Home Blog Page 86

மைனாரிட்டி எடப்பாடி அரசை தாங்கிப்பிடிக்கும் மோடி அரசு?! நீடிக்குமா இந்த அநீதி??

தினகரன் அணியை சேர்ந்த   19  சட்ட மன்ற உறுப்பினர்கள் எடப்பாடி மீது தாங்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக ஆளுநர் வித்யா சாகரிடம் மனு கொடுக்கின்றனர்.

ஏற்கெனவே இருந்த  122  உறுப்பினர்களுடன்  ஓ பி எஸ் அணியை சேர்ந்த    11   பேரையும் சேர்த்தால்  வரும் 133  உறுப்பினர் களில்  19  பேர் ஆதரவு இல்லையென்றால்  114  ஆகிறது.      எனவே  தேவைப்படும்   117  உறுப்பினர் ஆதரவு இல்லை என்பதால் எடப்பாடி அரசு மைனாரிட்டி அரசு ஆகிவிட்டது.

ஆளுநர் உடனே சட்ட மன்றத்தில் தனது பெரும்பான்மையை நிருபிக்க எடபாடிக்கு உத்தரவு இட்டிருக்க வேண்டும்.

வாங்கிக்கொண்டு எதுவும் கருத்துத் தெரிவிக்காமல் மும்பைக்கு பறந்து  விட்டார் ஆளுநர்.

தனது ஆதரவு உறுப்பினர்களை புதுச்சேரியில் தங்க வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தினகரன் ஆளானார்.

மேலும் இரண்டு உறுப்பினர்கள் தினகரன் அணிக்கு ஆதரவு அளித்திருக்கின்றனர் .

இந்நிலையில் குதிரை பேரம் நடத்தவும் தகுதி இழப்பு நடவடிக்கை எடுக்கவும் எடபாடிக்கு அவகாசம் அளித்து ஆளுநர் மௌனம் காக்கிறார்.

நம்பிக்கை தீர்மானத்தில் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ பி எஸ் ஆதரவு உறுப்பினர்கள் மீது ஏன் தகுதி இழப்பு நடவடிக்கை எடுக்க வில்லை?      அப்போது பிரச்னையை கிடப்பில்  போட்ட சபா நாயகர் இப்போது உடனே நோட்டிஸ் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

இது அப்பட்டமான சதி மட்டுமல்ல அரசியல் சட்ட மோசடி.

பா  ஜ க வின் சுய ரூபத்தை மக்கள் கண்டு கொள்ள வேண்டிய தருணம் இது.

பிளந்து கிடக்கும் அடிமைகளை மௌநிகளாக்கி அதிகாரத்தில் பங்கு போட பா ஜ க தயாராகி விட்டது.

தகுதி இழப்பு செய்தால் சட்டப்படி செல்லாது என்றாலும் அத்தகைய உத்தரவை பெற நீதி மன்றம் சென்று முறையிடவும் தீர்ப்பு பெறவும் ஆகும் கால அவகாசத்தில் எடப்பாடி தனது பண பலத்தை பயன் படுத்தி பதவியை தக்க வைத்துக்  கொள்ள  பா ஜ க மறைமுகமாக உதவுகிறது.

தமிழர்களை எப்படியும் ஆட்டி வைக்கலாம் என்பது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா ஜ க வுக்கு தெரிகிறது.

இத்தனை அடி வாங்கியும் பா ஜ க தான் தங்களை மிரட்டுகிறது  என்று தினகரன் இன்று வரை  வெளிப்படையாக குற்றம் சாட்ட தயாராக இல்லை.

நிலுவையில் இருக்கும் வழக்குகளில் தங்களை பழி வாங்கி  விடுவார்கள் என்ற பயம்தான் காரணம்.

அதனால்தான் பா ஜ க வின் முகமூடி கிழித்து அருமையாக கவிதை எழுதிய  மருது அழகுராஜை   நமது எம்ஜியார் பொறுப்பிலிருந்து கழட்டி விட்டனர்.

எல்லா வற்றையும் மீறி பொது மக்கள் இந்த அரசு மீது வெறுப்படைந்து விட்டனர்.

ஒரு நிமிடம் கூட தொடரக் கூடாத அரசாக எடப்பாடி அரசு மாறி விட்டது.

அ தி மு க வின் உட்கட்சி  பிரச்னையில் தேர்தல் கமிஷன் தலையிட்டு அரசியல் செய்ததுதான் எல்லா பிரச்னைகளுக்கும் மூல காரணம்.    தேர்தல் கமிஷன் தானாகவா  செய்தது?   பா ஜ க பின்புறத்தில்  இல்லையா?

மீண்டும்  தேர்தல் வந்து உண்மையான மக்கள் ஆட்சி  அமைந்தால் தான் தமிழ் நாட்டுக்கு விடிவு காலம்.

ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப் பட்டால் அங்கு ஊழல் சாதனைகளை பட்டியல் இடுவார்களா?

ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப் படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

அது சந்தியா பெயரில் ஜெயலலிதா வாங்கிய சொத்து.    பின்னர்  அதை தன் சொந்த செலவில் நூறு மடங்கு விலை மதிப்புள்ளதாக ஜெயலலிதா ஆக்கினார்.

