Home Blog Page 96

திப்பு ஜெயந்தியை பா ஜ க எதிர்ப்பது ஏன்?

நவம்பர் 10 ம் தேதியன்று திப்பு சுல்தானின் பிறந்த நாளை கொண்டாட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

குடகு பகுதியை சேர்ந்த ஒருவர் அதை ஆட்சேபித்து கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்குப் போட நீதிபதிகள் அரசிடம் மனுகொடுக்க சொல்லி மனுவை முடித்து வைத்தார்கள்.   அப்போது நீதிபதிகள் கேட்ட கேள்விதான்  பிரச்சனையானது.   ‘ திப்பு ஒரு  அரசர்தானே அதற்கு ஏன் அரசு விழா?’ என்றனர் நீதிபதிகள்.

முந்தைய ஆண்டுகளில் திப்பு ஜெயந்தியின் பொது ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு பேர் மாண்டு போனது வரலாறு.

திப்பு ஜெயந்தியை கொண்டாடி முஸ்லிம்களை வளைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது என்பது பா ஜ க வின் குற்றச்சாட்டு.

மைசூரின் புலி என்று அழைக்கப் பட்ட திப்பு சுல்தானின் வரலாறு பல போராட்டங்களை உள்ளடக்கியது. தந்தை ஹைதர் அலியை விட திப்பு புகழ் பெற காரணம் அவர் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட துதான்.   எனவே அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரராகவே பார்க்கப் படுகிறார்.

48   ஆண்டுகளே வாழ்ந்த திப்பு  1799 ல்  நான்காம்   ஆங்கிலோ-  மைசூர்   போரின்போது  போர்க்களத்திலே உயிரிழந்தார்..

தப்பி விட பிரெஞ்சு அதிகாரிகள் ஆலோசனை சொன்ன போது ‘ ஆயிரம் ஆண்டுகள் ஆடு போன்று வாழ்வதை விட ஒரு நாள் புலியாக வாழ்வதே சிறந்தது” என்று  சொன்னவர்.    செய்தும் காட்டியவர். .

கத்தியாலேயே புலியை கொன்றதால் புலி என்ற பெயர் நிலைத்தது. .

கிறிஸ்தவர்களை மதம் மாற்றினார் கொடுமைப் படுத்தினார். போரில் வெற்றி பெற்ற போதெல்லாம் கைதிகளை  இஸ்லாத்துக்கு மதம் மாற்றினார்.   கோவில்களை கொள்ளையடித்தார்.  பெர்சியனை அலுவல் மொழியாக வைத்திருந்தார்.  கொடுங்கோலன் .   என்றெல்லாம் விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள்.

எல்லா  மதங்களையும் சமமாக நடத்தினார்.  கிருஷ்ணாராவ் என்பவரை பொக்கிஷ அமைச்சராகவும் சாமைய அய்யங்கார் என்பவரை காவல்துறை அமைச்சராகவும் இன்னும் பல இந்துக்களை பொறுப்புள்ள பதவிகளில் வைத்திருந்தவர்.    இந்துக் கோவில்களுக்கு பல சனதுக்களை வழங்கி பூஜைகள் தொடர்ந்து நடக்க ஏற்பாடுகள் செய்தவர். .   என்றெல்லாம் அவரை போற்றி புகழ்பவர்களும் ஏராளம்.

கொடகு பகுதியில் படையெடுத்து அவர்களை வஞ்சனை மூலம் வென்று அடிமைபடுத்தி இஸ்லாத்துக்கு மாற்றினார் என்று வரலாறு சொல்கிறது.   அதனால் குடகு பகுதிகாரர்கள் திப்பு ஜெயந்தியை எதிர்க் கிறார்கள்.

எப்படியிருந்தாலும் நாம்  இங்கு ராஜராஜன் சதய விழாவை அரசு விழாவாக கொண்டாடுகிறோம் இல்லையா அதைப்போல் அங்கே திப்பு ஜெயந்தியை கொண்டாட அரசு முடிவு செய்தால் அதில் அரசியல் செய்யாமல் வரலாற்றை விவாதிப்பதுதான் முறை.    அதற்காக விழாவே நடத்தக் கூடாது என்றால் அவர் முஸ்லிம்  என்பதுதான் பிரச்னையா. ?

அவர் எங்கேயிருந்து வந்தவர் என்று விவாதித்தால் கைபர் கணவாயில் இருந்து யார் வந்தார்கள் என்ற கேள்வியும் எழுமே?

