Home Blog Page 82

சமஸ்கிருதம் கட்டாயம் ;ராஜஸ்தானில் அமுல்படுத்துகிறது பாஜக அரசு ?

ராஜஸ்த்தான் மாநில கல்வி அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி அரசுப் பள்ளிகளில் நான்காம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சமஸ்கிருத மொழியை மூன்றாம் மொழியாக கற்க வேண்டியதை கட்டாயமாக்கப்  போவதாகவும் இதற்காக முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவிடமும் மத்திய அமைச்சர் பிரக்காஷ் ஜவடேகருடனும் கலந்து பேசி விரிவான திட்டத்தை வெளியிடப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

இதுவரை மூன்றாம் மொழியாக சமஸ்கிருதம், பஞ்சாபி, குஜராத்தி , உருது , சிந்தி வங்காளி ஆகிய மொழிகள் தேர்ந்து எடுக்க முடியும் என்று இருந்தது.    அதை மாற்றி சமஸ்கிருதம் மட்டுமே கட்டாயம் என்று ஒரு அரசு திணிக்க முனைவது  என்ன நியாயம்?

இன்று ராஜஸ்தானில் கொண்டு வருபவர்கள் நாளை எல்லா மாநிலங்களிலும் இதை புகுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

ஐந்தாயிரம் சமஸ்கிருத   ஆசிரியர்களுக்கு வேலை  கிடைக்கும் என்பதுடன் இதே திட்டத்தை தனியார் பள்ளிகள் மீதும் திணிக்கும் திட்டமும் இருக்கிறதாம்.

நீதிமன்றங்கள் தான்  தலையிட்டு இந்த அதிகார அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும் .

முதல் குற்றவாளி ஜெயலலிதாவின் பினாமிகள் சசிகலா உறவுகள் என்றுதானே தீர்ப்பு? பினாமிகளுக்கு தண்டணை குற்றவாளிக்கு இறந்தபின் மணிமண்டபமா ?

சசிகலாவின் உறவுகள் வைத்திருக்கும் சொத்துக்கள் சட்டப் படியானதா  வருமான வரி சட்டப்படி அவர்கள் குற்றவாளிகளா இல்லையா அவர்களுக்கு என்ன தண்டணை அல்லது நிவாரணம் என்பதெல்லாம் அரசு நீதிமன்ற விசாரணை களுக்கு பின்னால் தீர்மானிக்க வேண்டிய விஷயங்கள்.

இந்த சொத்துக்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் உச்சநீதிமன்றம் ஜெயலலிதா குற்றவாளி என்றும் அவரின் பினாமிகள் இதர குற்றவாளிகள் என்றும்  தீர்ப்பு  சொல்லி தண்டனை வழங்கி இருக்கிறது.

எல்லா சொத்துக்களையும் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத் தில்தான் இவர்கள் வாங்கி இருக்கிறார்கள்.

16  ஆண்டுகள் முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் முழு ஆதரவுடன்தான் சசிகலா உறவுகள் இத்தனை சொத்துக்களை சேர்த்திருக்க முடியும்.

அவருக்கு தெரியாமலோ ஏமாற்றியோ வாங்கி விட்டார்கள் என்று யாராவது சொன்னால் அவர்கள் தெரிந்தே பொய் சொல்கிறார்கள்  அரசியலுக்கு என்று தான் பொருள்.

ஜெயலலிதாவுக்கு வந்த ஊழல் பணத்தை இவர்கள் மூலம் முதலீடு செய்திருந்தால் முதல் குற்றவாளி யார்?

ஜெயலலிதாவா?   பினாமி சசிகலா வகையறாவா?   இரண்டு பேரும்தானே?

உயிரோடு இருப்பதால் சசிகலாவும் உறவுகளும் சிறையில் இருக்கிறார்கள்.

இறந்து விட்டதால் ஜெயலலிதா புனிதராக மாறி விட்டாரா?

வரிக்கு வரி முதல்வர் பழனிசாமி ‘ அம்மா  ஆட்சி அம்மா ஆட்சி ‘  என்று வாய் கூசாமல் எல்லா மேடைகளிலும் முழங்கு கிறாரே அவர் தெரிந்துதான் பேசுகிறாரா ?  அதன் பொருள் அம்மாவின் ஊழல் ஆட்சி யை நாங்கள் தொடர்கிறோம் என்பதுதானே?

மக்கள் முட்டாள்கள்.    எதை வேண்டுமானாலும் பேசலாம்   என்ற  அகந்தை தவிர வேறு காரணம் என்ன இருக்க முடியும்?