சட்டப்படி அண்ணன் மகன் தீபக் மகள் தீபா இருவருக்கும் சொந்தமாக வேண்டியது.

அரசு எடுத்தால் கூட அவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டி வரும்.

யார் கேட்டார்கள் இந்த கோரிக்கையை?      யாரை திருப்தி படுத்த இந்த நடவடிக்கை?

ஏற்கனெவே ஜெயலலிதா என்ற நபர் மக்களால் பின் பற்ற தக்கவர் அல்ல  என்று நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

ஊழலின் ஊற்றுக்கண் அவர்.     நிர்வாகத் திறமை இருந்ததா என்பது  வேறு.

பெரியாரின் கழகத்தை நீர்த்துப் போகச் செய்த உள் நோக்கம் கொண்ட பிராமணியத்தின் பிரதிநிதி என்று  பலராலும் புரிந்து கொள்ளப் பட்ட அரசியல்வாதி.

உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் படி ஜெயலலிதா முதல் குற்றவாளியாக இருந்தாலும் அவருக்கு அளிக்கப் பட்ட நான்காண்டு சிறைத்தண்டனையை அவர் அனுபவிக்க முடியாமல் இறந்ததால் வழக்கு அற்றுப் போய் விட்டது..

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு என்ன இடத்தை அரசும் சமுதாயமும் கொடுக்க வேண்டும். ?

சமுதாயத்தின் அனைத்து மக்களும் அனைத்தும் பெற வேண்டும் என்று பல திட்டங்களை நிறைவேற்றி இருந்தாலும் அவைகள் மட்டும் போதுமா போற்றுவதற்கு?

அனைத்து மட்டத்திலும் ஊழலையும்  விதைத்தாரா இல்லையா?

ஊழலுக்கு பரிசு கொடுப்பதும் பாராட்டுவதும் போற்றுவதும் இந்த பாழாய்ப் போன நாட்டில் தான் நடக்கும்.

ஜெயலலிதாவை பாராட்டுவதும் ஊழலை ஊஞ்சல் போட்டு தாலாட்டுவதும் ஒன்றுதான்.

நினைவகம் சாதனை செய்தவர்களுக்கு மட்டும்தான்.      ஊழல் செய்தவர்களுக்குமா ?

 

 

ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை ; என்ன நடக்கும்?

டெல்லி எஜமானர் தந்த உத்தரவை அப்படியே நிறைவேற்றி  விட்டார் முதல்வர் பழனிச்சாமி .

தினகரனை நீக்கியாகிவிட்டது.    ஜெயலலிதா மரணம் பற்றி ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி விசாரிக்க கமிஷன் அமைத்தாகிவிட்டது.

இனி என்ன  இணைப்பு நடக்க வேண்டியது தான்  . பா ஜ க உடன் கூட்டணி ஒப்பந்தம் போட வேண்டியதுதான்.

ஓ பி எஸ் அணியிலும் இனி பூசல்  ஆரம்பிக்கும். தினகரன் தூண்டி விட்டுத்தான் சண்டை போடுகிற மாதிரி நடித்து ஒப்புக்கு ஒரு கமிஷனை அமைக்க ஒப்புதல் தந்திருக்கிறார்கள் என சந்தேகிக்க இடம்  உண்டு.    ஏன் தினகரன் கமிஷன் வேண்டும் என்று கேட்க வேண்டும்?

சி பி ஐ விசாரணை மட்டுமே வேண்டும் என்று கூட கோரிக்கையை மாற்றலாம்.

மர்மம் விலகாத மரணமாகவே  ஜெயலலிதாவின் மரணம் தொடரும் சூழ்நிலை தான் இன்று வரை நிலவுகிறது.

கண் துடைப்பு விசாரணை  என்றும் காலம்  கடந்தது என்றும் விமர்சனம் எழலாம்.

ஒய்வு பெற்ற நீதிபதி யார் என்பது பல  கோடி கேள்விகளை உருவாக்கும்.

நீதிமன்றம் செல்லும் இந்த முடிவு.     தீர்ப்பு வர இன்னும் பல மாதங்கள் ஆகும்.   அதன் பின் தான் விசாரணை.

நேதாஜி பற்றிய விசாரணை இன்னும்  முடியவில்லை.

அப்போலோ மருத்துவமனை விசாரணையை வரவேற்றிருகிறது .

இனி ஓ பி எஸ் என்ன சொல்லி  தனி அணி தொடர்வார்.?    ஒரு வகையில் இது தினகரனுக்கு வெற்றிதான்.

ஓ பி எஸ்ஸின் தர்ம யுத்தம்  முடிவுக்கு வந்து விட்டதே?!

அதிகாரத்தை கையில் வைத்திருந்தால் யாரையும் எப்போதும் ஏமாற்றலாம் .

 

நீட் தேர்வு; வஞ்சிக்கப் பட்ட தமிழ் மாணவர்கள் ???

