Home Blog Page 87

பசு மூத்திரம், சாணி, பால், தயிர், நெய் கலவை பஞ்சகவ்யம் -ஆராய உயர் மட்ட குழு அமைத்தது மோடி அரசு??!!

பசு மூத்திரம், சாணி , பால், தயிர்  நெய் ஐந்தும் கொண்ட கலவை பஞ்சகவ்யம் எனப்படும்.

இதற்கு என்னென்ன குணங்கள் உள்ளன என்பதை பற்றி  ஐ ஐ டி ஒன்றில் நடந்த ஒரு ஆராய்ச்சிக் கூட்டத்தில் விஞ்ஞானிகளால் விவாதிக்கப் பட்டது.

ஏற்கனெவே கங்கை ஆற்றின் தண்ணீரை தபால் நிலையங்களில் விற்று வரும் மோடி அரசுக்கு பசு பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாடுகளை சந்தைப் படுத்துவதில் பல கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது.    அதனால் பல பகுதிகளில் மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக பலர் கொல்லப் பட்டு வரும் நிலையில் இந்தப் பிரச்னை இப்போது உச்ச நீதி மன்றத்தில் இருக்கிறது.

மோடி அரசு இப்போது கோமியத்தை கையில் எடுத்திருக்கிறது.

19 பேர் கொண்ட கமிட்டி – எல்லாம்  மெத்தப் படித்தவர்கள் –  கூடி ஆய்வு செய்து முடிவு செய்யப் போகிறார்கள். எதைப்பற்றி? பஞ்சகவ்யம் விஞ்ஞான மதிப்பும் ஆராய்ச்சியும்  என்ற தலைப்பில் . இதன்  தலைவர் விஞ்ஞான மற்றும் தொழில் வள அமைச்சர் ஹர்ஷ வரதன்.

ஆர் எஸ் எஸ் – விஸ்வ இந்து பரிஷத் இணைந்த விஞ்ஞான அனுசந்தன் கேந்திரா அமைப்பை பல  ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள்.   அது பசு மூத்திரம் சாணம் பற்றி ஆராய்ந்து  வருகிறது.

பல அமைச்சகங்கள் கொண்ட குழுவாக அமைத்ததன் மூலம் இதற்கு ஒரு விஞ்ஞான அங்கீகாரம் தர முயல்கிறது மோடியின் அரசு.

எதைப்பற்றியும் ஆராய்வதிலோ உண்மையை கண்டறிவதிலோ எந்த ஆட்சேபணையும் இருக்க முடியாது.

அதுவும் இந்த  பஞ்சகவ்யம் எப்படியெல்லாம் மருத்துவ குணம் கொண்டது – மருந்தாக விவசாய பயன்பாடு பொருளாக   உணவு ஊட்டச்சத்து பொருளாக மற்றும்  பயன்படு பொருளாக – என நான்கு விதமாக ஆராய்ச்சி செய்கிறார்கள்.

செய்யட்டும்.   நன்மை விளைந்தால் நல்லதுதானே.    ஆனால் இவர்களை பற்றி மக்கள்  வைத்துள்ள கருத்துரு- இவர்கள் எதை செய்தாலும் மதம் சார்ந்து செய்வார்கள் என்பதுதான்.      இவைகளை பற்றிய அவநம்பிக்கை தான் இந்த ஆராய்ச்சியையும் சந்தேகிக்க வைக்கிறது.

நாட்டையே சைவமாக ஆக்கும் முயற்சியில் இப்போது  ஆர் எஸ் எஸ் வழிகாட்டலில் இயங்கும்  மோடியின் அரசு இறங்கி இருக்கிறது.    அது முடியுமா என்றால் முடியாது என்பதுதான் எல்லாருடைய பதிலாக இருக்கும் .     ஆனாலும் தங்கள் முயற்சியில் அவர்கள் பிடிவாதமாக இருப்பார்கள்.     நாளை நடக்காததை இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து செய்வோமே என்பது அவர்கள் குணம்.

ஆட்சி அதிகாரத்தை பயன் படுத்தி தங்களின் வர்ண தர்ம  கொள்கை யை அமுல் படுத்தும் திட்டத்தை ஒருபோதும் அவர்கள் கைவிடப் போவதில்லை.

