Home Blog Page 89

அரிசி சர்க்கரையில் பிளாஸ்டிக் கலக்கும் சமூக விரோதிகள்??!

உணவுகலப்படங்களில் பல வகைகள் இருக்கின்றன.

எடை கூடுவதற்காக உட்கொண்டாலும் பெரிதாக உடலுக்கு ஊறு விளைவிக்காத இதர பொருட்களை கலந்து லாபம் சம்பாதிப்பவர்கள்.    அரிசியில் கல் கலப்பதை கேள்விபட்டிருக்கிறோம்.    எடை கூட்டி விற்றாலும் கல் பொறுக்கும்    வேலை மட்டுமன்றி தவறி  உள்ளே போனால் பல உபாதைகளும் உருவாக்கும்.

சமீப காலமாக குற்றவியல் நீதிமன்றங்களில் உணவு கலப்பட வழக்குகள் பதிவாவதே இல்லை.   அரசு காட்டும் அலட்சியம் கலப்படகாரர் களுக்கு    ஊக்கம் தரும் வகையில் இருக்கிறது.

தவறு செய்பவர்களுக்கு பயம் காணாமல் போக அரசு காட்டும் அலட்சியம் மிக முக்கிய காரணம்.

அரிசியில் பிளாஸ்டிக் கலந்ததை நிரூபிக்கும் வகையில்  சமைத்த பிளாஸ்டிக் அரிசியை பந்தைபோல் \உருட்டி விளையாடும் காட்சி வலை தளங்களில் பிரபலமாகி வருகிறது.

தமிழ்நாட்டில் அரிசி கிடைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லாததால் இங்கு பிளாஸ்டிக் அரிசி  பேச்சுக்கே இடமில்லை என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் பேட்டி கொடுக்கிறார்            .

ஆந்திராவிலும் தெலுங்கானவிலும்  பிளாஸ்டிக் அரிசி விற்பனை குற்றச்சாட்டில் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப் பட்டு  விசாரிக்கப்  பட்டு வருகிறது.

கர்நாடகத்தில் சர்க்கரையில் பிளாஸ்டிக் கலந்து விற்பனை என்ற குற்றச்சாட்டு எழுந்து விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

சாதாரணமாக டீ , காப்பி பொடிகளில் கலப்படம்தான் இதுவரை அதிகம் பேசப் பட்டு வந்தது.   இப்போது அரிசி சர்க்கரையிலும் பேசப் படுவது கொடுமையின் உச்சகட்டம்.

அரசுகளின் மெத்தனப் போக்குதான் இந்த அவலங்களுக்கு முக்கிய காரணம்.

மக்களின்  விழிப்புணர்வும் மேலும் கூட வேண்டும்.

ஒன்று மணலுக்கு மாற்று தேடு அல்லது தமிழகத்தில் மட்டுமே பயன்படுத்த சட்டம் கொண்டு வா ??!!!

மணல் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே எடுக்க  முடியும் என்றும் அதற்குப் பிறகு நிறுத்தப் படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

இதில் ஏதாவது அறிவுடைமை இருக்கிறதா?

கேரள அரசு தன் ஆறுகளில் மணல் எடுப்பதில்லை.

தமிழ் நாட்டு  மணல்  மிகப் பெரும்பாலும் கேரளம் கர்நாடகம் ஆந்திர மாலத்தீவு மோரிஷஸ் அரபு நாடுகள் என்றெல்லாம் பயணிக்கிறது.

மூன்றாண்டுகளுக்கு பிறகு முடியாது என்றால் இப்போதே நிறுத்தினால் என்ன?

தன் மாநிலத் தேவைகளுக்கு மட்டுமே அனுமதிப்பது சட்ட பூர்வமானதுதானே !

முழுவதும் சுரண்ட வேண்டும் என்பது விதியா?

மணலுக்கு மாற்று பற்றி  ஆராய்ந்து என்ன முடிவுக்கு வந்திருக்கிறது அரசு.?

இப்போதே திட்டமிடா விட்டால் மூன்று  ஆண்டுகளுக்கு பிறகு மணல் அள்ளுவது நிறுத்தப் படும் என்ற அறிவிப்பு எப்படி செயல் படுத்தப் படும்?

எப்படி பார்த்தாலும் அரிதான மணல் குறுகிய காலத்துக்கு மட்டுமே கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை  என்பதால் அந்த குறுகிய காலத்துக்கு நம் தேவைக்கு மட்டுமே பயன் படுத்த அனுமதித்து விட்டு அதன் பிறகு மணலுக்கு மாற்று தேடுவதே அறிவுடைமை.

ஆட்சியாளர்களுக்கு அந்த சிந்தனை வருமா?