ஒருவழியாக இந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வு முறையில் இருந்து விலக்களிக்க மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற ஆலோசனை கூறியிருக்கிறது.   நிர்மலா சீதாராமன் கூறியதை விஜய பாஸ்கர் நன்றி கூறி வரவேற்றி ருக்கிறார்.

உச்சநீதிமன்றம் வரை சென்று முடியாததை ஓராண்டுக்கு அவசர சட்டம் மூலம் நடத்த முயல்கிறார்கள்.

ஓராண்டு விலக்கு போதாது.    நிரந்தர விலக்கு வேண்டும்.

நெருக்கடி நிலை காலத்தில் மாநில பட்டியலில் இருந்த கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றி உரிமையை பறித்தார்கள்.

கல்வி  மீண்டும் மாநில பட்டியலுக்கு வந்தால் மட்டும்தான் நம் உரிமை பாதுகாக்கப் படும்.

நீதிமன்றங்களும் கடமை தவறு கின்றன.   ஏன் வெவ்வேறு மாதிரியான கேள்வித்தாள்கள் என்று கேள்வி கேட்கும் நீதி  மன்றம் ஏன் ஒரே மாதிரியான கல்வித்திட்டம் இல்லாத பொது ஒரே தேர்வு முறை என்று கேட்கவில்லை.

மாநில பாட திட்டம்  இருப்பது தவறா?   அது சி பி எஸ் சி பாடத் திட்டம் போலவே இருக்க வேண்டும் என்று மறைமுகமாக நிர்பந்திப்பது எப்படி நியாய மாகும். ?

பாடத் திட்டத்தை பல ஆண்டுகளாக மாற்றாதது மாநில அரசின் தவறாக இருக்கலாம்,.

அதற்கு மாணவர்கள் எப்படி பொறுப்பாவார்கள்?

மாநில பாட திட்ட மாணவனுக்கு அளிக்கப் பட்ட  85%  இட ஒதுக்கீட்டை எதிர்த்து நீதி மன்றம் சென்றது ஒரு சி பி எஸ் சி மாணவன்.     ஆக மாணவர்களிலேயே ஒரு பகுதியினர் தாங்கள் செல்வாக்குள்ள வர்கள் என்பதை நிருபித்து வருகிறார்கள்.

விலக்கு அளித்து தமிழக சட்ட மன்றம் இயற்றிய சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியதாக சொன்னார்களே அது என்ன ஆயிற்று?     அனுப்பினார்களா?   அனுப்பவே இல்லையா?     சட்டம் செல்லுமா செல்லாதா என்று நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டாமா?     இந்த அணுகுமுறைக்கு என்ன பெயர் சூட்டுவது?

வஞ்சகமும் சூழ்ச்சியும் நாடாளுகின்றன.     அடிமைப்பட்டோர் மீண்டு எழாத வாறு மீண்டும் மீண்டும் அடிக்கிறார்கள்.

வெள்ளைக்காரர்கள் இடத்தை இப்போது இந்திக்காரர்கள் பிடித்திருக்கிறார்கள் .

 

 

சிவாஜி கணேசன் சிலை; அரசின் ரெட்டை வேடம்!!!

சிவாஜி கணேசன் சிலையை மரினா கடற்கரையில் இருந்து தூக்க வேண்டும் என்று ஒரு மேல்தட்டு மேன்மகன் உயர்நீதி மன்றத்தை நாடுகிறார்.

அப்போது இருந்த மாநில  தி மு க அரசு சிலை இருக்கும் இடம் ஒரு ‘ போக்குவரத்து தீவு ‘  (traffic island)  என்று வாக்குமூலம் தாக்கல் செய்கிறது.   அதாவது சிலை இருக்கும் இடம் எந்த வகையிலும் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்காது என்று.

பின்னால் வந்த அ தி மு க அரசு நிலையை மாற்றி  கொண்டு விட்டது.   நீதிமன்றமும் ஏன் அரசு நிலை மாற்றியது என்று கேட்கவில்லை.

கடைசியில் மணி மண்டபம் கட்டி அங்கு கொண்டு போய் கட்டம் கட்டி விட்டார்கள்.

சிலை இருந்த இடத்துக்கு பக்கத்தில்  அதே ரோட்டில் கடிகாரம் இருக்கிறது. அசோகா சக்கரம் இருக்கிறது.   அதற்கெல்லாம் எந்த பாதிப்பும் இல்லை. ஆட்சேபனையும் இல்லை.    நடு ரோட்டில் நாடு முழுதும் அண்ணா , எம்ஜியார்,   காமராஜர்  ஏன் மன்றோ  சிலைகள் உள்பட பல இருக்கின்றன.

சிவாஜி சிலை மட்டும் ஏன் இவர்கள் கண்களை உறுத்த வேண்டும்?

அவர்கள் நினைத்தால் சட்டத்தை வளைத்து எதையும் சாதிப்பார்கள் எண்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.

ஆட்சியில் யார் இருந்தாலும் அவர்களுக்கு காவடி தூக்கிகளாக இருந்தால் தான் நீடிக்க முடியும் என்பதால் அடிமைகள் ஆட்சி நீடிக்கிறது.

