Home Blog Page 81

ஓட்டுக்கு ரூ 6000-வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்- ஆர்கே நகர் இடைத்தேர்தலில் கேலிக்கூத்தாகும் ஜனநாயகம்??!!

என்ன முயன்றும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை.

ஓட்டுக்கு ரூ 6000 இலக்கு வைத்து  இ பி எஸ் -ஒபீஎஸ் அணி ஆர் கே நகரில் காவல் துறையை வைத்தே விநியோகம் செய்து வருகிறது.

எத்தனை பார்வையாளர்கள் இருந்தென்ன?

இப்படி ஒரு தேர்தல் தேவைதானா?

என்ன செய்தால் இந்த அக்கிரமங்களை தடுக்க முடியும்?

காங்கிரஸ் , இரண்டு கம்யுனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம தி மு க , முஸ்லிம் லீக் , என்று எல்லா அரசியல் கட்சிகள் ஆதரவுடன் போட்டியிடும் திமுக சாதாரணமாக வெற்றி பெற வேண்டிய தேர்தல் இது.

45000    போலி வாக்காளர்களை நீக்கி இரண்டாயிரம் இரட்டை பதிவுகளை நீக்கி திமுக பெரிய தில்லுமுல்லு நடக்க இருந்ததை தடுத்து விட்டது என்று இருந்த நிலையில் யார் என்ன செய்தால் என்ன எங்களிடம் இருக்கும் பணத்தால் எல்லாவற்றையும் முறியடிப்போம் என்று மார் தட்டுகிறார்கள் ஆளும் கட்சியினர்.

தினகரன் ஆட்களை காவல் நிலையத்தில் வைத்து பிரச்சாரம் செய்ய விடாமல் செய்கிறார்கள்.

பா ஜ க போட்டியிடுவதைப்போல் நன்றாக நடிக்கிறது.

மீண்டும்  தேர்தலை தள்ளி வைத்தால் கூட நல்லது என்ற நிலையை ஆளும் கட்சி உருவாக்கி விட்டது.

நேர்மையாகவும் நியாயமாகவும் தேர்தல் நடக்காது என்பது நிதர்சனமாக தெரிந்து  விட்டது.

இன்னும் மூன்று நாளில் எல்லாவற்றையும் தேர்தல் ஆணையம் சரி செய்து விடும் என்று எதிர்பார்ப்பது  அறிவீனம்.

சகித்துக் கொண்டு அடுத்த தீர்வை நோக்கி நகர்வது தான் யதார்த்தம்.

காந்தி ஒரு முறை சொன்னாராம்.     கற்பழிப்பை தடுக்க முடியவில்லை என்றால் விட்டு விடுங்கள் என்று.  உயிரையாவது காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று பொருள்.

இப்போது ஆர் கே நகரில் அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது.

விஷால், தீபா மனுக்கள் தள்ளுபடி தேர்தலை தள்ளி வைக்க சதியா?

தேர்தல் கமிஷன் நடிகர் விஷால் , ஜெ .தீபா ஆகிய இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது.

படிவங்கள் முறையாக பூர்த்தி செய்ய வில்லை என்பது தீபாவின் தவறு என சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.   கடந்த தேர்தலில் முறையாக மனு செய்த தீபா இந்த தேர்தலில் ஏன் அப்படி செய்யவில்லை என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.  படிவம் சரியாக பூர்த்தி செய்யப் பட்டதா என்பதை தேர்தல் வழக்கில்தான் முடிவு செய்ய வேண்டுமா என்ன?

விஷால் மனுவில் முன் மொழிந்தவர்களில் மூன்று பேர் தாங்கள் அந்த மனுவை முன் மொழியவில்லை என்று முன்னுக்கு பின் முரணாக தேர்தல் அதிகாரி முன் சாட்சியம் அளிக்கிறார்கள்.    அவர்களை மதுசூதனன் ஆதரவாளர்கள் மிரட்டி வாக்குமூலம்  வாங்கியதாக ஒரு ஆடியோ பதிவை விஷால் தேர்தல் அதிகாரியிடம் கொடுக்க அவர் அதை முதலில் ஒப்புக்கொண்டு மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கிறார்.    அதே அதிகாரி இரவு பத்தேகால் மணிக்கு விஷாலுக்கு தெரியாமல் அவர் முன்பு ஆஜராகி தாங்கள் அந்த மனுவை முன்  மொழியவில்லை என்று சொல்கிறார்கள்.   அதை ஏற்றுக்  கொண்டு விஷாலின் மனுவை அதிகாரி நிராகரிக்கிறார்.