பா ஜ க வின் ஆட்சிவேட்டை எப்போது தொடங்கும் ?

எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் , தினகரன் . திவாகரன் என்று வெளிப்படையாக நான்கு பிரிவுகளும் எப்போது வேண்டுமானாலும் மாற தயாராக இருக்கும் ஐந்தாவது பிரிவும் அதிமுக அரசை என்ன செய்ய போகிறார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

யாரும் ஆட்சியை கவிழ்க்க தயாராக இல்லை.     நான்காண்டு காலமும் ஒட்டி விடுவதில்தான் குறியாக இருக்கிறார்கள். ஒபீஎஸ் கூட இன்று எங்களால் பழனிசாமி  கவிழாது என்கிறார்.

எந்த குற்ற உணர்வும் இல்லாமல் தமிழக அரசியலை குழப்பத்தில் ஆழ்த்தி பதவி சுகம் கண்டு வருகிறார்கள்.

பா ஜ க அரசை குற்றம் சொல்ல யாருமே தயாராக இல்லை.   பயம்.   மாநில உரிமைகள் எப்படி பாதுகாக்கப் படும்?

பொதுசெயலாளர் சசிகலா துணை பொது செயலாளர் தினகரன் என்று அவிடவிட்டு  தாக்கல் செய்து விட்டு இருவரையும் விலக்கி வைக்கிறோம் என்கிறார்கள்.

ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்லி எல்லாரையும் குழப்பத்தில் ஆழ்த்து கிறார்கள்.

தலைமை என்ற ஒன்று இல்லாமலே ஒரு கட்சி இயங்க முடியும் என்று அ தி மு க நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

பல குழுக்களை வைத்துக் கொண்டே ஒரு ஆட்சியை நடத்த முடியும் என்று பழனிசாமி நிரூபித்துள்ளார்.

நான்காண்டுகளும் இப்படித்தான் நகரும் என்பது சகிக்க முடியாத கொடுமை.

இந்த குழப்ப நிலை ஒரு முடிவுக்கு கொண்டுவரப் பட வேண்டும்.

தேர்தல் ஒன்றே இந்த குழப்பத்தை தீர்க்கும்.

வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகத்தில்  இருக்கும் தற்போதைய உறுப்பினர்கள் தேர்தல் கொண்டு வர தயாராக இருப்பார்களா?

இவர்களை மிரட்டி காலூன்ற நினைக்கும் பா ஜ க குடியரசுத்  தலைவர் தேர்தலுக்குப் பிறகு ஆட்சியை கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவந்து  தங்கள் மேற்பார்வையில் ஒரு ஆறு மாதம் ஆட்சி  நடத்தி இவர்களோடு கூட்டணி வைத்து  தேர்தலை கொண்டு வந்தால்தான் உண்டு என்ற நிலைதான் இப்போது.

பா ஜ க வின் ஆட்சி வேட்டை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்.

பார்க்கலாம்.        இடையில் ஏதாவது நடக்கலாம் அல்லவா ?

பேருந்தில் சிறுமி கற்பழிப்பு – தமிழ்நாட்டிலும் தொடரும் கொடுமைகள்!!!

நிர்பயா சம்பவங்கள் தமிழ் நாட்டிலும் தொடர்ந்து நடக்க ஆரம்பித்து விட்டன.

ஓடும பேருந்தில் நிகழந்த கொடுமையான நிர்பயா கற்பழிப்பு வழக்கு நாட்டையே உலுக்கியது.     அதன் பின் நிர்பயா நிதி என்ற ஒன்றையே உருவாக்கி இதுபோல் பாதிக்கப் படும் பெண்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

வடநாட்டில் மட்டும் நடந்து வந்த இந்த காட்டுமிராண்டித்தனம் தமிழ் நாட்டிலும் தொடர்ந்து நடந்து வருவது அதிர்ச்சியளிக்கிறது .

தண்டணை விரைவாகவும் அச்சுறுத்தும் வகையிலும் இருந்தால்தான் குற்றவாளிகளுக்கு பயம் இருக்கும்.

தன்னை கற்பழித்த சாமியாரின் ஆணுறுப்பை அறுத்து எறிந்த பெண்ணின்  துணிச்சல் எல்லாருக்கும் வர வேண்டும்.      சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது தவறு என்று கூட சிலர் கூறினார்கள். ஆனாலும் பொதுவில் எல்லாரின் ஆதரவையும் பெற்றது அந்த பெண்ணின் நடவடிக்கை.

இந்தக் கயவர்களுக்கு அளிக்கப் படும் தண்டணை விரைவாகவும் இனி யாரும் இப்படி நடக்க அஞ்சும் வகையிலும் இருக்க வேண்டும்.

