Home Blog Page 90

கோவை பாரூக்கை சாய்த்த முஸ்லிம் மத வெறி ??!!

மத நல்லிணக்கத்திற்கு கோட்டை அமிர்  பெயரில் விருதை வழங்கி வருகிறது தமிழக அரசு.

அதே கோவையில் இந்து முஸ்லிம் பயங்கரவாதிகள் தொடர்ந்து இயங்கி வருகிறார்கள்.

ஒரு இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் சிறை சென்று வந்த பாருக் என்ற இளைஞர் சிறையில் இருந்து வெளியே வந்தபின் நாத்திகப் பாதைக்குத் திரும்பி பகுத்தறிவு  பேச ஆரம்பித்தார்.

கடவுள் மறுப்புக் கொள்கைகளை தன் இணைய தள முகவரியில் எழுதி வந்தார்.

கூட இருந்து முஸ்லிம் நண்பர்களே அவருக்கு விரோதிகளாக மாறி அவரை கொன்று போட்டிருக்கிறார்கள்.

கர்நாடகத்திலும் மகராஷ்டிரா விலும் குல்பர்கி , தபோல்கர் என்ற இருவரை நாத்திகம் பேசியதற்காக இந்துத்துவ பயங்கரவாதிகள் கொலை  செய்தார்கள். இப்போது தமிழகத்திலும்  அதே கலாசாரம் வேரூன்ற முயற்சிக்கிறது.

வெறியர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள் என்பதற்கு வேறு  சாட்சியம் தேவையில்லை.

முஸ்லிம் மத அமைப்புகள் தான் முதலில் இதை கண்டித்திருக்க வேண்டும்.

காவல் துறை மெத்தனம் காட்டக் கூடாது.

 

இந்தித் திணிப்பை முறியடிக்க ஒரே வழி தமிழ் வழிக் கல்வியே??!!

தேசிய நெடுஞ்சாலைகளில் மைல் கற்களில் ஆங்கிலத்தை அழித்து விட்டு இந்தியில் எழுதி வருகிறது மத்திய அரசு.

இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் நீடிக்கும் என்ற நேருவின் உறுதிமொழியை மீறுகிற செயல் இது.

சமஸ்கிருத வாரம் இந்தி வாரம் உலக இந்தி மாநாடு  ஐ நாவில் இந்தியை அலுவல் மொழியாக ஆக்க முயற்சி சமஸ்கிருத செய்தி வாசிப்பு என்று பல உதாரணங்களை காட்ட முடியும்.

தமிழ்நாடு வங்காளம் போன்ற சில மாநிலங்களை தவிர ஏனைய அனைத்து மாநிலங்களும் இந்தியை ஏற்றுக் கொள்வதிலோ படிப்பதிலோ பெருத்த ஆட்சேபணை கிளப்ப போவதில்லை.   ஏனென்றால் அந்தந்த மொழிகளில் சமஸ்கிருதம் இரண்டற கலந்து பிரிந்து செயல்படும் தன்மையை இழந்து விட்டன.

கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக தமிழும் தன் தனித் தன்மையை இழந்து சமஸ்கிருத ஆதிக்கத்தில் இருந்ததை திராவிடர் இயக்கம் தான் மீட்டுக் கொண்டுவந்தது.   இந்த உண்மை கூட தற்கால தலைமுறையால் உணர்ந்து கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை.    இப்போது  மீண்டும் இந்தி ஆதிக்கம்  செய்ய தலை எடுக்கிறது.

எல்லாம் அடி பணிந்து விட்டார்கள் நீ மட்டும்  ஏன் பணிய மறுக்கிறாய் என்று கட்டபொம்மனை ஆங்கிலேயன் கேட்டது போல் நம்மைப் பார்த்து இந்தி ஆதிக்கம் கேட்கிறது.

இவர்களை தடுக்கும் சக்தி தற்கால தமிழனுக்கு இருக்குமா என்ற கேள்வியை கேட்க வேண்டிய வேளை வந்து விட்டது.

இவர்களை எதிர்த்துக் கொண்டிருப்பதை விட இந்தி திணிப்பை எதிர்க்க ஒரே வழி தமிழ் மொழி வழிக் கல்வி மட்டுமே.

மற்ற மாநிலங்களில் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும்.    தமிழ் நாட்டில் தமிழர்கள் தங்கள் குழந்தைகளை தாய் மொழியில் கல்வி  கற்க வைக்க முடிவெடுக்க வேண்டும்.

