Home Blog Page 92

ஜெயலலிதாவும் சசிகலாவும் குற்றவாளிகள்! உச்ச நீதி மன்றம் தீர்ப்பு !!!

சிறைக்குப் போகிறார் சசிகலா!!

முதல்வர் கனவு கனவாகவே  போய் விட்டது.

ஜெயலலிதா இருந்திருந்தால் அவரும் சிறைக்குப் போயிருப்பார்.

எட்டு  மாதம்         கழித்து , தமிழக அரசியலில் ஒரு பிரச்னை உருவாகி, சசிகலா  முதல்வர் ஆக  தேர்வு செய்யப் பட இருந்த நிலையில், ஓ பி எஸ் தனி அணி கண்டு ராஜினாமாவை கட்டாயப் படுத்தி வாங்கினார்கள் என்று குற்றம் சாட்டிய நிலையில்   , உச்ச நீதி மன்றம்  ஜெயலலிதா , சசிகலா ,இளவரசி ,சுதாகரன் ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என்று விசாரணை நீதி மன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து உச்ச நீதி மன்ற தீர்ப்பு வந்திருக்கிறது.

தீர்ப்பு பொதுவாக வரவேற்பை பெற்றாலும் தாமதம் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

விடுதலை செய்து தீர்பளித்த  நீதிபதி  குமாரசாமிக்கு  கண்டனம் தெரிவித்ததா என்று தெரிய வில்லை. கணக்கு தப்பு என்பது உண்மைதானா?

ஜெயலலிதா ஆட்சிக் காலம் என்பது ஊழல் ஆட்சிக் காலமே என்பது இதன் மூலம் உறுதி செய்யப் பட்டிருக்கிறது.

கொண்டாடப் பட வேண்டிய ஆட்சியை ஜெயலலிதா நடத்த வில்லை.

அதிமுக என்பதே ஜெயலலிதாவின் கட்சிதான்.

எம்ஜியார் காலத்தில்தான் அது கலைஞர் எதிர்ப்பு கட்சியாக இருந்தது.    அதன் அடிப்படையில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அதை தன் கட்சியாகவே வைத்திருந்தார்.

அவருக்குப்பின் கட்சி நீடிக்க வேண்டுமா என்ற கேள்விக்கு என்ன பதில்?

ஜானகி அணி ஜெயலலிதா அணி என்று பிரிந்து போட்டியிட்டவர்கள் தான் இவர்கள்.
ஆளுநர் தாமதம் செய்தார் என்ற குற்றச்சாட்டு தவறு என்றாகி விட்டது.   பதவி ஏற்றிருந்தால்  உடனே விலக வேண்டிய அவலம் ஏற்பட்டிருக்கும்.

மீண்டும் ஒரு பொது தேர்தலை நோக்கி தமிழ் நாடு செல்கிறது தெரிகிறது.;

ஓ பி எஸ்  ஆதரவு அதிமுக இந்த தீர்ப்பை கொண்டாடுவதன் பொருள் என்ன.?     ஜெயலலிதாவிற்கு அவமானம் ஏற்பட்டாலும் பரவாயில்லை.  சசிகலா தடுக்கப் பட வேண்டும் .

விழிப்புணர்வு இல்லாத சமுதாயத்தில் அரசியல் எப்படி இருக்கும் என்பது இப்போது விளங்கிவிட்டது.

டெல்லி நினைத்தால் எந்த மாநிலத்திலும் தங்கள் விருப்பபடி அரசியலை மாற்று திசையில் திருப்ப முடியும் என்பது மீண்டும் நிருபணம் ஆகியிருக்கிறது.

பா ஜ க கால் பதிக்க தன் ஆட்சி அதிகாரத்தை பயன் படுத்தி வருகிறது.

விழிப்புணர்வு கொண்ட சமுதாயமாக மாறினால்தான் இந்த அவலங்களை தவிர்க்க முடியும்.

 

உச்சநீதி மன்றத்தை யார் கேட்பது? தீர்ப்பு தர எட்டு மாதம் தேவையா?

தமிழகத்தில் நிலவும் இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் உச்ச நீதி மன்றம்.

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு செய்திருந்த மேன் முறையீட்டில் வாதங்கள் முடிந்து தீர்ப்புக்கு ஒதுக்கி எட்டு மாதங்களாகி விட்டது.