தெலுங்கு பேசம் மக்களின் வாக்குகளை விஷால் பிரித்தால் தங்களுக்கு பாதகம் என்று அ தி மு க வின்  மதுசூதனன் ஆதரவாளர்கள் திட்டமிட்டு விஷாலின் மனுவை தள்ளுபடி செய்ய வைத்து விட்டார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு.

இதற்கெல்லாம் தேர்தல் அதிகாரி துணை போனாரா என்பதெல்லாம் விசாரணையில்தான் தெரிய  வரும்.

நடக்கிற சம்பவங்களை பார்க்கிற யாருக்கும் தேர்தலை நடத்த விட மாட்டார்களோ என்ற சந்தேகம் வருவது இயல்பு.

சென்ற முறை யும் கூட சில நாட்களுக்கு முன்புதானே தேர்தலை ரத்து செய்தார்கள்.

அப்போது தினகரன் பணம் கொடுத்து வெற்றி பெற்று விடுவார் என்ற பயம் இருந்தது.    அதற்கு ஆதாரமும் இருந்தது.

இப்போதும் அது நடவாது என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை.

ஜனநாயகம் கேலிக்கூத்து ஆகிக் கொண்டிருக்கிறது.

2G வழக்கு தீர்ப்பும் ஆர் கே நகர் இடைத்தேர்தலும் ஒரே நாளில்??!!

2G  வழக்கிலும் சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கிலும் டிசெம்பர் மாதம்  21 ம் தேதி காலை  10.30  மணிக்கு சொல்லப்படும் என்று சி பி ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ பி சைனி அறிவித்திருக்கிறார் .        அதாவது ஆ ராசா மற்றும் கனிமொழியின் அரசியல் வாழ்வு அந்த தீர்ப்பில் அடங்கி இருக்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப் பட்ட தேதி ஏப்ரல்   26 ம் தேதி.   அதாவது ஏறத்தாழ ஏழு மாதங்களுக்கு பிறகு தீர்ப்பு தேதி அறிவிக்கப் படுகிறது.

தீர்ப்பு தேதி அறிவிக்கப் படும் முன்பே   ஆர் கே நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டு விட்டது.

தீர்ப்பு யாரையாவது பாதிக்கும் என்றால் அது தி மு க வைத்தான்.

ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி நட்டம் என்று பிரசாரம் செய்து குற்றச்சாட்டு புனையப் பட்டது முப்பதாயிரம் கோடி இழப்பு என்று.

விடுதலை என்றால் அது நிச்சயம் தி மு க வுக்கு பெருத்த ஆறுதலை தரும்.   அதே நேரம் குற்றம் நிரூபிக்கப் பட்டதாக தீர்ப்பு வந்தால் அது ஓரளவுக்கு  பாதிப்பை  ஏற்படுத்தலாம் .

கனிமொழி விடுதலை செய்யப் பட்டு ராசா மட்டும் தண்டிக்கப் பட்டால் கூட பாதிப்பு கட்சிக்கு இருக்காது என்றே அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.

அரசியல் நிகழ்வுகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் ஒரு நீதிபதி தீர்ப்பு தேதியை நிர்ணயிக்க வேண்டுமென்று கட்டாயம் இல்லை.

ஆனாலும் அப்படி ஒரு கேள்வி எழுவதை தடுக்க முடியாது!!!

ஜெயலலிதாவின் மகள் சோபனாவா? அம்ருதாவா ? இருவருமே இல்லையா? உண்மை வெளிவருமா?

அம்ருதா என்ற பெண் தான் ஜெயலலிதாவின் மகள் என்று உரிமை கோரி  ஜெயலலிதாவின் உடலை வெளியில் எடுத்து டி என் ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் வைஷ்ணவ அய்யங்கார் மரபுபடி எரியூட்ட வேண்டும் என்றும் கோரி உச்சநீதி மன்றத்தில் மனுப்போட்டு அது தள்ளுபடியாகி விட்டது.     ஆனால் அவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடலாம் என்று சொல்லி இருப்பதால் பிரச்னை முடியப் போவதில்லை.