வேலை வாய்ப்பு  கிடைக்காது என்ற பூச்சாண்டியை காட்டி தமிழ் மொழிக் கல்வியை தவிர்க்க வைக்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப் படும்.     அரசியல்வாதிகள் தங்கள் வீட்டுக் குழந்தைகளை இந்தி  படிக்க சொல்லி விட்டு மற்றவர்களை தமிழ் படிக்க சொல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழவே கூடாது.

அப்படி படித்து விட்டு வருபவனுக்கு அரசு வேலை  வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

தமிழ் மொழி வழியில் படித்தவனுக்கு  சலுகைகள் கொடுப்பது என்பது கடமை சார்ந்தது.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டி போராட்டம் தொடங்க வேண்டும் .

இந்தியாவில் இணைந்திருப்பதற்கும் தாய் மொழிக் கல்விக்கும் என்ன முரண்பாடு.

யார் ஆட்சிக்கு வந்தாலும்  தாய் மொழிக் கல்விக்கு முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழ் பயிற்று மொழி . ஆங்கிலமோ இந்தியோ வேறு எந்த மொழியோ கற்க தடையில்லை என்ற கொள்கையில் தமிழர்கள் உறுதியாக இருந்தால் ஒழிய இந்தி  திணிப்பை  எதிர்க்கிறோம்  என்று குரல் கொடுப்பதில் எந்த பொருளும் இல்லை.

அந்த இன்னொரு தனுஷ் எங்கே?

நடிகர் தனுஷ்  மேலூர் கதிரேசன் மகனா இயக்குனர்  கஸ்தூரி ராஜாவின் மகனா?

இப்படி ஒரு வழக்கு இதுவரையில் நடிகர்கள் சம்பத்தப் பட்டு வந்ததில்லை.

கதிரேசன் கேட்பதெல்லாம் வாழ்க்கை படி.     பணம் பறிப்பதற்காக யாரோ சொல்லிக் கொடுத்து இப்படி ஒரு பொய் வழக்கு என்று தனுஷ் சொல்கிறார்.       பொய் என்றால்  சிறைக்குப் போகவேண்டும் என்பது தெரியாமலா வழக்குப் போட்டிருப்பார்கள்?

பள்ளிக் கல்விச் சான்றிதழ்கள்  அதில்  காணும் மச்சங்கள் ,என்றெல்லாம் விசாரணை போய்க்கொண்டிருக்கிறது

மருத்துவர்கள் சான்றிதழ்கள் பிரச்னையை  தீர்க்கும் என்றால் அதிலும் கேள்விகள்.    லேசர் சிகிச்சை மூலம் மச்சங்கள் அழிப்பு என்று  புகார்.

சான்றிதழ்களில் அவர் தலித் என்றும் இருக்கிறதாம்.     கஸ்தூரி ராஜா தான் தலித் என்று சொல்லிக்கொள்ள வில்லை.

டி ஏன் ஏ பரிசோதனைக்கு தனுஷ் ஒப்புக்கொள்ளவில்லை.   ஏன்?

இருவரில் ஒருவர் சொல்வது பொய்.       யார் அவர்?

ரஜினிகாந்தின் மருமகன் மீது இப்படி  ஒரு விசாரணை நடப்பதை அவரே சங்கடத்துடன் தான் பார்த்துக் கொண்டிருக்க முடியும்.

தனுஷ் போன்ற நம்ம வீட்டுப் பையன் என்ற பெயரை எடுத்த நல்ல கலைஞனை சுற்றி இப்படி ஒரு விவாதம் நடப்பதை அவரது நலம் விரும்பிகள் விரும்ப மாட்டார்கள்.

விசாரணையில் யார் மகன் தனுஷ் என்றுதான் தீர்ப்பு வர முடியும்.

இன்னொரு கேள்விக்கு என்ன விடை?

இரு தரப்பு தாக்கல் செய்திருக்கும் சான்றிதழ்கள் படி இரண்டு பிள்ளைகள்  படித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

ஒருவர் தனுஷ் .   மற்றொருவர் யார்?   அவர் எங்கேயிருக்கிறார்?  ஏன் அவர் இன்னும் வெளிப்படவில்லை. ?   ஏன் அவர் கண்டுபிடிக்கப் பட வில்லை.?    அவர் மறைந்திருக்கிறாரா?   மறைத்து வைக்கப் பட்டிருக்கிறாரா ?    அல்லது இரண்டில் ஒரு சான்றிதழ் பொய்யா?

