Home Blog Page 83

கார்ட்டூன் போட்டால் கைதா? எல்லை மீறுகிறது எடப்பாடி அரசு?

நெல்லையில் கந்து வட்டி கொடுமையால் கணவன் மனைவி இரண்டு குழந்தைகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தையே உலுக்கியது.

நெஞ்சம் பொறுக்காமல் கார்ட்டூனிஸ்ட்  பாலா ஒரு கேலிச்சித்திரம்  கருத்துப்படம் என்கிற கார்ட்டூன் வரைந்திருக்கிறார்.

அதில் மாவட்ட ஆட்சியர் , காவல் துறை கண்காணிப்பாளர் முதல்வர்  மூவரையும் மாவட்ட ஆட்சியர் புகாரின்  பேரில் கைது செய்திருக்கிறார்கள்.

நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்திருக்கிறது.

மூவரும் நிர்வாணமாக இருந்து கொண்டு பணத்தால் தங்கள் மறைவிடத்தை மூடிக்கொள்கிறது போலவும் எதிரில் ஒரு குழந்தை தீயில் மாள்வது போலவும் அந்த படம் இருக்கிறதாம்.

ஆமாம் இந்த கார்ட்டூனை ஆத்திரத்தின் உச்சத்தில்தான் வரைந்தேன் என்றும் அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.      ஒரு கொடுமையை காண சகிக்காமல் சமுதாய உணர்வுடைய சாமானிய மனிதனின் உணர்வுகளைத்தான் அந்த சித்திரம் பிரதி பலிக்கிறது.

இதில் எவரையும் தனிப்பட்ட முறையில் இழிவு படுத்தும் எண்ணம் எங்கே எழுகிறது?

ஆட்சியாளர்களுக்கும் இதில் பங்கில்லையா?      பலமுறை புகார் கொடுத்தும் தக்க நடவடிக்கை இல்லாததால் தான் இந்த கொடுமை நிகழ்ந்தது என்பது உண்மைதானே?

துயரத்தில் பங்கேற்று  இனி இவ்வாறு நடவாமல் பார்த்துக் கொள்வோம் என்று உறுதி அளித்திருந்தால் அரசின் கௌரவம் என்ன குறைந்தா விடும்?

மாறாக கார்ட்டூன் போட்டவரை கைது செய்து தண்டிக்க முயல்வது என்ன நியாயம்?

எல்லாரும் கண்டித்திருக்கிறார்கள்.     அரசு உடனடியாக வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டு வழக்கை முடித்துக் கொள்ள வேண்டும்.

உணர்வுள்ள அரசாக இருந்தால் அதைத்தான் செய்யும்.   இவர்களுக்கு  அது இருக்கிறதா?

வெள்ளத்தில் மக்களை மூழ்கடித்த அரசு ??!! தண்ணீர் வந்தபின் எப்படி தூர் வாருவது?

2015 ம் ஆண்டு அனுபவித்த வேதனைகளை சென்னை வாசிகள் மீண்டும் அனுபவித்து வருகிறார்கள்.

பட்ட பின்பும் புத்தி வரவில்லையே?

வட கிழக்கு பருவ மழை வரும் என்று தெரியும்.    வந்தால் வடிகால்கள் சரியான முறையில் பராமரிக்கப் படாமல் இருந்தால் தன்ணீர் ஊருக்குள் பாயும் என்றும் தெரியும்.

இந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்டு வரை தூர் வாரும் பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப் பட்டிருந்தால் எவ்வளவு தண்ணீர் வந்தாலும் கடலுக்குள் சென்று இருக்கும்.

அப்படி ஏதாவது பணிகள் நடந்ததாக தமிழக அரசால் சொல்ல முடியுமா?

இரண்டு நாள் மழையில் தெருக்கள் ஆறுகள் ஆகி விட்டன.     கீழ் பாலங்கள் எல்லாம் குளங்கள் ஆகி விட்டன.

வடசென்னை , தாம்பரம் முடிச்சூர் பகுதிகள் சென்னையின் முக்கிய பகுதிகள் எல்லாம் மழை நீரில் தத்தளித்து நிற்கிறது.

இரண்டு குழந்தைகள் மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கிறார்கள்.

ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை விட்டு விட்டு குடி பெயர்ந்திருக்கிறார்கள்.

இன்னும் மூன்று நாள் மழை நீடிக்கும் என்றால் நிலைமை கட்டுக்குள் இருக்காது.