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை எட்டு மாத காலத்துக்கு மேலாக உச்ச நீதி மன்றம் தீர்ப்பை ஏன் தரவில்லை?   தப்புக் கணக்கு போட்டார் நீதிபதி குமாரசாமி என்று எல்லா பத்திரிக்கை களும் எழுதினவே அவருக்கு ஒரு கண்டனம் கூட இல்லையே?     மக்கள் எப்படி நீதி மன்றங்களை மதிப்பார்கள்?

சில மாதங்களுக்கு முன்பு  உச்ச நீதி மன்றம்  தீர்ப்பு  தந்திருந்தால் தமிழ் நாட்டின் அரசியல் போக்கே மாறி இருக்குமே?

அவசர அவசரமாக சசிகலா முதல்வர் ஆக வந்து விடுவார் என்ற நிலை உருவான உடன் திடீர் என தீர்ப்பு வருகிறது.

சட்டத்தை அரசே மீறுகிறது.    காவல் துறையே மக்களை மிரட்டுகிறது.    எங்கே இருக்கிறது  ஜனநாயகம்?

போராட முன்வரும் மக்களை அரசு தடுப்புக் காவல் என்ற பெயரால் கைது செய்யும் அடக்கு முறை ஒழிய வேண்டும்.

கண்ணுக்கு தெரிந்தே இத்தனை கொடுமைகளும் நடக்கின்றன.

ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் பெயர் எங்கு போற்றப் படுகிறதோ அங்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காலில்  போட்டு  மிதிக்கப் படுகிறது.

ஆட்சியில் இருந்தபோது அவர் செய்த பல நலத் திட்டங்கள் மக்களுக்கு நலம் பயக்கும் வகையில் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம்?

ஊழல் செய்து சொத்துக்களை பினாமிகள் மூலம் குவித்தார்  என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு சொல்லி பினாமிகளும் சிறையில் இருக்கும் நிலையில் குற்றவாளியை போற்றும் வகையில் ஒரு அரசு செயல் படுவது மிகப் பெரிய ஜனநாயகப் பிழை.

அவருக்கு மணி மண்டபம் அமைப்பது சட்ட மன்றத்தில் படம் திறப்பது என்றெல்லாம் மரியாதை செய்வது சட்ட பூர்வமாக சரியா என்பதை நீதிமன்றங்கள் தான்  தெளிவு படுத்த வேண்டும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கேள்விக்கு பதில் நிச்சயம் வேண்டும்?

பா ஜ க வை துவைத்து எடுக்கும் சிம்புவின் பாடல் !! ஜி எஸ் டி கோல்மால் என கிண்டல் ??!!

சிம்பு முன்பு பாடலில் பிரபலம் ஆனது ‘ வேறு’ விதமான ஒன்று.

ஆனால் இப்போது கபிலன் வைரமுத்துவின் வரிகளில் பாடியிருக்கும் பணமதிப்பு ரத்து மற்றும் ஜி எஸ் டி பற்றிய பாடல் ஓராண்டில் ப ஜ க அரசின் இரண்டு கொள்கைகளும் நாட்டில் ஏற்படுத்தி இருக்கும் நாசத்தை விளக்கி கிண்டல் அடித்து மக்களிடையே பிரபலமாகி வருகிறது.

யாரும் கேட்காமலேயே அவரது வீட்டுக்கு போலிஸ் காவல் போடும் அளவுக்கு பா ஜ க வை துவைத்து எடுக்கிறது அந்த பாடல்.

இதோ அந்த ஆவேச வரிகள்;

