Home Blog Page 94

சேகர் ரெட்டியிடம் 120 கோடி பறிமுதல்!! ஓ பி எஸ் க்கு மிரட்டலா??!!

சேகர் ரெட்டி ஓ பி எஸ் சின் பினாமி என்று நம்பப் படுகிறார்.

திருப்பதி தேவஸ்தான டிரஸ்டியாகவும்  இவர் இருக்கிறார்.       தமிழ் நாட்டு அரசியலில் இவர் பெரிய அளவில் ஒப்பந்த வேலைகளை செய்து வருகிறார்.

வீராணம் ஏரி தூர வாரும் வேலையையும் இவர்தான் பார்த்து வருகிறாராம் .

இப்போது தமிழ் நாட்டு முதல்வர் ஆக  ஓ பி எஸ் பொறுப்பு எடுத்துக் கொண்டபிறகு கட்சியின் பொது செயலாளராக யார் வருவது என்ற பிரச்னையில் மத்தியில் ஆளும் பா ஜ க அரசு மிகவும் அக்கறை  எடுத்துக் கொண்டு தான்  விரும்பும் நபரே வர வேண்டும் என விரும்புகிறது.

சசிகலா வருவதை பா ஜ க விரும்பவில்லையாம்.       சங்கப் பரிவாரங்கள் விரும்ப வில்லை. ஆனால் ஓ பி எஸ் சசிகலாவுக்கு ஆதரவாக இருக்கிறாராம்.    எனவே அவரை மிரட்டி  பணிய வைக்க பா ஜ க அரசு முடிவு எடுத்து  அதன் விளைவுதான் ரைடு என்கிறார்கள்.

120  கோடி ரூபாய் பழைய நோட்டுகளும்  அதில்      10  கோடி ரூபாய்க்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகளும்     100  கிலோ தங்கமும் பிடிபட்டிருக்கின்றன.

மோடியின் செல்லாத நோட்டு உத்தரவு வந்தபின் பணக்காரர்கள் எந்த துன்பமும் படாமல் புதிய நோட்டுகளை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

நடுத்தர வர்க்கம்தான் வங்கிகளில் வரிசையில் நிற்கிறார்கள்.

இது வழக்கமான ஐ டி ரைடு என்று எடுத்து கொள்ள முடியாது.

பா ஜ க என்னதான் விளக்கம் சொன்னாலும் மக்கள்  நம்ப  மாட்டார்கள்.

இனி வரும் தலைவர்கள் ஜெயலலிதா போல திராவிட இயக்கத்தில் இருந்து கொண்டே அதன் ஆணிவேரை வெட்டி எரியும் பணியில் யார் இறங்கத் தயாராக இருப்பார்கள் ?

அ தி மு  க தலைவர்கள்  துணிந்து நிற்பார்களா?     அல்லது பயந்து பா ஜ க விடம் பணிவார்களா ?

 

 

 

 

திராவிடர்களை வென்ற ஆரிய ராணி மறைந்தார்!!! கண்ணீர்க் கடலில் தமிழகம்!!!

ஜெயலலிதா  ………

திரையில் ஒளிவிட்டு மின்னிய நட்சத்திரம் .    சொகுசான வாழ்க்கைக்கு சொந்தக்காரர்.      மெத்தப் படித்தவர்.

ஒளிவு மறைவின்றி தன் வாழ்க்கையை தன் விருப்பத்துக்கு அமைத்துக் கொண்டவர்.   சுய சிந்தனையாளர்.       எவரையும் ஏமாற்றாமல் தான் மட்டுமே ஏமாந்தவர்.

பிடிவாதக்காரர்.     தான் செய்வது சரியோ தவறோ தன்  மனதுக்கு சரி என்று பட்டால் தொடர்ந்து அதையே செய்பவர்.

எம்ஜியாரின் வாரிசாக தமிழக அரசியலில் நுழைந்தார். எம்ஜியார் திராவிட கட்சியின் உறுப்பினர்.  பார்ப்பனீய ஆதிக்கத்தை எதிர்ப்பதும் சுயமரியாதை கொள்கைகளை கடைப் பிடிப்பதும் அந்த இயக்கத்தின் கொள்கைகள் என்பதால் அதற்கு எதிராக எம்ஜியார் செயல்பட்டதில்லை .