ஏன் இந்த முயற்சியில் மாற்றுக்கருத்து கொண்டோரையும் இணைத்துக் கொள்ளக் கூடாது?      ஏன் அரசுப் பணியில் உள்ளோர் கட்சி சாராதோர் தானே என்பார்கள்.      ஆனால் உண்மையில் அவர்களும் ஒரு வகையில் ஒத்த கருத்து கொண்டவர்களாக இருப்பார்கள்.

விஞ்ஞான ஆராய்ச்சி என்றால் ஏன் அது இந்திய ஆராய்ச்சியாக இருக்க வேண்டும். சர்வ  தேச விஞ்ஞானிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டியது தானே?

விஞ்ஞானத்திற்கு எது எல்லை. ?     நாடு கடந்த ஆராய்ச்சியே உண்மையை வெளிக்கொணரும்.

உண்மை வெளிவரும் நாளை நாடு எதிர் நோக்கி காத்திருக்கிறது.

 

 

பிக் பாஸ் -கமலகாசன் – விஜய் டி வி – நாட்டை சீரழிக்கும் கூட்டணி??!!

பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டி விக்கு பணம் சம்பாதிக்கும் ஒரு வழிமுறை.

பதினைந்து பிரபலங்களின் தனிப்பட்ட ஆசாபாசங்களை விளம்பரப் படுத்தி வணிகப் படுத்தும் மட்டமான காரியம்.

கலந்து கொள்ளும் அனைவரும் மோசமாகவும் ஆபாசமாகவும் உடை அணிந்து வருவது திட்டமிட்ட வசூல் நோக்கம்.

பல நாடுகளில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டு வெற்றி கண்டிருக்கலாம்.

இதைவிட மோசமான நிகழ்ச்சிகள் வரவேற்பை பெற்றிருக்கின்றன.    அதனாலேயே நடத்தலாமா?

மேல்தட்டு  மக்களின் ஆதிக்க உணர்வுகள் காட்சிப் படுத்தப் படுகின்றன.

ஒரு பிராமணப் பெண் காயத்திரி ‘ சேரி நடத்தை’  என்று  தாழ்த்தப் பட்டோரை தாழ்த்தி பேசுவதை கண்டித்து பெரியார் திராவிட கழகம் அறிக்கை  வெளியிட்டது.     இந்து மக்கள் கட்சி இந்து கலாச்சாரத்தை கேவலப் படுத்து வதாக புகார் கூறி இருக்கிறது.   கமலகாசன் கருப்பு சட்டை  போடுவது கூட கேள்வி க்கு ஆளாகி யிருக்கிறது.

இதனால் சமுதாயத்துக்கு என்ன பயன். ?

சினிமா என்றால் கூட ஒரு இரண்டரை மணி நேரம் பொழுது போக்கு என்று எடுத்துக் கொள்ளலாம்.

நூறு  நாட்கள் தினமும் ஒன்றரை  மணி நேரம் தமிழ் மக்கள் இந்த கன்னறாவிக் காட்சிகளை பார்த்து கொண்டிருக்க வேண்டுமா?

பார்க்காதே என்றால் என்னதான் இருக்கிறது என்று பார்க்க மக்கள் கூடுவது இயல்பு என்பதுதான் இவர்களுக்கு பலம் லாபம்.

மக்கள் தெளிவடைந்து இருந்தால்  பார்க்காமல் ஒதுக்கி வைத்தால்  அவர்கள் வேறு நிகழ்ச்சிகளை  பற்றி சிந்திப்பார்கள்.     மாறாக பார்பவர்கள்  அதிகமாக அதிகமாக இது போன்ற மக்களை கெடுக்கும் நிகழ்ச்சிகள் பெருகத் தான்  செய்யும்.

 

 

 

தமிழாய்வு நிறுவனத்தை முடக்கப் பார்க்கும் மத்திய அரசு ; வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு??!!

சென்னையில் இயங்கி வரும் செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தை திருவாரூரில் உள்ள மத்திய பல்கலை கழகத்தின் ஒரு பகுதியாக மாற்ற மத்திய அரசின் நிதி ஆயோக் பரிந்துரைத்து நடவடிக்கை தொடங்கப் பட்டு உள்ளது.

இதை எல்லாரும் எதிர்த்து குரல் கொடுத்து வருகையில் முதல் அமைச்சர் தனக்கு இது தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என்ற பதிலை சொல்லி விட்டு அமைதியாகி விட்டார்.