மாட்டிறைச்சித் தடை ; இன்னும் என்னவெல்லாம் செய்யும் இந்துத்துவ வெறி?!

மாட்டு சந்தையை நெறிப் படுத்துகிறோம் என்ற சாக்கில் மாட்டு இறைச்சியை உண்பவர்களின் உரிமையை பறிக்க மோடியின் மத்திய அரசு முடிவெடுத்து அறிவித்திருப்பதுதான் இன்னும் இவர்கள் என்னவெல்லாம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் பாதிக்கப் போவது பெரும்பாலும் தலித்துகளும் கிறிஸ்தவ முஸ்லிம்களும்தான்.

ஒரு  முஸ்லிம் உறுப்பினர் கூட இல்லாமல்    எங்களால் மத்தியில் ஆட்சியில் அமர முடியும் என்று பா ஜ க நிருபித்து விட்டது.      ஒரு முஸ்லிம் உறுப்பினர் கூட இல்லாமல் உ பி யில் ஆட்சியில் அமர முடியும் என்பதையும் நிருபித்து ஆகிவிட்டது.      ஏன் இனி முஸ்லிம்களை  பற்றி கவலை கொள்ள வேண்டும் ?   அவர்கள் ஆதரவு தேவை இல்லை கிடைக்காது என்றான பிறகு அவர்களின் எதிர்ப்பை பா  ஜ க இனி கண்டு கொள்ளாது.

இந்துத்துவ சாம்ராஜ்யத்தை        நிறுவ  முயலும் ஆர் எஸ் எஸ் சின் நீண்ட நாள் கனவு நிறைவேறும் என்ற கனவில் மிதக்கிறார்கள் அவர்கள்.       அகில இந்திய ரீதியில் காங்கிரஸ் பலவீன மடைந்து விட்டது.    இடது சாரிகள் வலுவில்லாதவர்கள்.    அணி   சேர்த்தெல்லாம்    இனி தோற்கடிக்க முடியாது என்ற அகங்காரம் பா ஜ க விற்கு.

தமிழ் நாட்டிலேயே இரு அ தி மு க பிரிவையும் கைக்குள் கொண்டு வந்தாகி விட்டது.     ரஜினியை தனி கட்சி ஆரம்பிக்க வைத்து தமிழ் கைக்கூலிகளையும் கோடரிக் காம்புகளையும் துணை சேர்த்து திராவிட பாரம்பரியத்தை சரித்து விடலாம் என்று பா ஜ க திட்டமிட்டு விட்டது.

சாதிகளால் பிரிந்து கிடக்கும் தமிழ் சமுதாயம் இந்த சவாலை எப்படி எதிர் கொள்ளப்  போகிறது?

எதிர்ப்பு வரும் என்று தெரிந்தே  எடுத்த முடிவு இது.        அடக்கி விடலாம் என்ற வெறியும் இதில் உள்ளடக்கம்.

ஜெயலலிதா தன் ஆட்சிக் காலத்தில் ஆடு கோழி பலியிடுவதை தடுக்க சட்டம் கொண்டு வந்து அதனால் எழுந்த எதிர்ப்பலைகளை கண்டு சட்டத்தை திரும்ப பெற்றவர்தான்.

இந்த முடிவுக்குப் பின் இருப்பது ஜீவ காருண்மயமா  அல்லது   இஸ்லாமிய எதிர்ப்பா?

ஜீவ காருண்யம் என்றால் மீன், கோழி , ஆடுகளை மக்கள் உணவாக கொள்வதை அரசால் தடுக்க முடியுமா?

உலகில் சைவ உணவை கட்டாயமாக்க முடியுமா?    பன்றி, நாய் பூனை, எலி, தவளை, பாம்பு , என்று  பல உயிரினங்கள் மனிதர்களுக்கு உணவாக ஆகின்றன.      இவற்றை சட்டம் போட்டு தடுக்க முடியுமா?

கொல்லாமை உயர்வானது என்பதில் ஐயம்  இல்லை.    ஆதி காலம் தொட்டு மனிதன் மிருக இறைச்சியை உணவாக கொண்டு இருக்கிறான்.     அதை சட்டம் போட்டு தடுக்க முடியாது.

மாட்டு சந்தைகள் இனி மதிப்பிழக்கும்.    பாதிக்கப் படப போவது விவசாயிகள்தான்         பயன் முடிந்த மாடுகளை விற்று தன் தேவைகளை பூர்த்தி செய்து வந்தவர்கள் இனி அவைகளை வைத்து காப்பாற்றவும் முடியாமல் விற்கவும் முடியாமல் சிரமப் படுவார்கள்.