வந்தேமாதரம் ; நீதிமன்றத்தின் வேண்டாத வேலை

குழப்பங்களுக்கு நீதிமன்றங்கள் அச்சாரம் போடுவது அதிகரிக்கிறது.

இருக்கும் பிரச்னைகள் போதாதென்று இவர்கள் ஊக்கமிகுதியால் இடும் உத்தரவுகள் புது பிரச்னைகளை உருவாக்குகிறது.

ஜனகணமன – சினிமா தியேட்டர்களில் பாட வேண்டும் என்ற உத்தரவு என்ன ஆனது?     யார் மதித்தார்கள் ?

சினிமா பார்க்க வந்தவனிடம் உன் நாட்டு பற்றை  காட்டு என்று யார் கேட்டார்கள்?

ஏற்கனெவே இந்தி  திணிப்பு  எதிர்ப்பு உணர்வு நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது.

திடீரென்று  அகில இந்திய வானொலி தமிழ் செய்திகளை நிறுத்துகிறது.    யார் கேட்பது?

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்தியை திணிக்க முயல்வது.    கண்டனம்  பெரிதாக இருந்தால் வாலை சுருட்டிக் கொள்வது.  ?    சமயம் பார்த்து மீண்டும் நீட்டுவது?       பா ஜ க அரசில்    இது சகஜம் என்றால் நீதிமன்றம் ஏன் இந்த கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும்?

அது சம்ஸ்க்ருதத்தில் இருந்தால் என்ன வங்காள மொழியில் இருந்தால் என்ன?    இரண்டும் எனக்கு வேற்று மொழிகள்!

இரண்டுமே எனக்கு தெரியாது.  எனக்கு தெரிய வேண்டிய மொழிகள் தெரிந்தால் போதும்.

வந்தேமாதரம் பாடல் சமஸ்கிருத மொழியில் இருப்பதால் பாட மாட்டோம் என்பதல்ல.     மொழி தெரியாத  ஒருவனின் வாயிலும்  நுழையாத வார்த்தைகள் கொண்ட பாடல் அது.

‘  புல்ல குசுமித த்ரிமதல பாஷினி’   என்று மொழி தெரியாதவனை பாட சொன்னால் என்ன செய்வான்?

இந்தியா என்தாய் நாடாம்!    அதை என் தாய் மொழி தமிழில் வாழ்த்தி பாட வேண்டாமாம்!   சமஸ்க்ரிதத்தில் பாடி என் நாட்டு பற்றை வெளிக்காட்ட வேண்டுமாம்?

நீதிபதியே  யாரையும் கட்டாயப் படுத்த வேண்டாம்.   வெறுப்பை வளர்க்கும்.    வேண்டுமென்றால் மொழி பெயர்த்து அவரவர் தாய் மொழியில் பாடுங்கள் என்று வேறு அறிவுரை கூறியிருக்கிறார்.

எத்தனை மொழிகளில் யார் யாரை பாட வைப்பீர்கள் ?

அரசு விழாக்களில் துவக்கத்தில் இசை வடிவில் வந்தேமாதரத்தையும் நிறைவில் தேசிய கீதத்தையும் இசைத்தால் போதாதா?

இதுவும் ஒரு வகை வதை.

பாரதி பாடியதை ஏன் தமிழ் நாட்டில் துவக்க விழா பாடலாக ஏற்றுக் கொள்ளக் கூடாது?

‘   வாழிய செந்தமிழ்

வாழ்க நற்றமிழர்

வாழிய பாரத மணித்திரு நாடு ”

வந்தேமாதரம் , வந்தேமாதரம்”

இதைவிட வேறு என்ன வேண்டும்?

தமிழ் தமிழர் வார்த்தைகள் அவர்களுக்கு கசக்கும்.     பாரதம் , இந்தியர் வார்த்தைகள் மட்டுமே இனிக்கும்.

நடைமுறைக்கு ஒருபோதும் வரப் போவதில்லை இந்த உத்தரவு??!!

பார்ப்பனர்கள்; உணர்வோடு கலந்த உறவா? உள்ளிருந்தே கொல்லும் நோயா?

பிராமணர்கள் எனும் பார்ப்பனர்கள் இன்று எல்லா சாதிகளையும் போல மற்றும் ஒரு சாதி.

அவ்வளவுதான்.

ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொல்லிகொண்டது போல் தாங்கள் மட்டும்தான் தலையில் இருந்து பிறந்தவர்கள் மற்றவர்கள் எல்லாம் தோளில் இருந்தும் தொடையில் இருந்தும் காலில் இருந்தும் பிறந்தவர்கள் என்று யாரும் சொல்வதில்லை.    சொல்லவும் முடியாது.

எல்லா சாதிகளிலும் உள்ளது போலவே அவர்களிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் சுயநலமிகள் பொது நல வாதிகள் எல்லாம் கலந்துதான் இருக்கிறார்கள்.

ஆனாலும் மற்ற சாதிகளுக்கு இல்லாத ஒரு லாபம் அவர்களுக்கு இருக்கிறது.

