Home Blog Page 9

கோவிலில் ஜீன்ஸ், டி ஷர்ட் தடை அமைச்சருக்கு தெரியுமா?

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வரும் பக்தர்களுக்கு ஜீன்ஸ், டவுசர், லெக்கின்ஸ், டி ஷர்ட் அணிய திடீர் என்று கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும்  இந்த கோவிலில் விதிக்கப் பட்டிருக்கும் இந்த  தடை விபரம் அந்த துறை அமைச்சருக்கு தெரியுமா தெரியாதா?

நடப்பதை பார்த்தால் ஒவ்வொரு துறையாக ஹைஜாக் செய்து கொண்டிருக்கிறார்கள் பாஜக காரர்கள் என்று தான் தோன்றுகிறது.

பெயருக்குத்தான் அதிமுக அரசு. நடப்பது பாஜக ஆட்சி. இல்லையென்றால் ஒரு கோவிலுக்கு மட்டும் இப்படி ஒரு கட்டுப்பாடு விதிப்பார்களா? அதுவும் மைலாப்பூரில். அங்கே அவர்கள் விதிததுதான் சட்டம். எல்லா இடங்களிலும் அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்றாலும் அங்கே கொஞ்சம் கூடுதல்.

அறிவிப்பு பலகையில் இப்படி எழுதியிருக்கிறார்கள்.

“திருக்கோவிலுக்கு வரும் ஆண் பக்தர்கள் வேட்டி, சட்டை, முழுக்கால் பேன்ட், சர்வானி, ஆகிய பாரம்பரிய உடைகளை அணிந்து வர வேண்டும். கைலி, அரைக்கால் டவுசர், அணிந்து வரக்கூடாது. பெண் பக்தர்கள் சேலை ரவிக்கை, பாவாடை தாவணி, சுடிதார், துப்பட்டா, பஞ்சாபி உடை அணிந்து வர வேண்டும். டி ஷர்ட், ஸ்கர்ட், மினி சர்ட், லெக்கின்ஸ் பேன்ட் அணிந்து வரக்கூடாது. துப்பட்டா அணியாமல்  மேல் சட்டை மட்டும் அணிந்து வரக்கூடாது. கண்டிப்பாக துப்பட்டா அணிய வேண்டும்

நல்ல வேளை பஞ்சகச்சம் மடிசார் கட்டி வந்தால்தான் தரிசனம் என்று சொல்லாமல் விட்டார்களே!

 கைலி என்பது முழுவதும் மூடப்பட்டிருக்கும் உடை. வெள்ளைக்கைலிகளும் கூட இருக்கின்றன. அது முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியது என்று முத்திரை குத்துவது ஏன்? 

இந்த உடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம். சுப நிகழ்ச்சிகளுக்கு செல்லலாம். ஆனால் கோவிலுக்கு செல்ல முடியாது என்று எந்த சட்டத்தில் தடை இருக்கிறது?

அறநிலையத்துறை ஒரு கோவிலுக்கு மட்டும் ஒரு முடிவை எடுக்க முடியுமா?  எல்லா கோவில்களுக்கும் இதே கட்டுப்பாட்டை  அவர்கள் விதிக்க போகிறார்கள் என்பதற்கு இது முன்னோட்டமா?

இந்த முடிவை ஒரு கோவிலின் நிர்வாக அதிகாரி எடுக்க முடியுமா?

அமைச்சர் வெறும் பொம்மைதானா?

ஒரு விளக்கமாவது தரக்கூடாதா ?

மதிய உணவுத் திட்டத்தை கபளீகரம் செய்யப்போகும் ஹரே கிருஷ்ணா இயக்கம்?!

தமிழக அரசின் மதிய உணவுத் திட்டம் நன்றாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது.

பொறுக்க வில்லை அவர்களுக்கு. மூக்கை நுழைத்து விட்டார்கள்.

மதிய உணவுத் திட்டத்தை நாமே நடத்திக் கொள்ளும்போது பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. நம் உணவுப் பழக்கத்தை  ஒட்டி பிள்ளைகளுக்கு உணவு வழங்கப் படுகிறது. சத்துணவு முட்டையும் இதில் அடக்கம்.