பெரியார், அண்ணா  வழியில்தான் எம்ஜியார்  அரசியல் பயணம் அமைந்தது.

ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்ற கொள்கை கொண்ட திராவிட கட்சியில் பார்ப்பனீய  ஆன்மிகத்தை அரசல் புரசலாக பின்பற்றுவார்களே தவிர மிகவும் வெளிப்படையாக அல்ல.

ஆனால் எம்ஜியாரின் மறைவுக்குப்பின் திராவிட கட்சியின் தலைமைப் பீடத்தை பிடித்த ஜெயலலிதா பார்பனீய இந்துத்துவத்தை தன் அளவில் தீவிரமாக வெளிப்படையாக பின்பற்றினார்.       எனவே அவரின் ஆதரவு தேவைப்பட்ட தொண்டர்கள் அவரை பின்பற்றி அதையே வெளிப்படையாக பின்பற்றினார்கள்.     தோழி சசிகலாவும் அவர் வழியில் தீவிர பார்பனிய இந்துத்துவ பக்தரானார்.

பெரியார் பிறந்த நாளில் ஜெயலலிதா மாலை போட்டு  மரியாதை செய்வார்.      அண்ணா பிறந்த நாளில் விழா கொண்டாட அழைப்பு விடுப்பார்.        இட ஒதுக்கீட்டு கொள்கையை பார்ப்பனீயத்தின் விருப்பத்துக்கு மாறாக ஆதரிப்பார்.      கி வீரமணியே ‘ சமூக நீதி காத்த வீராங்கனை’ என்று  பட்டம் கொடுக்கும் அளவுக்கு இட ஒதுக்கீடு கொள்கையை அமுல்படுதினார்.

சாதி, சமய பாகுபாடுகளை தாண்டி விசுவாசம் ஒன்றையே அளவுகோலாக்கி அனைவரையும் அரவணைத்தார்.

எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்ற நோக்கில் அரசின் கஜானாவை ஏழைகளையும் சாமானியர்களையும் நோக்கி திறந்து விட்டார்.

தனது ரத்த சொந்தங்களை நெருங்க அனுமதிக்கவில்லை.     அதனால் அவர் எவ்வளவு சொத்து சேர்த்தாலும் எல்லாம் யாருக்காக என்று மக்களே கேட்க ஆரம்பித்தார்கள்.    அதை ஒரு பொருட்டாகவே மக்கள் பாவிக்க வில்லை.

ஆமாம் நான் பாப்பாத்திதான்  என்று சட்ட மன்றத்திலேயே அறிவித்தவர்.    ஆனால் அந்த அடிப்படையில் யாரையும் இழிவுபடுத்தாதவர்.

துணிவின் பிரதி பிம்பம் அவர்.    விளைவைப் பற்றி கவலைப்படாமல் முயற்சிகளை தொடர்ந்தவர்.

தாய்க்குலத்தின் அளப்பரிய அன்பைப் பெற்றவர்.      ஆணாதிக்க சமூகத்தில்  ஒரு பெண்ணால் அரசாள முடியும் என நிரூபித்தவர்.

அறுபத்தெட்டு வயதில் மறைவார் என யாரும் எதிபார்த்திருக்க மாட்டார்கள்.      எழுபத்து ஐந்து நாட்கள் போராட்டத்துக்கு பின் , அம்மா  , மறைந்து விட்டார்.

மறைவு  கேட்டு மரித்தவர்கள் பலர்.    அந்தளவு மக்கள் மனதில்  இடம்  பிடித்தவர்.

தனக்கென தனி இடம் பிடித்த அவரின் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது.

எதிர்காலம் என்னாகும்?     என்னவானாலும் ஆகட்டும். !

அம்மாவின் ஆன்ம சாந்திக்காக நாடே பிரார்த்திக்கிறது.

சாமியார் மடங்களில் கோவில்களில் கறுப்புப் பணம் மாற்றம் ??!! மோடி என்ன செய்வார்?