காந்தி நோட்டு ரெண்டும்         அம்பேல் ஆகி போயாச்சு

வாழ்க்கை ஏ  டி எம்மில்            அஸ்கு புஸ்கு ஆயாச்சு

சோக்கா சொக்கா மாட்டி            நடுத்தெருவில் வந்தாச்சு

காத்துக் கிடந்த ஜனம்                  காக்கா கூட்டம் போலாச்சு

நடுத்தரத்த                                          நல்லா வச்சு செஞ்சாச்சு

சில்லரைக்குத்தான்                       டங்குவாறு அந்தாச்சு

மலை மலையா                              மோசம் செஞ்ச மூதேவிங்க

பாரினுதான்                                        போயாச்சு

நோ கேஷ்  கார்டை                        ஸ்வைப் பண்ணி நாம் வாழலாம்

நோ கேஷ்    கேள்வி                       கேட்காம கொண்டாடலாம்

பண்ட பரிமாற்றம்                            பழகிக்கலாம்

கண்ணே தொறக்காம                  படம் பாக்கலாம்

பேக்கு நோட்டு போல்                    வாழ்க்கை மாறி போயாச்சு

ப்ரேகிங் நியூசை பாத்து                 லூசு மோஷன் ஆயாச்சு

வெள்ள  மனசு சேத்த பணம்       செல்லாமலே போயாச்சு

கருத்த மனசு சேத்த பணம்         வெள்ளை  கலர் ஆயாச்சு

குடிமகனா                                           ஒத்துழைப்பை தந்தாச்சு

கண்டபடிக்கு                                      நம்பிக்கையை வச்சாச்சு

வரிசையிலே பெரிசு சிறுசு        எல்லாருமே நின்னாச்சு

முடிஞ்சிதுன்னு நினைச்சாக்கா    ஜி எஸ் டி வந்தாச்சு

நோ கேஷ் கார்டை                         ஸ்வைப் பண்ணி நாம் வாழலாம்

ஏழை வீட்டில் இருப்பதெல்லாம்    சிவப்பு பணமடா

குருவி போல சேத்த காசில்              கள்ளம் இல்லடா

நாட்ட மாத்த வேணு முனு               நீங்க நினைச்சா

கோட்டு போட்ட குண்டர்களின்      சங்கப் புடிங்கடா

நோ கேஷ்     கார்டை                         ஸ்வைப் பண்ணி நாம் வாழலாம்

நோ கேஷ் கேள்வி                               கேட்காம கொண்டாடலாம்

டிமானிடைசேஷன்    டிமானிடைசேஷன்    டிமானிடைசேஷன்

மாறுமா நம்ம நேஷன்                    கேள்வி கேட்டா போலிஸ் ஸ்டேஷன்

இது கோலுமாலு                                  க்லோபலை சேஷன் ஆயாச்சு

இது கோலுமாலு                                  க்லோபலை சேஷன்

ஒரே  கன்பியுஷன்                             என்ன வாழ்க்கைடா இது

இந்த பாட்டு புதுமுகம்கள் நடித்துள்ள தட்றோம் தூக்குறோம் என்ற புதிய படத்தில் இடம் பெறுகிறதாம்.

பா ஜ க பெரிய   புத்தி  மனிதர்கள்   விஜயின் மெர்சல் படத்துக்கு    தங்கள் மொக்கை வசனங்களால் தாக்கி  தந்த விளம்பரத்தை இந்தப் படத்துக்கும் தரப் போகிறார்களா?

புத்திசாலித் தனமாக அடக்கி வாசிக்கப் போகிறார்களா?

பொறுத்திருந்து பார்ப்போம்??!!

வைகோ கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதாக லாசரஸ் சொன்னது உண்மையா ? வைகோ மறுப்பது உண்மையா?

கிறிஸ்தவ போதகர் மோகன் சி லாசரஸ் நாலுமாவடி ஜெபக்கூட்டத்தில் பேசியதாக ஒரு விடியோ உலவுகிறது.

அதில் அவர் ‘ வைகோ  மனைவி பிள்ளைங்க எல்லாம் ரட்சிக்கப்பட்டு அசெம்பிளி ஆப் சர்ச்சில் சேர்ந்து ஞானஸ்நானம் எடுத்துக்கிட்டாங்க. சர்ச்சுக்கு ஒழுங்கா போறாங்க. வைகோ அரசியலில் இருப்பதால் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால் அவர் என்னிடம் பிரதர் நான் காலையிலும் இரவிலும் பைபிள் வாசிப்பேன் என்றார் ‘ என்று                            பேசியிருப்பதாக தெரிகிறது. .

இரண்டு நாள் கழித்து வைகோ ‘ நான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறவில்லை. இந்து மதத்திலேயே இருக்கிறேன்.” என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.  ‘ தன் மகள் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்தது உண்மைதான்.   ஆனால் என் குடும்பத்தவர் பற்றி லாசரஸ் கூறியுள்ளது உண்மைக்கு மாறானது”  அன்று மறுத்துள்ளார்.

சமீப காலமாக வைகோ மனைவி  நெற்றியில் பொட்டு இல்லை என்பதை வைத்து அவர் கட்சிக்காரர்களே அது தெரிந்த விஷயம்தானே என்று சொல்வதாக ரிப்போர்டர் பத்திரிகை சொல்கிறது.

லாசரஸ் தனிப்பட்ட கூட்டத்தில் பேசவில்லை. மக்கள் கூடி இருக்கும் ஜெபக் கூட்டத்தில் பேசி இருக்கிறார்..     அவர் அப்படி பொய் பேச  அவசியம் என்ன?

மறுத்த வைகோ தான் நாத்திகன் என்று சொல்லி இருக்கலாம்.   இந்து மதத்தில் நீடிக்கிறேன் என்கிறார்.    அதாவது பார்ப்பன மதத்தில் நீடிக்கிறேன் என்பது பெரியார் கொள்கையை ஏற்றவர் பேசும் பேச்சா?