ஜெயலலிதாவின் அப்பா ஜெயராமின் தங்கை  ஜெய்சிகாவின் மகள் லலிதா ஜெயலலிதாவிற்கு குழந்தை பிறந்தது உண்மைதான் என்றும் தனது பெரியம்மா தான் பிரசவம் பார்த்தார் என்றும் பேட்டி கொடுத்திருக்கிறார்.     வெளியே சொல்லக் கூடாது என்று சத்தியம் வேறு வாங்கியதாக வும் சொல்கிறார்.

1990 ல் நக்கீரன் பத்திரிகை ஷோபனா வேதவல்லி  என்ற குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டு அவர்தான் ஜெயலலிதாவின் மகள் என்று கட்டுரை வெளியிட்டது.       நூற்றுக்கணக்கான அவதூறு வழக்குகளை நக்கீரன் மீதுபோட்ட ஜெயலலிதா இந்த கட்டுரைக்காக நக்கீரன் மீது வழக்கு ஏதும் போடவில்லை என்பது புரியாத புதிர்.

அம்ருதா மீது வழக்கு தொடருவேன் என்று தீபா பேட்டி கொடுக்கிறார்.

சொத்துக் காகவா உரிமைக்காகவா என்பது போக போகத்தான் தெரியும்.

பிரபலமானவர்கள் மீது அவர்கள் மறைந்த பிறகு உரிமை கொண்டாடுவது என்பது வேறு சேற்றை வாரி இறைப்பது என்பது  வேறு.    இரண்டில் எது உண்மை என்பதை கண்டுபிடித்து போது மக்களுக்கு சொல்லும் கடமை காவல் துறைக்கு உள்ளது.    தவறாக உரிமை கொண்டாடி இருந்தால் அவர்கள் மீது கண்டிப்பாக குற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டாக வேண்டும்.    உண்மையாக இருந்தால்  அதையும் மக்களுக்கு சொல்லியாக வேண்டும்.

உச்சநீதி மன்றம் கூட இதை உயர்நீதி மன்றத்துக்கு தள்ளி விட்டிருக்காமல் தானே விசாரித்திருக்கலாமோ என்று கூட தோன்றுகிறது.    அல்லது வழக்கை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி இருக்கலாம்.

எல்லாம் தெரிந்த ஜெயலலிதா தன் சொத்துக்கள் பற்றி ஒரு உயில் கூட எழுதாமல்  விட்டிருப்பார் என்று நினைக்கக் கூட முடியவில்லை.

இறந்த பின் ஒருவரை இழுக்கு உண்டாகும் படி நடவடிக்கைக்கு உள்ளாக்கு வது அறமல்ல.     ஆனால் ஜெயலலிதா சாதாரண மானவர் அல்ல.

கோடிக்கணக்கான சொத்துக்களை விட்டு சென்றிருப்பவர்.     அதற்கான உண்மை வாரிசுகள் யார் என்பது பற்றி ஒரு விசாரணை நடத்தி கண்டு பிடிப்பது நியாயம் தானே. ?

அதுவும் முரண்பாடான செய்திகள் உலவி வரும் நிலையில் காவல் துறை கையை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பதும்    அவர் பெயரில் ஆட்சி செய்பவர்கள் ஏதும் அறியாதது போல் மெளனமாக இருப்பதும் மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தாதா?

தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழ் தெரியாத வேற்று மாநில விரிவுரையாளர்களை நியமிக்க அவசியம் என்ன? விதிகளை திருத்தியது யார்?

தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில்  1050  விரிவுரையாளர்கள் பணியிடங்கள் காலியாக இருந்தன.

அதை நிரப்ப சென்னையில் உள்ள டி பி ஐ ல் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது.

அதில் தமிழ் தெரியாத வேற்று மாநில விரிவுரையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தேர்வாகி இருப்பது தாமதமாக தெரிய வந்திருக்கிறது.

ஏற்கெனெவே  தமிழகத்தில் மத்திய அரசு பணிகளில் வேற்று மாநிலத்தவர்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

இது எப்படி சாத்தியமானது?        தமிழ் தெரியாதவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை விதித்து இதை சாத்தியமாக்கி இருக்கிறார்கள்.