ஆறு சதம் மட்டுமே புழங்கும் கறுப்புப் பணத்தை மீட்கப் போகிறேன் என்று மோடி கொண்டுவந்த செல்லாக் காசு திட்டம் பணால் ஆகிக் கொண்டு இருக்கிறது.

ஏழை பாழைகளை கசக்கி  பிழிந்து கொடுமைப் படுதியதைத் தவிர வேறு எந்த சாதனையையும் இந்த திட்டம் சாதிக்கவில்லை.

ஏற்கேனவே ஜன்தன் திட்டத்தில் சேர்ந்தவர்களின் கணக்குகளில் ஒரு லட்சம் கோடிக்கு மேல் சேமிப்பு சேர்ந்திருக்கிறது.     இது எல்லாம் கருப்பு  பணம் என்றால் எப்படி அதை நிருபிக்க முடியும்?

பலவகைகளிலும் கருப்பு பணம் நல்ல பணமாக பதுக்க பட்டு விட்டது.

அதில் முக்கியமாக கோவில், மடங்கள் கருப்பு பணம் பதுக்க பாதுகாப்பான இடங்களாக மாறி வருகின்றன.

ஐம்பது சதம் கமிஷன் கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.

பிரபல சாமியார்கள் முப்பந்தைந்து சதம் கமிஷனுக்கு மாற்றிக் கொடுக்கிறார்கள்.

திருப்பதி, திருச்செந்தூர் , பழனி, கேரளாவின் புகழ் பெற்ற பத்மநாப  சாமி கோவில் போன்றவற்றில் பல கோடி ரூபாய்கள் உண்டியலில் அதிக வருவாய் கிடைத்துள்ளன.   அதுவாவது கள்ளப்பணம் கோவில் காரியத்துக்கு போகட்டுமே என்று போடப் படுவதை ஏற்றுக்கொள்ளலாம்.   ஏனென்றால் எந்த தனி நபரும் ஆதாயம் அடையப் போவதில்லையே?

ஆனால் ஆன்மிக மையங்கள் கருப்பு பணம் மாற்றும் மையங்களாக மாறுவதை எப்படி ஏற்றுக் கொள்வது?

பா ஜ க அரசு இந்து ஆதரவு அரசு என்பதால் கண்டு கொள்ளாமல் இருக்கிறதா?

உச்சநீதி மன்றத்தால் தியேட்டர்களில் திணிக்கப் படும் தேசிய கீத தேசபக்தி ??!!!

சினிமா பார்ப்பதற்கு முன்பு இனிமேல் ரசிகர்கள் எழுந்து நின்று தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தி தேச பக்தியை நிருபித்த பின்தான் படம் பார்க்க முடியும்.

அப்படிதான் உத்தரவு பிறப்பித்திருக்கிறது உச்சநீதி மன்றம்.

1960, 1970  களில் அப்படி ஒரு மரபு கடைபிடிக்கப் பட்டு வந்தது.      தியேட்டர் முதலாளிகள் அதை  அமுல் படுத்த முடியாமல் போனதால் நிறுத்தப் பட்டது.

2015 ல் சென்னை உயர்நீதி மன்றம்  சட்ட ஒழுங்கு கெடும் என்பதாலும் குழப்பம் விளையும் என்பதாலும்  தேசிய கீதம்  கட்டாயமாக ஒலிப்பதற்கு  எதிராக தீர்ப்பளித்தது .

பா ஜ க ஆட்சியில் இருப்பதால் இந்த உத்தரவா?    இயல்பாகவே அவர்கள் இதை வரவேற்பார்கள்.

அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப் பட்ட போது இப்படித்தான் தேசபக்தியை நிரூபிக்க புது புது வழிகளை ஆட்சியில் இருந்தோர் அறிமுகப் படுத்தினர்.

மொரார்ஜி தேசாய் , இந்திரா காந்தி ஆட்சிகாலத்தில் நடந்தவை எல்லாம் மோடி ஆட்சி காலத்தில் வேறு வேறு வடிவங்களில் அமுலாக்கம் பெறுகின்றன.

ரூபாய் நோட்டு செல்லாது என்ற உத்தரவிலும் தங்கத்துக்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டத்திலும்  அதுதான் தெரிந்தன.