இதில் இப்போது கர்நாடகாவில் இயங்கும் அட்சய பாத்திரம்  என்ற ஹரே கிருஷ்ணா இயக்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது சென்னை மாநகராட்சி.

அவர்கள் பல மாநிலங்களில் இந்த உணவு வழங்கும் வேலையை செய்து  கொண்டிருக்கிறார்கள். உணவு வழங்குவது நல்ல விடயம்தான். இதில் என்ன ஆட்சேபணை இருக்கிறது என்றுதான் தோன்றும். உள்ளே நுழைந்தால்தான் விபரம் புரியும். இந்த வேலையை  செய்வதற்கு என்றுதானே அரசு யந்திரம் இருக்கிறது. அதை ஏன் கெடுக்க வேண்டும்?

ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் அந்த இயக்கத்துக்கு மைய சமையல் கூடம்  அமைக்க ஐந்து கோடி ரூபாயை தன்னுடைய  சிறப்பு நிதியில் இருந்து  ஒதுக்கி இருக்கிறாராம்.

இவர்கள் தங்களுடைய சமையல் மையம் மூலமாக பள்ளிகளுக்கு  தேவையான உணவுகளை சப்ளை செய்வார்கள். எதற்கு இந்த  வேண்டாத வேலை.? 

அதிலும் வெங்காயம் பூண்டு இல்லாத சமையலாக அது இருக்கும் என்கிறார்கள். உங்களுடைய உணவு பழக்கத்தை ஏன் எங்களிடம் திணிக்கிறீர்கள் .? நாளை முட்டையும் வேண்டாம் என்பார்கள். 

இதை எல்லாம் எதிர்க்கும் இடத்தில் அதிமுக இல்லை. எடப்பாடி இல்லை.

கிட்டத்தட்ட இது அவர்களின் அரசாகவே  மாறிவிட்டது.

நமது பயம் எல்லாம் உள்ளே நுழைந்திருக்கும் அட்சய பாத்திரம் நாளை தமிழகம் முழுதும் எல்லா பள்ளிகளையும் ஆக்கிரமிக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

நமது வேலை வாய்ப்பை பறித்து நமது உணவு பழக்கத்தை மாற்றி ஒரு ஒப்பந்தம் தேவையா?

பதவி இன்று இருக்கிறது. நாளை எப்படி வேண்டுமானாலும் ஆகட்டும். பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டுமா? எடப்பாடி விழித்துக் கொள்ளட்டும்.

2000 ரூபாய் நோட்டுகளை காணோம்?! மோடி என்ன செய்யப் போகிறார்?

இந்தியன் வங்கி ஏ டி எம் களில் இனி  2000 ரூபாய் நோட்டுகள் வராது என்று அறிவித்ததும் பரவலாகவே  இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கண்ணில் படுவது இல்லை.

ஜி எஸ் டி கொண்டுவந்தது தான் மோடி அரசு செய்த மிகப் பெரிய பிழை என்று அந்தக் கட்சியீன் சுப்ரமணியசாமி அடிக்கடி  சொல்லி வருகிறார்.

பண மதிப்பிழப்பு என்பது ஒரு திட்டமிட்ட கொள்ளை organised loot என்றார் மன்மோகன் சிங்.

ஏறத்தாழ அது நிரூபணமாகி விட்டது.

ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கருப்பு  பணமாக பதுக்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சொல்லப் பட்ட நிலையில் இப்போது அந்த  பதுக்கல்  இரண்டாயிரம் நோட்டுக்களாகி விட்டது.

இதற்கு என்ன மாற்று வைத்திருக்கிறார் மோடி?

ஏன் நோட்டுக்கள் ? டிஜிட்டலுக்கு மாறுங்கள் என்று உபதேசம் செய்வாரோ?