கவுண்டமணி -செந்திலின் வாழைப்பழக் காமெடி போல் கேள்வி இருந்தாலும் உண்மை  அதில்தான் ஒளிந்திருக்கிறது.

அந்த இன்னொரு தனுஷ் எங்கே?

உ பி யில் மோடியின் வெற்றி ஒரு அபாய அறிவிப்பு ??!!

முதல்வர் வேட்பாளர் யார் என்றே அறிவிக்காத நிலையில் ,

நான்கு கோடி  முஸ்லிம் களில் ஒருவரைக்கூட வேட்பாளராக அறிவிக்காமல் ,

மாயாவதியின் ஜாதவ் சமூக மக்களுக்கு எதிரான பட்டியல் வகுப்பினரை ஒன்று சேர்த்து

அகிலேஷ் யாதவின் யாதவ் மக்களுக்கு எதிரான இதர பிற்பட்ட மக்களை  ஒன்று சேர்த்து,

சாதியம் கோலோச்சும் இந்துத்துவா உணர்வுகளை தூண்டி விட்டு  ,

மத்திய அரசின்  அதிகார பலத்தை  பண பலத்தை பயன்படுத்தி,

மூன்றில் நான்கு பங்கு  இடங்களை பெற்று வரலாற்று வெற்றியை பெற்று விட்டார் பிரதமர் மோடி.

பாஜக வின் கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றியாக இதை எடுத்துக் கொள்ள முடியாது.

தனிப்பட்ட மோடி என்ற மனிதர் புனிதராக சித்தரிக்கப்பட்டு அடுத்த பாராளுமன்ற  தேர்தல் எப்படி இருக்கும் என்பதற்கு முன்னோடியாக உ பி தேர்தல் நடத்தப் பட்டு இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற மாபெரும் தோல்வியை ஒரு பாடமாக எடுத்ததுக்  கொள்ளாமல் தந்தையும் மகனும் நடத்திய குடும்ப அரசியல் நாடகங்கள் மக்கள் மத்தியில் பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதைக்கூட உணராமல் போனது சமாஜ்வாதியின் தோல்விக்கு ஒரே காரணம்.

மாயாவதியும் கூட நான்கில் ஒரு பங்கு இடங்களை முஸ்லிம்களுக்கு தந்தும் கூட வெற்றிபெற முடியாதது மட்டுமல்ல பாஜக வின் தந்திரங்களை எதிர்கொள்ள தயாராக இல்லாமல் மத சார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்க அவர் முனையவேயில்லை.

ஆக இப்படியே போனால் நாடு இந்துத்துவ சர்வாதிகாரத்திற்கு ஆட்பட்டுவிடும் என்ற அச்சம் வருவதை தவிர்க்க முடியாது.

அடுத்து , இதே தந்திரங்கள் தமிழ்நாட்டிலும் அரங்கேற்றப் படலாம் என்ற அச்சம்தான் நமக்கு.

ஏனென்றால் இங்குதான் தமிழன் ஏமாறத் தயாராக இருக்கிறான்.  காட்டிகொடுக்க தயாராக இருக்கிறான். மண்டியிட தயாராக இருக்கிறான். சாதியால் பிளவுபட்டு நிற்கிறான். பதவிப் பசி கொண்டு அலைகிறான்.    தாய்  மொழியை  காக்கும் திறனற்று இருக்கிறான்.

எல்லாவற்றுக்கும் மேலாக   ஒருபோதும் சக தமிழனை தலைவனாக ஏற்றுக் கொள்ளாத நல்ல உள்ளம இவனுக்கு.

இப்படியெல்லாம் தங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் சக்தி எது என்பதுகூட இவனுக்கு தெரியாது.      அந்த சக்திதான் தனக்கு உற்ற நண்பன் என்ற மாய உணர்வில் மயங்கி கிடக்கிறான்.

இது  போதாதா வஞ்சக  வலை விரிப்போருக்கு .

ஆனால் வஞ்சகமும் பொய்மையும் என்றும் நிலையான வெற்றியை பெற முடியாது என்ற  வரலாற்று உண்மை ஒருபோதும் மாறாது.