மதம் ஒருவரது தனிப்பட்ட உரிமை.    வைகோவுக்கும் தாராளமாக அந்த உரிமை உண்டு.    ஆனால் மக்களுக்கு அரசியலில் இருக்கும் ஒருவர் உண்மையை சொல்ல வேண்டும்.

நடிகர்   விஜயை ஜோசப் விஜய் என்று பா ஜ கவின் எச் ராஜா குறிப்பிட்டபோது தன் லெட்டர் பேடிலேயே ஜோசப் விஜய் என்று விஜய் விளக்க  அறிக்கை விடவில்லையா?

எல்லா மதங்களிலும் சொல்லப் படும் அறிவுரைகளை மதிப்பது என்பது வேறு.    தான் அந்த மதத்தை ஏற்றுக் கொண்டேன் என்பது வேறு.     இந்த வேறுபாடு வைகோவுக்கு    தெரியாதா?

கிறிஸ்தவ சர்ச்சை வைகோவுக்கு நல்ல பெயரைத் தரவில்லை.

தொண்டமான் பெயர் நீக்கம் சிங்களர்களிடம் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதன் அடையாளம்??!!

இலங்கையில் உள்ள தொண்டைமான் தொழிற்பயிற்சி மையம் , தொண்டமான் கலாச்சார மையம்  , தொண்டைமான் மைதானம் போன்ற அரசு நிறுவனங்களின் பெயர்களில் இருந்து சவுமிய மூர்த்தி தொண்டைமான் பெயரை சிங்கள அரசு நீக்கியிருக்கிறது.

தமிழக அரசியல் தலைவர்கள் ஸ்டாலின் வைகோ, திருமாவளவன்  அன்புமணி  போன்ற பலரும் கண்டித்திருக்கிறார்கள்.

சிலோன் இந்திய காங்கிரஸ் கட்சியை துவக்கி மலையக தமிழர்களின் உரிமைகளுக்கு தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட சவுமிய மூர்த்தி தொண்டமானின் பங்களிப்புக்காக அவரது பெயரை சூட்டிய சிங்கள அரசு இப்போது மனம் மாறி அவரது பெயரை நீக்க வேண்டிய அவசியம் என்ன.?    அதுவும் சிறிசேன தமிழர்களின் ஆதரவை பெற்று ஆட்சிக்கு வந்தவர்.

ஆட்சிக்கு வந்தவுடன் எல்லா சிங்கள அரசியல்வாதிகளும் தமிழர்களை ஒடுக்குவதில் ஒன்றுபட்டு விடுவார்கள்.

இதைத்தான் தான் ஏன் ஆயுத போராளியாக மாறினேன் என்பதற்கு காரணமாக மேதகு பிரபாகரன் கூறி வந்தார்.

எல்லா ஒப்பந்தங்களையும் காலடியில் போட்டு மிதித்தவர்கள் ஆயிற்றே?

இன்றைக்கு மீண்டும் ஜனநாயக வழியில்  போராடி தங்கள் உரிமைகளை மீட்டு எடுப்பது என்ற முடிவிற்கு எல்லா தமிழ் அமைப்புகளும் வந்து விட்டன.

ஆனால் எந்த சூழ்நிலையிலும் நாங்கள் மாற மாட்டோம் என்று சிங்களர்கள் அவ்வப்போது காட்டி கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் இந்திய அரசு தலையிட்டு சிங்கள அரசின் இந்த முடிவை மாற்ற வேண்டும் என்று  கோரிக்கை விடும் தமிழக தலைவர்கள் இன்னமும் இந்திய அரசை நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.

நமக்கு வேறு வழி இல்லை என்பதும் உண்மைதானே?

என்று உணரும் அகில உலகம் என்று காத்திருக்க வேண்டியதுதான்!!!

தினகரன் – சசிகலா உறவினர்கள் மீது ரெய்டு அரசியல் நடத்த வெட்கப் படாத மோடி அரசு?

பா ஜ க போட்டது தப்புக் கணக்காகி விட்டது.

சசிகலா சிறையில்.    இரட்டை இலை முடக்கம்.  ஓ பி எஸ் -இ பி எஸ் இணைப்பு.  ஐ டி நடவடிக்கைகளில் சம்பத்தப் பட்ட வர்கள் தலைமையில் அதிமுக பா ஜ க வின் கைத்தடி அமைப்பாக மாறி விடும்.

இந்தக் கணக்கை தினகரன் பொய்யாக்கி விடுவார் என பா ஜ க எதிர்பார்க்க வில்லை.

நீதிமன்றம் தேர்தல் கமிஷன் என்று வழக்குகளை நீட்டித்து   பா ஜ க வின் அரசியல் கனவுகளை   தகர்த்து விட்டார்.