5 செம்மொழிகளை விட சமஸ்கிரிததுக்கு 22 மடங்கு அதிக நிதி வழங்கிய மோடி அரசு ?!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஓடியா ஆகிய ஐந்து செம்மொழிகளுக்கும் கடந்த  மூன்று ஆண்டுகளில் ஒதுக்கிய நிதி ரூபாய் 29  கோடி.

ஆனால் அதே கால கட்டத்தில் சமஸ்கிரிததுக்கு ஒதுக்கியதோ 643 கோடி..  அதாவது  22  மடங்கு அதிகம்.

அப்படியென்றால் இது யாருடைய அரசு?

பார்ப்பனர்கள் அல்லாதோர் யாராவது சமஸ்கிருதம் பேசுகிறார்களா?

அப்படியானால் இது அவர்களின் அரசுதானே?

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் மூத்த ஆய்வறிஞர் ஒருவர் கூட இல்லாதிருப்பதும் புதிதாக நியமிக்கப் பட வேண்டிய 150 பணியிடங்கள் காலியாக இருப்பதும் அந்த நிறுவனத்தை  மெல்ல மெல்ல சிதைந்து போக செய்யும் சூழ்ச்சியோ என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா?

வடமாநிலங்களில் இந்தி ஆங்கிலம் உருது என்று மூன்று மொழிகளில் ரயில் நிலையங்களில் அறிவிப்புகள் இருக்கும். அதை உருதுவுக்கு பதிலாக இப்போது சமஸ்கிருதத்தை புகுத்தி இருக்கிறார்களாம்.

அவர்கள் அரசு. எது வேண்டுமானாலும் செய்து கொள்வார்கள். செய்து  கொள்ளட்டும்.

ஆனால் நமது உரிமைகளை பறிக்காமல் இருந்தால் சரி.

அதற்கும் கண் காணிக்க ஒரு  அரசு இருந்தால்தான் அதுவும் முடியும்.

கண்டுகொள்ளாமல் இருக்க ஏன் ஒரு அரசு?

 

உன் தீர்மானத்துக்கு சைபர் தான் மார்க் ; எடப்பாடி அரசுக்கு மத்திய அரசு கொடுத்த இடி?!

எழுவர் விடுதலை பற்றி மாநில அரசின் அமைச்சரவை தீர்மானம் ஆளுனரை கட்டுப் படுத்தும் என்று உச்ச நீதி மன்ற தீர்ப்புகள் எல்லாம் இருக்க  அதையெல்லாம் விட்டு விட்டு மாநில அரசின் தீர்மானம் சைபர் மதிப்பு கொண்டது என்று மத்திய அரசின் வழக்குரைஞர் நீதி மன்றத்தில் தெரிவித்த அவலம் நடந்தேறியிருக்கிறது .

அதற்கு மாநில அரசின் வழக்கறிஞர் கடும் எதிர்ப்பை தெரிவிக்காததுதான் வேதனை.

அரசியல் சாசன பிரிவு 161 படி விடுதலை செய்வது என்பது மாநில அரசின் விருப்பத்துக்கு உட்பட்டது என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி அரசு மாறிவிட்டது.     

பரிந்துரை செய்ததோடு எங்கள் வேலை முடிந்தது.   இனி ஆளுநர் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைப்பாடு நம்மை நாமே விற்று விட்ட நிலை போன்றது.

மாநில அரசும் ஆளுநரும் மத்திய அரசும் உச்சநீதி மன்றமும் எல்லாம் சேர்ந்து  கொண்டு நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் இந்த நாடகம் இப்போது முடிகிறது போல் தோன்றவில்லை.

முதல்வர் நேரில் சென்று பிரதமரை பார்த்தால் வேண்டுகோள் விடுத்தால் ஒருவேளை காரியம் நடக்கலாம் என்று விசாரணை அதிகாரியாக இருந்த ரகோத்தமன் கூறுகிறார். அப்படி என்றால் இது அரசியலின் ஒரு அங்கமாக ஆக்கப் பட்டு விட்டதா?

நாங்கள் தான் விடுதலை செய்தோம் என்று  வாக்கு அரசியல் செய்ய  முயற்சிக்கிறதா மத்திய அரசு?