வேடிக்கை என்னவென்றால் மாடு வெட்டும் கூடங்களை அரசு தடை செய்ய வில்லை.     மாட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்வதை தடை செய்ய வில்லை.    இதில்  ஈடுபடுகிறவர்கள் பெரும்பாலும் பெரு முதலாளிகளே!

கோவில்களில் பலியிடவும் கூடாது என்ற உத்தரவும் மத ரீதியிலானது.      இத்தனைக்கும் வேத காலத்தில் பசு மாமிசம் உண்ணப் பட்டது என்பது நிருபிக்கப் பட்டுள்ளது. எனவே மத ரீதியில் கூட இதற்கு துணை கிடைக்குமா என்பது சந்தேகமே!

மாடுகள் கன்றுகள் எருமைகள் ஒட்டகங்கள் என்று தடைப் பட்டியலில் இடம் பெற்றும் மிருகங்களின் பட்டியல் நாளை நீளலாம்.

கால் நடைகள் மாநிலப் பட்டியலில் இருக்கும்போது மத்திய அரசு சுற்றுச் சூழல் அமைச்சகம் மூலம் மாநில  உரிமைகளில் கை வைத்திருக்கிறது.

மாநிலங்களில் வலுவான தலைமைகள் இருந்தால் இவைகள்  குறையும்.

மேலோட்டமாக பார்த்தால் இது மாட்டிறைச்சித் தடை .    ஆராய்ந்தால் பார்ப்பன சதி.      பார்பனரல்லாத  இந்துக்கள் பெரும்பாலும் மாட்டு இறைச்சி சாப்பிடுவதில்லை.     ஆனால் அவர்கள் முஸ்லிம்கள் ஏன் சாப்பிடுகிறார்கள் என்றும் கேட்பதில்லை.        ஆனால் மேல்சாதி பார்பனர்களுக்கு மட்டும்தான் இது உறுத்தலாக  இருக்கிறது.  எனவே சதி செய்து சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள்.     இது நிலைக்காது.     நீதிமன்ற ஆய்விலும் நிற்காது. சட்டத்துக்கு புறம்பான எதுவும் நீதி மன்ற அங்கீகாரம் பெறாது.

நிலைக்காது என்றாலும்  மத வெறியர்களை   அடையாளம்  காண இந்த சட்டம் உதவும்.

ரசாயனம் கலந்து விற்கின்றனவா தனியார் பால் நிறுவனங்கள் ??!!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தனியார் பால் நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டு பல ஊகங்களுக்கு வித்திட்டிருகிறது.

தயிரையே பாலாக மாற்றுகிறார்களாம்.    ஹைட்ரஜன் பெராக்சிட்,   க்ளோரின்     மற்றும் யூரியா போன்ற பொருட்களை கலந்து விற்பதால் பதினைந்து நாட்கள் வரை தனியார் பால் கெடுவதில்லை யாம்.

அமைச்சர் சொல்வதுபோல் ஐந்து நாட்களில் உறை ஊற்றவில்லை என்றால் பால்  கெட்டுப்போக வேண்டும்.     கெட்டால்தான் பால்.

தனியார் நிறுவனங்கள் குற்றச்சாட்டுகளை மறுத்தாலும் ஆய்வுக்குப் பின்தான் அவர்கள் குற்றம் அற்றவர்களா என்பது தெரியும்.

இன்று மாதவரம் பால் பண்ணையில்  தனியார் பால் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டு முடிவுகள் வந்ததில் அவைகள் ரசாயனம் கலந்து இருப்பது உறுதிப் பட்டு இருப்பதாக அமைச்சர் கூறுகிறார்.

மிரட்டி பணம் பறிக்கும் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டா என்றெல்லாம் கூட பலர் விமர்சிக்கிறார்கள்.    அவைகளில் உண்மை உள்ளதா என்பது இனி அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பொறுத்தே தெரிய  வரும்.

தனியார் பால் நிறுவனங்கள் மூடப் பட வேண்டிய நிலை வந்தால் அதனால் பெறும் பயன் அடையப் போவது ஆவின் நிறுவனம்.     எனவே போட்டி நிறுவனம் சுமத்தும் பொய் குற்றச்சாட்டாக இது அமைந்து விட கூடாது.

நீதி மன்றங்கள் இதில் நிச்சயம் தலையிடும்.   அப்போது அரசு சட்டப் படி நடந்திருக்கிறதா என்பது பரிசீலிக்கப் படும்போது உண்மை தெரிந்து விடும்.

கலப்படம் உண்மையென்றால் தண்டனை தவறக்கூடாது.

சசிகலாவை விடுவிக்க தீர்மானம் போடுமா சட்ட மன்றம் ?

ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் திறக்க பாரத பிரதமரின் தேதியை கேட்டிருக்கிறார் முதல்வர் பழனிச்சாமி .