இந்தி சமஸ்க்ரிதம் ஆகிய மொழிகள் தவிர்த்து வேறு எந்த மொழி பற்றிய ஆய்வும் நடத்த தேவையில்லை என்ற முடிவை மத்திய அரசு எடுத்து விட்டதாகவே தோன்றுகிறது.

தன்னாட்சிகொண்ட அமைப்பாக செயல் பட்டால்தான் ஆய்வறிஞர் களுக்கு நிதி நல்கி ஆராய்ச்சியில் ஈடுபட வைக்க முடியும்.    அதற்கான நிதியையும் மத்திய அரசுதான் தர வேண்டும்.

எவரையும் நிரந்தர பணியில் அமர்த்தாமல் அனைவரையும் தற்காலிக பணியாளர்களாக கருதி நடத்துவதே தவறு.

பாரபட்சம் காட்டும் மத்திய அரசின் போக்கை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய மாநில அரசு பயத்தின் காரணமாக பணிந்து கிடக்கிறது.

தொடர்ந்து பா ஜ க வின் மத்திய அரசு தனது தமிழ் விரோத போக்கை கடைப் பிடிப்பது நல்லதல்ல.

முதல்வர்  தகவல் இல்லை என்று சொல்கிறாரே தவிர மத்திய அரசை அணுகி இப்படி ஒரு கருத்துரு உருவாகியி ருக்கிறதா  என்பது பற்றி  மத்திய அரசின் கருத்தை கோரிப் பெற்றாரா?     உத்தரவாதத்தை கேட்டாரா?

இந்த நடவடிக்கை மட்டும் அமுலுக்கு வந்தால் மேலும் நிலைமை மோசமாகும் என்பது மட்டும் உறுதி.

ரகசிய பெட்டகத்தை திறக்க மன்னர் குடும்பம் ஏன் எதிர்க்க வேண்டும்?

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில்தான் இந்தியாவில்  அதிக சொத்துக்கள் கொண்டது என்பது எல்லாருக்கும் தெரிந்த செய்தி.      பல லட்சம் கோடிகள் மதிப்புள்ள சொத்துக்கள் இந்த கோவிலுக்கு உண்டு.

ஒரு நாளைக்கு இரண்டு மூன்று கோடி வருவாய் உள்ள திருப்பதி  தேவஸ்தானத்தை விட சொத்துக்கள் அதிகம் உள்ள கோவில் இதுதான்.

அதிலும் முதல் பெட்டகத்தில் மட்டும்  1.25 லட்சம் கோடி மதிப்பிலான தங்க விக்ரகங்கள் நவரத்தினங்கள் ஆபரணங்கள் தங்கப் பாளங்கள் கண்டு எடுக்கப் பட்டன.

இரண்டாவது  பெட்டகம் இன்னும் திறக்கப் பட வில்லை.

மற்ற  பெட்டகங்களில் சுவாமிக்கு அணிவிக்க வேண்டிய அணிகலன்கள் இருக்கின்றன .

அந்த இரண்டாவது பெட்டகத்தை திறக்க மன்னர் குடும்பம்  எதிர்க்கிறது.    ஏன் என்பது புதிராக் இருக்கிறது.

கதவுகளை உடைத்தால் கோவில் கட்டுமானம் சிதைந்து விடும். அபூர்வ நாகம் காவல் காத்து நிற்கிறது. அசம்பாவிதங்கள் நிகழும். முன்பே முயன்றபோது அலுவலர் ஒருவரின் கால் பாதிப்புக்கு உள்ளானது.  என்றெல்லாம் பயமுறுத்துகிறார்கள்.

ஆனால் தணிக்கைத் துறை உயர் அதிகாரி ஒருவர் இந்த பெட்டகம் வெவ்வேறு தருணங்களில் ஏழு முறை திறக்கப் பட்டுள்ளது என்று தெரிவிக்கிறார்.

சுவாமிக்கு அணிவிக்க வேண்டிய அணிகலன்களில் ஏழு நகைகளை காணவில்லை என்று சில நாட்களுக்கு முன்னாள் ஒரு புகார் கிளம்பியது.

