Home Blog Page 95

டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு திட்டம் நிரந்தர ரத்து!

டெல்டா பகுதியில் நிலக்கரி படுகை மீத்தேன் திட்டம் நிரந்தரமாக நிறுத்தப் படுவதாக பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.

இதேபோல் ஷேல் காஸ் எடுக்கும் திட்டமும் கைவிடப் பட வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

விவசாயிகளின் ஒப்புதல் பெற்று மீத்தேன் எடுக்கப் படும் என்று அறிவித்தவர்தான் இந்த பிரதான்.

விவசாயிகள் போராட்டம் அதிகமாகி  நிலங்களை கையகப் படுத்த முடியாது என்று தெரிந்த  பின் இப்போது கைவிடுகிறார்கள்.

அதேபோல் ஓ என் ஜி சி நிறுவனமும் தனது செயல் பாட்டை நிறுத்திக் கொண்டால்தான் விவசாயிகள் நிம்மதியாக வாழ முடியும்.

தமிழ்நாட்டில் சுமார் 35  ஆயில் மற்றும் காஸ் வயல்களில் இருந்து நாள் ஒன்றிற்கு  700    டன் ஆயிலும் , 3.8  மில்லியன் கியூபிக் மீட்டர் இயற்கை வாயுவும் இந்த நிறுவனம்  எடுக்கிறது.

இதில் எவ்வளவு தமிழ் நாட்டுக்கு கிடைக்கிறது ,தமிழர்களுக்கு என்ன நன்மை என்றால்  ஏமாற்றம்தான்.

இந்த நிறுவனம் வெளியில் சொல்லாமல் மீத்தேன் ஆய்வை நடத்தியது என்று செய்திகள் வெளியாயின.

போராட்டங்கள் வெடித்தபின் தானாகவே நிறுத்திக் கொண்டார்கள்.   எதையும் மக்களிடம் வெளிப்படையாக விபரங்களை தெரிவிக்காமல் ரகசியமாக வைத்துக் கொண்டு விவசாயிகள்  வாழ்வை  பாழடிப்பது என்ன நியாயம்.

பெட்ரோல் தேவைதான்.    அதை தடையின்றி கிடைக்கும் இடங்களில் இருந்து பெற்று பயன் படுத்த வேண்டுமே தவிர உள்நாட்டு விவசாயத்தை பாழடித்து யாரை வாழ வைக்கப் போகிறீர்கள்?

எத்தனை ஆண்டுகளுக்கு இந்த எண்ணை வயல்கள் பயன் பாட்டில் இருக்கும் அதன் பின் மேற்பரப்பில் உள்ள விவசாய நிலங்களின் தன்மை எவ்விதம் மாறும் என்பதைப்  பற்றி விவசாயிகளுக்கு தெரியப் படுத்த பட்டிருக்கிறதா?

விளைவுகளை அவர்களிடம் கொண்டு செல்ல வேண்டிய கடமை அரசுக்கு  இருக்கிறதா இல்லையா?

தாங்களாகவே  தெரிந்து கொள்ள அவர்கள் விஞ்ஞானிகள் அல்லவே?

ஒ என் ஜி சி நிறுவனத்தின் செயல்பாடுகள்  விவசாயிகள் மத்தியில் விபரங்களோடு விவாதிக்கப் பட வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

 

 

 

2000 ரூபாய் நோட்டில் இந்தி எண் அரசியல் சட்டத்துக்கு முரணானது!!!

அரசியல் சட்டத்தின் பிரிவு  343  மத்திய அரசின் அலுவல் மொழி பற்றியது.    அது  தெளிவாக அதிகாரபூர்வமாக சர்வதேச இந்திய எண்களைத் தான் பயன் படுத்த வேண்டும் என்று கூறுகிறது.     (The official language of the Union shall be Hindi in Devanagari script .   The form of numerals to be used for the official purposes of the Union shall be the international form of Indian numerals.   )

இதுவரை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ரூபாய் நோட்டுகளில் அனைத்து நோட்டுகளிலும் சர்வதேச எண்களைத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறது.

இப்போது மோடி வெளியிட்ட ஐநூறு ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்கு பிறகு வெளியிடப்பட்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளில் இந்துஸ்தானி எண் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதுவும் தவறாக அச்சிடப்பட்டுள்ளது வெட்கக் கேடானது. என்னதான் அவசரம் என்றாலும் இப்படியா ரூபாய் நாட்டிலேயே தவறு இடம் பெற அனுமதிப்பார்கள்?