நடக்கும் நிகழ்வுகள் மத்திய மாநில அரசுகள் மீதான மக்களின் வெறுப்பை  தூண்டத்தான் செய்யும்.

மாநில அரசின் உரிமைகளை  விட்டுக்கொடுக்கும் அளவுக்கு எடப்பாடி  அரசு தயாராகி விட்ட நிலையில் மாற்றம் கண்ணுக்கு தெரியவில்லை.

பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டில் நெருக்கடி தரும் பாஜக அரசு?!

வி பி சிங் கொண்டுவந்த பிற்பட்டோருக்கு 27 % இட ஒதுக்கீடு தான் எல்கே அத்வானி ராம ஜென்ம பூமி ரத யாத்திரையை தொடங்க காரணமாக இருந்தது என்று சொல்வார்கள்.

மண்டல் கமிஷன் அறிக்கையை செல்லாதது ஆக்க கமண்டலத்தை  எடுத்தார் அத்வானி என்று விமர்சித்தார்கள். இது வரலாறு.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிற்பட்டோர் இடஒதுக்கீட்டில் கைவைத்து அவர்களை கீழே தள்ள முயற்சிப்பது பாஜக வுக்கு பிடித்தமான விளையாட்டு.

அந்த முயற்சியில் பிற்பட்டோரில் க்ரீமி லேயர் என்ற பிரிவுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று ஒரு  வரையறை கொண்டு வந்தார்கள். ஆண்டுக்கு எட்டு லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால்  இட ஒதுக்கீடு கிடையாது. அதில் ஏனைய வருமானம் என்று இருந்ததை மாத வருவாயை யும் விவசாய வருவாயையும் இப்போது சேர்த்திருக்கிறார்கள். இதனால் கணிசமான பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டு சலுகைகளை பெற முடியாமல் போய்விடும் என்று பாஜக நம்புகிறது.

ஏற்கெனெவே பல நீதிமன்றங்கள் இது தொடர்பாக தீர்ப்புகள்  சொல்லி  இருந்தாலும் ஏதாவது செய்து பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் கைவைப்பதை குறியாக கொண்டு செயல்படுகிறது பாஜக அரசு.

இதுவும் நீதி மன்றம் செல்லும் என்று நம்புவோமாக.

உயர்நீதி மன்ற உச்ச நீதி மன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு  செயல் படுத்தப் படுகிறதா என்றால்  இல்லையே? 

மத்திய பிரதேச உயர்நீதி மன்றத்தில் இதுவரை தாழ்த்தப் பட்டவர் ஒருவர் கூட நீதிபதியாக நியமிக்கப்  படவில்லை என்ற செய்தியை  ஒருவர் சொன்னார்.

அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நீதித்துறை செயல்படுவதை சந்தேகிக்காமல் எப்படி இருப்பது?

ரஜினி கமலுக்கு எதிராக விஜய், சூர்யா, சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி அணி திரள்வார்களா?

ரசினி -கமல் கூட்டணி  அரசியலில் கூட்டணி வைத்தால் அவர்களுக்கு எதிராக தமிழ் நடிகர்கள் அணி திரள்வார்களா என்று தமிழர்கள் எதிர் நோக்கி  இருக்கிறார்கள்.

ரசினியும் கமலும் தமிழ் நடிகர்களே தவிர தமிழர்கள் உணர்வை பிரதிபலிப்பவர்களா என்றால் நிச்சயம் இல்லை. இருவரும் மொழி இன பாதுகாப்பை பற்றி  மறந்தும் கூட பேசிவிட மாட்டார்களே?!

நிராகரிக்கப் பட்ட கமல் ரசினியை ஒட்டிக் கொண்டு கரை சேரப் பார்க்கிறார்..

பாஜக அரசு என்னவெல்லாமோ சர்க்கஸ் வித்தை எல்லாம் செய்து தனது கணக்கை துவங்க முயற்சிக்கிறது.