எதிர்ப்புகளை மீறி விழா நடத்துவதில்  கர்நாடகா அரசு உறுதியாக இருக்கிறது.

வரலாற்றின் பக்கங்களை சாதி  மத அடையாளங்களோடு ஒப்பிடாமல் வரலாறாகவே பார்ப்பதுதான் நாகரிக சமுதாயத்தின் அடையாளம்.

நடக்கட்டும் திப்பு ஜெயந்தி விழா  !!!!!

 

 

மௌலிவாக்கம் கட்டிடத்தோடு ஊழலும் புதைக்கப் பட்டு விடக் கூடாது ???!!!

சென்னை மௌலிவாக்கத்தில்   28.06.2014  அன்று       61   உயிர்களை காவு வாங்கிய          11  மாடி கட்டிட விபத்து அதுவரை தமிழகம் கண்டிராத ஊழலின் வெளிப்பாடு.

அப்ரூவல் தந்த சி எம் டி ஏ வில் நிகழ்ந்த ஊழல் தான் இந்த விபத்துக்கு காரணம் என்ற சந்தேகம்தான் எல்லார் மனதிலும் இருந்தது.   அங்கு நடந்த ஒவ்வொரு நகர்வும் ஆய்வு செய்யப் பட வேண்டியவை.

முடிந்த வரை உண்மை  வெளி  வராத வாறு அ தி மு க அரசு பார்த்துக் கொண்டது.    சி பி ஐ விசாரணைக்கு அரசு ஒப்புக்கொள்ளவில்லை.

தானே ஒரு கமிஷனை நியமித்து ,  அதன் அறிக்கையை வெளியிட மறுத்து,   பின் உயர் நீதி மன்றம் தலையிட்டு,,  அதனால் வெளியிட்டு , அதையும் விவாதிக்க மறுத்து ,    பக்கத்தில் இருந்த இன்னொரு பதினோரு மாடி கட்டிடத்தையும் இடிக்க மறுத்து,

பின் உச்ச நீதிமன்றம் தலையிட்டு     அதன் பின் ஒப்புக்கொண்டு ஒரு வழியாக நவம்பர் இரண்டாம்  தேதி முன்னிரவில் இடிக்கப் பட்டது.

இந்த நீதியை வாங்கிட வேண்டி எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட எத்தனை பேர் நீதிமன்றங்களின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி இறங்க வேண்டி இருந்தது.

எத்தனை அநியாயங்கள் நீதிமன்ற தலையீடு இல்லாமல் கோலோச்சி வருகின்றன.

கட்டிடம் இடிக்கப் பட்டு விட்டது.    அதனோடு சேர்ந்து நியாயமும் புதைக்கப் பட்டு விடக் கூடாது என்பதே நமது கவலை.

இத்தனை நடந்திருக்கிறதே, இதுவரை யார் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு தண்டிக்கப் பட்டிருக்கிறார்.?

அரசின் எல்லா ஆவணங்களையும் சரி பார்த்தே  கடனில்  வீடு வாங்கிய அப்பாவிகளின் கதி என்ன?

இதுதான் எல்லார் மனதிலும் தொக்கி நிற்கும் கேள்வி.

பிரச்னை நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் நியாயம் கிடைக்கும் என்று நம்பலாம்.    ஆனால் அதற்கும் அரசு துணை நிற்க வேண்டுமே?

வீடு வாங்கியவர்களுக்கு மனையில் இருக்கும் பிரிபடாத பங்கு உரிமை எந்த விதத்திலும் அவர்களின் இழப்பை ஈடு கட்டாது.

தவறு செய்தவர்கள்தான் அவர்களின் இழப்பை ஈடு கட்ட வேண்டும்.    அல்லது அவர்கள்  சார்பில் அரசு ஈடு கட்ட வேண்டும்.

அடுத்து இனி இவ்விதம் நிகழாதவாறு அனுமதி தரும் விதிகளில் கடுமை காட்ட வேண்டும்.

தமிழக அரசு இன்று இருக்கும் துயர நிலையில் இதெல்லாம் சாத்தியமா???

 

 

சாணியடி திருவிழா நீடிக்க வேண்டுமா?

ஈரோடு மாவட்டம் கும்டாபுரத்தில்   300 ஆண்டுகள் பழைமையான பீரேசுவரர் கோவிலில் ஆண்டுதோறும்   தீபாவளிக்கு அடுத்த மூன்றாம் நாள் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக விநோதமாக சாணியடி திருவிழா நடந்து வருகிறது.

