பிரான்ஸ் தமிழச்சி என்பவர் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி வதந்திகள் பரவ காரணமானவர் என்று குற்றம் சாட்டப்பட்டிருகிறார்.
அவரும் தான் விசாரணையை எதிர்நோக்க தயாராக இருப்பதாக அறிவித்திருபதாக தெரிகிறது.
இதற்கிடையே தமிழகத்தில் இருவர் மீது வதந்திகளை பரப்பியதாக வழக்கு பதியப்பட்டு அவர்கள் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்.
அப்போலோ மருத்துவமனையில் இருந்து ஒரு நபர் பேசுவதாக குறிப்பிட்டு முதல்வர் உடல்நிலை பற்றிய ஒரு ஆதாரமற்ற செய்தி வாட்ஸ் அப்பில் தமிழகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது.
வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுப்பதை யாரும் குற்றம் சொல்லப் போவதில்லை.
அதுவும் சிகிச்சையில் இருக்கும் முதல்வர் மீது குற்றம் காண்பதோ குறை சொல்வதோ மனிதாபிமானற்ற செயல். எனவே முதல்வர் மீது குறை காணும் பேச்சுக்கே இடமில்லை .
லட்சக்கணக்கான தொண்டர்களைக்கொண்ட ஒரு தலைவர் மருத்துவ மனையில் இருக்கும்போது அவரின் சிறப்புக்கு களங்கம் வராமல் பார்த்துக்கொள்ளும் கடமை எல்லாரையும் விட அவரது கட்சி நிர்வாகிகளுக்கும் அமைச்சரவை சகாக்களுக்கும்தான் அதிகம் இருக்கிறது. அடுத்த கடமை அரசு அதிகாரிகளுக்கு .
இந்த மூவரும் தாங்கள் கடமையை செய்திருக்கிறார்களா ?
கட்சி நிர்வாகிகள் கூடி இது பற்றி கூடி கலந்து பேசியதாகவோ பிரச்னையை கையாளுவது சமாளிப்பது பற்றிய கருத்துப் பரிமாற்றம் செய்ததாகவோ எந்த செய்தியும் இல்லை.
அமைச்சரவை சகாக்கள் மருத்துவ மனையில் கூடி நின்று காத்திருப்பதிலும் மற்ற சகாக்கள் கோயில் கோயிலாக போய் பிரார்த்தனை காவடி எடுத்தல் அங்கப்ரதட்சணம் யாகம் வளர்த்தல் என்று தங்கள் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் விளம்பரப்படுத்துவதை தவிர வேறு என்ன வகையில் செயல்பட்டார்கள் ?
அமைச்சரவை சார்பில் எந்த அமைச்சராவது முதல்வர் உடல்நிலை பற்றிய அறிக்கை வெளியிட்டாரா?
எம்ஜியார் உடல் நலிவுற்றபோது அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் எச் வி ஹண்டே முதல்வரின் உடல்நிலை பற்றிய அறிக்கை வெளியிட்டு வந்தாராம்.
இப்போது அப்போலோ மருத்துவமனை தரும் அறிக்கைகள் மட்டுமே மக்களுக்கு கிடைக்கிறது.
இங்கிலாந்தில் இருந்தும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தும் சிறப்பு மருத்துவர்கள் வந்து கவனித்துக் கொள்கிறார்கள் என்பது ஆறுதல் தரும் செய்தி.
ஆனால் மருத்துவமனையே முதல்வர் இன்னும் நீண்ட காலம் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்ட பிறகு அரசு அதிகாரிகளின் கடமை என்ன?
ஒரு புகைப்படத்தை வெளியிடுங்கள் என்ற கலைஞரின் கோரிக்கை ஏற்கப் பட வில்லை.
உயர்நீதிமன்றமும் டிராபிக் ராமசாமியின் முதல்வரின் மருத்துவ அறிக்கை பற்றிய கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
எதையும் யாரும் மறைக்க வில்லை என்னும்போது யார் என்ன வதந்தியை கிளப்பி விட முடியும்?
அப்படி யாரும் வதந்தியை கிளப்ப முடியாத வகையில் அவர்களது வாயை அடைக்கும் வகையில் தகுந்த செய்தியை ஆதாரத்துடன் வெளியிட வேண்டிய கடமை யாருக்கு இருக்கிறதோ அவர்கள் தங்கள் கடமையை செய்திருக்கிறார்களா ?
அப்போலோ அறிக்கை மட்டுமே போதும் என்றால் வதந்தி பரவ நீங்கள் அனுமதிக்கிறீர்கள் என்று பொருள்!
யார் வெளியிடவேண்டும் என்ன வெளியிட வேண்டும் என்பதையும் தீர்மானிக்க வேண்டியவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களே?!
வதந்தி பரவ அனுமதித்து விட்டு வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை என்றால் நாடு நகைக்கும் என்பதை மறவாதீர்??!!