இதை எப்படி அமுல் படுத்துவார்கள் என்பதுதான் தெரியவில்லை.

சொலி சொராப்ஜி , ராஜீவ் தவான் போன்ற மூத்த வழக்கறிஞர்கள் இதை கடுமையாக கண்டித்து கருத்து சொல்லி இருக்கிறார்கள்.

தேசிய கோடி தேசிய கீதம்  போன்ற அரசியல் சட்ட இலட்சியங்களுக்கு கட்டுபட வேண்டிய குடிமகனின் கடமையை அரசியல் சட்ட பிரிவு 51  விதிக்கிறது.

ஆனால் ,       இது நீதிமன்றத்தின் வேலையல்ல என்பது முதல் ஆட்சேபணை.

அரசு கொள்கை முடிவு எடுத்து அமுல் படுத்த வேண்டிய காரியத்தை நீதிமன்றம் முன்னெடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது. ?            முன்பே சொல்லப் பட்ட தீர்ப்புகளை சரியாக பின்பற்றியிருக்கிறார்களா?

திரையில்   தேசிய கீதம் பாடப்பட்டு முடிந்தவுடன்  உள்ளே நுழைபவர்கள் எண்ணிக்கைதான் அதிகமாகும்.   கடைசியில் போட்டால் படம் முடியும் முன்பே வெளியே வந்து விடுவார்கள்.   அதைத்தானே முன்காலங்களில் பார்த்தோம்.

தேசிய கீதம் என்பது புனிதமானது.   மரியாதை தர வேண்டிய கடமையை கேளிக்கை கூடத்தில் அமுல் படுத்த முனைந்தால் அங்கே அவமரியாதை நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது?

தியேட்டர் முதலாளிகள் ரசிகர்களை கட்டுப் படுத்த முடியுமா?       நடவடிக்கை எடுப்பது  சாத்தியமா?  இதற்கென ஆட்களை நியமித்தால் அதன் செலவை யார் ஏற்பது?

முல்லிம்கள் இறைவனைத்தவிர யாருக்கும் தலை வணங்க மாட்டோம்  என்பார்கள்.    எழுந்து  நிற்பார்களே தவிர   தலை குனிய மாட்டார்கள்.      அதை அவமரியாதை என்று எடுத்துக் கொள்ள முடியுமா ?

ஏற்கனெவே வந்தே மாதரம் பாடலை தேசிய கீதமாக்க வேண்டும் என்று சிலர் கோரி வருகிறார்கள்.

தாகூர் எழுதிய வங்க மொழிப் பாடலை விட சமஸ்கிருதத்தில் இருக்கும் வந்தே மாதரம் பாடல் தான் தேசிய கீதம் ஆகும் தகுதி பெற்றது என்பவர்கள் அவர்கள்.

இந்திய ஜனநாயகம் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் கோட்பாட்டில் வேரூன்றி இருக்கிறது என்பதை மறந்தால் ஆபத்து ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல, ஒற்றுமைக்கும்தான்.

தேசபக்தி உள்ளத்தில் தானாக ஊற்றெடுக்க வேண்டும்.    இது என் நாடு  என்ற உணர்வு இயல்பாக வர வேண்டுமே தவிர பிறர் சொல்லிக் கொடுத்தோ கட்டாயப் படுத்தியோ வர வேண்டிய ஒன்றல்ல.

இந்த உண்மை உச்ச நீதிமன்றத்துக்கு தெரியாதா?     தனது எல்லை என்ன என்பதை அறியாததா உச்ச நீதி மன்றம். ?

மறுபரிசீலனை செய்யப்  பட வேண்டிய தீர்ப்பு இது.

 

சுரிதார் அணிந்து கோவிலுக்கு வரலாம்-நிர்வாக அதிகாரி; பிராமணர் எதிர்ப்பு??!!

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பெண்கள் சுரிதார் அணிந்து வரலாம் என்று கோவில் நிர்வாக அதிகாரி உத்தரவிட்டார்.

நிர்வாக கமிட்டி கூடி நிர்வாக அதிகாரியின் உத்தரவை  ரத்து செய்து உத்தரவிட்டது.