மோடி பிராமணர் அல்ல என்ற பிரச்சாரம் இங்கு எடுபடாது.    ஏனென்றால் அவர் பிராமணியத்தின் பிரதிநிதி யாக செயல் படுவதால்தான் தலைமையில் நீடிக்க அனுமதிக்கப் படுகிரார் என்பது எல்லாருக்கும் தெரியும்.

இந்தியாவில் அவுரங்கசீப்  அசோகர், குப்தர்  சாம்ராஜ்யங்கள் கூட தக்காண பீடபூமி வரையில் தான் தங்கள் ஆட்சியை நீட்டிக்க முடிந்தது.      தமிழகத்தில் ஒருபோதும்  எந்த சாம்ராஜ்யமும் நுழையவில்லை.   அதை உடைத்தவர்கள் வெளிநாட்டு வெள்ளையர்கள்.     அதுபோல் ஒருபோதும் இந்துத்துவ சக்திகள் இந்தியாவின் எந்த  பகுதியில் வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் ஒரு போதும் வெற்றி பெற முடியாது.

வெற்றி பெற அனுமதிக்க மாட்டோம் என்ற  உறுதியைத்தான்      தமிழர்களுக்கு இந்த மதவாதத்தின் வெற்றி  அளிக்க வேண்டும்.

அளிக்கும்.

 

மணிப்பூரிலும் கோவாவிலும் பா ஜ க நடத்தும் ஜனநாயக படுகொலைகள் ??!!

மணிப்பூரில் மொத்தம் உள்ள  60  இடங்களில்   பா ஜ க பெற்றது     21.      காங்கிரஸ் பெற்றது       28.             தேசிய மக்கள் கட்சி நாகா மக்கள் முன்னணி    எல் ஜெ பி  உள்பட  மூன்று கட்சிகளும் பெற்றது  10.      சுயேச்சை  பெற்றது     1  இடம்.

பெரும்பான்மை பெறாவிட்டாலும் இதர பதினோரு இடங்களை  வைத்திருந்த மூன்று கட்சிகளையும் ஒரு சுயேச்சை யையும் சரிக்கட்டி முப்பத்தி  இரண்டு  பேர் ஆதரவை  திரட்டி ஆட்சி  அமைக்க உரிமை கோருகிறது  பா ஜ க.  தனிப்பெரும்பான்மை பெற்ற காங்கிரசால் ஆட்சி  அமைக்க முடியவில்லை.

அதேபோல் கோவாவிலும்    மொத்தம் உள்ள     40  இடங்களில்   காங்கிரஸ் பெற்றது   17 இடங்கள்.     பா ஜ க பெற்றது    13 இடங்களே .        ஆனால் மகாராஷ்டிரா கோமன்டக் கட்சியின்   4 ;    கி எப் பி யின்   3  மற்றும் சுயேச்சைகள்  3  ஆகிய பத்து பேற்றின் ஆதரவை பெற்று ஆட்சி மிக்க உரிமை கோருகிறது பா ஜ க.     இதற்காக மத்திய அமைச்சர் பாரிக்கர் ராஜினாமா செய்துவிட்டு கோவா முதல்வர் பதவில் அமர வருகிறார்.       தனிப்பெரும்பான்மை பெற்ற காங்கிரசால் ஆட்சி அமைக்க முடியவில்லை.

ஆறு மாதங்கள் சட்ட மன்ற உறுப்பினர் ஆக இல்லாமே முதல்வர் பணியாற்றலாம்.      மூன்று மாதத்தில் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் மத்திய அமைச்சராகலாம்.    பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறாரா என்பதை பார்க்க வேண்டும்.

ஆக எதை செய்தாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நிலைக்கு பா ஜ க வந்து விட்டது.

கோவாவில்   உச்சநீதிமன்றம் தலையிட வாய்ப்பிருக்கிறது.  தனிப்பெரும் கட்சி என்ற வகையில் முதல் வாய்ப்பை காங்கிரசுக்கு தந்திருந்தால் ஒருவேளை காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு வந்திருக்கலாம்.

பஞ்சாபில் பாடம் கற்றுக் கொள்ள தவறிய பா ஜ க  கோவாவிலும் மணிப்பூரிலும் புதிய முறைகேடுகளை அரங்கேற்றி  யுள்ளது.

இது  ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

 

90 வாக்குகள் பெற்று இரும்பு பெண்மணி இரோம்சர்மிளா தோல்வி??