பதினைந்து  மொழிகளில் எழுதப் பட்டுள்ளது. ஆறாவதாக இந்தி எழுத்தில் ” தோ ஹஜார் ருபயா ‘ என்று இருப்பதற்கு பதிலாக ‘ தோன் ஹஜார் ருபயா ” என எழுதப் பட்டிருக்கிறதாம்.

இந்த அவசரம் எதை க் காட்டுகிறது.     மற்ற பிரச்னைகளையும் ஆழமாக சிந்திக்க வில்லை என்பதைத்தானே ?         2000 ரூபாய் நோட்டுகளை வைக்க கூடிய அளவு ஏ டி எம் மையங்கள் வடிவமைக்கப் படவில்லையாம்.      போதிய அளவு நூறு ரூபாய் நோட்டுகள் இல்லையாம்.

எல்லா வாய்ப்புகளையும் அனுமானித்து மக்களுக்கு துன்பம் வரா வண்ணம் ஒரு திட்டத்தை அமுல் படுத்த  கடமைப் பட்டவர்கள் அதில் பெருமளவு தோல்வியடைந்து விட்டார்கள் என்பதே உண்மை.

தமிழ் உள்பட இந்திய மொழிகள்  பெரும்பாலானவற்றிற்கு தனி எண்கள் உண்டு.   அவை எல்லாவற்றையும் நோட்டில் கொண்டு வர முடியாது என்பதால்தான் சர்வதேச எண்ணை அரசியல் சட்டம் வகுத்துள்ளது.

அதே நேரத்தில் பதினைந்து மொழி வார்த்தைகளும் களும் இடம் பெற்றுள்ளன என்பதை மறந்து விடக் கூடாது.

தவறான இந்தி வார்த்தையை உள்ளடக்கிய இரண்டாயிரம் நோட்டு செல்லுமா என்பதே கேள்விக்குறி???

 

நடுத்தர மக்களை வதைத்த மோடி!!!???

வெளிநாடுகளில் பதுக்கி வைத்த கருப்பு பணத்தை திரும்ப கொண்டு வந்து எல்லா இந்தியர் கணக்கிலும் பதினைந்து லட்சம் போடுவேன் என்று உறுதியளித்து ஆட்சிக்கு வந்த மோடி அதை காற்றில் பறக்க விட்டு விட்டார்.

அரசு அனுமதி இல்லாமல் வெளி நாடுகளில் பணம் போடுவோரின் இந்திய குடியுரிமை பறிக்கப்  படும் என்ற அறிவிப்பு செய்தால் போதும் எவருக்கும் வெளி நாடுகளில் பணம் போடும் எண்ணமே வராது.    அதை விட்டு விட்டு இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தம் என்று சொல்லிக்கொண்டு  எந்த பணத்தையும் கொண்டு வந்த பாடில்லை.

ஆட்சிக்கு வந்து இரண்டாண்டு ஆகிவிட்டது.   உ பி   தேர்தல் வருகிறது.   ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு நடுத்தர மக்களின் வாழ்க்கையோடு விளையாட தொடங்கி விட்டார்.

500 , 1,000    ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து விட்டால் நாட்டில் உள்ள கருப்பு பணம் எல்லாம் வங்கியில் வந்து கொட்டி விடும் என்று நம்புகிறாரா?

1938,  1946 , 1978 ம் ஆண்டுகளில் பெரிய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.   எதிர் பார்த்த பலன் கிட்டவில்லையே?

இப்போது என்ன திட்டத்திற்காக இந்த நடவடிக்கை?