பெண்கள் சுரிதார்  அணிந்து வந்தால் அதன் மேலே ஒரு வேட்டியை சுற்றிக்கொண்டு கோவிலில் நுழைந்து வழிபடும் அவலம் நடந்து கொண்டு இருக்கிறது.

உலகம் எத்தனை மாறினாலும் உளுத்துப் போன சம்பிரதாயங்களை காரணம் காட்டி மாற்றங்களுக்கு தடை விதிக்கும் பத்தாம் பசலிகள் ஆட்சிதான் இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது.

ரியா ராஜி என்ற பெண் பக்தர் வக்கீல் இந்த உடை மாற்றம் கோரி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

நிர்வாக அதிகாரியின் உத்தரவு  உயர் நீதி மன்ற உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டது.  இதற்கெல்லாமா நீதி மன்றம் செல்ல வேண்டும் என்றால் அதுதான் உண்மை.

தேவஸ்வம் அமைச்சர் நிர்வாக அதிகாரியின் உத்தரவு சரியே என்று சொன்னாலும் பிராமண சபாவை சேர்ந்தவர்களும் அவர்களால் தூண்டி விடப் பட்டவர்களும் சத்தம் போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மற்றொரு வழியில் பெண்கள் சுரிதார் அணிந்து கோவிலுக்குள் நுழைந்து வழிபடுவதை யாரும் தடுக்க வில்லை.

பக்தர்கள் எனப்படுவோர் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் சுய நலமிகளின் செல்லாத கட்டளைகளுக்கு பணியும் வரை இந்த பத்தாம் பசலிகளின் கோணங்கித்தனம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

கருணாவுக்கு சிறை !! துரோகத்துக்கு சிங்களர் பரிசு !!!???

ஈழப்போர் உச்சத்தில் இருந்தபோது விடுதலை புலிகளின் கிழக்கு மாகாணத் தலைவர்   விநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற கருணா அம்மான் , துரோகியாக மாறி புலிகளை காட்டிக் கொடுத்து சிங்கள எஜமானர்களின் விசுவாச மிக்க   ஏஜெண்டாக மாறிப் போனார்.

அவரை எம்பியாகவும் அமைச்சராகவும் ஆக்கியது  ராஜபக்சேயின் ஆட்சி.

ஆட்சியும்  மாறியது. காட்சியும் மாறியது.

சிறிசேன அதிபராக வந்ததும்   பழைய தமிழ் துரோகிகளை வலுவாக வைத்திருக்க விரும்பாமல் அவர்களை முடக்கும் முடிவில் , விசாரணைக்கு அழைத்து கைது செய்து விட்டது .

அமைச்சராக இருந்தபோது வாகன பயன்பாட்டில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு.

கைது செய்ய  ஏதோ ஒரு சாக்கு.

துரோகிகளுக்கு லஞ்சப் பணம் கொடுத்தீர்களே அது எந்த சட்டத்தின் கீழ். ?

ஆக பயன்பாடு  முடிந்ததும் துரோகிகள் வலுவோடு இருப்பது என்றும் ஆபத்து என்பதால் அவர்களை முடக்கும் முடிவுக்கு  சிங்களர் அரசு வந்துள்ளது.

போர் முடிந்து ஏழாண்டுகள் ஆகியும் அரசியல் தீர்வு பற்றி துரோகிகள் பேசவில்லை என்பது  குறிப்பிடத் தக்கது.

துரோகிகளுக்கு எச்சரிக்கை.!!!

 

மாவீரர் தின வீர வணக்கம் !!!

இந்த நாளில் மேதகு பிரபாகரனின் வீர உரையைக் கேட்க உலகமே ஆவலுடன் காத்திருந்த காலமொன்று இருந்தது.

அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயங்கள் எல்லாம் எழுச்சி பெற காரணமாக இருந்த உரை அது.

ஆயுதங்கள் நாங்கள் எடுத்தவை அல்ல.  எங்கள்மீது திணிக்கப் பட்டது என்பதை அவர் அடிக்கடி நினைவூட்டுவார்.

அறப்போராட்டங்கள் எல்லாம் சிங்கள இனவாதிகள் முன்பு செயல் இழந்தன.   உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் சிங்களவர்கள்..