பதினாறு  ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்து புரட்சி செய்தவர்  மணிப்பூரின் இரோம் ஷர்மிளா.

ராணுவத்திற்கு வழங்கப் பட்ட சிறப்பு  சலுகை சட்டத்தை எதிர்த்து போராடியவர்.     ராணுவம் சுட்டுகொன்றால் விசாரணை இன்றி தண்டிக்க முடியும் என்பது சிறப்பு சலுகை.

கடைசியில் தேர்தல் வந்ததும் கட்சி ஆரம்பித்து போட்டியிட்டார்.       எதிர்த்து போட்டியிட்டதோ  முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து.      பெற்றதோ  90 வாக்குகள்.

ஏன் மக்கள் அவரை புறக்கணித்தார்கள். ?    இந்தக் கேள்விக்கு தக்க பதில் இல்லை.

பெண் என்பதால்  புறக்கணித்தார்களா ?   பண பலம இல்லை என்பதால் புறக்கணித்தார்களா ?

இனி தேர்தலில் நிற்க மாட்டேன் என்று அறிவித்துவிட்டார் ஷர்மிளா .

பத்து பெர்சென்ட் முதல்வர்  என்று இபோபி சிங்கை விமர்சித்தார் பிரதமர் மோடி.

அவர் வெற்றி பெறுகிறார்.     ஷர்மிளா தோற்கிறார்.

நல்லவர்களும் பெண்களும் அரசியலுக்கு வந்து சாதிக்கத் துடிக்கிறார்கள்.

மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக வில்லையே ?

 

நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்றத்தை அவமதித்தாரா ? நீதித்துறையில் அருவருப்பான காட்சிகள் ??!!!

நீதிபதி கர்ணன் உயர்நீதிமன்ற நீதிபதியாக சென்னையில் இருந்தபோதே பல சங்கடமான சூழ்நிலைகள் தோன்றின.

சக நீதிபதிகள் குறித்து பல குற்றச்சாட்டுகளை எழுப்பியவர் அவர்.    அவை சம்பந்தமான எந்த விசாரணையும் நடந்ததாக தெரியவில்லை.

அவரை கல்கத்தா  உயர்நீதிமன்றத்துக்கு மாற்றிய போதும் அது தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியவர் அவர்.     ஒருவழியாக கொல்கத்தா சென்ற பிறகும் மீண்டும் அதே குற்றச்சாட்டுகளை சுமத்தி  உச்ச நீதிமன்றத்துக்கு கடிதங்கள் அனுப்புவதை விடவில்லை.

இப்படி குற்றம்  சுமத்தி கடிதம் எழுதுவது நீதிமன்ற அவமதிப்பு என்று உச்ச நீதிமன்றம் கருதியது.

விசாரணைக்கு  அழைத்தும் வராததால் இப்போது பிடி வாரண்டு அனுப்பும் வரை பிரச்னை சென்றிருக் கிறது.

இப்போதும் தனக்கு வாரண்டு பிறப்பிக்க உச்சநீதிமன்றத்து நீதிபதிகளுக்கு உரிமை  இல்லை  என்ற நிலைப்பாடு எடுத்த நீதிபதி கர்ணன் அவர்களுக்கே  வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று அறிவிப்பு அனுப்ப உத்தரவிடுகிறார்.

தான் பிரதமருக்கு இருபத்து இரண்டு நீதிபதிகள் மீது ஊழல்  , கையாடல்,  கற்பழிப்பு  உள்பட பல குற்றச்சாட்டுகளை சுமத்தி விசாரணை கோரி கடிதம் எழுதியதாகவும் விசாரணைக்கு  உத்தரவிடாமல் தன் மீது அவமதிப்பு வழக்கு தொடுத்து இருப்பது வன்கொடுமை  என்றும் பேட்டியளித்திருக்கிறார் .

உண்மையில் கர்ணன் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுகள் மீது விசாரணை தேவைதானா என்பதை ஏன் உச்சநீதிமன்றம் அவரை வரவழைத்து உள் விசாரணை நடத்தி முடிவு    செய் திருக்க கூடாது. ?

பாராளுமன்றத்தில் தன்  மீது இம்பீச்மென்ட் என்ற நடவடிக்கையை வேண்டுமானால் எடுக்கலாமே தவிர உச்ச நீதி மன்ற நீதிபதிகள் தன் மீது இவ்விதமான நடவடிக்கை  எடுக்க முடியாது என்றும் கூறுகிறார்.