இப்படி ஒரு விதி விலக்கு மற்ற மாநிலங்களில் இருக்கிறதா?

மற்ற மாநிலங்களில் இது போன்று அந்த மாநில நிறுவனங்களில் வேற்று மாநிலத்தவர் தேர்வு எழுதி அந்த மாநில மொழியை இரண்டு ஆண்டுகளுக்குள் கற்று கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன்  வேலையில் சேர முடியுமா?

அப்படி இல்லாத பட்சத்தில் தமிழகத்தில்  மட்டும் இந்த விதி விலக்கை கொண்டு வந்ததற்கு யார் காரணம்?

ஏற்கெனெவே தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகள் ஆயிரக்கணக்கில் இருக்கும் போது  இருக்கின்ற வேலை வாய்ப்பையும் வேற்று மாநிலத்தவர் களுக்கு தாரை  வார்க்கும் சதி நடந்திருப்பது இன்றைய ஆட்சியாளர் களுக்கு தெரிந்து நடந்ததா?     தெரியாமல் நடந்ததா?    அல்லது அதைப்பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலை இல்லையா?

உடனடியாக வெளி மாநிலத்தவர் நியமனங்களை ரத்து செய்து விட்டு தமிழகத்தில் தமிழ் தெரிந்தவர்களுக்கே அந்த வேலை வாய்ப்பை வழங்க வேண்டும்.

அதற்கு வழி செய்த அந்த விதி முறையை ரத்து செய்ய வேண்டும்.

இதற்கெல்லாம் கூட விழிப்புணர்வுடன் போராட வேண்டி இருக்கிறதே?

போராடுபவர்களையும் கைது செய்ய மட்டும் ஆட்சியாளர்கள் தவறுவது இல்லை.

கோட்சேவுக்கு சிலை அமைத்த இந்து மகா சபை மீது தேச துரோக வழக்கு ஏன் பாயவில்லை?

மகாத்மா காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று மார் தட்டி சொல்கிறவர்கள் இந்து மகா சபை கூட்டம் .   நாதுராம் கோட்சே இந்து மகா சபையை சேர்ந்தவர் என்பதினால் அவரது நினைவு தினத்தை ஆண்டு தோறும் அனுசரிப்பவர்கள்.

நாதுராமிற்கு தூக்கு தண்டணை நிறைவேற்றப் பட்டாலும் அவரது சகோதரர் கோபால் கோட்செவுக்கு  14  ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு அவரை விடுதலை செய்தது காங்கிரஸ் கட்சி.

அந்தக் கொலைகாரனுக்கு சிலை எழுப்ப இடம் கேட்டு மத்திய பிரதேச அரசுக்கு இந்து மகா சபை கேட்க  அரசு மறுத்ததால் இந்து மகா சபை அலுவலகத்திலேயே  32  அங்குல உயர மார்பளவு சிலையை நிறுவி அதற்கு கும்பாபிஷேகம் வேறு நடத்தி இருக்கிறார்கள்.

இது  எங்கள் சொத்து என்பதால் யாரும் ஆட்சேபிக்க முடியாது என்பது அவர்களின் வாதம்.

இதற்கு காங்கிரசின் ஜோதிர் ஆதித்யா சிந்தியா ஆட்சேபணை தெரிவித்து காந்தியை இழிவு படுத்தியவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஆட்சி நடத்துவது பா ஜ க .    வெளிப்படையாக  சொல்ல மாட்டார்களே தவிர இந்து மகா சபைக்கும் அவர்களுக்கும் பெருத்த வேறுபாடு ஒன்றும் கிடையாது.

தேச தந்தை என போற்றப் படுகிற காந்தியை சுட்டவனுக்கு கோவில் கட்டி வழிபடுவோம் என்று சொல்லி அதை நிறைவேற்றி காட்டுகிறவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் அதற்கு அவர்களும் உடந்தை என்றுதான் பொருள்.

கொலைகாரனுக்கு கோவில் கட்டியவனை விட அவனை விட்டு வைத்திருக்கிறவன் தான் கொலைகாரனை விட மோசமான குற்றவாளி.