போர் முடிந்து ஏழாண்டுகள் ஆகியும் இன்னமும் அரசியல்  தீர்வைப் பற்றி பேசக் கூட அங்கு யாரும் தயாராக இல்லை.

மாவீரர் தினம் தடை செய்யப் பட்டிருக்கிறது.      அதையும் மீறி யாழ்ப்பாணத்தில் மக்கள் கொண்டாடி இருக்கிறார்கள்.

இலங்கைத்தீவு முழுதும் இன்று நிலவும் மயான அமைதி நிரந்தரமல்ல.     என்று தமிழர்கள் சம உரிமை பேச ஆரம்பிக்கிறார்களோ அன்று அவர்கள்மீது மீண்டும் வன்முறை கட்டவிழ்த்து விடப்படும்.

உலகம் தலையிட்டு  எந்த நாட்டிலும் விடுதலை கிடைத்ததில்லை.

போராடுபவ ர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பரிசு அது.

மீண்டும் அறவழிப் போராட்டத்தை துவங்கியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ஈழத் தமிழினம்.

போராட வேண்டிய மன நிலையை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டிய நாள் இது.

பிரபாகரனுக்கு தர வேண்டிய மரியாதையை தமிழினம் இன்னும் தரத் தொடங்க வில்லை.

அந்த நாள்தான் தமிழர் எழுச்சி பெற்றார் என்று உலகம் உணரத் தொடங்கும் நாள்.

80000 கோடி கடன்காரர்கள் பட்டியலை வெளியிட வேண்டாம்; உச்ச நீதி மன்றம்

ஒருசில லட்சங்கள் கடன் வைத்திருந்தாலே பத்திரிகைகளில் வெளியிட்டு அவமானப் படுத்துகிறது வங்கித் துறை.

ஆனால் 80000      கோடி ரூபாய் வாராக் கடன் வைத்திருப்போர்   57    பேர்.    அதாவது   சராசரியாக     ஒருவரின் பாக்கி       1403          கோடி .         பட்டியலை  ரகசியமாக உச்சநீதிமன்றத் திடம் கொடுத்த  ரிசர்வ் வங்கி அதை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது.

ஆரம்பத்தில் ஏன் பட்டியலை வெளியிட மறுக்கிறீர்கள் ஏன்  பொது மக்கள்  உண்மையை தெரிந்து கொள்ளக் கூடாது என்றெல்லாம்      கேள்விகள் கேட்ட நீதிபதிகள் திடீரென்று தங்கள் நிலையை மாற்றிக்கொண்டு , பட்டியலை வெளியிடுவதால் என்ன நடந்து விடும்  என்று கேள்வி கேட்டு விட்டு அதைவிட ஏன் இப்படி வாராக் கடன் உருவாகிறது என்று ஆராயுங்கள் என்று அறிவுரை சொல்லிவிட்டது .

இவர்கள்  பெயர்களை வெளியிடுவதால் பொதுமக்களுக்கு என்ன ஆகப போகிறது என்று வேறு கேள்வி  கேட்டது உச்ச நீதி மன்றம்.

பொதுமக்களுக்கு ஏன் தெரியக்கூடாது என்பதற்கு பதில் ஏதும் இல்லை.

ரிசர்வ் வங்கியும் சரி உச்ச நீதி மன்றமும் சரி எல்லாமும் பெரு முதலாளிகள் நலன்களை பாது காப்பதில் மிகவும் அக்கறை காட்டுகிறார்கள்.

எந்தப் பெரு முதலாளியும் கடன் காரணமாக வாழ்விழந்தார் என்று சொல்ல முடியாது.

வங்கி கடன் போக தனி வாழ்க்கைக்கு  தேவையான சொத்தும் வருவாயும் ஏற்பாடு செய்து கொள்கிறார்கள்.

ஒரு கடன் வாராக் கடன் ஆனால் அதை ஏன் இப்படி ஆனது என்று ஆய்வு செய்துதான் ஆக வேண்டும்.   அது வேறு.   ஆனால்   பெரு முதலாளிகள் கடன்  வேறு சிறு வணிகர்கள், விவசாயிகள் , கடன் வேறு என்று பாகு படுத்தி பார்க்க கூடாது.