அ தி மு க வில் தினகரன் செல்வாக்கு அதிகரித்து வருவதை யாரும் எதிர்பார்க்கவில்லை. .

1800  அதிகாரிகள்    187    சசிகலா தினகரன் உறவினர்களின் கட்சிக்காரர்களின் வீடுகள் அலுவலகங்கள்   300  பாஸ்ட் டிராக் நிறுவன கார்கள் என இந்தியாவில் இதுவரை வேறு எங்குமே நடந்திராத வகையில் வருமான வரித்துறையின் சோதனைகள் நடந்து வருகின்றன.    பாஸ்ட் டிராக் நிறுவனம் ஓ பி எஸ் ஆதரவாளர் ரெட்சன் அம்பிகாபதிக்கு சொந்தமானதாம்.

இது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை .   சாதாரண சோதனை அல்ல என  பா ஜ க   தவிர்த்த எல்லா அரசியல் கட்சிகளும் கருத்து சொல்லி இருக்கின்றன.

எதைப்பற்றியும்  வெட்கப் பட பா ஜ க தயாராக  இல்லை.

கரூர் அன்புநாதன் வீட்டில்    கைப்பற்றிய   புத்தம் புதிய இரண்டாயிரம் நோட்டுகள் முப்பதுகோடி எந்த வங்கியில் இருந்து அனுப்பப் பட்டது என்பது தெரியவில்லை  என்று ரிசர்வ் வங்கி சொன்னதே !!

சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்ற பட்ட கோடிகள் தங்கம் எல்லாம் என்ன வாயிற்று?

முன்னாள்  தலைமை செயலாளர் ராம் மோகன ராவின் வீட்டில் கைப்பற்ற பட்ட கோடிகள் தங்கம் என்ன ஆயிற்று?

அமைச்சர் விஜய பாஸ்கர் ஆர் கே நகர் தேர்தலில்  89  கோடி ரூபாயை இன்றைய முதல்வர் உள்பட அமைச்சர்கள் பலரிடம் கொடுத்து அவர்கள் மீது  வழக்கு பதிய தேர்தல் கமிஷனும் கோர்ட்டும் உத்தரவிட்டும் ஏன் நடவடிக்கை  இல்லை ?

அந்த ரெய்டுகளின் மீது என்ன நடவடிக்கை என்பதை வருமானத்துறை மக்களுக்கு அறிவிக்க வேண்டுமா இல்லையா?

இந்தக் கேள்விகளை எல்லா எதிர்க்கட்சி தலைவர்களும் கேட்டு விட்டார்கள்.    பதில் சொல்லத்தான்  வருமான வரித்துறை  தயாராக இல்லை.

இரட்டை இலை சின்னம்  உள்பட எல்லாவற்றையும் மோடி பார்த்துக் கொள்வார் என்று வெட்கமில்லாமல் ராஜேந்திர பாலாஜி பேசுகிறார்.

இந்தப் பின்னணியில்தான் சசிகலா உறவினர்கள் மீதான வருமானத் துறை சோதனை நடவடிக்கையை ஆராய வேண்டும்.

சசிகலாவையும் தினகரனையும் அரசியலை விட்டு விரட்ட முடியாது எனத் தெரிந்து கொண்டு மிரட்டல் அரசியலை கையில் எடுத்திருக்கிறது மோடி அரசு என்ற உண்மை எல்லா தரப்பு மக்களையும் சென்று அடைந்து விட்டது.

சோதனையில் என்ன கிடைத்தது என்ன நடவடிக்கை என்பதை மக்களுக்கு வெளிப்படையாக வருமான வரித்துறை தெரிவிக்க வேண்டும்.    சம்பந்தப் பட்டவர்கள் தங்கள் உரிமைகளை நீதிமன்றங்களில் நிலைநாட்டிக்  கொள்ளட்டும்.

1500 கோடி சொத்துக்கள் பற்றி ஆவணங்கள் சிக்கின. தங்கம் கிலோ கணக்கில் சிக்கின. என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. அவை உண்மையா என்பதை அந்த துறைதான் விளக்க வேண்டும்.

தப்பு செய்திருந்தாலுமே அவர்களை தியாகிகள் ஆக்கியே தீருவது என்று பா ஜ க அரசு முடிவு கட்டி விட்டது போல் தெரிகிறது.

ஆட்களுக்கு தகுந்தாற்போல் நீதி மாறும் என்ற நிலை இருப்பது மிகவும் ஆபத்தானது.

ஆளும் கட்சியின் கைப்பாவையாக வருமான வரித்துரையும் இதர நிறுவனங்களும் இயங்குகின்றன என்ற இழிநிலை என்று மாறும்?

பா ஜ க வின் மீதான ஆத்திரம் மக்களுக்கு அதிகரிக்கும் என்பது வேறு.

