி. வெற்றி பெற்று அதை அமுல்படுத்த விரும்பும்போது துணை நிலை ஆளுநர் தலையிட்டு அரிசிக்கு பதில் பணமாக கொடுக்கலாம் என்று உத்தரவிடுகிறார். அதாவது நாராயணசாமியால் அரிசி கொடுக்க முடியவில்லை. பணமாக நான் கொடுத்தேன் என்று நிலை நாட்ட துணை நிலை ஆளுநர் விரும்புகிறார். அவர்தான் நியமன சட்ட மன்ற உறுப்பினர்களாக பாஜக வினரை நியமித்தவர். ஆக அரசியல் செய்கிறார் பேடி. அவர் பாஜக வின் முதல் அமைச்சர் வேட்பாளராக டெல்லியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். இப்போது துணை நிலை ஆளுநராக கட்சி வேலை செய்கிறாரா என்ற கேள்விக்கு வித்திட்டு விட்டரர் .

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் குடியரசுத் தலைவரிடம் கருத்து கேட்கப்பட்டுவிட்டால் அதை அப்படியே அமுல்படுத்த வேண்டியது  முதல் அமைச்சரின் கடமை சட்டத்தை மேற்கோள் காட்டி  தீர்ப்பு சொல்லி  இருக்கிறது. இது சரி  என்று தோன்றவில்லை. தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வார்களா என்பதும்  தெரியவில்லை.

குடியரசுத் தலைவர் உத்தரவாக இருந்தாலும் அது மக்கள் பிரதிநிதிகளின் முடிவுக்கு மாறாக இருந்தால் ஏன் ரத்து செய்யக் கூடாது?

சின்ன சின்ன பிரச்னைகளில் கூட சட்டத்தின் பேரால் மக்கள் குரலுக்கு எதிராக தீர்ப்பு சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நீதின்றங்கள் இருக்கின்றன என்பது மிகவும் வருந்தத் தக்கது. நீதிபதியே கூட தான் நீதிபதி என்ற இடத்தில் இருந்து விலகி தீர்ப்பு சொல்ல விரும்பவில்லை என்று சொல்கிறார். நீதிபதிகளின் முடிவும் கூட அறத்தின் பால் நிற்பது என்பது சட்ட பூர்வமானதுதான். அதை நீதிபதி அவர்கள் கவனிக்க மறந்து விட்டாரோ என்பதுதான் நமது கருத்து.

துணை நிலை ஆளுநர் ஏன் இது பற்றி மாநில அரசுடன் எந்த நிலையிலும் விவாதிக்கவில்லை என்று நியாயமாக கேள்வி கேட்கும் நீதிபதி அந்த செயல் மக்கள் பிரதிநிதிகளின் முடிவுக்கு மாறாக இருப்பதால் எப்படி செல்லும் என்ற கேள்விக்கு விடை தர தவறி விட்டார். சட்டத்தை அப்படியே வரிக்கு வரி பொருள் கொள்ளக் கூடாது. அதன் நோக்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். எந்த சட்டமும் மக்கள் பிரதிநிதிகளின் முடிவை  கேள்வி கேட்கும் உரிமையில்லாமல் அப்படியே யாருக்கும்  தாரை  வார்த்து விடாது .

குடியரசுத் தலைவர் தானாக முடிவெடுக்கிறாரா அல்லது வெளியில் இருந்து அழுத்தம் வருகிறதா என்பது பற்றி தெளிவில்லை. அழுத்தம் பற்றி மற்றவர்களுக்கு தெரியாத நிலையில் அனுமானிக்கத்தான் முடியும். எனவே முடிவு சரியா இல்லையா என்பதை நீதிமன்றங்கள் அலசி  ஆராய்வதில் இருந்து பின் வாங்கக் கூடாது.

பேடியீன் அரசியலுக்கு இந்த தீர்ப்பு வலு  சேர்க்கும் என்பதுதான் நமது அச்சம்.