  •             கறுப்புப் பணம்;     பணமாகவா மட்டும் இருக்கிறது கருப்பு பணம்.   நிலமாக , பங்கு சந்தை முதலீடாக, கார்பொரேட் கம்பனிகளில் பலவிதங்களில் முதலீடாக, தங்கமாக , வைரமாக, வெளிநாடுகளில் வங்கிகளில் டிபாசிட்டாக  என்று பல விதங்களில் முடங்கி கிடக்கிறது.   இன்று ஆயிரம் ரூபாய் நாடுகளை பதுக்கியவன் நாளை  இரண்டாயிரம் நோட்டுகளை பதுக்குவான்.       நாணயமாக வரி கட்ட வேண்டும் என்ற  எண்ணத்தை  எல்லார் மனத்திலும் விதைக்கும் விதத்தில் வரி விதிப்புக் கொள்கை இல்லாவிட்டால் ஒரு போதும் கருப்பு பணத்தை ஒழிக்கவே முடியாது.    வருமான வரி  விலக்கை ஐந்து லட்சமாக  உயர்த்துங்கள்.     எல்லாரும் வரி கட்டுவார்கள்..
  •                 கள்ள நோட்டுகள்  ;   பாகிஸ்தானில் இருந்து அச்சடித்து வருவதாக சொல்கிறார்கள்.    இப்போதும் பத்து சதம் கள்ளப் பணம் புழக்கத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.      அரசு கண்காணிப்புடன் இருந்து தடுக்க வேண்டிய வேலை இது.
  •                  வருமான   வரி கட்ட வைக்க;       ஜன் தன் திட்ட மூலம் இருபது கோடி  பேருக்கு வங்கி கணக்கு வந்து விட்டது. இரண்டரை லட்ச ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ளவர்கள் வரி கட்டாமல் இருப்பதை தடுத்து அவர்களை வரி கட்ட வைக்கலாம்.    ஏனெனில்   ஐந்திலிருந்து பத்து இருபது லட்ச ரூபாய் சேமிப்பு வைத்திருப்போர் வங்கியில் கட்டியாவது வரி போக மிச்ச பணம் கிடைக்கட்டும் என்று டெப்பாசிட் செய்வார்கள்.    இது ஒன்றுதான் மோடி நடவடிக்கையின் பயனாக இருக்கலாம்.
  •                  ஹவாலா பண பரிமாற்றம் குறையலாம்;
  •                  இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள்  வெளி நாட்டு வாழ் இந்தியராக இருந்தால் அவர்கள் பணத்தை பி நோட்ஸ் என்ற ‘ Participatory Notes  ” மூலம் முதலீடு  செய்யலாம் .   ஆனால் அவருடைய பெயரை வெளியிட வேண்டும் என்ற அவசியம் கிடையாதாம்.       இந்த முறையை ஒழிக்க முன்வருவாரா மோடி ?                                                                                உச்சநீதி மன்றத்தில் கருப்பு பணத்தை மீட்க அரசுக்கு உத்தரவிடக்கோரி நிலுவையில் உள்ள வழக்கில் மத்திய அரசு ஏன் ஒத்துழையாமை கொள்கையை  கடைப் பிடிக்கிறது. ?.                                    லோக் பால் அமைப்பை கொண்டு வர வேண்டும்  என்று அன்னா ஹசாரே போராடி வருகிறார்.   ஏன்   அதைப்பற்றி மோடி கண்டு கொள்ளவில்லை.?                                                                                       இன்று  வங்கி முன் வரிசையில்  எந்த பணக்காரனும் நிற்கவில்லை.       எல்லாம் சரி.     கொண்டு வந்ததுதான்  கொண்டு வந்தீர்கள்.    ஏன் இத்தனை அவசரம்?                                                                                                  ஐம்பது நாள் அவகாசம் கொடுத்தீர்கள் பணத்தை வங்கியில் டிபாசிட் செய்ய.      அது வரைக்கும் மட்டும்தான் இவை செல்லும் என்றால்  என்ன கெட்டு விடும்.?                                                                   பணத்தை வைத்திருப்பவர்கள் வங்கியில் போட வேண்டும் என்பது மட்டும்தானே உங்கள்  நோக்கம்.      இல்லை அவர்களை வதைப்பதா?                                                                                                                அதுவும் இருநூறு சதம் அபராதம் வேறு?    வரி  வேறு?   பொது மக்களின்   எரிச்சலை வாரிக் கட்டி  கொண்டதைத் தவிர மோடி எதையும் சாதிக்க வில்லை                                                            நன்மைகள் பத்து சதம் என்றால்  தொண்ணுறு சதம்  நடுத்தர மக்களை வதைத்ததுதான்  மோடி அரசின் சாதனை  !!!
  •                                 பிரச்னை உச்சநீதி மன்றத்தில் இருக்கிறது.  அதுவாவது தலையிட்டு கால அவகாசம் நீட்டித்தால் அரசின் நடவடிக்கையால் ஏற்பட்ட குழப்பம் கொஞ்சம் தீரும்.

சபரிமலையில் பெண்களை  அனுமதிக்க தயார்! –கேரள அரசு!!!

ஐயப்பன் கோவிலில் 10   முதல் 50  வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி கிடையாது.

ஐயப்பன் ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதால் பெண்கள் அவர் அருகே கூட செல்லக் கூடாது என்று பாரம்பரியமாக நிலவி வரும் நம்பிக்கையை அடிப்படையாக வைத்து இந்த கட்டுப்பாட்டை கடைப் பிடித்து வருகிறார்கள்.

இதை எதிர்த்து இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் என்ற அமைப்பு அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரி ஒரு பொது நல வழக்கை  உச்சநீதி மன்றத்தில் தொடுத்தது.