இதில் புயல் வரும் என்று வேறு எச்சரிக்கை . !        அடையாறு, கூவம் ஆறு  பக்கிங்காம் கால்வாய் மூன்றும் சரியான நேரத்தில் தூர் வாரி இருந்தால் பெருமளவு சேதத்தை தவிர்த்து இருக்கலாம்.

தூர் வார    நானூறு கோடி ரூபாய் செலவிடப் பட்டதாக முதல்வர் கூறியதா செய்திகள்.   ஆனால் எங்கு எப்போது யாரால் இந்த வேலைகள் செய்யப் பட்டன என்ற விபரங்கள் இல்லை.

தகவல்கள் கேட்டு வெள்ளை அறிக்கை கேட்டிருக்கிறார் தி மு க செயல் தலைவர் ஸ்டாலின்.

குறிப்பிட்டு வெள்ளத்துக்கு ஒதுக்கப் பட்ட துகையில் தூர் வாரி விட்டார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.     அதற்கும் இந்த அரசு அசைய வில்லை என்றால்  யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் நாங்கள் ஊழல் செய்வதை நிறுத்த மாட்டோம் என்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது என்றுதான் மக்கள்  புரிந்து கொள்வார்கள்.

டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்திருக்கும் விவசாயிகள் அங்கும் வடிகால்கள் தூர்  வாரப் படாத நிலையில் நடப்பட்டிருக்கும் பயிர்களில் தண்ணீர் வடியாவிட்டால் நீர் தேங்கி பெருத்த நட்டத்தை ஏற்படுத்தி விடும் ஆபத்தில் இருக்கிறார்கள்.

சென்னையில்  ஏரிகள் குளங்கள் எல்லாம் விரைவாக நிரம்பி வருகின்றன.     நிரம்பி விட்டால் தண்ணீரை திறந்து விடுவதை தவிர வேறு வழி இல்லை.    அப்போது வடிகால் கள் வேலை செய்ய வில்லை என்றால் பாதிப்பேர் சென்னையை காலி செய்ய வேண்டியது வரும்.

கட்டுப்பாட்டு அறை அமைப்பது, அதிகாரிகளை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் என்றெல்லாம் அறிக்கை வெளியிட்டால் மட்டும் போதாது.   தொடர்பு கொண்டால் செயல் பட போதுமான அதிகாரிகளும் அதற்கான திட்டங்களும் இல்லை என்றால் என்ன பயன்?

எந்த சட்ட மன்ற உறுப்பினரும் மக்களை சென்று சந்தித்ததாக செய்தி இல்லை.

அவலத்தின் உச்சிக்கு மக்களை தள்ளிக் கொண்டு இருக்கிறது இந்த பொம்மை அரசு.

போட்டி போட்டுக் கொண்டு தேவரின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் ஓ பி எஸ் சும் தினகரனும் !!!

பசும்பொன் தேவரின் ஜெயந்தி விழாவுக்கு  வங்கியில் இருந்து தங்க கவசம் பெறும் உரிமை யாருக்கு என்பதில்  ஓ பி எஸ் சும் தினகரன் அணியினரும் போட்டுக் கொண்ட சண்டை தேவரின் புகழுக்கு களங்கம் என்பதை இருவரும் சட்டை செய்ய  வில்லை.

அப்போது ஓ பி எஸ்  பொருளாளர்.   இப்போது துணை  முதல் அமைச்சர்.   சசிகலாவால் நியமிக்கப்  பட்ட சீனிவாசன் பொருளாளர் ஆக தொடர்கிறார்.    தினகரன் புதிய பொருளாளர் ஆக மற்றொருவரை நியமித்திருக்கிறார்.    யார் உண்மையான அ இ அ திமு க என்பது இன்னமும் தேர்தல் கமிஷனின் பரிசீலனையில் இருக்கிறது.   இதில் பேசி ஒரு உடன்பாடு கொள்ள முடியாதவர்கள் உண்மையான தேவர் விசுவாசிகளா?

எது எப்படி  இருந்தாலும் தேவர் ஜெயந்தியில் பிரச்னை செய்வது  அவருக்கு செய்யும் அவமரியாதை என்பதை ஏன்  இருவரும் உணரவில்லை  என்பதுதான் கேள்வி.

இடையில் மாவட்ட ஆட்சியர் பெற்று விழாவை நடத்த வேண்டி வரலாம் என்ற சூழல்.