தீர்ப்பு முன்பே வந்திருந்தால் தமிழக அரசியல் நிலவரம் முற்றிலும் மாறியிருக்கும்.

யார் கண்டது. ?    ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வின் போக்கையே அது மாற்றியிருக்க கூடும்.

கிழமை நீதிமன்றங்களுக்கு அறிவுரை சொல்லும் உச்ச நீதி மன்றத்துக்கு யார் அறிவுரை சொல்வது?

வழக்கு நடத்த பதினெட்டு ஆண்டுகள் இழுத்தடித்தார் ஜெயலலிதா.      குற்றவாளி தீர்ப்பு வந்து மேன்முறையீடு செய்து  அதை மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு சொல்ல உத்தரவிட உச்ச நீதி மன்றத்துக்கு முடிந்தது.

தன்னிடம் வந்த வழக்கில் மட்டும் தீர்ப்பு சொல்ல எட்டு மாதம் எடுத்துகொள்கிறது.

தீர்ப்பு முன்பே வந்திருந்தால் இன்று எழுந்திருக்கும் சசிகலா-ஓ பி எஸ் உடைசலே வந்திருக்காது.

உச்ச நீதி மன்றம் முதலில் இந்த பிரச்னைக்கு முடிவு கட்டட்டும்.

தீபா பேட்ரிக் மாதவன் அரசியலுக்கு வருகிறாராம் !!!

யார் வேண்டுமானாலும் தமிழக அரசியலில் நுழைந்து முதல்வர் ஆகி விடலாம் .

எம்ஜியார் – ஜெயலலிதா – இருவரின் பெயரை மட்டும் சொன்னால் போதும்.

தமிழர்களை எப்படி எடை போட்டிருக்கிறார்கள்?    மிகச்சரியாக.    இதுவரை  அப்படிதானே !!

அ தி மு க வில் தலைவர்களே  இல்லையா?

மிட்டா மிராசு ஜமீன்தார் மன்னர் காலமெல்லாம் மலையேறி விட்டாலும் ஜனநாயகத்திலும் வாரிசுகளை விட்டால் வேறு யாருமே தலைமை ஏற்க தகுதி படைத்தவர்கள் தேர்ந்தெடுக்கப் பட முடியாதா?

இது இனத்தின் இழிவு இல்லையா?

ஜல்லிகட்டு பிரச்னையில் தன்மான உணர்வைக் காட்டிய தமிழினம் இனி ஒவ்வொரு பிரச்னையிலும் அந்த உணர்வை வெளிக்காட்ட  வேண்டும்.

தீபா பெந்தேகொஸ்தே பிரிவை சேர்ந்த பாட்ரிக் மாதவனை திருமணம் செய்து கொண்டதால் தான் அய்யங்கார் பிரிவை சேர்ந்த ஜெயலலிதாவால் அதை ஏற்றுக்  கொள்ள முடியாமல் திருமணத்திலும் கலந்து கொள்ள வில்லை பின்னாலும் முக்கியத்துவம் கொடுக்க  வில்லை என்பது இப்போது  தெரிகிறது.

ஆனால் எதையும் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள தீபா தயாராக இல்லையே ஏன்?

\                     சசிகலா பொறுப்பு ஏற்றது தொண்டர்கள் மத்தியில் ஏற்றுக்  கொள்ளப் பட வில்லை என்ற பிரச்சாரம் செய்யப் படுகிறது.

அதிமு கவிற்கு யார் தலைமை என்பது அவர்கள் பிரச்னை.

ஆனால் எந்த கொள்கையை யும் முன்னிறுத்தாமல் தான் உறவுக்காரி என்ற உரிமையில் மட்டுமே ஒருவர் ஒரு அரசியல் தலைமை ஏற்க முன்வருவாரெயானால் அதை  ஏற்றுக் கொள்ள முடியுமா?

ஜானகி முதல்வரானதும் ஜெயலலிதா முதல்வரானதும் திராவிட இயக்க கொள்கைகள் அடிப்படையிலா?

அதுதான் தமிழகத்தின் தலைவிதியா?

தொண்டர்கள் அழைக்கிறார்கள் என்கிறார்கள்.  தொண்டர்கள் கண்களுக்கு வேறு அ தி மு க தலைவர்கள் யாருமே தெரியவில்லையா?

நாட்டை நாசப்படுத்தும் வேலையை போட்டி போட்டுகொண்டு முன்னெடுப்பவர்கள் இத்தனை பேர்களா?