அதில் கலந்து கொள்பவர்கள் சாணியை எடுத்து ஒருவர் மீது ஒருவர் அள்ளி வீசிக்கொள்வார்களாம்.

அதில் கலந்து கொண்டவர்களின் புகைப்படத்தை தினத்தந்தி வெளியிட்டிருந்தது.

வேண்டுதல் நிறைவேறியது.   எனவே  நேர்த்திக் கடனாக இந்த நிகழ்வை நடத்துகிறோம் என்று பக்தர்கள் சொல்லலாம்.

அது எப்போது ஆரம்பிக்கப் பட்டது . ?    அதில் பொருள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யக் கூடவா பக்தர்கள் தயாராக இருக்ககூடாது.

அறிவுக்கு பொருந்தாத வழக்கங்களை பக்தி  என்ற பெயரால் அடிமைகளாக்கும் முயற்சியில் யாரோ இதை ஏன் புகுத்தியிருக்ககூடாது ?

பக்தர்கள் என்றால் சிந்திக்காமல் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவார்கள் என்பதுதான் இலக்கணமா?

பக்தர்கள் எனப்படுவோர் சிந்திக்கட்டும்.

பெண்கள் பாதிரியார்களாக தடை நீடிக்கும்?  போப் அறிவிப்பு??!!

கத்தோலிக்கர்களின் மத குருவான போப் வாடிகனில் இருந்து ஆட்சி  செய்து வருகிறார்.

கிறித்துவத்தில் பல பிரிவுகள்.     சமீபத்தில் போப்  பிரான்சிஸ்  ஸ்வீடன் சென்றிருந்தார்.    அவரை வரவேற்றவர் அங்குள்ள லுத்தரன் சர்ச்சின் தலைவரான ஒரு பெண்தான்.  ஒரு நிருபர் போப்பை நோக்கி கேட்ட கேள்வி இதைப்போல் உங்கள் கத்தோலிக் சர்ச்சில் எப்போது பெண்களை அனுமதிக்கப் போகிறீர்கள் ?

அதற்கு பதில் அளித்த போப்  பிரான்சிஸ் 1994 ல் போப் ஜான் பால் சொன்னதே இறுதியானது என்றார்.   அதாவது போப்  ஜான் பால் அப்போது பெண்களுக்கு பாதிரியார்கள் ஆகும் வாய்ப்பு இல்லை என்றார்.

கிறித்துவத்தின் பிற பிரிவுகளில் பெண்கள் அனுமதிக்கப் படும்போது கத்தோலிக்கர்கள் மட்டும் என் மறுக்க வேண்டும்?

பின்னாளில் யாராவது ஒரு போப் வந்து  இதை மாற்றம் செய்தால் மட்டுமே கத்தோலிக்க பெண்களுக்கு பாதிரியார்கள் ஆகும் வாய்ப்பு திறக்கும்.

மாற்றங்கள் பிறக்கட்டும்,    காட்சிகள் மாறட்டும்.

கமல்ஹாசன் -கௌதமி வாழ்ந்ததும் பிரிந்ததும் சொல்லும் செய்திகள் !!!!

கமல்ஹாசன் மிகச் சிறந்த நடிகர்.    பிராமணர்.    ஆனால் அதை வெளிக் காட்டிக்  கொள்ளாதவர் .    தன்னை ஒரு  நாத்தியவாதியாக அடையாளப் படுத்திக் கொள்வதில்  பெருமை கொள்பவர்.  கலையுலகில் தனி முத்திரை பதித்துக் கொண்டிருப்பவர்.

கௌதமி நல்ல நடிகை.    சமீபத்தில் புற்று நோய் விழிப்புணர்வுப் பணிகளுக்காக பிரதமரையும் குடியரசுத் தலைவரையும் சந்தித்துப்  பேசி வந்தவர்.

இருவரும் பதிமூன்று ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

இப்போது இருவரும் மனம்  விட்டுப் பேசி பிரிந்து விட்டதாக கௌதமி வெளியிட்ட செய்தி மூலம் கதறிய வந்திருகிறது.

இருவரது வாழ்க்கையும் சினிமா உலகில் வசதி படைத்த நட்ச்சத்திரங்கள் எப்படி தாங்கள் வாழ்வை  சுலபமாக அமைத்துக் கொள்கிறார்கள் என்பதற்கு உதாரணம்.