எல்லா சமூகத்தினரும் போற்றி புகழும் வண்ணம் வாழ்ந்த முத்துராமலிங்க தேவரை ஒரு சாதி தலைவராக உருவக படுத்த ஒரு தரப்பு முயற்சிப்பது முதல் யார் கட்டுப்பாட்டில் தங்க கவசம் இருப்பது என்பது வரை சம்பந்தப் பட்டவர்கள் அனைவரும் தகுதி இல்லாமல்தான் நடந்து கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை.

இதே மோதல் தேவர் ஜெயந்தி அன்றும் நடவாமல் இருந்தால் சரி.

 

ரிசர்வ் வங்கி தன்னிடம் தகவல் இல்லை என்பது மோசடிக்கு துணை போவது ஆகாதா ?

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்திய வருமான துறை   170    கொடி பணமும்  178 கிலோ தங்கமும் கைப்பற்றியதாக தகவல்கள் வந்தன.

அது தொடர்பான விசாரணையில் சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றிய  33.6 கோடி மதிப்புள்ள  2000 ரூபாய் நோட்டுகள் எந்த வங்கியிலிருந்து அவருக்கு தரப்பட்டது என்ற தகவல் தங்களிடம் இல்லை என்று ரிசர்வ் வங்கி  சி பி ஐ  க்கு தெரிவித்திருப்பது ஒட்டு மொத்த விசாரணையையே முடக்கி வைத்துள்ளது.

இந்த அதிசயம் எங்காவது உண்டா?     ஓ பி எஸ் சும் எடப்பாடியும்  சேகர் ரெட்டியுடன் தொடர்பில் இருந்தனர் என்பதால் அவர்கள் மீதும் நடவடிக்கை தவிர்க்க முடியாது என்பதால்ரிசர்வ் வங்கி இந்த தகவலை சி பி ஐ இடம் இருந்து மறைக்கிறது என்ற குற்றச்சாட்டு வலுவாகிறது.

பா ஜ க  அரசு இந்த இவர்களையும் காப்பாற்ற ரிசர்வ் வங்கியை பயன் படுத்துகிறது அல்லது இவர்கள் ரிசர்வ் வங்கியில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது உண்மையாகிறது.

நம்பிக்கைக்குரிய  ரிசர்வ் வங்கி  தனது நம்பகத் தன்மையை நிலை நாட்டியாக வேண்டும்.

இதை ஏன் உச்ச நீதி மன்றம் தானாக முன் வந்து விசாரணைக்கு ஆட்படுத்தக் கூடாது?

 

தமிழிசைக்கு வாய் நீளம்! அதற்காக சிறுத்தைகள் செய்வதும் ஆரோக்கியமல்ல!

திருமாவளவன் கட்டபஞ்சாயத்து செய்கிறார் என்று பா ஜ க வின்  மாநிலத் தலைவராக உள்ள தமிழிசை பேசியது மிகப் பெரிய தவறு.

ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறாரா ?       அதை வெளியிட்டுவிட்டு குற்றம் சுமத்தி இருந்தால் நியாயம் என்று சொல்லலாம்.

மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்ற மமதையில் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும்  பேசலாம் என்ற தைரியம் எப்படி வந்தது?

மெர்சல் படத்தில் வந்த ஜி எஸ் டி – டிஜிட்டல் மணி போன்ற வசனங்கள்  உங்கள் தணிக்கை குழுவினரால் அனுமதிக்கப் பட்ட பிறகு நீங்கள் என்ன சூப்பர்  தணிக்கை குழுவா?

கண்டனம் தெரிவித்திருக்கலாம் .    தவறு  என்று சொல்லி  இருக்கலாம்.    அதற்காக சொத்தை அபகரிப்பவர் என்றெல்லாம் அவதூறு பரப்புவது அவருக்கு இப்போது அவமானத்தை தானே தந்திருக்கிறது .

யாகாவாராயினும் நா காக்க – தமிழிசை மறக்க கூடாத குறள்.

அதற்காக சிறுத்தைகள் பா ஜ க நடத்தும் செயற்குழுவிற்கே சென்று பிரச்னை  செய்வோம் என்று கிளம்பினால் தமிழக அரசியல் நாகரிகம் பலியாவது நிச்சயம்.

திமிறும் அகம்பாவமும் அரசியலுக்கு ஆகவே ஆகாது.