உச்ச நீதி மன்றத்தில் இது குறித்து விரைவில் முடிவை அறிவிக்கும் என்று எதிர் பார்க்கிறார்கள் பக்தர்கள்.    லட்சக் கணக்கான கோடிகள் மதிப்புள்ள நகைகளை யாருக்கும் மதிப்பை அறிவிக்காமல் ரகசியமாக பாது காப்பதால் யாருக்கு என்ன பயன்.?   அது பிற்காலத்தில் தவறாக பயன் படுத்தப் படும் வாய்ப்பு உண்டு என்று தெரிந்தும்  மன்னர் குடும்பம் ரகசியம் காக்க விரும்புகிறது என்றால் அது யாரோ பின்னால் இருந்து இயக்கு கிறார்கள் என்றுதான் பொருள்.

இத்தனை நாள் பாதுகாத்து வந்தார்களே என்றால் அதனால் யாருக்கு என்ன பயன்?

சொத்துக்களை என்ன செய்வது என்பது வேறு.    சொத்துக்களை வெளிப்படையாக பராமரிப்பது என்பது வேறு.

ஜனநாயக நாட்டில் வெளிப்படைத் தன்மை கட்டாயம் வேண்டும்.

ஆன்மிகத்தை வளர்க்க வந்தவர்கள் எப்படியெல்லாம் சொத்துக்களை குவித்து வைத்தார்கள் என்பது மக்களுக்கு தெரிந்தாக வேண்டும்.

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்புதான் வெளிச்சம் தர வேண்டும்.

?

பீர் ஆரோக்கிய பானம் – ஆந்திர அமைச்சர் பேச்சு ??!!

பீர் ஆரோக்கிய  பானம் என்று  பேசியதோடு நில்லாமல் அதன்   13  அரிய  பலன்களை மறுநாள் வாட்ஸ் அப்பில் தொலைகாட்சிக்கு அனுப்பிய ஆந்திர அமைச்சர் கே எஸ் ஜவகர் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளார்.

அமைச்சர் அறியாமையில் பேசியிருக்கிறார் என்று கலால் துறை அதிகாரிகளே பேசும் அளவு அமைச்சரின்  பேச்சு அமைந்திருக்கிறது.

ஆந்திராவில் இப்போது மதுவிற்கு எதிரான போராட்டத்தை பெண்கள் முன்னெடுத் திருக்கிறார்கள் .

தமிழகத்தில் தொடங்கிய போராட்டம் மற்ற மாநிலங்களுக்கும் பரவி உள்ளது நல்லதே!

ஆனால் எப்படிப்பட்ட அமைச்சர்களை மக்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.

சந்திரபாபு நாயுடு என்ன செய்ய போகிறார்?

தேர்தலில் தோற்றவர்களை நியமன உறுப்பினர்களாக்கினார் புதுச்சேரி ஆளுநர் பேடி ??!!

தேர்தலில் நின்று ஆயிரத்து ஐநூறு வாக்குகள் வாங்கி டிபாசிட் பறிகொடுத்தவர் புதுச்சேரி மாநில பா ஜ க தலைவர் சாமிநாதன்.   பொருளாளர் சங்கர் மற்றும் கல்வியாளர் செல்வகணபதி மூவரையும் புதுச்சேரி சட்ட மன்றத்துக்கு நியமன  உறுப்பினர்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட அதை ஆட்சேபித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டவுடன் அவசர அவசரமாக அவர்களுக்கு மாநில அரசுக்கு சொல்லாமல் சபாநாயகருக்கு சொல்லாமல் பதவி பிரமாணம் செய்து வைத்திருக்கிறார் ஆளுநர் பேடி.

அரசு ஊழியராக இல்லாமல் இருந்தால் போதும் என்ற விதியை தவறாக பயன்படுத்தி நியமனம் செய்திருக்கிறார் பேடி.

பா ஜ க நியமித்த மூவரில் இருவர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளனவாம்.     அரசியலில் நேர்மை பற்றி பேசும் பா ஜ க தனக்கு என்று வந்த பிறகு நேர்மையை எல்லாம் தூக்கி  எறிந்துவிட்டு செயல்படும் என்று நிரூபித்து விட்டது.

வழக்கு நிலுவையில் உள்ளது. மாநில அரசை கலந்து கொள்ளாமல் எடுத்த முடிவு இது.

நீதிமன்றத்திலாவது நீதிகிடைக்குமா  என்று பார்ப்போம் !