அதற்கு அதிமுக வை உடைத்து பாமக வை  சேர்த்துக் கொண்டு ரசினி தலைமையில் ஒரு அணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது .

விஜய் தந்தை சந்திரசேகர் தன் மகனை அரசியலுக்கு கொண்டு வருவதில் மும்முரமாக இருக்கிறார்.

ரசினி-கமல் இணைவதை எதிர்பார்க்கிறேன் என்றவர்  இப்போது அவர்கள்  தமிழர் எதிரிகள் என்பது போல் சொல்ல ஆரம்பித்து விட்டார்.

இப்போது மார்க்கெட் இருக்கும்  தமிழ் நடிகர்கள் அரசியலில் கால் வைத்து எதிர்காலத்தை கெடுத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.

ஆனால் வயதான காலத்தில் மார்க்கெட் இருக்கும்போதே அரசியலிலும் வணிகம் செய்ய துணிந்து விட்டார்கள் ரசினியும் கமலும்.

இதை பார்த்துக்  கொண்டு தமிழ் நடிகர்கள் சும்மா இருக்கலாமா?

அவர்கள் வந்தால் இவர்களும் எதிர் அணியில் வரத்தான் வேண்டும்.

அதுவே தமிழர்களின் எதிர்பார்ப்பு!

யாரை ஏமாற்ற வேளாண் மண்டல பாதுகாப்பு மசோதா?

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று சொன்ன தமிழக அரசு திடீர் என்று வேளாண் மண்டல பாதுகாப்பு  மசோதாவை நிறைவேற்றி உள்ளது.

ஏதோ இதையாவது செய்தார்களே என்று பாராட்டுவதா இல்லை நீட் எழுவர் விடுதலை போன்ற விடயங்களில் காட்டிய இரட்டை வேடம் போன்றதா இதுவும் என்று குழம்பிப் போய் இருக்கிறார்கள் விவசாயிகள். 

மசோதா கொண்டு வருவதற்கு முன் விவசாயிகளிடம் கருத்து கேட்பு நடத்தியிருந்தால் இந்த கேள்வி எழுந்திருக்காது.

டெல்டா மாவட்டங்கள் மட்டும் இதில் அடங்கும் என்றால் இதர மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிப்பீர்களா?

அதிலும் குறிப்பாக கரூர், திருச்சி மாவட்டங்களை ஒதுக்கியது ஏன்?

நடைமுறையில் இருக்கும் 700 எண்ணெய் கிணறுகள் மூலம் ஒஎன்ஜிசி இடம் இருந்து கோடிக்கணக்கில் ராயல்டி வாங்கிக் கொண்டு இருக்கிறது தமிழக அரசு. அதை முதலில் நிறுத்தப் போகிறார்களா இல்லை அவை தொடர்ந்து அனுமதிக்கப்படுமா? அனுமதிக்கப்படும் பட்சத்தில் இது பாதுகாக்கப்பட்ட  மண்டலமாக எப்படி ஆகும்?

இப்போது இயங்கும் அனைத்து கிணறுகளும் ஹைட்ரோ கார்பன் எடுக்க பயன்படும் வகையில் மாற்றி அமைக்க திட்டம் இடுகிறார்களாம்.  அப்படி என்றால் இந்த சட்டத்தினால் என்ன பயன்?

ஏன் இதை மத்திய அரசு அறிவிக்க வில்லை என்ற கேள்வி மிகவும் முக்கியமானது. அல்லது மாநில அரசின் சட்டத்தை ஏற்றுக் கொள்கிறோம் என்றாவது மத்திய அரசு அறிவிக்க  வேண்டும்.

ஏன் என்றால் எண்ணெய் மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது.  ஆனால் வேளாண் தொடர்பு என்று மாநிலம் சட்டம் இயற்றி  இருக்கிறது.  இரண்டுக்கும் முரண் என்றால் எது நிலைக்கும்?