பொதுவாகவே மாநிலங்களின் உரிமைகள் பறிப்பு,

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் அடைந்திருக்கும் எரிச்சல்

ஜி எஸ் டி நடவடிக்கையால் உருவான பொருளாதார வீழ்ச்சி, சாமானியர்களின் இழப்புகள் ,               இவைகளுடன் சேர்ந்து அரசியலிலும் பா ஜ க மேல்தட்டு வர்க்கத்தின் பிரதிநிதி ,

நான்காம் தர அரசியல் செய்யும் மலிவான அரசியல் கட்சி

என்ற பெயரையும் சம்பாதிப்பது மட்டும்தான்

இந்த ரெய்டு அரசியலில் பா ஜ க வுக்கு மிச்சமாக இருக்கும்.

கட்சி ஆரம்பிக்க ரசிகர்களிடம் 30 கோடி கேட்கும் கமல்ஹாசன் ??!!

கமல்ஹாசன் அரசியலில் இறங்கி கட்சி தொடங்குவது முடிவாகிவிட்ட ஒன்று.

ஜெயலலிதா இடத்தை நிரப்ப தகுந்த தகுதியான நபர் இவர்தான் என்று தீர்மானித்து முடிவெடுத்து அவர்கள் காரியத்தில் இறங்கி விட்டார்கள்.

37  வருடம் ஒதுங்கி இருந்து விட்டேன். இனி இருக்க முடியாது என்கிறார்.  ஏன் ஒதுங்கி இருந்தார் என்பதற்காக காரணத்தை மட்டும் சொல்ல வில்லை. சொல்ல மாட்டார்.     ஜெயலலிதா இருக்கும்போது நான்  எப்படி இறங்குவது என்பதை வெளிப்படையாக் சொல்ல முடியாது அல்லவா?

இவர்  ஏதோ இந்து மதத்தை இழிவு படுத்தி விட்டதாக போலியாக குற்றச்சாட்டு எழுப்பி விளம்பரம் தேடிக் கொடுத்துக் கொண்டிருக்கும் வேலையை தான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்று திடீர் பல்டி அடித்து நான் ஒன்றும் இந்து மதத்துக்கு எதிரானவன் அல்ல.    என் குடும்பத்தவர் சாமி கும்பிடுகிறார்கள்.    கோவிலை இடிக்க வேண்டும் என்று நான் சொல்ல வில்லை. நான் அங்கு படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும்   என்றெல்லாம் பேசி விட்டு என்னை பிராமணர்களும் ஆதரிக்க வேண்டும் பிராமணர் அல்லாதவர்களும் ஆதரிக்க வேண்டும் என்றும் பேசுகிறார்.

நான் நாத்திகன் அல்ல என்றும் இன்று சொல்லி விட்டார்.

இப்படி எல்லா வகையிலும் குழப்பிக் கொண்டு யாரையும் பகைத்துக் கொள்ளாமல் எல்லாருடைய ஆதரவையும் பெற்று விட வேண்டும் என்று மகா பல்டி அடித்துக் கொண்டிருக்கிறார் கமல்ஹாசன்.

கடைசி குண்டுதான் முப்பது கோடி.

இன்னும் கட்சிக்கு கொள்கையை சொல்ல வில்லை.    பெயர் வைக்க வில்லை.   உறுப்பினர் சேர்க்க வில்லை. அமைப்பை உருவாக்கவில்லை.  அதற்குள் பண முதலீட்டு  தேவையை முன்வைக்கிறார்.

கட்சி  என்பதை ஏதோ சினிமா தயாரிப்பு என்பதைப்போல்  கதை ,வசனம், இசை, காமிரா, நடிகர்கள், இயக்கம் என்றெல்லாம் பட்ஜெட் போட்டு தயாரிப்பதைப்போல் கட்சிக்கும் என்னென்ன வெல்லாம் தேவை என்பதை கணக்கிட்டு முப்பது கோடி தேவை என்று கணக்கிட்டு அதை ரசிகர்களிடம் முதலீடாக பெற்று கட்சி தொடங்க இருக்கிறார் கமல்ஹாசன்.

சினிமா தயாரிப்பு எப்படி கலைத்தொண்டு என்பதோடு காசு பார்க்கும் தொழிலோ அதைப்போல கட்சியும் முதல் போட்டு லாபம் பார்க்கும் தொழிலாக கமல்ஹாசன் பார்க்கிறார் என்றுதானே பொருள்.