ரிலையன்ஸ் , நெஸ்லே பால் பவுடர்களில் ப்ளீச்சிங் பவுடர் கலக்கலா?

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நெஸ்லே , ரிலையன்ஸ் பால் பவுடர்களில் காஸ்டிக் சோடா வும் ப்ளீச்சிங் பவுடரும் கலப்பதாக பேட்டி கொடுத்து அதிர்ச்சியை கிளப்பி  இருக்கிறார்.

இரண்டு கம்பெனிகளும் குற்றச்சாட்டை மறுக்கின்றன.     ஆய்வறிக்கை தன்னிடம் இருப்பதாக அமைச்சர் கூறுகிறார்.

எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் யார் குற்றம் சாட்டப் படுகின்றாரோ அவருக்கு வாய்ப்பு அளித்து அதன் பின்னரே வெளியே  சொல்ல வேண்டும்.

அமைச்சரின்  குற்றச்சாட்டு பொறுப்புள்ளதாக தெரியவில்லை.

நாட்டில் உணவுப் பொருள் கலப்பட தடுப்பு சட்டம் அமுலில் இருக்கிறதா இல்லையா?

தனியாரோ கம்பெனியோ குற்றம் செய்திருந்தால் அந்த சட்டப் படி நடவடிக்கை எடுக்க என்ன தடை?

ஒரு சாம்பிள் எடுத்து அதை தகுதி வாய்ந்த பரிசோதனை கூடத்தில் அறிக்கை பெற்றால் மட்டும் போதாது.   அதன் தொடர்ச்சியாக சட்டப்  படியான நடவடிக்கை வேண்டும்.    அப்போதுதான்  அது குற்றம் நிரூபிக்க வேண்டிய அமைப்பின் முன் விசாரணையை சந்திக்க நேரிடும்.

அமைச்சர் தனக்கும் கீழே இருக்கும் அதிகாரிகளை காரணம் காட்டுகிறார் நடவடிக்கை எடுக்காததற்கு.

குற்றச்சாட்டு மிகவும் முக்கியமானது.    மக்களின்  நல வாழ்க்கையோடு தொடர்புடையது.

அதை மிக சாதாரணமாக அமைச்சர் கையாளுவது சரி அல்ல.

குற்றம் நிரூபிக்கப் பட்டால்  நிறுவனங்களுக்கு தண்டனை.    இல்லை என்றால் குற்றம் சாட்டியவருக்கு  என்ன தண்டனை ?

ஒரு வழக்கை கூட போடாமல் யார் மீதும் குற்றம் சுமத்த கூடாது என்பது கூடவா அமைச்சருக்கு தெரியாது.

அவசரமாக காவல் துறை தலையிட்டு  விரிவாக ஆராய வேண்டிய குற்றச்சாட்டு இது.

 

தமிழ்ப்பெயர் சூட்டினால் இனி வரிவிலக்கு கிடைக்காது ; மெர்சல் விஜய் தொடக்கம்!!??

தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலப் பெயர் சூட்டுவது வழக்கமாகிப் போனபோது கலைஞர் தமிழில் பெயர் வைத்தால் முப்பது சதம் வரி விலக்கு என்று ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தார்.

விலக்கு வாங்குவதற்கு என்றே பலர் பெயரை மாற்றினார்கள்.   எம்டன் எம் மகன் ஆனது. பவர் பாண்டி ப. பாண்டி ஆனது.  இது தொடர்பாக உயர் நீதி மன்றத்தில் வழக்கு எல்லாம் வந்தது.

எல்லாம் பழைய கதை ஆகி விட்டது.      ஜி  எஸ் டி வந்தாலும் வந்தது.   இனி விலக்கு  தரும் உரிமை மாநில அரசுக்கு இல்லை என்றாகி விட்டது.    ஜி  எஸ்  டி வரிவிதிப்பால் சினிமா உலகமே பாதிக்கும் என்ற பயம் எல்லாரிடத்திலும் இருக்கிறது.

தமிழ்படம் என்றாலே அதில் தமிழ் இருக்காது என்ற நிலை உருவானாலும் ஆச்சரியம் இல்லை.    நடிகைகளை  வெளி மாநிலங்களில்  தேடிப் பிடிக்கிறார்கள்.     தமிழ் நாட்டு நடிகைகள் இங்கே மதிக்கப்  படுவது இல்லை.