இப்படி இருந்தால் மத்திய அரசும் உச்சநீதி மன்றமும் இருப்பது மேல் தட்டு வர்க்கத்தினர் நலனை பாதுகாக்கவே  என்பதாகிவிடும்.

உச்சநீதி மன்றத்தின் பார்வை மாற வேண்டும்.

 

வங்கிகள் பான் கார்டுகள் வழங்கட்டுமே ??!!

மலையைக் கிள்ளி எலியைப் பிடிப்பது போல் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாதது ஆக்கி கறுப்புப் பணத்தை கட்டுப்  படுத்த நினைக்கிறார் பிரதமர் மோடி.

ஜ ன்   தன் யோஜனா என்ற திட்டத்தின் மூலம் இருபத்தி ஐந்து கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு துவங்கியதை சாதனை என்றார்கள்.

இவர்கள்  அனைவரும்  சாமான்ய மக்கள். .  இவர்கள் பான் கார்டு பயன் பாடு பற்றி இதுவரை அறியாதவர்கள்.

அவர்கள் கணக்கில் இதுவரை பணம் இல்லாமல் இருந்து இப்போது பல லட்சக்கணக்கில் டிபாசிட் ஆவது யார்மூலம் என்று  விசாரிக்கப் போகிறார்களாம்.

வங்கி கணக்கை ஆரம்பிக்கும்  போது பெறும் எல்லா தகவல்களை வைத்து ஏன் வங்கிகளே தங்கள் பொறுப்பில் அவர்களுக்கு பான் கார்டுகளை வழங்க கூடாது?   அதற்கு ஒரு கட்டணம் பெற்றுக் கொள்ளட்டும்.

நோக்கம் குறிப்பிட்ட  தொகை களுக்கு மேல் வங்கிப் பரிவர்த்தனை விபரங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு   தெரிய  வேண்டும்.

ஏழைகளை கசக்கிப் பிழியாமல் அரசு தனக்கு வேண்டிய விபரங்களை அவர்களுக் கு   பான் கார்டுகளை வழங்கி  அதன் மூலம் தங்களுக்கு வேண்டிய விபரங்களை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே?!!

 

 

ஓட்டுக்கு பணம் வாங்க ஏங்கிய மக்கள் !!!

ஒட்டுக்கு  விலை இப்போது இரண்டாயிரம்.

தஞ்சாவூர் , அரவாக்குறிச்சி, திருபரங்குன்றம் இடைத்தேர்தல்கள்  தற்கால அரசியல் இனி எப்படி மாறும் என்பதற்கு முன்னோட்டம்.

சகட்டு மேனிக்கு ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் விநியோகித்தது அ தி மு க.

மாற்று கட்சிக்காரன் என்று பார்க்கவில்லை.        கொடுக்கிறோம் முடிந்தால் போடு என்று கொடுத்து விட்டு போய்க்கொண்டே  இருந்தார்கள்.

எந்த இடங்களிலும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை எதிர்த்து யாரும் குரல் எழுப்ப வில்லை.

இவர்கள் எந்த முகத்தோடு பணம் கொடுத்தவன் ஊழல் செய்தால் கண்டிக்க முடியும்?

ஜனநாயகத்துக்கு நம் மக்கள் தகுதி படைத்தவர்கள் தானா?

யார் குற்றவாளிகள்?   பணம் கொடுத்தவர்களா ?   வாங்கியவர்களா?

ஒரு மாதம் முன்பே பிரச்சாரம் என்ற பெயரில் வெளி மாநிலத்தவர்   டேரா போடுவதை தடுக்க  வேண்டும்.

ஊர் பார்க்க ஜனநாயகம்  நடுரோட்டில் பட்டப் பகலில் கற்பழிக்கப் படுகிறது.

மக்கள் என்று சொல்லப் படும்  நடமாடிகள் கண்டும் காணாதது போல கடந்து போய்க்கொண்டிருகிரார்கள்..              காவல்துறை உள்பட.

நல்ல ஜனஜாயகம்.