ஆஜ்மீர் தர்காவில் பெண்களை வழிபட அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற தர்கா நிர்வாகம் விசாரணையின்போது பெண்களை அனுமதிக்க  தயார் என்று கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

முந்தைய இடது சாரி அரசு அனுமதிக்கலாம் என்று போட்ட அவிடவிட்டை சென்ற காங்கிரஸ் அரசு மறுதலித்து பாரம்பரியம் நிலைக்கட்டும் என்று மறு அவிடவிட்டு  போட்டது.   இப்போது இடது சாரி அரசு மீண்டும் பதவிக்கு வந்து  விட்டதால் தனது முந்தைய அரசின் நிலைப்பாடே இப்போதும் தொடர்கிறது என்று இடது சாரி அரசு கூறிவிட்டது.

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு மத நம்பிக்கைகளில் நீதி மன்றம் உள்பட யாருமே கேள்வி கேட்க முடியாது என்று கூறுகிறது.  அதாவது அரசுக்கு இதில் கருத்துக் கூறும் உரிமையே இல்லை என்கிறது.

பரம்பரை அறங்காவலர் பந்தள அரச குடும்ப சார்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டுள்ளது.

வழக்கின் அடுத்த விசாரணை  அடுத்த ஆண்டு பிப்ருவரி இருபதாம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.    அப்போது விரிவான விவாதங்களுக்கு  பிறகு இந்த சீர்திருத்தங்களை கொண்டு வருவதா வேண்டாமா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும்.

பிரம்மசாரிகளாக இருப்பவர்கள் தாயை வணங்க கூடாதா?   தாய் பிரம்மச்சாரி மகனை ,  சகோதரி ஒரு பிரம்மச்சாரி சகோதரனை நெருங்க கூடாதா?    தெய்வத்துக்கு இந்த மனித உறவுகள் பொருந்துமா?

அந்த இறைவன் பெண்களுக்கு அருள் பாலிக்க மாட்டாரா?

இறைவன் ஐயப்பன் இவர்களது கட்டுப்பாடுகளுக்கும் முடிவுகளுக்கும் கட்டுப் பட்டவரா?     இறைவனை கட்டுப்படுத்தும் அதிகாரம் மனிதர்களுக்கு உண்டா?

மாத விலக்கு ஆகும் மூன்று நாட்களை கணக்கில்  கொண்டே பெண்களை விலக்கி  வைக்கும் வழக்கம் அமுலுக்கு வந்திருக்க வேண்டும்.

சில காலத்திற்கு  முன் வரை அந்த மூன்று நாட்களும் பெண்களை ஊருக்கு  வெளியே தனியே ஒரு கட்டிடத்தில்தங்க வைக்கப் பட்ட காட்டுமிராண்டிதனமான வழக்கம் சில  ஊர்களில் அமுலில் இருந்து வந்ததை மறக்க  முடியுமா?

தங்கள் வசதிக்கும் நலத்துக்கும் ஏற்ற வகையில் மனிதர்கள் இறைவனையும் இறை நம்பிக்கையையும் பயன் படுத்தி வந்திருக்கிறார்கள் .

அந்த வகையில்தான் ஐயப்பன் கோவிலில் பெண்களை ஒதுக்கி வைக்கும் வழக்கமும் வந்திருக்க வேண்டும்..

இதுவரையில் நீதிமன்றங்கள் தான் இந்து மதத்தில் திருத்தங்களை கொண்டு  வந்திருக்கின்றன.      தானாக முன்வந்து எந்த சமயமும் எந்த சீர்திருத்தத்தையும் கொண்டு வந்ததில்லை.

உடன் கட்டை ஏறுதல்,   குழந்தை திருமணம் , பல தார மணம் போன்ற பல  தீமைகள்   பாரம்பரியம் சமய கோட்பாடு என்றெல்லாம் சொல்லி நியாயமாக்கப் பட முயற்சிக்கப் பட்ட போது  நீதிமன்றங்களால் அந்த தீமைகள்  தடுக்கப் பட்டன என்பதை மறக்க கூடாது.

இன்னமும் அந்த சக்திகள் சீர்திருத்தங்களை எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.     அவர்களையெல்லாம் மீறித்தான் மாற்றங்கள் வந்தன.   இனியும் வரும்.

 

 

 

 

உச்ச நீதி மன்ற குட்டு பயம்- என் டி டி வி தடை நிறுத்தம்??!!