தான் தலித் என்பதாலேயே குறி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப் படுவதாக கூறுவது எப்படி பொருந்தும் என்பது தெரியவில்லை.

ஏனென்றால் அவர் தலித் ஆக இருப்பது அவர்  உயர் நீதிமன்ற நீதிபதி ஆவதற்கு தடையாக இருக்க வில்லையே? 

                       ஏழு நீதிபதிகள் முன்பு அவர் ஆஜராகி விளக்கம் தராவிட்டால் அவர் மீது பிணையில் வர முடியா பிடியாணை பிறப்பிக்கப்  படுவதும்   , ஆஜர் படுத்தப் பட்ட பின்பும் இதே நிலைப்பாட்டை அவர்  எடுத்தால் அவர் மீது தண்டணை  பிறப்பிக்கப் படுவதும் தவிர்க்க முடியாதது ஆகி விடும்.

மொத்தத்தில் நீதிபதிகளும் ,  நீதித்துறை நடைமுறைகளும்  பொதுமக்கள் விவாதத்துக்கும் விமர்சனத்துக்கும்  ஆளாகும்.

உண்மைகள் இதன் மூலம் வெளிவரும் என்பது நல்லதே என்றாலும் மக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கை தரைமட்டமாகிவிடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஏற்கனெவே நீதிபதிகள் நியமனத்தில் உச்சநீதிமன்றமும் மத்திய அரசும் உரசிக்கொண்டு இரு தரப்பிலும் செல்வாக்கு எப்படியெல்லாம் பங்கு வகிக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டினார்கள்.

 இவர்களா நமது தலைவிதியை நிர்ணயிக்கிறார்கள் என்று பொதுமக்கள் நொந்து கொள்ளும் நிலைமை வராமல் இருக்க வேண்டும். 

                   

காஷ்மீர் – இந்திய தேசியத்தின் வெற்றி தோல்வியின் அளவுகோல்??!!

காஷ்மீர் – முடிவடையாத போராட்டங்களை சந்திதித் துக்கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான் ஒருபுறம் பயங்கரவாதிகளை அனுப்பி அழிவு வேலைகளை செய்வதுடன் அப்பாவி காஷ்மிரி இளைஞர் களை வசப்படுத்தி இந்திய அரசுக்கு   எதிராக வன்முறையை தூண்டி விட்டு வருகிறது.

வயது முதிர்ந்த  பெரியவர்கள் கூட தாங்கள் எவ்வாறு சிறு வயதில் இந்திய அரசுப் படைகளை எதிர்த்து கல்லெறிந்து பழகினோம் என்பதை கதையாக சொல்வதை பார்த்தால் இந்த போராட்டம் என்பது புதிதல்ல என்பது புரியும்.

காஷ்மீரிகள் இந்தியத்தோடு கலக்கவில்லையா?      முஸ்லிம் என்ற மத அடையாளம் மட்டும்தான் பிரிவினைவாத உணர்விற்கு காரணமா?

வரலாற்று உண்மைகள் எதுவாக இருந்தாலும் கேள்வி  ஒன்றுதான்.

இந்தியாவின் ஒரு பகுதியில் அந்த பகுதி மக்கள் மத ரீதியாக பிற பகுதிகளில் சிறுபான்மையாக இருந்தாலும் அந்தப் பகுதியில் பெரும்பான்மையாக இருந்தால் அவர்கள் மற்ற பகுதி பெரும்பான்மை மக்களோடு இணைந்து வாழ முடியாதா?

அவர்களின் முஸ்லிம் அடையாளம் பாகிஸ்தானோடு உணர்வுபூர்வமாக ஒன்று பட்டதா ?

தேர்தல் நடந்து அங்கு பாஜ க  -பி  டி பி கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தாலும் ஏன் அமைதி திரும்ப மறுக்கிறது.

பாகிஸ்தானை மட்டுமே காரணம் காட்டிக் கொண்டிருப்பது உண்மையல்ல.

என்ன செய்ய வேண்டும் என்று சொல்வது கடினம் .

தீர்வைச் சொன்னால் அது தவறாக பொருள் கொண்டு விடப் படலாம்.

தீர்வை காண்பது ஆள்வோர் கடமை.

ஒன்று மட்டும் உறுதி.     நீண்ட காலம் இந்தப் போராட்டம் நீடித்தால் அது இந்திய ஜனநாயகத்தின் வெற்றியை கேள்விக்குறியாக்கி விடும்.