கமல் வாணியை மணந்து விவாகரத்து செய்து , பின் சரிகாவுடன் வாழ்ந்து இரண்டு பெண்களை பெற்றவுடன் திருமணம் செய்து கொண்டு பின் விவாகரத்து செய்து பின் கௌதமியுடன் செர்நேது வாழ்ந்து வந்தவர்.

கௌதமி கணவரை விவாகரத்து செய்து பெண் குழந்தையை வளர்த்து பின் கமலுடன் வாழ்ந்து வந்தவர் மகளின் எதிர்காலத்துக்காக  பிரிந்த தாக தெரிகிறது.

பிரபலமானவர்கள்  ,   கோடிகளில் சொத்து வைத்துக்  கொண்டு வாழ்பவர்கள் எப்படி எந்த பிரச்னைக்கும் இடம் கொடாமல் தாங்கள் மனதிற்கு பிடித்த வாழ்க்கையை வாழ்கிறார்கள்  என்பதை மற்றவர்கள் பாடமாக கொள்ள வேண்டும்.

கமலின் இரண்டு பெண்களும் தங்கள் வாழ்க்கையை தாங்களே வாழ்ந்து கொள்ளும் அளவு சம்பாதிப்பவர்கள்.

மேல்தட்டு மக்கள் எப்படி வாழ்ந்தாலும் உலகம் ஏற்றுக் கொள்ளும்.

இருவரும் மக்களின் அன்பைப் பெற்றவர்கள்.    நல்லவர்கள் என்ற அடையாளத்துடன் வாழும் அவர்கள் வாழ்வில் நிம்மதி நிலவட்டும்.

சிபெட் தலைமையகத்தை சென்னையிலிருந்து டெல்லிக்கு கொண்டு சொல்லும் அனந்தகுமார்??!!

சிபெட் என்னும் ( Central Institute of Plastics Engineering and Technology)    பிளாஸ்டிக் ஆராய்ச்சி நிறுவனம்  சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல் பட்டு வருகிறது.

23   கிளைகளில்   44000  மாணவர்கள்  பயிற்சி பெற்று வரும் இந்த மையத்தில் தற்போது        39   கிளைகளாக மாற்றப்பட்டு      65000  மாணவர்களை கொண்டு இயக்க திட்டமிட்டு வருகிறது மைய அரசு.

கர்நாடகாவை சேர்ந்த அனந்த குமார் அமைச்சராக இருப்பதால் அவர் இதன் தலைமையிடத்தை டெல்லிக்கு மாற்றப் போவதாக வந்த செய்திகளை அடுத்து தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியது .    கலைஞரும் தொழிலாளர்களும் ஏனைய கட்சித் தலைவர்களும் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

அதை தொடர்ந்து அனந்த குமார் வேடிக்கையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதாவது தலைமையிடம் சென்னையில்தான் இருக்குமாம். அதேசமயம் டெல்லியில் மற்றொரு தலைமையகம் அமைப்பதற்கான   தேவை ஏற்பட்டு உள்ளதாம்.

மாற்று தலைமையகம் என்பது கேள்விப்பட்டத ஒன்று.      தேவை ஏற்படும்போது   ரீஜினல் என்ற வகையில் பிராந்திய தலைமையகங்களை அமைப்பதுவழக்கம்.

ஒரே தலைமையகம்தான் இருக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் ஓர்  அறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள்.

தென் மாநிலம் ஒன்றில் ஒரு தேசிய அமைப்பின் தலைமையகம் இருக்கக்கூடாதா??

தேசிய கட்சியில் இருந்து கொண்டு தேசியத்துக்கு விரோதமாக சிந்திக்க எப்படித்தான் இவர்களால் முடிகிறதோ??

எத்தனை பிராந்திய அலுவலகங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்   ஆனால் ஒரே தலைமையகம்தான் இருக்க முடியும்.

இதைக்கூட புரிந்து கொள்ள முடியாமலா இருப்பார்கள் தமிழர்கள்?

கன்னடர் ஒருவர் சென்னையில் தன் துறை அமைச்சகத்தின் தலைமையிடம் இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பதால் ஏற்பட்ட மாற்றம்  என்பதே உண்மை.   அவர் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.