கருப்பு  பணத்தை வெள்ளையாக்கும் காரியத்துக்காக பலர்  லெட்டர் பேடு கட்சி நடத்துகிறார்கள்.    அவர்களில் ஒருவராக நிச்சயம் கமல்ஹாசன் இருக்க மாட்டார்.    ஏன் என்றால் வருவாயில் வரிபோக வெள்ளையாக பணம் வாங்குபவர் அவர் என்பது சொல்லக் கேள்வி.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.    கட்சி ஆரம்பிக்க  பணம் தேவைதான்.   ஆனால்  பணம் மட்டுமே போதாது.

பிரபலமானவர் ,பணம்  உள்ளவர் இந்த இரண்டுமே கட்சி தொடங்கி ஆட்சியை பிடிக்க போதும் என்பது ஒருபோதும் நடவாது.

நீ யார் என்பதை சொல்.    உனது கொள்கை என்ன சொல்.    மற்றவர்களிடம் இருந்து நீ எவ்விதத்தில் மாறுபடுகிறாய் என்பதை சொல்.    எல்லாவற்றுக்கும் மேலாக தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டாற்றுவேன் என்று சொல்.

வாழிய செந்தமிழ்

வாழ்க நற்றமிழர்

வாழிய பாரத மணித்திரு நாடு

என்ற பாரதியின் வரிகளுக்கு உருவம் கொடுக்க பாடுபடுவேன் என்று சொல்.

தமிழுக்கும் தமிழருக்கும் விசுவாசமாக இல்லாத எவரும் இங்கு ஆளும் வாய்ப்பை இனி பெறவே முடியாது.

பத்து நல்ல காரியங்களை நடத்தி விட்டு நான் நல்லவன் என்று பறை  சாற்ற இந்த முப்பது கோடி முதலீடு போதும் என்று தப்பு  கணக்கு போட வேண்டாம்.

முகமூடி போட்டு க் கொண்டு மக்களை ஏமாற்றிய காலம் மலையேறி விட்டது என்பதை யாராவது கமல்ஹாசனுக்கு சொல்லுங்களேன். ??!!

டிராக்டர் கடனுக்கு ஜப்தி – வங்கி ஏஜெண்டுகள் தாக்கியதில் விவசாயி மரணம்?

திருவண்ணாமலை விவசாயி ஞானசேகரன்.    டிராக்டர் வாங்க ஐந்து லட்ச ரூபாய் கடன் பெற்று அதில் ஒன்றரை லட்சம் திருப்பி கட்டிவிட்டு பாக்கி வைத்திருக்கிறார்.

அதை வசூலிக்க வங்கி மேலாளர்  தனியார் ஏஜென்சியை நியமித்து ஆட்களை அனுப்பி உள்ளார்.

இரண்டு மாதங்களில் அறுவடை முடிந்ததும் செலுத்துவதாக கூறிய விவசாயியின் உறுதி மொழியை ஏற்காமல் ஜப்தி செய்ய முயன்றதால் அதை ஞானசேகரன் தடுத்திருக்கிறார்.    அவரை  ஏஜெண்டுகள் தாக்கியதால் மயக்க  மடைந்த ஞானசேகரனை மருத்துவ மனையில் சேர்த்தும் பயனில்லாமல் மரணித்திருக்கிறார் அவர்.

கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டிய சம்பவம் இது.

எல்லா தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள் .

எவ்வளவு இழப்பீடு தந்தாலும் அந்த குடும்பத்தின் சோகத்தை ஈடு செய்ய முடியுமா?

அத்து மீறிய ஏஜெண்டுகளுக்கும் அவர்களை ஏவிய மேலாளருக்கும் என்ன தண்டணை?

பினாமி அரசு என்ன செய்ய போகிறது?

மோடி கருணாநிதியை சந்தித்தது பண்பாடா அரசியலா?

தினத்தந்தி பவள விழாவிற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி திடீரென்று கலைஞரை சந்திக்க விருப்பம் தெரிவித்ததன் அடிப்படையில் கலைஞர் வீட்டிற்கே சென்று நலம் விசாரித்து திரும்பி இருக்கிறார்.

மோடி கலைஞரை சந்தித்தபோது மற்றவர்களுக்கு இருந்த மகிழ்ச்சி கலைஞருக்கு இருந்ததாக தெரியவில்லை.    ஏனென்றால் அவர் மோடி சென்ற பின் வீட்டிற்கு வெளியில் வந்து தொண்டர்களை சந்தித்து சிரிப்புடன் கைகளை அசைத்து வெளிப்படுத்திய மகிழ்ச்சி மோடியை சந்தித்தபோது இல்லையே ஏன்?

எட்டாம் தேதி மோடி   அரசின் செல்லாத நோட்டு  பிரச்னையில் கருப்பு நாளாக திமுக அனுசரிக்கிறது.     அதுவும் அகில இந்திய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து.        இந்த நேரத்தில் பிரதமர் கலைஞரை சந்தித்தால் மட்டும் அரசியல் மாற்றம் வந்துவிடும் என்று சிலர் ஆரூடம் சொல்வது நகைப்புக் குரியது.