கோட்சே சிலை இருக்கும் வரை அதை விட்டு வைத்திருக்கும் சக்திகளின் மீது மக்களின் கோபம் நிலைத்திருக்கும் .

மூக்கை துண்டிப்போம்; தீபிகா படுகோனேவுக்கு ராஜபுத்திர சேனா மிரட்டல்?!

பத்மாவதி பட கதாநாயகி தீபிகா படுகோனே சித்தூர் ராணி பத்மாவதியாக நடித்து இருக்கிறார்.

டெல்லி சுல்தான்  அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் கபூர் நடித்திருக்கிறார்.

சுல்தான் பேரழகி பத்மாவதியை விரும்பி படை   எடுப்பதகவும் இறுதியில் பத்மாவதியை ஒரு கண்ணாடி மூலம் காட்டுவதாகவும் ஒரு கதை உலவுகிறது.     அத்துடன் சுல்தானிடம் சிக்காமல் இருப்பதற்காக ராணியும் அவரது தோழிகளும் ஆயிரக்கணக்கில் தீயில் தங்களை  மாய்த்துக் கொள்வதாகவும்  ஒரு கதை உண்டு .

ராஜ புத்திரர்கள் ராணியை  தங்கள் குல தாயாக வணங்கி வழிபடுவது உண்மைதான்.

ஆனால் அவரது கதையை சினிமாவாக எடுக்க கூடாது என்று எந்த தடையும் இல்லை.

ஏறத்தாழ  180  கோடி செலவில் படம் எடுத்துக் கொண்டிருக்கும்போதே பல இடங்களில் படப்பிடிப்பு நடந்த போது செட்டுகளை அடித்து நொறுக்கினார்கள்.

இப்போது டிசம்பர் ஒன்றாம்  தேதி படம் வெளியாக சென்சார் போர்டு அனுமதி அளித்து விட்டது.  விடமாட்டோம் ரஜ புத்திர அமைப்பான கர்னி சேனா மீண்டும் படத்தை தணிக்கை செய்ய வேண்டும் என்ற கோரி மிரட்டுகிறார்கள்.    உச்சநீதி மன்றமும் தலையிட மறுத்து விட்டது.

இந்நிலையில் சேனா தலைவர் மகிபால் சிங் மக்ரானா நிருபர்களுக்கு பேட்டி அளித்து பன்சாலி க்கு துபாயில் இருந்து  நிதி  வந்துள்ளது. தீபிகா எங்களை அவமதிக்கும் வகையில் பேட்டி கொடுத்துள்ளார்.     சூர்ப்பனகையின் மூக்கை துண்டித்தது போல அவரது  மூக்கை துண்டிப்போம்.   சஞ்சய் லீலா பன்சாலி யின் தலையையும் துண்டிப்போம்.   துண்டிப்பவகளுக்கு ஐந்து கோடி சன்மானம் அளிப்போம் என்று பகிரங்கமாக பேட்டி அளித்திருக்கிறார்.

கொடுமை என்னவென்றால் இதற்கு பல பாஜ க தலைவர்கள் ஆதரவு அளித்திருப்பதுதான் .

மத்திய அமைச்சர் நிதின் கட்காரியே படம் தயாரிப்பவர்கள் யாருடைய உணர்வையும் புண்  படுத்தக் கூடாது என்கிறார்.    பிறகு எதற்கு தணிக்கை குழு வைத்திருக்கிறீர்கள்.?

அவர்கள்   அத்தனை  பெரும் தகுதி இல்லாதவர்களா?

அதிலும் மேல்முறையீடு அமைப்பு இருக்கிறது.   அதற்கு ஏன் இவர்கள் செல்லவில்லை?

சாதாரணமானவர்கள்  ஆக இருந்தால் அப்படித்தான் சொல்வார்கள்.    சொல்பவர்கள் பலம் வாய்ந்தவர்களாக இருப்பதால் சட்டம் கையையும் வாயையும் மூடிக் கொண்டிருக்கிறது.

தீபிகா படுகோனே வின் மூக்கு தப்புமா?    சட்டம் இவர்களை விட பலம்  வாய்ந்தது என்பதை நிரூபிப்பார்களா ?

நடப்பது மோடியின் இந்து அரசாயிற்றே ??!!