உயிருடன் இருப்பவர்களின் பேனர் வைக்க தடை? உயர் நீதி மன்றம் எல்லை மீறுகிறதா?

உயிருடன் இருப்பவர்கள் படத்துடன் பேனர் வைக்கவும் குடியிருப்பு பகுதிகளில் விளமரம் செய்து அழகை சீர் குலைக்க கூடாது  என்றும் சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

அதிகம் பாதிக்கப் படுவது திருமாவளவன் ஆகத்தான் இருக்க வேண்டும்.    கலைஞர்  மற்றும் தளபதி ஸ்டாலின்  நீண்ட காலமாக சுவர்களில் நிரந்தர இடம் பிடித்திருப்பவர்கள் .  , ஓ பி எஸ்  இ பி எஸ் தினகரன் போன்ற வர்கள் திடீர்த் தலைவர்கள் இடத்தில் இருக்கிறார்கள்.    பெரியார்,  அண்ணா, ஜெயலலிதா தப்பிப்பார்கள்.

Tamilnadu open places ( prevention of disfigurement ) Act 1959  ,  அதாவது தமிழ்நாடு திறந்த வெளி அழகை சீர்குலைப்பை தடுக்கும் சட்டம் என்று ஒன்று இருப்பது எப்போது நீதிமன்றத்துக்கு நினைவுக்கு வந்தது?      வழக்கு வந்தால்தான் பல சட்டங்கள் உயிருக்கு வருகின்றன.

இது தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்களுக்குள் கூடி பேசி ஒரு ஏற்பாட்டை செய்து கொள்ளட்டும் என்று விட்டிருக்கலாம்.

பொது மக்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்க தேவை என்னவோ அதை செய்ய அரசு முனைப்பை காட்ட வேண்டும்.     கொடுமை என்னவென்றால் அதிகம் ஆதிக்கம் செய்து பொது மக்களை சிரமத்துக்கு உள்ளாக்குவது ஆளும் கட்சிதான்.     எனவே நீதி மன்றம் தலையிட்டு தான் ஆக வேண்டும்.

மூலைக்கு மூலை பேனர்களும் பதாகை களும் சுவரொட்டிகளும் கொடிகளும் கட்டி தங்கள் தங்கள் தலைவர்களுக்கு தாங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தை இனி எப்படி காண்பிப்பது?

இந்த அமைச்சரிடம் இந்த வேலை ஆக  வேண்டும் என்றால் இவரை பார்த்தால் போதும் என்று இனி எப்படி பொதுமக்களுக்கு புரிய வைப்பது?

இதை எப்படி காவல் துறை அமுல் படுத்தும்?

ஆளும் கட்சியின் பேனரை அப்புறப் படுத்தும் தைரியம் வருமா?    ஆளும் கட்சியை அனுமதித்து விட்டு எதிர்க்கட்சியை மட்டும் தடுக்க முடியுமா?

டிராபிக் ராமசாமி போராடி போராடி அகற்றப் படும் பேனர்கள் மீண்டும் மீண்டும் முளைக்கிறதே தடுக்க முடிகிறதா?

உயிருடன்   இருப்பவர்களின் படம் போட்டால் மட்டும்தான் அழகு சீர் குலையுமா?

மறைந்த தலைவர்களின் படங்களை போட்டால் சீர் குலையாதா?

பலரது பிழைப்பு பறி போய் விட்டது மட்டும் உண்மை.

அமுல் படுத்தப் படுகிறதா என்பதை பார்ப்போம்!   பிறகு பார்க்கலாம்!!

தேசிய கீதத்தை கேலிக்கூத்து ஆக்கும் உச்சநீதி மன்றமும் மத்திய அரசும்??!!

சினிமாவுக்குப் போகிறவன் தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்று முதலில் பிரச்னையை கிளப்பியது உச்ச நீதி மன்றம்தான்.

அரசியல் சட்டத்திலேயே அப்படி ஒரு பிரிவு இருப்பது உண்மைதான்.

இதுவரை அரசு விழாக்களில் தேசிய கீதம் இசைக்கப் படும் போது எல்லாரும் எழுந்து நின்று மரியாதை செய்வது ஒழுங்காக நடந்து கொண்டுதான் இருந்தது.

இதை பொழுது போக்கு இடங்களில் விரிவு படுத்தும் போதுதான் பிரச்னை எழுகிறது.