அது பிற மாநிலங்களிலும் எதிரொலிக்கலாம்.    அந்நிலை வராமல் தடுப்பது ஆட்சியில் இருப்போர் கடமை.

எதெற்கெடுத்தாலும் குற்றம் சொல்வோரை தேச விரோதிகள் என்று சாடுவது சிலருக்கு வாடிக்கை  யாகி விட்டது.    அடிமைகளாக வாழ்ந்தால்தான் குற்றம் சொல்லாமல் வாழ  முடியும்.

மெகபூபா முப்தி சொல்லியதுபோல் உள்ளூர் இளைஞர்களின் தவறான புரிதல்கள் சரி செய்யப் பட வேண்டும்.   மாறாக அவர்களை பயங்கரவாதிகளை போல நடத்துவது தவறு.   பதவியில்  இருப்பதால் பொறுப்பாக பதில் சொல்கிறார்.     இதுவே எதிர்கட்சியில்  இருந்திருந்தால் குரல் வேறு விதமாக ஒலித்திருக்கும்.

பிற மாநிலங்கள் ஒற்றுமையை காஷ்மீர் குலைத்துவிடக்கூடாது.

புத்தியுள்ள தமிழன் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் என்ன செய்ய வேண்டும்?

பிரச்னைகளால் தமிழ்நாடே தத்தளித்துக் கொண்டு இருக்கிறது.

போதாது என்று வந்துவிட்டது ஆர் கே நகர் இடைதேர்தல்.

ஜெயலலிதாவின் மரணத்தால் வந்திருக்கும் இந்த தேர்தல் தமிழ் நாட்டின் அரசியல் போக்கையே மாற்றும் தன்மை கொண்டது.

சசிகலாவின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி –    ஓ பி எஸ் – தீபா என்று பல அணிகளாக பிரிந்திருக்கும் அ தி மு க அணிகள் எல்லாமே தூக்கி  பிடிப்பது யாரை?

உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று உறுதி செய்யப் பட்டு மரணம் ஆனதால் தண்டிக்க இயலாமல் போன ஜெயலலிதாவை!

இம்மாதிரி நிலை இதற்கு முன் வந்ததில்லை.    எந்த முதல்வரும் ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப் பட்டு சிறைக்கு சென்ற்தில்லை. .

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறதா என்பதில் தான்  இரு தரப்புக்கு இடையே  முட்டல்.

அதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும்.

ஆனால் புத்தியுள்ள தமிழன்  என்ன செய்ய வேண்டும்?

ஊழல் குற்றவாளி ஜெயலலிதா பெயரை யார் சொல்கிறார்களோ அவர்களை நாங்கள் புறக்கணிப்போம் என்ற முடிவை ஆர்  கே நகர் தொகுதி மக்கள் எடுக்க வேண்டும்.

இடைதேர்தல் முடிவால்  புதிய ஆட்சி உருவாகவோ இருக்கும் ஆட்சி கவிழவோ போவதில்லை.

எனவே விளம்பரங்களுக்கு ஆக போட்டியிடுபவர்கள் தான் அதிகம் இருப்பார்கள்.

அவர்களில் எந்த கட்சியினர் அல்லது  வேட்பாளர் ஆளும் கட்சியை எதிர்த்து நிற்பார் என்று தேர்வு செய்து தேர்ந்தெடுப்பது தான் வேட்பாளர் கடமை.

ஊழல் பணம் வெற்றியைத் தராது என்ற புதிய உண்மையை இந்த இடைதேர்தல் உருவாக்கி திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும்.

மெரினாவில் ஏற்பட்ட விழிப்புணர்வு  மாற்றம் ஆர் கே நகர் இடைத்தேர்தலிலும் எதிரொலிக்க வேண்டும்.

 

 

தொடரும் மீனவர் படுகொலையும் மோடி அரசின் வஞ்சகமும்???!!!

மீண்டும் ஒரு இந்தய தமிழ் மீனவர் , ப்ரிட்ஜோ  , சிங்கள கடற்படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்  பட்டிருக்கிறார்.

இத்தனைக்கும் இந்தப்  படுகொலை இந்திய கடல் எல்லைக்குள் நடை பெற்றிருக்கிறது.