ஜெயலலிதா இன்று உயிருடன் இருந்திருந்தால் சசிகலாவுடன் பரப்பன அக்ரகார சிறையில் கைதியாக இருந்திருப்பார்.

ஜெயலலிதாவுக்கு நூறு கோடி அபராதம்.   மற்றவர்களுக்கு பத்து கோடிதான் அபராதம்.

ஜெயலலிதாவின் பினாமிகளாக செயல்பட்டார்கள் என்பதுதான் மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டு.   எனவே பிரதான குற்றவாளி ஜெயலலிதாதான்.

சட்ட மன்றத்தில் படம் திறப்பது என்பது வெறும் சடங்கல்ல.    அது ஒரு தொண்டிற்கான அங்கீகாரம்.!   வாழ்த்து .!

யாரை சட்டமன்றம் வாழ்த்துகிறது.    உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப் பட்டவரையா?       அதற்கு சட்ட மன்றத்திற்கு உரிமை இருக்கிறதா?

உச்சநீதி மன்றத்தால் குற்றவாளி என்று  தீர்ப்பளிக்கப்  பட்டவருக்கு மரியாதை செய்ய சட்ட மன்றத்திற்கு உரிமை உள்ளதா?

இதனால் உச்ச நீதி மன்ற தீர்ப்பு செல்லாதது என்று ஆகி விடாதா?    அல்லது யாரும் இறந்து விட்டதால் அவர்களின் குற்றங்கள் மன்னிக்கப் பட்டுவிட்டன என்று சட்டம் சொல்கிறதா?

Abatement என்ற சொல்லிற்கு அற்றுப் போய் விட்டது என்று பொருள் கொள்ளலாம்.   அதாவது தண்டனை  அனுபவிக்க முடியாத இடத்திற்கு சென்று விட்டதால் தண்டனை  அற்றுப் போய் விட்டது.    குற்றம் அற்றுப் போய்விட வில்லை.   நிரபராதி என்று ஆகிவிட வில்லை.   அவருடன் குற்றம் சுமத்தப் பட்டவர்  சிறையில்தான் காலம் கழிக்கிறார்.

இன்று ஜெயலலிதாவை போற்றினால் நாளை என்னுடன் தண்டனை பெற்றவரை சிறப்புச் செய்கிறீர்களே என்னையும் விடுவியுங்கள் என்று சசிகலா கேட்டால் சட்ட மன்றம் தீர்மானம் இயற்றி விடுமா?

பல ஆட்சேபணை களுக்குப் பின்னும் ஜெயலலிதா படம் இன்னும் அரசு அலுவலகங்களில் தொங்கி கொண்டிருப்பதுவே சட்ட விரோதம்.    அவமானம்.    உச்ச நீதிமன்ற தீர்ப்பை காலில் போட்டு மிதிப்பதற்கு சமம்.

முன் உதாரணம் ஏதாவது உண்டா?     அரசியல் காரணங் களுக்காக சிறை சென்றவர்கள் வேறு வகை.     குற்றங்கள் செய்து விட்டு உச்சநீதி  மன்றத்தால் தண்டனை உறுதி செய்யப் பட்டவர்கள் யாராவது சட்ட மன்றத்தால் போற்றப் பட்டிருக்கிறார்களா ?

சசிகலா சிறையில் இருக்கும்வரை ஜெயலலிதா வை பாராட்டி எந்த காரியத்தையும் ஒரு அரசு செய்ய முடியாது.

ஜெயலலிதாவின் கட்சியில் அவரை தலைவராக கொண்டாடுவதோ பாராட்டுவதோ அவர்களின் தனி உரிமை.

ஆனால் ஒரு அரசு உறுதி செய்யப் பட்ட குற்றவாளியை கவுரவப் படுத்தக் கூடாது.   அது ஒரு தேசிய அவமானம்.  அடிமைகளின் ராஜ்யத்தில் தான் இப்படி எல்லாம் நடக்கும்.

அரசியலுக்கு ரஜினி; வந்தால் மகிழ்ச்சி வராவிட்டால் மகிழ்ச்சியோடு நிம்மதி !!!!

இருபத்தி ஐந்து ஆண்டுகளாக ஒரு நடிகர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற விவாதம் நடந்து வருவதே ஒரு அவமானம்.

அரசியலுக்கு வருவது என்றால் அவருக்கென்று ஏதாவது ஒரு அரசியல் சார்ந்த கொள்கை இருக்கவேண்டும்.   இதுவரை ஏதாவது இருந்திருக்கிறதா?