இங்கே அய்யர், அய்யங்கார் என்று சொல்லிகொன்டாலும் மற்ற மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் பட், மிஸ்ரா, நம்பூதிரி,  ஹெக்டே , பட்டாச்சார்யா, பண்டிட், திரிபாதி, என்று எத்தனை பெயர்களில் இருந்தாலும் எல்லாரும் நாம் எல்லாம் பிராமணர்கள் என்ற உணர்வுடன் வாழ்கிறவர்கள்.

மொழி ஒரு தடையாக அவர்களுக்கு இருந்ததே இல்லை.    ஏனென்றால் அனைவர்க்கும் சமஸ்க்ரிதம் தாய் மொழி .  அது எல்லா இந்திய மொழிகளிலும் இரண்டற கலந்து இருக்கிறது.     எனவே சமஸ்க்ரிதம்  தெரிந்தால் எல்லா இந்திய மொழிகளிலும் உரையாட முடியும் என்பது அவர்களுக்கு தெரியும்.

தமிழ் ஒன்றுதான் அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது.

அது மட்டும்தான் சமஸ்க்ரிதம் இல்லாமல் இயங்க முடியும்.

இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது திராவிட இயக்கம்.

எல்லா மாநிலங்களிலும் வாழும் பார்ப்பனர்கள் அங்கங்கே வாழும் மக்களுடன் இரண்டற  கலந்தே வாழ்கிறார்கள்.

எல்லாருக்கும் மோட்சம் அளிக்கும் வேலையை அவர்கள் தாங்களாகவே  எடுத்துக் கொண்டார்கள்.   மற்றவர்கள் இவர்கள் காட்டும் வழியில் மோட்சத்தை நோக்கி பயணிக்கிறார்கள்.

முக்கியமாக தங்கள் நிலைமை முன் வினைப்பயன் என்னும் கருத்தை  எல்லார மனதிலும் ஆழமாக விதைத்து விட்டார்கள்.

இரண்டே இரண்டு  விடயங்களில் தான் அவர்கள் தனித்து நிற்கிறார்கள்.   ஒன்று வழிபாட்டு இடங்களில் அவர்களுக்கு இருக்கும் தனித்த இடம்.   மற்றவர்கள் உள்ளே புக முடியாத இடம் அது.      இரண்டு எல்லா மாநிலங்களிலும் பரவி படர்ந்திருக்கும் சமுதாய பலம் .

இந்த இரண்டிலும் மற்றவர்கள் அவர்களோடு போட்டி போட முடியாது.

எல்லாத் துறைகளிலும் அவர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது.

யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.  ஆனால் எதுவானாலும் எங்களுக்கு போக மீதம்தான் மற்றவர்களுக்கு என்ற இலக்கணம் அவர்களால் வகுக்கப் பட்டு மற்றவர்களால் கட்டாயமாக ஒப்புக்கொள்ளவைக்கப் பட்ட வாழ்வியல் அது.

கிராமங்களில் மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டு அவர்களுக்கு ஆன்மிக பாதை காட்டிய அக்ரகார வாழ்க்கை இன்று இல்லை.    ஓரிரு குடும்பங்களே தங்கி இருந்து மற்றவர்கள் விலகி போய் விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றவர்கள் எல்லாம் நகரங்கள் வெளிநாடுகள் என்று  பறந்து போய்  வசதி களோடு  வாழ்கிறார்கள்.

இரண்டு காரியங்கள் நடந்தாக வேண்டும் .

ஒன்று இறைப்பணி யில் மற்றவர்களை பங்குதாரர்களாக அவர்கள் இணைத்துக் கொள்ள வேண்டும்.     அவர்கள் தர மாட்டார்கள்.    மற்றவர்கள் தாங்களே எடுத்துக் கொள்ள வேண்டும்.      சமத்துவம்  இல்லாத வழிபடும் இடங்களை புறக்கணிக்க வேண்டும்.      உச்சநீதி மன்றத்தில்  நிலுவையில் இருந்த  அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டம் ஒரு விடுதலையை தரும் என்ற நம்பிக்கை பொய்த்துப் போனது.    ஆளாளுக்கு  பல விதமான விளக்கங்களை சொல்லிக்கொண்டு பயிற்சி பெற்ற  பிற சாதி அர்ச்சகர்களுக்கு பணி கிடைக்காமல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

சமத்துவம் எல்லா நிலைகளிலும் நிலை  கொள்ள வேண்டும்.

பூணுல்  போட்டுக் கொண்டு இறைப்பணி செய்யும் அந்த வேலையை நாமும் போடாமல் செய்ய வேண்டும் என்ற உணர்வு எல்லா பக்தர்கள்  மத்தியிலும் பரவிக்கொண்டிருக் கிறது.

மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டே அவர்களின் மொழியையும் தனித்துவத்தையும் ஒழித்துக்  கட்டும் முயற்சியில் முனைப்பாக இருப்பதை அவர்கள் கைவிட்டே ஆக வேண்டும்.