வன்னியர் எதிர்ப்பை மீறி தலித்துகளுக்கு கோவிலை திறந்து விட்ட வருவாய் அதிகாரிகள் !!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஹரிஹரபாக்கம் கிராம வன்னியர்கள் அந்த ஊரின் அருள்மிகு துலுக்கானத்தம்மன் கோவிலில் பக்கத்து  நம்மண்டி காலனி தலித்துகளை வழிபட அனுமதித்ததே இல்லை.

காலனி இளைஞர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்து பல பேச்சு வார்த்தையிலும் முடிவு எட்டாததால் வன்னியர்கள் கோவிலை  பூட்டி  விட்டார்கள்.

செய்யாறு சப் கலக்டர் ஏற்பாட்டில் பூட்டை உடைத்து தலித்துகளை உள்ளே அனுமதித்தது மட்டும் இல்லாமல் வன்னியர்களிடம் தாங்கள் எவ்விதத்திலும் தலித்துகளை தடை செய்யமாட்டோம் என்றும் எழுதி வாங்கி தற்காலிக அமைதி ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

காவல் துறை சில காலம் பாதுகாப்பு தரும்..   அதன் பின் யாரோ ஒருவர் பிரச்னையை கிளப்பினால் அது மீண்டும் அமைதியை குலைக்கும்.

ஏறத்தாழ தொண்ணூறு சதவீத கிராமங்களில் இதுதான் நிலை.

சாதி ஒழிப்பு கொள்கையில் ஒப்புமை கொண்ட திராவிட இயக்கங்கள் கூட இந்த சாதி சார்ந்த பாகு பாடுகளை ஒழிக்க முடியவில்லை என்பதுதான் யதார்த்தம்.

;ஒன்றே குலம் ஒருவனே தேவன்  கொள்கையில் நம்பிக்கை கொண்டோர் அதை வாழ்க்கையில் அமுல்படுத்த முடிகிறதா?

திமுக அதிமுக நிர்வாகிகள் தங்கள் தங்கள் கிராமங்களில் இந்த சீர்திருத்தங்களை அமுல்படுத்த முனைந்தால் செல்வாக்கு  இழக்க நேரிடும் என்றே அஞ்சுகிறார்கள்.

ஏன் பா ம க வே கூட இந்த சீர்திருத்தத்தை அமுல் படுத்த தயாராக இருக்குமா?

இதைப் பற்றியும் ஒரு விவாதம் தொடங்கி நடந்தால் ஒருவேளை எதாவது வழி பிறக்கலாம்.

விவாதிப்போம்!!!

வைகோவின் பிடியிலிருந்து நழுவும் திருமாவளவன்??!!

காவிரிப் பிரச்னையில் அனைத்துக் கட்சி  கூட்டத்தில் திருமாவின் விடுதலை சிறுத்தைகள் கலந்து கொள்ளாமல் போனாலும் திருமா வெளியிட்ட அறிக்கை அவர் வைகோவின் பிடியிலிருந்து நழுவிக் கொண்டிருக்கிறார் என்பதை நன்றாகவே காட்டியது.

திமுக அனைத்துக் கட்சி  கூட்டத்தை கூட்டியத்தை வரவேற்ற திருமா அந்த முயற்சிக்கு பாராட்டையும் தெரிவித்தார்.     தான் கலந்து கொள்ள விரும்பியதாகவும் தெரிவித்தார்.

இடைத்தேர்தல் வரும் சூழலில் தான் ம ந கூ வை  தான் உடைத்து விட்டதாக பழி வந்து  சேருமே என்பதற்காகத்தான் கலந்து கொள்ள வில்லை என்று திருமா சொன்னது அவரது உள்ளம் தி மு க வை நோக்கி திரும்பத்  தொடங்கி  விட்டதை காட்டியது.

‘ தங்களின் உள்ள நிலை -உண்மை நிலையை புரிந்து  கொண்டேன் – வரவேற்றதற்கு நன்றி’ என்று ஸ்டாலினும் தன் பங்குக்கு பதில் அனுப்பி அரவணைக்க தயார் என்பதை உணர்த்தி விட்டார்.

விவசாயிகள்  நடத்திய ரயில்  மறியல் போராட்டத்தில் திமுகவோடு கம்யுனிஸ்டுகள் கலந்து கொண்டார்கள்.

இப்போது திருமாவும் கழன்று வருகிறார்.     விடுதலை சிறுத்தைகள்  மக்கள் நல கூட்டணியில் நீடித்து தற்கொலை செய்து கொள்வதை எந்த தொண்டனும் அனுமதிக்க மாட்டான் என்பது   தெரிந்து  விட்டது.