இனி படப் பெயர்கள் எல்லாம் தமிழில் இருக்காது .     விஜய் தன் புது படத்திற்கு மெர்சல் என்று பெயர் சூட்டி   இருக்கிறார்.       பொருள் என்ன  என்று படம் பார்த்தால் தான்  தெரியும் .   ஆனால் நிச்சயம் தமிழ் இல்லை.

இவருக்குத்தான் எத்தனை ரசிகர் மன்றங்கள்?

தமிழ் தலைப்பில்லாத படங்களை புறக்கணிப்போம் என்று ரசிகர்கள்   குரல் கொடுக்க தொடங்கினால் தவிர இவர்களை கட்டுப் படுத்த முடியாது.

குட்கா விற்க நாற்பது கோடி ; ஊழலா தினகரன் ஆதரவு அமைச்சரை மிரட்ட பாஜக திட்டமா?

வருமானத் துறை அரசியல்வாதிகள் மீது  நடவடிக்கை எடுக்கும்போது சந்தேகம் வருவது இயல்பு.

மாதவராவ் என்பவர் குட்கா தயாரிப்பு நிறுவன பங்குதாரர்.    அவரிடமிருந்து கைப்பற்றப் பட்ட கணக்குப் குறிப்பில் தமிழக அமைச்சர் மற்றும் போலிஸ்  அதிகாரிகளுக்கு நாற்பது கோடிக்கும் அதிகமான லஞ்சம கொடுத்ததாக குறிப்பு இருப்பதாகவும் இது பற்றி விசாரிக்கும்படியும் தமிழக அரசுக்கு வருமானத்துறை கடிதம் எழுதுகிறது.

குட்கா , பான் மசாலா போன்ற தடை செய்யப்  பட்ட பொருட்கள் எல்லா கடைகளிலும் தாராளமாக கிடைக்கிறது.      சட்டத்தை அமுல்படுத்த விரும்புவோர் முதலில் அதை தடை செய்ய நடவடிக்கை  வேண்டும்.

அதே நேரத்தில் பெரும்துகையை  லஞ்சமாக பெற்றுக் கொண்டு அதை அனுமதித்தவர்கள்   பேரிலும் நடவடிக்கை வேண்டும்.

குற்றமிழைத்தவர் ஒரு துண்டு சீட்டில் அரசியல் பிரமுகர் பெயரை எழுதி விட்டால் அவர் குற்றவாளியாகிவிடமாட்டார் .      பா ஜ க வின் அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு வருமானத் துறை துணை போகிறது என்ற குற்றச்சாட்டும் வளர்ந்து கொண்டே போகிறது.

மூன்று அணிகளாக பிரிந்து கிடக்கும் அதிமுக வை ஒரு வழி ஆக்காமல் பா ஜ க விடாது போல் தெரிகிறது.

விஜயபாஸ்கர் தினகரன் ஆதரவாளர் என்று  எல்லாருக்கும் தெரியும்.     ஆர் கே நகர் இடைதேர்தலில் அவர் பெரும் பங்கு ஆற்றினார்.    தேர்தல் நிறுத்தப் பட்டது.

இரு அணிகளின் இணைப்பிற்கும் தினகரன்  தடையாக இருக்கிறார் என்று பா ஜ க நினைக்கிறது.

எனவே தினகரனை எழ விடாமல் செய்ய அவரது ஆதரவாளர்களை மிரட்ட பா ஜ க திட்டமிட்டால்  அது அரசியல் ராஜதந்திரமாகும்.    அதற்கு வருமானத் துறை யை அது பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.   அதைத்தான் தவறு என்கிறோம்.

முதலில் குட்கா தாராளமாக கிடைப்பதை தமிழக அரசு தடை செய்யட்டும்.

நீதிமன்றம்  தலையிட்டு குட்கா விற்க துணை போனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அதே நேரத்தில் வருமானத் வரித்துறை அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு துணை போகாமலும் இருக்க  நடவடிக்கை எடுக்கவும் தலையிடும் என்று நம்புகிறோம்.

கீழடியில் சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முந்தைய தமிழர் நாகரிகம் இருந்ததை மறைக்க முயல்கிறதா பா ஜ க அரசு?