இவர்களுக்குள் யாருமே தங்களுக்குள் ஒருவரை ஏன் தேர்ந்தெடுக்க முடியவில்லை. ?

தமிழன் என்று  சொல்லவே வெட்கப் படுகிற நிலையை உருவாக்காதீர்கள்!

தீபாவின் சகோதரர் தீபக்  சசிகலாவின் பக்கம் .   இவர் ஜெயலலிதா பெயரில் தனிக்கட்சியா?

தமிழரையும் தமிழ்நாட்டையும்  யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஆட்டி வைக்கலாம் என்ற நிலை இன்னும் எத்தனை நாள் நீடிக்கும்?

ஓ பி எஸ் பிரிந்து வந்து தனி அணி கண்ட பிறகு தீபா மவுசு குறைந்திருக்கிறது.

தீபாவுக்கு அரசியலுக்கு வர உரிமை இல்லையா ? நிச்சயம் உண்டு.     அதற்கு கொள்கை ரீதியிலான காரணங்களை அவர் கூற வேண்டும்.

ஜெயலலிதா வழி என்று சொல்கிறாரே அது என்ன ஜெயலலிதா வழி?

ஊரை அடித்து உலையில் போட்டு லஞ்சம வாங்கி குவித்து வழக்குகளை சந்தித்து சிறைக்கு சென்று எல்லாரையும் அடிமைகள் ஆக்கி சர்வாதிகாரம் செய்வது தான் அரசியல் என்று கற்பித்து வாழ்ந்தவர் ஜெயலலிதா.                           அதே வழியில் யார் வந்தாலும் மக்கள் ஆதரவு கிடைக்காது!

மாணவர்களும் இளைஞர்களும் சேர்ந்து மெரினாவில் சாதித்து காட்டிய ஜல்லிக்கட்டு புகழை தீபாவை அழைத்து அழித்து விடாதீர்கள்.

ஆளுநர் மூலம் காலூன்றப் பார்க்கும் காவிக் கட்சி

உத்தரகாண்ட் , அருணாச்சல பிரதேசம்               போன்ற வட மாநிலங்களில் நடந்தது எல்லாம் இப்போது தமிழகத்தில் நடக்கிறது.

என்னவெல்லாம் செய்து ஆட்சியை கைப்பற்ற பா ஜ க நாடகம் நடத்தியது என்பதை கவனித்தால் இங்கு நடப்பது ஒன்றும் ஆச்சரியம் தராது.

சசிகலா-ஓ பி எஸ் இவர்களில் யார் தகுதியானவர்கள் என்பது அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய ஒன்று.

ஆளுநரின் நடத்தை யை மட்டும் விமர்சனத்துக்கு எடுத்துக் கொண்டால் சதி வெளிவரும்.

ஒ பி எஸ்         ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்ட உடன் ஆளுநர் என்ன செய்திருக்க வேண்டும்?   அடுத்து யார் ஆட்சி செய்ய அனுமதிப்பது என்பது மட்டுமே அவரது வேலை.      அனுமதி அளிக்கப்  பட்டவர் சட்ட மன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் .

ஆளுநர் செய்த தாமதத்தின் விளைவாக இரு தரப்பிலும் குதிரை பேரம் அதிகமாகி விட்டது.

ஆளுநர் மூத்த பா ஜ க தலைவர் என்பது அவர் யார் நன்மைக்காக பாடு படுவார் என்பதற்கு விடை தரும். இத்தனை நாள் அவர் காத்து வரும் மௌனம் உள் நோக்கம் கொண்டது .    பா ஜ க வின் திட்டத்திற்கு துணை போகும் நோக்கம் என்பது எல்லாருக்கும் புரிந்தே இருக்கிறது.

எது நடந்தாலும் அது  பா ஜ க காலூன்ற இடம் கொடுத்து விடக் கூடாது என்பது மட்டுமே நமக்கு கவலை.

தமிழகத்தில் ஆட்சி என்பது இருக்கிறதா என்பதே கேள்வியாகி விட்டது.

ஒருவழியாக ஜல்லிக்கட்டு நடத்தப் பட்டது என்பது மட்டுமே  ஆறுதல் அளிக்கும் செய்தி.