நிற்காதவனை மற்றவர்கள் திட்டுவது.   அடிக்க முயல்வது. எல்லாம் நடந்தது.

மாட்டுக் கறி தடை வந்தபோது மாடுகளை ஏற்றி வந்தவர்கள் தாக்கப் படுவது நடந்தது.        மாட்டுக் கறி வைத்திருந்ததாக அடித்துக் கொலை கூட செய்யப் பட்டார்கள்.

இது நீதி மன்றத்தின் வேலையல்ல.   மீண்டும் உச்சநீதி மன்றம்  இது பற்றி முடிவு செய்யவேண்டிய நேரத்தில் மத்திய அரசு முடிவு எடுக்கட்டும் என்கிறார்கள்.

பொருள் புரிந்து மரியாதை செய்பவர்கள் மிகவும் குறைவு.     ஏதோ எல்லா மாநிலங்களின் பெயர்களையும் குறிப்பிட்டு பாடப் படுவதால் நாட்டை உயர்த்தி பாடுகிறார்கள் என்று புரிந்து கொண்டு மரியாதை செய்பவர்கள் தான் அதிகம்.

எத்தனை பேருக்கு வங்காள மொழி தெரியும்?

போகிற போக்கை பார்த்தால் நூறு பேர் கூடி எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் தேசிய கீதம் பாடு என்று சட்டம் கொண்டு வந்தாலும் கொண்டு வருவார்கள் போல் தெரிகிறது.

வெறுப்பை நன்றாகவே வளர்க்கிறார்கள்.   எல்லாம் நன்மைக்கே!!!

கன்னடத்துக் காரன் ஏன் மெர்சல் படத்தை எதிர்க்கிறான்?

கன்னடத்துக்காரர்கள்  மெர்சல் படத்தை வெளியிடுவதை எதிர்த்து போராட்டம் நடத்தி தடுத்திருகிறார்கள் .

அந்த படத்தில் கர்நாடகத்துக்கு எதிராக என்ன இருக்கிறது?

தமிழன் ஆளப்போறான் என்ற பாடலா?   தமிழ் உணர்வை வலியுறுத்தும் காட்சிகளா?

விஜய், கார்த்தி , சூர்யா , அஜித் , ரஜினி  போன்ற தமிழ் நடிகர்களின் படங்கள் கர்நாடகத்தில் நல்ல வரவேற்பை பெறுகின்றன.    அதை தடுக்கும் நோக்கமா?

எதுவாக இருந்தாலும் ஆளும்  காங்கிரஸ் அரசு இந்த தடையை தடுக்க தவறிய குற்றத்தை இழைத்திருக்கிறது .

கலைக்கு மொழி தடை இல்லை என்கிறார்கள்.    அது எல்லாம் தமிழ் நாட்டுக்கு மட்டும் தானா?

தமிழ் படங்களில் தமிழ் கதாநாயகர்கள் கதா நாயகிகள் ஏன் முக்கியத்துவம் பெறுவதில்லை.?

பெரும்பாலும் வேற்று மொழி மாநிலங்களில் இருந்து தான் இறக்குமதி செய்கிறார்கள்.

ஏன் தமிழர்களுக்கு நடிக்கும் தகுதியும் திறமையும் இல்லை என்கிறார்களா?    அல்லது தமிழர்கள் சம்பாதிக்க உரிமை அற்றவர்கள் என்கிறார்களா?

தமிழ் ரசிகனின் பணம் வேற்று மொழி நடிகர்களுக்கு அல்லது கலைஞர் களுக்கு மட்டுமே போக வேண்டும் என்று திட்டமிட்டு செயல் படுகிறார்களோ என்ற ஐயம் எழுவது தவிர்க்க முடியாதது.

இந்த சிந்தனையை தூண்டி விட்டவர்கள் கன்னடர்கள்.    நன்றி!

மெர்சலில் கலங்கி நொறுங்கிய பா ஜ க !

விஜயின் மெர்சல்  படம்  இலவச கல்வி இலவச மருத்துவம் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி எடுக்கப் பட்டது.

இடையில் பா ஜ க கொண்டு வந்த  டிஜிட்டல் பரிவர்த்தனை  ஜி எஸ் டி போன்ற பிரச்னைகளை நையாண்டி செய்துள்ளது.