நல்லவர் .  சிறந்த நடிகர். இதய சுத்தி கொண்டவர்.   பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம்  இல்லாதவர்.       ஆனால் எந்த கொள்கையிலும் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ளாதவர் .

இது போதாதா அரசியலுக்கு வருவதற்கு என்று கேட்கும் தமிழர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

அவர் தமிழரல்ல.   கன்னடர் அல்ல. மராட்டியருமல்ல.   இந்தியர்.

தமிழரல்லாத அடையாளம் தானே தமிழர்களை ஆள்வதற்கு வேண்டும்.   அதைத்தானே இதுவரை வரலாறு காட்டியிருக்கிறது.

எனவே ரஜினிக்கு இந்த ஆசை துளிர் விட்டிருந்தால் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை.

ஆளுமை மிகுந்த கலைஞர் ஓய்வில்.   ஜெயலலிதா  மறைந்து விட்டார்.   தமிழக அரசியலில் வெற்றிடம் கண்டிருப்பார் ரஜினி.

புலி  வருது புலி வருது என்ற எச்சரிக்கை குரல்கள் எப்போதுமே பொய்த்து விடும் என்று சொல்ல முடியாது. என்றாவது உண்மையாகலாம்.

தமிழ் நாட்டின் தலை எழுத்து அப்படி இருந்தால் யார்தான் தடுக்க முடியும்.?

எத்தனை கேவலங்களைத் தான் தமிழன் தலையில் சுமக்க வேண்டும் என்று இறைவன் எழுதி இருக்கிறானோ?

தமிழ்ச் சாதித் தலைவர்கள் எங்காவது போய் சுவற்றில் முட்டிக் கொள்ளட்டும்!

அவர்கள் தயவு செய்து அரசியலில் இருந்து விலகி கொண்டாவது கொஞ்சமாவது தன்மானம் உண்டு என்று நிரூபிக்கட்டும் .

சக தமிழர்களை ஏற்றுக் கொள்ளாத நண்டு சாதி தலைவர்கள் இருக்கும் வரை தமிழர்கள் சாதியிலிருந்து எந்த தலைவனும் தோன்றப் போவதில்லை.

தகுதி தனக்கு மட்டுமே உண்டு என்ற அகந்தை எல்லா தமிழ் தலைவர்களுக்கும் இருக்கிறது.

எதிரியையும் அடையாளம் காணத் தெரியாத இவர்கள் எப்படி தமிழர் உரிமைகளை காப்பார்கள்?

கோவாவிலும் அருணாச்சல பிரதேசத்திலும் மக்கள் தீர்ப்பையே மாற்றி எழுதியவர்கள் பா ஜ க வினர். அவர்கள் பார்வை தமிழகம் நோக்கி திரும்பியிருக்கிறது .

விலை போகத் தயாராக இருப்பவர்களையும் காட்டிகொடுக்க தயாராக இருப்பவர்களையும் மிரட்டலுக்கு அஞ்சி ஆட்சியில் இருப்பவர்களையும் ஒருங்கிணைத்து தமிழ் நாட்டில் காலூன்ற தயாராக இருக்கிறது பா ஜ க.

மோடி-அமித்ஷா  அணுகுமுறைகள் தமிழகத்தை சாதி மதத்தால் பிளவு படுத்த முனையும் என்பதில் சந்தேகம் இல்லை.

அகில இந்தியாவையும் வெற்றிகண்ட பல பேரரசுகள் தக்கண பீடபூமியை தொட்டதில்லை.   மகத மௌரிய முகலாய பேரரசுகளின் கதை இதுதான்.     ஆங்கிலேயர்கள் மட்டுமே அதை உடைத்தவர்கள்.    இப்போது இந்துத்துவ பேரரசை நிர்மாணிக்கும் முயற்சியில் இருக்கும் மோடி-அமித்ஷா கூட்டணி திராவிடத்தின் மற்ற மூன்று கூறுகளை வென்றாலும் தமிழ் நாட்டையும் வெல்ல முடியுமா என்பதை வரலாறு தான் விடை கூற வேண்டும்.

தமிழரை தமிழரே ஆள வேண்டும் என்பது அநியாயமான ஆசையா?

மாற்று மொழிக்காரர் ஆளும்  அக்கிரமம் கர்நாடகத்தில் ஆந்திராவில் கேரளாவில் நடந்த துண்டா ?

ரஜினி சூப்பர் ஸ்டாராக மக்கள் மனதில் நிலைத்து விட்டவர்.   அதில் எதிரிகளே கிடையாது.   அரசியலுக்கு வந்தால் நிறைய எதிரிகள் வருவார்கள்.     அவர்களை எதிர்கொண்டு மக்கள் சேவை செய்ய  வேண்டும் என்ற கட்டாயம் ரஜினிக்கு உண்டா?