மெரினாவில் மாணவர்கள் நடத்திய , உலகமே அதிசயித்த , புரட்சிப் போராட்டம் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை அளித்த நிலையில் இப்போது நடக்கும் மல்லுக்கட்டு தமிழர்களுக்கு இழிவைத் தந்து விட்டது.

அவாள் கள் எல்லாம் ஒரே குரலில் பேசுகிறார்கள்.      அதிலிருந்தே புரிந்து விட்டது யார் விலை  போய் விட்டார்கள் என்று.      தேவைப் படும்போது அவர்கள் வெளியே வருவார்கள்.      அதுவரை சாது வேடம் போடுவார்கள்.

கரூர் அன்புநாதன் -சேகர் ரெட்டி தொடர்பான ஆயிரக்கணக்கான கோடிகள் சம்பத்தப்பட்ட வழக்கில் ஓ பி எஸ்  சேர்க்கப் படாதது மட்டுமல்ல , அவர்கள் மீதும் கூட நடவடிக்கை தீவிரமாக இல்லை.   நத்தம் விஸ்வநாதன்  தப்பி விட்டார்.    அருண் ஜெட்லி நன்றாகத்தான் மிரட்டி இருக்கிறார்.

ஏன் எட்டு மாதங்களாக தீர்ப்பு சொல்லாமல் இருந்தீர்கள் என்று யார் உச்ச நீதிமன்றத்தை கேட்பது    ?

தமிழகத்தில் நடக்கும் பல அரசியல் பிரச்னைகளுக்கு , தீர்ப்பு அப்போதே வந்திருந்தால் , தீர்வு கிடைத்திருக்கும்.

தமிழகத்தின் தலை எழுத்தையே மாற்றி அமைக்கும் தன்மை கொண்ட மிக முக்கியமான வழக்கில் உச்ச நீதி மன்றம் நடந்து கொள்வது சகிக்கவே முடியாத ஒன்று.      யார் கேட்பது?

மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் தகுதியை உச்ச நீதி மன்றம் இழந்து வருகிறது.     நாட்டுக்கே தலைகுனிவு.

நம் தலையெழுத்தை நிர்ணயிக்கும்  அமைப்புகள் எல்லாமே சுய நலமிகளாக இருக்கிறார்களே?

எது வேண்டுமாளாலும் செய்!  அதை உடனே செய்!  ஆளுநரே  தமிழகத்தை  வேட்டைக்காடாக்காதே!!!

ஜல்லிக்கட்டை நடத்துவதில் உறுதி என்கிறாரே ஓ பி எஸ் எப்படி நடத்துவார் ??

இன்னும்  மூன்று நாளில்  பொங்கல்.

உச்ச நீதி மன்ற தடை நீங்கவில்லை.  மத்திய அரசுக்கு மாநில அரசும் பல கட்சிகளும் வேண்டுகோள் வைத்து  விட்டார்கள்.

உச்ச நீதி  மன்றம்  தடையை விலக்கி கொள்ள தேவையான சட்டத் திருத்தத்தை மத்திய அரசு செய்யாமலேயே வெறும் வாய் மூலமான பொய் வாக்குறுதிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

காட்சிப் படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை விலக்க தயாராக இருப்பதாக கூறும்  மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை   ஏன் நீக்கவில்லை?

நீக்கி விட்டால் மட்டும் உச்ச நீதி மன்றம் தடையை விலக்குமா என்பது வேறு .      ஆனால் விலக்காமலேயே வெறும் அரசாணை மூலமே நடத்துவோம் என்று ஒரு நிலை  எடுக்க வேண்டிய காரணம் என்ன?

வஞ்சக மத்திய அரசு  சொல்வது  வேறு செய்வது வேறு ?      ஒரு பக்கம்  ஆதரவு மக்கள் வெறுப்பிலிருந்து தப்பிக்க.    மறுபுறம் நீதிமன்ற தடை நீடிக்க வகை செய்து எதிர்ப்பு.    இந்த இரட்டை  நிலை  தான் இப்போது பிரச்னை.

மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்.      ஏக இந்தியாவில் தனித்த எதுவும் இயங்கக் கூடாது.    இதுதான் மத்திய அரசின் திட்டம்.

தடையை மீறி ஏறு தழுவல் என்ற பெயரில் விளையாட்டை நடத்த வீரர்கள் தயாராகிவிட்டார்கள்.

தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பதுதான் கேள்வி?