பதான்கொட் தாக்குதலை ஒளி  பரப்பிய    பிரச்னையில் என் டி டி வி யை ஒரு நாள் தடை செய்த பா ஜ க வின் மத்திய அரசு பல முனை விமர்சனங்கள்  தங்களுக்கு  எதிராக திரும்பியதை உணர்ந்து  உச்ச நீதி மன்றம் குட்டு வைப்பதற்கு முன்பே தானாகவே முன்வந்து தான் விதித்த தடையை நிறுத்தி வைத்து அறிவித்தது.

தடையை எதிர்த்து என் டி டி வி உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு ஜனவரி மாதம் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

எல்லா  ஊடகங்களும் வெளியிட்டதை தான் நாங்களும் வெளியிட்டோம் .   எங்கள் மீது மட்டும் ஏன்  தடை  என்ற என் டி டி வி யின் கேள்விக்கு பதிலேதும் இல்லை.

தானே குற்றம் சாட்டுபவர்  தானே தண்டணை அளிப்பவர் என்று மத்திய அரசு செயல் பட்டிருப்பது கண்டனத்துக்கு உரியதாகும்.

வக்கீல்கள் மீது  நடவடிக்கை எடுக்க பார் கவுன்சில் என்று இருப்பதை போல  பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்க ப்ரெஸ் கவுன்சில் இருப்பதை போல ஒளிபரப்பு ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க நியுஸ் பிராட்காஸ்டிங் ஸ்டான்டர்ட்ஸ் அதாரிட்டி என்ற அமைப்பு இருக்கிறது.

அந்த அமைப்பிடம் மத்திய அரசு புகார் அனுப்பி நடவடிக்கை எடுக்க  சொல்லி இருக்கலாம். .

மாறாக பல அமைச்சக அதிகாரிகளை கொண்ட அமைப்பு மூலம் அறிவிப்பு அனுப்புதல் ,   விளக்கம்கேட்டல்,    விசாரணை ,    முடிவெடுத்தல் என்ற அதிகாரங்களை  தானே  மேற்கொண்டதன்  மூலம் மத்திய அரசு  ஊடகங்களை அச்சுறுத்தும் வேலையை முடுக்கி விட்டுள்ளது என்றுதான் பொருள் கொள்ளப்படும்.

இந்திரா காந்தியின் அவசர நிலை காலத்தில் அதிகம் பாதிக்கப் பட்டவர்கள் பா ஜ க வின் தலைவர்கள் .       ஆனால் அதிகாரத்துக்கு வந்த பின் அதே சர்வாதிகாரம்தான் தங்களின் பதவியை நிலை நிறுத்தும் என்று நம்பத் தொடங்கி விட்டதுதான் பரிதாபம்.

அரசியல் சட்டம் உறுதியளித்திருக்கிற அடிப்படை உரிமைகளை பாதிக்கிற எந்த நடவடிக்கையில்  யார்  இறங்கினாலும் அது மக்களால் நிராகரிக்கப் படும்.

நியாயமான கட்டுப்பாடுகள் விதிக்க அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தும் போது கூட எல்லா தரப்பையும் கலந்து ஆலோசித்துதான் அந்த முடிவை எடுக்க வேண்டுமே தவிர ஆட்சி நிலைப்பதற்காக அடக்கு முறை உத்தியாக அந்த உரிமையை பயன் படுத்தினால் நிச்சயம் மக்களின்  எதிர்ப்பைத்தான் இந்த அரசு சந்திக்கவேண்டிவரும்.

அப்போது இவர்களை பதவி யிலிருந்து தூக்கி எறிய மக்கள் தயங்க ஆட்டார்கள் என்பதை சர்வாதிகாரத்தை கையிலெடுக்க முயற்சிக்கும் ஆட்சியாளர்கள் உணரட்டும்.

 

 

 

மீனவர் பிரச்னையில் அரசியல் செய்யும் பா ஜ க – சிங்கள அரசுகள்??!!

இந்திய -இலங்கை     இருநாட்டு அமைச்சர்களும் பங்கு பெற்ற பேச்சு வார்த்தைக்குப் பின்னரும் தமிழக மீனவர் பிரச்னையில் எந்த உருப்படியான முடிவையும் எடுக்காமல் கலைந்திருகின்றனர் .

ஆறு மாதத்துக்கு ஒரு முறை சந்தித்து பேசுவது என்ற முடிவும் ஜனவரி மாதம் கொழும்புவில் நடக்கும் கூட்டத்தில் பிரச்னைகள் குறித்து மீண்டும் பேசுவது என்ற முடிவும் என்ன பிரச்னையை தீர்திருகிறது.