இஸ்லாமியர்களின் ஒட்டு பெரிதாக எந்த தொகுதியிலும் சிறுத்தைகளுக்கு கிடைக்க வில்லை.

அவர்கள் அதிமுக திமுக என்றே பிரிந்து  நிற்கிறார்கள்.      தனித்து வெல்லும் வாய்ப்பு இல்லை என்பது தெரிந்த பின் அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு அதுதான்.

மற்ற தோற்கும் கட்சிகளுக்கு கொள்கை என்று சொல்லிக்கொண்டு வாய்ப்புகளை இழக்க அவர்கள் தயாராக இல்லை.

இதற்கிடையே அவர் பா ஜ க பக்கம் சாய்கிறார் என்று ஒரு செய்தி சொல்கிறது.

எப்படியோ வைகோவின் பிடியிலிருந்து விடுபட்டால் சரி !!!

மேதகு ஆளுநர் மாண்புமிகு ஆனார் – வித்யாசாகர் ராவ் உத்தரவு!! முடியாட்சி முறை முடிவுக்கு வந்தது.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஆளுனர் மேதகு என்று   அழைக்கப் பட்டார்.

மன்னரின் பிரதிநிதி அல்லவா?      குடியாட்சிக்கு மாறி அறுபது ஆண்டுகள் ஆகியும் இன்னும் பல மன்னர் காலத்து பழக்கங்களை நம்மால் விட முடியவில்லை.

நீதிமன்றங்களில் மை லார்டு என்று அழைக்கும் வழக்கம் இன்னமும் தொடர்வது தெரிந்ததே.       நீதிபதிகளே எங்களை அப்படி அழைக்காதீர்கள்  என்று உத்தரவிட்டாலும் வழக்கறிஞர்கள் கேட்பதில்லை.

2012 ல் குடியரசுத் தலைவரை மாண்புமிகு என்றே அழைக்கலாம் என்று உத்தரவிட்ட பிறகும் அந்த வழக்கம் தொடர்கிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டு ஆளுநராக பொறுப்பேற்று இருக்கும் வித்யா சாகர் ராவ் அவர்கள் இனி மேதகு என்பதற்கு பதிலாக மாண்புமிகு என்றே அழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.

அடிமை மனப்பான்மை ஒழிய இன்னும் சீர்திருத்தங்கள் தேவை.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவம்???!!!

ராணுவ முகாம்களின் மத்தியில் வசித்து வருபவர்கள் யாழ் தமிழர்கள்.

போர் முடிந்து ஏழாண்டுகள் ஆகியும் இன்னமும் எந்த விடுதலையும் கிடைக்காமல் தவித்து வருகிறது தமிழ்ச் சமூகம்.

மாநில அரசு என்று ஒன்று இருக்கிறது.     அதற்கு அரசிற்கான எந்த உரிமையும் கிடையாது.     நிலம், காவல் எல்லாம் சிங்கள மத்திய அரசின் கையில் . முதல் அமைச்சர் ஒரு ஒய்வு பெற்ற நீதிபதி.     காலத்தின் கட்டாயம் கருதி பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர்.

அதிகாரம் வேண்டும் என்று வேண்டுகோள் வைப்பது மட்டுமே அவரால் முடிந்த காரியம்.

உலக நாடுகள் எதுவும் எதையும் கண்டுகொள்வதில்லை.

உரிமைப் போரை அற வழியிலும் போர் வழியிலும் தொடர்ந்து போராடி  பேரழிவுகளை சந்தித்து மீண்டும் அறவழிப் போரை தொடர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தமிழ்ச்  சமூகம்.

இப்போது வாழக் கூட விடக் கூடாது என்று சுட்டுக் கொல்கிறார்கள் .

நடராஜ கஜன், பவுன்ராஜ் சுலக்சன் என்ற இரண்டு மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கும்போது நிறுத்தச் சொன்னதற்கு நிற்காமல் போனதால் சுட்டுக் கொன்றிருக் கிறார்கள்.

போராட்டம் நடத்தியதற்குப் பிறகு சிலரை கைது செய்வதாக அறிவிப்பு வெளியானது.

விசாரணை தண்டணை எதுவும் சிங்கள அரசின் கண் துடைப்பு வேலையாக அமையும்.

என்று முடியும் இந்த அரச பயங்கர வாதம்?