அதிமுக பொம்மை அரசை வழி நடத்தி செல்லும்  பா ஜ க அதனுடன் கூட்டணி வைத்து தமிழகத்தில் காலூன்ற திட்டமிடும்  வேளையில் மடை மாற்றம் செய்து அணி மாற்றம் கொண்டு வருவது என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது.

தன்னை ஒரு பண்பாடான பிரதமராக காட்டிக் கொள்ள விரும்பி இருக்கிறார் மோடி என்பதே உண்மை.     அது பாராட்டத் தக்க பண்புதான் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

ஏழாம் தேதி  2 G  வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப் பட இருக்கிறது.        அதில் என்ன வருகிறதோ அது மாற்றங்களை ஏற்படுத்தும் என்றால் அதை ஒப்புக் கொள்ளலாம்.

முன்பு இதேபோல்  தீர்ப்புக்கு முன் அருண் ஜைட்லி ஜெயலலிதாவை வந்து பார்த்து சென்ற போது  அதன் பின் வந்த தீர்ப்பு அவருக்கு எதிராகத்தான் இருந்தது.

ஏன் ஜெயலலிதாவை வீடு தேடி சென்று சந்திக்க வில்லையா மோடி?

வெறும் சந்திப்பின் மூலமே அரசியல் மாற்றங்கள் வரும் என்பது  வெறும் ஊகமே.

பண்பாடு வளரட்டும் !   அரசியல் தொடரட்டும்!!!

 

கமலை தூக்கில் போடு அல்லது சுட்டுக்கொல் ! பேசிய இந்து மகாசபை தலைவர் மீது என்ன நடவடிக்கை? அங்கேதான் இருக்கிறது சூட்சுமம் ?

இந்து தீவிரவாதம் இல்லை என இனியும் கூற முடியாது என்று கமல்ஹாசன் ஒரு கருத்து கூறியிருந்தார்.

ஆனந்த விகடன் சமீப காலமாக கமல் ஹாசனின் கருத்துக்களை மிகப் பெரிய அளவில் விளம்பரப் படுத்தி வருகிறது.    அவரை ஒரு சமுதாய விஞ்ஞானி போல் காட்ட மிகவும் மெனக்கெடுகிறார்கள் .

இதற்காக உ பி யில் வாரனாசி   காவல்  நிலையத்தில் மூன்று பிரிவுகளில் புகார் பதிவாகியுள்ளது.   தமிழ் நாட்டிலும் சில இடங்களில் புகார்கள் தரப் பட்டுள்ளன.

அதற்கு இந்து மகா சபை தலைவர் அசோக் சர்மா ‘ கமல்ஹாசன் போன்றவர்களை கையாளுவதற்கு வேறு வழியே இல்லை. அவர்களை தூக்கில் போட வேண்டும் அல்லது சுட்டுக் கொல்ல வேண்டும் ‘ என்று காட்டமாக கருத்து தெரிவித்தார்.

அதற்கு கமல் சிறையில் இடம் இல்லையென்றால் சுட்டுக்கொல்ல வேண்டியதுதானே என்று பதிலும் கொடுத்தார்.

அதாவது கமல் காசனை  தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவகப் படுத்தும் வேலைகள் மிக நன்றாக நடக்கின்றன.

நாடகம் மிக நன்றாக நடக்கிறது.  மற்றவர்கள் இப்படி பேசி இருந்தால் காவல் துறை சும்மா இருக்குமா?

சர்மா பேசியது தவறு  என்றும் மகாத்மா காந்தி, கோவிந்த் பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டி காட்டி கேரள முதல்வர் பினராயி விஜயன் கூட கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

நாம் இதில் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி அவர்கள் எது வேண்டுமானாலும் பேசுவார்கள்.  ஆனால் எந்த நடவடிக்கையும் இருக்காது என்றால் அவர்கள் பேசுவது கமலுக்கு முக்கியத்துவத்தை உயர்த்த முனைகிறார்கள் என்பது ஆட்சியாளர்களுக்கு தெரியும் என்பதுதான்.

அதைப்போலத்தான் சுப்பிரமணிய சாமி கமலை பொறுக்கி என்பதும் ஆமாம் நான் நல்லவற்றை பொறுக்குகிறேன் என்று இவர் விளக்கம் சொல்வதும்.

அசோக் சர்மா மீது வழக்கு பதியட்டும் . நடவடிக்கை எடுத்து சிறையில் தள்ளட்டும். அப்போது பார்க்கலாம் இவர்கள் செய்வது  பேசுவது எல்லாம் உண்மையா அல்லது நாடகமா என்பதை??