ஏற்கெனெவே ஜல்லிக்கட்டு வேண்டாம்  என்று போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி  நடத்தி தன் இருப்பை காட்டிக் கொண்டிருக்கிறார் காவல் துறை கண்காணிப்பாளர் .

காவல் துறையை மீறி நடத்தினால் அது நீதிமன்ற அவமதிப்பாகி விடும்.     அதையும்  எதிர் கொன்வோம் என்ற நிலை எடுக்கலாம்.  அது நீதிமன்றத்தையே திணறடிக்கும்.      காவிரி நீரை திறக்க முடியாது .  நீதிமன்ற அவமதிப்பை சந்திக்கிறோம் என்று  சவால் விடுத்த கன்னட அமைப்பினர் மீது கர்நாடக அரசு மீது உச்ச நீதி  மன்றம் என்ன நடவடிக்கை எடுத்தது. ?

உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு பிறகே ஜல்லிக்கட்டு குறித்து முடிவெடுக்கப்  படும் என்கிறார் மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே .           உச்ச நீதி  மன்றம் இப்போது எதுவும் தீர்ப்பு வழங்கப் போவதில்லை.

தமிழக அரசு என்ன செயப் போகிறது?    இதுதான் எல்லார் மனதிலும் உள்ள கேள்வி?

நடத்தி முடித்த பின் கைதா?         நடத்தும் முன்பே கைதா ?

நடத்த விட்டு மக்கள் மனதில் இடம் பிடிக்க போகிறதா?  கைது செய்து தானே வில்லனாகப் போகிறதா?

 

காலில் விழும் கலாசாரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த ஸ்டாலின் !!!

நீண்ட நாட்களாக தமிழர்கள் நெஞ்சை நெருடிக்கொண்டிருந்த கேள்விக்கு பதில் அளித்து  விட்டார் ஸ்டாலின்.    தி மு க வின் செயல் தலைவர்.

அ தி மு க வின் கலாச்சாராம் காலில் விழுவது என்பது கசப்பான உண்மை.    அதை அந்த தலைமை ரசித்தது கொடுமை.     ஊடகங்கள் அதை கண்டித்து எழுதாதது அதை விட கொடுமை.

கிட்டத்தட்ட இவர்கள் இப்படித்தான் என்றாகி விட்ட நிலையில்  கலைஞரின் உடல் நலக குறைவுக்குப் பிறகு செயல் தலைவர் ஆகி விட்ட ஸ்டாலின் எவரும் இனி என் காலின் விழக் கூடாது என்று விடுத்துள்ள அறிக்கை தமிழர்கள் நெஞ்சில் பால் வார்த்திருக்கிறது.

இனி மற்றக் கட்சிகளிலும் மற்றவர்கள் இகழ்வார்களே என்பதற்காகவாவது காலில் விழும் கலாச்சாரத்தை பகிரங்கப் படுத்த மாட்டார்கள்  என்ற நம்பிக்கை பிறக்கிறது.

பெற்றோர்  பெரியவர் காலில் விழுந்து வாழ்த்துப் பெறுவது தமிழர் பண்பாடுதான்.

அதை வயது வித்தியாசம் பார்க்காமல் இடம் என்ன என்று கூட பார்க்காமல் காலில் விழுந்து அதற்கு மாற்றாக பலன்களை பேரும் நோக்கத்தோடு செயல்படுவது அடிமைத்தனம்.

யாராவது பேச மாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருந்த வேளையில் சரியான  நேரத்தில் பேசி ஒரு அவமானகரமான செயலுக்கு முற்றுப் புள்ளி வைத்த ஸ்டாலின் பாராட்டுக் குரியவர்.

மதம் ,இனம் , மொழி, சாதி பெயரில் வாக்குக்கேட்டால் செல்லாது-உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படி அமுலாகும்???

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு  123 ( 3 ) ன் படி மதம் , சாதி , இனம், மொழி, அடிப்படையில் வேட்பாளரோ அவரது அங்கீகாரம் பெற்ற ஏஜெண்டோ வாக்குகளை கோரினால் அவரது செயல் ஊழல் எனப்படும் செயலாக கருதப் பட்டு அவரது தேர்தல்  செல்லாது என அறிவிக்கப் படும்  என்று உச்ச நீதி  மன்ற ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சில் நான்கு நீதிபதிகள் பெரும்பான்மை தீர்ப்பில் தீர்ப்பு வழங்கி யது.