இல்லையென்றால் குடிஉரிமை திருத்த  சட்டத்தை அமுல்படுத்த மாட்டோம் என்று சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று  சொல்வதைப் போல எண்ணெய் கிணறுகள் தொடர்பாக  நாங்கள் மட்டுமே முடிவெடுப்போம் மாநில அரசுகள் இதில் தலையிட முடியாது என்று  மத்திய அரசு சொல்லாது என்பதற்கு என்ன உத்தரவாதம். ?

இப்போது நடத்திக் கொண்டிருக்கும் கிணறுகளில் சத்தமில்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமுல் படுத்த ஒன்ஜிசியும் வேதாந்தாவும் திட்டமிடுகிறார்களாம்

பேருக்கு ஒரு சட்டம். சத்தமில்லாமல் தொடரும் ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பதுதான் ஆட்சியாளர்களின் திட்டம் என்றால் அது மக்கள் மத்தியில் பெருத்த ஆட்சேபணையை உருவாக்கி  புதிய பிரச்னைகளுக்கு வித்திட்டு விடும் .

ஆட்சியாளர்கள்  கவனமுடன் அடி  எடுத்து வைக்க வேண்டும்.

வேளாண் மண்டல அதிகார அமைப்பு எந்த விதமாக செயல்படப் போகிறது என்பதை பார்த்துத்தான் எதிர்காலத்தை கணிக்க முடியும்.  மத்திய அரசுக்கு எதிராக நிலை எடுக்கும் துணிவு இவர்களுக்கு இருக்குமா?

ஆனால் ஒன்று. பாம்புக்கு  வாலையும் மீனுக்கு தலையையும் காட்டும்  தமிழக ஆட்சியாளர்களின் வித்தை நீண்டநாள் நிலைக்காது.

மதமாற்ற புகாருக்கு சாட்டையடி கொடுத்த விஜய் சேதுபதி?!

கிறித்தவராக மாறி விட்டாரா என்ற கேள்விக்கு ‘ போய் வேற வேலை இருந்தா பாருங்கடா”  என்று பதில் சொல்லி சாட்டை அடி கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி!

ஜேப்பியாரின் மகள் ரெஜினா சினிமா உலக பிரபலங்களை  கிறித்துவ மதத்துக்கு மாற்றும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார் என்று புகார் எழுந்திருக்கிறது.

அதில் விஜய் சேதுபதி , ஆர்யா, ரமேஷ் கன்னா, ஆர்த்தி போன்றவர்கள் சிக்கி விட்டார்கள் என்றும் செய்தி  பரவியது.

இது பற்றி கேட்டபோதுதான் விஜய் சேதுபதி  இப்படி  பதில் சொல்லி மூக்கை உடைத்திருக்கிறார்.

யார் எந்த மதத்துக்கு போகிறார் என்பது அவரவர் தனிப்பட்ட விடயம். ஏன் அது பொது செய்தியாகிறது.

மோகன் சி லாசரஸ் போன்ற பெந்தேகொச்தே பிரசாரகர்கள் இந்த விடயத்தை பெரிது படுத்தி  விடுகிறார்கள்.  அவர்தான் சமீபத்தில்  அறுபது லட்சம் கிறித்தவர்களும் தலா ஒரு மாற்று மதத்தவரை ஏசுவை விசுவாசிக்கிறவராக மாற்ற வேண்டும் . அப்படி மாற்றினால் மூன்றே ஆண்டுகளில் தமிழ் நாட்டையே ஆட்டி விடலாம் என்று பேசினார்.

இப்படி ஒரு முஸ்லிம் பேசினால் , இந்து பேசினால் சீக்கியர் பேசினால் பௌத்தர் பேசினால் என்ன ஆகும். கலவரம்தான் வரும்.   உலகம் உள்ளவரை எல்லா மதங்களும்  இருந்துதான் தீரும். யாரும் யாரையும் அழித்து விட முடியாது. பின் ஏன் இப்படி அலைகிறார்கள்?  அது அவர்களுக்கு தொழில்.  சாதாரண  கிறித்துவ, இஸ்லாமிய இந்து  மக்கள் தங்கள் தங்கள் பிழைப்பை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிரசாரகர் தொழில் செய்பவர்கள்தான் சமூகத்தில் மோதலை உருவாக்குகிறார்கள்.