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஒரு ஏக்கர் நிலத்தில் அகழ்வாராய்ச்சி செய்ததில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு தமிழர் நாகரிகம் இருந்தது என்பதற்கு ஆதாரமாக 5000 க்கும் மேலான அரியவகை பொருட்கள் கிடைத்துள்ளன.

2015 ல் தொடங்கிய ஆய்வு இப்போது மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் மத்திய அரசு காட்டும் இரட்டை முகம் கொதிப்படையச் செய்கிறது.

முதலில் இதில் தீவிரம் காட்டிய அதிகாரி ராமகிருஷ்ணனை அசாம் மாநிலத்துக்கு தூக்கி அடித்தது மத்திய அரசு.       கேட்டால் இது சாதாரண இட மாற்றம் என்று சாக்கு கூறுகிறது.

இரண்டாவது   நீதிமன்றம் தலையிட்டு ஏன் இங்கேயே ஒரு மியூசியம் அமைக்கக் கூடாது என்று நீதிமன்றம் கேட்ட பிறகு தமிழக அரசு நாங்கள் இரண்டு ஏக்கர் நிலம் தருகிறோம் ஆனால் மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று சாவகாசமாக பதில் கூறுகிறது மாநில அரசு.    கொஞ்சம் கூட அக்கறையோ அவசரமோ காட்டாமல் மத்திய அரசை எப்படி குறை கூறாமல் இருப்பது என்பதிலேயே தமிழக அரசு அக்கறை காட்டுகிறது.    பாவம் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் மத்திய அரசை நிர்பந்திக்க தயாராக இல்லை.

மூன்றாவது   மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமனும் மகேஷ் சர்மாவும் வந்து பார்த்து விட்டு வெறும் நாற்பது லட்ச ரூபாயை மூன்றாம் கட்ட பணிகளுக்காக ஒதுக்கினார்கள்.     ஒரு ஏக்கரிலேயே இவ்வளவு கிடைத்தபின் 150 ஏக்கரிலும் ஆய்வு செய்தால்தான் ஆராய்ச்சி முழுமை  பெறும் என்று தெரிந்தும் மத்திய அரசு கேவலமாக நடத்துகிறது.     கண்ட கொள்ளாமல்  இருக்கிறது மாநில அரசு.

எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பிய பின்னும் மத்திய அரசு முரண்டு பிடிக்கிறது.

மத்திய அரசு சார்பில் இதுவரை ஆக்கபூர்வமாக எந்த ஒரு அறிக்கையும் இல்லை.

ஆதிச்ச நல்லூரில் கிடைத்த ஆதாரங்கள்  6000 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்த அடையாளம் காட்டுகின்றன.

இந்நிலையில் பாண்டிய மன்னர்கள் ஆண்ட பூமியில் இன்னும் நிறைய அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப் படவேண்டும் என்ற கருத்து வலுப் பெற்றிருக்கிறது.

ஒரே நாடு ஒரே கலாசாரம் என்று பேசுகிறவர்கள் வேறு கலாசாரம் இருந்தது என்பதை  மூடி மறைக்கத்தான் முயல்வார்கள்.    ஏன்  கண்டு பிடிக்கப் பட்ட பொருட்களோடு   எதையாவது கலந்து  இதுவும் சிந்து சமவெளி நாகரிகம்தான் என்றும் சொல்வார்கள்.     கண்காணிக்க வேண்டிய தமிழக அரசு கையாலாகாத் தனமாக நடந்து கொள்வது வேதனை யளிக்கிறது.

தேவைப் பட்டால் தமிழக அரசும் நிதி ஒதுக்கி ஆராய்ச்சியை ஆழப் படுத்த வேண்டும்.    இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறை  (ஏ எஸ் ஐ)   மத்திய அரசு கையில் இருப்பதால் நாம் ஒன்றும் செய்ய முடியாது என்பதில்லை.

ஆராய்ச்சி நடப்பது நம் நாட்டில்.      மாநில அரசு ஒன்றும் செய்ய முடியாது என்பதில்லை.   தகுந்த கண்காணிப்போடு  செயல் பட்டால் எதையும் மூடி மறைக்க முடியாது.

ஆனால் அதற்குரிய முனைப்பை மாநில அரசு காட்ட வேண்டும்.

தவறினால் ஆட்சியில் இருப்போரை வரலாறு மன்னிக்காது.