மக்கள் தொண்டு செய்ய அரசியலை தவிர வேறு வழிகளே இல்லையா?

மக்கள்  தலையில் ஏறி நின்று மட்டுமே அவைகளுக்கு சேவை செய்ய வேண்டுமா?

கடைசி காலத்தை நிம்மதியாக கழிக்காமால் அரசியலில் நுழைந்து போராடுவதில்தான் அவருக்கு மகிழ்ச்சியா?

ரஜினி அவர்களே,

அரசியலுக்கு வருகிறீர்களா  மகிழ்ச்சி!!!

வரவில்லையா  மகிழ்ச்சியோடு கலந்த நிம்மதி.

 

தினகரன் வழக்கில் மோடி மஸ்தான் வித்தை காட்டும் நரேந்திர மோடி அரசு ???!!!

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம தர முயன்ற தாக தினகரன் மீதான வழக்கில் பல மர்ம முடுச்சுக்கள் அவிழ்க்கப் பட வேண்டும்.    அப்போதுதான் உண்மை வெளிவரும்.      அவிழ்க்கப் படாமலேயே கூட போகலாம்.   அதன் பெயர் தான் மோடி வித்தை.

அதிமுக இரண்டாக உடைந்தது என்பதே தவறு.        பெரும்பான்மை நிர்வாகிகள்  சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்  எடப்பாடி பழனிசாமி பக்கம்தான் இருக்கிறார்கள்.      இதை அளவுகோலாக வைத்துதான் சமாஜ்வாதி கட்சி பிரச்னையின் போது சைக்கிள் சின்னத்தை அகிலேஷ் யாதவுக்கு தேர்தல் கமிஷன் ஒதுக்கியது.       அந்த அளவுகோளில் சாதாரணமாக இரட்டை இலை சின்னம் அவர்களுக்கே கிடைத்திருக்க வேண்டும்.

அடிப்படை உறுப்பினர்கள் மட்டுமே பொதுசெயலாளரை  தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது வேறு பிரச்னை.   இரண்டையும் சேர்த்து  குழப்பி பிரச்னையை ஏற்படுத்தியது தேர்தல் கமிஷன்.

தானாகவே கிடைத்திருக்க வேண்டிய சின்னத்தை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து பெற தினகரன் முயற்சித்தார் என்பதே கேலிக்குரிய குற்றச்சாட்டு.       அவர் அப்படிப்பட்டவர்தான் என்பது வேறு.     ஆர் கே நகர் தேர்தலில் அவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார் என்பது எல்லாரும் அறிந்த உண்மை.    ஜெயலலிதா என்ன பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றாரா?    பணம் கொடுக்கப் பட்டதை தடுக்க முடியவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது தேர்தல் கமிஷன்.

எல்லாம் போகட்டும். ஒரு குற்றம் எப்போது தண்டிக்கப் பட வேண்டிய ஒன்றாக முழுமையடைகிறது. ?

குற்றம் புரிய வேண்டும் என்ற மனநிலை உருவாக வேண்டும் , குற்றம் புரிய தேவையான தயாரிப்புகளை செய்ய வேண்டும் , குற்றம் புரிய முயற்சிக்க வேண்டும் , குற்றத்செயலை நிகழ்த்த வேண்டும்  . இந்த நான்கு நிலைகளை தாண்டிய பிறகுதான் ஒரு செயல் தண்டிக்கத் தக்க குற்றமாகும்.

தேர்தல் கமிஷனை லஞ்சம கொடுத்து வாங்க முயன்றால் அந்த தேர்தல் கமிஷன் அதிகாரி யார்?    அவரிடம் யார் தொடர்பு கொண்டார்கள்?    அதற்கு அவர் ஒப்புதல் கொடுத்தாரா?   ஒப்புதல் கொடுத்திருந்தால் அவரும் இந்த குற்றத்தில் சம்பத்தப்பட்ட ஒரு குற்றவாளியாகிறார்.  ஏன் அவர் பெயரை வெளியிட வில்லை?

தேர்தல் கமிஷன்  அதிகாரியை சம்பத்தப் படுத்தாமல் தினகரனை இந்த வழக்கில் குற்றவாளியாக காட்டவே முடியாது.

ஹவாலா மூலம் பணம் பரிவர்த்தனை என்பது சட்ட விரோதமானது.    ஆனாலும் பல நூற்றாண்டுகளாக அமுலில் உள்ளது.   ஒழிக்க முடியுமா என்பது விபசாரத்தை ஒழிக்க முடியுமா என்பதை ஒத்தது.    தண்டிக்கலாம்.   ஆனால் ஒழிக்கவே முடியாது.