ராமானுஜரும் ,  பாரதியும் . உ. வே . சாவும் ,  சந்திரசேகரேந்திர சங்கராசாரியாரும் , இன்னும் எண்ணில் அடங்கா பார்பனர்களும் இவர்கள் உயர்ந்த மனிதர்கள் தான்   , பிராமணர்கள் தான் , என்று மற்றவர்கள் மனதார ஒப்புக்கொள்ளும் வகையில் வாழ்ந்தவர்கள்.

கொலைகுற்றம் சாட்டப்பட்டஜெயேந்திரர்  ,  சுப்ரமணியன் சாமி  , குருமூர்த்தி  இன்னும் பிராமணியத்தை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் எந்த பட்டியலை சேர்ந்தவர்கள் ?

சுயநலமாக வாழும் பார்ப்பனர்களை பின்பற்றி நாமும்  சுய நலத்துடன் புற  சாதி அபிமானத்துடன்  வாழ வேண்டும் என்ற உணர்வை ஒட்டியவர்கள் பார்ப்பனர்கள்.

எந்த பார்ப்பனரும் மற்றவனுக்கு இடம் கொடுத்து வாழ வைப்பான் என்பது நடக்காத ஒன்று என்பதால் அவர்களை  நம்ப வேண்டியதில்லை என்பதிலும் இக்கால சமுதாயம் தெளிவாக இருக்கிறது.

பார்ப்பானை பின்பற்று  ( சுயநலமாக சாதி அபிமானத்துடன் வாழ்வதில் )

ஒருபோதும் நம்பாதே!!  ( விட்டுக் கொடுத்து வாழ்வான் என்று )

நாத்திகம் பேசி ஒருபோதும் அவனை வெல்ல முடியாது.

ஆத்திகத்தில் தனி வழி கண்டு  மட்டும்தான்  ஓரளவு முடியும்.

புத்தர் , மகாவீரர் , குருநானக் எல்லாம் தொற்று விடவில்லை.

சாதி ஒழிப்பே இலக்கு என்ற முனைப்புடன் செயல்பட்டால் பிறகு பார்ப்பான் என்ன பார்ப்பான் அல்லாதார் என்ன ?

சட்டம் மூலம் மட்டுமே அதை சாதிக்க முடியும் என்றால் அதை நோக்கியே பயணிப்போம். சட்டம் போட்டு யார் சாதியை ஒழிக்க கொள்கை கொள்வார்களோ அவர்களை பதவிக்கு கொண்டு வருவோம்.

இருபது சதவீத பார்ப்பனர்கள் உணர்வோடு கலந்த உறவாக வாழ்கிறார்கள்.

எண்பது சதவீதம் உள்ளிருந்தே கொல்லும் வியாதியாக வாழ்கிறார்கள்  என்றால்  எந்த வியாதி யையும்  தடுக்கும் கிருமி நாசினிகளாக மற்றவர்கள் மாறினால் வியாதியால் வரும் துன்பத்தை தடுக்க முடியுமே?

விழிப்புணர்வுதான் அந்த கிருமி நாசினி.

ஆள ஆசைப்படும் கமல்! தூண்டி விடும் கூட்டம் எது?

தமிழனை ஆளும் ஆசை எல்லாருக்கும் வரும்போது கமலஹாசனுக்கு ஏன் வரக்கூடாது?

வந்து விட்டது!

தீபா ,  தீபா  கணவர் மாதவன்,  ரஜினி  இப்போது கமல்.

யாரும் ஸ்டாலினை முன்னிறுத்தி விடக்கூடாது என்பதில் ஒரு கூட்டம் கவனமாக இருக்கிறது.

அவர்கள் தங்களுக்கு உள்ளேயே ஒருவரை எதிர் முகாமுக்கு தள்ளுவார்கள்.    அங்கும் தங்கள் ஆள் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்.    அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.      எனவே பா ஜ க தலைவர்கள் எதிர்ப்பதை உண்மை என்று எடுத்துக் கொள்ள முடியாது.     அவர்கள் செய்யும் விமர்சனங்கள் எல்லாம் ஊருக்காக என்பது அவர்களுக்கும்  தெரியும் கமலுக்கும் தெரியும்.

தமிழ்நாட்டில்      ஊழல் பெருகிவிட்டது  என்று எப்போது கமல் சொன்னார்?.    பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு பார்ப்பனப் பெண் ‘ சேரி நடத்தை ‘ என்று பேசி அது கண்டனத்துக்கு உள்ளாகியபோது அதற்கு பொறுப்பேற்க வேண்டும் கமல் என்ற குரல் எழுந்த பிறகு  ‘  கெட்ட வார்த்தையெல்லாம்  சாதாரணமாகி விட்டது என்று கடந்து போனார் கமல்.      கண்டிக்க  தைரியம் இல்லை.   அல்லது தேவையில்லை என்று கருதி இருக்கலாம்.

தமிழ் நாட்டில்   ஊழல் என்று கமல் சொல்ல அதை  எளிதாக கையாண்டிருக்க வேண்டிய அமைச்சர்கள் அதை ஊதி பெரிதாக்கி ஆளாளுக்கு பதில் கொடுக்க சவால் விட அதையே காரணமாக்கி ‘ முடிவெடுத்தால் யாம் முதல்வர் ” என்று அறிவிக்கும்  துணிவை பெற்றுவிட்டார் கமல் ஹாசன்.