வழக்கம் போல தமிழக அரசியல் வாதிகளின் கண்டனங்களும் இந்திய அரசின் பொறுப்பான பதிலும் சிங்கள அரசின் மறுப்பும் பதிவாகி இருக்கிறது.

சுப்ரமணியசாமி என்று ஒரு பொறுக்கி வழக்கம் போல ‘ தமிழ்நாட்டில் இந்தப் பொறுக்கிகள் கட்டுமரத்தில் ஏறி சிங்கள கடற்படையுடன் சண்டை போட வேண்டியதுதானே .சாக்க்கடைக்குள் ஏன் ஒளிந்து கொள்கிறார்கள். ‘ என்று ட்விட்டரில் பதிவு செய்கிறான்.

அதை இங்கே எந்த உணர்வுள்ள மனிதன் எவனும் கண்டு கொள்வதில்லை.

கண் துடைப்பாக சிறையில் இருக்கும் இரு நாட்டு மீனவர்களையும் விடுதலை செய்வது என்று இரு நாட்டு அதிகாரிகளும் முடிவு செய்கிறார்கள்.

பறிமுதல் செய்யப் பட்டு கிடக்கும் நூற்றுக்கும் மேலான படகுகளை பற்றி யாருமே எதுவும் பேசுவதில்லை.

இலங்கை  கடற்படை சுட்டால் எங்கே போனது இந்திய  கடற்படை?

இந்திய மீனவன் எல்லை தாண்டுகிறான் என்றால் .  எல்லையை காட்டும் கருவி வைத்திருக்கிறாயா?

பாரம்பரிய மாக  எல்லை தாண்டி மீன் பிடிக்கும் உரிமை இரு நாட்டு மீனவர்களுக்கும் இருக்கிறதே.?

இழந்த உயிருக்கு யார் இழப்பீடு தருவது?    என்ன இழப்பீடு?    மீண்டும் நடை பெறாது என்பதற்கு என்ன உத்தரவாதம்.?

இலங்கை பகை நாடு என்று இந்தியா அறிவிக்க வில்லை என்றால் தமழ் நாட்டு அமைப்புகள் அறிவிக்கலாமே?

இந்திய  தமிழ் நிறுவனங்கள் இலங்கையில்  செயல்பட ஆட்சேபிக்கலாமே!

இந்திய தமிழர்கள் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க லாமே !

சட்டத்திற்கு உட்பட்டு இன்னும் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை தமிழ் உணர்வாளர்கள் ஏன் சிந்திக்க வில்லை ?

போர் முடிந்து எட்டாண்டுகள் முடிந்தும் இன்னும் அரசியல் தீர்வு பற்றி சிங்களன் பேச மறுக்கிறான்..

நம் தலையீடு வேண்டாம்.    என்ன தீர்வு என்பதை அந்த நாட்டு தமிழர்களே தீர்மானிக்க வேண்டாமா?

குள்ளநரியும் சிங்களனும் ஒன்று.    அவனை சாதாரணமாக அணுகி  வெல்லவே முடியாது.

ஒரு சம்பவம் நடந்தால் போராட்டம்  நடத்தி ஓய்வதுதான் தமிழன் வழக்கம் .     இது  சிங்களனுக்கு தெரியும்.    அதனால்தான் துணிந்து சுட்டது நாங்கள் அல்ல என்று மறுத்திருக் கிறான்

அடுத்து இடைத்தேர்தலின் தமிழன் கவனம் திரும்பி விடும்.

சிங்கள எதிர்ப்புக் களம் நிரந்தரமாக செயல் பட வேண்டும்.  அது இலங்கை தமிழர் பகை நாடு என்ற முழக்கத்தோடு வெளிப்படையாக தொடர் திட்டங்களை வடிவமைக்க வேண்டும்.  இந்திய அரசு ஒருபோதும் இலங்கையை பகை நாடாக அறிவிக்காது.   தமிழர்களுக்கு அரசியல் தீர்வையும் பெற்றுத் தராது.

இந்தியாவில் இருந்து கொண்டே இந்திய அரசையும் மீறி இலங்கை பகை நாடு தமிழர்களுக்கு என்ற முழக்கத்தோடு  அறவழியில் தொடர் போராட்டத்தை தமிழகம் முன்னெடுத் தால்தான் சிங்களன் கொஞ்சமாவது அசைந்து கொடுப்பான்.

பிளவுண்டு கிடக்கும் தமிழன் இதை சாதிப்பானா ?