ஆளுநர் ஆய்வு செய்வது குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு முன்னோட்டமா?!!

வரலாற்றில் இல்லாத புதுமையாக தமிழக ஆளுநர் கோவையில் மாவட்ட ஆட்சியர்  மற்றும் அதிகாரிகளுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.   கொடுமை என்னவென்றால் உள்ளாட்சி அமைச்சர் எஸ் பி வேலுமணி யும் இதில் கலந்து கொண்டு ஆளுநர் வந்ததை  பெருமையாக பேசியதுதான்.

ஆளுநர்   பன்வாரிலால் புரோஹித் அசாம் , மேகாலயாவில் தான் இப்படித்தான் அடிக்கடி ஆய்வு செய்ததாக வேறு  நியாயம் கற்பிக்கிறார். எந்த மாநிலத்திலும் இப்படி ஆளுநர்கள் ஆய்வு செய்வதாக வரலாறே இல்லை.

டெல்லி, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் தான் இப்படி லெப்டினென்ட் கவர்னருக்கு அதிகாரமா மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளுக்கா  என்ற சர்ச்சை வளர்ந்து வருகிறது. இது எதில் கொண்டு போய் விடும்?    ஆளுநர் நாளை உத்தரவிட்டால் அதை நிறைவேற்றுவதும் அமைச்சர்களின் கடைமை என்றாகிவிடுமா?

மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று நாளும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழகத்தில் இப்படி ஒரு அவலம் நடைபெறுவதை எப்படி சகித்துக் கொள்வது.?

ஆய்வு செய்தால் தானே பாராட்ட முடியும் என்று கூடுதல் விளக்கம் தருகிறார் ஆளுநர்.   தான் தமிழ் படித்து வருவதாகவும் தமிழிலேயே பேச போவதாகவும் கூறினர். தமிழில் பேசுவது அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்வதை நியாயப் படுத்தி விடுமா?

அரசியல் சட்ட பிரிவு  167 ன் படி  ஆளுநருக்கு  ஏதாவது தகவல் தேவைப்பட்டால் அதை முதல்வரிடம்தாம் கேட்டு பெற வேண்டும்,     தான் சொல்வது எதையும் முதல்வர் மூலம் தான் கையாள வேண்டுமே தவிர நேரடியாக எந்த அதிகாரியிடமும் தகவல் பெறவோ கட்டளை பிறப்பிக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.

ஆளுநர் பதவி என்பது ஆட்டுக்கு தாடி போல என்று அறிஞர் அண்ணா கூறியது எவ்வளவு பொருத்தம்.. ! தமிழகத்தின் கிரண் பேடியாக புரோஹித் நிச்சயம் உருவாக வாய்ப்பே இல்லை. ஏனென்றால் இங்கே இருப்பவர்கள் தான் ஆளுநர் செய்வது எல்லாமே சரி என்பவர்கள் ஆயிற்றே?

டேக் இட் ஈசி என்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்  எஸ் பி வேலுமணி  செல்லூர் ராசு உதயகுமார் என எல்லா அமைச்சர்களும் நாங்கள் அடிமைகள் என்று மட்டும் சொல்லவில்லை அதை தவிர ஒரு அடிமை என்னென்ன சொல்ல முடியுமோ அவைகள் அனைத்தையும் சொல்லி விட்டார்கள்.

அ தி மு க எம் பி அன்வர் ராஜா மட்டும்தான் இது அதிகார அத்துமீறல் என்கிறார். சென்ற ஆண்டு உச்சநீதி மன்றம் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் மூலம் ஆளுநர்கள் அதிகாரம் பற்றி கொடுத்த தீர்ப்பு எல்லாரையும் கட்டுப் படுத்தக் கூடியது.

ஆனால் கேள்வி கேட்க வேண்டியவர்களே அடங்கிப் போனால் தீர்ப்பு இருந்து என்ன பயன். ?இதுவரை முதல்வர் பழனிசாமி வாய் திறக்க வில்லை. இதேபோல் ஆய்வை எல்லா மாவட்டங்களிலும் மேற்கொள்வேன் என்று ஆளுநர் அறிவித்து இருப்பதுதான் பிரச்னை. ஆங்காங்கே மக்கள் கிளர்ந்து எழுந்து தான் இந்த  அதிகார அத்து மீறலை தடுக்க முடியும் என்ற சூழலை ஆட்சியாளர்கள் ஏற்படுத்த கூடாது.