சுயமரியாதை கருத்துகளுக்கு ஆதரவாக பேசி வருபவர்தான் அவர்.

சினிமாவில் இருந்ததால் மக்கள் பிரச்னைகள் பற்றி பேச வேண்டிய அவசியம் எழாமல் போயிருக்கலாம்.

ஆனால் தமிழன் தலையெழுத்து யார் வேண்டுமானாலும் அவனை ஆள முடியும் என்று இருக்கிறதே?

பொது தொண்டு செய்ய வருபவர்கள் யாரும் பெரியார் மாதிரி பதவிகளுக்கு ஆசைப் படாமல் ‘ நான் சாதி ஒழிப்பு கிளர்ச்சிக் காரன் ‘ என்று சொல்லிக் கொள்ள வேண்டாம் குறைந்தது நான் பதவிக்கு ஆசைப்பட மாட்டேன் என்று சொல்ல தயாராக இல்லையே?

ஒருவர் போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்.    மற்றொருவர் முடிவெடுத்தால் யாம் முதல்வர் என்கிறார்.

சிவாஜி  ,  விஜயகாந்த்  எல்லாம் போய் இன்னும் விஜய் , அஜித்  சிம்பு  எவரையும் அந்த ஆசை விடாது போல் தெரிகிறது.

ரசிகர் மன்றங்களை ஒழிக்க ஏதாவது வழி இருக்கிறதா?

பிள்ளைகளை கண்டிக்கும் தைரியம் பெற்றோருக்கு இல்லையா?    முடியாதா?     மெளனமாக அனுமதிப்பதும் குற்றமல்லவா?

கமல் மட்டுமாவது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றினார்.   மற்றவர்கள் அதைகூட செய்யவில்லை .

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தங்களுக்குரிய அரசியல் உரிமையை பயன் படுத்த தடை போட முடியாது.

ஐம்பது ஆண்டு காலம் வேறு துறையில் பணியாற்றி விட்டு  திடீரென்று ஞானோதயம் பிறந்து அரசியல் களத்தில் குதிக்கிறேன் என்றால் குதிக்கட்டும்.

அதற்கு முன் மக்கள் பிரச்னைகளில் தன் கருத்து  என்ன என்பதையாவது சொல்ல வேண்டாமா?

வந்த பிறகு சொல்கிறேன் என்றால் இப்போது சொல்ல விரும்ப வில்லை என்று தான் பொருள்.

எந்த பிரபலம் அரசியலுக்கு வந்தாலும் பொறுப்பு கிடைக்கும் என்று  ஒரு கூட்டம் காத்திருக்கிறது.   ஏற்கெனெவே அவருக்கு இருபது லட்சம் நற்பணி மன்ற உறுப்பினர்களாம்.

ஐம்பது கட்சி ஐம்பத்து ஒன்றாக ஆகப் போகிறது.

கொள்கை என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் சொல்லி கொள்ளலாம்.   கட்சி நடத்தலாம்.

ஏதோ அறிவிப்பு செய்யப் போகிறாராம்.    செய்யட்டும். காத்திருப்போம்.

 

 

 

பா ஜ க அரசுக்கு எதிராக போராடுவோர் மீது குண்டர் சட்டம் பாய யார் காரணம்?

கதிராமங்கலத்தில் ஒ என் ஜி  சி க்கு எதிராக போராடிய பொது மக்கள் ஒன்பது பேரை சிறையில் அடைத்து ஜாமீனில் வர முடியாத அளவு கெடுபிடி செய்கிறது அ தி மு க அரசு.

இத்தனைக்கும் எங்களை மீறி நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வராது என்ற உறுதியை மாநில அரசு கொடுத்திருக்கிறது.

அதேபோல் இந்தியன் ஆயில் கார்பொரேஷன் முன்பு போராடியதற்காக மே பதினேழு இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப் பட்டுள்ளார்.

இப்போது அதே நோக்கத்தோடு ஆயில் நிறுவனங்களுக்கு எதிராக போராடிய சேலம் மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டிருக்கிறார்.

அவர் மீது ஆறு வழக்குகள் உள்ளன என்று முதல்வர் சட்ட மன்றத்தில் காரணம் கூறுகிறார்.

எல்லா வழக்குகளும் அரசியல் வழக்குகள் தானே.     எல்லா அரசியல் கட்சிகளும் அரசுகளை எதிர்த்து போராடுகின்றன.      எல்லார் மீதும் குண்டர் சட்டம் பாயுமா?

கொலை கொள்ளை, வழிப்பறி , என்று குற்றம் புரியும் கிரிமினல் குற்றவாளிகள் மீது பல வழக்குகள் இருந்தால் அவர்களை குண்டர் சட்டத்தில் போட்டு ஜாமீனில் வர முடியாமல் செய்வது வழக்கம்.