இதுவரை வெளிவந்துள்ள தகவல்கள் அடிப்படையில் இன்னும் குற்றம் உருவாகவே இல்லை. எப்படி நீதிமன்றம் இதையெல்லாம் அனுமதிக்கிறது என்பது வேறு புதிர்.

நம்பக்கூடிய வகையில் எதையுமே தேர்தல் கமிஷன் நடந்து கொள்ளவில்லை.

பா ஜ க வின் அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு   தேர்தல்  கமிஷன்  துணை  போவது எல்லாருக்கும் தெரிகிறது.         அவரரும் அவரவர் அரசியலுக்கு தகுந்தாற்போல் ஆதரிக்கவோ கண்டிக்கவோ செய்கிறார்கள்.

கடைந்தெடுத்த ஒரு ஏமாற்றுப்  பேர்வழியை  , சுகேஷ் சந்திரசேகர் என்ற நபரை, கையில் எடுத்துக்கொண்டு இந்த அரசியல் நாடகத்தை மோடி அரசு நடத்துவதுதான் சகிக்க வில்லை.       வங்கிகளை பல கோடிகளில் ஏமாற்றியவன்,  தனக்கும்  தினகரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஏன் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்க வேண்டும்?

தமிழகத்தில் காலூன்ற மோடியும் அமித் ஷாவும் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு ஒரு சின்ன ஆரம்பம்தான் தினகரன் கைது  – வழக்கு காட்சிகள்.

பார்க்கலாம் – இந்த நாடகம் இன்னும் எத்தனை திருப்பங்களை உருவாக்கும் என்று?

 

 

விவசாயிகள் போராட்டத்தை கண்டுகொள்ளாத மோடி அரசு ?!

பத்தொன்பது நாட்களாக தமிழக விவசாயிகள் புது டில்லியில் தங்கியிருந்து பலவிதமான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

மோடி அரசு கண்டுகொள்வதாக தெரியவில்லை.

நதிநீர் இணைப்பு  கட்டுபடியாக கூடிய விளைபொருள் விலை நிர்ணயம்  கடன் நிவாரணம் போன்ற முக்கிய கோரிக்கைகள் அகில இந்தியாவுக்கும் பொருந்துபவை.

நாற்பதாயிரம் கோடி விவாரணம் கேட்டால் தமிழகத்திற்கு  இரண்டாயிரம் கோடி காலம் தாழ்த்தி  வழங்குகிறது மத்திய அரசு.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரினால் எல்லா நதிநீர் தாவாவையும் ஒன்றிணைத்து ஒற்றைதீர்ப்பாயம் அமைப்போம் என்கிறார்கள்.

பல ஆண்டுகள் போராடி பெற்ற இறுதி தீர்ப்பை அமுல்படுத்த மோடி அரசு தயாராக இல்லை.

புது அமைப்பு எப்போது அமைப்பது ?  அது எப்போது எந்த தாவாவை விசாரித்து தீர்ப்பளிக்கும்?

புது அமைப்பு வரட்டும்.    ஆனால் வழங்கப் பட்ட தீர்ப்பை அமுல்படுத்துவதற்கு அது தடையாக இருக்காது என்று சொல்ல மத்திய அரசு தயாராக இல்லை.

எந்த தீர்ப்பும் எப்போதும் நிலையானது இல்லை.    குறிப்பிட்ட காலத்துக்கு பின் அது மறு பரிசீலனைக்கு உட்பட்டதே.    அதுவரை இன்று பெறப்பட்டிருக்கும் தீர்ப்பை அமுல்படுத்துவது தானே முறை.

ஐம்பது பெரு நிறுவனங்களின்  ஒண்ணேகால் லட்சம் கோடி கடனை வாராக் கடனாக அறிவித்து நிவாரணம் வழங்கிய மோடி அரசு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய ஏன் தயாராக இல்லை ?

ஹைட்ரோ கார்பன்  மீத்தேன்  ஷே ல் என்று விவசாய நிலங்கள் இருக்கும் பகுதிகளில் இயற்கை எரிவாயுவை தனியார் நிறுவங்களுக்கு தாரை வார்க்கும்  மோடி அரசு விவசாயம் பாதிக்கும் என்பதை பற்றி கவலைப் படவில்லை.

விவசாயிகள் கோரிக்கையை மாநில அரசுதான் வழங்க வேண்டும் என்கிறார் பொன்னார்.   அதிகாரம் மத்திய அரசின் கைகளில்.    மாநில அரசு எப்படி வழங்கும்?

தமிழகத்தை வஞ்சிப்பதை கொள்கையாகவே கொண்டு செயல்படும் மோடி அரசின் சுய ரூபத்தை தமிழர்கள் மறக்கவே மாட்டார்கள்.