கபடி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு.
அகமதாபாத்தில் நடைபெற்ற உலக கோப்பை கபடித் தொடரில் இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருப்பது பாராட்டத் தக்கதாகும்.
அதிலும் இந்திய அணியில் இடம் பெற்ற ஒரே தமிழக வீரர் தஞ்சை மாவட்டம் திருச்சனம்பூண்டி கிராமம் சேரலாதன் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
தமிழக அரசு இன்னும் முயற்சி எடுத்து ஊக்குவித்திருந்தால் இன்னும் அதிக வீரர்களை அனுப்பியிருக்க முடியும்.
ஒலிம்பிக் போட்டிகளில் கபடி இன்னும் சேர்க்கப் படாமல் இருக்கிறது. அதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் பெரு முயற்சி எடுக்க வேண்டும்.
கிரிக்கெட்டிற்கு இணையாக , ஏன் அதற்கும் மேலாக வளர்ச்சி அடையக் கூடிய அத்தனை அம்சங்களும் கபடி விளையாட்டில் உள்ளது.
அரசுகள் போதிய கவனம் செலுத்தாததால் அதற்கு உரிய இடம் கிடைக்க வில்லை.
வென்ற உடனேயே அதில் இடம் பெற்ற தமிழக வீரருக்கு தமிழ் நாட்டு அரசு அவருக்கு ஊக்கத் தொகை அறிவித்திருக்க வேண்டும். கூட்டு விளையாட்டு என்பதால் தனியாக பரிசு அளிப்பதில் பிரச்னை இருந்தால் குழுவிற்குமே பரிசு அளிப்பது அவசியம். .
மொத்தக் குழுவிற்கும் இந்திய அரசு ஒரு கோடி பரிசு அறிவித்துள்ளது . இது போதாது.
அனுப் குமார் அணியின் கேப்டன். அரியானா மாநில காவல் துறையில் அவர் ஆய்வாளர் ஆக பணி புரிகிறார். அந்த அரசு அவருக்கு ஊக்கமளித்து வருகிறது.
தமிழகம் கபடி விளையாட்டின் தாய்வீடு என்பதால் இங்கு அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் பட வேண்டும்.
அரசு தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.