இப்படி கிரிமினல்கள் மீது பாய்ச்ச வேண்டிய குண்டர் சட்டத்தை அரசியல் போராளிகள் மீது போட்டால் அவர்களை அரசியல் ரீதியாக போராடுவதில் இருந்து தடுக்க அரசு முயற்சிக்கிறது  என்றுதான் பொருள்.

அதுவும் மத்திய அரசுக்கு எதிராக போராடினால்  மாநில அரசு குண்டர் சட்டத்தில் போடுகிறது என்றால் மத்திய அரசு கொடுக்கும் அழுத்தத்திற்கு மாநில அரசு பணிகிறது என்றுதானே பொருள்.

மத்திய அரசின் கைப்பாவையாக மாறிவிட்ட அ தி மு க அரசு எப்படி மாநில உரிமைகளை பாதுகாக்கும்?

கொடுமை என்னவென்றால் பா ஜ க அரசு தரும் அழுத்தம் காரணமாகவே இப்படி செய்கிறோம் என்று       அ தி மு க அரசு ஒருபோதும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை.

இன்னும் என்னவெல்லாம் செய்யும் காவி?

 

புலி ,மீன் ,வில் அம்பு தமிழ் நாட்டின் தனிக்கொடி!!!

புலி , மீன், வில்  அம்பு தமிழ் நாட்டின் தனிக்கொடி ஆக வேண்டும்.

கர்நாடக அரசு அதற்கென தனி  கொடி வேண்டும் என்று தீர்மானித்து அதை செயல் படுத்த ஒன்பது பேர்  கொண்ட ஒரு தனிக்குழுவை அமைத்துள்ளது.

கர்நாடகாவில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் முடிவில்  ஜெய் கர்நாடக் என்று ஒலி முழக்கம் எழுப்புவார்கள்.   இதுவரை  எவரும்  ஆட்சேபித்த தில்லை .

ஏற்கெனெவே ஜம்மு காஷ்மீர் அரசு  தனக்கென தனிக்கொடி கொண்டுள்ளது.

சித்தராமையா காங்கிரஸ்காரர்.      தேசிய ஒற்றுமையில் அசைக்க முடியாத  நம்பிக்கை வைத்துள்ளவர்.  அவரது கட்சி இதை  அங்கீஹரிக்கப் போகிறதா என்பதை இனிமேல் தான் பார்க்க வேண்டும். அங்கீகரிக்க  வேண்டும்.

இந்திய  நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் தனக்கென தனிக்கொடி  கொண்டிருப்பதால் என்ன விளைவு ஏற்பட்டு விடப் போகிறது. ?

தமிழ்நாடு தனக்கென தனியாக தமிழ்த்தாய் வாழ்த்து கொண்டிருக்கிறது.    தேசிய ஒற்றுமைகேட்டு விட்டதா?     ஒவ்வொரு மாநிலமும்  கொண்டிருக்கின்றன.   என்ன  கெட்டு விட்டது.?

அமெரிக்காவின் ஐம்பத்து ஒரு மாநிலமும் தங்களுக்கென தனிக் கொடி வைத்திருக்கிறார்கள். ஒற்றுமை கெட்டு விட்டதா?

தனித்துவத்தை வளர்க்கும் போதுதான் ஒற்றுமை வலுப்பெறும்.   மாறாக தனித்துவத்தை சிறுமைப் படுத்தினாலோ அடக்க முயற்சித்தாலோ பிரிவினை மனோபாவம் தான் வளரும்.

ஒற்றுமை உணர்வில் கலந்து நிற்க வேண்டும்.    நான் இந்தியன் என்ற உணர்வு  தானாக துளிர்க்க வேண்டும். நிலைக்க வேண்டும்.

புலி   மீன்  வில் அம்பு ஏற்கெனெவே முக்குலத்தோர் அமைப்புகள் பயன் படுத்தி வருகிறார்கள்.

அவர்களை வற்புறுத்தி ஆட்சேபிக்க கூடாது என்று தடுக்க வேண்டும்.

ஆட்சேபனைகளை சமாதானப் படுத்த ஒரு குழு அமைக்க வேண்டும்.

தேவைப்பட்டால் வேறு ஒரு புதுக்  கொடியை தேர்ந்தெடுக்க வேண்டும்.    அது எது வேண்டுமானாலும் இருக்கட்டும்.

இதையெல்லாம் செய்யும் அளவு இன்றைய தமிழக  அரசு இருக்கிறதா?

டில்லிக்கு காவடி தூக்கும் இவர்கள் இதெற்கெல்லாம் சரிப்பட மாட்டார்கள்.

மக்கள் குரல் ஓங்கி  ஒலிக்கத் தொடங்கினால் இவர்கள் அப்போது முன்னுக்கு வருவார்கள்.

சாதி என்னும் சதியால் பிளந்து பட்டு கிடக்கும் தமிழ் சமுதாயம் இப்படி தமிழ் உணர்வால் ஒன்று படுவது மட்டுமே  சாத்தியம் .

தமிழக அரசு தமிழ் நாட்டுக்கு தனிக்கொடியை பெற்றுத் தருவது வரலாற்றுக் கடமை.