இலங்கை மீனவர்களை தமிழக மீனவர்களுக்கு எதிராக திருப்பி அரசியல் செய்கிறது சிங்கள அரசு .    அதற்கு துணை  போகிறது இந்திய அரசு.

கச்சத்தீவு பிரச்னையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை நடை முறை படுத்த முடியாத அல்லது முனையாத இந்திய அரசு என்ன உள் நோக்கத்தை கொண்டிருக்கிறது. ?

தமிழர்களின்  பாரம்பரிய மீன்பிடி உரிமையை இலங்கை அரசு அனுமதிக்கும் என்று ஒப்பந்தம் இருக்கிறதா இல்லையா?     ஏன் அதை அமுல் படுத்த வற்புறுத்த வில்லை?

ஆண்டுக்கு 80  நாட்களுக்கு  மட்டும்  மீன்பிடித்துக் கொள்ள உரிமை கேட்டு ஏன் இலங்கையிடம் மன்றாட வேண்டும்..  ?

கச்சதீவை இலங்கைக்கு  தாரை வார்த்தது பாராளுமன்ற ஒப்புதல் இல்லாததால் செல்லாது என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது.

தமிழக மீனவர்களின் 115   படகுகள் இலங்கை  அரசால் பறிமுதல் செய்யப் பட்டு கிடக்கின்றன.     அவைகளை  முதலில் மீட்டு விட்டு அல்லவா பேச்சு வார்த்தையில் பங்கு  பெற்றிருக்க வேண்டும்.      அதற்கு  இலங்கை மீனவர்கள் ஒப்புக் கொள்ளாததால் பெறமுடிய வில்லை என்றுத் நம் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.    முடிவெடுக்க வேண்டியது சிங்கள அரசா இலங்கை மீனவர்களா?

உரிமை என்பது அவன் கொடுத்து நாம்  பெற வேண்டியது அல்ல.   நமக்கு உரியதை நாம் எடுத்துக் கொள்வது.

ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு நமது மீனவர்களுக்கு இந்திய அரசு உதவிகள் செய்வதற்கும் ஏராளமான நிபந்தனைகள்  விதிக்கப் படுகின்றன.

இலங்கை- இந்திய  கடற்பரப்பு பகுதிகளை நிர்ணயம் செய்வது கச்சத்தீவு யாருக்கு சொந்தம் என்பதை பொறுத்தே !     ஏன் அந்தப் பிரச்னையை பேச மறுக்கிறீர்கள்??       தமிழர்களை கேட்காமல் இந்திரா செய்த ஒப்பந்தம் எப்படி தமிழர்களை கட்டுப்படுத்தும்.?

படகுகளை பறிமுதல் செய்யுங்கள் என்று நான்தான் பரிந்துரைத்தேன் என்ற    சுப்பிரமணியன் சுவாமி என்ற பா ஜ க  மேலிட உறுப்பினர் சொன்ன பிறகு இவர்கள் எப்படி படகுகளை மீட்பார்கள்?

இரட்டை வேடம் போடுபவர்கள் பிரச்னையை  எப்படி தீர்ப்பார்கள்?

நம்பிக்கை வைக்கும்படி இரு நாட்டு அரசுகளும் நடந்து கொள்ள வில்லை .    காலம் கடத்துவது தான் உத்தி என்றால் அது பலிக்காது .

மீன் பிடித் தொழிலில் இருந்து தமிழக மீனவர்களை அப்புறப் படுத்துவதுதான் இலங்கை அரசின் இலக்கு.   அதற்குதான் இந்த உறுதியற்ற , இலக்கற்ற ,பற்றற்ற  பேச்சு வார்த்தைகள் பயன்படும்.

 

 

டெல்டா விவசாயிகள் பலியை தடுக்க தவறும் அரசு!!!

காவிரித் தண்ணீரும் வரவில்லை.   வடகிழக்கு பருவ மழையும் பொய்த்தது.   சும்மா இருக்க முடியாத டெல்டா விவசாயிகள் கடன் பட்டு விதைப்பு மூலம் சாகுபடி செய்த பயிர்கள் கருக தொடங்கியதை பார்க்க முடியாமல் உயிரை விட்டு வருகிறார்கள்.

இதுவரை நான்கு பேர் மரணம் அடைந்துள்ளனர்.    திருத்துறைபூண்டி ரகுநாத புறத்தை சேர்ந்த கோவிந்தராஜ் , ஆதிச்சபுரம் அழகேசன் , கீழதிருபூந்துருத்தி வெள்ளையன் என்கிற ராஜேஷ் கண்ணன் வேதாரண்யம் ஆதனூர்   ரத்தினவேல்  என்று இந்த பட்டியல் முடியுமா எனத் தெரியவில்லை.