மோடியின் மத்திய அரசுக்கு தெரியாமல் இந்த அத்து மீறல் நடக்க வாய்ப்பில்லை என்பதால் இதற்கெல்லாம் மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டி வரும்.

அதுவும் சென்னை உயர்நீதிமன்றம் தகுதி நீக்கம்  வாக்கெடுப்பு உட்பட  ஏழு வழக்குகள் விசாரணையை துவங்கி விட்ட நிலையில் வர இருக்கும் தீர்ப்பு அரசை அசைக்கலாம் என்ற நிலையில் ஆளுநர் இந்த அத்து மீறலை தொடங்கி இருப்பது குடியரசு தலைவர் ஆட்சி அமுல்படுத்தப் படவேண்டிய  சூழ்நிலை எழுந்தால் எடுக்க நடவடிக்கை களை இப்போதே ஆளுநர் துவங்கி விட்டார் என்றுதான் மக்கள் புரிந்து கொள்வார்கள்.

தமிழ் இந்திய மீனவனை முன்பு சிங்களன் சுட்டான் ; இப்போது இந்தியனே சுடுகிறான் ??!!

முன்பு சிங்களன் சுட்டான் இப்போது இந்தியனே சுடுகிறான்.

என்ன கொடுமை இது ?

இந்திய தமிழ் மீனவர்களை சிங்கள கடற்படை சுடுவதும் படகுகளை கைப்பற்றுவதும் தொடர்கதையாக நீடிக்கிறது.

பிடிப்பதும் விடுவதும் என இந்திய சிங்கள அரசுகள் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆளை விட்டு விடுங்கள் படகுகளை வைத்துக் கொள்ளுங்க என்று சுப்பிரமணிய சாமி சொன்னார்.    அதை  இந்திய அரசு ஆமோதிப்பது போல் தான் அதன் செயல் பாடுகள் இருக்கின்றன.

முன்பே இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தால் பாது காக்க முடியாது என்று பேட்டியே கொடுத்திருந்தார்.

தமிழ் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை காப்போம் என்று ஒப்பந்தம் போட்டவர்கள்  கச்சத்தீவை தானம் கொடுத்தவர்கள் இப்போது கையை விரிக்கிறார்கள்.

ஏமாந்தவன் ஆகிப் போனான் தமிழன்.

இன்று இந்திய கடலோர காவல் படை கப்பலில் வந்த வீரர்கள் இந்திய கடல் பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள்.

ஜெபமாலை என்பவரின் படகில் இருந்த பிச்சை ஆரோக்கியதாஸ் ஜான்சன்   சான்றோ, நிசாந், ஆகியோரை  தாக்கி விட்டு சென்றிருக்கிறார்கள்.

அடிக்கும்போது தமிழில் பதில் சொன்னதால் இந்தியில் பேசுடா என்று அடித்திருக்கிறார்கள்.

தமிழக காவல் துறை அவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தெரிகிறது.

டெல்லி செய்வதை கண்டிக்க முடியாத அரசு ஆண்டு வரும் நிலையில் வழக்கு என்ன செய்யும்?

இது குறித்து உயர் நீதி மன்றமும் வரும் வெள்ளிகிழமை விசாரிக்க இருக்கிறது.

பாதுகாப்பு அளிக்க வேண்டிய இந்திய கடலோர காவல் படை இந்திய மீனவர்களையே சுடுகிறது என்றால் அது மேல் அதிகாரிகளின் கவனத்துக்கு அப்பால் நடந்திருக்கும் என்று நினைக்க முடியாது.

இரட்டை மடி வலையை தடை செய்யப் பட்டதை பயன் படுத்தினார்கள் என்றால் அதற்கு தண்டனை துப்பாக்கி சூடா?

இதே காரணத்தை சொல்லித்தான் சிங்கள கடற்படையும் சுட்டது.

தமிழன் மீன்பிடிதொழிலை விட்டு ஒழிய வேண்டும் என்று இந்திய மத்திய அரசு திட்டம் இடுகிறதா?