கேள்வி. இப்படி  விமர்சிக்க ஒரு நடிகருக்கோ தயாரிப்பாளருக்கோ உரிமை இருக்கிறதா இல்லையா என்பதுதான்.

அந்த விமர்சனம் தவறா சரியா என்பது வேறு.     எல்லா பத்திரிகைகளிலும் செல்லாத நோட்டு பிரச்னையையும் ஜி எஸ் டி பிரச்னையையும் கழுவி கழுவி விமர்சனங்கள்  வந்து விட்டன.

இரண்டுமே படு தோல்வி என்று எதிர்க்கட்சிகள் முடிவு எடுத்து நவம்பர் எட்டாம் தேதி அன்று அகில இந்திய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறார்கள் .

தமிழிசை சௌந்தர் ராஜன் தேவை இல்லாமல் விஜயை விமர்சித்து பிரச்னையை உருவாக்கினார்.

கருத்து உரிமையை நசுக்கும் அதிகாரத்தை பா ஜ க எப்போது தன் கையில் எடுத்துக் கொண்டது.?

கொஞ்ச நஞ்சம் மிச்சமிருந்த மரியாதையும் தமிழிசை இழந்திருக்க வேண்டியதில்லை.

படம் நூறு கோடியை தாண்டி வசூலித்துக் கொண்டிருக்கிறது.   பா ஜ க வுக்கு நன்றி.

தலித் ,பிற்பட்டோர் அர்ச்சகர் நியமனம் கேரளத்தில் !! தமிழகத்தில் தொடங்கிய புரட்சி கேரளத்தில் அமுலானது !!!

அனைத்து  தரப்பினரும் அர்ச்சராக லாம் என்று சட்டம் கொண்டு வந்தது கலைஞர்.

அதற்கென ஒரு அர்ச்சகர் பயிற்சி பள்ளி தொடங்கி தலித் ,  பிற்பட்டோர் உட்பட பலரை அர்ச்சகர் பணி புரிவதற்கென தயார் படுத்தினார்கள்.      பயிற்சி பெற்று பணியில் சேர தயாராக இருந்த நிலையில் சில பார்ப்பனர்கள் தூண்டுதலில் உச்சநீதி மன்றம் தலையிட்டு பணியில் சேர விடாமல் தடை செய்து இருக்கிறது.

அதை உச்சநீதி மன்றம் வரை கொண்டு சென்று தடை பெற்றவர்கள் நோக்கம் என்னவென்றால் பிற வகுப்பினர் அர்ச்சகர் பணி செய்ய விடக் கூடாது  என்பதுதான்.

அவர்களை பொறுத்த வரை அர்ச்சகர் பணி என்பது இறைப்பணி மட்டுமல்ல.   அது ஒரு வாழ்வாதாரம் .   அதில் பிற   சமூகத்தவர் தங்களோடு  பணி  புரிவதை இழுக்காக நினைக்கிறார்கள்.

இன்று கேரளாவில் நியமிக்கப்பட்ட   62  அர்ச்சகர்களில்     6  பேர்  தலித்துகள்    36  பேர்  இதர வகுப்பினர்.

எல்லா மாநிலங்களிலும் கொண்டு வரப்பட வேண்டிய அவசர சீர்திருத்தம் இது.

தமிழகத்தில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் பல சாதிகளை சேர்ந்தவர்கள் வேலைக்காக  காத்திருக்கிறார்கள்.

தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்து தடையை உடைக்க வேண்டும்.

அது மட்டுமல்ல இறைவன் சந்நிதியில் தமிழ் கோலோச்ச வேண்டும்.     அர்ச்சனைகள் தமிழில் நடக்க வேண்டும்.

தமிழ் அர்ச்சனை தயாரிக்கிறோம் என்று சொல்லி தப்பு தப்பாக தயாரித்து சதி செய்வார்கள்.

எல்லாவற்றையும் தமிழர்கள் முறியடிக்க வேண்டும்.

சமஸ்க்ரிதம் வேண்டும் என்போர் கேட்டு பாடச் சொல்லலாம்.    இங்கு சமஸ்க்ரிததிலும் அர்ச்சனை செய்யப்படும் என்று போர்டு வேண்டுமானால் போட்டுக் கொள்ளட்டும்.

நமது கவலை எல்லாம் இதற்கும்  யாராவது  ஒரு பார்ப்பான் உச்சநீதி மன்றம் சென்று இதற்கும் தடை வாங்காதிருக்க வேண்டும்??