120  நாட்களுக்கு குறையாமல் தண்ணீர் தேவை இருக்கும்போது நாற்பது நாள் மட்டும் கிடைத்தால்  பயிர் எப்படி வளரும் ?    வட கிழக்கு பருவ மழை யை நம்பித்தான் விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டனர்.    அரசு முனைந்து காவிரி நீரைப் பெற்றுத்  தந்திருந்தால் பயிர் காப்பாற்றப் பட்டிருக்கும்.

இப்போது ஒவ்வொரு விவசாயியும்  ஏக்கருக்கு பதினைந்தாயிரம் ரூபாய் நட்டமடைந்திருக்கிறார்கள்.                 விவசாயத் தொழிலாளர்கள் வேலையிழந்திருக் கிறார்கள்.

93.47   டி எம் சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் தற்போது     13.5 டி எம் சி நீர்தான் உள்ளது.    இன்னும் ஒரு வாரத்துக்கு வருமா எனபதே சந்தேகம்.

கர்நாடகா அணைகளில் நீர் இருப்பு இல்லையென்று  உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கப் பட்டுவிட்ட நிலையில் அது வராது.    பருவ மழையும் பொய்த்து விட்டது .      நிலைமை என்ன ஆகும்?

நட்டம்  நிச்சயம் என்ற  நிலையில் முதல் போட்டவர்கள் என்ன செய்வார்கள்?

மாநில  அரசு எதையும் கண்டு கொள்கிற நிலையில் இல்லை.      என்னதான் தீர்வு?

கடன் தள்ளுபடி.    கிராம அடிப்படையில் இழப்பீடு  என்று ஏதாவது நிவாரணம் அறிவித்தால் விவசாயிகள் கொஞ்சம்   ஆறுதல் அடைவார்கள்.

அரசு கண்டு கொள்ளாது என்றால் விவசாயிகள் அரசை நிம்மதியாக ஆள விட மாட்டார்கள் .

விவசாயிகளை கண்ணீர் விட வைக்கும் அரசு எப்படி நிம்மதியாக ஆளும்?

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை தடுத்த மூட நம்பிக்கை??!!

கேரள மாநிலம் முக்கம் கிராமத்தில் ஒரு கூட்டுறவு மருத்துவ மனையில் அபு பக்கர் என்பவரின் மனைவிக்கு  ஒரு மகன் பிறந்திருக்கிறான்

மருத்துவர்கள் உடனே தாய்ப்பால் கொடுக்க அறிவுறுத்தி இருக் கிறார்கள்.

அபு பக்கர் சித்திக் அதற்கு அனுமதி மறுத்தார்.   மதியம் இரண்டு மணிக்கு பிறந்த குழந்தைக்கு அது பிறந்த பின் அன்றைய ஐந்து பிரார்த்தனை அழைப்புகளும் முடியும் வரை குழந்தைக்கு பால் கொடுக்க கூடாது என்று பிடிவாதம் பிடித்தார்.

அதனால் குழந்தைக்கு அடுத்த நாள் மதியம்தான் தாய்ப் பால்  கொடுக்க முடிந்தது.

மருத்துவர் ஆலோசனைகளை நிராகரித்த அபு பக்கரின் மீது காவல் துறை புகார்  கொடுக்கப் பட்டு அவர் கைது செய்ய பட்டு விசாரணை  நடந்து வருகிறது.

இஸ்லாம் அப்படி சொல்கிறதா?

இல்லையென்றால் மூட நம்பிக்கை வைத்திருக்க மதம் ஒரு சாக்குதான்.

மத நம்பிக்கை அறிவை அடக்கி வைக்கலாமா ??!!

மணவாள மாமுனிகள் சன்னதியில் பிராமணர் அல்லாதோருக்கு அனுமதி மறுப்பு

காஞ்சிபுரம் வரதராஜா பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள மணவாள மாமுனிகள் சந்நிதிக்குள் பிராமணர் அல்லாதோர் நுழைய அனுமதி மறுக்கப் பட்ட செய்தி நாங்கள் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வோர்  கண்களை  திறக்க வேண்டும்.

இந்த பிரச்னை பல ஆண்டுகளாகவே நீடித்து வருவதாக சொல்கிறார்கள் .

ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா நடை பெற உள்ள நிலையில் அவரது பிறந்த நாள் வழிபாடு இந்த சந்நிதியில் நடைபெற்றது.    அந்த வழிபாட்டை சமத்துவ வழிபாடாக நடத்த ராமானுஜ தாசர்கள் என்ற அமைப்பினர் வலியுறுத்தியதாக தெரிகிறது.