இந்த தீர்ப்பு செல்லுமா என்பதை விட எப்படி அமுல்படுத்துவார்கள்    என்ற கேள்வி அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

கட்சிகளே அப்படித்தான் இயங்குகின்றன.    அகாலி தளம் சீக்கியர்களை குறிக்கிறது.  கணக்கில் அடங்கா முஸ்லிம் கட்சிகள். அதே அளவில் கிறிஸ்தவ கட்சிகள். இந்து மகா சபா , இந்து  ஏக்தா  அந்தோலன் கட்சி , போன்ற மதத்தை பெயரிலேயே கொண்ட கட்சிகள் தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெற்றவை.

திராவிட ,வங்காள,மகாராஷ்டிரா  கன்னட  என்றெல்லாம் பிராந்தியங்களின் பெயர்களில் கட்சிகள்.

மிசோ,நாகா , தெலுகு தேசம் என்று பிரதேச கட்சிகள்.

இவைகளெல்லாம் இந்த தடை செய்யப் பட்ட பெயர்களிலேயே இயங்குகின்றன.   இவைகளை  தடை செய்ய தேர்தல் கமிஷனால் முடியுமா?

எந்த தேர்தல் வழக்கும் அடுத்த தேர்தல் முடியும் வரை முடிந்ததில்லை.

தேர்தல் வழக்குகள் எல்லாம் எந்த விளைவையும் இதுவரை ஏற்படுத்தியதில்லை.

ஒன்றிரண்டு இருந்தாலும் அவைகள் எல்லாம் காலத்தில் செய்யப் பட்டவை அல்ல.

நியாயம் என்றளவில் மட்டுமே இந்த தீர்ப்புக்கு மரியாதை இருக்கும்.   நியாயத்தை எப்படி அமுல்படுத்துவது என்பதே கேள்விக்குறி?

வேட்பாளருக்கு சம்பந்தமில்லாமல் யாரோ ஒருவர் அப்படி பிரச்சாரம் செய்தால் அது எப்படி வேட்பாளரை பாதிக்கும் என்பதற்கும் விடையில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக   மதம்  சாதி இனம், மொழி போன்றவை மக்கள் மத்தியில் பயன்பாட்டில் உள்ளவை.     அவை  சம்பந்தமாக ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றன. அவைகளை விவாதிப்பதிலும் அவைகளுக்கான தீர்வுகளை முன் வைப்பதும் எப்படி தவறு ஆகும்?    அவைகளை நான் தீர்த்து  வைப்பேன் என்பதும் கூட அவை  சார்ந்த பிரச்சாரங்கள் தான். அது எப்படி ஊழல் ஆகும்?

இப்படி விடை கிடைக்காத , பல கேள்விகளை இந்த தீர்ப்பு எழுப்பியிருந்தாலும்  , அமுல் படுத்துவது பற்றிய சந்தேகங்களுக்கு விடை தெரியா விட்டாலும்  , இப்படி ஒரு தீர்ப்பு இருப்பது நல்லது என்பதே பெரும்பான்மை மக்களின் விருப்பம்.

இந்திய தண்டனை சட்டம் இருக்கும்போதுதானே இத்தனை குற்றங்களும் நடக்கின்றன.   அதற்காக சட்டம் வேண்டாம் என்று விட்டு விட முடியுமா?

அதைப்போலவே இந்த தீர்ப்பும் இருக்க வேண்டியதே!!!

 

தந்தையை விரட்டிய தனயன் அகிலேஷ் யாதவ் -அதிகார போட்டியில் உறவுகளுக்கு மதிப்பில்லை !

சமீபத்தில் நடந்த அதிகாரப்போட்டியில் யாரும் எதிர் பாராதது முலாயம் சிங் யாதவை அவரது மகனே வீழ்த்துவார்  என்பது.

கட்சியைக் காப்பாற்ற தந்தையை  விலக்கி வைத்து  உள்ளதாக நியாயம் கற்பித்தாலும் அது தொண்டர்கள் முன் எடுபடுமா என்பது இனித்தான் தெரிய வரும்.

உத்தர பிரதேசத்தில் நடந்திருக்கும் இந்த அரசியல் வரலாறு பலமுறை கண்டதுதான்.

மாமனார் என் டி ராமராவை தோற்கடித்து விட்டுதான் முதல்வரானார் சந்திரபாபு நாயுடு.