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் மன்னிக்க முடியாத குற்றத்தை இந்திய கடலோர காவல் படை செய்திருக்கிறது.

சுடவில்லை என்று மத்திய பத்திரிகை தகவல் நிறுவனம் செய்தி வெளியிடுகிறது. விசாரணைக்காக நிறுத்தப் படாததால் விடப் பட்ட எச்சரிக்கையை திசை திருப்ப அப்படி ஒரு குற்றச்சாட்டை மீனவர்கள் சொல்லக் கூடும்  என்று விளக்கம் வேறு சொல்கிறார்கள் .

நம் நாட்டு கப்பல் படை மீது  நமது மீனவர்களே பொய் குற்றச்சாட்டு சொல்ல வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

சிங்கள சூழ்ச்சிக்கு இந்திய கடற்படை இரையாகி விட்டது என்ற அச்சம் உண்மையாகி விடக்கூடாது.

நீட் தேர்வில் மத்திய அரசோடு சேர்ந்து மாநில அரசும் மாணவர்களை ஏமாற்றுகிறது ?

நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழக சட்ட மன்றம் நிறைவேற்றிய சட்டத்தையோ  ஓராண்டிற்கு விலக்களிக்கும் அவசர சட்டத்தையோ மத்திய அரசு கொஞ்சமும் மதிக்காமல் காலில் போட்டு மிதித்து விட்டது.

கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருப்பதே தவறு.    முன்பு போல் மாநில பட்டியலுக்கு மாற்றப் பட வேண்டும் என்று கோரிக் கொண்டிருக்கும் நிலையில் மாநில அரசின் கருத்துக்களை மதிக்காமல் தான் மட்டுமே முடிவெடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்க வில்லை.

அனிதாவின் மரண தியாகம்  எந்த விளைவையும் இந்த மண்ணில் ஏற்படுத்த வில்லையா?

இந்த ஆண்டு மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் ஐந்து பேருக்கு மட்டுமே இடம் கிடைத்த நிலையில் வரும் ஆண்டுகளில் அதுகூட கிடைக்குமா என்ற கேள்வி பூதாகாரமாக எழுந்து வருகிறது.

412  இடங்களில் நீட் மற்றும் ஐ ஐ டி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அமைக்கப் படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அனைத்திலும்  வீடியோ கான்பரன்சிங் முறையில் அரசுப் பள்ளிகளில் பயற்சி அளிக்கப் படுமாம்.   ஏன் அதற்கென தனியாக ஆசிரியர்களை நியமிக்க அரசுக்கு மனமில்லையா? நிதியில்லையா?

தனியார் பள்ளிகளில் இரண்டு லட்சம் கொடுத்து நேரடியாக பயிற்சி எடுக்கும் மாணவர்களோடு இவர்கள் போட்டி போட முடியுமா?

நீட் கோச்சிங் மையங்கள் பணம் கொழிக்கும் தொழிலாக மாறிவருகிறது.

அதற்கு மாநில மத்திய அரசுகளின் கொள்கைகள் தான் காரணம்.

ஏறத்தாழ இருபதாயிரம் மாணவர்கள் பங்கு பெற வாய்ப்புள்ள தேர்விற்கு தமிழ்நாட்டுக்கு ஆறு மையங்கள் தானாம்.    இந்த ஆறு மையங்களில் கலந்து  கொள்ள வாய்ப்பில்லாதவர்கள் மற்ற மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களுக்கு ஓடிச்சென்று பங்கேற்க வேண்டும்?      ஏன் இந்த இழிநிலை?        போதுமான தேர்வு மையங்களை கூடவா மாநில அரசு ஏற்பாடு செய்ய முடியாது.?

நீட் தேர்வு கூடாது என்ற கொள்கையில் இருந்து தமிழக அரசு பின் வாங்கி விட்டதா?

பொதுப்பட்டியலில் இருந்தும் கூட மாநில அரசின் கருத்துகள் செல்லுபடியாகாது என்பது  அரசியல் அடிமைத்தனத்தை மாநில அரசு ஏற்றுக் கொண்டு விட்டது என்றே பொருள்.

என்று மாறும் இந்த அடிமைகள் ஆட்சி என்று மக்கள் கொந்தளிக்கும் நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.