அப்போது பிராமணர்கள் அல்லாதோர் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இத்தனைக்கும் தங்களை கோவிலுக்குள் அனுமதித்து நாலாயிர திவ்ய ப்ரபந்தம் பாட அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் அவர்கள் காண்பித்தும் இறுதி வரை யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்க வில்லையாம்.

நீதிமன்ற தீர்ப்பை அவர்கள் மதிக்க வில்லை எண்பது  ஒருபுறம் இருக்கட்டும்.     ராமானுஜர் போதித்ததாக சொல்லப்படும் சமத்துவம் எங்கே போனது?

எந்த மதத்தையும் விட வைணவம்தான் இறைவனுக்கு முன் அனைவரும் சமம் என்று கொண்டாடுகிறது என்று விளக்கம் சொல்கிறார்கள்.

ஆனால் நடைமுறையில்?

சமத்துவம் இல்லாத இடத்தில் ஏன் பக்தர்கள் போக வேண்டும்?   அப்படி சண்டை போட்டு உள்ளே போய் பார்த்தால்தான்  இறைவன் அருள் புரிவானா?

சமத்துவம் கேட்டுப் பெற வேண்டிய ஒன்றல்ல. எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.   முடியாவிட்டால் ஏன் அங்கே போக  வேண்டும்.?

ஆணவம் அவர்கள் அறிவை அழித்து விட்டது.     எவ்வளவு அவமானப் படுத்தினாலும் இவர்கள் தலை நிமிரவே மாட்டார்கள் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

அனுமதிமறுத்து அவர்கள் ராமானுஜரை அவமானப் படுத் தியிருக்கிறார்கள். .

தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது சரிதானா???!!

மத்திய பிரதேசம் ஒரு மர்மப் பிரதேசம்.

வியாபம் ஊழல் சம்பந்தப்பட்ட நாற்பது பேர் மிக மர்மமான முறையில் இறந்திருக் கிறார்கள்.    இதுவரை யார் அந்த சூத்திரதாரி  என்பது கண்டு  பிடிக்கப் படவேயில்லை.

போபால் மத்திய சிறையில் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இடையே எப்படி தீவிரவாத கைதிகள் தப்பினார்கள்.?     கடந்த பதினைந்து ஆண்டுகளில் இருபத்தி எட்டு முறை இது போன்ற சிறையிலிருந்து தப்பிக்கும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

சிறையிலிருந்து தப்பியவர்கள் ஒரு காவலரை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பியிருக்கிறார்கள் என்பது அவர்கள்  கொடியவர்கள் என்பதை நிரூபிக்கிறது.

ஆனால் அதற்குப் பின் வெளி வந்த காவல் அதிகாரிகளுக்கு இடையே ஆன உரையாடல் அது என்கவுண்டர் அல்ல கொலை என்பது போல தோற்றம்  தெரிகிறது.

ஐந்து  பேரையும்  அல்ல எல்லாரையும் கொல் .   தப்ப விட்டு விடாதே.   ஒருவனை மட்டும் விட்டு விடலாமே .  வேண்டாம் அது நல்லதல்ல.   அலைய வேண்டியிருக்கும். முடித்து விடு என்றெல்லாம் போகும் அந்த உரையாடல் தப்பியவர்களை பிடித்த பின் சுட்டுக் கொன்ற தாகத்தான் சொல்கிறது.    விடியோ காட்சிகளும் வெளியாகி அதிர்வை அதிகப் படுத்தி இருக் கின்றன.

நீதிமன்றத்தில் நிரூபிக்காமலேயே காவல் துறையே  தண்டனை  வழங்கி விடலாம் என்ற நடைமுறை அமுல் படுத்தப் பட்டால் நாட்டில் அராஜகம்தான் தாண்டவமாடும்.

தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற முறை நாட்டில்  நிலவினால் அது காடாகத்தான் இருக்கும் நாடாக இருக்காது.

சிறைத்துறையை நிர்வகிப்பவர்கள் எவ்வளவு தான் தோன்றித்  தனமாக  செயல்படுகிறார்கள் என்பதற்கு போபால் சிறை சம்பவம் தக்க உதாரணம்.

அதுவும் பா ஜ க ஆளும் ம பி யில் கொல்லப்  பட்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்னும்போது சந்தேகம் இன்னும் அதிகமாகிறது.

விடை கண்டு நாட்டை அமைதிப் படுத்த வேண்டிய கடமை ஆள்வோருக்கே .