சொந்த சகோதரனை கொன்று விட்டுத்தான்  ஆட்சியை பிடித்தான் அவுரங்கசீப் .

ஆனாலும் சோஷலிச கருத்துக்களை அடி மட்டத் தொண்டன் முதல் வரை பாய்ச்சி வைத்திருக்கும் சமாஜ்வாடி கட்சி இந்த முறை  ஆட்சியை இழக்குமானால் அது பா ஜ க ஆட்சிக்கு வர வழி வகுக்கலாம் .

அது உள் கட்சி குழப்பங்களால்  தான் முடியும் என்பது  நிரூபணம் ஆகியிருக்கிறது.

 

 

வங்கிகளின் வாராக் கடன் 4.76 லட்சம் கோடி – யார் தலையில் மத்திய அரசு சுமத்தும்?

பெரு முதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்து விட்டு அதை  சாமானியர்களின் தலையில் சுமத்தவே இந்த செல்லாக்காசு அறிவிப்பு என்று மத்திய அரசை குற்றம் சொல்லி வருகிறார்கள்.

அதை மெய்பிக்கும் வகையிலேயே மத்திய அரசின் அரசின் நடவடிக்கை இருக்கிறது.   ஆண்டுக்கு ஆண்டு வாராக் கடன்களின் மதிப்பு உயர்ந்து  கொண்டே போகிறது.

14 பொதுத்துறை வங்கிகள் கடந்த 2015-16  நிதியாண்டில் இழப்பை சந்தித்துள்ளன.    இழப்பை சரிக்கட்ட   கடன்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருவதால் நிலைமை எவ்வளவு சீராகும் என்பது          தெ ரியவில்லை.

மதிப்பீடுகளின் படி இந்த வராக்  கடன் அளவு அடுத்த ஆண்டில் இன்னும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.   2017 மார்ச்  மாதத்திற்குள்      9.8 % அளவு அதிகரிக்கும் என்று தெரிகிறது.

அடுத்த சில காலாண்டுகளில் பல பொதுத்துறை வங்கிகள் லாப பாதைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பு.

வாராக் கடன்களின் அளவுக்கும் செல்லாக் காசு நடவடிக்கைக்கும் தொடர்பு  இருக்கிறது.

பெருந்தொகை    கடன் காரர்கள் பட்டியலை அரசு வெளியிட்டால்தான் உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.

தமிழக மீனவர் இந்தியர் இல்லை என்கிறதா இந்திய அரசு?

தமிழக மீனவர்களின் படகுகள் 119 ஐ  பறிமுதல் செய்து வைத்திருப்பதை அரசுடமை ஆக்கப் போவதாக  இலங்கை அமைச்சர் மஹிந்த சமர வீரா அறிவித்திருப்பது  மிகவும் கண்டனத்துக்கு உரியது .

தன் நாட்டு மீனவர்களை இலங்கை அரசு துன்புறுத்துவதை இந்திய அரசு பெரிதாக எடுத்துக் கொண்டதே  இல்லை.        பிரச்னை பெரிதானதால்     தலையிட்டு  இப்போதெல்லாம் சுட்டுக் கொல்லாமல் இருப்பதே தனது சாதனை என்று இந்திய அரசு கருதுகிறது.

ஆனால் படகுகளை பிடித்து வைத்து கொள்ளுங்கள் என்று சுப்ரமணியன் சாமி சொன்னார்.   அது அரசின் கருத்தல்ல என்று இந்திய அரசு மறுக்க வில்லை.

இந்திய மீனவர்கள் மீன்  பிடிப்பு தொழிலை கைவிட வேண்டும் என்றே இந்திய  அரசு விரும்புகிறது .

தனது மீனவர் எல்லை தாண்டக் கூடாது என்று சொல்கிற அரசு எப்படி எல்லையை கச்சதீவில்  தாரை வார்த்தது.?

அந்தக் கேள்விக்கு பதில் தராமல் இந்தப் பிரச்னைக்கு எப்படி விடை கிடைக்கும்.?

இந்திய மீனவர் படகுகளை இந்திய அரசு மீட்டுத் தர நடவடிக்கை எடுக்காவிட்டால் இலங்கை அரசின் நடவடிக்கைக்கு இந்திய அரசும் உடந்தை என்றே பொருள்.

வரலாற்றில் இடம் பேரும் இந்த வஞ்சக செயலுக்கு விலை கொடுத்தே தீர வேண்டும்.