விஜய் சேதுபதி  மதம் மாறினால் அதை அவரே சொல்வார் . மாறினாலும் அது அவர் விருப்பம்.  அதை ஏன் பிரச்னை ஆக்க வேண்டும்?

விஜய் சேதுபதி காஷ்மீர் பிரச்னை பற்றி அறிவார்ந்த கருத்தை வெளியிட்டார். அதாவது காஷ்மீர்  மக்கள்தான் தங்கள் நிலைப்பாட்டை தீர்மானிக்க  வேண்டும் . நாம் நமது விருப்பத்தை  அவர்கள் மீது திணிக்கக்  கூடாது என்றார்.

சபாஷ் விஜய் சேதுபதி?

நெல் கொள்முதலில் தொடர்கிறது கொள்ளை?!

அமைச்சர் காமராஜ் கொள்முதல் நிலையங்களில் புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கிறார். யார் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை மட்டும் இருக்காது.

40  கிலோ கொண்ட மூட்டை ஒன்றுக்கு ரூபாய் 30 வீதம் கொடுத்தால்தான் கொள்முதல் ஆகும்.    மறுத்தால் வரிசையில் நிற்கும் மூட்டை குவியல்கள் எல்லாம் எடுத்தபின்தான் உங்கள் வரிசை வரும். அப்போதும் கலப்பு மண் குப்பை கலப்பு ஈரப்பதம் என்று ஏதாவது காரணங்களை சொல்லி பிடித்தம்  செய்து விடுவார்கள். திரும்ப எடுத்துக் கொண்டு போகவும் முடியாது. எங்கே கொண்டு போவது.?  வீட்டில் வைக்கவும் முடியாது. கொடுக்க வேண்டியதை கொடுத்து வெளியே வந்தால் போதும் என்ற நிலையில் தான் விவசாயிகள் இருக்கிறார்கள்.

பணமாக கொடுத்தால் லஞ்சம் கேட்பார்கள் என்றுதான் விவசாயிகள் கணக்கில்  வங்கியில் செலுத்தும் முறையை கொண்டு  வந்தார்கள்.  இப்போது லஞ்சம் முன்பாகவே கொடுக்க வேண்டியிருக்கிறது.

சென்ற ஆண்டு 19  லட்சம் டன் கொள்முதல்  செய்த  தமிழக அரசு  இந்தாண்டு   25  லட்சம் டன்  என்று இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.  40 கிலோ மூட்டைக்கு  ரூபாய் 35 லஞ்சம் என்றால்   20  லட்சம் டன்னுக்கு எவ்வளவு என்று கணக்கு போட்டுக் கொள்ளுங்கள். எல்லாம் மேலிருந்து கீழ் வரை பகிரப் படுகிறது என்கிறார்கள்.  பட்டப் பகலில் நடக்கும் கொள்ளை இது. யாராலும் தடுக்க முடிய வில்லை.

விவசாயிகளுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகள் விதிக்கும் அதிகாரிகள் வியாபாரிகள் எங்கிருந்தோ கொண்டு வரும் நெல்லை மட்டும் அதிக கமிஷனுக்கு எடுத்துக் கொள்ளும் அவலமும் தொடர்கிறது.

விவசாயத்தின் எல்லா கூறுகளுக்கும் தனி அமைச்சகம் அமைத்து  நேரடியாக கண்காணித்தால் மட்டுமே இந்த கொடுமையை தடுக்க முடியும்.

விதை விநியோகம் , நீர் மேலாண்மை, உர விநியோகம்,  டிராக்டர் அறுவடை யந்திரம் முதலான  விவசாய கருவிகள் தேவை,  சந்தைப் படுத்தல், நியாய விலை எல்லாவற்றிலும் ஊழல் என்றால் எந்த விவசாயி பிழைக்க முடியும்?

முதலில் இந்த கொள்முதல் கொள்ளையை தடுக்கட்டும்.